Dolly kitty chamakte sitar
இன்றைய நவீன உலகில் பெண்களின் வாழ்க்கையை complex narratives ஆக இந்தத் திரைப்படம் சொல்வதால் பிடித்திருந்தது. இரண்டு பெண்களின் (கஸின்கள்) விருப்புக்களை, துயரங்களை, பரிட்சார்த்த முயற்சிகளை, தோல்விகளை, துயரங்களை, சரிவுகளை மிக அழகாகத் திரையில் கொண்டுவருகின்றார்கள். பெண்களை அவ்வளவு எளிதாக ஒற்றைப்படையில் வைத்து விளங்க முடியாதென்பதை இந்தப் படம் எளிதாகப் புரியவைக்கின்றது. பெண்கள் பற்றி நாம் வைத்திருக்கும் விம்பங்களை/மிகை உணர்ச்சிகளை உடைத்துப் பார்க்க வைக்கின்றது.
இன்று திருமணம் செய்யாதிருப்பவர்க்கு ஒருவகை சிக்கல்/அழுத்தம் இருக்கின்றதென்றால், அதைவிட திருமணமானவர்க்கு மிகப்பெரும் அழுத்தங்கள் இருக்கின்றன. இன்றைய சமூக வலைத்தளங்கள், இன்னபிற விடயங்கள் மரபுசார்ந்த உறவுகளை மறுபரிசீலிக்கக் கோருகின்றது. எனக்குத் தெரிந்த சிறு உலகிற்குள்ளேயே திருமணமானவர்கள் அதைமீறிய உறவுகளுக்குப் போவதும், அது சார்ந்த சிக்கல்களுக்குள் அவதிப்படுவதையும் பல்வேறு வழிகளில் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்.
அதிலும் ஒரு முரண்நகை என்னவென்றால் நம்மைப் போன்ற ஆண்கள் இவ்வாறு திருமணத்தைத் தாண்டிய வேறு உறவுக்குப் போகும்போது, நமது துணைகள்/மனைவிகள் அவ்வாறு இருக்கக்கூடாதென்றும் ஏங்குபவர்களாக இருக்கின்றோம். ஆனால் இன்று எல்லோருக்கும் எதையும் செய்வதற்கான சுதந்திரமான வெளிகள் திறந்தே கிடக்கின்றன என்பதை நம்ப மறுக்கின்றோம். அது நம்மை இன்னுமின்னும் சிக்கல்களுக்குள்ளும், அழுத்தங்களுக்குள்ளும் அமிழ்த்திச் செல்கின்றது.
இந்தத் திரைப்படத்தில் பெண்களின் அகச்சிக்கல்கள்/ பாலியல் விருப்பங்கள், திருமணம்/காதல் உறவுகள் என்பதோடு Queer புள்ளிகளையும் தொட்டுச் செல்வதோடு, இந்தப் பெண்கள் மதக்கலாசார காவலர்களோடும் எவ்வாறு போராட வேண்டியிருக்கின்றதென்பதையும் சொல்வதால் தனித்து குடும்பம் என்ற அமைப்பைத் தாண்டி ஒரு அரசியல் படமாகவும் தன்னை இது மாற்றிக்கொள்கின்றது.
The
social dilemma
கடந்த வாரம் The social dilemma ஆவணப்படத்தைப் பார்த்ததிலிருந்து என்னைச் சற்றுப் பரீட்சித்துப் பார்த்தேன். சமூகவலைத்தளங்களில் ஃபேஸ்புக்கில் மட்டுமே நிறைய நேரத்தைச் செலவழிப்பவன். ஒருகாலத்தில் Twitter இல் நான் எழுதும் பதிவுகளைப் பகிர்வேன். அங்கேயும் இப்போது இல்லை என்றளவுக்கு நேரம் குறைந்துவிட்டது. ஃபேஸ்புக் தவிர்த்து, instagram இல் கொஞ்சம் இப்போது உலாவுவேன். பயணங்களின் பொருட்டு பயணிப்பவர்களைப் பின் தொடர insta சென்றதால், அவர்களில் பலரும் ஏற்கனவே பதிந்ததையே ஒரு வட்டம் முடித்து, திரும்பவும் புதுப்பிப்பதால் அங்கும் பெரும் நாட்டமில்லை. எனவே என் சமூகவலைத்தள நேரம் என்பது அதிகம் ஃபேஸ்புக்கில் மட்டுமே. அதற்கும் தினம் ஒரு மணித்தியாலம் கழிப்பது என்ற 'அலாரத்தை' வைத்திருப்பேன் என்றாலும், அதை ஒரு கடும் வரைமுறையாக இதுவரை பின்பற்றியதில்லை.
Social dilemma பார்த்தவுடன் என்னை ஒரு மீளாய்வு செய்யச்
சந்தர்ப்பம் கிடைத்தது. கிட்டத்தட்ட 6 நாள் பதிவு எதையும் பகிராமல் இருந்து
பார்த்தேன். இந்த நாட்களில் 1 மணித்தியாலத்துக்குள் மட்டுமே ஃபேஸ்புக்கில்
உலாவுவது என்பதிலும் கடுமையாக இருந்தேன். எனவே இயன்றளவு ஃபேஸ்புக் கணக்கை logout செய்துவிட்டே
இருந்தேன். இதையேன் இவ்வளவு விரிவாகச் சொல்கின்றேன் என்றால் அது ஓர் ஆவணப்படமாக social dilemma ஒரு வலைக்குள் விழுகின்றேனா என என்னை உந்தித்தள்ளி அவதானிக்க வைத்தது என்பதைச்
சுட்டுவதற்காகவாகும்.
இந்த ஆவணப்படத்தில், இன்றைய முக்கிய சமூகவலைத்தளங்களில்
தொடக்கத்தில் பங்கேற்றியவர்களும், அதன் முக்கிய பொறுப்புக்களில் இருந்தவர்களும்
பேசுகின்றார்கள். நாம் மட்டுமில்லை, நமது அடுத்த தலைமுறையையும் எப்படி சமூக
வலைத்தளங்களுக்கு இரையாக்கிக் கொண்டிருக்கின்றோம் என்பதை பல்வேறு நிலைகளில் வைத்து
இவர்கள் பேசுகின்றார்கள். நம்மால உருவாக்கப்பட்ட AI இப்போது நமது கைகளை மீறிப் போகும் ஆபத்தைப் பற்றியும்
விவாதிக்கின்றார்கள்.
இதில் பேசும் எவரும் தொழில்நுட்பத்தை, அதன் வளர்ச்சியை பெருந்தவறெனச் சொல்லவில்லை, ஆனால்
நம்மையறியாமலே நாம் மீளமுடியாத வலைக்குள் சிக்கியதன் ஆபத்தையே
எச்சரிக்கின்றார்கள். இன்னும் 20 ஆண்டுகளில் நமது உலகம் எப்படி இருக்கும்
என்பதைச் சிலர் இவற்றில் மாற்றங்கள் வருமென நம்பிக்கையுடன் சொன்னாலும், பலர்
அவநம்பிக்கையுடனேயே பேசுகின்றார்கள்.
A star is born
1930களில் வந்த திரைப்படத்தின் தழுவல் இத்திரைப்படம் என்றாலும், நெகிழ்வூட்டும் தருணங்கள் இருப்பதால் பார்க்க அலுப்பூட்டவதில்லை. இதில் ஓரிடத்தில் இப்படித்தான் நடக்கும், முடிவு கூட இப்படித்தான் இருக்கும், ஆனால் நிறுத்தமுடியாது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றது என்று ஓர் உரையாடலில் சொல்லப்படும். பொதுவாக அன்றிலிருந்து இற்றைவரை இப்படி இசைத்துறைக்குள் இருப்பவரின் வாழ்க்கை உயர்ந்தும், நெகிழ்ந்தும், இறுதியில் துன்பியலாக முடிந்து போவதுண்டு. ஆண்கள் இப்படிப்பட்ட கலைஞர்களாக இருக்கும்போது பித்துப் பிடித்தலையாத இளம்பெண்கள் இருக்கின்றார்களா என்ன?
இந்தத் திரைப்படத்தில் வரும் ஆண் பாத்திரத்தைப் பார்க்கும்போது, சில
வருடங்களுக்கு முன் Johnny Cash இன் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து வந்த Walk the line ம் ஏனோ நினைவுக்கு வந்தது. எனக்குப் பிடித்த Country/folk
வகைமைக்கு
வந்த திரைப்படம் என்பதால் அது எனக்கு மிக நெருக்கமான ஒன்று.
0 comments:
Post a Comment