கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஹேஸேயின் சித்தார்த்தாவை மேபிள் மரத்தடியில் சந்தித்தல்..

Saturday, December 16, 2017

(பயணக்குறிப்புகள் - 17)

கோடையின் வெயில் மிதமாக இருந்தபொழுதில் நான் ஹேஸேயைத் தேடிப் போய்க்கொண்டிருந்தேன். பாதையோ ஏறியிறங்கியும் வளைந்தும் நதியொன்றை நோக்கி நீண்டபடியிருந்தது. கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன்னர் ஜேர்மன் மொழியில் எழுதப்பட்டுவிட்ட 'சித்தார்த்தா'வை, என்றோ ஒருநாள் வாசித்துவிட்டு இப்போது ஹேஸேயைத் தேடிப்போகும் மனதின் விந்தையை நினைந்து வியந்துகொண்டிருந்தேன்.

ஹேஸே ஒருவகையில் விசித்திரமான மனிதருங்கூட. ஒரு காலத்தில் நிறையப் பயணங்களைச் செய்துவிட்டு எல்லாப் பயணங்களையும் முற்றாக நிறுத்திவிட்டு இந்த ஊரில் ஒதுங்கிக்கொண்டவர். அவரின் பிரபல்யமான 'சித்தார்த்தா'வை இந்த வீட்டில் வசிக்கும்போதே எழுதி முடித்திருந்தார். பதின்மத்தில் உளவியல் சிக்கலுக்குள்ளாகி, பின்னர் குடும்ப வாழ்க்கையில் நுழைந்தபோது அது மேலும் தீவிரமாகி, மனைவி குழந்தைகளை விட்டு விலகி ஒதுங்கி வாழவேண்டிய நிலை ஹேஸேயிற்கு நிகழ்ந்திருக்கின்றது. இறுக்கமான கிறிஸ்தவமதப் பெற்றோருக்குப் பிறந்து, பெளத்த மதத்திற்குள்ளும், அதன் பாதிப்பில் இன்னொருகிளையாகி விரிந்து பரவிய தாவோயிசத்திற்குள்ளும் ஆழமாக நுழைந்து தனக்கான நிம்மதியைத் தேடியவர் அவர்.

நிறைய நாவல்கள், கட்டுரைகள் எழுதியதுபோல, இறுதிக்காலம் வரை, பல்லாயிரக்கணக்கானவர்கள் வாழ்க்கையில் தமது தேடல்கள் குறித்து சந்தேகங்களைக் கேட்டபோது, சலிக்காது பதில் கடிதங்களை எழுதிக்கொண்டிருந்த ஹேஸே சிறந்ததொரு ஓவியருமாவார். எப்போதும் தனிமையை விரும்பிய ஹேஸே ஒருகாலத்தில் ஓவியங்களை வரைவதிலும் நிறையப் பொழுதுகளைக் கழித்துமிருக்கின்றார்.

ஜேர்மனியில் பிறந்திருந்தாலும், அவரின் வாழ்வின் அதிக காலங்களை சுவிற்சிலாந்திலேயே வாழ்ந்திருக்கின்றார். ஹிட்லரின் கொடுங்காலத்தில் நாஸிகளால் சிறைபிடிக்கப்பட்ட மக்களுக்காய் சிறைச்சாலைக் கடிதங்களை எழுதியதோடல்லாது, அன்றைய நாஸிகளின் கொடுங்காலத்தில் இருந்து தப்பிவந்த தோமஸ் மான் போன்ற எழுத்தாளர்களுக்கும், அவரது இந்த இல்லத்தில் அடைக்கலமும் கொடுத்திருக்கின்றார்.

ஹேஸே வாழ்ந்த இந்த வீடு மூன்றடுக்குகளால் ஆனதெனினும், ஒவ்வொரு அடுக்கும் அகலத்தில் மிகச்
சிறியவை. மேல் அடுக்குகள் இரண்டிலும் சற்றுப் பெரிய கட்டிலைப் போட்டுவிட்டால் இடம் முழுதும் நிரப்பிவிடும் போன்றிருந்தது. இரண்டாம் அடுக்கில் ஹேஸே அன்றையகாலங்களில் பாவித்த அவரது தட்டெழுத்து இயந்திரம், பேனா, குடை, குளிரங்கி, தொப்பி, கண்ணாடி என நிறையப் பொருட்களை வைத்திருந்தனர். அதே அறையில் அவர் வரைந்த ஓவியங்களையும், அவற்றுக்காக அவர் பயன்படுத்திய வர்ணக்குப்பிகள் சிலவற்றையும் காட்சிப்படுத்தியிருந்தது அழகு. மேலும் ஹேஸேயின் நூல்களின், ஜேர்மனில் வந்த அன்றைய கால அட்டைகளையும், பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களின் முகப்போவியங்களையும் சட்டமிட்டு கொழுவியிருந்தனர்.

நான் யன்னலுக்கருகில் வைத்திருந்த ஹேஸேயின் தட்டெழுத்து இயந்திரத்தில் கைவைத்தபடி, அதற்கப்பால் கிளைகள் விரித்துச் சடைத்திருந்த மேப்பிள் மரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன், இந்த வாழ்க்கை என்றால் என்னவென கேள்விகள் வந்து என்னைப் பதற்றமடையவைக்கும் ஒவ்வொருபொழுதிலும் ஏதோ ஒருவகையில் வெளிப்பட்டுவிடும் 'சித்தார்த்தா'வை, ஹேஸே இப்படித்தானே ஏதோ ஓரிடத்தில் இருந்து எழுதிக்கொண்டிருந்திருப்பார் என்று நினைக்கவே மிகக் கதகதப்பாக இருந்தது. எழுத்துக்கள் ஊர்ந்துகொண்டிருப்பது போலவும், தன் தியானம் தோல்வியடைந்து, கெளதம புத்தரிடமும் நிம்மதி காணாது, திரும்பி வந்துகொண்டிருந்த சித்தார்த்தா அதன் வழியே நடந்துகொண்டிருப்பதாகவும் தோன்றியது.

மேலும், அவர் காதலென்றால் என்னவென அறிய 'தேவதாசி' கமலாவிடம் போவதும், கையில் ஒன்றுமேயில்லாது வருபவர்க்கு எதையும் கற்றுக்கொடுப்பதில்லையென கமலா மறுதலிப்பதையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

கமலாவிடம் நேசத்தைக் கற்றுவிட்டு, அவரையும் விலத்தி, தன்னைத் தேடிக்கொண்டிருந்த சித்தார்த்தாவிற்கு நதிக்கரையில் வாசுதேவா வாழ்க்கை எதுவெனக் கற்றுக்கொடுக்கின்றார். நிம்மதி வந்துவிட்டதென கொஞ்சம் பெருமூச்சை விடும்போது, கமலாவிற்கு தன்னால் ஒரு குழந்தை பிறந்திருப்பதையும், கமலாவின் மரணத்தின்பின் அவனை வளர்க்கவேண்டிய விருப்பும் ஏற்படுகின்றது. அவனும் ஒருநாள் தந்தையிடம் சொல்லாமல் ஓடிவிடுபவனாகவும், அவனைத் தேடி மீண்டும் சோகத்துடன் அலையும் சித்தார்த்தா ஹேஸேயின் விரல்களினூடாக எனக்குள் விரிந்துகொண்டிருந்தார்.

நீயொருநாள் உனது தந்தையைக் கைவிட்டு வாழ்க்கை எதுவென வீடு நீங்கித் தேடப்போனதுபோலத்தான், உன் மகனும் சென்றிருக்கின்றான், உன்னால் ஏன் இதைப் புரிந்துகொள்ளவில்லை என ஒரு குரல் கேட்க சித்தார்த்தா விழித்துக்கொள்கின்றார். சிறகு வளர்ந்த குஞ்சுகள் கூடு நீங்கி அகன்ற வானம் நோக்கிப் பறத்தல் அன்றோ இயல்பு? சித்தார்த்தா தனது நிர்வாணத்தை அடைய எத்தகைய நீண்ட பயணத்தை மேற்கொள்ளவேண்டியிருக்கின்றது. புத்தருக்கு ஒரு போதிமரம் என்றால், ஹேஸேயின் சித்தார்த்தாவிற்கு நதியெல்லோ கற்றுக்கொடுத்த குரு?

சித்தார்த்தாவுடன், இளவயதில் ஞானத்தைத் தேடக் கூடவே புறப்பட்ட கோவிந்தா இறுதியில் சித்தார்த்தாவைச் சந்திக்கின்றார். கோவிந்தா உரையாடும் ஒவ்வொரு விடயத்திற்கும் எதிர்நிலையில் நின்று சித்தார்த்தா உரையாடுவது தாவோயிசத்தின் யின்-யாங் என்று நான் விளங்கிக்கொண்டபோது, கோவிந்தனைத் தன் தலையில் கையை வைத்துப் பார்க்கும்படி சித்தார்த்தா கேட்கின்றார். உள்ளே உருளும் நூற்றுக்கணக்கான உலகை, கோவிந்தா நொடிப்பொழுதில் கண்டுகொள்கின்றார். ஆம், சித்தார்த்தா தன் நிர்வாணத்தை எப்போதோ அடைந்துவிட்டார். எனினும் சாதாரண மனிதர் போல நதியின் கரையின் வாழ்ந்துகொண்டிருந்தார்.

பிரிய ஹேஸே நீங்கள் சித்தார்த்தாவை எழுதியபோது நிச்சயம் நீங்கள் சித்தார்த்தாவின் உடலிற்குள் சுழன்றபடியிருந்த ஏதோ ஒரு விநோத உலகிற்குள்தான் இருந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால், இப்படி வாசிக்கும் எவரையும் ஒரு தீப்பிளம்பிற்குள் தள்ளிவிடும் எழுத்துமொழி எளிதாய் எவருக்குமே வாய்த்திருக்கச் சாத்தியமில்லை.

சித்தார்த்தா, 1922ல் ஜேர்மனில் எழுதப்பட்டுவிட்டாலும், சித்தார்த்தா அதன் பெறுமதியை இந்த உலகில் உடனடியாகப் பெற்றதில்லை. 50களில் ஒரு அலையென எல்லாவற்றையும் புரட்டிவிட்டுப் போன ஹிப்பிகளே 'சித்தார்த்தா'வைக் மீளக் கண்டெடுத்தார்கள். அதன் பின்னர் உலகெங்குமுள்ள பல்வேறு மொழிகளில் ஹெஸே மொழிபெயர்க்கப்பட்டும் விட்டார். அவருக்குக் கிடைத்த இலக்கியத்திற்கான நோபல் பரிசைவிட, அவர் எழுதிய சித்தார்த்தாவினால்தான் இன்றும் ஹேஸே மறக்கப்படமுடியாதவராக இருக்கின்றார்.

ஹெஸே தன் வாழ்வின் தேடியதை, இறுதியில் கண்டடைந்தாரா தெரியவில்லை. எண்பது வயதிற்கு மேலாய் வாழ்ந்த ஹேஸே, தன் தனிமையை எப்போதும் கைவிடாதவராகவே இருந்திருக்கின்றார். இயற்கையின் மீதிருந்த அளவற்ற காதலால், நதியும் மலையும் சேர்ந்த ஓரிடத்தின் அருகில் தனது இருப்பிடத்தையும் தேர்ந்தெடுத்தும் கொண்டார். ஒரு குறுகிய காலம் புத்தகக் கடையொன்றில் வேலை செய்தததைத் தவிர, மிகுதிக் காலம் முழுதும் வேறெந்த வேலையும் செய்யாது, ஒரு எழுத்தாளராகவே வாழ்ந்துமிருக்கின்றார்.

நான் இப்போது ஹேஸேயிடமிருந்து விடைபெறுகின்றேன். மரங்கள் சூழ்ந்த அந்த வீட்டின் வெளியே இதமான காற்று வீசுகின்றது. சித்தார்த்தா ஞானம் பெற்றபோது அவர் நுகர்ந்த முதல் வாசம் எதுவாக இருக்குமென யோசித்துப் பார்க்கின்றேன். முகம் மிக மலர்ந்த, மென் நீலநிற ஆடையணிந்த பெண்ணொருத்தி தன் குழந்தையுடன் கடந்துபோகின்றாள். இதுவரை பார்த்திராத ஒரு புதிய வர்ணத்தை அவள் எனக்காய் விட்டுச்செல்கின்றாள். அதுதான் சித்தார்த்தா வாழ்வு எதுவெனத் தேடி அலைந்து திரிந்தபோது, கூடவே அவரோடு துணையாகச் சென்றுகொண்டிருந்த வண்ணமாக இருந்திருக்கக்கூடுமோ?
-------------------------
(சுவிற்சிலாந்திலுள்ள Montagnola என்ற இடத்தில் ஹெர்மன் ஹேஸே வாழ்ந்த வீட்டைத் தரிசித்த அனுபவங்களின் குறிப்பு இது)

(நன்றி: 'அம்ருதா', மார்கழி-2017)

0 comments: