கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அதிகாரத்தில் தெறிக்கும் வன்மம்

Thursday, December 15, 2016

1.
'Road to Nandikadal' என்பது புலிகளை ஆயுதப்போராட்டத்தின் மூலம் வெற்றிகொண்டதை சிங்கள இராணுவத் தரப்பிலிருக்கும் ஒருவர்  கொண்டாடிக் குதூகலிக்கின்ற ஒரு நூலாகும். முகமாலையில் தரித்து நின்ற 53 டிவிசனுக்குத் தலைமை தாங்கிய கமல் குணரட்னே நான்காவது ஈழப்போரில் இறுதியில் புலிகளின் தலைவர் கொல்லப்படுகின்ற தாக்குதலை நிகழ்த்தியதுவரை பலவற்றை எழுதிச் செல்கின்றார். புலிகளின் தலைவரைப் புகழ்ந்திருக்கின்றாரென 2ம் அத்தியாயம் மட்டும் வாசித்துவிட்டு 'புகழ்' பரப்பியவர்கள், இந்நூலை முழுமையாகக் கடைசி அத்தியாயம் வரை வாசித்திருந்தால் அவர்களுக்கு நிச்சயம் கடும் சினம் வந்திருக்கும்

ஒரு நாய் தன் காலின் மீது கிடக்கிறது எனவும், நாயின் அடையாள அட்டைச் சின்னம் எதுவெனவும் புலிகளின் தலைவரை -அவர் ஒரு மனிதர் என்றளவில் கூட- சிறிதும் மரியாதை கொடுக்காமல் எழுதப்பட்டிருப்பதை வாசித்திருந்தால், புகழைப் பதிந்தவர்கள் தம் பதிவுகளை மறைத்துவிட்டு ஓடியிருப்பார்கள்.
புலிகளைத் தீவிரவாதிகளென எல்லா இடத்திலும் அடையாளமிடும் கமலுக்கு, அவரை மீறி பல இடங்களில் புலிகளென எழுத வந்துவிடுகின்றது. பாவம் அடுத்த பதிப்பிலாவது  புலிகள் என  எழுதப்பட்டு எஞ்சியுள்ள இடங்களை தீவிரவாதிகளென மாற்ற அவர் ஆவன செய்வாரென நம்புவோமாக.

தீவிரவாதிகள் மீது வெஞ்சினம் கொண்டபொழுதிலும் அவர்கள் அலையலையாய் வந்து முகமாலை, புதுக்குடியிருப்புப் பகுதிகளில் மோதியதை எதுகொண்டும் மறைக்க முடியவில்லை. மூன்று வருடங்களுக்குள் நிகழ்ந்த யுத்ததிற்குள் கிட்டத்தட்ட 5,800 படையினர் கொல்லப்பட்டதையும், 29,000 பேர் போரினால் அங்கவீனப்பட்டதையும் ஒப்புக்கொள்கிறார்.

தீவிரவாதிகளை சில இடங்களில்  அவ்வப்போது பாராட்டியும் விடுகின்றார். அவர்களின் மிகத்துல்லியமான ஆட்டிலறித்தாக்குதல்களை மட்டுமின்றி தங்களால் அவ்வளவு எளிதில் அழிக்கமுடியாது மிக நுட்பமான கோணங்களில் அவற்றை நிறுத்திவைத்திருந்த முறையையும் உலகில் எந்த இடத்திலும் இவ்வாறான கோணங்களில் வைத்து பார்த்ததில்லையெனவும் வியக்கின்றார்.

இன்னொரு இடத்தில், தீவிரவாதிகளின் வேவு பார்க்கும் திறத்தை. முகமாலை போன்ற முக்கிய நிலைகளைத் தாண்டி வந்து அவர்கள் உளவு பார்த்த நுட்பத்தை கவனப்படுத்துகின்றார். முக்கியமாய் 8-10 கிலோமீற்றர்கள், மிதக்கும் படகை கைகளால் (கவனிக்க துடுப்பு எதுவும் பாவிக்காது) அளைந்து வந்து உள்நுழைந்தது மட்டுமின்றி தாங்கள் இரவு சாப்பிட்டுவிட்டு மிச்சம் வைக்கும் சாப்பாட்டையும் உண்டு விட்டுசென்ற வேவுப்புலிகளின் திறமையைப் பாராட்டச் செய்கின்றார். அதுவும் அவ்வப்போது சுட்டு சுட்டு வீழ்த்த தொடர்ச்சியாக இப்படி கைகளால் வலித்துக்கொண்டு வந்த உளவுப்புலிகள் பற்றி தமது இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவிடம் குறிப்பிட்டபோதுகூட மிகச்சிறந்த நீச்சல்வீரான அவரால் கூட, இப்படியும் முடியுமா என நம்பமுடியாது இருந்தது என்கின்றார்.

இறுதியாய் புதுமாத்தளனில் 800m X 800m குறுகிய நிலப்பரப்பில் நடந்த கடைசி யுத்தத்தில் கால்களே இல்லாத சில புலிகள் அவ்வளவு மூர்க்கமான போராடிய திறமையைத் தன்னால் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை எனவும் எழுதிச்செல்கின்றார்.

2.
புலிகளின் தலைவரின் மூத்த மகனான, சார்ஸ்ஸ் அன்ரனி ஓரிரவில் சாதாரண மக்கள் போல, சில போராளிகளோடு இராணுவ எல்லைக்குள் நுழைந்தபோது இது இரவு இப்போது அனுமதிக்கமாட்டோம் என இராணுவம் மறுத்தபோது நடந்த சண்டையிலே கொல்லப்பட்டிருக்கின்றார் என்கின்றார். சார்ஸ் அன்ரனி 800X 800 புதுமாத்தளன் சண்டை box இறுக்கப்பட்டபோது கிட்டத்தட்ட 4 கிலோமீற்றர் தொலைவில் சென்றே இராணுவ எல்லைக்குள் நுழைந்தார் எனச் சொல்லப்படுகின்றது.

புலிகளின் தலைவர் இருக்கின்றாரா அல்லது தப்பிவிட்டாரா என்பது தங்களுக்கு அவரைக் கொல்லும்வரை தெரியாது எனவும் சொல்கின்றார். புலிகளின் தலைவர் கொல்லப்படுவதற்கு முன் மூன்று அலையலையான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றது. அந்த தாக்குதலிலேயே புலிகளின் தளபதிகளான பானு, சொர்ணம், மாதவன் மாஸ்டர் உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாய் கூறுகின்றார். கிட்டத்தட்ட 700 பேர் ஒரு நாளிலேயே (மே 17) கொல்லப்படுகின்றனர்.
புலிகளின் தலைவரும், கடற்புலிகளின் தளபதியான சூசையும் கிட்டத்தட்ட அருகிலேயே கடைசிவரை நின்றிருக்கின்றனர். புலிகளின் தலைவர் கொல்லப்பட்ட விதம் குறித்து எல்லாவிதமான வதந்திகளையும் - அவர் சரணடைந்து மகிந்தாவின் முன் மண்டியிடவைக்கப்பட்டவர் உட்பட- நிராகரித்து, தன்னைப் போன்றவர்கள் நேரடிச் சாட்சியாக நடந்ததைப் பார்த்தவர்கள் என உறுதியாகக் கமல் சொல்கின்றார். இறுதித்தாக்குதலை நடத்திய கொமாண்டோக்களின் படமும் இந்தப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டு இருக்கிறது. உடனேயே புலிகளின் தலைவரின் உடலை எரித்து அடையாளமின்றிச் செய்ததாகவும், எல்லாளன் போல நினைவுச்சமாதி ஒருபோதும் அமைத்துவிடக்கூடாதெனவும் எச்சரிக்கையுடன் இருந்ததாகவும் கூறுகின்றார்.

புலிகளின் தலைவரின் உடலை அடையாளங் காட்ட கருணா வந்தபோது, தனக்குக் கேட்க ஒரு இராணுவத்தினன், 'நீங்களும் அவசரப்படாது பிரிந்துவிடாதிருந்தால், உங்கள் உடலையும் இங்கே கிடத்தியிருப்போம்' எனச் சொன்னதையும் இந்தப்புத்தகத்தில் பதிவு செய்கின்றார். கருணா ஒரு புன்சிரிப்புடன் புலிகளின் தலைவரை அடையாளம் காட்டினாலும், தயா மாஸ்டர் கண்களில் நீரோடு இருந்தார் எனவும் எழுதுகின்றார்.

ஆனால், இந்தப் புத்தக்கத்தில் நடேசன், புலித்தேவன் போன்றோர் சரணடைய வந்த காட்சிகளின் பதிவு எதுவும் இல்லை. புலிகளின் தலைவரின் இளையமகனான பாலச்சந்திரன் உயிரோடு சரணடைந்ததும், பிறகு கொல்லப்பட்டதும் பற்றி ஒரு சிறுமூச்சும் இல்லை. தீவிரவாதிகளோடு யுத்தம் தொடங்கியது சரி. ஆனால் no fire zone வரும்வரைக்கும் மக்கள் இழப்பு/கஷ்டம் பற்றி சிறுவிபரிப்புக்களும் இல்லை. ஏதோ இரண்டு இராணுவங்கள் மக்கள் இல்லாத சூனியப்பிரதேசத்தில் சண்டை செய்தனர் என நாங்கள் கற்பனை செய்யவேண்டியதுதான்.

3.
இத்தனை அழிவு நிகழ்ந்தபின்னும், புலிகள் மீது கட்டாய இராணுவ சேர்ப்பு, மக்களை வெளியேவிடாது தடுத்தமை போன்ற பாரிய குற்றச்சாட்டுக்கள் வெளிப்படையாக இருந்தாலும் ஏன் அந்தமக்கள் உட்பட பெரும்பான்மையான தமிழ்மக்கள் மகிந்த ராஜபக்‌ஷாவிற்கு தன் பெரும்பான்மையாக ஆதரவை போரின் பின்பான காலத்தில் கூட காட்டவில்லை என்பதைப் புரியாதவரை, எல்லாளன் - துட்டகைமுனு,, மகிந்த ராஜபக்‌ஷா- பிரபாகரன் போன்றவர்கள் சாதாரண பெயர்களே, இவற்றின் பின்னால் இருக்கும் நுட்பமான பிரச்சினைகள் தீர்க்கப்படாது இருக்கும்வரை இஃதொரு நச்சுச்சூழல் என்பதை அறியாதவரை இந்த அழகிய தீவு அமைதியாக எளிதில் இருக்கமுடியுமா எனவும் சிங்களப் பேரின்வாத அரசும், அதற்கு முண்டுகொடுக்கும் இராணுவமும் யோசித்துப் பார்க்கவேண்டும்.

வெற்றியை நடத்திக் காட்டிய இராணுவத்தளபதியான சரத் பொன்சேகா சிறைக்குள்தான் பின்னர் மகிந்த ராஜபக்‌ஷா அரசினால் அனுப்பப்பட்டார். இராணுவப் புரட்சி நடந்துவிடும் என்ற அச்சத்தாலோ என்னவோ போருக்குத்தலைமை தாங்கிய தளபதிகளில் பெரும்பான்மையோர் வெளிநாடுகளுக்கு தூதர்களாகவும் துரத்தப்பட்டார்கள்.

ஈழத்தின் இறுதிப்போர் நிகழும்போது 120, 000 இருந்த இராணுவம் கிட்டத்தட்ட 230,000, இரண்டு மடங்காக்கப்பட்டது. அதுவரை இருந்த 9 டிவிசன் - 20 டிவிசன்களாகவும் ஆக்கப்பட்டன. இவ்வளவு பேரை வைத்துக்கொண்டு, கொல்வதற்கு 'தீவிரவாதிகளும்' இல்லாதுபோகும்போது நாட்டில் எந்தச் சூழ்நிலையும் வரலாம் என்பதையும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது.ஒரு தோற்றுப்போன போராட்டத்தை, அவர்கள் 'தீவிரவாதி'களாய் இருந்தாலும் தங்களின் சகோதரர்களாகவும், நண்பர்களாகவும் இருந்த அவர்களை 'இயக்கம்' எனற பெயரில் பலர் வெறுக்கலாம், ஆனால் சக மனிதர்களாய் அவர்களை தமிழ்ச்சமூகம் அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்காது. மிக மோசமாக அவர்களைச் சித்தரிக்கும் இந்த நூலில் கற்றுக்கொள்ளும் பாடம் என்னவென்றால், 'நாங்கள் எப்போதும் அதிகாரம் மிக்கவர்கள், எங்களால் எதையும் செய்யமுடியும்' என்பதே.

ஆம், எதையும் செய்யமுடியாது கீழ்மைப்பட்ட ஒரு சமூகம், தன் சாபங்களாலும், குற்றவுணர்வுகளைப் பெருக்குவதன் மூலமும் அதிகாரத்தில் இருப்பவர்களின் மனச்சாட்சிகளை அவ்வளவு எளிதில் உறங்கவிடாது என்று நம்புவதைத் தவிர இப்போதைக்கு எமக்கும் எந்த வழிகளுமில்லை.


----------------------
(நன்றி: 'அம்ருதா' - மார்கழி/2016)

'நட்சத்திரம்' - ஒரு புத்தக வாசிப்பு

Friday, November 18, 2016

'ட்சத்திரம்' என்கின்ற இந்நாவல் ரஷ்ய (அன்றைய சோவியத் யூனியன்) உளவுக்காரர்களைப் பற்றியது; 2ம் உலகமகாயுத்தத்தில் ஜேர்மனியரைத் துரத்தியடிக்கின்ற காலத்தைய கதைக்களன்.  ஒரு யுத்தத்தில் ஜேர்மனியர்கள் பின்வாங்கி, பெரும் தாக்குதலை ரஷ்யப்படைகள் மீது நடத்த காடுகளுக்குள் பதுங்குகின்றனர். ரஷ்ய உளவுப்படையோ ஜேர்மனியர்களின் தடங்களைத் தவறவிட்டுத் தேடிக்கொண்டிருக்கின்றது. இவர்களின் அதிகாரியோ கோபத்தில், அம்மாவின் பால் மறவாக் குழந்தைகள் எனவும், பெண்களைத் துரத்துவதைப் போல ஜேர்மனியர்களைத் துரத்தும் கோழைகள் எனவும் அவர்களைப் பார்த்துத் திட்டுகின்றார்.

அவமானங்களை மீறி வேவுப்படையினர் ஜேர்மனியரின் அமைவிடங்களைக் கண்டுபிடிக்கின்றனர். முள்ளுக்கம்பி வெட்டி உள்ளே நுழைகின்ற உளவுப்படையின் ஒருபகுதி திரும்பியே வராது போகின்றது. இதற்கிடையில் யுத்தக் காலத்தில் தொலைத்தொடர்பில் பணியாற்றுகின்ற பெண்ணுக்கு உளவுப்படையின் இளம்தலைவன் மீது காதல் வருகின்றது. மிகவும் அமைதியும், பணியில் தீவிரமும் உடைய அவன் இதை அசட்டை செய்தாலும், அந்தப் படையில் இருக்கும் வீரர்கள் இந்தப் பெண்ணோடு நெருக்கமாகவும், அவளின் காதலை வெற்றிபெறச் செய்வோமெனவும் உறுதியளிக்கின்றனர்.

இறுதியில் இந்த இளம்தலைவன் தலைமையில் முட்கம்பி வெட்டி காடுகளை ஊடுறுத்து, ரஷ்ய உளவுப்படை ஜேர்மனியர்களுக்குள் இறங்குகின்றது. அங்கேயிருந்து அரிய பல தகவல்களை அனுப்பிவைத்தபடியிருக்கின்றனர். சாதாரண ஜேர்மனியப்படை மட்டும் அல்ல, நாஜிக்களின் மூர்க்கமாய்ப் போரிடும் படையணியான எஸ்.எஸும் ஒரு பெரும் தாக்குதலுக்கு அணிவகுத்து நிற்பதை அவதானிக்கின்றனர். தொடர்ச்சியாகத் தகவல்களைச் சேகரிக்கும் பணியில் சில ஜேர்மனியர்களை இந்த உளவுப்படை கொல்ல, ஜேர்மனியர்கள் சுதாகரிக்கின்றனர். கடும் தேடுதல் நடவடிக்கையில் இவர்களைச் சுற்றிவளைக்க இவர்கள் தாக்கிவிட்டுத் தப்பியோட முயற்சிப்பதோடு நாவல் முடிவடைகின்றது.

அந்தக் காதலி தாங்கள் அனுப்பிவைத்த குழுவிற்குரிய பெயரான 'நட்சத்திரத்திடமிருந்து' தங்கள் தலைமையகமான 'பூமி'க்கு நல்ல செய்தி வருமெனக் காத்திருக்கின்றாள். ரஷ்யப்படை தொடர்ந்து வென்றபடி போகின்றது. போலந்து நாட்டிற்கருகில் -தொடக்கத்தில் உளவுப்படையினரைத் திட்டிய கேணல்- மீண்டும் உளவுப்படையைக் காண்கின்றார். இனி விரைவில் பேர்லினை நாங்கள் பிடித்திடுவோமேன அவர்களை வாழ்த்துகின்றார். ஆனால் அந்தப் பழைய வீரர்கள் இப்போதில்லை. எல்லோரும் புதியவர்கள். அருமையான இளமையான மனிதர்கள் யாரிடையதோ வெறிக்காகவோ நடந்த யுத்தத்தில் காணாமற்போய்விடுகின்றனர்.

ஃதொரு சிறிய நாவலென்றாலும், அதற்குள் யுத்தம் நடக்கும் பின்னணியையும், உளவுப்படைகளின் சவால் நிறைந்த வாழ்க்கையையும் எளிதாக நம்முன்னே கொண்டுவருகின்றது. ஓரிடத்தில் ஒரு ஜேர்மனியரைக் கொல்லும்போது, அவன் 'எனது கைகளைப் பாருங்கள். நானுமொரு தொழிலாளியின் மகன். தொழிலாளர்கள் மீது மிகுந்த காதலுடைய நீங்கள் என்னைக் கொல்லலாமா?' எனக் கேட்கின்றான்.

'திராவ்கினுடைய கண்களில் தோன்றிய இரக்கத்தையும், மாறா உறுதியையும் அந்த ஜெர்மானியன் கண்டான். அவன் ஒன்றுமறியா முட்டாள் அல்ல. அச்சுகோர்க்கும் வேலையிலிருந்து கொண்டே அவன் அநேகப் புத்தகங்களைப் படித்திருந்தான. ஆகவே தன்முன் நிற்கும் மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது அவனுக்கு நன்கு தெரியும். இரக்கமும் உறுதியும் கலந்த பார்வையுடைய இவ்வழகிய வாலிபனது உருவத்தில் தனது உயிரைக் கவர வரும் காலனைக் கண்டதும் அவன் கண்ணீர் விட்டழுதான்' என நாவலில் எழுதப்பட்டிருப்பது, எதிரியாயினும் அவர்களது மனதினுள்ளும் கடைசி நேரத்தில் என்ன தோன்றியிருக்கும் என நினைத்து எழுதப்பட்டிருப்பது கவனிக்கத்தது.

இந்நாவலை எழுதிய எம்மானுயில் கஸகேவிச் நிஜவாழ்வில் 'ஸ்கவுட்டுகள்' எனப்பட்ட உளவுப்படையில் இருந்தவர். ஆகவேதான் இந்நூலில் இருக்கும் உளவெடுக்கும் சம்பவங்களை மிக நெருக்கமாக உணரக்கூடியதாக வகையில் அவரால் எழுத முடிந்திருக்கின்றது. மேலும் பக்கங்கள் அதிகம் போகாது மிக நுட்பமாய் நம்மில் கதைகளைக் கடத்தும் இன்றைய இலத்தீன் அமெரிக்கா நாவல்களைப் போல, எப்போதோ எழுதப்பட்ட  இந்த நாவலும் நூறுபக்கங்களுக்குள் சொல்லவந்ததை தெளிவாகச் சொல்லி நிற்கின்றது.

தமிழில் யார் மொழியாக்கம் செய்தார்கள் என்ற விபரம் தெரியாமல் நியூ செஞ்சுரி ஹவுசினால் 2007ல் இது பதிப்பிக்கப்பட்டிருக்கின்றது. யாராயினும் இவ்வளவு நுட்பமாய் தமிழாக்கியதற்காய் அவருக்கு நிச்சயம் நாம் நன்றிகூரத்தான் வேண்டும்.


(நன்றி: 'தீபம்)

ஆதிரை

Wednesday, November 16, 2016

'ஆதிரை' நாவலை வாசிக்கத் தொடங்கியபோது, எல்லாவற்றையும் விட சயந்தனின் உழைப்பே வியக்கவைத்தது. இவ்வளவு பெரிய நாவலை எழுதுவது எவ்வளவு மிகப்பெரும் விடயமென்பது எழுதுபவராகவும், புலம்பெயர்ந்து இருப்பவராகவும் இருக்கும் ஒருவரால் எளிதில் உணர்ந்துகொள்ளமுடியும். புலம்பெயர்வை ஏன் இங்கு விசேடமாய்க் குறிப்பிடுகிறேன் என்றால், தமிழ் அவ்வளவு புழங்காத சூழலில் இருந்துகொண்டு, எழுதுவதின் கடினத்தைப் பற்றிச் சொல்கின்றேன். இவ்வளவு நிறையப் பக்கங்களில், புலம்பெயர்ந்த சூழலில் இருந்து வந்த படைப்புக்கள் எவையென்று யோசிக்கும்போது 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்', 'வரலாற்றில் வாழ்தல்' என்பவை உடனே நினைவிற்கு வந்தன. ஆனால் அவை தன் வரலாறு சார்ந்து எழுதப்பட்ட நூற்கள். புனைவின் எழுத்தின் வகைக்குள் வராதவை. தேவகாந்தனின் 'கனவுச்சிறை'யே நமக்கு முன்னோடியாக இருக்கின்றது. ஆனால் அதைக் கூட தேவகாந்தன் இலங்கை மற்றும் இந்தியாவில் -தமிழ் நன்கு பரிட்சயமான சூழலிருந்தே- பெரும்பகுதியை எழுதியிருக்கின்றார். அந்த வகையில் 'ஆதிரை' நம் புலம்பெயர்ந்த சூழலில் தொடங்கப்பட்ட, ஒரு பயணத்திற்கான முக்கிய காலடி எனத்தான் சொல்லவேண்டும்.

ஆதிரையில் முதல் அத்தியாயமாகவும் இறுதிஅத்தியாயமாகவும் இருப்பவற்றை ஏற்கனவே சிறுகதைகளாக வெளிவந்து அவற்றை வாசித்ததாகவும் நினைவிலுண்டு. ஆதிரை மூன்று தலைமுறைகளின் கதைகளைச் சொல்கின்றது. அதில் ஒரு குடும்பம் மலையகத்திலிருந்து வன்னிக்குள் கலவரங்களில் நிமித்தம் இடம்பெயர்கின்றது. இன்னொரு குடும்பம் வன்னிக்குள்ளேயே நீண்ட காலமாய் வசித்துவருகின்றது. இந்த இரண்டு குடும்பச் சங்கிலிகளுக்குள் வேறு குடும்பங்களும் முக்கியமான பாத்திரங்களாகவும் உதிரிகளாகவும் வந்து சேர்கின்றனர். அவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்குள் வந்து சேர்கின்றவர்கள்தான் அத்தாரும், சந்திராவும். அவர்கள் தொடக்கத்தில் யாழில் இருந்து  வன்னிக்குள் வந்தது போரின் நிமித்தம் அல்ல; யாழ்ப்பாணிகளின் சாதித்திமிரிலிருந்து தப்பிவந்தே வன்னிக்குள் தமக்கான வாழ்க்கையை அமைக்கின்றனர்.

இந்நாவலில் வன்னிக்காடும், வேட்டை நுட்பங்களும் அற்புதமாய்ச் சித்தரிக்கப்படுகின்றன. காடும் காடு சார்ந்து வாழ்ந்த சங்கிலியினதும், மயில்குஞ்சனினதும் வாழ்க்கை எப்படி கொஞ்சம் கொஞ்சமாய் மாறுகின்றன என்பதை நாவல் இயல்பாய் வாசிக்கும் நம்மிடையே எடுத்து வருகின்றது. பண்ணைகள் அமைத்து  அல்லது ஏற்கனவே அமைக்கப்பட்டவற்ற பண்ணைகளைச் சுவீகரித்து, இயக்கங்கள் தமக்கான தளங்களை வன்னிக்குள் அமைக்கத் தொடங்குகின்றபோது, காட்டிற்குள் செல்லும் உரிமை மறுக்கப்படும்போது சங்கிலி கொந்தளிக்கின்றார். மயில்குஞ்சன் காலப்போக்கில் இயக்கத்தோடு சேர்ந்து அவர்களது தாக்குதல்களுக்கு உதவி செய்யும் ஒருவராக மாறிப்போகின்றார்.

நாட்டின் எந்தப் பகுதியில் கலவரங்கள் நடக்கின்றபோதும் வன்னி ஒவ்வொரு பொழுதும் அதிர்கின்றது. இறுதியில் போர், வன்னிக்குள்ளும் கால் வைக்கின்றது. இராணுவம் அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்கின்றனர். இயக்கக்காரர்கள் திரும்பி இராணுவத்தோடும் பொலிசோடும் பொருதுகின்றனர். மக்கள் வீணாய்க் கொல்லப்படுகின்றார்கள் என்பதைக்  காரணங்காட்டி மற்ற இனமக்களையும் இயக்கம் கொல்கின்றது. இலங்கை இராணுவம், இந்திய இராணுவம், மீண்டும் இலங்கை இராணுவம் என்று இராணுவங்கள்தான் மாறுகின்றரே தவிர, யுத்தம் தொடர்கின்றது. அது ஏற்படுத்தும் அழிவுகளும் மனக்காயங்களும் தொடர்ந்தபடியே இருக்கின்றது.

போருக்குள்ளும் மறுபுறத்தில் வாழ்க்கை தளிர்க்கின்றது. பிள்ளைகள் பிறக்கின்றனர் .அடுத்தடுத்த தலைமுறைகள் தோன்றுகின்றன. வழமைபோலவே பெண்களும் குழந்தைகளும் எதையும் பேசாது அல்லது அவர்கள் பேசுவதற்கான எந்த வெளிகளும் இல்லாமல் போகின்றது. அவர்களே ஆண்களை விட எல்லா இழப்புக்களையும், வடுக்களையும் தாங்குகின்றனர்.  நெருக்கமானவர்கள் கொல்லப்படுகின்றபோதும், காணாமற்போகும்போதும், இயக்கங்களுக்குப் போகும்போதும் இந்தப் பெண்களே தம் குடும்பங்களை வழிநடத்துகின்றனர். எல்லாத் துயரங்களோடும் அடுத்ததலைமுறையை வளர்த்து ஆளாக்கியும் விடுகின்றனர்.

வ்வளவு பெரிய நாவல் பல்வேறுதளங்களில் ஊடறுத்துச் செல்வதற்கான வெளிகள் இருக்கின்றன. ஆனால் நாவல் புலிகள் ஆதரவு மற்றும் எதிர் என்று இரண்டு தளங்களுக்குள் அப்பால் நகரக் கஷ்டப்படுகிறது. அதிலும் அவ்வப்போது உரையாடும் பாத்திரங்கள் மூலமே எதிர் விமர்சனம் வருகின்றதே தவிர, முழுமையாக வரவும் இல்லை. ஒரு படைப்பாளி ஒரு சார்பு எடுத்து எழுதுவதில் எந்தச் சிக்கலுமில்லை. ஆனால் ஒரு படைப்பு எப்போது நம்மால் மறக்கமுடியாத நாவலாக மாறுகின்றதென்றால் ஒரு பாத்திரம் அதன் பலவீனங்களுடன் என்றாலும் அதற்குரிய நியாயத்தைக் கொண்டிருப்பதை வாசக மனதில் பதிய வைப்பதில்தான் இருக்கிறது.  ஏன்  எப்போதே எழுதிய ரஷ்ய நாவல்களை இன்றும் விதந்தோத்திக் கொண்டிருக்கின்றோம் என்றால் அவர்களின் நாவல்களில் இருந்த பலவீனமான மனிதர்களாயினும் நாம் அவர்களைக் கடந்துபோக முடியாத பாத்திரங்களாய்ப் படைக்கப்பட்டிருப்பது ஒரு முக்கிய காரணம் எனலாம்.

புலிகள் மீது ஒரளவு விமர்சனங்களை வைப்பது சந்திரா என்கின்ற பாத்திரம் மட்டுமே. அந்தப் பாத்திரத்திற்குள் கூட உள்ளே நுழைய சயந்தன்  அவ்வளவு மினக்கெடவில்லை. ஒரு தீவிர புலி அனுதாபியான அத்தாரை, சந்திரா அவ்வப்போது கேள்விகளால் மடக்கின்றாரே தவிர வேறு எந்த நுட்பமான விமர்சனங்களையும் நாவலில் எளிதாய்ப் பார்க்கமுடியவில்லை.  அத்தார் கூட, இளமையில் ஒரு கம்யூனிஸ்டான இருந்த அவர் பின்னாளில் தேசியவாதியாக மாறுகின்றார் என்தைப் புரிந்துகொள்ளமுடிகின்றது. புலிகளால் கொல்லப்படுவதற்காய்த் தேடப்பட்ட எத்தனையோ பேர் பின்னாட்களில் புலிகளின் தீவிர ஆதரவாளர்களாக மாறியதை நாமறிவோம். அது மட்டுமின்றி அவர்களின் ஒருவகையினர் இன்றும் கூட இத்தனை நிகழ்ந்தபிறகும் புலிகளின் எல்லாவற்றையும் ஆதரிப்பதையும் காண்கின்றோம். அந்தவகையில் சயந்தன் இறுதிப்போர்க்கட்டங்களில் நிகழ்ந்த கட்டாய ஆட்சேர்ப்புக்களை மறைக்காமலும், அதை எந்தவகையிலும் நியாயப்படுத்தாமலும் உள்ளதை உள்ளபடி எழுதியிருப்பதும் வரவேற்கத்தக்கது.

இந்த நாவல்  இத்தனை நூற்றுக்கணக்கான பக்கங்களில் எழுதப்படுகின்றதென்றால், பல்வேறு அடுக்குகளில் இது இன்னும் விரிக்கப்பட்டு எழுதப்பட்டிருக்கலாமோ எனவும் தோன்றுகிறது. வாசிப்பவர் இந்தப் பாத்திரம் சரியா அல்லது தவறா என்று யோசிப்பதற்கான வாய்ப்புக்கள் அநேக பாத்திரங்களுக்கு வழங்கப்படவில்லை. உதாரணமாக புலிகள் அனுதாதபுரத்தில் சிங்கள மக்கள் மீது நடத்திய தாக்குதல்களுக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது இந்திய உளவுத்துறையினர். எல்லா இயக்கங்களும் சேர்ந்து இருந்த கூட்டத்தில் இந்தப் படுகொலையை யார் நிகழ்த்தப்போகின்றீர்கள் எனக் கேட்கப்பட்டபோது ஏனைய இயக்கங்கள் தயங்கியபோது, புலிகள் முன்வந்ததை புளொட்டில் அன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் ஆவணப்படுத்தியிருக்கின்றார்.

ஏன் இத்தனை பெரிய நாவலில் நம் இயக்கங்களின் வளர்ச்சியை இயல்பாக விடாது பயிற்சி முகாங்களும், ஆயுதங்களும் அள்ளிக்கொடுத்து ஊதிப்பெருப்பித்த இந்தியாவின் அரசியல் கோரமுகம் வெளியே வரவில்லை. சிங்கள அரசு மற்றும் இராணுவத்தின் கொடும் முகங்களை இந்தளவிற்குக் காட்டமுடியுமென்றால் மெளனமான பெரும் தந்திரம் நிறைந்த இந்தியா எப்படி நம் போராட்ட வரலாற்றிலிருந்து தப்பிவிட முடியும். இந்திய அரசினதும், உளவுத்துறையினதும் பங்கின்றி நாம் நமது போராட்டங்களின் வரலாற்றை எப்படி எழுதிவிடமுடியும்?

மேலும்,  புலி ஆதரவு  X எதிர்ப்பு என்ற பாத்திரங்களைத் தவிர வேறு எந்த விதிவிலக்கான பாத்திரங்களும் இந்ந்தாவலில் வளர்க்கப்படவில்லை. முக்கியமாய் முஸ்லிம் பாத்திரம் எதையுமே இந்த நாவலில்  காணவேயில்லை. அப்படி ஒரு பாத்திரம் படைக்கப்பட்டிருந்தால் இந்த நாவல் இன்னும் ஆழத்திற்குள் இறங்கியிருக்கும். அதே போன்றே புலிகள் சாராத இன்னொரு இயக்கத்தின் முன்னாள் போராளியின் பாத்திரத்தைக் கொண்டு வந்திருக்கலாம். அதன் மூலம் நமது போராட்டத்தின் உரையாடலை இந்த நாவலில் வளர்த்தெடுத்திருந்தால் எத்தனை அற்புதமாக  இந்நாவல் உருமாறியிருக்குமென  வாசிக்கும்போது நினைத்துக்கொண்டிருந்தேன்.

யந்தனின் சமகாலத்தவனாக இருப்பதால் இந்த நாவல் வாசிப்பில்  அது பலமா பலவீனமா என்று தெரியவில்லை. ஆனால் நாவலை வாசித்துக்கொண்டிருந்தபோது எனக்கு ஏற்கனவே தெரிந்த கதைகளைத்தான் வாசித்துக்கொண்டிருக்கின்றேன் என்ற நினைப்பே வந்தது. இந்த நாவலிற்குள் சயந்தனின் அழகான மொழி நடை  கூடவே வந்ததால் வாசிப்பு அவ்வளவு தடைசெய்யவில்லை. இப்போது நமது ஆயுதப்போராட்டம் குறித்து நிறைய  புதினங்கள் வரத்தொடங்கியிருக்கும் காலத்தில் ஒரு படைப்பாளிக்கு படைப்பைத் தருவதில் மிகப் பெரும் சவால் இருக்கின்றதென நினைக்கின்றேன். நமது ஆயுதப்போராட்டத்தின் இறுதியில் என்ன நடந்தது என்பதற்கு அப்புவின் 'வன்னி யுத்தம்' , யோ.கர்ணனின் 'கொலம்பஸின் வரைபடம்', தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' என்பவை நம் முன்னால் இருக்கின்றன. இன்னொரு புறம் புலிகளின் போராட்டங்கள் பற்றிக்கூற பெண்புலிகளின் போராட்டத்தின் பங்களிப்பைக் கூற 'விழுதுமாகி வேருமாகி', 'மலைமகள் கதைகள்', 'மேஜர் பாரதியின் படைப்பு'க்கள் என நிறைய ஏற்கனவே முன்னரே வெளிவந்திருக்கின்றன. இன்னொரு புறத்தில் 'விடமேறிய கனவு', 'பொக்ஸ் கதைப்புத்தகம்' என புனைவின் நுட்பங்களுக்கு உதாரணங்களாய் இருக்கின்றன.

நிறைய வாசிப்பதென்பது ஒருவித பலவீனமோ என யோசித்த தருணமும் ஆதிரையை வாசித்தபோது எனக்குள் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஆதிரையின் நிறைய இடங்கள், எனக்கு வேறு படைப்புக்களை நினைவூட்டிக் கொண்டிருந்தது. உதாரணமாக மிகச் சிறப்பாக ஆதிரைக்குள் வடிவமைக்கப்பட்ட வெள்ளையக்கா என்கின்ற மலரின் பாத்திரம் எனக்கு  வெற்றிச்செல்வியின் 'போராளியின் காதலி'யின் முக்கிய பாத்திரத்தை நினைவூட்டிக்கொண்டிருந்தது. ஆதிரையில் வரும் சித்திரவதைக்கூடங்கள் பற்றிய சித்தரிப்பு விடமேறிய கனவின் பக்கங்களையும், இறுதிப்போர் பற்றிய சித்திரங்கள் அப்புவின் 'வன்னியுத்தத்தையும்', கொலம்பஸின் வரைபடத்தை'யும் நினைவுபடுத்தியிருந்தன. இதன் அர்த்தம் ஆதிரை அவற்றைப் பின்பற்றியது என்பதல்ல. ஒரு வாசக மனது எந்தத்திசையில் சிந்தித்தது என்பதைச் சொல்வதற்கு மட்டுமே.

ஆகவே இனி நமது படைப்பாளிகளுக்கு முன்னாலுள்ள பெரும் சவால் என்னவென்றால் உம்பர்த்தோ ஈக்கோ ஓரிடத்தில் சொல்வதுபோல, ‘வாசகருக்கு எது வேண்டுமெனத் தெரிந்து எழுதுவதல்ல. நமது ஒவ்வொரு படைப்புக்கும் ஏற்றமாதிரி வாசகரை மாற்றுகின்ற வித்தையை நாம் எழுத்தினூடாக அறியவேண்டியிருக்கின்றது' என்பது பற்றியே நாம் யோசிக்கவேண்டியிருக்கின்றது. அதுவே நம் எல்லோருக்கும் முன்னால் உள்ள சவால். அதை எப்படி எதிர்கொள்கின்றோம், தாண்டிச் செல்கின்றோம் என்பது குறித்து இனி நாம் அக்கறைப்பட வேண்டியிருக்கின்றது..

ஷோபாசக்தியின் 'கொரில்லா' வந்தபோது அதை வியந்து ஷோபாசக்தியின் காலத்தைய ஒரு இயக்க நண்பரோடு உரையாடியிருந்தது நினைவுக்கு வருகிறது. இதிலென்ன இருக்கின்றது இதைவிட நிறைய விடயங்கள் எனக்குத் தெரியும் என அந்த நண்பர் சொன்னபோது எனக்கு கோபமே வந்தது. இப்போது ஆதிரையை பற்றிப் பேசும்போது அதேதான் ஞாபகம் வருகின்றது. சயந்தனின் சமகாலத்தவனாக நானும் இருப்பதால் எனக்கு ஏற்கனவே தெரிந்த கதைகளின் தொகுப்பாக இருப்பதால் என்னால் இதை ஒரு மிகச்சிறந்தநாவலாக முன்வைக்கமுடியாது எனச் சொன்னால் நான் 'கொரில்லா'விற்காய் கோபப் பட்டத்தைப் போல யாரேனும் ஒருவர் கோபப்படக்கூடும். அதைப் புரிந்துகொள்ளமுடியும்.

நாவலிற்கான திறனாய்வுகள் என்பது அடுத்து எழுதுவதற்கு ஏதோ ஒருவகையில் உதவும் என்கின்ற முறையில் நம்புகின்றவன். வெளிப்படையாக நாம் வாசிப்புக்களை வைக்கும்போதே நாம் நம் வாசிப்புக்களுக்கு நேர்மையாகவும், அதேவேளையில் படைப்பாளிக்கு உந்துசக்தியாகவும் இருக்கமுடியுமெனவும் நினைப்பவன். ஒரு சிறந்த படைப்பு அது வெளிவரும் காலத்தைய புகழ்ச்சிகள் தூற்றல்கள் என்பவற்றைத்தாண்டி எதிர்காலத்தில் தன்னை நிலைநிறுத்தும். அது வெளியிலிருந்து அல்ல, ஒரு நாவல் அது தன்னியல்பிலேயே தனக்கான வாசகர்களைக் கண்டடைந்துகொள்ளும். சயந்தனின் 'ஆதிரை யும் அப்படித் தன்னை எதிர்வரும் காலங்களில் மீளக் கண்டடையவேண்டும் என பிரியப்படுகிறேன்.

 (கனடாவில் நடந்த 'ஆதிரை' நூல் வெளியீட்டில் நிகழ்த்திய உரை)

சிங்கள மாணவியிற்கான எதிர்வினை

Wednesday, September 07, 2016

திசுரி வன்னியராட்சியின் கட்டுரையை வாசிக்க: 
To The Tamil Students In The Recent Fight At Jaffna University


Thisuri Wanniarachchi என்பவர் யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வன்முறையை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரையை நண்பர்கள் பலர் பகிர்ந்துகொண்டிருக்கின்றனர். தனக்குரிய privilege ஐயும், மன்னிப்பையும் கேட்டுக்கொண்டு அவர் எழுதுவது நல்லதொரு விடயமே. அத்தோடு பெண்கள் எவ்வாறு நாளாந்தம் வன்முறைகளைச் சந்தித்தாலும் வன்முறைக்குப் போகாத 'சகிப்புணர்வை'ப் பற்றி அவர் சொல்வதும் நிச்சயம் கவனத்தில் கொள்ளக்கூடியது. பெண்கள் வன்முறையைக் கையிலேந்தாமல், ஒருநூற்றாண்டுக்குள் அவர்களால் எவ்வளவு சாதிக்க முடிந்தது என்பதைப் பற்றி இனிப் போராட்டங்களை நம்சூழலில் நடத்துபவர்கள் சிந்திக்கவேண்டும் என நண்பர்களிடையே விவாதித்திருக்கின்றோம். சிங்களப் பேரினவாதத்தின் 'தேசியம்' இருக்கும்வரை, தமிழ்த் தேசியம் எவ்வாறான நிலையில் என்றாலும் தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கும் என்பதை (தமிழ்த்தேசியம் எப்படி வெறியாக உருமாறியது/உருமாற்றப்படுகிறது என்பது இன்னொரு உரையாடலுக்கான புள்ளியென்றபோதும்) நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளக்கூடியதே. இனியான தமிழ்த்தேசியம் ஆகக்குறைந்து ஒடுக்கப்பட்டவர்களிலிருந்தும் பெண்ணியத்திற்குள்ளிலிருந்தும் எழுந்தாலன்றி அது இன்னொருவகையான குறுந்தேசியவாதமாக போகுமென்பதிலும் எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை.

இதை ஒருபுறம் வைத்துவிட்டு, இப்போது Thisuri Wanniarachchi தமிழ் மாணவர்க்கு என எழுதியதற்கு வருவோம். ஒரு பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவர், தன் privilege விளங்கிக்கொண்டவர் முதலில் 'அறிவுரை' கூறவேண்டிய இடம் தமிழ் மாணவர்களுக்கு அல்ல. தான் சார்ந்த தன்னைப் போன்ற privilege உள்ள தன் சமூகத்திற்கே அவர் முதலில் எழுதவேண்டும். அதையும் தவிர்த்து அவர் தமிழ் மக்கள்/மாணவர் மீதான அக்கறையில் எழுதுகின்றார் என்றே வைத்துக்கொள்வோம். நீங்கள் 'வரலாற்றை' எவ்வாறு privilege உடன் அல்லது அதை நீக்கம் செய்தா வாசிக்கின்றீர்கள் என்பதையும் நாங்கள் பார்க்கவேண்டியிருக்கிறது.

1983ல் தமிழர்கள் (புலிகள்) தாக்கியதிலிருந்துதான் அன்றிலிருந்து 30 வருடங்கள் நாடு போருக்குள் வீழ்ந்ததெனக் குறிப்பிடுகின்றீர்கள். புலிகள் இராணுவத்தைத்தான் தாக்கினார்கள். அதற்காய் 1983ல் அப்பாவி/நிராதயுதபாணியான மக்களையெல்லாம் கொல்லத்தொடங்கியது ஏனென்று கேள்விகள் கேட்பதிலிருந்தே நாம் உரையாடல்களை ஆரம்பிக்கவேண்டும். இதைக்கூட ஒரு வன்முறைக்கான வித்து (புலிகள்) இட்டதால்தான் கலவரம் தொடங்கியதென ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். புலிகள் 1983ல் தாக்கமுன்னர், 1956 தனிச்சிங்களச் சட்டத்துடன் 1983வரை நடந்த கலவரங்களில், யார் அங்கே 'வன்முறை'யாளர்களாய் இருந்தார்கள் என்பதை நீங்கள் கவனிக்காதுவிடும்போதுதான் உங்களின் privilege இருந்து நீங்கள் இன்னமும் வெளியே வராது ஒடுக்கப்பட்டவர்களுக்கு 'அறிவுரை' கூற ஓடிவந்துவிடுகின்றீர்களே என்ற சந்தேகம் வருகிறது.

இப்போதும் தமிழர்களே 'வன்முறையாளர்களாய்' ஆகாதீர்களெனத்தான் கூற வருகின்றீர்களே தவிர வன்முறையின் ஊற்றுக்கள் எங்கே தொடங்குகின்றதெனக் கவனிக்கத் தவறுகின்றீர்கள் என்பதில்தான் எமக்குச் சோர்வு வருகிறது. ஏன் இந்தளவு போர் அழிவின்பின்னாலும், எல்லாவகையிலும் ஒடுக்கப்பட்டபின்னும் தமிழர்களிடையே 'வன்முறை' உணர்வு இருக்கிறதென்பதை நீங்கள் யோசிக்கவேண்டும். நீங்கள் இப்போதும் சிங்களச் சமூகத்தில் பெரிதாய் எதுவுமே மாறவில்லை என்று குறிப்பிட்டு, அவர்களும் வன்முறையாகத் திரும்பித் தாக்கினால் என்னவாகும் என எங்களிடம் கேட்கின்றீர்களே தவிர, பெரும்பான்மைச் சமூகத்திற்கு முதலில் 'அறிவுரை' கூறிவிட்டுத்தான் தமிழ் மாணவர்களிடம் இதைக் கூறுகின்றேன் எனச் சொல்வதற்கான எந்த அடையாளத்தையும் என்னால் காணமுடியவில்லை.

அதை விட இதை எப்படி மன்னிப்பும் கேட்டுக்கொண்டு உங்களிடம் இப்படி எழுதமுடிகிறதெனவும் யோசிக்கிறேன்.
"But at the end of the day we are both Sri Lankan and we cannot let our parents’ and grandparents’ generation’s mistakes belittle the future we have to rebuild."
இதை எப்படி சொல்கின்றீர்கள் என்பதும் விளங்கவில்லை. நாங்கள் சிங்களவர்கள், நீங்கள் தமிழர்கள் என்ற வித்தியாசங்களின் அடிப்படையில் ஒரு நாட்டில் வசிப்பவர்கள் என்று கூறுவீர்களென்றால் ஏற்றுக்கொள்ளலாம். நாம் இலங்கையர் என்று எந்தச் சந்தர்ப்பத்திலும் எம்மை உணரவைக்காதபடி, நீங்கள் 'இலங்கையர்' என்ற ஒருகுடைக்குள் தமிழர்களையும் இணையும்படி கேட்பது மிகுந்த வன்முறையல்லவா? ஒரு அரசியல்வாதி சொல்வது என்றால் கூடச் சகிக்கமுடியும். உங்களின் privilege உணர்ந்தபடி தமிழர்கள் மீது அக்கறையுள்ளவர் எனச் சொல்கின்றவர் இப்படி எப்படிச் சொல்லமுடிகிறதென வியக்கத்தான் முடிகிறது.

உங்களின் தமிழ்மாணவர் பற்றிய அக்கறை மீதோ அல்லது வன்முறையை எந்தவகையிலும் நியாயப்படுத்தக் கூடாது என்பதிலும் உங்களைப் போலவே எமக்கும் ஒத்த கருத்தேயுண்டு. ஆனால் அது நீங்கள் எழுதிய இந்தக் கட்டுரையில் தெளிவாக வெளிப்படவில்லை என்பதே என்னைப் போன்றவர்களின் வருத்தம்.

வன்முறை வேண்டாம் என்று இங்கே போதிக்கும் உங்களை விட எங்களுக்கு வன்முறையின் சகல வடிவங்களும் நன்கு தெரியும். அந்த 'வன்முறை'யினால் சமூகத்தில் எந்த கீழ்நிலைக்கும் போகமுடியும் என்று கடந்தகாலத்தில் நன்குணர்ந்த ஒரு சமூகம், ஏன் இன்னும் அந்த 'வன்முறை'யைக் கைவிடத் தயாராகவில்லை என்பதை நீங்கள் சற்று ஆழமாக யோசிக்கவேண்டும். அதே சமூகந்தான் ஒரேநாட்டில் வாழ்ந்தாலும் தமிழர் என்ற தனித்துவமான அடையாளத்தோடு வாழவிரும்புகின்றதே தவிர, இலங்கையர் என்ற அடையாளத்தில் சேர ஏன் விரும்புவதில்லை என்பது பற்றியும் ஒரு பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த, அதன் privilege உணர்ந்த நீங்கள் நிதானமாக யோசித்துப் பார்க்கவேண்டும்.

( July 19)

'களி' மற்றும் 'உத்த பஞ்சாப்'

Tuesday, August 30, 2016


Kali (மலையாளம்)

சடுதியாக வந்துவிடும் கோபந்தான் முக்கிய பேசுபொருள் என்றாலும், படம் வெவ்வேறு புள்ளிகளில் ஓரிடமில்லாது அலைந்தபடியே இருக்கிறது. எந்த வகையான கோபம் என்றாலும் அது உறவை/பிறதைப் பாதிக்கும் என்பதை இன்னும் ஆழமாய்க் கொண்டுசெல்லக்கூடியதை , பின்பாதியில் அதிக நேரத்தை தேவையேயில்லாததில் மினக்கெடுத்தி விடுகின்றனர். கோபத்தின் விளைவுகளை அவதானித்தபடி அதை மீறி நேசிக்கும் ஒரு பெண், தன் கோபத்தால் அவளை எந்தப் பொழுதிலும் இழக்கலாம் என்ற பதற்றங்கள் இருக்கும் ஒரு ஆண், அந்தப் புள்ளியில் தொடர்ச்சியாகப் பயணித்திருந்தால் மறக்கமுடியாத ஒரு திரைப்படமாக இது மாறியிருக்கும்.

இடைவெளியின் பின் திணிக்கப்பட்ட ஒரு சம்பவத்தைச் சுற்றியே கதை ஓடிக்கொண்டிருப்பதால் எப்போது அந்தக்காட்சி முடிந்து அடுத்த காட்சி தொடங்கப்போகின்றதென்று என எண்ணுவதற்குள் படம் நிறைவடைந்துவிடுகின்றது. அதுவரை ஆண் கோபமடையும்போது உருவேற்றும் இசை , இப்போது பெண்ணுக்குள் ஒலிக்கத் தொடங்கிவிடுகின்றது. எது அவசியமற்றது, எதனால் ஒரு அழகான உறவு இழந்து போகப்போகின்றது என்ற அடிப்படையே மறந்து அந்தச் சடுதியாக வரும் கோபத்தையே நியாயப்படுத்துவதாகக் காட்டும்போது, இதற்காகவா இவ்வளவு நேரமும் அந்தப் புள்ளியில் ஒன்றிப் படத்தைப் பார்த்தோம் என்ற சலிப்பு வருகிறது. 'பிரேமம்' சாய் பல்லவிக்கு சிரிக்க வருகிறது,
எளிமையாகவும் அதிக அலங்காரமும் இல்லாதும் இருக்கிறார். ஆனால் 'பிரேமத்தில்' வந்த மடோனா செபஸ்டியான் நடிப்பில் 'காதலும் கடந்து போகுமில்' எளிதாய்க் கடந்துபோனதைப் போல, சாய் பல்லவி தாண்ட இன்னும் சில படங்கள் வேண்டியிருக்கும் போலத்தோன்றுகிறது.

'நீல ஆகாசம், பச்சைக்கடல் சுவர்ணபூமி' எடுத்த சமீர் தஹீரே இத்திரைப்படத்தையும் எடுத்திருக்கின்றார். அந்தப் படமும் சுவாரசியமாகத் தொடங்கி, பிறகு அதை எப்படித் தொடர்வது/முடிப்பது என்ற அதே சிக்கலே இந்தப் படத்திலும் நெறியாளர் முகங்கொடுக்க வேண்டியிருக்கின்றது. துல்காரின் கோபத்திற்கும் நேசத்திற்கும் மாறிமாறி அலைபாயும் பாத்திரத்தைப் பார்த்தபோது ஃபகத் ஃபாசில் நடித்த North 24 Kaatham நினைவிற்கு வந்தது. அதில் ஃபகத் ஃபாசிலின் பாத்திரம் அவ்வளவு எளிதில் எவரையும் கவர்ந்திழுக்காத ஒரு பாத்திரம். ஆனால் தன் நடிப்பின் மூலம் படம் முடிகின்றபோது நாயகியிற்கு மட்டுமில்லை நமக்கும் நெருக்கமான ஒரு பாத்திரமாய் ஃபகத் அதை மாற்றியிருப்பார். இங்கே துல்காரின் பாத்திரத்தோடு நம்மால் அவ்வளவு நெருக்கமாய் உணரமுடியாதது இன்னொரு பலவீனம் போலத்தெரிந்தது. எனினும் பிரேமத்தில் வந்ததைப் போலவே இதிலும் பருக்களோடும் சிரிப்போடும் இருக்கும் சாய் பல்லவிக்காய் வரும் இரசிகர்களுக்கு இந்தப்படம் பிடிக்கவும்கூடும்.


Udta Punjab (இந்தி)

பஞ்சாப்பில் ஒருகாலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய போதைமருந்துகளின் பாவனையை அப்படியே இயன்றளவு rawவாக தந்திருக்கின்றனர். அரசியல்வாதிகள், பொலிஸிலிருந்து எல்லோரும் அதற்கு உடந்தையாகி ஒரு தலைமுறையை பாழாக்கிக்கொண்டிருந்ததை, தம்மை, தமது குடும்பங்களை போதை தீண்டும்போது திகைக்கும் மனிதர்களை, மாற்றங்களுக்காய்ப் போராட விரும்பும் சிலரையென மிக தத்ரூபமாய்க் காட்சிகளில் கொண்டுவருகின்றனர்.

Highway படத்தைப் பார்த்தபோதே அலியா இன்னும் உயரங்களைத் தாண்டுவார் என நினைத்திருந்தேன். இந்தப் படத்தில் இன்னொரு காலடியை முன்நோக்கி வைத்திருக்கின்றார். இந்த வயதிலேயே அவர் ஏற்றிருக்கும் இந்தப் பாத்திரத்தை அவ்வளவு எளிதாய் எவராலும் நடிக்கமுடியாது. ஒரு பீகார் அகதியாக, வறுமை காரணமாய் பஞ்சாபிற்குள் தோட்டத்தில் வேலை செய்யவந்து தற்செயலாய் போதைப்பொருட்கள் கடத்துபவர்களின் வளையத்திற்குள் சிக்கி, அவர்களால் தனித்தும் கூட்டாகவும் பாலியல் வன்புணர்ச்சியிற்கு ஆளாகி, போதையிலிருந்து மீள்வேன் எனவும், எந்தப்பொழுதிலும் தற்கொலை செய்யமாட்டேனெனவும் உறுதியாக இருக்கும் அந்தப் பாத்திரத்தை நாம் நீண்டகாலத்திற்கு நினைவில் வைத்திருப்போம்.

இந்தப் படத்தை நான்கைந்து பஞ்சாபி நண்பர்களோடுதான் சேர்ந்து பார்த்தோம். பஞ்சாப்பில் இப்படியான நிலவரம் இருந்ததா எனக் கேட்டிருந்தேன். இந்தளவிற்கு முழுப்பகுதியிலும் இல்லாவிட்டாலும் இருந்தது உண்மை என்றனர். திரைப்படத்தின் முடிவு கூட அருமையாக இருக்கும். அடுத்த தலைமுறையின் ஒருவன் கையில் போதையினதும் கொலைகளினதும் கறைகளுடன் முன்னுக்கு நிற்கின்றான். ஆனால் அவனை மீண்டும் சமுகத்திற்குள் இணைத்த சிலர் அவனுக்காய்க் காவும் கொடுக்கப்பட்டிருக்கின்றனர்.

ஒரு தலைமுறையைக் காக்க/ விடுவிக்க நமக்குத் தெரியாத பலர் தம்மைப் பலிகொடுக்கின்றனர். அவர்களைப் பற்றிப் பெரிதாக நாம் அறிவதில்லை. ஆனால் அவர்களின் சாம்பல் மேடுகளிலிருந்தே நமக்கான நம்பிக்கையான வாழ்வொன்று முகிழ்கிறது.

(நன்றி: 'தீபம்)

அ.முத்துலிங்கத்திற்கான எதிர்வினை


நேற்று விகடனில் வந்திருந்த அ.முத்துலிங்கத்தின் ' வெள்ளிக்கிழமை இரவுகள் ' வாசித்திருந்தேன். அ.மு, ஈழப்பிரச்சினை குறித்து எழுதும் கதைகள் ஏன் தொடர்ந்து அபத்தமாய் இருக்கிறதென இன்னும் விளங்கவில்லை. ஒரு விடயத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்கள்தான் அவற்றையெல்லாம் எழுதவேண்டுமெனச் சொல்லப்போவதில்லை, ஆனால் அவை குறித்து அக்கறையும் அவதானமும் இல்லாது எழுதும்போது விசனமே வருகிறது.

இந்தக் கதை ஏற்கனவே அஷோக ஹந்தகமவின் 'இது எனது சந்திரன்' (This is my moon) என்று 2000ல் எடுக்கப்பட்ட திரைப்படத்தில் வந்துவிட்டது. என்ன அது உள்ளூரில் அனைத்தும் நடக்கிறது. இது உள்ளூரில் நடந்து, கனடாவிற்குப் புலம்பெயர்ந்து குழந்தையுடன் திரும்பிப்போய் ஒருவிதமான 'பழிவாங்குதலுடன்' முடிகிறது. அஷோக ஹந்தகம எனக்குப் பிடித்தமான படைப்பாளி என்றபோதும், எப்படி சிங்கள இராணுவமும், புத்தபிக்குவும் தமிழ்ப்பெண்ணை சிதைக்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்தினாலும், அதில் சிறுபான்மையினராகிய எம்மீதான ஒருவகையான exploitation இருக்கிறதெனவே அது கடந்தகாலத்தில் -இங்கு திரையிட்டபோதும்- விவாதித்திருக்கின்றோம், எழுதியிருக்கின்றோம்.

அ.முத்துலிங்கத்தின் கதை பாதியில் நகரும்போதே எனக்கு மிகுதிக்கதை விளங்கிவிட்டது. 1997ம் ஆண்டு ஜெயசுக்குறு சமயத்தில் மாங்குளத்தில் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்படுகின்றார். பிறகு 2010ல், சம்பவத்தில் யார் ஈடுபட்டார்கள் என்பதை அந்தத் தாக்குதலிற்குத் தலைமை தாங்கிய மேஜரின் பெயரை மட்டும் கூறியவுடன், அவருக்குக் கீழேயிருந்து பாலியல் வன்புணர்வு செய்தவரை எளிதாய் இந்தப் பெண்ணின் நண்பி கண்டுபிடித்துச் சொல்லி விடுகின்றாராம். இந்திய வாசகர்கள்தானே எதைக் கொடுத்தாலும் வாசித்துவிட்டு உள்ளொளி பெற்றுவிடுவார்கள் என்று நம்பிக்கை இருக்கலாம். நமக்குத்தானே இன்னும் இந்த தரிசனங்கள் நிகழ்ந்துவிடவில்லையே? எப்படி நம்மால் இதையெல்லாம் எளிதாய்க் கடந்துபோய் விடமுடியும். இடியப்பதையே, இடி'யா'ப்பமாக அவர்களுக்காய் மாற்றி எழுதமுடிகின்றபோது இதெல்லாம் சிறு சம்பவங்கள்தானே என நகரச் சொல்கிறாரோ தெரியவில்லை.

தையில் இருக்கும் இப்படியான நெருடல்களையெல்லாம் விட்டுவிடலாம். கதை எந்த வகையிலுமே பாதிக்கவே இல்லை என்பதுதான் இங்கே சொல்ல வருகின்ற விடயம். பாலியல் வன்புணர்விற்குள்ளாகிய ஒரு பெண், அவ்வளவு எளிதாக எல்லாவற்றையும் மறந்துவிட்டு இப்படி பிள்ளை அப்பா யாரெனக் கேட்கிறது என்பதற்காக, பிள்ளைக்கு இலங்கையிற்குப் போய் அந்த 'அப்பா'வை அறிமுகப்படுத்துவாரா என்ன? அந்தப் பெண், பிள்ளை கேட்கிறார் என்பதற்காகத்தான் போகின்றார் என்றாலும் அவருக்குள் நிகழ்ந்த சம்பவம் குறித்து எத்தகைய கொந்தளிப்பாய் இருந்திருக்கும். அது குறித்து எதுவுமே இல்லாது -ஏதோ வெளிநாட்டிலிருந்து ஊரைப் பார்க்கப் போவது போல- அந்தப் பெண் வெளிக்கிட்டுப் போகின்றார். இப்படியெழுத அ.முவால் மட்டுந்தான் சாத்தியம்.

மேலும், இவ்வாறு பாலியல் வன்புணரப்பட்ட பெண் அவ்வளவு எளிதில் தனது பிள்ளைக்கு அந்தத் தகப்பனை அறிமுகப்படுத்துவாரா? தனது பிள்ளைக்கு எது நல்லதென ஒரு தாயிற்குத் தெரியாதா? அவ்வாறு பிள்ளையுடன் இருக்கும் தாய், உனது தந்தை இறந்துவிட்டார் என்று சொல்லக்கூடுமே தவிர, இப்படி ஓடிப்போய் தன்னைப் பாலியல் வன்புணர்ந்தவரை அறிமுகப்படுத்துவாரா என்பதை வாசிப்பவர்க்கு விட்டுவிடுகிறேன். இந்தப் பெண்பிள்ளை பிறகு வளர்ந்து இந்த உலகின் எல்லா அழுக்குகளையும் அறிந்தபின், ஏன் எனக்கு இப்படிப்பட்ட ஒருவரை அறிமுகப்படுத்தினாய் என தாயைக் காறி உமிழாதா?

மேலும், ஏதோ கனடாவில் gay/lesbian யாய் இருப்பவர்களின் பிள்ளைகளைக் கூட இலகுவில் ஏற்றுக்கொள்கிறார்கள், ஆனால் single motherன் பிள்ளைகளைத்தான் கேலி செய்கின்றனர் என்றவகையில் அ.மு எழுதுவதில் எந்தளவு யதார்த்தம் என்பது குறித்தும் யோசிக்கின்றேன். single motherன் பிள்ளைகளுக்கு அவர்களுக்குரிய சிக்கல்கள் இருந்தாலும் இங்கு பொதுச்சூழலில் அவர்களை ஒரளவு ஏற்றுக்கொள்ளும் நிலைமைகள் இருக்கின்றன. மேலும் இந்தப் பிள்ளையை அதிகம் நக்கல் செய்வதாகக் காட்டப்படுவது, gay coupleன் ஒரு பெடியனால். Homosexual இன்னமே பொதுச்சமூகத்தால் அவ்வளவு ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு சூழலில், ஒடுக்கப்பட்டிருக்கும் அவர்களின் குழந்தைகளை அவர்கள் இப்படி அவ்வளவு எளிதில் வளர்க்கமாட்டார்கள் என்பதோடு, ஏன் அவர்களின் பிள்ளையை இங்கே அ.மு முன்னிலைப்படுத்துகிறார் என்பதில் அ.முவின் தற்பால் அரசியல் தெரிகிறது எனச் சொல்லலாமோ என யோசிக்கிறேன்.
வேண்டுமெனில் இந்தக் கதையிற்காய் விகடன் வாசகர்கள் 'ஆஹா'வென்று உச்சுக்கொட்டக்கூடும். எனக்கென்றால் எரிச்சல் தான் வந்தது.

சிலவேளைகள் நம்மால் முழுதாய் உணர முடியாத விடயங்களை, சரியாக எழுத்தில் வைக்க முடியா கதைகளை எழுதாமல் விடுவதே மிகச் சிறந்த 'அறமாக' இருக்கும் எனவும் -கேட்கிறார்களோ இல்லையோ- சொல்லிவைப்போம்.

அ.யேசுராசாவின் 'நினைவுக்குறிப்புகள்'

Sunday, August 07, 2016

.யேசுராசாவின் 'நினைவுக்குறிப்புகளில் 15 கட்டுரைகள் இருக்கின்றன; அநேகமானவற்றை 'ஜீவநதி'யிலும், அ.யேசுராசாவின் முகநூலிலும் எழுதப்பட்டபோது வாசித்தபோதும், இன்னொருமுறை முழுதாகச் சேர்த்து வாசித்தபோதும் சுவாரசியம் குறையாமல் இருந்தது. அ.யேசுராசாவில் நமக்கு எத்தகைய விமர்சனம் இருந்தாலும், இந்தத் தொகுப்பை நிறைவு செய்யும்போது அவர் அறிமுகப்படுத்தும் விடயங்களுக்காய் ஏதோ ஒருவகையில் நாம் அவருக்கு நன்றியுடையவர்களாக மாறிவிடுவோம். இலக்கியவாதிகளையும், இலக்கிய நிகழ்வுகளையும், சினிமாக்களையும், ஓவியங்களையும் அ.யேசுராசா இதில் பேசுகின்றார் என்கின்றபோதும், அதனூடு ஒரு குறிப்பிட்ட காலத்தின் (1970/1980) சுவடுகளையும் நாம் இவற்றில் அடையாங்காணமுடியும்.

ஒரு கடற்றொழிலாளியின் மகனாக வறுமையான குடும்பத்தில் பிறந்து, விரும்பிய கல்வியைத் தொடரமுடியாது தொடக்கத்தில் மேசன் வேலையும், பின்னர் தபால் கந்தோரிலும் பணிபுரியும் அ.யேசுராசாவிடம் 'நிலவினில் பேசுவோம்' போல, 'நீங்கள் எப்படி ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கம் செய்யலாம்' எனவும் சிலர் கேட்கின்றனர். அதுபோலவே அவர் சேகரிக்கும் நூற்களையும், அதில் எவ்வளவு பிரியமுடையவராக இருக்கின்றார் என்றும் எழுதப்பட்ட கட்டுரை அற்புதமானது. ஒருவகையில் அ.யேசுராசாவின் நூல் பித்து எனக்கு ஃபோர்ஹேஸை நினைவுபடுத்திக் கொண்டிருந்தது. தனிமனிதர்களின் உறவை விட அவரின் புத்தகங்கள் மீதான நேசம் ஒருகட்டத்தில் எனக்கு அச்சமூட்டியதென்றாலும், புத்தகங்களின் மீதான தீரா வாஞ்சையும், அவையில்லாமல் ஒரு பொழுது விடிந்து முடியாதென நம்புகின்ற ஒருவனாக நானும் இருப்பதால் ஒருவகையில் யேசுராசாவைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஹாகவி, ஏ.ஜே, எஸ்.பொ போன்ற ஆளுமைகளில் மீது வைத்திருக்கும் மதிப்பை வெளிப்படுத்துகின்ற யேசுராசா, அவ்வளவு கவனிக்கப்படாத ஆனந்தமயில், செ.கதிர்காமநாதன் போன்றவர்களை மட்டுமின்றி, இலக்கியம் சாராத சாதாரணமனிதர்களைக் கூட அவர்களின் பங்களிப்புக்களுக்காய் நினைவுகூரவும் செய்கின்றார். அதேசமயம் டானியனில் படைப்புக்கள் மீது (முக்கியமாய் 'பஞ்சமர்') குறித்த தன் கறாரான பார்வையையும் முன்வைக்கின்றார். ஆனால் இன்று டானியலின் படைப்புக்கள் முழுதாய் வெளிவந்திருக்கின்ற/வாசிக்கப்படுகின்ற காலகட்டத்தில் டானியலை அவ்வளவு எளிதாய் அ.யேசுராசாவைப் போல புறந்தள்ள முடியுமா என்பதிலும் கேள்விகள் உள்ளன. அதேபோன்று கைலாசபதியினதோ, டொமினிக் ஜீவாவினதோ, மு.பொன்னம்பலத்தினதோ முரண்பாடுகளை இத்தொகுப்பில் சேர்க்காமல் விட்டிருக்கலாமோ எனவும் தோன்றியது. மேலும் அவர்கள் என்ன எழுதினார்கள்/ எந்த விமர்சனத்தை முன்வைத்தார்கள் என்பதை அறியாது ஏதோ இடைநடுவில் ஆதியும் அந்தமும் தெரியாது யேசுராசாவின் பதிவுகளை மட்டும் வாசிப்பதில் சிக்கல்களும் இருக்கின்றன. இத்தகைய விடயங்களுக்கு எதிர்வினையாற்றல் அவசியமென்கின்றபோதும் இத்தொகுப்பில் இதன் தேவை இல்லைபோலவே தோன்றியது. அதுபோலவே இதில் சேர்க்கப்பட்ட 15வது கட்டுரையும் எனலாம்.

இவை எல்லாவற்றிற்கும் அப்பால் அ.யேசுராசா அன்றைய காலத்திலிருந்து இன்றுவரை புதிது புதிதாய் அறிய விழைகின்றவராய், அவற்றைப் பகிரவிரும்புகின்றவராய் இருப்பதே என்னைப் பொறுத்தவரை கவர்கிறது. கட்டுரையிற்கான அவரின் கச்சிதமான மொழி நம்மை அலுப்பின்றி வாசிக்க வைக்கின்றது. பத்தி/கட்டுரைகளில் எழுதுவதில் ஆர்வமிருக்கும் என்னைப் போன்றவர்கள் அ.யேசுராசாவிடமிருந்து கற்றுக்கொள்ளவும், அவரின் அனுபவங்களினூடாக பயணிக்கவும் நிறைய உள்ளன. திரைப்படங்கள் பற்றிய ஒருகட்டுரையில் பிரசன்ன விதானகேயின் 'With you Without you' பிடித்தது பற்றியும், அஷோக ஹந்தகமவின் 'இனி-அவனில் இருக்கும் சிக்கலால் விலகிப்போனது பற்றியும் எழுதிய பார்வை எனக்கும் உவப்பானது.

அ.யேசுராசா என்ற ஆளுமை மீது நமக்கு வேறுபட்ட பார்வைகள் இருக்கலாம். ஆனால் அவர் நம்மோடு பகிர்வதற்கும் இன்னும் நிறைய விடயங்கள் இருக்கிறதெனவே நம்புகின்றேன். எதிலும் கறாரான பார்வையுடைய, எழுதும் மொழியின் கச்சிதம் அறிந்த, எதன் பொருட்டும் சமரசம் செய்யாத ஒருவராக அ.யேசுராசாவை அவரின் எழுத்தினூடும், அவரை அறிந்தவர்களினூடாகவும் அறிந்து வைத்திருக்கின்றேன். எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கியிருந்த அவர் 'ஜீவநதி'யில் எழுதத்தொடங்கியதிலிருந்து மீள வந்திருப்பதாய் இத்தொகுப்பின் முன்னுரையில் கூறுகின்றார். அவர் இன்னும் நிறைய எழுதவேண்டும். அவரின் எழுத்துக்களை இரசித்தும் முரண்பட்டும் செல்ல, என்னைப் போன்ற நிறையப் பேர் அவற்றை வாசிக்க ஆர்வத்துடன் இருப்பார்களெனவே நம்புகின்றேன்.

(நன்றி: 'தீபம்')

ட்றம்போ (Trumbo)

Friday, July 15, 2016

ழுத்தாளராகவும், கம்யூனிஸ்டாகவும் இருக்கும் ட்றம்போ ஒருகாலத்தில் ஹொலிவூட்டில் அதிகம் சம்பளம் பெறும் ஒரு திரைக்கதையாசிரியராகவும் இருந்திருக்கின்றார். 1940களில் உலகப்போர் மற்றும் சோவியத்து எழுச்சியின் நிமித்தம் அமெரிக்க அரசு பலரை ஹொலிவூட்டுக்குள்ளும், வெளியிலும் black listல் பட்டியலிடும்போது ட்றம்போவின் பெயரும் சேர்க்கப்படுகின்றது. ஹொலிவூட்டுக்குள்ளும் ட்றம்போ உட்பட பலர் 'இடதுசாரி நச்சுவிதை'களைக் கலக்கின்றார்கள் எனக் குற்றஞ்சாட்டப்படுகின்றனர். இதன் தொடர்ச்சியில் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் தங்களையும், பிறரையும் கம்யூனிஸ்டாக காட்டிக்கொடுக்காது ட்றம்போம் நண்பர்களும் இருந்தாலும் அதன் நிமித்தம் வழக்கில் தோற்கின்றனர். மேல் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிடும்போது பெருஞ்செலவும், தோல்வியும் அங்கும் ஏற்படுகின்றது. இதனால் ட்றம்போ கிட்டத்தட்ட ஒருவருடம் சிறைக்குள் இருக்கவேண்டிவருகின்றது.

'தண்டனைக்காலம்' முடிந்து வந்தபின் முன்னதைவிட இன்னும் தீவிரமாக திரைக்கதைகளை எழுதத் தொடங்குகின்றார். எனினும் கறுப்புபட்டியலில் அவர் பெயர் இருப்பதால் அவை 'அநாமதேயப் பெயர்களில் எழுதப்படுகின்றன. மிகவும் பிரபல்யம் பெற்ற படமான Roman Holiday யின் திரைக்கதை ட்றம்போவினால் எழுதப்பட்டாலும், ஒஸ்கார் விருது அதற்காய் கிடைக்கும்போது வேறொருவரே அந்தத் திரைக்கதையிற்காய் ட்றம்போவினால் முன்னிறுத்தப்படுகின்றார். இடையில் வெளிப்படையாக வேலை செய்யமுடியாததால், பிள்ளைகளை வளர்ப்பதிலும் சிக்கல்படுகின்றார். ஹொலிவூட் உலகைச் சேர்ந்த பலர் ட்றம்போ எந்தவகையிலும் நுழைந்துவிடக்கூடாது என்று (முக்கியமாய் ரொனால்ட் றீகன் போன்ற வலதுசாரிகள்) கவனமாய் இருக்கின்றார்கள்.
இவற்றையெல்லாம் மீறி மீண்டும் நாம் எழுவோமென ட்றம்போ நம்பிக்கைகொண்டாலும் அவரோடு தடை செய்யப்பட்ட நண்பர்களுக்கு அதில் நம்பிக்கை இருக்கவில்லை. 'நீ மீண்டும் ஹொலிவூட்டிற்கும் நுழைய விரும்புகின்றாய், ஆனால் நானோ மாற்றத்தை வேறுவகையில் கொண்டுவர விரும்புகின்றேன்' என நண்பரொருவர் ட்றம்போவோடு முரண்படுகின்றார். ஹொலிவூட்டிற்குள் நுழைவது முதலடி, அதிலிருந்து மாற்றங்களுக்காய் அங்கிருந்து போராடுவோம் என ட்றம்போ அந்த நண்பருடன் வாதிடுகின்றார்.

தொடர்ச்சியான உழைப்பில் கிட்டத்தட்ட 15 வருடங்களின் பின் முதன்முதலாக அநாமதேயப் பெயரின்றி ஸ்ரான்லி குப்ரிக் இயக்கிய Spartacusல் ட்றம்போவின் பெயர் திரையில் காண்பிக்கப்படுகின்றது. மேலும் Exodus கதையை திரைக்கதையாக்கிக் கொடுக்கும் ட்றம்போவை, அதன் நெறியாளர் ஊடகத்தில் வெளிப்படையாக ட்றம்போ தன்படத்தில் பணிபுரிகிறார் எனவும் அறிவிக்கின்றார்.

1960களில் மெல்ல மெல்லமாக கறுப்புப் பட்டியலில் இருந்து வெளியில் வருகின்றார் ட்றம்போ.  அவர் அவ்வாறு பொதுவெளிக்கு வருகின்ற சமயத்தில் கொடுக்கும் ஒரு நேர்காணலில் ஒஸ்கார் விருது கிடைத்தால் என்ன செய்வீர்களென்று வினாவப்படுகின்றார்; 'எனது மகள் 3 வயதில் இருக்கும்போது என்னை கறுப்புப் பட்டியலில் சேர்ந்துவிட்டார்கள். இப்போது அவளுக்கு 13 வயது. அவளையொத்த எல்லாக் குழந்தைகளிடம் அப்பா என்ன செய்கின்றார் எனக் கேட்கும்போது, சொல்வதற்கு எத்தனையோ விடயங்கள் இருக்கும். ஆனால் என் மகளிற்கு அப்படியான ஒரு நிலை இல்லை. நான் எதற்காய்க் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றேன் எனபதைக் கூட அவள் சரியாக அறியாள். அப்படி ஒரு பரிசு கிடைக்கும்போது அவளுக்கே அதைச் சமர்ப்பணம் செய்வேன்' என்கின்றார்.

இறுதியில் ஹொலிவூட்டாலும் ட்றம்போ அங்கீகரிக்கப்படுகின்றார். ஹொலிவூட் எழுத்தாளர்கள் கூடி  ஒரு நிகழ்வில் மதிப்பளிக்கப்படும்போது, 'இந்தக் கறுப்புப்பட்டியலால் என்னைப் போன்றவர்கள் எத்தனையோ இழந்துவிட்டோம். சிலர் தம் சொத்தை, வேறு சிலர் தமது துணைகளை, இன்னுஞ்சிலர் தற்கொலையும் செய்துமிருக்கின்றனர். அந்தளவிற்கு இது பயங்கரமானது. ஆனால் இப்போது நான் எவரையும் குற்றஞ்சாட்டப்போவதில்லை. நமக்கு இப்போது குணமடைதலே (healing) தேவையாக இருக்கின்றது. எனெனில் இங்கே நாயகர்களோ வில்லன்களோ என்று எவருமில்லை. நாமெல்லோரும் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டவர்கள் (victims)' என அழகாக உரையாற்றுகின்றார்.

ஓர் அசலான கம்யூனிஸ்ட், தனது நம்பிக்கைகளுக்காய் எதையும் இழக்கத் தயராக இருப்பான் என்பதோடு, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கூட பொது அநீதிகளாய்க் கருதி, எவரும் தன்பொருட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படக்கூடாது என்பதில் கவனமாயிருப்பான் என்பதற்கு ட்றம்போ போன்றோர் உதாரணம் மட்டுமில்லை இன்றைய உலகில் விதிவிலக்கானவர்களும் கூட.

(நன்றி: 'தீபம்')

எழுதித் தீராக் கதைகள்

Wednesday, July 13, 2016


செல்வம் அருளானந்தத்தின் 'எழுதித் தீராப்பக்கங்கள்'  கனடாவில் தாய்வீடு இதழில் தொடராக வந்திருந்தபோது பெரும்பாலும் வாசித்திருந்தேன். என்கின்றபோதும் நூலாகத் தொகுக்கப்பட்டபின், அவற்றை ஒன்றாக சேர்த்து வாசிப்பதென்பது வித்தியானமான ஓர் அனுபவம். பிரான்ஸிற்குச் சென்ற ஈழத்தமிழரின் முதற் தலைமுறை சந்தித்த அனுபவங்கள் இஃதென ஒருவகையில் எடுத்துக்கொள்ளலாம். 80களிலிருந்து 90வரையான காலப்பகுதியில் அநேக கதைகள் சொல்லப்படுகின்றன.

காலனித்துவத்தின் ஆதிக்கத்தால்,  ஈழத்தில் ஆங்கிலத்தை பலரால், ஏதோ ஒருவகையில் கற்கவோ வாசிக்கவோ முடிந்திருக்கின்றது. ஆனால் ஆங்கிலம் பேசாத ஜேர்மனி,பிரான்ஸ், சுவிஸிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களின் நிலை வேறுவகையானது. ஆகவேதான் முன்பொருமுறை (2009ல்) கனடாவில் நிகழ்ந்த பொ.கருணாகரமூர்த்தியின் நூல் வெளியீட்டுவிழாவில், புலம்பெயர்வைப் பொதுவாகப் பார்ப்பதில் ஆபத்துண்டு, அதிலும் வித்தியாசங்கள் இருக்கின்றன, அவற்றை நுட்பமாக அவதானிக்க வேண்டும் எனச் சொல்லியிருந்தேன்.கனடா போன்ற நாடுகளில் 'நாசூக்காய்' உள்ளொளிந்திருக்கும் இனத்துவேஷம் ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் மிக வெளிப்படையாகக் காட்டப்படும். ஆனால் அதற்கு அப்பாலும், பல்வேறு இனங்களில் புலம்பெயர்வை முன்வைத்துப் பார்க்கையில், ஈழத்தமிழர்கள் குறுகியகாலங்களில் புலம்பெயர்ந்ததேசங்களில் -அது நல்லதோ/கெட்டதோ- அடைந்த வளர்ச்சி ஒருவகையில் பிரமிப்பானது.

கனடாவில் கிழக்குப் பகுதியான நோவா ஸ்கோஷியாவிற்கு (ஐரோப்பாவை நெருங்கி நிற்கும் நிலப்பரப்பு)  சமீபத்தில் போனபோது, Canadian Museum of Immigration என்கின்ற குடிவரவாளர்க்கான மியூசியத்திற்குப் போயிருந்தேன். 'Pier 21' என முன்னொருகாலத்தில் அழைக்கப்பட்ட இந்த இடத்திலேயே வைத்தே கப்பலிலிருந்து பிறநாடுகளிலிருந்து வந்த குடிவரவாளர்கள்   வரவேற்கப்பட்டார்கள். உலகப்போர்க்காலங்களில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலிருந்து கனடாவிற்கு வந்திறங்கிய குடிவரவாளர்களையும், அவர்களை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல்களையும்  இங்கே ஆவணப்படுத்தியிருக்கின்றார்கள். இவ்வாறு குடிவரவாளர்களை ஏற்றுக்கொண்ட கனடாவிற்கு இன்னொரு முகமும் உண்டு. சீக்கிய மக்களை பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஏற்றிக்கொண்டு வந்த கப்பலைத் திருப்பியனுப்பியிருக்கின்றனர். திரும்பிப்போன குடிவரவாளர்களில் (கொமகட்டா மரு) ஒரு பகுதியினரை பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் வைத்துச் சுட்டுக்கொன்றது. மிகுதிப்பேரை சிறைகளில் அடைத்து சித்திரவதை செய்தது.அண்மையில்தான் தற்போதைய பிரதமரான ஜஸ்டின் ரூடோ அவ்வாறு திருப்பி அனுப்பியதற்காய் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டிருந்தார்.

இவ்வாறு ஆவணப்படுத்திய கப்பல்களையும், இன்னபிறவற்றையும் பார்த்துக்கொண்டு இருந்தபோது, ஈழத்தில் இறுதிப்போர் முடிந்தபின் இரண்டு கப்பல்களில் தப்பிவந்த ஈழத்தமிழர்களை கனடிய அரசு நடத்திய விதம் நினைவிற்கு வந்தது. அன்றைய காலங்களில் கனடாவில் எல்லாத்திசைகளிலிருந்தும் துவேஷமான குரல்கள் இந்த 'முறையற்ற அகதிகள்' திரும்பி அனுப்பப்பட வேண்டுமென்றே ஓங்கி ஒலித்திருந்தன. அப்படி வந்தவர்களை சிறைக்கைதிகளுக்கான செம்மஞ்சள்நிற ஆடைகள் அணிவித்து கையிலும் காலிலும் சங்கிலி மாட்டிச் சென்ற புகைப்படங்களை அவ்வளவு எளிதில் மறக்கவும் முடியாது.

இப்படி பூர்வீகமக்கள் வாழ்ந்த நிலத்திற்கு முன்னொருகாலத்தில் 'பேராசை'யிலும், பின்னர் பெருந்தொகையில் உலகப்போரின் நிமித்தமும் கப்பல்களில் வந்த புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, அருகிலிருந்த நண்பரிடம், ஈழ அகதிகள் கப்பலில் வந்தபோது கத்திப் பெருங்குரலெடுத்தவர்களை இந்த மியூசியத்திற்கு அழைத்துவந்து உங்களின் மூதாதையரும் எம்மைப்போலவே வந்தவர்கள் என தலையிலடித்து ஞாபகப்படுத்தவேண்டும் எனச் சொல்லிக்கொண்டிருந்தேன்.

பிரான்சில் முதன்முதலாக பலவற்றைக் கற்றுக்கொள்கின்ற செல்வத்தின் அனுபவங்களுக்கிடையில் தெறிக்கும் எள்ளலே இத்தொகுப்பின் ஒருவகையான தனித்துவம் என்பேன். எல்லோருக்கும் -அது முதல் தலைமுறையாக இருந்தாலென்ன, பிறகு வந்த தலைமுறைகளான என்னைப்போன்றவர்களாய் இருந்தாலென்ன- தனிப்பட்ட, வெவ்வேறு அனுபவங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை எழுத்தில் முன்வைத்து அதை வாசிக்கும்போது, நமக்குள் கடந்தகாலம் ஒரு நதி போலப் பெருக்கெடுத்துப் பாயச் செய்கின்றது. அந்த நதி கடலில் கலக்கும்முன் காணும் அனுபவங்களே முக்கியமானது போல, செல்வமும் தனிப்பட்ட மனிதர்களுக்குள்ளால் அன்றைய காலங்களைப் பதிவு செய்கின்றார்.

இந்நூலில் பதிவுசெய்யப்படுகின்ற பிரான்சுப் பெண்களைக் கண்டு சிலிர்த்தல், நிர்வாண விடுதிக்குச் செல்லல், வயது வந்தவர்க்கான படங்களைப் பார்த்தல், அறைகளிலிருந்து விடியவிடிய குடியும்/பேச்சுமாய்க் கழித்தல் என்பவற்றுக்கு அப்பால் என்னைக் கவர்ந்தவை, வேறு விடயங்களாய் இருந்தன. முக்கியமாய் அன்றைய போர்க்காலங்களில் எப்படி ஈழத்திலிருந்து செய்திகள் வருகின்றன என்பது ஓர் ஆவணமாய் எழுதித்தீராப் பக்கங்களில் இருக்கின்றன.

வாரங்களோ மாதங்களோ எடுத்துவரும் கடிதங்களிலேயே அனைத்து விடயங்களும் இருக்கின்றன. ஓரிடத்தில் இயக்கத்திற்குப் போன தம்பி இறந்தசெய்தியை மூன்றுவாரங்களின் பின் கண்டுகொள்ளும் ஒரு அண்ணனும் தம்பியும் சுவரில் தலையை இடிக்க என்ன நடந்ததென்று அறியாது ரூமில் இருந்த பிறர் திகைக்கின்றனர். இன்னொரு கதையில், தன் தாய் ஷெல்லடிபட்டிறந்ததை சில வாரங்களின் பின் அறியும் ஒருவன், பஸ்ஸில் விம்மிக்கொண்டு போவதைக் கதை சொல்லி காண்கின்றார். யாரோடும் தன் துயரைப் பகிரமுடியாத் துயரில் பஸ்சில் அலைந்துகொண்டிருக்கும் அவனை அரவணைத்து, ஒரு தேவாலயத்திற்குப்போய் காலமான தாயின் நினைவாக மெழுகுவர்த்தியை இருவருமாய்ச் சேர்ந்து கொளுத்துகின்றனர். நிறைய மனிதர்கள் அன்றைய காலத்தில் அகதி மனு நிராகரிக்கப்பட்டோ, புலம்பெயர் தேசத்தில் இருக்கமுடியாத அவதியிலோ ஈழத்திற்குத் திரும்பியும் போகின்றனர்.

இதையெல்லாவற்றையும் விட, 1983 ஆடிக்கலவரத்தின்போது பாரிஸ் நிகழ்ந்தவற்றை செல்வம் பதிவு செய்தவற்றையே முக்கியம் என்பேன். கொழும்பில் சிறைக்குள் தொடங்கிய படுகொலை நகரெங்கும் சூழ்ந்துகொள்ளும்போது, ஈழத்தமிழர்கள் பிரான்சிலிருக்கும் இலங்கைத் தூதராலாயகத்தின் முன் கூடுகின்றனர். இவ்வளவு தமிழர்கள் பிரான்ஸில் இருக்கின்றார்களா என கதைசொல்லி வியக்கின்றார். பிறருக்கு ஈழத்தில் நடக்கும் நிலையைச் சொல்ல மொழியோ/பதாதைகளோ/சுவரொட்டிகளோ இல்லாத காலம் அது.

அந்தக் கொந்தளிப்பின் நீட்சியில் பிரான்சில் தமிழர்கள் சிங்களவர்களைத் தாக்குகின்றனர். சிங்களவர்களும் திரும்பித் தாக்குகின்றனர். அன்றைய காலத்தில் மூன்று தமிழர்களும், இரண்டு சிங்களவர்களும் இந்தத்தாக்குதலில் நீட்சியில் கொல்லப்பட்டுமிருக்கின்றார்கள். எதையாவது செய்யவேண்டுமென துடிப்பில் ஜேர்மனியில் இருந்துகூட பிரான்சிற்கு சிலர் வருகின்றனர். சிங்களவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டுமென்ற கொதிப்பில் அவ்வாறு ஜேர்மனியில் இருந்து வந்த ஒருவன், இவர்கள் சமையலுக்கென வைத்திருந்த ஒரேயொரு கத்தியையும் எடுத்துக்கொண்டு இரவில் வெளியே போகின்றான். 'இலக்கியமும் அரசியலும் பேசிக்கொண்டிருந்த நீங்கள் வீட்டுக்குள் பதுங்கியிருக்க அதில் அக்கறையெதுவும் இல்லாத நாங்கள்தான் வெளியில் அடிபடுகிறோம்' என ஒருவன் கதைசொல்லிக்குச் சொல்கின்றான். அது எவ்வளவு உண்மையான வார்த்தைகள்.

இவ்வாறு ஜேர்மனியில் இருந்து சிங்களவரோடு அடிபடுவதற்காய் பிரான்ஸிற்கு வந்தவன் சில மாதங்களில் இந்தியாவிற்குப் போய் ஒரு இயக்கத்தில் சேர்கின்றான். அடுத்தவருடத்தில் அந்த இயக்கத்தின் உட்கொலையில் அவன் பலியும் கொடுக்கப்படுகின்றான். நமது போராட்டந்தான் எவ்வளவு சிக்கலானது. இவ்வாறு மக்களுக்கு எதையாவது செய்யப் புறப்பட்ட எத்தனை ஆன்மாக்கள் இடைநடுவில் ஏன் குழிதோண்டிப் புதைக்கப்பட்டன என நினைக்கையில் வெப்பியாரமே வருகின்றது.

அதேபோன்று ஒரு சிங்களவனைப் பிடித்துவைத்திருக்கின்றோம், என்ன செய்யலாமென ஒருவன் கேட்க, ரூமிலிருந்த ஒருவர் இந்தச் செய்கையினால், கோபத்தில் ஷேர்ட்டைக் கிழித்துவிட்டு, 'நான் தமிழனோ கொம்யூனிஸ்டோ இப்போதில்லை, முதலில் நானொரு மனுஷனடா' இப்படியொரு அக்கிரமத்தைச் செய்வதற்குப் பதிலாய் என்னைக் கத்தியால் குத்துங்கடா என தெருவில் வெறிபிடித்தபடி ஓடுகின்றார்.

இந்த நெகிழ்ச்சியான மனிதர்களை/இவ்வாறான சம்பவங்களை முப்பது ஆண்டுகளின் பின்னால் ஞாபகப்படுத்த நமக்கு ஆகக்குறைந்தது இந்த எழுத்துக்களாவது மிஞ்சியிருக்கிறதே என ஆறுதல் கொள்ளவேண்டியதுதான்.

('எழுதித் தீராப் பக்கங்கள்' - செல்வம் அருளானந்தம், 'தமிழினி' வெளியீடு)

(நன்றி: 'அம்ருதா' ஆடி இதழ்)

பயணக்குறிப்புகள் - 13 (Canada)

Tuesday, July 05, 2016

ஒன்ராறியோவிற்குள் பயணித்தல்

யணம் செய்தல் என்றவுடன் பலருக்குத் தொலைதூரங்களுக்குப் பயணிப்பதைப் பற்றிய ஒரு விம்பமே எழும். ஆனால் வீட்டை விட்டு வெளியேறிப்போகும் எந்தப் பாதையுமே அது  இதமான ஒரு மனோநிலையைத் தருமென்பதைப் பலர் மறந்துவிடுகின்றார்கள். ஒன்ராறியோ மாகாணத்தில் வசிக்கும் நமக்கு இன்னொரு நாட்டிற்கோ அல்லது இன்னொரு மாகாணத்திற்கோ சென்றால் மட்டுந்தான் நிறையப் புது இடங்களைப் பார்க்கலாம் என்கின்ற ஓர் எண்ணமுண்டு. அதில் ஒரளவு உண்மை இருந்தாலும் ஒன்ராறியோவிற்குள்ளே ஒரு நாளுக்குள்ளேயே பார்ப்பதற்கு நமக்கு நிறைய இடங்கள் உண்டென்பதைப் பலர் மறந்துவிடுகின்றோம்.

எல்லோருக்குந் தெரிந்த நயாகரா நீர்வீழ்ச்சி, சிஎன் ரவர் போன்ற சுற்றுலாப் பயணிகள் குவியும் இடங்களை இப்போதையிற்குத் தவிர்த்துவிடுவோம். ஒன்ராறியோவில் நிறைய வாவிகளும், சிறு நதிகளும், பார்க்குகளும்  இயற்கையுடன் இயைந்து களிக்கவும் நமக்காய்க் காத்திருக்கின்றன. பெரும்நகரங்களை நாம் தாண்டிச் சென்றவுடன் வரும் சிறு பட்டினங்கள் நமக்கு வித்தியாசமான அனுபவங்களைத் தரக்கூடும். அதிலும் ஓரிரு நாட்கள் அங்கே தங்கிவிட்டால் ஏதோ நீண்ட விடுமுறையில் இருப்பதுபோன்ற மனோநிலையை அந்தச் சூழல் நமக்குள் உருவாக்கிவிடவும் கூடும்.

ஒன்ராறியோவிற்குள் இருப்பதில் மிக அமைதியானதும், அழகானதுமான இடங்களில் ஒன்றாக Bruce Peninsula. இங்கே
நிறையத் தீவுகளையும், கப்பல் உடைவுகளையும்(ship wrecks), பூச்சாடி வடிவிலான )நிறையப் பாறைகளையும் (flower pot பார்க்க முடியும்.  அதன் தெற்குமுனையில் இருப்பது Tobermory. அங்கிருந்து ferry எடுத்து  சென்றால் நமக்கு இன்னும் வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கும்.. நெடுஞ்சாலை 06 முடியும் இடத்தில் இருக்கும் இச்சிறுநகரில் பிராண்ட் பெயர்களுள்ள  துரிதகதியுள்ள உணவுக்கடைகளையோ, பிற பெரும்கடைகளையோ காணமுடியாது . Ferry எடுத்துப்போய்த்தான் இந்த பூச்சாடி வடிவிலான பாறைகளைப் பார்க்கமுடியும். Hiking செய்வதற்கு நிறைய இடங்களுள்ள பிரதேசம்.. அண்மையில் Google Maps ஜிபிஎஸ்ஸை நம்பி ஒருவர் காரைத் தண்ணீருக்குள் விட்டது இங்கேதான் நிகழ்ந்தது. கனடாவில் இருப்பவர்கள் கோடைகாலத்தில் தவறவிடாது பார்க்கவேண்டிய ஓரிடம் இதுவென்பேன்.

இன்னும் மேலதிகமாய் நாட்கள் இருந்தால் Manitoulin Island சென்று பார்க்கலாம். இதுவரை அங்கு சென்றதில்லையெனினும் சென்றவர்களின் அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது மிக அமைதியான இடமென நினைக்கின்றேன். பூர்வீகக்குடிகள் பெரும்பான்மையாக இந்த நிலப்பரப்பில் வாழ்கிறார்கள் என்பதால் அவர்கள் இயற்கையோடு பின்னிப்பிணைந்து வாழும் வாழ்வை அறிவது புதிய அனுபவமாக நமக்கு இருக்கலாம்.

ரோபமோரியில் ஸ்நோகிளிங்கில் ஆர்வமுள்ளவர்க்கு அதைச் செய்வதற்கு ஏற்ற இடங்கள் இருக்கின்றன. மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பதற்கென படகுச் சவாரிகளும் அடிக்கடி போகின்றன. ரொறொண்டோவில் இருந்து போகின்றவர்களாயிருப்பின் போகும் வழியில் இருக்கும் சாபிள் கடற்கரையைத் (sauable beach) தவறவிடக்கூடாது என்பேன். ஒன்ராறியொவிற்குள் இருக்கும் நீண்டதூரம் வரை crystal clearயாய்ப் பார்க்கக்கூடிய அழகான கடற்கரைகளில் ஒன்றாகும். இந்த வழியெங்கும் தரித்து நிற்பதற்கான காம்பிங் இடங்களும்,  காட்டேஜ்களும் இருக்கின்றன. செலவு குறைத்து கவலைப்படுபவர்களுக்கு குறைந்த விலையில் தங்குமிடங்களைத் தர airbnbகளும்  இருக்கின்றன.

Bruce Peninsula போகும்போதோ அல்லது திரும்போதோ நெடுஞ்சாலை 06ல் இருந்து நெடுஞ்சாலை 21ஐ எடுத்து கியூரன் ஏரியின் கரையோரம் கீழே தெற்குப் பகுதியாக காரில் பயணித்தால் அழகான நக Goderich, Blue water beach போன்ற இடங்களைக் காணலாம். அங்கே பலருக்குப் பிடித்த ஜஸ்கிறிமைச் சிறு கடைகள் ஏதேனும் ஒன்றில் வாங்கி சுவைத்துக்கொண்டு, சூரிய அஸ்தமனத்தை இரசிக்கலாம். ஒரு பகல் பொழுதைக் கழிப்பதற்கு Macgregor, Pinery Provincial Parks இருப்பதைப் போகும் வழியில் காணலாம். அவ்வாறு சானியாவை  (sarnia) அடைந்துவிட்டால் கனடா-அமெரிக்க எல்லைகளைப் பிரிக்கும் பாலத்தைக் காணலாம். இவ்வாறான வேறு நகர்களுக்குப் போகும்போது எமக்கு ஏற்கனவே அறிமுகமான  கடைகளில் உணவருந்தாமல், அந்தந்த நகர்க்குரிய சாப்பாட்டுக்கடைகளில் சாப்பிடும்போது அந்த நகரை இன்னும் ஆழமாய் நினைவு வைத்துக்கொள்ளும் அனுபவங்களும் கிடைக்கலாம்.

இன்னும் தெற்கு நோக்கி காரில் நெடுஞ்சாலை 40ல் பயணித்தால் Point Pelee National park ற்குப் பயணிக்கலாம். அலைகள் மூர்க்கமாய் அடிக்கும் முடக்கில் இருந்துகொண்டு பறவைகளின் குரல்களைக் கேட்டு இரசிக்கமுடியும். இன்னும் இந்த அனுபவங்களின் மூழ்கவேண்டுமானால், படகில் போய் Point Pelee தீவைப் பார்க்கலாம். அவ்வாறே ஏரி Erieயோடு பயணித்தால் Long point, Turkey point போன்ற பார்க்குகளையும் தரிசிக்கவும், விரும்பினால் கூடாரம் அமைத்து தங்கவும் முடியும்.   Long pointல் ஒருவர் வைத்திருக்கும் சிறுகடையில்  உள்ளே குளிரும் வெளியும் சூடும் உள்ள ஐஸ்கிறிமும் அப்பிளும் கலந்து அப்பிள் பையைத் தவற விடக்கூடாது என்பேன்.

தொலைவாய் இருந்தாலென்ன, அருகில் இருந்தாலென்ன எந்தப் பயணமாயினும் நமக்கு வேறுபட்ட அனுபவங்களைத் தந்துவிடுகின்றன. புதிய நிலப்பரப்பை, கலாசாரங்களை, உணவுவகைகளை அறியும்போது நமது மனம் இன்னும் விசாலிக்கச் செய்கின்றன. நமது அன்றாட வாழ்க்கையிலிருந்து எழும் சலிப்புக்களுக்கும், சோர்வுகளுக்கும் அப்பால் நம் சிறகுகளை விரிக்க நமக்கு பயணங்கள் அவ்வப்போது அவசியமாகின்றன.

(நன்றி: 'தீபம்')