கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கிளப்ஹவுஸ்

Monday, November 01, 2021


பேச்சு எப்போது எமக்கு அலுப்பாக இருக்கும்? எதிரே இருப்பவர் நமக்குத் தெரிந்த ஒன்றைப் பேசத்தொடங்கின்றார் என்றவுடன், அங்கே அறிய எதுவுமில்லையென கேட்பதற்கான ஆர்வம் இல்லாது போய்விடும். தெரிந்த ஒன்றைத் திரும்பத் திரும்பக் கேட்பதால் என்ன பிரயோசனம் இருக்கப்போகிறது.


ஆகவேதான் இலக்கியம்/அரசியல் குறித்து யாராவது பேசுகின்றார்கள் என்றால் தூரப்போய்விடுவேன். அந்த ஒரு காரணத்தாலேயே இலக்கிய/அரசியல் சூம் கூட்டங்களுக்கே போவதில்லை. கேட்பதற்கு மட்டுமில்லை, எங்கள் கூட்டங்களில் பேசுங்கள் என வந்த ஐந்துக்கு மேற்பட்ட அழைப்புகளைப் பணிவுடன் மறுத்திருக்கிறேன். பிறர் பேசுவதையே அவ்வளவு கேட்கப் பிடிக்காத இடத்தில் போய் இருந்து 'நான் பேசுகிறேன், நீ கேள்' என்பது இன்னும் எவ்வளவு கொடுமையாக இருக்கும்.


நேரில் நடக்கும் கூட்டங்களில் கூட, நமக்கு அறிவதற்கு ஏதுமில்லையென்கின்றபோது ஒரு விலகல் வந்துவிடும். அப்போது கைகொடுப்பதெல்லாம் கையில் கிடைக்கும் நூல்களே. ஓரிரு கூட்டங்களில் நாவல்களைக் கூட -எனக்கான உலகிற்குள் நுழைந்து- வாசித்து முடித்திருக்கின்றேன்.


வாசிப்பவர்கள்/எழுதுபவர்கள் சமூகவலைத்தளங்களுக்கு வரக்கூடாதென்று மூத்த எழுத்தாளர்களிலிருந்து இன்னும் பலர் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் இந்தத் தளங்களுக்கு வருவதில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் மரு வைத்துக்கொண்டு உருமறைப்புச் செய்து உலாவுகின்றார்கள் என்கின்ற வதந்திகளும் உண்டு. சரி அதை விடுவோம். அவர்கள் அவ்வாறு சொல்வதில் அவ்வளவு தவறுமில்லை. எமது வாசிப்பை/எழுத்தை மாற்றக்கூடிய அளவுக்கு சமூகவலைத்தளங்களின் பாதிப்பு இருக்கின்றதென்பதை மறுக்கவும் தேவையில்லை.


2.


இப்போது சில வாரங்களாக நம் சூழலில் புதிய ஒரு சமூகவலைத்தளமாக 'clubhouse' வந்திறங்கியிருக்கிறது. செவி இன்பமே பேரின்பம் என்கின்றவர்களுக்கு இது ஒரு 'வரப்பிரசாதம்'. புதிதாய் வரும் எந்த ஒன்றையும் கண்ணை மூடிக்கொண்டு உதறித்தள்ளவும் வேண்டியதில்லை, அப்படியே கேள்விகளற்று அரவணைத்துக்கொள்ளவும் தேவையில்லை. சற்று சந்தேகத்துடன், இவ்வாறானவற்றை வரவேற்பதில் எந்தத் தவறுமில்லை.


பேசுவதில் கூச்சமுடையவர்க்கும், தங்களைப் பேச்சில் விற்பன்னர்களாக வளர்க்க விரும்புகின்றவர்களுக்கான முக்கியதளம் இதெனச் சொல்லலாம். அதாவது இது ஒரு toastmaster club போலவும், radio talk show host மாதிரியும் ஒரு தோற்றத்தைத் தருவது. Instagram புகைப்படங்கள்/காணொளிகளுக்கான காட்சித்தளம் என்றால், clubhouse என்பது கேட்பதற்கான ஒரு முக்கிய ஊடகமாக இனி மாறக்கூடும். ஏற்கனவே podcast இருக்கிறது. ஆனால் clubhouse மூலம் புதிய பேச்சாளர்கள் உருவாவர்கள். இது நேரடியாகவும் (live), அதேசமயம் இங்கே பேசுவதைப் பதிவு செய்து ஆறுதலாக இருந்து பிறகு கேட்க இயலாது என்பதாலும் (?), இதன் spontaneous தன்மையாலும், இது சற்று வித்தியாசப்படுகிறது.


3.

வாசிப்பதில், எழுதுவதில் ஆர்வமிருக்கும் எனக்கு கிளப்ஹவுஸில் யாரேனும் இலக்கியம் குறித்துப் பேசினால் பெரிதும் ஈர்க்கப்போவதில்லை. என்னைக் கவர்கின்றவை எனக்கு அவ்வளவு பரிட்சியமில்லாத துறைகளாக இருக்கும். இதற்குள் நுழைந்தபோது ஆங்கிலத்தில் "He's unemployed: Should I cancel this date" என்ற ஒரு தலைப்பில் பேச்சு போய்க்கொண்டிருந்தது. வழமையாக மாலையில் நடக்கும்போது பாட்டுக் கேட்டு நடப்பேன். பிறகு ஜெயமோகன் ஓஷோ பற்றி என்ன சொல்கின்றார் என்று கேட்டபடி நடந்திருக்கின்றேன். அது முடிய, அவரின் பகவத்கீதை உரையைக் கேட்கத் தொடங்கி, இடைநடுவில் அதில் ஆர்வமில்லாது போக, கிளப்ஹவுஸ் உதவிக்கு வந்தது.


"He's unemployed: Should I cancel this date" மிகுந்த சுவாரசியமாய்ப் போய்க்கொண்டிருந்தது. தலைப்பு இதாக இருந்தாலும் அதில் ஒரு கறுப்பின ஆண் திபெத்திற்குப் போய் மலையேறியது, புத்தபிக்குவைச் சந்தித்தது, ஆன்மீகத்தில் ஆர்வம் வந்தது எனச் சொல்லிக்கொண்டிருந்தார். பெண்களே நிறையப் பேசிக்கொண்டிருந்தார்கள். அலுப்பே இல்லாது வரும் ஆண்களை இழுத்து வைத்து கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் அத்துமீறல் இல்லாது மெல்லிய கேலி மட்டும் இருந்தது. பிறகு முதலாவது டேட்டில் எப்படி ஒருவரை அணுகுவது, எது பெண்களுக்குப் பிடிக்கும், எப்படி பெண்கள் ஒருவர் வேலையில் இருக்கின்றாரா/இல்லையா என நுட்பமாக அறிகின்றார்கள் என role play செய்தெல்லாம் பேசிக் காட்டிவிட்டு, அதை உடைத்து உடைத்து ஆராய்ந்தார்கள்.


அடுத்தநாள் தமிழக Solo Travelers பற்றிய ஒரு குழு,அவ்வளவு தகவல்கள் அங்கே பேசிய பேச்சில் குவிந்து கிடந்தன. தமிழகம்/கேரளா நீர்வீழ்ச்சிகளைத் தேடித்தேடி இப்போதே போய்ப் பார்க்கவேண்டுமென ஆர்வத்தையூட்டுமளவுக்கு அதில் பங்குபற்றியவர்கள் அனுபவங்களைப் பகிர்ந்திருந்தார்கள். அந்நிகழ்வை மட்டுறுத்திய பெண்கள் மிகுந்த பணிவுடன் (humble) , இயல்பாகச் செய்திருந்தார்கள். பயணங்கள் என்பது எங்கள் மனதை விரிவாக்கும் என்பதற்கும், எப்படி ஒருவருக்கொருவர் உதவுவதற்குத் தயாராக இருக்கின்றார்கள் என்பதற்கும் இந்த நிகழ்வு நல்லதொரு எடுத்துக்காட்டு.


இன்னொருமுறை ஆங்கிலத்தில் ஒரு பயண நிகழ்வைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அது பிறகு மேற்கிலிருக்கும் குடிவரவாளர், People of Color இன் முதல் தலைமுறை எப்படி பெருநிறுவனங்களின் கதவுகளை உடைத்து முன்னேறிக்கொண்டிருக்கின்றார்கள் என்று பேச்சு இன்னொரு திசையில் போக வேறொறு வடிவத்தை எடுத்தது. அதுவும் சுவாரசியமாகத்தான் இருந்தது.


ஆக வாசிக்க/எழுத விரும்புகின்ற என்னைப் போன்றவனுக்கு இந்த உரையாடல்கள் முக்கியமானவை. மேலும் மனிதர்களின் நட்புக்களை அவ்வளவு உருவாக்காது ஒரு தனித்தீவாக இருப்பதில் சுகங்காண்பவனுக்கு இது துள்ளிக்குதிக்க வைக்கும் மகிழ்ச்சியான தருணங்கள் என்றே சொல்வேன்.


4.


இதில் சிக்கல் என்னவென்றால், இலக்கியம்/அரசியல் பேசுவதில் தீராத ஆர்வம் கொண்டு முகநூலில் இயங்கிய நாம் கிளப்ஹவுஸ் சென்றும் அங்கே போய் ஓர் உருப்படியான உரையாடலை உருவாக்க முடியாது தவிக்கிறோம். நமக்குள் அடித்துக்கொள்கிறோம். நமக்குத் தெரிந்தது மட்டுமே இந்த உலகம் என்று இன்னும் தீர்மானமாக நம்பி மற்றவர்களைக் காயப்படுத்தவும் செய்கின்றோம். இதை கிளப்ஹவுஸுக்குள் போகாமலே அங்கே என்ன நடந்திருக்கின்றதென்று முகநூலில் பலர் பகிர்வதன் மூலம் காண்கின்றேன். இன்னும் கொதிநிலையைக் கூட்டுந்தளமாய் கிளப்ஹவுஸ்அரசியல்/இலக்கியம் சார்ந்து இருக்கிறது போலும். பலருக்கு மனவுளைச்சல்களைப் புதிதாய்க் கொண்டு வரவும் செய்கிறது.


இது புதுத்தளம். ஆகவே எல்லாவகை 'உருட்டல்களும்' இங்கே இருக்கும். முகநூலில் பலருக்கு இருக்கும் அடையாளப் பிரச்சினை அங்கும் அடையாள அரசியலாக நுழையும். இவை குறித்த ஒழுங்கான உரையாடல் இப்போதைக்கு உருவாகப்போவதில்லை. தம்மைத் தாமே நிரூபிக்கும் தன் முனைப்புக்களின். ஆர்ப்பரிப்புக்கள் அடங்கி அமைதி நிலை வரும்போது கிளப்ஹவுஸ் நமக்கு எந்தவகையான ஊடகமாகப் போகிறது என்று சிலவேளைகளில் நமக்குத் தெரியலாம்.


இப்போது இதை எழுதத் தொடங்குவதற்கு முன்னர், ஒரு நண்பர் தன்னோடு சேர்ந்து கேட்க 'சென்னை இசை கிளப்' முகவரியை அனுப்பினார். வேறெதுவோ செய்ய நினைத்துக் கொண்டிருந்த என்னை ஒரு மணித்தியாலத்துக்கு மேலாய் அவர்கள் இழுத்து இருத்தி வைத்திருந்தார்கள். ஓரிடத்தில் சட்டென்று மனது நெகிழ்ந்தது. அது எனக்குள் உருவாக்கி வைத்திருந்த கனவுகளை மீள நினைக்கவைத்தது. காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பதை நினைவூட்டியது. ஒருவகை அமைதி உள்ளே பரவி நான் செய்ய விரும்பும் சில விடயங்களை விரைவில் தொடங்கவேண்டும் என்கின்ற உந்துதலைத் தந்தது.


ஆனால் அங்கே பாடிய, இசைத்துக் கொண்டிருந்தவர்க்கு இது தெரியுமா? இல்லை. அவர்கள் தமக்கு நன்றாக வந்த இசையை நமக்கு வழங்கினார்கள். ஆனால் நான் அதன் இழை பிடித்து என் கனவுகளின் வானத்தில் பறந்துகொண்டிருந்தேன். அவ்வாறு (அவர்களுக்கு) விடிகாலை ஐந்து மணி வரை நீண்டிருந்த இசையில் எத்தனை பேர் இன்னொரு உலகிற்குப் பயணித்திருப்பார்கள். எப்போதும் போல எனக்கு ஒரு படைப்பில் குறைகள் விளிம்பில் மெல்லியதாய்த் தளும்பிக் கொண்டிருக்கவேண்டுமென விரும்புவேன். இங்கும் நிறைய glitches. அதுவே இன்னும் இதை அழகாக்கியது.


ஆகவே நீங்கள் பற்றவேண்டியதைப் பற்றிக்கொள்ளுங்கள். சந்தர்ப்பம் வாய்த்தால் வானத்தில் ஏறி நடனமாடவும் செய்யுங்கள். ஓரிடத்தில் இவ்வாறு பெற்றுக்கொள்பவர்களாக இருக்கும் நாம், இன்னொரிடத்தில் பிறருக்கு வழங்குபவர்களாகவும் இருப்போம். உங்களுக்கான சந்தர்ப்பங்கள் வரும்போது அதை மட்டும் நினைவில் வைத்திருந்தால் போதும்.


மேலும் கிளப்ஹவுஸில் பெண்களைப் பேசவிட்டு அமைதியாக இருந்து கேட்டுப் பாருங்கள். அது இன்னொருவகைப் போதை. மனதில் அமைதி பெருக, அனுபவித்து உணர்ந்தவர்க்கு நான் என்ன சொல்ல வருகின்றேன் என்பது புரியும்.


*********************


(ஜூன் 12, 2021)

0 comments: