நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வாசிப்பும் வாழ்க்கையும் வார்த்தைகளும்..

Sunday, November 14, 2021


யணங்கள் போய்த் திரும்பும்போது சென்ற நாடுகளின் ஞாபகங்களாய் எதையாவது எடுத்து வருவேன். கியூபாவில் தற்செயலாய்க் கண்டெடுத்த கடல்தாவரத்தின் சிறுகிளை, கொச்சினில் வாங்கிய கதகளியாட்ட முகம், இலங்கையின் ரக்ஸா முகமூடி என என் அறையை இவை அலங்கரித்தபடி இருக்கும். கழுத்தில் எதையும் அணியப்பிரியப்படாத என் கழுத்தில் நீண்டகாலமாய்த் தொங்கிக்கொண்டிருந்த கயிற்றில் இருந்தது, மெக்ஸிக்கோவில் மாயன் ஒருவரிடம் பெற்றுக்கொண்ட ஒரு கறுப்புச் சிறு உருவம்.


அதைவிட ஒவ்வொரு நாட்டின் நிலப்பரப்புகளையோ கலாசாரத்தையோ பிரதிபலிக்கும் காந்தத்திலான பயண நினைவுச் சின்னத்தை (souvenir) வாங்கி வந்து பிரிட்ஜில் ஒட்டிவைப்பேன். குசினிக்குள் உலாவித்திரியும் ஒவ்வொருபொழுதும் இவை என் கண்களில்பட்டபடியே இருக்கும். சிலவேளைகளில் காலம் உறைந்துபோய் அந்த நிலப்பரப்புக்களில் உலாவிய பொழுதுகள் ஒளிரத்தொடங்கும். இப்போது வீடங்கும் காலமாயிற்றேயென மென்துயர் பரவ அவற்றைத் தடவிவிட்டபடி நகர்வேன்.


எப்போதும் அலைபவனாக இருக்காவிட்டாலும், விரும்பியபோது அலைபவனுக்கே இந்தக் காலம் ஏதோ சிலுவையில் அறைந்துவிட்டமாதிரியான மனோநிலையைத்தான் பெரும்பாலும் கொண்டுவருகிறது. சாதாரண காலங்களிலேயே மனிதர்களைச் சந்திக்க அவ்வளவு விரும்பாத, களியாட்டங்களில் தன்னைத் தொலைவில் வைத்துக்கொண்டு வீட்டில் இருக்கவே பிரியப்படும் ஒருவனுக்கே இந்தக் காலத்தைக் கடக்கக் கடினமாக இருக்கும்போது, extrovert கள் எப்படி இதைக் கடக்கின்றார்கள் என நினைப்பதுண்டு.


தாம் நினைக்கின்றபோது, மகிழ்ச்சியைத் தன் கைவிரல் அசைவில் உருவாக்க வரம் வாங்கி வந்தவர்க்கும், அதை நாய்க்குட்டியைப் போலக் கொஞ்சி விளையாடிக் கொள்பவர்களைப் பற்றியும் நான் பேசப் போவதில்லை. ஓஷோ ஓரிடத்தில் Boredom குறித்துப் பேசும்போது, உலகில் இரண்டுவகையான மனிதர்கள் மட்டுமே  சலிப்புக்குள் ஒருபோதும் அமிழாது இருப்பவர்களெனச் சொல்கிறார். அவர்களில் ஒருவகையினர் முட்டாள்கள், மற்றவர்கள் ஞானம் அடைந்தவர்கள். சாதாரண மனிதர்கள் எல்லோரும் அலுப்புக்குள் நுழைந்து வராது இருக்கவே முடியாது என்கிறார். நான் சாதாரண மனிதன்.


மூக வலைத்தளங்கள் உட்பட, தொலைபேசி அழைப்புக்கள் வரை என் நண்பர்கள் வெறுமைக்குள்ளும், சலிப்புக்குள்ளும் அகப்பட்டு வெளிவராது கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பதை அறிவேன். ஒரு பொழுது விடியும்போது என்னால் எனது படுக்கையிலிருந்து எழுந்து ஒரு சிறுவிடயத்தைச் செய்யக்கூட முடியவில்லை என்ற கேவலுடன் கதைப்பவருடன், மகிழ்ச்சி ஒரு நாய்க்குட்டியைப் போன்றது, சொடுக்குப் போட்டுக் கூப்பிடாமல் இப்படி ஏன் முறைப்பாடு செய்கின்றீர்களென நான் அவரிடம் சொன்னால் அது எவ்வளவு வன்முறையாக இருக்கும். 


