கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

திருமணம் செய்தவர்க்கான காதல் கவிதைகள்

Sunday, October 18, 2020

 -ஜோன் கென்னி

(தமிழாக்கம்: டிசே தமிழன்)


நீ அதற்கான மனோநிலையில் இருக்கின்றாயா?
………………………………….

நான் இருக்கின்றேன்.
பிள்ளைகளை நித்திரைக்கு அனுப்பு.
இலேசான ஓர் இரவுணவு.
குளியல்.
அவ்வளவு போதையேறாத குடி.
அத்துடன் வேறு எவருடனும் செய்வதைவிட உன்னோடு செய்ய விரும்பும் அந்த 'விடயம்'
படுக்கையில் சாய்ந்தபடி எங்களின் -போன்களைப் பார்ப்பது.



கூட்டுக் களியாட்டம்

-------------------

இலை உதிர்காலம்.
சாம்பல் முகில்களும், குளிரும்.
காற்றில் மரமெரியும் வாசம்.
முற்றத்தில் இலைகள்.


வரிசையாக உயர்ந்து நின்ற மரங்கள்
உதிர்த்த இலைகளைப் பையில் சேகரிப்பதற்காய்
நாங்கள் திரும்பவும் வெளியே போகத் தீர்மானித்தோம்.

நீ மிகு கவர்ச்சியான குரலில்,
"
குப்பை போடும் பைகள் முடிந்துவிட்டன."
தோள்களைக் குலுக்கிச் சொன்னதில் நான் பார்த்திருக்கக்கூடும்
உன் முலைகள் அசைவதை.


உன் மெல்லிய சுவட்டராலோ,
நீ வேலைக்கென அணியும் சேர்ட்டாலோ
உன் ரீ-சேர்ட்டாலோ
அவை மறைக்கப்படவில்லை அல்லவா

"
சரி, உள்ளே போகின்றேன்," நான் சொன்னேன்.

பிறகு, நாங்கள் மாட்டிறைச்சி சூப்பை சூடாக்கிக் குடித்தபின்
நீ படுக்கைக்குச் சென்றாய்,
நான் Jason Bourne  படத்தின் அரைவாசியைப் பார்த்தேன்.

நான் இதை கூட்டுக்களியாட்டம் எனச் சொன்னேனா?
மன்னிக்க, எனது மனம் அலைபாய்ந்திருக்கிறது.
முற்றத்து வேலையைத்தான் நான் அப்படிச் சொன்னேன்.


 

இது அதற்கான சரியான நேரந்தானா?
--------------------------------

போவதற்குத் தயாராக
கதவடியில் நின்றுகொண்டிருக்கின்றேன்,
காலால் தட்டுகிறேன்
(
நாங்கள் எனது சகோதரியின் எதிர்பாரா விருந்துக்கு தாமதமாகி இருக்கின்றோம்)
நான் திரும்பி உன்னைச் சமையலறையில் பார்க்கின்றேன்,
கோடை மாலையில் வாவியில் ஒரு மனிதன் தன் தூண்டிலை இயல்பாய்
நேர்ப்படுத்துவதுபோல (நீ)

அது தூண்டில் அல்ல.
நகம் வெட்டி
அத்துடன் நீ நகங்களை ஸிங்கிற்குள் வெட்டிக்கொண்டிருக்கின்றாய்.
நீ என்னை பார்த்து, சிலவேளை என் முகத்தில் தோன்றிய உணர்வாலோ என்னவோ
"
என்ன?" என்கிறாய்.

இதை எதற்கானதென்பதை நீ ஏற்கனவே விளங்காதுவிட்டிருந்தால்
என்னால் ஒருபோதுமே அதை விளங்கப்படுத்தவே முடியாது.




எப்போது உனது கிண்டிலை அணைப்பதற்குத் தீர்மானித்திருக்கின்றாய்?

--------------------------------

காதல் ஒளியென்று அவர்கள் சொல்கிறார்கள்.
நான் நினைக்கின்றேன் அது ஒளிதானென்று.
எனக்குச் சரியாகத் தெரியவில்லை.
நான் சுபாரு கார் விளம்பரத்தில் இதைக் கேட்டிருக்கலாம்.

முக்கியமான விடயம் என்னவென்றால் நானுனது ஒளியை இப்போது பார்க்கின்றேன்.
அதைப் பார்க்காமல் இருந்திருக்கலாமென்றும் விரும்பினேன்.
ஏனெனில் நான் மிகக் களைப்படைந்துவிட்டேன்.
எனக்கு இது ஒரு நீண்ட நாள்.
அத்துடன் நாளை விடிகாலையில் எழும்பவேண்டியும் இருக்கிறது.
இவை எல்லாவற்றையும் நீயும் அறிவாய்.

அவர்கள் சொல்லும் இன்னொரு விடயம்
ஒரு தங்கமீனைப் போல
ஒரு மனிதன் எதையாவது அறியும்போது, உடனேயே அதை மறந்தும் விடுகின்றான்,

தொந்தரவுக்குட்படும்போது நான் பெரூமூச்சின் பெருமூச்சை விடுகின்றேன்.
ஆனால் நீ இதைக் கேட்கவில்லை.
ஏனெனில் உனது காதுகளில் ஹெட்போன் .
புடீங்கில் மக்கள் நீச்சல் போடும் விடீயோவைப் போன்ற ஒன்றை நீ பார்த்துக்கொண்டிருக்க
நான் நினைத்தேன் நீ புத்தகம் வாசித்துக்கொண்டிருந்ததாய்.

சிலவேளை காதல் ஒளியைப் போல இருக்கலாம்.
அவ்வாறே அது மங்கியும் போகலாம்.
உண்மையா? குளியலறையில் இருந்து நீ பார்க்க, அது உன்னைக் கொல்லுமா,

..................................................


ஜோன் கென்னி, ப்ராக்ளின்- நியூயோர்க்கில் வசித்து வருகின்றார். இதுவரை இரண்டு நாவல்களையும், மூன்று கவிதைத் தொகுப்புக்களையும் வெளியிட்டிருக்கின்றார். இவருடைய கவிதைகள் மிகுந்த எள்ளல் தன்மையுடையவை. யதார்த்த வாழ்வின் நெருக்குவாரங்களையும், அதை நகைச்சுவையுடன் தாண்டிச் செல்வதுகின்ற தருணங்களையும் நேர்த்தியாகப் பதிவு செய்பவை இவரது எழுத்துக்கள்.


கவிதைத் தொகுப்புக்கள்:

திருமணம் செய்தவர்க்கான காதல் கவிதைகள்

குழந்தைகளுடன் உள்ளவர்க்கான காதல் கவிதைகள்

கவலையான மனிதர்க்கான காதல் கவிதைகள் 


(நன்றி: கனலி) 




திரைப்படங்கள்/ஆவணப்படம்

Saturday, October 17, 2020

Dolly kitty chamakte sitar



இன்றைய நவீன உலகில் பெண்களின் வாழ்க்கையை complex narratives ஆக இந்தத் திரைப்படம் சொல்வதால் பிடித்திருந்தது. இரண்டு பெண்களின் (கஸின்கள்) விருப்புக்களைதுயரங்களைபரிட்சார்த்த முயற்சிகளைதோல்விகளைதுயரங்களைசரிவுகளை மிக அழகாகத் திரையில் கொண்டுவருகின்றார்கள். பெண்களை அவ்வளவு எளிதாக ஒற்றைப்படையில் வைத்து விளங்க முடியாதென்பதை இந்தப் படம் எளிதாகப் புரியவைக்கின்றது. பெண்கள் பற்றி நாம் வைத்திருக்கும் விம்பங்களை/மிகை உணர்ச்சிகளை உடைத்துப் பார்க்க வைக்கின்றது.



இன்று திருமணம் செய்யாதிருப்பவர்க்கு ஒருவகை சிக்கல்/அழுத்தம் இருக்கின்றதென்றால்அதைவிட திருமணமானவர்க்கு மிகப்பெரும் அழுத்தங்கள் இருக்கின்றன. இன்றைய சமூக வலைத்தளங்கள்இன்னபிற விடயங்கள் மரபுசார்ந்த உறவுகளை மறுபரிசீலிக்கக் கோருகின்றது. எனக்குத் தெரிந்த சிறு உலகிற்குள்ளேயே திருமணமானவர்கள் அதைமீறிய உறவுகளுக்குப் போவதும்அது சார்ந்த சிக்கல்களுக்குள் அவதிப்படுவதையும் பல்வேறு வழிகளில் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்.



அதிலும் ஒரு முரண்நகை என்னவென்றால் நம்மைப் போன்ற ஆண்கள் இவ்வாறு திருமணத்தைத் தாண்டிய வேறு உறவுக்குப் போகும்போதுநமது துணைகள்/மனைவிகள் அவ்வாறு இருக்கக்கூடாதென்றும் ஏங்குபவர்களாக இருக்கின்றோம். ஆனால் இன்று எல்லோருக்கும் எதையும் செய்வதற்கான சுதந்திரமான வெளிகள் திறந்தே கிடக்கின்றன என்பதை நம்ப மறுக்கின்றோம். அது நம்மை இன்னுமின்னும் சிக்கல்களுக்குள்ளும்அழுத்தங்களுக்குள்ளும் அமிழ்த்திச் செல்கின்றது.



இந்தத் திரைப்படத்தில் பெண்களின் அகச்சிக்கல்கள்/ பாலியல் விருப்பங்கள்திருமணம்/காதல் உறவுகள் என்பதோடு Queer புள்ளிகளையும் தொட்டுச் செல்வதோடுஇந்தப் பெண்கள் மதக்கலாசார காவலர்களோடும் எவ்வாறு போராட வேண்டியிருக்கின்றதென்பதையும் சொல்வதால் தனித்து குடும்பம் என்ற அமைப்பைத் தாண்டி ஒரு அரசியல் படமாகவும் தன்னை இது மாற்றிக்கொள்கின்றது.

 

The social dilemma



கடந்த வாரம் The social dilemma ஆவணப்படத்தைப் பார்த்ததிலிருந்து என்னைச் சற்றுப் பரீட்சித்துப் பார்த்தேன். சமூகவலைத்தளங்களில் ஃபேஸ்புக்கில் மட்டுமே நிறைய நேரத்தைச் செலவழிப்பவன். ஒருகாலத்தில் Twitter இல் நான் எழுதும் பதிவுகளைப் பகிர்வேன். அங்கேயும் இப்போது இல்லை என்றளவுக்கு நேரம் குறைந்துவிட்டது. ஃபேஸ்புக் தவிர்த்து, instagram இல் கொஞ்சம் இப்போது உலாவுவேன். பயணங்களின் பொருட்டு பயணிப்பவர்களைப் பின் தொடர insta சென்றதால், அவர்களில் பலரும் ஏற்கனவே பதிந்ததையே ஒரு வட்டம் முடித்து, திரும்பவும் புதுப்பிப்பதால் அங்கும் பெரும் நாட்டமில்லை. எனவே என் சமூகவலைத்தள நேரம் என்பது அதிகம் ஃபேஸ்புக்கில் மட்டுமே. அதற்கும் தினம் ஒரு மணித்தியாலம் கழிப்பது என்ற 'அலாரத்தை' வைத்திருப்பேன் என்றாலும், அதை ஒரு கடும் வரைமுறையாக இதுவரை பின்பற்றியதில்லை.



Social dilemma பார்த்தவுடன் என்னை ஒரு மீளாய்வு செய்யச் சந்தர்ப்பம் கிடைத்தது. கிட்டத்தட்ட 6 நாள் பதிவு எதையும் பகிராமல் இருந்து பார்த்தேன். இந்த நாட்களில் 1 மணித்தியாலத்துக்குள் மட்டுமே ஃபேஸ்புக்கில் உலாவுவது என்பதிலும் கடுமையாக இருந்தேன். எனவே இயன்றளவு ஃபேஸ்புக் கணக்கை logout செய்துவிட்டே இருந்தேன். இதையேன் இவ்வளவு விரிவாகச் சொல்கின்றேன் என்றால் அது ஓர் ஆவணப்படமாக social dilemma ஒரு வலைக்குள் விழுகின்றேனா என என்னை உந்தித்தள்ளி அவதானிக்க வைத்தது என்பதைச் சுட்டுவதற்காகவாகும்.



இந்த ஆவணப்படத்தில், இன்றைய முக்கிய சமூகவலைத்தளங்களில் தொடக்கத்தில் பங்கேற்றியவர்களும், அதன் முக்கிய பொறுப்புக்களில் இருந்தவர்களும் பேசுகின்றார்கள். நாம் மட்டுமில்லை, நமது அடுத்த தலைமுறையையும் எப்படி சமூக வலைத்தளங்களுக்கு இரையாக்கிக் கொண்டிருக்கின்றோம் என்பதை பல்வேறு நிலைகளில் வைத்து இவர்கள் பேசுகின்றார்கள். நம்மால உருவாக்கப்பட்ட AI இப்போது நமது கைகளை மீறிப் போகும் ஆபத்தைப் பற்றியும் விவாதிக்கின்றார்கள்.



இதில் பேசும் எவரும் தொழில்நுட்பத்தை, அதன் வளர்ச்சியை பெருந்தவறெனச் சொல்லவில்லை, ஆனால் நம்மையறியாமலே நாம் மீளமுடியாத வலைக்குள் சிக்கியதன் ஆபத்தையே எச்சரிக்கின்றார்கள். இன்னும் 20 ஆண்டுகளில் நமது உலகம் எப்படி இருக்கும் என்பதைச் சிலர் இவற்றில் மாற்றங்கள் வருமென நம்பிக்கையுடன் சொன்னாலும், பலர் அவநம்பிக்கையுடனேயே பேசுகின்றார்கள்.




A star is born


1930களில் வந்த திரைப்படத்தின் தழுவல் இத்திரைப்படம் என்றாலும், நெகிழ்வூட்டும் தருணங்கள் இருப்பதால் பார்க்க அலுப்பூட்டவதில்லை. இதில் ஓரிடத்தில் இப்படித்தான் நடக்கும், முடிவு கூட இப்படித்தான் இருக்கும், ஆனால் நிறுத்தமுடியாது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றது என்று ஓர் உரையாடலில் சொல்லப்படும். பொதுவாக அன்றிலிருந்து இற்றைவரை இப்படி இசைத்துறைக்குள் இருப்பவரின் வாழ்க்கை உயர்ந்தும், நெகிழ்ந்தும், இறுதியில் துன்பியலாக முடிந்து போவதுண்டு. ஆண்கள் இப்படிப்பட்ட கலைஞர்களாக இருக்கும்போது பித்துப் பிடித்தலையாத இளம்பெண்கள் இருக்கின்றார்களா என்ன?



இந்தத் திரைப்படத்தில் வரும் ஆண் பாத்திரத்தைப் பார்க்கும்போது, சில வருடங்களுக்கு முன் Johnny Cash இன் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து வந்த Walk the line ம் ஏனோ நினைவுக்கு வந்தது. எனக்குப் பிடித்த Country/folk வகைமைக்கு வந்த திரைப்படம் என்பதால் அது எனக்கு மிக நெருக்கமான ஒன்று.

.......................................


மெக்ஸிக்கோ - கே.நல்லதம்பி

Monday, October 12, 2020

 “மெக்ஸிக்கோ” – இளங்கோ. சமீபத்தில் வெளியான இவரது நாவல். இவர் இலங்கைத் தமிழர். புலம் பெயர்ந்து கனடாவில் வசிக்கிறார். புதிய சூழ்நிலைக்குத் தங்களை நிலை நிறுத்திக்கொண்டு அடையாளப்படுத்திக்கொள்வது புலம்பெயர்ந்தவர்களின் இயல்பான தவிப்பு. அந்தத் தவிப்பின் பல அனுபவங்கள் இவர் கதைகளில் தெரிகிறது. ஒரு இளைஞன் தனது பயணங்களின் தேடலைச் சொல்லும் கதை.

இளைஞர்களைக் கவரும் கதை. “எதையோ மறக்கவோ அல்லது எதையோ புதிதாய் கண்டடையவோதான் பயணங்கள்” “எவ்வளவு காயங்கள் வாழ்வில் வந்தாலும், பெண்களில்லாத வாழ்வு சாத்தியப்படாது”. “காதல் அதிக வேலையில் துயரத்தைத்தான் தருகிறது என அறிந்தும் ஏன் அதைத் தேடித்தேடி அலைந்திருக்கிறேன்”. இதுபோல அங்கங்கே தெறிக்கும் வரிகள் படிப்பவர்களைக் கவருவதில் சந்தேகமில்லை.

இவருடைய “கள்ளி” என்ற சிறுகதையை 4 ஆண்டுகளுக்கு முன் கன்னடத்தில் “கந்த காமினி” என்ற தலைப்பில் மொழிபெயர்த்து “சகி” என்ற கன்னட இதழில் பிரசுரமாகி இருக்கிறது.

படியுங்கள் பிடிக்கும்.

டிஸ்கவரி புக் பேலஸ் - சென்னை ரூ. 200/-

(நன்றி: https://www.facebook.com/elanko.dse/posts/10158196956258186)

வேதாளம் சொன்ன கதை

Sunday, October 11, 2020

இன்றைய காலத்தில் நிறையக் குறுங்கதைகள் எழுதப்பட்டு வருகின்றன. ஆனால் யுவன் சந்திரசேகர் 'மணற்கேணி' என்று நூறு குறுங்கதைகளினால ஒரு புத்தகத்தை பல வருடங்களுக்கு முன்னரே எழுதியிருக்கின்றார். நான் வாசித்த யுவனின் நூல்களில் அதுவே எனக்கு நெருக்கமானது. ஒருவகையில் யுவன் குறுங்கதைகளாலேயே தனது நாவல்களை எழுதுகின்றவர் என்று கூடச் சொல்லலாம். அந்தவகையில் அண்மையில் வந்த 'வேதாளம் சொன்ன கதை' நாவல் கூட குறுங்கதைகளின் நெடுந்தொகுப்பு எனச் சொல்லிவிடலாம்.


யுவனின் படைப்புக்களில் வருகின்ற அதே குறிப்பிட்ட பாத்திரங்களே இங்கும் உலாகின்றன‌. கதைசொல்லியான கிருஷ்ணன் கூட அதே வங்கி வேலையிலிருந்து இங்கும் தப்பிவிடமுடியாது இருக்கின்றார். ஏற்கன‌வே தெரிந்த பாத்திரங்களைச் சந்திக்கும் சுவாரசியம் இருந்தாலும்,  வாசிப்பவருக்கு ஒருவித அயர்ச்சியை இந்தப் பின்னணியே தருவதாகவும் இருக்கின்றது. 


ஒருவகையில் கிருஷ்ணனின் வாழ்வில் நடந்தவை, அவர் சந்தித்த மனிதர்களில் வாழ்வில் நிகழ்ந்தவை என்பவற்றை கிருஷ்ணன் கிட்டத்தட்ட மறந்தேவிட்ட நிலையில் வேதாளம் நினைவுபடுத்துகின்ற நாவல் இதுவெனலாம். மதுரைக்கும் சென்னைக்கும் கதைகள் அலைபாய்கின்றன. சிலவேளைகளில் நாடு விட்டு நாடு பாய்ந்து ஐரோப்பாவின் வரலாற்றுக்குள்ளும் சற்று பரவிப் பார்க்கின்றது. இந்த நாவலின் நடுவில் கிருஷ்ணன் இளமையில் காதலித்த ஒரு உறவுக்காரப் பெண்ணுடனான நெருக்கம், அவரின் சுமுகமில்லாத்‌ திருமணம், அதன் நிமித்தம் அந்தப்பெண்ணின் இளவயது மரணம் என்பவை பேசப்படுகின்றது. அது எந்தவகையில் நாவலின் இறுதியில் இன்னொருவகையாகச் சொல்லப்படுகின்றது என்பதும் சுவாரசியமானது. 


இப்படி ஒரு நாவலை 400 பக்கங்களுக்கு நீட்டித்து எழுதவேண்டுமா என்று சற்று அலுப்பு எட்டிப் பார்க்கின்றது. அடிக்கடி வேதாளம் வருமா வராதா என யோசிப்பது, இந்தக் கதையை அரைகுறையில் எழுதிவைத்திருந்தேன் வாசித்துப் பாருங்களென வாசகருக்குத் தருவது, இது கதைதான் ஆனால் கதையில்லாது போல இருக்கிறது என்றெல்லாம் அளவுக்கதிகமாய் எழுதி வார்த்தைகளை விரயமாக்கியது போல வாசிக்கும்போது தோன்றியது. 


இன்றைய பின் அமைப்பியல்/ பின் நவீனத்துவ சூழல் புனைவுக்கான எல்லாச் சுதந்திரங்களை வழங்கும்போது, இந்த வடிவம்/கேள்விகள்/சந்தேகங்கள்/குலைத்துப்போடுதல்/பிரதி தன்னளவிலேயே தன்னை மூர்க்கமாய் நிராகரித்தல் என ஒரு பெரும் வெளி இருக்கின்றதுதான். ஆனால் அதை இவ்வளவு கால  எழுத்துலக அனுபவம் இருக்கும் யுவன் இன்னும் வேறுவிதமாய் நுட்பமாய்ப் பயன்படுத்தியிருக்கலாமோ என்றும் ஒரு எண்ணம் குறுக்கிட்டது. மற்றும்படி இன்றையகாலத்தில் தமிழ்ச்சூழல் யதார்த்தக் கதைசொல்லல்களுக்கு தன்னையே தாரை வார்த்துக் கொடுத்து விட்டவேளையில்  'வேதாளம் சொன்ன கதை' ஒருவகையில் வித்தியாசமான அனுபவத்தைத் தருகின்றது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

...........................

(July 30, 2020)


யசோதரை

Friday, October 09, 2020

னக்கொரு நண்பர் இருக்கின்றார். அவரோடு புத்தரைப் பற்றிப் பேசுகின்ற ஒவ்வொரு பொழுதும் 'யசோதரையை நள்ளிரவில் கைவிட்டுப்போன புத்தர் பற்றிப் பேசாதே' என்று என் வாயை அடைத்துவிடுவார். நானும் சும்மா இருப்பதில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் புத்தரைப் பேச்சின் சுவாரசியத்தில் புகுத்தி விடுவேன். புத்தரும் கள்ளர், உன்னைப் போன்ற எழுதுகின்றவர்களும் கள்ளங்கள் என்று கொதிப்பின் எல்லையில் நின்று பேசத்தொடங்குவார். என்னைப் போன்ற எழுதுகின்றவர்களில் பலர் ஏமாற்றுக்காரர்கள் என்பதில் மறுப்பேதுமில்லை, புத்தரை அப்படி எளிதில் முத்திரை குத்திவிடமுடியாது என்று மீண்டும் குறுக்கிடுவேன்.


புத்தரைப் பற்றியும் புத்தர் போதித்தவை பற்றியும் நிறைய நூல்கள் இருக்கின்றன. ஆனால் யசோதரையின் நோக்கில் நின்று ஏதேனும் புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றனவா எனத் தேடியபோதுதான் 'யசோதரை' என்ற இந்தப் புதினத்தை வந்தடைந்தேன். இது வோல்கா என்பவரால் சுந்தரத் தெலுங்கில் எழுதப்பட்டிருக்கின்றது. யசோதரையின் பார்வையில் புத்தர் விமர்சிக்கப்படுவார் என்ற என் எண்ணத்தை மாற்றி. இது யசோதரை எவ்வாறு புத்தர் நிர்வாணமடைவதற்கு உதவினார் என்பதைச் சொல்வதால் சற்று சுவாரசியமாக இருந்தது. தனக்கானதும், உலகிற்கானதுமான தேடலில் இருந்த புத்தர் திருமணத்தையே விரும்பாதவராக இருக்கும்போது, யசோதரையை ஒரு கட்டத்தில் சந்திக்கும்போது யசோதரையின் மீது புத்தருக்கு மையல் வருகின்றது. ஆனால் என்றோ ஒருநாள் எல்லாவற்றையும் துறந்துபோகும் மனோநிலையில் யசோதரையின் வாழ்வில் விளையாடக்கூடாது என்ற அக்கறையுடனும் புத்தர் இருப்பதை இந்தப் புதினம் கவனப்படுத்துகின்றது.

இதில் வரும் யசோதரை புத்தரின் தேடலை விளங்கிய ஒரு பெண்ணாக இருக்கின்றார். புத்தரும் யசோதரையும் நிறைய விவாதங்களைச் செய்பவர்களாக, புத்தர் பெண்கள் மீது மரபின் நீட்சியில் அவருக்குள் வைத்திருக்கும் எண்ணங்களை யசோதரை மாற்றுகின்றவராகவும் சித்தரிக்கப்படுகின்றார். புத்தரைத் துறவுக்குப் போக ஆயத்தப்படுகின்ற/அனுப்பிவைக்கின்ற துணிச்சலானராகவும் யசோதரை இங்கே இருக்கின்றார்.

ஒரு நாளைக் குறித்து, இந்த நள்ளிரவில் என்னை விட்டு விலகிப் போ, நீங்கும்போது எனக்குச் சொல்லவேண்டிய அவசியமும் இல்லை எனச் சொல்கின்ற யசோதரை பின்னர் தனது சித்தாத்தன் புத்தரான பிறகு இந்த நாவலில் சந்திப்பதில்லை. பரிநிரவணமடைந்த புத்தர் கபிலவஸ்துக்கு வரும்போது அவரைப் பார்க்க எல்லோரும் ஆவலுடன் இருக்கும் யசோதரை ஒருபோதும் புத்தரைப் போய்ச் சந்திக்காதவராகவே இருக்கின்றார் (சித்தார்த்தரைப் பற்றி எழுதப்பட்ட பிற நூல்களில் புத்தரான பிறகு யசோதரை அவரைச் சந்திப்பதான குறிப்புகள் இருப்பது வேறுவிடயம்).



தேசமயம் புத்தரின் வளர்ப்புத் தாயான கெளதமி, அவரின் வளர்ப்பு மகனான சித்தார்த்தனின் வழித்தடத்தைப் பின் தொடர்ந்து அவரின் மகனான ஆனந்தனும் சென்றுவிட, அவரின் கணவரான சுத்தோதனரும் இறந்துவிட, முதுமையில் எவருமில்லாத் தனிமையில் வாழ்வின் அர்த்தம் தேடித் துயருகின்றார். அப்போது யசோதரை கெளதமியை புத்தரின் சங்கத்தில் போய்ச் சேரச் சொல்கின்றார். அவர் அதில் சேர்வதன் மூலம் புத்தரின் சங்கம் பெண்களையும் முதன்முதலாக உள்ளெடுக்கும் என்று நம்பிக்கை கொள்கின்றார். இவ்வாறு புத்தரையும், அவரின் சங்கத்தையும் விளங்கிக்கொள்கின்ற யசோதரை வாழ்நாளில் ஒருபோதும் பின் புத்தரைச் சந்திப்பதேயில்லை. ஆனால் யசோதரை அவரின் நாட்டிலுள்ள ஒரு புத்தசங்கத்தில் சேர்ந்து நோயுற்ற மக்களுக்கு உதவி செய்யும் ஒரு பிக்குணியாக மாறி, அவரின் 78ஆம் வயதில் மரணமடைவதாக இந்தப் புதினம் முடிகின்றது. அந்த மரணம் ஒரு பரிநிர்வாணமடைந்த உயிரின் மரணம் என அறிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு சுவாரசியமாகச் சில மறுவாசிப்புக்கள் நிகழ்ந்தாலும், நாவல் மிகப் பலவீனமாக இருக்கின்றது. புத்தருக்கும், யசோதரைக்கும் இடையிலான உரையாடல்களைத் தவிர்த்து மிகுதி அனைத்துப் பகுதிகளும் சோர்வூட்டுகின்ற வேகத்தில் நகர்கின்றன. அன்றைய காலத்தில் பெண்களுக்கான வெளி சுருக்கப்பட்டிருப்பது புரிந்திருப்பினும், யசோதரையை இன்னும் சிறப்பான ஆளுமையாக நாவலிற்குள் கொண்டுவந்திருக்கலாம். சடங்குகள் சம்பிரதாயங்களை மறுக்கும்/வெறுக்கும் புத்தருக்கு யசோதரையைத் திருமணஞ்செய்யும்போது ஒரு சிக்கல் வருகின்றது. பிராமணர்களை கொண்டுசெய்யும் சடங்குக்கு புத்தர் எதிராக இருக்கின்றார். ஆனால் யசோதரையின் தகப்பன் ஒரு மரபுவாதி. இப்படிச் சடங்கில்லாது திருமணமே இல்லை எனச் சொல்லக்கூடியவர். அப்பிடிப் பிராமணர்கள் செய்யும் சடங்கு சம்பிரதாயங்களினால் முகத்தை இறுக்கமாக வைத்திருக்கும் புத்தரை, இதற்கும் நமக்கும் தொடர்பில்லை என இதை நகைச்சுவையாக எடுத்தால் நாம் எளிதாகக் கடக்கமுடியுமெனச் சொல்ல புத்தரும் யசோதரையும் அவற்றை நகைச்சுவையாக்கின்றனர். அப்போது நமக்குப் பிடிக்காதவை/வெறுப்பவை நிகழும்போது நாம் கடுமையாக எதிர்வினையாற்றத் தேவையில்லை, நாம் அதை எள்ளல் செய்து நகர்ந்தாலே போதும் நமது மனோநிலை காப்பாற்றப்படும் என்கின்ற உண்மையைப் புத்தர் அதன் மூலம் கண்டடைந்துகொள்கின்றார்.

இது தெலுங்கில் இருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டதாகத்தான் முன்னட்டை சொல்கின்றது. வாசித்து முடித்தபின், ஆங்கிலத்தில் வந்ததா வரவில்லையா எனத் தேடியபோது ஆங்கிலத்திலும் இந்த நாவல் இருப்பதை இணையம் சொல்கின்றது. இதைத் தமிழாக்கிய நாகலட்சுமி சண்முகத்திற்கு தெலுங்கு தெரிந்து நேரடியாக தமிழுக்கு மொழிபெயர்த்தாரா அல்லது ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தாரா தெரியவில்லை. ஆனால் புத்தரின் தேடல் என்பதற்கெல்லாம் ஆய்வு ஆய்வு என்று வரும்போது இன்னும் வார்த்தைகளைச் சரியாகப் பாவித்திருக்கலாம் என்று தோன்றியது. ஆங்கிலத்தில் (அல்லது தெலுங்கில்) researchஆ searchஆ quest ஆ பாவிக்கப்பட்டது தெரியவில்லை. புத்தர்- என்னைப்பற்றி இந்த, உலகைப் பற்றி ஆய்வுசெய்யப்போகின்றேன் என வரும்போதெல்லாம் புதினத்தோடு ஒட்டமுடியாத ஒரு நிலை வரச்செய்கின்றது. மற்றும்படி தமிழாக்கத்தில் பெரிய குறைகளில்லை. மூலநூலில் இருக்கும் சோர்வுதான் யசோதரையை, ஹெர்மன் ஹெஸேயின் 'சித்தார்த்தா'வுக்கு அண்மையாகக் கூட வைத்துப் பார்க்க முடியாத நிலையைத் தருகிறதுபோலத் தோன்றுகின்றது.

'யசோதரை'யை வாசிக்கத் தொடங்கியபோது புத்தருக்கு நிகராக யசோதரையும் கம்பீரமாக எழுந்து புத்தரினால் யசோதரை பாதிக்கப்படவில்லை என்று சொல்லி இந்த நூலை நண்பருக்கும் வாசிக்கக் கொடுக்கலாமென நினைத்திருந்தேன். ஆனால் இதை வாசித்துவிட்டு ஏற்கனவே யசோதராவின் வாழ்வை சீர்குலைத்தவர் புத்தர் என்றால், இப்போது வோல்கா என்ற பெண்ணின் மனவோட்டத்தையும் திசைமாற்றிய எழுத்தாளக் கூட்டமே என அவர் குரலை உயர்த்தினால் என்ன செய்வது என்று எண்ணவும் அச்சமாக இருக்கிறது. 'யசோதரை' என்ற நூலே வெளிவரவில்லை, நான் அதை வாசிக்கவே இல்லை என அவரிடம் மறைப்பதுதான் நல்லது!
............................

('யசோதரை' - வோல்கா (தெலுங்கு), தமிழில்: நாகலட்சுமி சண்முகம்)

-Aug 29, 2020-

வரலாற்றை வாசித்தல் ‍ 04

Thursday, October 08, 2020

சிங்களத்தீவினுக்கிடையில் யாரோ போட்டுவிட்ட பாலத்தை உடைப்போம்; நாமாய் நடந்துபோய் கைகுலுக்குவோம்!

.......................

புதிதாய்த் தொடங்கப்படும் எந்த விடயமாயினும் முடிவுக்கு வரத்தான் செய்யும். அந்த முடிவு எப்படிப்பட்டது என்று தெரியாது இருப்பதில்தான் ஒரு சுவாரசியம் இருக்கும். ஆனால் இது நன்றாக இருக்கிறதே இப்படியே நீடித்தால் நல்லமென ஒரு மனோநிலை வந்துவிட்டதால்தான் பிறகு முடியும்போது ஏமாற்றமாக இருக்கும். மேலும் நல்லதாய் இருக்கின்றதே என்பதற்காக தேவையில்லாது நீடித்துக்கொண்டிருப்பதில் ஏதும் பிரயோசனமில்லை.

இவ்வாறு ஏதும் புதிய விடயங்கள் தொடங்கும்போது வெளியாளாக நின்று வேடிக்கை பார்ப்பது இன்னும் சுவாரசியமானது. இன்றைக்கு உலகம் விரிந்துவிட்டாலும், நம்மை வீட்டுக்குள் சிறைக்காவல் வைத்திருக்கும் காலங்களில்கூட மெய்நிகர் கலந்துரையாடல்களில் கலந்துகொள்வதில்லை. எழுதுபவர்கள் எல்லாம் பேச்சாளர்களாக மாறினால் எழுத்துக்கு பிறகு என்ன மதிப்பு. எழுத்து வாசிப்பதினால் நிகழ்வதே தவிர எழுத்தாளர்களின் உரைகளைக் கேட்பதால் நிகழ்வதில்லை அல்லது ஆகக்குறைந்தது நான் அந்த வகையைச் சேர்ந்தவனல்ல என்று சொல்லிக்கொள்ளலாம்.

பாடசாலை நண்பர்கள் சேர்ந்த ஒன்றிரண்டு கலந்துரையாடல்களில் கலந்துகொண்டதைத் தவிர இலக்கியம் சார்ந்து சில அழைப்பிதழ்கள் வந்தபோதும் தவிர்த்திருக்கின்றேன். இலக்கியம் என்பது அந்தரங்கமானது. ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேறு வித்தியாசமான அனுபவத்தைத் தரக்கூடியது. அதை ஒரு பொது அனுபவமாகப் பார்ப்பது கூட அவசியமற்றது. மற்றும்படி கொஞ்ச நண்பர்களாக சேர்ந்து இலக்கியம் சார்ந்து பகிர்ந்துகொள்வதில் எனக்குச் சிக்கலிப்பதிருப்பதில்லை. ஒருவர் மட்டும் பேசக் கேட்பதைவிட எல்லோரும் மாறி மாறி தங்கள் அனுபவங்களைப் பகிர்வது அழகானதுதான் அல்லவா?


ண்மையில் வரலாற்றுக்கு தொன்மங்கள் ஒரு பொருட்டே இல்லையென இராமாயணம், பாரதம் என்பவற்றை முன்வைத்து ஒரு பதிவை வாசித்தபோது 'வரலாற்றுக்கு வந்த சோதனை' என நினைத்துக்கொண்டேன். தொன்மங்களை விலத்திவிட்டால் வரலாற்றையே வாசிக்கவே முடியாது என்பது அறியாது எப்படி இப்படிப் பொதுவெளியில் எழுதித்தள்ளுகின்றனர் என நினைத்துக்கொண்டேன். பாரதம் போன்ற இதிகாசங்களுக்கு போன்றவற்றுக்கு எல்லாம் போகத்தேவையில்லை. நமது சிறுதெய்வங்களுக்கு போவோம். முக்கியமாய் குலதெய்வங்கள், வரலாற்றில் வாழ்ந்த மனிதர்களின் தொன்மங்கள். இன்றைக்கு நம் கண்முன்னே இந்தச் சிறுதெய்வங்கள் சமஸ்கிருதமயமாக்கப்பட்டு வரும்போது, இன்னும் கொஞ்சக்காலத்தில் அவர்கள் பெருங்கடவுளர்கள் ஆகிவிடுவர்,

கற்பனைகள் என்று பின்னொருகாலத்தில் இவற்றை முன்வைத்து ஒருவர் வரலாற்றை வாசித்தால் எவ்வளவு அபத்தமாக இருக்கும். தொன்மங்களில் கற்பனை, அதிபுனைவு, அதிகாரம் என்பவை அழுத்தமாய்ப் படிந்திருந்தாலும், எதுவும் நடக்காமல் தொன்மங்களாக்கப்படுவது அவ்வளவு சாத்தியமல்ல. இப்படியே தொன்மங்களை விலத்தி வரலாற்றை வாசித்தால், ஒருவகையில் இன்றைய மானுடவியல் கற்கைகளே இல்லையென்றே சொல்லிவிடலாம். இன்னும் கொஞ்சம் விரித்துப் பார்த்தால் அவ்வளவு வளமையான வாழ்விருந்த ஆபிரிக்க்காக் கண்டத்து மக்களுக்கு வரலாறே இல்லையென எளிதாக நிரூபித்துவிடலாம்.

இலக்கியத்தைப் போல வரலாற்றைக் கற்றுக்கொள்வதில் எனக்கு அவ்வளவு ஈடுபாடில்லை என்பதால் எனக்கு வரலாற்றறிவு குறைவு என்றாலும் இப்படி யாரேனும் தங்களை செயற்பாட்டாளர்களாக முன்னிறுத்தி சமூகமே கேள் என்று எழுதும்போது அலுப்பாக இருக்கிறது. சரி அதை இத்தோடு விடுவோம்.


ன்று காலை தற்செயலாக ஒரு சிங்கள நண்பரோடு கதைக்கும் சந்தர்ப்பம் வந்தது. அவர்கள் 'Aney' என்று கதைக்கத் தொடங்கும்போதே மனசு எவ்வளவு மலர்ந்துவிடுகிறது.அவரொரு எழுத்தாளர் என்பதால் வந்த நெருக்கம் அது. எனக்கு நிறைய தமிழ்ச்சொற்கள் தெரியுமே, உனக்குத் தெரிந்த சிங்களச் சொற்கள் சொல் என்றார். எனக்கு 'மம ஒயட்ட ஆதரே'யைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்று சொல்லிவிட்டேன். இப்படியே போன பேச்சில் மகாவம்சம் ஒரு இனத்துவேசப் பிரதி என்று அவரே பேசத்தொடங்கியதால் அவரோடு இன்னும் நெருக்கம் வந்தது. அதன் நீட்சியில் தமிழ்ப் பெளத்தம் பற்றிப் பேசத்தொடங்கினோம். அது பிறகு சிலப்பதிகாரம்/கண்ணகி என்று போனது.

சிங்களவர்களுக்கு கண்ணகி ஒரு முக்கிய பத்தினித் தெய்வம் என்பதை நாமனைவரும் அறிந்ததே. நான் கண்ணகியின் தமிழ் வடிவத்தைச் சொல்லும்போது, அவர் கண்ணகியின் ஒரு சிங்கள வடிவத்தைச் சொல்லத் தொடங்கியபோது வித்தியாசமாக இருந்தது. அவர்களிடம் இருக்கும் ஒரு கண்ணகிக் கதையின் வடிவத்தில், மதுராபுரிக்குப் போகும் கண்ணகி, இலங்கையின் வடக்குப் பிரதேசத்தில் வாழ்கின்றவர் எனச் சொல்லப்படுகின்றது. இலங்கையில் இருந்து மதுராபுரிக்குப் போகின்ற கண்ணகி, நமது சிலப்பதிகாரத்தைப் போல இறுதியில் சொர்க்கபுரியை அடைவதில்லை.

அவர் திரும்ப இலங்கையின் வடக்குக்கு வந்து தியானம் செய்து புத்தமதத்துக்கு மாறுகின்றார். அப்படியே அவர் தியானம் செய்யும்போதுதான் மணிமேகலை வந்து கண்ணகியைச் சந்திக்கின்றார் என்றொரு கதை தங்களிடையே இருக்கின்றதும் என்றார் நண்பர். அதாவது இலங்கையின் வடக்கைச் சேர்ந்த இந்துவான கண்ணகி பின்னர் இன்னொரு புத்தராக மாற விரும்பி தியானம் செய்கின்றார் என்பது ஒருவடிவம்.

இன்னொரு வடிவத்தில் கண்ணகி ஒரு கடவுள். அவர் கடவுளர்களின் விருப்பின் பூமியில் நிகழும் கலவரங்களை அடக்கப் பிறந்து தனக்கான கடமையைச் செய்துவிட்டு, மன்னனின் தோட்டத்தில் மாங்கனியாக மீண்டும் பிறந்து தனது பிறப்பைப் பூர்த்தி செய்வதாகவும் ஒரு கதை இருக்கிறது என்று சொல்லிவிட்டு, ஆனால் இது சற்று மிகைப்படுத்திய கதை என்றார். வரலாற்றைத் தெளிவாக வாசிக்கத் தெரிந்திருக்கின்றார். கொழும்புப் பகுதியில் இருக்கும் நவகமுவா என்ற கண்ணகி கோயில் பிரபல்யம் வாய்ந்தது என்றவர், எப்படி கொச்சிக்கடை தேவாலயம் பிள்ளை இல்லாதவர்க்கு குழந்தை வரம் கொடுக்கும் நம்பிக்கையைக் கொடுக்கிறதோ அதுபோல இந்தக் கண்ணகி கோயிலும் என்றார்.

எவ்வாறாயினும் கண்ணகி ஒரு இந்துவாக இருந்திருக்கின்றார் என்பதை சிங்களவர்களும் ஒப்புக்கொள்கின்றார். பின்னர் அவர் ஒரு பெளத்தராக மாறியிருக்கின்றார் என்பதையும் சொல்கின்றனர். இது ஏதோ ஒருவகையில் தங்களைப் போன்ற மூத்தகுடிகளாக இந்துக்களின் (அல்லது தமிழர்களின்) இருப்பை ஏதோ ஒருவகையில் சிங்களவர்கள் ஒப்புக்கொள்ளும் கட்டுடைப்புக்களை நாம் அவர்கள் வைத்திருக்கும் இந்தப் பிரதிகளைக் கொண்டே செய்யமுடியும். ஆனால் நாம் செய்வது என்ன ஒன்று அரசியல் சகதிக்குள் தொடர்ந்து புரண்டுகொண்டிருப்பது. அப்படிச் சகதிக்குள் புரண்டு அழகான ஒரு தாமரையைக் கொண்டுவந்தால் (இது இந்தியத் தாமரை அல்ல) கூட பரவாயில்லை. ஆனால் மேலும் மேலும் சகதியை அல்லவா கொண்டுவந்து சேர்ந்துக் கொண்டிருக்கின்றனர். இன்னொருபுறத்தில் கொஞ்சம் வாசித்தவர்கள்/செயற்பாட்டாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்க்குக் கூட எப்படி வரலாற்றை வாசிப்பது என்று சரியாகத் தெரியாது திணறுகின்றனர்.

இறுதியில் அந்தத் தோழி நமது தமிழ்க் கதைகள்/கவிதைகள் சிங்களத்தில் நிறைய மொழிபெயர்க்கப்படவேண்டும் என்று சொன்னார். உனது படைப்புக்களைச் சிங்களத்தில் மொழிபெயரேன் என்று ஒருவரின் தொடர்பையும் தந்தார். நானும் அவரின் தொகுப்பு அடுத்த வருடம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபின் ஆகக்குறைந்த சில படைப்புக்களையாவது தமிழாக்கி உங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்துகிறேன் என்றேன். கலைதான் வேறெதையும் விட நமது இனங்களுக்கிடையிலான வேறுபாடுகளை விலத்தி நல்லிணக்கத்தைக் கொண்டுவரும் என்பதைத் தீவிரமாக நம்பும் என்னைப் போன்ற இன்னொருவரைச் சந்ததித்து மகிழ்ச்சியாக இருந்தது.

வளங்கள் குறைவாக இருந்தாலும் அதை வெளிக்காட்டாது, இருப்பதைச் சரியாகப் பயன்படுத்தினால்தான் நம்மைப் பிறர் மதிப்பார்கள். என்னதான் நான் தமிழ் என்ற அடையாளத்தைக் கைவிடக்கூடாது என்ற பெருவிருப்பில் அவருக்கு 'மம ஓயட்ட ஆதாரே' எனச் சொல்லி கையசைத்தேன். ஏன் அவர் அவ்வளவு வெட்கத்துடன் விடைபெற்றார் என்பதுதான் இன்னும் புரியவில்லை.

......................
(Aug 22, 2020)