'முள்ளிவாய்க்கால்' சிறுகதை, 'அம்ருதா' இதழ் நவம்பர் 2021
இளங்கோ என்கிற இளம் எழுத்தாளரின் சிறுகதை, பெயர் ‘முள்ளிவாய்க்கால்’. இளம் எழுத்தாளரில்லையா ஆதலால் இதொரு காதல் கதை.
கனடாவில் இருந்துகொண்டு, இலங்கை திரும்பும் எழுத்தாளர் தன் வாசகியைச் கொழும்பில் வைத்து சந்திக்கிறார். சந்திக்கிற வாசகித் தோழி தனது பதின்வயது காதலையும் அது பரிணாமம் பெற்றதையும், அதன் முடிவையும் நம்முடைய எழுத்தாளரிடம் பகிர்ந்துகொள்கிறார். சில தமிழ்ச் சினிமா காதல் அம்சங்கள் சிறுகதையில் இருந்தாலும் நண்பர் எளிமையாக அழகாக அலங்கார வார்த்தைகளின்றி சிறுகதையைச் சொல்லி இருக்கிறார். அண்மையில் நான் வாசிக்க நேர்ந்த ஒரு நல்ல சிறுகதை.
ஈழப்போர் முடிவுக்குவந்து பன்னிரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. பலிகொண்ட ஒரு இலட்சம் உயிர்களில் பெரும்பாலோர் தமிழர்கள், முள்ளிவாய்க்காலை அத்தனைச் சுலபமாக நாம் மறந்துவிடமுடியாது. துப்பாக்கி ஏந்திய ஒரு தலைமுறை தமிழரின் குருதி நனைத்த வரலாற்றின் பக்கங்களை மறப்பது அத்தனைச் சுலபமா என்ன?
சாதியென்றும், மதமென்றும் பிரிந்து எப்போதும் ஏதேனும் ஒன்றை முன்னிருத்தி சக்களத்திச் சண்டையைத் தெருச் சண்டையாக அரங்கேற்றி விளம்பர வாய்ச்சவடாலுக்கு வார்த்தைகளைத் தேடவே நமக்கு நேரம் சரியாக இருக்கிறது. நேரம் கிடைத்து, அறச்சீற்றத்திற்குத் தெம்புவேண்டி பாருக்குள் நுழைந்தால், இளங்கோ போன்று ஒரு சிலர் ‘முள்ளிவாய்க்கால்’ என முணுமுணுக்கின்றனர்.
கனடாவில் புலபெயர்ந்து வாழும் எழுத்தாளரிடம், தற்போது கொழும்பில் இடம்பெயர்ந்து வாழும் இளம்பெண் மேலே குறிப்பிட்டதுபோல தம்முடைய காதல், அரசுக்கு எதிரான இயக்கத்தின் எழுச்சி, அதில் அவள் காதலனின் பங்கேற்பு, எதிர்பாராத விதமாக தனது பள்ளிக்காதலியை மூன்று நான்குமுறை சந்திக்க நேர்ந்த காதலன் (இயக்கத்தில் சேர்வதற்கு முன்பாக தன் இரத்தத்தில் நனைத்து எழுதிய காதற்குறிப்புகளை கவனமுடன் காதலியிடம் கொடுத்து, தற்போதைக்குப் பிரித்துப் படிக்கவேண்டாம் என்ற வேண்டுதல் வைத்தவன்) தனது காதலை வெளிப்படுத்துவதே இல்லை.
ஆக இச்சிறுகதை, ஒர் இளம்பெண்ணின் கைகூடாத காதல், யுத்தகாலத்தில் அவளைச் சந்திக்கிற தருணங்களில் காதலன் காட்டும் அசாதாரண மௌனம், அது விஷயமாக புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளரும், நிறைவேறாத காதலுக்குச் சொந்தக்காரியான இளம்பெண்ணும் எழுப்பும் அனுமானங்கள் சிறுகதைக்கு அழகூட்டுகின்றன.
ஒருவகையில் இச்சிறுகதையில் ஆடையற்ற வார்த்தைகளைக் கொண்டு முள்ளிவாய்க்கால்ப் பேரிழப்பின் இருண்ட சரித்திரத்தில் ஏதோ ஒன்றை நினைவூட்ட தீக்குச்சியை உரசுகிறார் ஆசிரியர், வாழ்த்துகள்.
*************
நன்றி: நாகரத்தினம் கிருஷ்ணா
0 comments:
Post a Comment