ஏன் இந்த மனிதர்கள் மோசமாக இருக்கின்றார்கள், ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது, வாழ்வு ஏன் இந்தளவு வெறுமையாக இருக்கிறதெனத் தத்தளித்துக் கொண்டிருப்பவர்க்கு முன்னால் வாழ்வின் நாம் கற்ற எந்தப் பாடத்தைச் சொன்னாலும் அது எந்தப் பிடிமானத்தையும் ஏற்படுத்தாது. எதையோ பேசிப் பேசித்தான் அவர்களை இந்த விடயங்களில் இருந்து கடக்க வைக்க முடியும். அவ்வாறு உரையாடுவதன் மூலம் அவர்களின் தத்தளிப்புக்களை மட்டுமில்லை எங்களின் வெறுமைகளையும் சிலவேளைகளில் நாம் கடந்து போய் இருப்போம்.


ஆகவே மகிழ்ச்சியை நாய்க்குட்டியைப் போல வெளியில் உருவாக்குவதைவிட, அமைதியை உங்கள் மனதுக்குள் உருவாக்கவே விருப்புங்கள் எனச் சொல்வேன். அந்த நிம்மதி, மகிழ்ச்சியின் கதவு சட்டென்று எப்போதாவது - அது காதலாகவே, நட்பாகவோ, ஒரு நல்ல இசையின் வடிவமாகவோ- திறக்கும்போது உங்களால் அதை முற்றாக 'எஞ்சாய் எஞ்சாமி' என்று தன்னிலை மறந்து ஆடிப்பாடிட வைக்கும். ஆடுகின்றபோது ஏதேனும் மென் உணர்வுகள் நிரம்பி கண்ணீர்த்துளிகளைச் சிந்தி உங்கள் வெறுமையை உருக்கிவிடக்கூடியதாகவும் இருக்கும். அந்தக் கணத்தில் வாழ்வு எவ்வளவு அழகானதானதென ஒரு பறவையில் சிறகடிப்பைப் போல உங்களை உணரவைக்கவும் செய்யலாம்.


இந்த நோய்த்தொற்றுக் காலங்களில், நான் நெருங்கிப் பேசிய பல நண்பர்களிடையே அவர்கள் சமூகவலைத்தளங்களில் காட்டும் முகத்துக்கு அப்பால் இன்னொரு உலகம் இருப்பதைக் கண்டு திகைத்திருக்கின்றேன். அவ்வளவு கடினமான காலங்களைக் கடந்து வந்தவர்களாகவும், கடந்து கொண்டிருப்பவர்களாகவும் அவர்கள் இருக்கின்றார்கள்.

 

சில வருடங்களுக்கு முன்னர்  ஒரு படைப்பைத் தமிழாக்கம் செய்தபோது, ஒரு நண்பர் அதைத் தன் பக்கத்தில் பகிர்ந்துவிட்டு, பிறகு அதை மறைத்துவிட்டு, தான் செய்த மொழியாக்கம் போல கொஞ்சம் திருத்தி மீண்டும் பகிர்ந்தபோது அவரின் பெயரைக் குறிப்பிடாது 'இப்படிச் செய்வது நியாயமா' என ஒரு சிறுபதிவைப் பொதுவில் எழுதியிருந்தேன். அந்த நண்பர் ‘உட்பெட்டி’யில் வந்து நிறைய விளக்கம் கொடுத்துக்கொண்டேயிருந்தார். ஒருகட்டத்தில் என்ன செய்வதாக இருந்தாலும், பொதுவில் பகிருங்கள், நான் அங்கே உரையாடத் தயாராக இருக்கிறேன் என்றேன். அதன்பிறகும் அவர் எனக்கு நண்பராக சமூக வலைத்தளத்தில் இருந்தார். பின்னர் சில வருடங்களுக்குப் பின் அவர் தனக்கான முடிவைத் தானே தேர்ந்தெடுத்து நம்மை விட்டுப் பிரிந்தபோது, என்னை அவரை அந்தச் சிறுபதிவைக் கூடப்போடாது காயப்படுத்தாமல் இருந்திருக்கலாம் என்று கலங்க வைத்திருந்த்து. 


எந்த நண்பர்களோடு கதைத்தாலும் எனக்கு இது குறித்து குற்றவுணர்வு  இப்போதும் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருப்பேன். சிலவேளை அவர் அந்த விடயத்தைச் செய்தபோது எந்தவகையான மனோநிலையில் இருந்தார் என்பது கூட எனக்குத் தெரிந்திருக்காது. அவர் அப்போதும் ஏதும் தளம்பலில் இருந்திருக்கலாம். நான் அதை ஏன் உணராது போனேன் என்கின்ற மனக்குறை இப்போதும் என்னோடே வந்தபடி இருக்கின்றது.


