கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

முள்ளிவாய்க்கால்

Thursday, December 02, 2021

 

முள்ளிவாய்க்கால்


-இளங்கோ

 


1.

நான் கொழும்பில் போய் இறங்கியபோது வெயில் எரித்துக்கொண்டிருந்தது. பகல் பொழுதில் வெளியில் போகவும் எரிச்சலாக இருந்தது. இந்தப் பயணத்தின்போது அவளை எப்படியாகினும் தவறாது சந்தித்துவேண்டுமென நினைத்திருந்தேன். அவள் முள்ளிவாய்க்காலுக்குள் கடைசிவரை இருந்து தப்பி வந்தவள். கொழும்பிலும், தனது ஊரிலுமாக மாறிமாறி இப்போது வாழ்ந்துகொண்டிருந்தாள். அவளை அவளின் ஊரில் சென்று சந்தித்தல் அவ்வளவு எளிதில்லை என்பதால், எப்படியேனும் கொழும்பில் சந்தித்தால் நல்லது என்று தோன்றியது. நான் எழுதுவதைக் கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்களாக வாசித்துக் கொண்டிருக்கின்றவள். ஆனால் அண்மையில்தான் சோஷல் மீடியா மூலம் தொடர்புகொண்டு இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாயிருந்தோம்.


காலையில் பக்கத்துக் கடையில் வாங்கி வந்திருந்த Sunday Timesஐ விரித்துப் பார்த்தபோது, கொழும்பில் ஓரிடத்தில் ஜியோப்ஃரி பாபாவினது ஆர்க்கிட்டெக் கண்காட்சி நடக்கின்றது என்பதைப் பார்த்தேன். நாம் சந்திப்பதாக இருந்தால் இந்தக் கண்காட்சியில் சந்திப்போமா என அவளிடம் கேட்டேன். அவளுக்குக் கொடுப்பதற்கென சென்னையில் வாங்கிய சில புத்தகங்களையும், கொழும்பு வெம்மைக்குள் இதோ உருகப்போகின்றேன் என்று சவால் விட்டுக்கொண்டிருந்த சில சொக்கிலெட்டுக்களையும் கூடவே எடுத்துக்கொண்டு போனேன்.


ஜியோப்ஃரி பாவாவினால் வடிவமைக்கப்பட்டிருந்த கந்தளகமா ஹொட்டலில் சிலவருடங்களுக்கு முன்னர் போய்த் தங்கியிருக்கின்றேன். ஒருபக்கம் வாவியும், இன்னொருபுறம் மலையுமென காட்டுக்குள் அமைந்த அந்த விடுதி, ஓர் அற்புதமான அனுபவத்தைத் தந்திருந்தது. அதை வடிவமைத்தவர் இதே ஜியோப்ஃரி பாவா என்பதால் கண்காட்சிக்குச் செல்வது உற்சாகமாக இருந்தது. ரொறொண்டோவில் எல்லா நிகழ்வுகளுக்குப் போவதுபோல, நான் சொன்ன நேரத்துக்குப் பிந்திச் சென்றபோதும் இவள் புன்னகையோடு வரவேற்றாள்.  அனல் வெயிலால் வியர்வை வழிய வழியச் சென்ற எனக்கு அது சற்றுக் குளிர்மையைத் தந்திருந்தது.

மயில்தோகையின் வர்ணத்தில் சுடிதார் அணிந்திருந்தாள். சுருள் சுருளான கூந்தல் அவள் தோள்முழுதும் அலைபாய்ந்தபடி இருந்தது. இடது காதும் கன்னமும் சந்திக்கும் இடத்தில் ஒரு மச்சம் மறைந்தும் மறையாதமாதிரி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தது, இடதுபக்கம் அணிந்திருந்த மூக்குத்தி முகத்துக்கு நல்ல களையைக் கொடுத்திருந்தது.


இப்போதுதான் அறிமுகமாகின்றோம் என்று உணராவண்ணம் ஏற்கனவே பலமுறை சந்தித்த நண்பர்களைப் போல இயல்பாகப் பேசத் தொடங்கினோம். கண்காட்சிக்குள், நின்று நிதானித்துப் பார்ப்பதற்கு அவ்வளவாக ஏதும் இருக்கவில்லை. நேரமும் மதியத்தைத் தாண்டிவிட்டதால் அருகிலிருந்த ஒரு கஃபேயில் மதியவுணவைச் சாப்பிடுவோம் என வெளியில் நடக்கத் தொடங்கினோம். முதலில் தெரிந்தது பெப்பர்மின்ட் கஃபே. அதன் சூழல் இரம்மியமாக இருந்தாலும் அண்மையில்தான் அங்கு வேலையில் இருக்கும் பரிசாரகர்கள் தமிழில் வாடிக்கையாளர்களுடன் பேசக்கூடாது என்ற கட்டளையை அதன் நிர்வாகம் விதித்து, பெரும்சர்ச்சைக்குள் சிக்கியிருந்ததும் நினைவுக்கு வந்தது. இந்த இடம் வேண்டாமென விலத்தி, சற்றுத் தொலைவிலிருந்த ஜாஸ்மின் கஃபேயை நோக்கி நடந்தோம்.  


மதியம் என்பதாலோ அல்லது வேலை நாளென்பதாலோ சனம் அவ்வளவாக இல்லாமல் உணவகம் அமைதியாக இருந்தது. உணவுக்கான ஓடரைக் கொடுத்தபின் எதையோ சொல்ல விரும்புகின்றவள் போலவும்,  ஆனால் ஏதோ அதைத் தடுப்பது போலவும் அவள் தவிப்பதும் தெரிந்தது. இறுதியில் அவள் 'இது எனது முதல் காதல் கதை. காதல் என்று கூடச் சொல்லலாமோ தெரியாது. உன்னோடு இதைப் பகிர்ந்துகொள்ளவேண்டுமெனத் தோன்றுகின்றது' என்றாள். 'எந்த இரகசியம் என்றாலும் யோசித்து என்னோடு பகிருங்கள். பிறகு நான் இதை வேறொரு இடத்தில் இன்னொருவருக்கு நிகழ்ந்ததுபோல எழுதிவிடும் ஆபத்து இருக்கின்றது' என்றேன். 'அதனால்தான் உனக்குச் சொல்கின்றேன். உன்னிடம் சொல்வதால் இதை எழுதிவிடுவாய் என்பதால் அல்ல, இப்படிச் சொல்வதன் மூலம் என்னை நான் கடந்தகாலத்திலிருந்து விடுவித்துக்கொள்ள விரும்புவதால் கூட இருக்கலாம்' என்றாள்.

 


2.

 

'நான் அப்போது எங்கள் ஊரில் மேலே தொடர்ந்து படிப்பதற்கு நல்ல பாடசாலை இல்லையென்பதால் தூரத்திலிருந்த பாடசாலைக்குப் போகத் தொடங்கியிருந்த காலம். அந்தப் பொழுதில்தான் அவனைச் சந்தித்தேன். என்னைவிட மூன்று வயது கூடியவன். எங்கள் பாடசாலையில் உயர்தரம் படித்துக்கொண்டிருந்தான். பாடசாலையில் அவ்வளவு கதைக்க முடியாதபோதும் நான் ரியூசனுக்குப் போகும்போதெல்லாம் என்னை ரியூசனிலிருந்து மூன்று கிலோமீற்றர்கள் தூரத்திலிருந்த வீடுவரை, சைக்கிளில் தொடர்ந்து பின்தொடர்ந்து வந்துகொண்டேயிருப்பான்.


எனக்கும் அவ்வளவு முதிராத பருவம். கொஞ்சம் நாட்கள் செல்ல, அவன் பேசக்கூடிய அளவுக்கு என்னோடு நெருக்கமாகிவிட்டிருந்தான். நான் ரியூசன் முடிந்து சைக்கிளில் சமாந்தரமாய் வரும் அவனோடு வரும் வழியெங்கும் நிறையக் கதைத்துக்கொண்டிருந்தேன். அவ்வப்போது எனது சைக்கிள் கூடைக்குள் பூங்கொத்துகளை நிரப்பி எனக்குச் சின்னச்சின்ன வியப்புக்களையும் தந்தான். அதைக் காதல் என்று சொல்லமுடியாது. ஆனால் அவனோடு கதைத்துக்கொண்டிருப்பது எனக்குப் பிடித்திருந்தது. அதிலும் அவனது மற்ற நண்பர்களெல்லாம் கிரிக்கெட் விளையாட மைதானம் போகும்போது, அவர்களுக்கு ஏதாவது காரணத்தைச் சொல்லி, அவன் என்னோடு சைக்கிள் உழக்கியபடி கூடவே வந்துகொண்டிருந்தது எனக்கும் புதுவித அனுபவத்தைத் தந்துகொண்டிருந்தது.


இப்படி இருந்த காலத்தில்தான் யுத்தம் மீண்டும் தீவிரமாகத் தொடங்கியது. அவனின் வீட்டின் மூன்று ஆண்கள். மூத்தவன் இவன்தான்.  வீட்டிலிருந்து ஒருவர் கட்டாயம் இயக்கத்தில் சேரவேண்டுமென வீடு வீடாக இயக்கம் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது. இவன் வீட்டிலிருந்து இவனைத்தான் இயக்கத்துப் போவதற்கு வீட்டுக்காரர் தேர்ந்தெடுத்திருந்தனர். பாடசாலையில் இவன் ஒரளவு விளையாட்டில் பிரபல்யம்., அவன் இயக்கத்துக்குப் போகப்போகும் செய்தி அறிந்து சோகத்தில் ஆழ்ந்ததுபோல இரண்டு மூன்றுநாட்களுக்கு மழையும் இடைவிடாது பெய்தது. அத்தோடு இயக்கத்துப் போனவர்கள் மரணப்பேழைகளில் விழிமூடியபடி உடனேயே திரும்பிக்கொண்டிருந்த கொடுங்காலமாகவும் அது இருந்தது. இவன் இயக்கத்துக்குப் போகின்றான் என்பதை அறிந்தவுடன் நான் அன்று முழுதும் மழையை விடக்கூடுதலாக அழுதபடியே இருந்தேன். ஏனோ தெரியாது என்னுடலிருந்து ஒரு பகுதி இல்லாமற்போவது போன்ற அவதியை நான் முதன்முதலில் உணரத்தொடங்கினேன்.


இயக்கத்துக்குப் போகும் நாளுக்கு முதல்நான் அவன் எனக்கு ஒரு ஆட்டோகிராப் புத்தகத்தைத் தந்தான். அது சிவப்பு நிறத்தாலானது. அதனை மூடிப்பூட்டுவதற்கு என்று பூட்டும் திறப்பும் இருந்தது. அவன் அதைத் தந்துவிட்டு நாளை நான் இயக்கத்துப் போனபிறகுதான் நீ இதைத் திறந்து பார்க்கவேண்டுமெனச் சொன்னான்.


அடுத்தநாள் பாடசாலைக்குப் போனபோது அவனும், அவன் வகுப்பைச் சேர்ந்த அவனது சில நண்பர்களும் இயக்கத்துக்குப் போய்விட்டார்கள் என்ற துயர செய்தியோடுதான் அன்றைய காலையே தொடங்கியது. என்னால் எந்தப் பாடத்திலும் கவனம் செலுத்த முடியவில்லை. அவனை நினைக்க நினைக்க சடுதி சடுதியாக விம்மலோடு அழுகை பீறிட்டெழத் தொடங்கியது. யூனிபோர்ம் வியர்வையால் நனைவதுமாதிரி, நான் அன்று கண்ணீரால் நனைந்திருந்தேன்.


பாடசாலை முடிந்ததும் முடியாததுமாய் வீட்டுக்குப் போய் அவன் தந்த ஆட்டோகிராப்பை திறந்து பார்த்தேன். அந்தப் பக்கங்கள் முழுதும் காதல் வரிகளால் நிரப்பப்பட்டிருந்தன. என்னை நேசிப்பதாகவும்,  இந்த இறுதி யுத்தம் முடிந்ததும் என்னை மணம் முடிக்கப்போவதாகவும் எழுதியிருந்தான். 'எமது மண் எனது இரத்தத்தைக் கேட்கின்றது. ஆனால் எனது குருதியின் முதல் துளி என்றைக்கும் உனக்கானது' என்று அவன் எழுதியிருந்ததை வாசித்தவுடன் ஓவென்று சத்தமிட்டு அழத்தொடங்கிவிட்டேன்.


குசினிக்குள் இரவு உணவுக்காய் புட்டு அவித்துக்கொண்டிருந்த அம்மா, ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டதோ என ஓடி வர, அவரின் கண்பார்வைக்குள் படாமல் அதற்கிடையில் ஆட்டோகிராப்பை மறைத்துவிட்டேன். அம்மா என்ன காரணம் என்று உருக்கிக்கேட்டபோது, எங்களோடு படித்துக்கொண்டிருக்கின்றவர்கள் எல்லாம் இயக்கத்துக்குப் போகின்றார்கள், நானும் போக வேண்டி வருமோ என்று எனக்கும் பயமாக இருக்கிறது' என்று சொன்னேன். 'நீ எங்களின் ஒரேயொரு பிள்ளை, உன்னை எப்படியாயினும் இயக்கத்துக்குப் போவதிலிருந்து தடுத்துவிடுவோம், கவலைப்படாதே' என அம்மா தலையைக்கோதி என்னை ஆறுதல்படுத்தினார்.


பிறகு பாடசாலைக்குப் போவதுமட்டுமில்லை, எனக்கு ரியூசனுக்குப் போவது கூட பிடிக்கவில்லை. எப்பவுமே அவனது நினைவுகள்தான். என்னால் அதிலிருந்து விடுபடமுடியவே இல்லை. எப்போதும் அவன் தந்த ஆட்டோகிராப்பை என்னோடு காவியபடியே இருப்பேன். அது ஏனோ அவன் என்னருகில் இருக்கின்றான் என்ற உணர்வைத் தரும். அந்தக் காய்ந்துபோன இரத்த எழுத்தையெல்லாம் பார்க்கும்போதெல்லாம், என் மீது எவ்வளவு நேசம் இருந்தால் இப்படி எழுதமுடிந்திருக்குமென நினைக்க நினைக்க இன்னும் நெஞ்சு விம்மும்.


இவ்வாறாகக் கதையைச் சொல்லிக்கொண்டு எங்கோ தொலைந்துகொண்டிருந்த அவள் அருகிலிருந்த கிளாஸில் இருந்த தண்ணீரைக் குடித்து நிதானித்தபடி என்னைப் பார்த்து 'உனக்கு எனது இந்தக் கதையைக் கேட்க சிலவேளை சிரிப்பாக இருக்கும், இல்லையா' என்றாள்.


'எந்த முதல் காதலானாலும் அது பெரும் பரவசத்தைத் தருகின்ற ஒன்று. என்னால் நீங்கள் சொல்வதை ஒரளவு உணரமுடிகிறது' என்றேன்.

 


3.

 

ப்படி ஒருநாள் ஆட்டோகிராப்போடு பாடசாலைக்குப் போனபோது ஒரு தோழி எனக்குத் தெரியாமல் அதை எடுத்து புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றாள். எங்களுக்குப் படிப்பிக்கும் ஆசிரியர் அதைக் கண்டுபிடித்து எடுத்துக்கொண்டு போய்விட்டார். நான் வகுப்பில் நல்லாய்ப் படிக்கும் மாணவி என்பதால் அந்த ஆசிரியருக்கு என்மேல் மிகுந்த அக்கறை. அத்துடன் இயக்கத்துப்போன இவனின் சித்தப்பா முறையானவர் அவர்.


நான் ஸ்டாஃப் ரூமுக்குப் போய், 'சேர் அந்த ஆட்டோகிராப்பை தயவுசெய்து தாருங்கள்' என கெஞ்சிக்  கேட்டேன். என்னைத் தனியே ஓரிடத்தில் அழைத்துச் சென்று, 'நீ நல்லாப்ப் படிக்கிற பிள்ளை, இப்போதே இந்தக் காதல் கீதல் என்று ஒன்றுக்குள்ளும் சிக்கிவிடாதே' என்று ஒரு நீண்ட அறிவுரையைத் தந்தார். 'சேர் நீங்கள் சொல்கிறதை எல்லாம் நான் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் அந்த ஆட்டோகிராப்பை மட்டுந் தாங்கோ. இதுதான் என்னையும் அவனையும் இணைக்கின்ற ஒரேயொரு பொருள். அதுவும் இல்லாவிட்டால் என்னால் தாங்கமுடியாது' என்று திரும்பத் திரும்பக் கேட்டும், அவர் 'நீ படிக்கின்ற வேலையை மட்டும் பார்' என்று கடுங்குரலில் கூறிவிட்டு, பிறகு அதை ஒருபோதும் எனக்குத் திருப்பித் தரவே இல்லை.


நான் அன்றிரவும் வீட்டில் நீண்டநேரம் அழுதேன். அவன் தான் இயக்கத்துப் போய்விட்டான் என்றால், என்னோடு தினமும் மானசீகமாய் அவன் பேசிக்கொண்டிருந்த ஆட்டோகிராப்பையும் எடுத்துப் போய்விட்டனரே என்று நினைக்க, என்னால் தாங்கமுடியாமல் இருந்தது. நானும் இயக்கத்துக்குப் போனால் என்ன என்று கொஞ்சநாட்களிலேயே எனக்குள் ஒரு சன்னதம் வரத்தொடங்கிவிட்டது. தொடக்கத்தில் இயக்கத்துக்குப் போவதற்கே பயப்பிட்ட நான், இயக்கத்தில் போய்ச் சேருவதற்கு தயாரானதை இப்போது நினைத்தாலும் ஆச்சரியந்தான்.


பாடசாலைக்குப் பக்கத்தில் இருந்த இயக்க அக்காமாரின் முகாமிற்கு, ஸ்கூல் யூனிபோர்மோடே இயக்கத்தில் சேர்வதற்காய்ப் போய்விட்டேன். அங்கே இருந்த அக்காமார் என் வீடு, என் குடும்பம் எல்லாம் விசாரித்துவிட்டு, தங்கச்சி உங்களுக்கு சின்னவயசு இப்போது இயக்கத்தில் சேர்க்கமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். இல்லை நான் இனி வீட்டை திரும்பப் போகமுடியாது என்று அடம்பிடிக்க அந்த முகாமுக்குப் பொறுப்பானவர் வெளியே வந்து, நடந்தவிபரத்தைக் கேட்டுவிட்டு 'சரி கொஞ்சம் வளர்ந்தன் பிறகும், இயக்கத்தில் சேரவேண்டுமென நினைத்தால் வாருங்கள், இப்போது சேர்க்கமாட்டோம்' என்று அவரும் கறாராகக் கூறிவிட்டார்.


இப்படித் தன் கதையைச் சொல்லிவிட்டு சட்டென்று மெளனத்துக்குப் போய்விட்டாள். ஏதோ கடும் துயர் தாக்க, தொடர்ந்து சொல்லக் கஷ்டப்படுகின்றாரோ என்று நினைத்து, 'சரி, இன்னொருநாள் மிகுதிக்கதையைச் சொல்லுங்கள்' என்றேன்.


அப்படி இல்லை என்று பெருமூச்செறிந்தாள். திரும்பவும் அமைதிக்குள் மூழ்கி, நீருக்குள் அமிழ்ந்த பறவை சிறகை உதறித்தள்ளுவதைப் போன்று ஒருமுறை தோளைக் குலுக்கி 'இப்படி ஒருபொழுது இயக்கத்தில் சேர வீம்பாய் நின்ற நான்,  பின்னர் முள்ளிவாய்க்கால் இறுதிக்காலத்தில் இயக்கம் ஆட்களைத் தேடித்தேடி களமுனைக்கு வலுக்கட்டாயாமாகப் பிடித்துக்கொண்டு போக, ஓடி ஒளித்து பதுங்கியெல்லாம் இருக்கின்றேன், விசித்திரமான காலம்' என்றாள்.


எனக்கு என்ன சொல்வதென்றும் தெரியவில்லை. மெளனமாக இருப்பதைத் தவிர வேறொரு வழியும் எனக்குப் புலப்படவில்லை. நான் எமக்குத் தரப்பட்டிருந்த குளிர்தண்ணீரை எடுத்துச் சற்றுக் குடித்து என்னை நிதானமாக்கிக் கொண்டேன்.


 

4.

 

திசயமாக அவன் ரெயினிங் எடுத்துவிட்டு அவனது வீட்டுக்கு ஏழெட்டு மாதங்களுக்குப் பிறகு திரும்பி வந்தான். அவன் வீட்டுக்கு வந்துவிட்டான் என்று செய்தி தெரிந்தவுடன் எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. இயக்கத்துக்குப் போனாலே அவர்களை உயிருடன் திரும்பிப் பார்க்கவேமுடியாது என்ற நெருக்கடியான சூழ்நிலைக்குள், எனக்கு காதலை உருகியுருகி எழுதிய ஒருவன் திரும்பி வந்தால், எவ்வளவு சந்தோசமாக இருக்கும். ஏதோ சிறகுகள் எனக்கு வளர்ந்ததுபோலவும், எங்கள் வயல்காணிகளினூடாக மைனாக்கள் கரைய, மயில்கள் தோகை விரித்து அகவ, நான் அவனுடன் சந்தோசமாகப் பறப்பது போலவும் உணர்ந்தேன்.


இரண்டு நாட்களுக்குப் பிறகு அவன் எங்கள் பாடசாலைக்கு வந்திருந்தான். என்னை வந்து சந்திக்கப்போகின்றான்,  நான் அவனின் காதலுக்கு முழுச் சம்மதம் சொல்லவேண்டும் என்ற விதிர்விதிர்ப்புடன் அவனுக்காய்க் காத்துக்கொண்டிருந்தேன். என் பக்கமே வரவில்லை. பாடசாலையில் இருந்த மற்ற ஆட்களோடு கதைத்துக்கொண்டிருந்த அவன் என்னோடு பேசவே இல்லை. நான் ஒருமுறை அவன் பெயரைக் கூப்பிட்டபடி அருகில் போனபோதும் 'என்னோடு பேசாதே, நீ என் சித்தப்பாவிடம் சொன்னது எல்லாம் எனக்குத் தெரியும்' என்று இதுவரை நான் அறிந்திராத கடுங்குரலில் அவன் சொல்ல எனக்குப் பெரும் அதிர்ச்சியாக அது இருந்தது.


நான் திரும்பி என் வகுப்புக்குள் போய்விட்டேன். எங்கள் ஆசிரியரான அவனின் சித்தப்பாதான் வேறொருமாதிரி கதையை அவனுக்குச் சொல்லி என்னிடமிருந்து அவனைத் தூரவிலகும்படியாகச் செய்துவிட்டார் என்பதைப் பின்னர் அறிந்தேன். நான் தான் ஆட்டோகிராப்பை வேண்டுமென்று அவரிடம் கொண்டுபோய்க் கொடுத்ததாய் ஒரு கதையை உருவாக்கி, அவனிடம் இல்லாததும் பொல்லாததுமாய் என்னைப் பற்றிச் சொல்லியிருக்கின்றார். அதற்குப் பிறகு நான் அவனோடு பேசவே இல்லை. கொஞ்சநாட்களில் விடுமுறை முடிந்து இயக்க முகாமுக்குப் போய்விட்டான். ஆனால் என்னால் அவனின் சித்தப்பாவை அதற்குப் பிறகு மன்னிக்க முடியவே இல்லை.


இப்படி அவளின் கதையைக் கேட்டுக்கொண்டிருந்த நான், 'இடையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். ஏன் நீங்கள் உங்கள் நிலையை, உண்மையில் நடந்தவற்றை அவனுக்குச் சொல்ல முயற்சிக்கவில்லை' எனக் கேட்டேன்.


'எனக்கு அன்றைக்கு அப்படி எதுவுமே தோன்றவில்லை. அவ்வளவு நேசத்துடன் அவனுக்காய்க் காத்திருந்த என்னை இப்படி எதுவும் கதைக்காமல் உதாசீனப்படுத்தியதே பேரிடியாக இருந்தபோது வேறு எதையும் நிதானமாக யோசிக்க முடியவில்லை' என்றாள்.


'உண்மைதான். சிலவேளைகளில் சிலவற்றுக்குக் காரணங்களே இல்லாததுபோல, எல்லாம் முடிந்தபின் இப்படிச் செய்திருக்கலாம் என்று பிறகுதான் ஆறுதலாய் இருந்து பார்க்கும்போது யோசிக்கமுடிகிறது. ஆனால் ஒரு சம்பவம் நடக்கும்போது அப்படி எல்லாக் கோணங்களிலும் சிந்திக்கமுடிவதில்லை' என்று ஏதோ என் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தோடு இணைத்து இதைச் சொன்னேன்.


இப்படிச் செய்தது கூடப் பரவாயில்லை. திரும்பப் போர்க்களத்துக்குப் போவதற்குமுன், ஒருநாள் மாலை சைக்கிளில், அவன் தனது மச்சாளை ஏற்றிக்கொண்டு வந்ததைத்தான் என்னால் மறக்கவோ மன்னிக்கவோ முடியவில்லை. என்னை நேசிப்பதாய்ச் சொல்கின்றவன், இப்படிச் செய்தால் பிறகு எப்படி அவனைக் காதலிக்கமுடியும்?’


அன்று எனக்கு கூடைப்பந்தாட்ட போட்டி ஒன்றும் இருந்தது. இந்தக் காட்சியைப் பார்த்தபின் அன்றைக்கு முக்கியமான ஆட்டமாக இருந்தபோதும் நான் அந்த மாட்சில் விளையாடவே இல்லை. ஏனென்றால் அந்த அளவுக்கு நான் உடைந்துபோயிருந்தேன். அவனுக்கும் எனக்குமான பெரும் விரிசல் அன்றுதான் நிகழ்ந்திருக்கவேண்டும். நான் தேவையில்லை என்றுதானே அவனின் மச்சாளை சைக்கிளில் ஏற்றிக்கொண்டுவந்து எனக்கு வேண்டுமென்று காட்டியிருக்கின்றான்.’


'இருக்கலாம். ஆனால் அவனுக்கு வேறு ஏதோ காரணம் சிலவேளைகளில் இருந்திருக்கலாம். இல்லாவிட்டால் எதையாவது உங்களுக்கு சூட்சுமாகப் புரிய வைக்க முயன்றிருக்கலாம்.'


'என்ன சொல்கிறாய் நீ'


'சிலவேளை மரணம் என்பது அருகில் நெருங்கி நிற்கும்போது உங்களைக் காக்க வைக்கக்கூடாது என்கின்ற ஒருவகைப் பிரியத்தால் கூட உங்களிடமிருந்து விலத்திப் போக இப்படி ஏதாவது அவன் செய்திருக்கலாம்' என்றேன்.


'யுத்தம் என்பது மட்டுமில்லை வாழ்க்கை கூட ஒரு சினிமாப்படம் இல்லை.  நிறுத்தி நிதானித்து, விரும்பியபோது பார்ப்பதற்கும், ஆராய்வதற்கும்என என் விழிகளை ஆழ ஊடுருவிப் பார்த்தபடி சொன்னாள்.


'வாழ்க்கை சினிமா இல்லைத்தான். ஆனாலும் நாங்கள் சினிமாவினூடும் வாழ்க்கையைக் கற்றுக்கொள்கின்றவர்கள். எதை யோசிக்கின்றோமோ அதுவாக ஆகின்றோம் எனப் புத்தர் சொல்கின்றமாதிரி, நாம் எதைக் கூடப் பார்க்கின்றோம், எதைக் கூடக் கதைக்கின்றோமோ அதுகூட எம்மையறியாமல் பாதிப்புச் செய்யலாம் அல்லவா' என்றேன்.


'நீ அவனின் உள்ளம் எல்லாம் அறிந்தவன் மாதிரிக் கதைக்கின்றாய்.'


'அப்படி இல்லை. எதையும் தெளிவாக -அதுவும் யுத்தகாலத்தில்- சொல்லமுடியாது என்பதைத்தான் உணர்த்த விழைகிறேன்.'

 

 

5.

 

ப்படியெல்லாம் செய்துவிட்டுப் போனவனை, பிறகு இன்னொருமுறை தற்செயலாகச் சந்திக்கவேண்டி வந்தது. நான் ஒருநாள் கிளிநொச்சியிலிருந்து முல்லைத்தீவுக்கு பஸ்சில் போய்க்கொண்டிருந்தேன். சட்டென்று ஒருவன் பஸ்ஸில் ஏறுவதைக் கண்டேன். அவனேதான். இயக்கவேலைக்காய் ஏதோ அந்தப் பக்கமாய் வந்திருக்கின்றான். என்னைக் கண்டவுடன் பஸ்ஸூக்குள் ஏறியிருக்கின்றான். ஆனால் கிட்டவந்து என்னோடு எதுவும் பேசவே இல்லை. தூரத்தில் இருந்து அவனை நானும் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தக் கண்களில் தெரிந்தது பரிவா, காதலா எதுவென்றே ஊகித்தறியமுடியாதிருந்தது.


நானும் அவன் தனது மச்சாளை சைக்கிள் ஏற்றிவந்து எனக்குக் காட்டியதில் இருந்து அவன் மீது பெருங் கோபத்துடன் இருந்தேன். எனவே அவனைப் பார்த்து சிரிக்காமல்தான் இருந்தேன். இப்படி எனக்காய் பஸ்ஸுக்குள் ஏறியவன் என்னிடம் வந்து இரண்டு வார்த்தை கதைப்பதில் என்ன கெட்டுவிடப் போகின்றது. ஆனால் அன்றும் ஒன்றுமே பேசாமல்தான் அவன் இருந்தான். பிறகு நான்கைந்து பஸ் ஸ்டொப்புக்களுக்குப் பிறகு தானாகவே இறங்கிப் போனான்.


'இது ஒரு கனவு போல இருக்கிறது. உங்களுக்காய் சரியாகத் தெரியுமா அது அவன் தானென்று. அவனின் நினைப்பில் நீங்கள் இருந்ததால் அப்படி ஒரு நினைப்பு வேறு எவரையும் பார்த்து வந்திருக்கவும் கூடும்' என்று நான் குறுக்கிட்டேன்.


இதென்ன விழல் கதை. அவனை எனக்கு நன்கு தெரியும். அதிலும் அவன் சின்ன வயசில் இருக்கும்போது துப்பாக்கிச் சன்னம் உரஞ்சிப்போன காயமென்று பின்னங்கழுத்தில் வடுவாக இருப்பதைக் காட்டியிருகின்றான். அவன் இறங்கிப்போனபோது நான் திரும்பிப் பார்க்கையில் அந்தக் கறுப்புத் தடம் தெளிவாகத் தெரிந்தது.’


 

6.

 

றுதியில் எல்லாமே முள்ளிவாய்க்காலுக்குள் முடக்கப்பட்டுக்கொண்டிருந்த காலம். உனக்குத் தெரியுந்தானே மே 18ந் திகதி அனைத்துமே முடிவுக்கு வந்துவிட்டன. நானும் எங்கள் குடும்பமும் மே 17 வரை இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்தான் நின்றோம். இப்போதும் சரியாக ஞாபகமிருக்கின்றது. மே 17 காலை நாங்கள் நின்ற பகுதிக்கு ஒரு பஜீரோ உறுமலோடு வந்து நின்றது. நீ நம்பமாட்டாய். அவனே தான். ஒரு அதிசயம் போலத்தான் அது நிகழ்ந்தது.


எங்கையோ என்னைப் பற்றி விசாரித்து எங்கள் இடத்தைக் கண்டுபிடித்திருக்கின்றான். இப்போது அவன் மீது எனக்கு எந்தக் கோபமும் இருக்கவில்லை. அவன் உயிரோடு இருப்பதே பேரதிசயந்தான். வந்தவன் இரண்டே இரண்டு வார்த்தைகள்தான் சொன்னான்.


'நீ இங்கையே இப்படியே இரு. எல்லாமே முடிந்துவிட்டது. ஆயுதங்களைக் கீழே போட்டு நாம் விரும்பியமாதிரி முடிவுகளை எடுக்க இயக்கம் எங்களுக்குச் சொல்லிவிட்டது.  நான் மத்தியாயம் போல வருவேன். நாங்கள் சேர்ந்து ஆமியின் பக்கம் போவோம்.'


அவ்வளவுதான் அவன் சொன்னது. அதற்குள் அவன் கையில் வைத்திருந்த வோக்கி அழைக்கத் தொடங்கிவிட்டது. என்னை சிலநொடிகள் உற்றுப்பார்த்தான். அந்தக் கண்களில் எவ்வளவு காதல் இருந்தது. பிறகு திரும்பிக்கூடப் பார்க்காது அவன் போய்விட்டான். போயே விட்டான்.


சட்டென்று அவளது கண்களில் இருந்து நீர் பொலபொலவென்று கொட்டத் தொடங்கியது. போரின் எத்தனை எத்தனை நினைவுகள் அவளுக்குள் பெருக்கெடுத்து ஓடத்தொடங்கியதோ? அதில் நேசம் கொண்ட அவன் மீதான நினைவுகளும் நிச்சயம் கலந்திருக்கும்.


அழாதீர்கள் என்று சொல்வது இந்த இடத்தில் அநாகரீகமாகவே இருக்கும். அவளின் கையை எடுத்து ஆறுதலாகத் தடவிவிட்டேன். பக்கத்திலிருந்து நாப்கினை எடுத்து கண்களைத் துடைக்கக் கொடுத்தேன்.


கொஞ்ச நேர அவகாசமெடுத்துவிட்டு, 'அதுதான் அவனை நான் இறுதியாகப் பார்த்தது. நான் மணித்தியாலக் கணக்காய் அவனுக்காய்க் காத்திருந்தேன். அடுத்தநாள் ஆமியின் பகுதிக்குள் நாங்கள் நுழைந்தோம். அப்படிக் கூடச் சொல்லமுடியாது. இனி இயக்கத்துக்கு என்று ஓர் அங்குலம் கூட சொந்தமில்லாத ஒரு காலத்துக்கு நாங்கள் வந்திருந்தோம். அவன் வரவே இல்லை. ஆனால் என்னோடு கூடவே ஆமியின் பக்கம் வருகின்றேன் என்று சொன்னவன், எனக்காய் என்றைக்குமாய் காத்திரு என்று மட்டும் சொல்லவே இல்லை. இன்னும் புரியாது இருப்பது அந்த ஒன்றே ஒன்றுதான்.'


'என்ன?'


'இரத்தத்தில் காதலைச் சொல்லிக் காட்டிவிட்டுப் போன பிறகு நாங்கள் சந்தித்த அரிய மூன்று பொழுதுகளில் ஒருபோது கூட அவனுக்காய் என்னைக் காத்திருக்கச் சொல்லவே இல்லை. இயக்கத்துக்குப் போய்விட்டு முதன்முறை விடுமுறைக்கு வந்தபோது என்னோடு பேசாமலே முகத்தைத் திரும்பினான். இரண்டாவதுமுறை முல்லைத்தீவு பஸ்சில் ஏறியபோது கூட ஒற்றைச்சொல் என்னோடு பேசவில்லை. கடைசியாய் மே-17 காலை சந்திக்கும்போது என்னோடு கூட வருகின்றேன் என்று சொன்னானே தவிர, எனக்காய் என்றைக்குமாய்க் காத்திரு என்று சொல்லவே இல்லை. அந்தளவுக்கு என்னைப் புரிந்து வைத்திருந்திருக்கின்றான் போலும். என் வாழ்க்கையின் மீது அவ்வளவு அக்கறை இருந்தால்தானே ஒருவன் இப்படிச் சொற்களை வெளிப்படுத்துவதில் கூட கவனமாக இருந்திருப்பான்.'


'உண்மைதான். உங்களை அறியாமலே அவனோ அல்லது நம்மால் உணர்ந்துணர முடியா ஏதோ சக்தியோ இப்படிச் செய்திருக்கலாம். இவ்வாறு எதன் மீதோ பாரத்தைப் போடாதுவிடின் நாம் நம் துயரங்களிலிருந்து தப்பித்துப் போகவேமுடியாது.'


'முள்ளிவாய்க்கால் முடிந்தபின், பல மாதங்கள் முள்வேலிச் சிறைக்குள் சிறைப்பட்டு வெளியே வந்தபோது ஒருநாள் அவனின் தாயாரைச் சந்தித்திருக்கின்றேன். அவர்களுக்கு இன்னும் மகன் எங்கோ உயிருடன் இருக்கின்றான் என்றுதான் நம்பிக்கை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களில் அவனும் ஒருவன் எனத்தான் அவனின் தாயார் நினைக்கின்றார். அவனோடு கதைத்த கடைசி ஆள் நானாகத்தான் இருக்கவேண்டும்.'


'எவ்வளவோ மாதங்களுக்குப் பிறகு, யுத்தம் முடிவதற்கு முதல் நாளான மே 17 இல் இப்படி வந்து அவன் உங்களை சந்தித்தற்குக் கூட நம்மால் பகுத்தறிந்து கொள்ளமுடியா ஏதேனும் ஒரு காரணம் இருந்திருக்கலாம்.'


'அவ்வளவு தூரம் என்னைத் தேடி வந்தவன். ஓரிரு வார்த்தைகள் மட்டுந்தான் சொல்லிவிட்டுத்தான் போனான் என்பதைவிட, அவ்வளவு காலம் இருந்துவிட்டு யுத்தம் முடிகின்ற கடைசிநாள் அன்று என்னை ஏன் தேடிவந்தான் என்பதுதான் பெரும் ஆச்சரியமாக இருக்கிறது.'


'அவனது ஆன்மா இறுதியில் உங்களைப் பார்க்க ஆசைப்பட்டிருக்கலாம். சேர்ந்து வாழ முடியாதுவிட்டாலும் இறுதியாய்ச் சந்திக்க இந்த இயற்கை உங்கள் இருவருக்கும் சந்தர்ப்பம் வழங்கியிருக்கின்றது. அப்படித்தான் இவ்வாறான விடயங்களில் நாங்கள் ஆறுதல் கொள்ளமுடியும். இல்லாவிட்டால் பைத்தியமாவதைத்தவிர நமக்கு வேறு வழியில்லை.'


'எனக்கு அவனது அம்மாவைப் போல, அவன் இப்போது எங்கேயாவது உயிரோடு இருப்பான் என்பதில் நம்பிக்கை இல்லை. அவனுக்கு என்னைச் சந்தித்த மே 17இற்கும், யுத்தம் முடிந்த மே 18இற்கும் இடையில் ஏதோ நடந்திருக்கும். '


'இந்தப் போரில் எல்லாமே நடக்கச் சாத்தியமிருக்கின்றது.'


'என்னைத் தேடி வந்து திரும்பிப்போகும்போதுதான் அவனுக்கு ஏதும் நடந்திருக்குமோ என்று நினைக்க வரும் துயரைத்தான் என்னால் தாங்கமுடியாது இருக்கின்றது. அவ்வளவு காலமும் உயிரோடு இருந்தவன், ஒரேயொரு நாள்- அந்தக் கடைசிநாள் சாகாமல் தப்பியிருந்தால் இப்போது அவனோடு நான் வாழ்ந்து கொண்டிருந்திருப்பேன்.’


;அப்படி நினைத்தேங்கினால் நம் வாழ்வு வீணாகிவிடும். அவன் உங்கள் மேல் கொண்ட நேசத்துக்குக் கூட மதிப்பில்லாது போய்விடும்.'


'அவன் இறுதியாய்ச் சந்தித்தபோது, எனக்காய்க் காத்திரு என்று ஒற்றை வார்த்தை சொல்லியிருந்தால் நான் இப்போது கூட அவனுக்காய் காத்திருந்திருப்பேன்.'


'ஆனால் அப்படிச் சொல்லி நீங்கள் காத்திருப்பின் உங்கள் வாழ்வு பிறகு கானலாகிவிடும்.'


'அது கூட அவனுக்கு நன்கு தெரிந்திருக்கும்போலும். அப்படிச் சொல்லிவிட்டால் நான் அவன் சொற்களில் உறுதியாய் இருந்திருப்பேன் என்றுதான் அவன் அதைச் சொல்லவில்லையோ தெரியாது.'


'உங்களை நன்றாக அறிந்து ஒருவன் அவன் என்பதைத்தவிர வேறொன்றும் நான் சொல்வதற்கு இல்லை.'


 

7.

 

'ப்படி முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்து, மூன்று வருடங்களுக்குப் பிறகு அவனது ஒரு நண்பனை தற்செயலாய்ச் சந்தித்தேன். அவனும், இவனுந்தான் கடைசிநேரத்தில் களமுனைகளில் பல இடங்களில் ஒன்றாகச் சேர்ந்து நின்றிருக்கின்றனர். அவனின் நண்பன் சொன்னதைத்தான் என்னால் இன்னும் நம்பமுடியாது இருக்கின்றது. அவ்வாறான பொழுதுகளில் அவனது காற்சட்டைக்குள் எனது புகைப்படம் ஒன்று இருந்ததாம். அடிக்கடி அதை எடுத்துப் பார்த்து பார்த்து அழுதுகின்றவனான். இவன் என்ன காரணம் என்று கேட்கும்போதெல்லாம் ஒன்றுமில்லையென கண்ணைத் துடைத்துவிட்டுப் போயிருவானாம். பார், இப்படி என் மீது எவ்வளவு காதல் வைத்திருக்கின்றான்.'


'நமது இந்த யுத்தம் எதைத்தான் எமக்கு மிச்சம் வைத்திருக்கின்றது. ஞாபகங்களாய் விட்டுவைத்திருப்பதெல்லாம் கொடும் நினைவுகளைத் தவிர வேறொன்றுமில்லை.'


'அவன் கள்ளன். எனக்குச் சொல்லாமல் கடைசிவரை என்னை அவ்வளவு காதலித்திருக்கின்றான்.'


'உண்மையான நேசம் எப்படியோ எவரினூடாகக் கடத்தப்பட்டு உயிர்ப்புடந்தான் இருக்கும். அவன் இருக்கின்றானோ இல்லையோ, அவனின் காதலினூடாக நீங்கள் என்றென்றைக்குமாய் அவனை நினைவு கூருவீர்கள்.'


பிறகு நாங்களிருவரும் வேறு எதையெதையோ எல்லாம் கொஞ்சம் நேரம் கதைத்துவிட்டு பிரிவதற்கு ஆயத்தமானோம். அவளுக்கு அடுத்தநாள் கொழும்பிலிருந்து சொந்த ஊருக்குப் போவதாய்த் திட்டம் இருந்தது. அதன்பிறகு சில வாரங்களின் பின்தான் கொழும்புக்குத் திரும்புவாள் எனச் சொன்னாள். அவள் திரும்பும் காலத்துக்கிடையில் நான் கனடாவுக்கு விமானம் ஏறவேண்டியிருந்தது.


என்னோடு உங்களின் இந்தக் கதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி எனச் சொல்லி எழுந்தபோது, என்னருகில் வந்து அணைத்து விடைதந்தாள்.


அணைத்த அந்தப்பொழுது, பக்கத்தில் யாரேனும் இருக்கின்றார்களா எனப் பார்த்துவிட்டு, என் காதுகளுக்கு மட்டுமே கேட்கக்கூடியதாக, 'இயக்கத்தில் இருக்கும் எல்லோரும் கடைசிநேரத்தில் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்று சொல்லித்தான் சாவார்கள். ஆனால் எனக்கு தெளிவாகத்தெரியும், அவன் இறுதியில் என் பெயரை அழுத்தமாக உச்சரித்துத்தான் இறந்திருப்பான்.'


அப்போது அவளின் ஒரு கண்ணீர்த்துளி வெம்மையாக என் தோளில் விழுந்து முதுகில் வழுக்கியோடியது.


அந்தத் துளியின் தாங்கமுடியாக் கனத்திலும், வெம்மையிலும் அவன் இன்னமும் உயிரோடு இருந்தான்.


*************************

(2020)


நன்றி: 'அம்ருதா, கார்த்திகை/2021

 

0 comments: