ஒரு உண்மையான வரி இருந்தால் மட்டும் போதும் தொடர்ந்து நிறைய எழுதிச் செல்வதற்கென ஹெமிங்வே கூறுவார். அத்துடன் எழுத்து ஓரு கிணற்று ஊற்றைப் போன்றது, அதன் அடிவரை போய் சுவைத்து அதை வற்றச் செய்துவிடக்கூடாது என்றும் சொல்வார். நன்றாக எழுத்து வந்தால் கூட ஓரிடத்தில் நிறுத்திவிட்டு -ஊற்று எப்படித் திரும்பப் பெருக நேரம் எடுக்குமோ- அப்படி எழுத்தும் ஊற்றெடுக்க காலம் கொடுக்கவேண்டும் என்று இன்னோரிடத்தில் ஹெமிங்வே எழுதிச் செல்வார்.
இவ்வாறான படைப்புக்களை வாசிக்கும்போது நாம் அந்தக் காலத்து பழக்கவழக்கங்களை, நடைமுறைகளை, சிந்தனைப்போக்குகளை அறிந்துகொள்கின்றோம். அதுமட்டுமில்லாது எமக்குப் பிரியமான படைப்பாளிகளின் தனிப்பட்ட வாழ்க்கைமுறையைக் கூட ஒரளவு தெரிந்து கொள்ளமுடியும். அவ்வாறான ஒரு புத்தகமாக எஸ்.ராமகிருஷ்ணனின் 'உலகை வாசிப்போம்' என்ற நூல் தொகுக்கப்பட்டிருக்கின்றது. இதில் பெரும்பான்மையான கட்டுரைகள் எழுத்தாளர்கள் எழுதியவைகளையும், எழுத்தாளர்களைப் பற்றி பிறர் எழுதியவைகளையும் குறித்துப் பேசப்பட்டாலும், அநேகமான கட்டுரைகளின் அடிச்சரடாய் பயணங்கள் இருப்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
யாருமற்ற தீவுகளைத் தேடிப் போகும் டி.எச்.லோரன்ஸை, கிரேக்கத்திற்குப் போகும் ஹென்றி மில்லரை, ரஷ்யாவுக்குப் போகும் ஜோன் ஸ்டீன்பெக்கை, இந்தியாவுக்குச் செல்லும் குந்தர் கிராஸை என பலரைப் பார்க்கின்றோம். சிலர் பிற நாடுகள்/மக்கள் மீது வைத்திருந்த எண்ணங்களை இத்தகைய பயணத்தின் பிறகு மாற்றிக்கொள்கின்றார்கள். சிலர் தமது சிந்தனைகளை மாற்றிக்கொள்ளாது, தமது பார்வைக்கு அண்மையாக 'மற்றவர்கள்' வரவேண்டுமென ஆசைப்படுகின்றார்கள். எனினும் இவையெல்லாவற்றுக்கும் அப்பால் பெரும்பாலானோர் வாழ்வின் சாராம்சத்தை தேடுவதிலே இந்தப் பயணங்களைப் பயன்படுத்திக்கொள்கின்றார்கள்.
போர்ஹேஸினதும், மார்க் ட்வைனினதும் உலகப்பயணங்கள் ஒருவகையான அனுபவங்களை அவர்களுக்குக் கொடுக்கின்றதென்றால், தாகூருக்கு உலகப் பயணங்கள் இந்தியாவின் பெருமையைப் பிறருக்கு எடுத்துரைப்பதில் பெரும்பாலும் கழிகின்றது. ஹெர்மன் ஹெஸ்ஸேயிற்கோ தனது கனவுப் பயணம் என இந்தியாவுக்குத் தொடங்கிய பயணத்தில் இந்தியாவில் கால்வைக்காமலே அதைச் சுற்றியுள்ள, இலங்கை, பர்மா, இந்தோனேசியா என்று பிற நாடுகளுக்கு நீள்கின்றது. சில காதல்களைச் சொல்லிவிட்டால் அது மறுக்கப்பட்டுவிடுமோ அல்லது இழக்கப்பட்டுவிடுமோ என்ற எண்ணத்தில் சொல்லப்படாமல் விடுவதைப் போல, ஹெஸ்ஸே அவரின் நெருக்கமான கனவு உலகான இந்தியா, தனது நேரடிப் பயணத்தின் மூலம் கலைந்துவிடக்கூடுமென்ற அச்சத்தால் கூட இந்தியாவில் கால்வைக்காமல் கடந்துபோயிருக்கலாமோ எனத் தோன்றுகின்றது. இந்தப் பயணத்தை முடித்ததன் பின்னரே, ஹெஸ்ஸே தனது பிரபல்யமான 'சித்தார்த்தா'வை எழுதினார் என்பதும் கவனிக்கத்தக்கது.
இதில் துர்க்கனோவ், ஹென்றி மில்லர், டி.எச்.லோரன்ஸ் போன்றவர்கள் காதலின்/காதலிகளின் நிமித்தம் பல்வேறு நாடுகளுக்குப் பயணித்தவர்கள். அதிலும் திருமணமான பெண் மீது பித்துப் பிடித்தலைந்து அவளையே தன் காதலியாக, காலம் முழுக்க வரித்து வாழ்ந்த துர்க்கனோவ்வின் காதல் எல்லாம் உண்மையிலேயே 'விசித்திரமான காதல்'தான். இந்தத் தொகுப்பில் எஸ்.ராமகிருஷ்ணன் இந்தியாவுக்கு வந்து பார்த்து எழுதிய படைப்பாளிகளை விமர்சனத்தோடு அணுகுவது முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. இவ்வாறான வாசிப்புக்களிலிருந்துதான் நாம் காலனித்துவம் குறித்த உரையாடல்களைத் தொடங்கமுடியும். ஆனால் மார்க் ட்வைனுக்குக் கொடுக்கும் ஒருவித சலுகையை, குந்தர் கிராஸுக்கு எஸ்.ரா கொடுப்பதில்லை. குந்தர் கிராஸ் பார்த்த வங்காளம் காலனித்துவத்தின் கண்கொண்டு என்றாலும், மார்க் ட்வைன் வரும்போது காலனித்துவவாதிகளே இந்தியாவை ஆண்டுகொண்டிருந்தார்கள் என்பதும், குந்தர் கிராஸ் வரும்போது இந்தியா சுதந்திரமடைந்துவிட்டதென்பதும் எஸ்.ரா கவனிக்க மறந்த புள்ளிகளில் ஒன்றென நான் நினைக்கின்றேன். மேலும் குந்தர் கிராஸுக்கு இந்தியா பிடிக்கவில்லையெனில் அவர் இந்தியாவுக்குத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கவும் தேவையிருக்காது. ஆக குந்தர் கிராஸுக்கு இந்தியா அதன் மறைக்கமுடியா வறுமையோடும், அழுக்குகளோடும் பிடித்திருக்கின்றது என்றே அர்த்தம் கொள்ளவேண்டியிருக்கின்றது.
அதுபோலவே ஹெர்மன் ஹெஸ்ஸேயின் 'சித்தார்த்தா' பற்றி, இது மேற்குலகினரின் கிழக்கு மீதான பார்வை, ஆகவேதான் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா புத்தருடன் விவாதித்து முரண்பட்டு தனக்கான ஞானத்தைத் தேடிப் போகின்றான். ஒருவகையில் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா புத்தரை மறுதலிக்க விரும்பும் மேற்கின் பார்வை என எஸ்.ரா பார்க்கும் பார்வையிலும் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை. மேலும் துறவியாக வாழ்ந்து/ஞானம் பெற்ற மணிமேகலை,வள்ளலார் போன்றவர்கள், பசிப்பிணி போக்க மக்களிடையே வந்தவர்கள். அவர்களோடு ஒப்பிடும்போது, எதையும் மக்களுக்குச் செய்ய விரும்பாத ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா கீழிறங்கி இருக்கின்றார் என்று சொல்வதிலும் எனக்குச் சிக்கல்களுண்டு.
ஞானத்தின் வழிநிலைகள் பலது போல, ஞானம் அடைந்தபின் அவர்கள் தேர்ந்தெடுக்கும் தேர்வுகளும் வேறுவிதமாக இருப்பதில் தவறேதும் இருப்பதாய்த் தெரியவில்லை. அந்தவகையில் பார்த்தால் பின்னர் வந்த இரமணர், ஜே.கிருஷ்ணமூர்த்தியை, ஏன் ஓஷோவைக் கூட நாமோர் ஓரத்தில் ஒதுக்கித்தான் வைக்கவேண்டும். இன்னொருவகையில் நாம் ஸென் ஞானிகளை இதன் நிமித்தம் முற்றாகப் புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். அவர்களில் அநேகர் சாதாரண மனிதர்களாய் எளிய வாழ்க்கையைத் தம்போக்கில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களாக அல்லவா இருந்திருக்கின்றார்கள்.
இதில் முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் இருப்பினும், 15 கட்டுரைகளாவது மிக முக்கியமானதெனச் சொல்வேன். அதிலும் எழுத்தாளர்கள் செய்யும் பயணங்களையும், அவற்றினூடாக அவர்களின் வாழ்வின் நடைபெற்ற சுவாரசியங்களையும் அறிய விரும்புபவர்க்கும் இது முக்கியமான ஒரு கையேடாக இருக்கும். மேலும் வாசிப்பில் ஆர்வமுடையவர்க்கு இதிலிருக்கும் கட்டுரைகளுக்கு அப்பாலும், புதிய விடயங்களை அறிந்துகொள்ளமுடியும்.
ஹாவானாவுக்குப் போனபோது ஹெமிங்வே அடிக்கடி வந்து மது அருந்தும் பாரில் அவர் நாற்காலியில் மது அருந்தியபடியிருக்கும் ஒரு சிற்பத்தைப் பார்த்து நான் மகிழ்ந்ததுமாதிரி, வியன்னாவில் பீட்டர் ஆல்டென்பேர்க் என்ற கவிஞனுக்கு அவர் அடிக்கடி செல்லும் கஃபேயில் இப்போதும் அவர் இருந்து கோப்பி குடிப்பதுபோன்ற நிலையில் சிற்பம் செய்துவைத்திருக்கின்றார் என்பது போன்ற சுவாரசியமான விடயங்களையும் இந்நூலில் தெரிந்து கொள்ளலாம்.
ஆக ஒருவகையில் படைப்பாளிகளின் தனிப்பட்ட பயணங்களைத் தெரிந்து கொள்வதைப் போல, இதுபோன்ற சுவாரசியமான சின்ன விடயங்களும் நாம் மேலும் பல்வேறு இடங்களுக்குப் பயணித்துப் பார்ப்பதற்கான உந்துதலைத் தரக்கூடியதாக நமக்கு அமையலாம். 200 பக்கங்கள் இருக்கும் இந்த நூலை இரண்டு நாட்களுக்குள் அவ்வளவு சுவாரசியமாக வாசித்து முடித்தேன். அந்தவகையில் நல்லதொருதொகுப்பைத் தந்தமைக்காய் எஸ்.ராவுக்கு நன்றியைச் சொல்லியாக வேண்டும்.
*****************
0 comments:
Post a Comment