இந்த நோய்த்தொற்றுக்காலத்தில் சில நண்பர்களோடு நெருங்கிப் பழக வாய்த்திருக்கின்றதெனச் சொன்னேன் அல்லவா? அவர்களின் கடந்துவந்த கதைகளை எல்லாம் கேட்கும்போது சிலவேளைகளில் எனக்கு அவ்வப்போது வரும் வெறுமைகளும், துயரங்களும் ஒரு பொருட்டேயல்ல என்றே பலவேளைகளில் தோன்றுவதுண்டு. ஆக அவர்கள் தங்களைப் பகிரும்போது அது எனக்கான கற்றலாய், தேற்றலாய், தேறுதலடைதலாக அமைந்திருக்கின்றது. ஆகவேதான் ஒருவரைப் பார்த்து ' மகிழ்ச்சி நாய்க்குட்டி போல இருக்கும்போது, வாழ்வு சலிப்பாக இருக்கின்றது என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்' என அறைகூவலாக மட்டுமில்லை, சின்ன முனகலாய்க் கூடச் சொல்லமாட்டேன். 


மேலும் இலக்கிய உலகில் வாழ்ந்துகொண்டிருந்தால், அது ஒரு அற்புதமான மனோநிலையை - முக்கியமாய் மகிழ்ச்சியாக இருக்கின்றோம்' எனவும் சிலர் சொல்கின்றார்கள். என்னால் பிரான்ஸிஸ் கிருபாவின் 'கன்னி'யை வாசித்துவிட்டோ, அப்புவின் 'வன்னி யுத்தத்தை' வாசித்துவிட்டோ பல நாட்கள் கடும் உணர்வுகளுக்குள் உழன்றுகொண்டுதான் இருக்கமுடிந்தது. அப்படியெனில் எப்போதும் இலக்கிய உலகம் மகிழ்ச்சியை மட்டுமா கொண்டுவரும்? அந்தக் கலங்காத உள்ளத்தை, இந்த உலகம் ஏன் இப்படி கொடூரமாக இருக்கின்றது என்று வெறுமையை உணரவைப்பதையெல்லாம் 'வாசிப்பு ஒரு அற்புதமான உலகம்' என்று சொல்லி பாவனை காட்டவும் என்னால் முடியாது.


ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாதை. மற்றவர்களின் பாதைதான் எங்களின் பாதையென சட்டென்று நம்பிவிடாதீர்கள். 'நெடுஞ்சாலையில் என்னைக் கண்டால் யோசிக்காமல் உடனே கொன்றுவிடுங்கள்' என்று தன் பாதை எவ்வளவு அற்புதமாக இருந்தாலும், அதைப் பின் தொடராதீர்கள் என்றுதான் கெளதம புத்தரும் (ஸென்) கூறுகின்றார். ஹெர்மன் ஹேஸேயின் 'சித்தார்த்தா'வில் வரும் சித்தார்த்தா, புத்தனைக் கண்டு சலிப்படைந்து நதிக்கரையில் வந்துதான் தனக்கான ஞானத்தைப் பெற்றுக்கொள்கின்றான். அவன் புத்தனின் பாதைதான் தனதென்று புத்தனிடம் அடைக்கலம் ஆகியிருந்தால், அவனுக்கான ஞானம் கிடைத்திருக்காது அல்லது ஆகக்குறைந்தது காலம் பிந்தித்தால் கிடைத்திருக்கும். புத்தனின் ஒவ்வொரு அடியையும் பிசகாது பின் தொடர்ந்தாலும், மற்றவர்க்கு எல்லாம் ஞானம் கிடைத்தபோதும், ஆனந்தாவிற்கு மட்டும் ஞானம் கிடைக்கவில்லை. புத்தரின் மரணமே ஆனந்தாவின் விடுதலையாகின்றது. அதன் பிறகே அவர் ஞானமடைகின்றார்.


ஆகவே, அழவேண்டியபோது அழுது, மகிழ்ச்சியாக இருக்கும்போது சிரித்து, தழுவத்தோன்றும்போது ஆரத்தழுவி வாழ்க்கையை அதன்போக்கில் வாழ்வோமாக. துயரத்தையும், வெறுமையையும் அடைந்தபிறகு வரும் நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்குமான பெறுமதி எத்தகையது என்பது அதை அனுபவித்தவர்க்குத்தான்  நன்கு தெரியும். 


மேலும் எப்போதும் முத்தமிட்டுக்கொண்டிருந்தால் முத்தம் ஒரு அற்புதமான அனுபவமாகவா இருக்கபோகின்றது?

..........................


-இன்னும் வரும்-


(நன்றி: வியூகம்- இதழ்-08/ஒக்டோபர்- 2021)


0 comments: