இன்றைய காலத்தில் நிறையக் குறுங்கதைகள் எழுதப்பட்டு வருகின்றன. ஆனால் யுவன் சந்திரசேகர் 'மணற்கேணி' என்று நூறு குறுங்கதைகளினால ஒரு புத்தகத்தை பல வருடங்களுக்கு முன்னரே எழுதியிருக்கின்றார். நான் வாசித்த யுவனின் நூல்களில் அதுவே எனக்கு நெருக்கமானது. ஒருவகையில் யுவன் குறுங்கதைகளாலேயே தனது நாவல்களை எழுதுகின்றவர் என்று கூடச் சொல்லலாம். அந்தவகையில் அண்மையில் வந்த 'வேதாளம் சொன்ன கதை' நாவல் கூட குறுங்கதைகளின் நெடுந்தொகுப்பு எனச் சொல்லிவிடலாம்.
யுவனின் படைப்புக்களில் வருகின்ற அதே குறிப்பிட்ட பாத்திரங்களே இங்கும் உலாகின்றன. கதைசொல்லியான கிருஷ்ணன் கூட அதே வங்கி வேலையிலிருந்து இங்கும் தப்பிவிடமுடியாது இருக்கின்றார். ஏற்கனவே தெரிந்த பாத்திரங்களைச் சந்திக்கும் சுவாரசியம் இருந்தாலும், வாசிப்பவருக்கு ஒருவித அயர்ச்சியை இந்தப் பின்னணியே தருவதாகவும் இருக்கின்றது.
இப்படி ஒரு நாவலை 400 பக்கங்களுக்கு நீட்டித்து எழுதவேண்டுமா என்று சற்று அலுப்பு எட்டிப் பார்க்கின்றது. அடிக்கடி வேதாளம் வருமா வராதா என யோசிப்பது, இந்தக் கதையை அரைகுறையில் எழுதிவைத்திருந்தேன் வாசித்துப் பாருங்களென வாசகருக்குத் தருவது, இது கதைதான் ஆனால் கதையில்லாது போல இருக்கிறது என்றெல்லாம் அளவுக்கதிகமாய் எழுதி வார்த்தைகளை விரயமாக்கியது போல வாசிக்கும்போது தோன்றியது.
இன்றைய பின் அமைப்பியல்/ பின் நவீனத்துவ சூழல் புனைவுக்கான எல்லாச் சுதந்திரங்களை வழங்கும்போது, இந்த வடிவம்/கேள்விகள்/சந்தேகங்கள்/குலைத்துப்போடுதல்/பிரதி தன்னளவிலேயே தன்னை மூர்க்கமாய் நிராகரித்தல் என ஒரு பெரும் வெளி இருக்கின்றதுதான். ஆனால் அதை இவ்வளவு கால எழுத்துலக அனுபவம் இருக்கும் யுவன் இன்னும் வேறுவிதமாய் நுட்பமாய்ப் பயன்படுத்தியிருக்கலாமோ என்றும் ஒரு எண்ணம் குறுக்கிட்டது. மற்றும்படி இன்றையகாலத்தில் தமிழ்ச்சூழல் யதார்த்தக் கதைசொல்லல்களுக்கு தன்னையே தாரை வார்த்துக் கொடுத்து விட்டவேளையில் 'வேதாளம் சொன்ன கதை' ஒருவகையில் வித்தியாசமான அனுபவத்தைத் தருகின்றது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
...........................
(July 30, 2020)
0 comments:
Post a Comment