கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Prisoner #1056 - பகுதி 02

Monday, September 18, 2023

 

2. கனடாக் கனவு

 

250 பக்கங்கள் இருக்கும் இந்நூலில், இவை அனைத்தையும் 75 பக்கங்களுக்குள் ரோய் சொல்லிவிடுகின்றார். மிகுதிப் பக்கங்கள் கனடாவில் அவர் பெற்ற அனுபவங்களையும் விபரிப்பதாய் இருக்கின்றது. யாழில் தகப்பனின் இழப்போடு தவித்தபோடு இருக்கும் தாயைக் கனடாவுக்கு அழைக்க அவர் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கின்றது. பதினெட்டு வயதில் ஒரு பதின்மனாக கனடாவில் வந்திறங்கி, இங்குள்ள பாடசாலையில் கல்வியைத் தொடர்ந்தாலும், அதைக் கைவிட்டு தொழிற்சாலையொன்றில் பணியாளராகவும், அலுவலகங்களைச் சுத்திகரிப்பவராகவும், அடுக்கங்களில் பாதுகாவலனாகவும் ஒரே நேரத்தில் பல்வேறு தொழில்களைச் செய்யத் தொடங்குகின்றார்.

 

இவ்வாறான அடிநிலை வேலைகளைச் செய்தால், தன்னால் ஒருபோதும் பொருளாதாரத்தில் முன்னேறவோ, தாயைக் கனடாவுக்கு அழைக்கவோ முடியாது என்று உணர்ந்து, ஒரு நிரந்தர Office வேலையை ரோய் தேடத் தொடங்குகின்றார். எந்த அனுபவமோ, உரிய ரெஸிமியோ இல்லாது, ஒரு முதலீட்டு நிறுவனத்தின் மெயில் ரூமில் ஒரு வேலையைப் பெற்றுக் கொள்கின்றார்.


இப்படி ஒரு அடிநிலைப் பணியாளராக  வேலையைத் தொடங்கும் ரோய், எப்படி அந்த பல பில்லியன் மதிப்புள்ள நிறுவனத்தின் ஒரு பகுதிக்கு பிற்காலத்தில்  Executive Vice President ஆக ஆகின்றார் என்பதுதான் மிச்ச கதை. ஒருவகையில் இது 'அமெரிக்கக் கனவு' போல ஒரு குடியேற்றவாதியின் 'கனடா கனவு' கதையெனச் சொல்லலாம்.


ரோயினது சித்திரவதை அனுபவங்கள், தகப்பனை இந்திய இராணுவம் பலியெடுப்பது என்பது மிகவும் துயரமான சம்பவங்கள். தகப்பனின் இறந்த உடலோடு தாய் பல மணித்தியாலங்கள் தனித்து இருந்தது,  பின்னாட்களில் நிரந்தர உளவடுவாகி  ஸ்கிரினோஃபோபியாவுக்குப் போய் கடினமான வாழ்வு வாழ்ந்து முடிந்த அந்தத் தாயாரின் அனுபவங்களையும் ஒரு கையறு நிலையிலே நாம் வாசிக்கின்றோம். ரோயையும் இந்தத் துயர நினைவுகளும், அவர் அனுபவித்த சித்திரவதைகளும் கோபக்கார ஒருவராக அவரை மாற்றி உளவியல் ஆலோசனைகளுக்குக் கொண்டு செல்வதையும் விளங்கிக் கொள்ளமுடிகின்றது.


தகப்பன் இறந்த துயரை வெளியில் பாயவிடாது தனக்குள் அடக்கிக் கொண்ட ரோய், கிட்டத்தட்ட 14 வருடங்களின் பின் (2002) பருத்தித்துறைக்குப் போய் தகப்பன் கொல்லப்பட்ட வீட்டை (அந்த வீட்டை ரோயின் தாய் கொஞ்சக்காலத்திலேயே வேறொருவருக்கு விற்றும் விடுகின்றார்) போய்ப் பார்த்து அங்கே மண்டியிட்டு தகப்பனுக்கு உரிய பிரியாவிடை கொடுத்த சில காலங்களின் பின்னரே அவரால் நெஞ்சை அடைத்துக் கொண்டிருந்த இந்தத் துயர நினைவுகளிலிருந்து ஒரளவுக்கு விடைபெற முடிகின்றது.


 

3. இரு உலகுகளின் இணைவும் விரிசலும்

 

னடாவுக்கு வந்தவுடன் ரோயும் எல்லா குடியேற்றவாதிகளைப் போல தத்தித்தத்தி மெதுவாகத்தான் மேலே ஏறி வேண்டியிருக்கின்றது. ஆனால் ரோயுக்கு நல்ல மனிதர்கள் விரைவில் அறிமுகமாவதும், அவரது காதலி அவருக்கு வேலையில்லாத காலங்களில் உதவுவதும்  விதிவிலக்கானது. இது எல்லா குடியேற்றவாதிகளுக்கும் எளிதில் சாத்தியமாவதில்லை. முக்கியமாக அனைத்து ஆவணங்களையும் அடையாளமின்றி அழித்துவிட்டு அகதிகளாக வந்தவர்க்கு கனடாவில் இது எளிதாக நடப்பதுமில்லை. ரோய் இது தனது சொந்த அனுபவமென மிகுதிக் கதைகளைச் சொல்லியிருந்தால் பரவாயில்லை. அதனோடு நிறுத்தாமல் கனடாவை ஒரு 'சொர்க்கபுரியாக' மட்டும் கட்டியமைக்கும்போதே வாசிக்கும் நமக்கு அவரோடு முரண் உரையாடலைத் தொடங்கவேண்டியிருக்கின்றது.

 

கனடாவில் அவர் வேலை நிமித்தம், பரந்த தளத்தின் வெள்ளையினத்தவர்கள் நிரம்பியிருக்கும் இதன் மத்திய பகுதிகளுக்கும், சிற்றூர்களுக்கும் பயணித்ததால் ரோயின் அனுபவங்கள் ஒருவகையில் பெறுமதியானவைதான். எனினும் ரோயிற்குள் அவரையறியாமலே இங்குள்ள பல தமிழர்களைப் போன்ற தொபுக்கடீர் என்று தேசிய நீரோட்டத்துக்குள் குதிக்கும் கனடா வலதுசாரியினர் போன்ற 'பெருமை' வந்துவிடுகின்றது. இங்கு வெளியாகும் நாஷனல் போஸ்டையே வாசிப்பேன் என்று அவர் சொல்லும்போதே அவரின் அரசியல் எந்தப் பக்கம் போகின்றது என்பது விளங்குகின்றது. அதற்காய் மற்ற அரசியல் கட்சிகள்  எல்லாம் சிறப்பானவை எனச் சொல்ல வரவில்லை.

 

இந்த நாடு ஒரு சிறந்த நாடு, நீங்கள் கடினமாக உழைத்தால் உங்களுக்குரிய தடைகளைத்தாண்டி (இனவாதம், நிற வித்தியாசம்) என்பவற்றைத் தாண்டி உங்கள் கனவுகளைச் சாத்தியப்ப்படுத்தலாம் என்று தொடர்ந்து வலியுறுத்தும் கப்பிட்டலிஸ்களின் கனடாக் கனவையே ரோயும் வெவ்வேறு பகுதிகளில் ஒரே குரலில் ஒலித்தபடி இருக்கின்றார்.

 

உலகில் பல நாடுகளை விடவும் வாழ்வதற்குக் கனடா ஒரு சிறந்த நாடென்பதில் எனக்குக் கூட மாற்றுக் கருத்தில்லை.  இலங்கையில் இருக்கும் பேசும்/எழுதும்/நடமாடும் சுதந்திரத்தை விட பன்மடங்கு சுதந்திரம் கனடாவில் இருப்பதை,  ரோய் சொல்வதைப் போலவே நானும் உணர்கின்றேன்  என்பதும் உண்மைதான். ரோய் -எல்லோருக்குள்ளும் இனவாதம் இருக்கின்றது, நமக்கும் சாதிப் பிரிவினைகள் இருக்கின்றது, எனவே வெள்ளையர்களை மட்டும் இனவாதிகள் எனச் சொல்லி எங்கள் பிள்ளைகளை வளர்க்கக் கூடாது என்று எமக்கு வலியுறுத்திச் சொல்கின்றார். ஆனால் கனடா வாழ்வதற்கு நல்ல நாடென்றால், கனடாவில் இந்த வெள்ளையர்கள் இங்கிருக்கும் ஆதிக்குடிகளுக்கு என்ன செய்தார்கள்/செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதைச் சொல்வதற்கும் நிறைய மினக்கெட்டிருக்க வேண்டும். அதைப் பற்றிய எந்த சிறு சலசலப்பையும் இந்த நூலில் நாம் வாசிக்கக் கிடைக்கவில்லை.

 

Systemic And Structural Racism கனடா அமெரிக்கா உள்ளிட்ட வட அமெரிக்கா நாடுகளில் நீண்டகாலமாய் தனி மனிதர்களைப் பாதிக்கின்றது என்பதை ரோய் எளிதாய்க் கடந்து போகவும் செய்கின்றார். ரோய் கனடா வந்தபோது உணர்ந்த இனவாதச் சொற்களைத்தான், அவரின் -இந்த நாட்டில் பிறந்த சொந்தப் பிள்ளையும் இப்போது கேட்கின்றது என்றால்- இந்த நாடு ஏனின்னும் இவ்வாறான விடயங்களில் முன்னேறாமல் இருக்கின்றது என்றும் அவர் யோசிக்க வேண்டும் அல்லவா. ஆடைகளில் படும் அழுக்கைப் போல எளிதாக இவற்றைத் தட்டிக் கழித்து முன்னேறி விடவேண்டும் என்று ரோய் சொல்வது அநியாயமல்லவா?

 

இப்படிப் பார்ப்போம், நாளை இலங்கையில் பெரும்பான்மைச் சிங்களவர்கள்,  சிறுபான்மையினச் சமூகங்களான தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத்தமிழர்கள் உள்ளிட்டவர்களோடு நல்லிணக்கம் செய்து நிம்மதியாக வாழ்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியெனில் சிங்களப் பெரும்பான்மை அரசு, தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்குச் செய்த (ரோய் விபரித்தவை உட்பட) கடந்தகால வரலாற்றைச் சொல்லாமல், நினைவூட்டாமல் இலங்கை ஒரு சிறந்த நல்லிணக்க நாடு என்று நாளை சொன்னால் வரலாறு நம்மை மன்னிக்காது அல்லவா? அவ்வாறே கனடாவை அதன் சிறப்புக்களுக்காகப் போற்றும்போது அதற்குள் இருக்கும் கீழ்மைகளையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

 

அண்மையில் கூட ஆபிரிக்காவிலிருந்து வந்த அகதிகளை உரிய வசதிகள் இல்லாது தெருக்களில் வாழவிட்டு நாமும், இந்த அரசும் அவர்களுக்கு அவலத்தைச் செய்ததற்கு நாம் வெட்கித் தலைகுனிய வேண்டுமல்லவா? ஆகவேதான் கனடா ஒரு சொர்க்கபுரி என மட்டும் கட்டமைப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் எனச் சொல்கின்றேன். இந்த நூலைக்கூட ரோய் தனது அனுபவங்களோடு நிறுத்தியிருந்தால் நாம் இதையெல்லாம் பேசியிருக்க வேண்டியிருக்காது. கனடா ஒரு இனவாத நாடா, அப்படியா, இப்படியா என்று சில அத்தியாயங்களை  பெரும்பான்மைக் கனடியர்களை உச்சிகுளிரச் செய்ய எழுதியிருப்பதால்தான் நாம் அவர் எழுதிய 'கனடா அனுபவங்களை' இடைமறிக்க வேண்டியிருக்கின்றது.

 

ஓரிடத்தில் நான் மிகப்பெரும் விடுதலையை உணர்கின்றேன். அதைக் கனடா தந்திருக்கின்றது (I'm a free man) என்கின்றார். பிறகு இன்னொரு இடத்தில் கனடாவில் எப்போதும் நாம் போரிட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்கின்றார். போரிடுவதன் மூலமே நாம் வாழ்வின் அர்த்தத்தை விளங்கிக் கொள்ளலாம் எனவும் சொல்கின்றார். என் கேள்வி என்னவென்றால் ஒருவர் விடுதலை அடைந்தபின் எதற்காகப் போராட வேண்டும். ஏதோ ஒரு தளை/விலங்கு இருப்பதால்தானே தொடர்ந்து நாம் போராட வேண்டியிருக்கும்.  அப்படியெனில் பிறகு எப்படி ஒருவர் தன்னை விடுதலையானவராக உணர்கின்றேன் என்று எழுத முடியும்.

 

ரோயே, அவரது முப்பது வயதுக்குள் மியூட்சுவல் பண்ட்களில் முதலிட்டு மில்லியனர் ஆகிவிட்டேன் என்கின்றார். அதற்குப் பிறகு சில வருடங்களில் உலகப்பொருளாதார வீழ்ச்சியில் தனது வங்கிக் கணக்கு மைனஸுக்குப் போய்விட்டது என்றும் குறிப்பிடுகின்றார்.  அதனால் ஏற்பட்ட மனநெருக்கடிகளையும், வாழ்வாதாரச் சிக்கல்களையும் கூட விரிவாக விபரிக்கின்றார். மேலும் அவர் ஏணிப்படிகளில் ஒவ்வொரு உயரங்களை மேலே மேலே அடையும்போதும் பல்வேறு போராட்டங்களாலேயே அந்நிலைகளை அடைகின்றார். ஒருவகையில் பார்த்தால் எப்போதும் போராடிக் கொண்டே  - பொருளாதாரம் உட்பட- பல விடயங்களில் ரோய்  இருக்கின்றார். அப்படியெனில் இவர் கனடா தனக்குத் தந்த விடுதலை என்று சொல்வதன் அர்த்தம் என்ன என்ற கேள்விகள் எமக்குள் எழுகின்றன.

 

இடைக்கிடையே புத்தர் இந்த வாழ்க்கையில் suffering தவிர்க்க முடியாது என்று சொன்னவர் என்றும் வாசிப்பவர்க்கு நினைவூட்டுகின்றார்.  புத்தர் sufferingஐ ரோய் சொல்லும் பொருளாதாரத்தை வைத்து மட்டும் சுருக்கிச் சொன்னவரில்லை. அவர் சொன்ன suffering, நாம் வயதாவது, நோயுறுவது, மரணமுறுவது என்ற விரிந்த தளத்தில் ஆகும். அந்த sufferingஐ நாம் ஒருபோதும் தவிர்க்க முடியாது, ஆனால் painஐ குறைக்க முடியும் என்றுதான் புத்தர் அவரடைந்த ஞானத்தின் மூலம் நமக்குப் போதிக்க விழைந்தார். அதில் ஒன்று பொருளாதாரம்/பணம் மட்டுமே வேண்டும் என்று  கடைசிக்காலம் வரை ஓடியோடி நம் வாழ்வைத் தொலைக்காதிருப்பதும் கூட. 

 

ரோய் ரத்தினவேல் என்ற பெயரோடு இந்த நூலைக் கேள்விப்பட்டபோது இந்தப் பெயரை எங்கேயோ முன்பு கேள்விப்பட்டிருக்கின்றேனோ என்ற யோசனை தோன்றியது. பின்னர் கொஞ்சம் தேடி/தோண்டிப் பார்த்ததில் இவர் இங்கிருக்கும் பலமான ஒரு நிறுவனமான கனடிய தமிழ் காங்கிரஸின் உபதலைவராக இருந்திருக்கின்றார் என்பது புலப்பட்டது. அத்தோடு ஈழ இறுதியுத்தகாலத்தில் இனத்துவேசத்தோடு நமது போராட்டத்தைப் பற்றி எழுதிய நாஷ்னல் போஸ்டில் அக்கருத்துக்களை மறுத்து opinions columns எழுதவும் செய்திருக்கின்றார் என்பதையும் அறிய முடிந்தது.

 

கனடிய தமிழ் காங்கிரஸில் இருந்து, சில பொது அரங்குகளில் இலங்கை அரசுக்கு எதிராக இறுதி ஈழ யுத்தகாலத்தில் பேசியதால், இலங்கை அரசால் இலங்கைக்குச் செல்ல தடைசெய்யப்பட்ட சிலரில் இவரின் பெயரும் இருந்தது (இப்போதும் இருக்கின்றதா தெரியவில்லை). ரோயுக்கு உண்மையான பெயர் வேறொன்று. அதை இணையத்தில் தேடினால் கிடைக்கும். அவரே அந்தப் பெயரை இங்கே பதிவு செய்துமிருக்கின்றார் என்பது வேறுவிடயம்.  அவ்வாறு தன்னை இலங்கையரசு தடை செய்தது தனக்குப் பெருமை என்கின்றார். இலங்கை அரசுக்கும் நாட்டுப் பொருளாதாரத்தை உயர்த்துவதை விட யாரை நாட்டுக்குள் விடக்கூடாது என்பதுதான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இப்போது கனடிய அமைச்சராகி விட்ட ஹரி ஆனந்தசங்கரிக்கும் இலங்கை செல்ல பயணத்தடையை அந்த அரசு நீண்டகாலமாக விதித்து வைத்திருக்கின்றது. வேறொன்றுமில்லை ஹரி தொடர்ச்சியாக இலங்கையரசு செய்த தமிழனப் படுகொலைகளைப் பற்றி பல்வேறு தளங்களில் பேசிக்கொண்டிருக்கின்றார் என்பது மட்டுமே இதற்குரிய காரணம்.

 

ரோயின் இந்தப் புத்தகத்தை யாருக்காவது வாசிக்கப் பரிந்துரைப்பேனா என்றால் நிச்சயம் செய்வேன் என்றே சொல்வேன். இதில் சொல்லப்பட்ட அனுபவங்கள் முக்கியமானவை. ஆனால் ஒரு தனி மனிதரின் அனுபவம் என்று மட்டுமே நினைத்து வாசியுங்கள் என்றே அவர்களுக்கு ஞாபகமூட்டுவேன். முக்கியமான இங்கே பிறந்த அடுத்த தலைமுறைப் பிள்ளைகளை இதில் இலங்கையில் நடந்த போர் உள்ளிட்ட ஒருவர் தொடக்க காலங்களில் கனடாவில் பெற்ற பல்வகைப்பட்ட அனுபவங்களுக்காய் வாசிக்கப் பரிந்துரைப்பேன்..

 

கிட்டத்தட்ட என் நெருங்கிய உறவுகளின் ஒருவரின் வயதையொத்தவர் ரோய். ரோய் கனடாக்கு வந்து 'உயர்ந்தது' ஒருவகை என்றால், என் நெருங்கிய உறவுகளைப் போன்றவர்கள் உக்கிரேன் போன்ற கிழக்கு ஐரோப்பாப் பனிநாடுகளில் சிக்கி, கனடாவின் வடபகுதியில்  ஆவணங்களின்றி அகதியாய்  வந்திறங்கி,  உரிய சாப்பாடில்லாது  இரண்டு நாட்களாய் ரெயினில் பயணித்து குளிர்காலத்தில் ரொறொண்டோவில் வந்திறங்கியது என்று அவர்களுக்கும் சொல்ல வேறு விதமான கதைகள் இருக்கும். அவ்வாறு ஒவ்வொருவரின் கனடா வந்த கதையும், கனடாவில் அவர்கள் தத்தளித்து  எழுந்த கதைகளும்,  இன்னமும் தத்தளித்துக் கொண்டிருக்கும் கதைகளுமென பல்லாயிரம் இருக்கும்.

 

ஒருவகையில் ரோய் இந்த நூலின் பிற்பகுதியில் நமக்குத் திணிக்கச் செய்வது, இந்தியா/இலங்கையில் தலித்துகளிடமும், அமெரிக்கா/கனடாவில் கறுப்பர்களிடமும், உங்களுக்குத்தானே இப்போது படித்து, கடினமாக வேலை செய்து முன்னேற ஒரு தடையும் இல்லையே, பிறகேன் இந்த நாட்டை நீங்கள் எப்போதும் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்பதைப் போன்ற அபத்த வகையைச் சேர்ந்தது.

 

ஒருவரின் வெற்றிக்கதை (அல்லது அவ்வாறாக நம்புகின்ற) எல்லோரினதும் கதையாகாது; எதையும் பொதுமைப்படுத்தல் ஆபத்தானதாகவே முடிந்துவிடும். அந்த வித்தியாசங்களைப் புரிந்து கொள்ள மறுப்பது என்பது பிறரின் குரல்களை நசுக்குவதைப் போன்றதாகும். ஒருவகையில் இதைத்தான் நமக்கு இந்த முதலீட்டிய நாடுகள்  'அமெரிக்கக் கனவு' என்று சொல்லி சொல்லி நம்மை உசுப்பேத்திக் கொண்டிருக்கின்றது. அந்தக் குரலை ரோயின் பிற்கால கனடா அனுபவங்களில் அடிக்கடி கேட்பது சலிப்பூட்டுகின்றது. அதைத் தவிர்த்திருந்தால் இந்த நூல் இன்னும் சிறப்பானதாக ஆகியிருக்கும். ஆனாலும் அதன் முதற்பகுதி போர்க்கால நினைவுகளாலும், ரோயின் தனிப்பட்ட  கனடா அனுபவங்களினாலும் இது ஒரு முக்கியமான நூல் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை.

 

*******************


(Prisoner # 1056: How I survived Was and Found Peace by Roy Ratnavel)


நன்றி: 'அம்ருதா' & 'கனலி'

 

 


0 comments: