1.
ஸென் மனோநிலை என்பது அனைத்தும் அமைதியாக இருக்கும்போது தியானத்துக்குச் செல்வது அல்ல என்று சொல்வார்கள். இரைச்சல் நிறைந்த சந்தைக்குள் போகும்போது மனதுக்குள் தியானத்திற்கான அமைதியைக் கொண்டுவருதலே முக்கியமானதென வலியுறுத்துவார்கள். அவ்வாறுதான் வெளியுலகம் தேவையற்ற வீணான விவாதங்களில் என்னை மூழ்கவைக்கும்போது, நூல்களைத்தேடிப் போய்விடுவேன். அவ்வாறு மீண்டும் வாசிக்கத் தொடங்கியது ராஜ் கெளதமன் எழுதிய 'தலித்திய அரசியல்'. இது ஒரு சிறு நூல். ராஜ் கெளதமன் சாதி ஒழிப்பிற்காய் அங்கே முன்வைக்கும் புள்ளிகள்தான் முக்கியமானது. அதிலும் அம்பேத்கார் X பெரியார் X அயோத்திதாச பண்டிதர் போன்றோரை எதிரெதிர் முனைகளில் வைத்து உரையாடாமல் ஒவ்வொருவரின் முக்கியத்துவத்தையும், அதேவேளை அவர்கள் தவறவிட்டிருக்கக்கூடிய புள்ளிகளையும் அதில் அழகாகச் சுட்டிக்காட்டுகின்றார்.
மேலும் இந்த நூலில் ஏன் சாதி ஒழிப்பு இற்றைவரை முற்றுமுழுதாக சாத்தியப்படாததற்கான பல கோணங்களைச் சுட்டிக்காட்டி, வாசிப்பவர்களை அடுத்த நிலையில் என்ன செய்யமுடியும் என்று ஒரு திறந்த உரையாடலுக்கான அழைப்பதாலும் இந்த நூல் எனக்கு மனதுக்கு நெருக்கமாக இருந்தது.
இதற்கு இன்னொரு உதாரணமாய் இன்னொரு நூலை/உரையாடலை சொல்லலாம். அது அயோத்திதாசருக்கும் சிங்காரவேலருக்கும் 'தமிழன்' இதழில் நடந்த உரையாடலாகும். இதை 'அயோத்திதாசரும் சிங்காரவேலரும், நவீன பெளத்த மறுமலர்ச்சி இயக்கம்; வெளிவராத விவாதங்கள்' என்று ஸ்டாலின் ராஜாங்கம் தொகுத்த நூலில் காணலாம்.. 1899 இல் தமிழ்ச்சூழலில் மீண்டும் பெளத்தம் நுழையத்தொடங்குகின்றது. 'கர்னல்' ஆல்காட், அநகாரிக தர்மபாலா தலைமையில் இது ஏற்படுகின்றது. அயோத்திதாசர் சாக்கைய புத்தசங்கத்தையும், சிங்காரவேலர் மகாபோதி புத்தசங்கத்தையும் இருவேறு சங்கங்களாக நடத்துகின்றனர்.
இந்த இரண்டு சங்கங்களின் இடையிலான வேறுபாட்டுக்கு அயோத்திதாசர் முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டே மகாபோதி தங்களை உயர்ந்தவராகக் காட்டிக்கொண்டு 'காட்டுமிராண்டிகளாக' இருக்கும் தலித்துக்களை நல்ல மனிதர்களாக மாற்றபோகின்றோம் என்ற கருத்துக்களோடு இருப்பதெனச் சுட்டிக்காட்டுகின்றார். சிங்காரவேலர் மகாபோதி சங்கத்தில் இருக்கும் ஒரு சிலரின் இந்தத் தவறான கருத்துக்களை முன்வைத்து இப்படி கருதிக்கொள்ளல் தவறு, நாமெல்லோரும் ஒருகாலகட்டத்தில் ஒன்றாக இயங்கி பெற்றும்/கொடுத்தும் கொண்டவர்களெனச் சுட்டிக்காட்டி அந்த உரையாடல் நீள்கின்றது.
இதே காலகட்டத்திற்கு அண்மையாகத்தான் இந்த 'உயர்நிலையாக்கம்' செய்யும் முயற்சியில் பாரதியார் தலித் பிள்ளைக்கு பூணூல் அணிந்து பார்த்ததையும் நினைவுகொள்ளலாம். அன்று அயோத்திதாசரை பாரதியார் ஊன்றி வாசித்திருந்தால் அல்லது தலித் மக்களின் மனோவுணர்வுகள் புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் பாரதியார் இந்த விடயத்தை வேறுவிதமாக அணுகியிருக்கக்கூடும்.
எல்லா அறிவார்ந்த மனிதர்களும் சில விடயங்களில் மேலோங்கி இருப்பதைப்போல வேறு சில விடயங்களில் தவறுகளை/சரிவுகளைக் காணவும் கூடும். அதற்குத் தப்பாதவர் எவருமில்லை என்றே சொல்லலாம். காந்தி ஒரு மகாத்மாக்கப்பட்டவர் ஆயினும், அவர் தென்னாபிரிக்காவில் இருந்தபோது கறுப்பினமக்கள் மீது ஒரு இனவாதியாக கருத்துச் சொன்னவர் உட்பட, அம்பேத்கார் முன்வைத்த பூனா இரட்டைவாரி வாக்குரிமைத் திட்டத்தை நிராகரித்தவரை பல சரிவுகள் 'மகாத்மா' காந்திக்கும் இருக்கின்றது. இதன் மூலம் காந்தி முற்றாக நிராகரிக்கப்படவேண்டியவரல்ல என்று சொல்வது எவ்வளவு முக்கியமோ, அவ்வாறே காந்தியின் இந்தத் தவறுகளும் நேர்மையாகச் சுட்டிக்காட்டப்படுவதும் அவசியமானது.
அவ்வாறே அயோத்திதாச பண்டிதரின் முக்கியத்துவத்தை விதந்துரைக்கப்படும்போது அவர் அருந்ததிய மக்கள் மீது கூறிய கருத்துக்களும் விமர்சிக்கப்படவேண்டியவையேதான். இவ்வாறான எதிர்மறை விடயங்கள் சுட்டிக்காட்டப்படும்போதே அவர்கள் இன்னும் மனிதத்தன்மையாகின்றார்கள். இதன்மூலமே அவர்களைத் திருவுருவாக்காமல் அவர்களை வழிபடுபவர்களிடமிருந்து காப்பாற்றி அடுத்த காலகட்டத்துக்கும் நாம் அவர்களை எடுத்துச் செல்லமுடியும்.
2.
'நான் பூர்வ பெளத்தன்' என்கின்ற டி.தருமராஜனின் நூல், பண்டிதர் அயோத்திதாசர் ஏன் தன்னை ஒரு பெளத்தனாக முன்வைத்தார் என்பதற்கான ஒரு சித்திரத்தை நமக்குத் தருகிறது. 'இந்துக்கள்' என்ற அடையாளத்துக்குள் ஒடுக்கப்படாதவர்கள் வந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் 'ஆதித் தமிழர்' என்ற அடையாளத்துக்குள் தம்மை உள்ளடக்கவேண்டும் என்று சனத்தொகைக் கணக்கெடுப்பின்போது வேண்டுகோளை ஆங்கிலேயரிடம் முன்வைக்கின்றார். அது நிராகரிக்கப்பட்டாலும் ஆதித்தமிழர், திராவிடர் என்ற அடையாளங்களைத் தொடர்ந்து கோட்பாட்டு உருவாக்கம் செய்ய பல தொன்மக் கதைகளைத் தேடிப்போகின்றார். ஆதித் தமிழர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்பதையும், பெளத்தம் தமிழ்ச்சூழலில் அழிந்துவிடவில்லை, அதன் தொடர்ச்சி உள்ளுறைந்து இயங்கிக்கொண்டிருக்கின்றது என்பதையும் வித்தியாசமான கோணங்களில் முன் வைக்கின்றார். அதன் நீட்சியில் பண்டிதர், தீபாவளி, போகிப்பண்டிகை, கார்த்திகை விளக்கீடு போன்றவற்றிற்கு புதிய கதைகளைப் பெளத்தத்தினூடாக முன்வைக்கின்றார்.
ஒருவகையில் இது இந்து வரலாற்றை கட்டவிழ்ப்பதுதான். பண்டிகைகள் கொண்டாடும் நிகழ்வை ஏற்றுக்கொண்டு, அது எப்படி மாற்றப்பட்டிருக்கலாம் என்று வேறொரு கோணத்தில் அணுகிப்பார்ப்பது. இராணவன் இராமனினால் கொல்லப்பட்டது நடந்ததுதான் எனக் கொண்டு, ஆனால் இராமாயணத்தில் சொல்லப்படும் இராவணன்தான் இராவணனா அவன் அதில் இருப்பதுபோல இல்லாதவனாக இருந்திருக்கலாம் என 'வாசித்து'ப் பார்ப்பது. ஆகவேதான் இற்றைக்கு பல நூற்றுக்கணக்கான இராமாயணங்கள் நம் சூழலில் இருக்கின்றன. இராமாயணத்தை ஒற்றைப்படையாக வாசிக்கும் நம்மை அப்படியெல்லாம் வாசிக்கத் தேவையில்லை என்று இவை இடையீடு செய்கின்றன. அவ்வாறான ஒரு வாசிப்பு முறையை பண்டிதர் 'பூர்வ பெளத்தன்' என்பதில் எடுத்துக்கொள்கிறார். அதை மிக நேர்த்தியாகப் பல்வேறுவழிகளில் செய்தும் காட்டுகிறார்.
3.
அவ்வாறு எழுத்தில் வாசிப்புமட்டும் செய்யாது ஒரு பெளத்தராகவும் இலங்கை சென்று பஞ்சசீலம் எடுத்து தன்னை மாற்றிக்கொள்ளவும் செய்கின்றார். இதில் ஒரு சுவாரசியமான புள்ளியென்னவெனில், தமிழ்நாட்டுக்கு வந்து பெளத்தத்தின் திரிபீடகம் போன்ற நூல்களை பண்டிதருக்குக் கற்பித்தவர் இலங்கையில் இருந்து வரும் தமிழரென்ற குறிப்பைப் பார்க்கின்றோம் (பார்க்க, ஸ்டாலின் ராஜாங்கம் தொகுத்த - அயோத்திதாசர் -சிங்காரவேலர் விவாதங்கள்). அப்படியெனில் இலங்கையில் 1900களிலேயே தமிழ்ப் பெளத்தம் உயிர்ப்புடன் ஏதோ ஒருவகையில் இருந்ததென்பதை அறிந்துகொள்கின்றோம். ஆனால் அதன் வேர்களை ஒருவரும் இற்றைவரை தேடிச்சென்று விரிவாக எழுதவில்லை என்று நினைக்கின்றேன். இன்னொருவகையில் அயோத்திதாசரின் கதையாடலை வாசிக்கும்போது நம்மிடையே எத்தனைவிதமான போராட்டவகைமாதிரிகளைக் கைகொண்டஎவரும் இவ்வாறு பழைய தொனமங்களை/புராணங்களைத் தேடிச்சென்று மகாவம்சத்தைக் கட்டவிழ்த்து வரலாற்றை மறுவாசிப்புச் செய்து பார்க்கவில்லையே என்ற ஆதங்கமும் எழுந்திருந்தது.
ஏனெனில் நமக்குக் கிடைக்கும் குறிப்புகளின்படி, 1960களில் வைரமுத்து அவர்கள் தொடங்கிய இலங்கைத் தமிழர் பெளத்த சங்கம் பற்றியே நமக்கு ஒரளவு அறிய முடிகின்றது. இந்த இலங்கைத் தமிழர் பெளத்தம் பற்றி இலங்கையன் 'வாழ்வும் வடுவும்' நூலிலும், யோகரட்ணம் எழுதிய 'தீண்டாமைக் கொடுமைகளும் தீமூண்ட நாட்களும்' நூலிலும் நாம் அறியமுடிகின்றது. இலங்கையன் அவர்கள் தமிழர் சிறுபான்மை சபையில் செயலாளர் பதவியில் இருந்து 50களில் இயங்கியவர். பல்வேறு இழிவான பெயர்களால் ஒடுக்கப்பட்டவர்கள் அழைக்கப்பட்டபோது இதற்கு முன்னர் இயங்கிக்கொண்டிருந்த 'ஒடுக்கப்பட்டோர் ஊழியர் சங்கம்', 'தாழ்த்தப்பட்டோர் சங்கம்', 'வடமராட்சி சேவா சங்கம்' ஆகியவற்றை இணைத்து 1940களில் 'அகில இலங்கை சிறுபான்மை மகாசபை' தொடங்கப்படுகின்றது.
இதை இப்போது அயோத்திதாசர் 1892இல் சென்னையில் கூட்டப்பட்ட மகாஜனசபையின் முன் தாழ்த்தப்பட்டவர்களா எங்களையும் நீங்கள் இந்துக்களாக நினைப்பின் எங்களை ஆலயங்களுக்குள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று கேட்ட சம்பவத்தோடு இணைத்துப் பார்க்கலாம். எப்படி தலித்துக்கள் கோயிலுக்குள் நுழைய முடியும் என்று ஆதிக்கசாதிகள் வெகுண்டதைப் பார்த்தபின்னர்தான், அயோத்திதாசர் பூர்வ பெளத்தர் என்ற கதையாடலுக்குள் நுழையவும், தன்னையொரு பெளத்தனாக மாற்றிக்கொண்டதும் நிகழ்ந்தெனக் கூடச் சொல்லலாம்.
4.
மீண்டும் இலங்கைச் சூழலுக்கு வருவோம். இவ்வாறு சிறுபான்மை தமிழர்சபை தீவிரமாக இயங்கியபோது அதற்குள் அரசியல்கட்சிகள் சார்ந்து பங்குபெறாது தனித்து ஒடுக்கப்பட்டோருக்காக குரல் கொடுக்க்வேண்டும் என்ற தன்னைப் போன்றவர்களின் விரும்பியபோதும், பின்னர் அதை சில கட்சிகள் தமக்கானதாகச் சுவீகாரம் எடுக்கவிரும்பியபோது பிளவுகள் வந்தன என இலங்கையன் எழுதுகின்றார். பின்னர் இச்சபையிலிருந்தே 'சிறுபான்மைத் தமிழர் ஜக்கிய முன்னணி', 'தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்', இலங்கைத் தமிழர் பெளத்த சங்கம்' (1962), ஜக்கிய தேசியக் கட்சிசார் சிறுபான்மை தமிழர் இயக்கம் (1978) போன்றவை தோன்றியிருக்கின்றன. அதன்பின்ன்னர் 1960களில் மாவிட்டபுர ஆலயப்பிரவேசமும், நிச்சாம நிகழ்வுகளும் வரலாற்றுச் சம்பவங்களாகும்.
5.
பண்டிதர் ஆதிதமிழர்களுக்கான கதையாடல்களை உருவாக்கியதற்கு, நாம் அம்பேத்கார் 'இந்தியாவில் சாதிகள்' பற்றிய நூலில் எழுதியதோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். அம்பேத்கார் மனுவிலிருந்து சாதிகள் தொடங்கின்றன என்பதை மறுப்பதோடு, அதற்கு முன்னரே சாதிகள் பல்வேறு வகையில் வேர் பரப்பி இருந்ததையும், மனுவே இந்தச் சாதிப்பிரிவினைகளை நுட்பமாக ஒழுங்குபடுத்தியவர் என்பதை 1916இல் கொலம்பியாவில் சமர்ப்பித்த ஓர் ஆய்வுக்கட்டுரையில் கூறுகின்றார்; "சாதி பற்றிய சட்டதை மனு வழங்கவில்லை' அவனால் இயற்றவும் முடியாது என்பதே உண்மை. சாதி, மனுவிற்கு நெடுநாட்களுக்கு முன்பிருந்தே நின்று நிலவியது. அவன் சாதியை உயர்த்திப் பிடித்தவனாக இருந்தான். எனவே, அவன் சாதியைத் தத்துவத் தன்மை கொண்டதாக ஆக்கினான். ஆனால் மிக நிச்சயமாக அவன் இந்துச் சமூகத்தின் இன்றைய நிலையை ஏற்படுத்தவும் இல்லை; அவனால் ஏற்படுத்தவும் முடியாது. ...எந்த ஒரு தனி மனிதனின் எத்தனத்தாலோ, சக்தியாலோ அல்லது ஒரு வர்க்கத்தின் தந்திரத்தாலோ சக்தியாலோ சாதிக்கப்படமுடியாது' ('இந்தியாவில் சாதிகள் - ப35-36) என்பதன் மூலம் அம்பேத்கார் ஒற்றைத்தன்மையாக சாதியை மனுவில் வைத்துப் பார்ப்பதைத் தவிர்க்கின்றார் என்பதை எளிதாக அறிந்துகொள்ளலாம். ஆக மனு இவ்வாறு சாதியைத் தத்துவத் தன்மையாக ஆக்குவதற்கு பல்வேறு புராணங்களும்/தொன்மங்களும் உதவியிருக்கின்றது என்றால், அதேபோன்று சாதியை ஒழிப்பதற்கும் பண்டிதர் புதிய கதையாடல்களைத் தேடியிருக்கின்றார் என்பது விளங்குகின்றது.
இன்று பலர் பெரியாரையும் பண்டிதரையும் எதிரெதிர் முனையில் வைத்து உரையாடும்போது பண்டிதரும் பெரியாரும் இந்தியச் சுதந்திரத் தினத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களாக இருக்கின்றார்கள் என்பது சுவாரசியமானது. பெரியாரிடமிருந்து அண்ணாத்துரை பிரிந்துபோனதற்கு பெரியார்-மணியம்மை திருமணம் மட்டும் காரணமில்லை, உண்மையிலே இந்திய சுதந்திர தினமே முக்கிய காரணி என்பதை 'ஆகஸ்ட் 15: துக்கநாள் - இன்பநாள்' என்று எஸ்.வி.ராஜதுரை எழுதிய நூலை வாசித்திருந்தவர்க்கு விளங்கியிருக்கும்.
அதேபோன்று அயோத்திதாசரும் இப்போதுதான் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆங்கிலேயரால் சில விடயங்களாவது நிகழத்தொடங்கியிருக்கின்றன. இதைப் பொறுக்காத ஆதிக்கசாதிகள் 'இந்தியச் சுதந்திரப் போராட்டத்தை'க் கையிலெடுக்கின்றார்கள் என்று பண்டிதர் குறிப்பிட்டுமிருக்கின்றார். அதேவேளை பண்டிதர் இந்திய சுதந்திர நாளைப் பார்க்கமுன்னரே 1914இலேயே காலமாகினார் என்பதையும் கவனித்தாகவேண்டும். இந்தவகையில் பெரியாரும், அயோத்திதாசரும், ஆதிக்கசாதிகளின் கையில் கொடுக்கும் சுதந்திரம் ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பாதகமாகவே வந்துசேரும் என்பதை ஒரே கோணத்தில் நின்று கருதியிருக்கின்றார்கள் என்பதையும் நாம் கண்டுகொள்கின்றோம்.
....................................................
உதவியவை:
-தலித்திய அரசியல் ராஜ் கெளதமன்
-நான் பூர்வ பெளத்தன் - டி.தர்மராஜ்
-வாழ்வும் வடுவும் - இலங்கையன்
-அயோத்திதாசரும் சிங்காரவேலரும்: நவீன பெளத்த மறுமலர்ச்சி இயக்கம் வெளிவராத விவாதங்கள் - பதிப்பாசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம்
-இந்தியாவில் சாதிகள் - டாக்டர் B.R. அம்பேத்கார்
- தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் - யோகரட்ணம்
- ஆகஸ்ட் 15: துக்கநாள் - இன்பநாள் - பதிப்பாசிரியர் எஸ்.வி.ராஜதுரை
(நன்றி: கனலி, ஜூன் 2021)
0 comments:
Post a Comment