நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சூரியன் உதிக்க, காடுகளில் உலாவும் ஒற்றன்!

Sunday, November 07, 2021

 

“Never fall in love?"

"Always," said the count. "I am always in love.”

― Ernest Hemingway, The Sun Also Risesகாலை எழுந்ததிலிருந்து மழை பெய்துகொண்டிருந்தது. கோடையில் மழை என்பது வேறுவிதமானது. இலையுதிர்காலத்து மழையை உள்ளேயிருந்து பார்க்கமுடியுமே தவிர, ஆசை தீர நனையமுடியாது. வானம் சாம்பலாய் மூடி, நெடிதாய் வளர்ந்திருந்த மரங்களும், பசுமையாய்த் தரையில் படர்ந்திருந்த புற்களும், நனையப் பெய்யும் மழைக்கு ஒருவித அழகுண்டு. அந்த அழகு மனதுக்குள் நெகிழ்வைக் கொண்டுவரும். நெகிழ்வு பல நினைவுகளை விரும்பியோ விரும்பாமலோ ஊற்றாகப் பெருக வைக்கும்.


இப்படி சில வருடங்களுக்கு முன் கேரளாவில் தொடுபுழாவில் நின்றபோது அனுபவித்திருக்கின்றேன். அங்கே நின்ற இரண்டு வாரங்களும் தினம் மழைதான். தங்கி நின்ற இடம் மூவிலாறு பாய்கின்ற இடம். தினம் தினம் வெள்ளம் பாய்கின்ற இடம் மேலேறி வந்ததைப் பார்த்திருக்கின்றேன். அறையின் யன்னலைத் திறந்தால் பலாமரங்களும், வாழைமரங்களும் நனைந்து கொண்டிருப்பதைப் பார்ப்பது ஒருவகை அலாதியான அனுபவம். அதைவிட எப்போதாவது கொஞ்சநேரம் மழை நின்றவுடன் மழைநீர் ஊறிய செம்மண்தரைகளில் பாதம் பதிந்து நடந்து போவது எப்போதும் வாய்த்துவிடாது.


இவ்வாறான மழைக்காலங்களில்தான் பலருக்கு பலவித நினைவுகள் ஊற்றெடுக்கத் தொடங்கும். தொலைத்துவிட்டு வந்த பால்யம், நீங்கிவிட்டு வந்த தாய்மண், கைநழுவிப்போன காதல்கள் என பல நினைவுகள் மழைநீர்க்கொப்புளங்களாய் உருவாகி உடைந்து போகக்கூடும். எனக்கு இப்போதெல்லாம் இந்த மழை, செய்த பயணங்களையும், செய்யவிரும்பும் பயணங்களையும் நினைவுபடுத்தச் செய்கின்றன.ஹெமிங்வேயின் 'சூரியனும் உதிக்கின்றது' (The sun also rises) நாவல் பயணத்தைப் பற்றித்தான் பேசுகின்றது. இந்தக் கதையில் நண்பர்கள் பாரிஸில் இருந்து ஸ்பெயினில் நடக்கும் காளைச் சண்டையைப் பார்க்கப் போவதுதான் கதை. ஹெமிங்வேயிற்கு ஸ்பானியர்கள் மீதிருக்கும் ஈர்ப்பு பிறர் எவரையும் விட அதிகமானது. ஆகவேதான் சிக்காகோவில் பிறந்த அவருக்கு பிடித்த இடங்களாக ஸ்பெயின், கியூபா, புளோரிடா (இங்கும் ஸ்பானியர்களே கூட வசிக்கிறார்கள்) இருந்திருக்கின்றன. இந்த இடங்களில்தான் அதிக காலம் வாழ்ந்துமிருக்கின்றார்.


 'சூரியனும் உதிக்கின்றதுநாவல்முதலாம் உலக மகாயுத்தம் முடிந்தபின் எழுதப்படுகின்றது.இரண்டு முறை ஏற்கனவே விவாகரத்துச் செய்துவிட்ட பெண்ணுக்காய் கிட்டத்தட்ட நான்கு நண்பர்கள் போட்டியிருக்கின்ற ஒரு சிக்கலான உறவையும் இந்தப் பயணத்தில் பார்க்கின்றோம். அமெரிக்க, இங்கிலாந்து ஆண்கள் இந்தப் பெண்ணுக்காய் நிஜச் சண்டை கூடச் செய்ய,   இறுதியில் ஒரு இளைய ஸ்பானிய காளைச்சண்டைக்காரன் அந்தப் பெண்ணால் ஈர்க்கப்பட்டு, அவர்கள் இருவரும் மெட்றிக்குக்குப் போவதாக கதை நீளும். காதலுக்கும், காமத்திற்குமான ஒரு முரண்விளையாட்டை மட்டுமில்லாது, ஆண்களுக்கு உண்மையில் என்னதேவையாக இருக்கின்றதென்ற தேடலையும் இந்தப் புனைவில் பார்க்கின்றோம்.


ஆண் இயற்கைக்காட்சிகளில் கரையும்போதோ, மீன் பிடிக்கும்போதோ, வேட்டையாடும்போதோ மட்டுந்தான் பெண்களைப் பற்றிப் பேசுவதில்லை/நினைப்பதில்லை என்பது இந்த நாவலில் சூட்சுமமாகச் சொல்லப்பட்டிருக்கும். இந்த நாவலின் நாயகனான ஜாக், போரில் காயம்பட்டு உடலுறவில் ஈடுபட முடியாத ஒரு நிலையில்  இருக்கின்றான். அவனுக்கு பிரட் என்ற பெண்ணோடு வரும் காதல், உடலுறவு சார்ந்ததல்ல. ஆனால் பிரட்டுக்கோ காதலில்லாத காமமே வேண்டியிருக்கின்றது. ஆகவேதான் அவளால் தொடர்ந்து எல்லா ஆண்களோடும் உறவுகளை வைத்துக்கொண்டு எளிதாகப் போக முடிகின்றது. ஹெமிங்வே இந்தப் பயண நாவலினூடாக போரால் உள/உடல்  பாதிக்கப்பட்ட  ஆண்களை மட்டுமின்றி, போரின் பின் பெண்களுக்கு திறந்துவிடப்பட்டிருந்த பாலியல் சுதந்திரத்தைப் பற்றியும் பேசுகின்றார்.


பிரட்டுக்கு எத்தனை ஆண்களோடு உறவிருந்தாலும், ஜாக் அவரை கவர்கின்றார். தனக்கான கையறு நிலை வரும்போதெல்லாம் ஜாக்கையே அவர் தேடிப்போகின்றார். இந்நாவலில் இறுதியில் மெட்றிக் நகரில் பிரட், காளைச்சண்டைக்காரனான ரொமாறியோவினால் கைவிடப்பட்டு, கையில் பணமும் இல்லாது திண்டாடும்போது, எத்தனையோ காதலர்கள் இருந்தபோதும் பிரட் ஜாக்கையே அங்கே வரச்சொல்லி அழைக்கின்றார். அவர்கள் இருவரும் ரெயினில் போகும் பயணத்தோடே கதை முடிகிறது. இவர்கள் இருவருக்கும் இந்தக் காதல் ஒருபோதும் முழுமையடையாது என்று தெரிந்தும், ஏன் மீண்டும் மீண்டும் சந்தித்தும், ஆறுதலாக ஒருவருக்கொருவர் இருக்கின்றார்கள் என்பதை, ஏனென்று நம்மை யோசிக்கவைக்கும்போதே,  ஒரு முக்கிய நாவலாக இது ஆகிவிடுகிறது.ஹெமிங்வே இப்படி ஒரு பயண நாவலை எழுதியது மாதிரி, கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பிறகு 'பீட்' ஜெனரேசனைச் சேர்ந்த ஜாக் (Jack Kerouac) On the Roadஐ எழுதுகின்றார். அமெரிக்காவினுள்ளே பயணங்களைச் செய்வதும், மெக்ஸிக்கோவுக்குப் போவதுந்தான் அந்த நாவல். கிட்டத்தட்ட ஹெமிங்வேயின் நாவலைப் போல, இதிலும் நண்பர்கள், அவர்களின் மனைவிகள்/காதலிகள் என்ற பாத்திரங்களே முக்கியமாக இருக்கின்றன.


பயணங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதபப்பட்ட இந்த இரண்டு நாவல்களும் வெளிவந்த காலங்களில் குழப்பமான முறையில் ஏற்கப்பட்டு/மறுக்கப்பட்டும் வந்திருந்தாலும், அவை இன்று முக்கிய நாவல்களாகக் கொள்ளப்படுகின்றன. எல்லா நாவல்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தீவிர வாசகர்கள் இருப்பார்கள். அவ்வாறே பயணிகளாக இருக்க விரும்புபவர்கள், பயணித்துக்கொண்டிருப்பவர்கள் இந்த நாவல்களை தமக்குரியதாக எடுத்துக்கொண்டு புதிய நிலப்பரப்புக்களைப் பற்றி என்னைப் போலக் கனவு கண்டுகொண்டிருக்கவும்கூடும்.


ஆகவேதான் அசோகமித்திரனின் அவ்வளவு கவனிக்கப்படாத நாவலான 'ஒற்றனே' எனக்கு அவரின் மிகச்சிறந்த நாவலாக உணரமுடிந்தது. அது தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு நாவல் அல்ல. ஆனால் அது அமெரிக்க என்கின்ற புதிய நிலபரப்புக்கு வரும் தமிழ் எழுத்தாளன் சந்திக்கும் சுவாரசியமான அனுபவங்களை கொண்ட நாவல். அங்கே அந்த எழுத்தாளன், வெவ்வேறுநாட்டு எழுத்தாளர்களோடு பழகும்போது வரும் அனுபவங்களே, ஒற்றனை இன்னும் எனக்கு நெருக்கமாக்கியிருந்தது.


ஹெமிங்வே 'சூரியனும் உதிக்கின்றது' நாவலை எழுதியபோது கிட்டத்தட்ட முதல் முப்பது பக்கங்களை அவரின் அன்றையகால நண்பரான ஸ்காட் (Scott Fitzgerald) திருத்தச் சொன்னதற்காய் முற்றாகவே பதிப்பாளரிடம் சொல்லி வெட்டியெறிந்திருக்கின்றார். ஆகவேதான் அந்த நாவல் சட்டென்று உடனேயே தொடங்குவதைப் போல வாசிக்கும்போது இருக்கும். நான் மெக்ஸிக்கோவை எழுதியபோது அதன் மூன்றாவது பகுதியை மற்றப்பகுதிகளில் கதை சொல்லிக்கொண்டிருப்பதுபோல எழுதியிருக்கவே மாட்டேன். நான் விரும்பியே அப்படிச் செய்தேன். அதை நான் மைக்கல் ஒண்டாச்சியிடம் இருந்து கற்றுக்கொண்டது. அந்தப் பகுதியில் எந்த உரையாடலுமே வராது.
ப்போது நான் வாசித்துக்கொண்டிருக்கும் அனுக் அருட்பிரகாசத்தின் நாவலான A Passage North இல், எந்தவகையான உரையாடலும் இல்லை. அதாவது மேற்கோள் குறிக்குள் இட்டு எவரும் பேசிக்கொண்டிருப்பதில்லை. இந்நாவலை வாசிக்கும்போது, நல்லவேளை அனுக் தமிழில் எழுதவில்லை, இல்லாவிட்டால் இதை முழுமையாக வாசிக்காமலே இது நாவலல்ல, கட்டுரைத்தொகுப்பு என நம்மவர்கள் முத்திரை குத்தியிருப்பார்கள் என நினைத்துக் கொண்டேன்.ஒவ்வொரு படைப்பும் புதிய முயற்சிகளைச் செய்யும்போது, அது அவ்வளவாகக் கவனிக்கப்படாமல்கூடப் போகலாம், ப.சிங்காரத்தின் புயலிலே தோணிக்கு என்ன நடந்ததென்பது நாமறியாததும் அல்ல. அன்று 'சொல் என்றொரு சொல்' எழுதிய பிரேம்-ரமேஷை, அதன் புதிய செல்நெறியைப் பார்த்து எத்தனைபேரால் பாராட்ட முடிந்திருக்கின்றது? அல்லது இன்று தனித்து ரமேஷ் எழுதிக்கொண்டிருக்கும் நாவல்களுக்கு போதியளவு வரவேற்புக் கிடைத்திருக்கின்றதா?


இவ்வாறாகப் பயணங்களைச் செய்தபடி அங்கு சந்தித்த மனிதர்களினூடாக நாவலாக விரிந்த பிரியா விஜயராகவனின் 'அற்றவைகளால் நிரம்பியவள்' எனக்கு அப்படி நெருக்கமானது. அதுவும் மிகச் சிலராலே வாசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. ஆனால் இந்த நாவல்களைப் பயணிக்கும் கனவுகளோடு இருப்பவர்களும், பயணித்தும் கொண்டிருப்பவர்களும் ஆரத்தழுவுவார்கள். தமக்குரிய கதைகளைச் சொல்லியிருக்கின்றார்கள் என்று பிறரோடு பகிர்ந்தோ, எழுதியோ அதை வரவேற்றுக்கொண்டிருப்பார்கள்.


ஏன் ஜெயமோகனின் காடு கூட ஒருவகையில் பயண நாவலெனச் சொல்வேன். கிரி காட்டுக்குள் அடைவதெல்லாம் புதிய அனுபவங்களும், மேன்மைகளுமே. அவன் எப்போது காட்டைவிட்டு வெளியே வருகின்றானோ, அதன்பின் அடைவது எல்லாம் வீழ்ச்சிகளே. ஆனால் அதிலிருந்து தப்பியவர் அங்கே வரும் ஐயர் என்கின்ற பாத்திரம். அது காட்டுக்குள்ளேயே இருந்து, சங்கப்பாடல்களில் கிறங்கி, இறுதியில் காட்டைவிட்டு வெளியே வராது ஒரு வாழ்க்கையை மனைவி குடும்பமென எல்லா லெளதீகக்காரணிகளையும் உதறித்தள்ளிவிட்டுக் காட்டையே தேர்ந்தெடுத்துக்கொள்கின்றது, தனக்கான ஒருவகையான நிம்மதியை அதன்மூலம் ஐயர் பாத்திரம் அடைந்துகொள்கின்றது.


எல்லோரையும் கவருகின்ற படைப்பு இந்த உலகில் ஒருபோதும் இருக்கப்போவதில்லை என்பதைப் போல, அவரவர் அவரவர்க்குப் பிடிக்கும் படைப்புக்களைத் தம் வாழ்நாள் முழுக்க எடுத்துச் சென்றபடி இருப்பார்கள். நான் ஹெமிங்வேயை, ஜாக்கை, அசோகமித்திரனை, பிரியாவை எனது பயணங்களின்போது நினைப்பதைப் போல அவரவர்  தம் வாழ்வின் தேடலினூடாகப் போகும்போது தமக்கான படைப்புக்களைக் காவிக் கொண்டுசெல்வார்கள்.


இன்னமும் மழை பெய்துகொண்டிருக்கின்றது. நான் பின்வளவு ஊஞ்சலில் இருந்து கால்களில் மழைச்சாரல்பட கைகளில் தேநீர்க்கோப்பையை வைத்தபடி இரசித்துக்கொண்டிருக்கின்றேன். இதை இப்போது உள்ளே வந்து எழுதாது விட்டிருந்தால் இன்னும் கூட சாரலையும், மழை வீழும் புற்களையும் வெளியே இருந்து இரசித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் மனதுக்குள் பொழிந்துகொண்டிருக்கும் மழையும், காதலும், பயணங்களும் ஒருபோதும் நிற்பதில்லை.


**************************

(July 29, 2021)

0 comments: