கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கருநீல தேவதையின் மச்சங்கள்

Monday, June 03, 2024


சில வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு பேச்சினிடையே நண்பன், 'திருமணமான ஆண்கள் இன்னொரு பெண்ணிடம் போய்விட்டு வரும்போது சிலவேளைகளில் அதை பெண்கள் ஏதோ ஒரு நிமித்தம் மன்னித்துக் கொள்கின்றார்கள். ஆனால் அப்படி திருமணமான பெண்கள் இன்னொரு ஆணிடம் போய்விட்டு வந்தால் எந்த ஆணாலும் அதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லையே, அது ஏன்?' எனக் கேட்டான். நான் இந்த ஆண்மைய சமூகம் இன்னபிற வரலாற்று/மானுடவியல் காரணிகளை முன்வைத்து விளக்க முயன்றேன். நண்பனோ, இவை ஒருபுறமிருக்கட்டும், ஆனால் இதிலுள்ளஆண்/பெண் சிந்தனை முறைகளைப் பற்றி யோசித்துப் பார்த்திருக்கின்றாயா என்றான்.  பெண்களைத் தமது  உடைமையாக்கும் ஆண்களின் சிந்தனைதான், ஒரு பெண் அப்படி இன்னொரு ஆணிடம் போய்விட்டு வந்தால் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது என்று சொன்னேன். இல்லை, ஆணுக்கு காதலையும் காமத்தையும் தன் வசதிக்கேற்ப பிரித்துப் பார்க்க முடியும். ஆனால் உறவிலிருக்கும் பெண், இன்னொரு ஆணைத் தேடிப்போனால் அவள் காமத்தால் மட்டுமே போவதில்லை; தனது காதலையும் சேர்த்துத்தான் அந்தக் காமத்தோடு கூட்டிச் செல்கின்றாள். அந்த விடயம் ஒன்றே ஆணால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாதிருக்கின்றது என்று சொன்னான்.

இந்தக் கருத்துக்குச் சமாந்தரமாக கே.ஆர்.மீராவின் 'தேவதையின் மச்சங்களில்' வரும் ஏஞ்சலா இருக்கின்றாள். குழந்தையுள்ள ஏஞ்சலாவுக்கு நரேந்திரன் என்கின்ற திருமணமான ஆணோடு உறவு ஏற்படுகின்றது. நரேந்திரன் ஏஞ்சலாவுக்காக தன் குடும்பம், குழந்தைகளை எல்லாம் விட்டு வந்துவிடத் தயாராக இருக்கின்றான். அப்போது ஒருகட்டத்தில் ஏஞ்சலா பெண்கள் காதலையும் காமத்தையும் ஒன்றாகவே கொண்டு வருகின்றார்கள், அதை ஆண்களைப் போலப் பிரித்துப் பார்ப்பதில்லை என்கின்றாள். அதுமட்டுமில்லாமல் நான் உன்னிடம் நிரந்தரமாக வந்துநாங்கள் இருவரும் திருமணமும் செய்துவிட்டால் நானும் உன் மனைவியைப் போல சலிப்பான இன்னொரு பெண்ணாகிவிடுவேன் என்கின்றாள்.

நாங்கள் இப்படியே இந்த இரகசிய உறவில் என்றும் இருப்போம் என்று கூட ஏஞ்சலா சொல்வதில்லை. நரேந்திரன் மூலம் ஒரு குழந்தை உருவானதும், அவனையும் தன்னைவிட்டு விலகிப் போகச் சொல்கின்றாள். அவள் மேலும் மேலும் புதிய உறவுகளைத் தேடிப் போகின்றாள். ஒருவகையில் ஏஞ்சலாவை ஏஞ்சலாவினால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். எவரையும் ஏமாற்றாமல், எவருக்கும் போலி வாக்குறுதிகள் கொடுக்காமல், தன்னியல்பிலே தனக்கான வாழ்வை தேர்ந்தெடுக்கின்ற ஏஞ்சலாவையும் இந்தச் சமூகம் சும்மா விடுவதில்லை. அதற்காக அவள் கொடுக்கும் விலை அவளின் உயிர். எல்லாக் காலத்திலும் ஆண்கள் தமது பலவீனங்களை மறைத்து 'ஆண்மை'யுள்ள உயிரிகளாகத் தம்மைப் பறைசாற்ற, பெண்களையே காவு கேட்கின்றார்கள்.


ன்று ஆண் என்கின்ற பாலினத்தில் அதிகாரம் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில், முற்றுமுழுதான ஒரு சுதந்திரமான பெண் எப்படியிருப்பாள் என்பதை ஆண்களாகிய நாம் கற்பனையே செய்து பார்த்திருக்கமாட்டோம்அப்படி தம்மைச் சுதந்திரமுள்ள பெண்ணாக, கற்பனை பண்ணுகின்ற பெண்களும் ஒருவகையான மட்டுப்படுத்தப்பட்ட எல்லைகளுக்குள்ளும், திணிக்கப்பட்ட கருத்தியல்களுக்கும் இடையில் இருந்தே அதை யோசிக்க வேண்டியிருக்கின்றது.. ஒரு காலத்தில் 'ஆணும்/பெண்ணும் சரிநிகர் சமானமாக வாழும்போது' எப்படி ஒரு பெண் சாதாரணமாய் இருக்கக்கூடும் என்பதற்கான சில புள்ளிகளை மீராவின் 'தேவதையின் மச்சங்களும்', 'கருநீலமும்' நமக்குக் காட்டுகின்றன.

இக்குறுநாவல்களில்
வரும் பெண்கள் இருவருமே அனைத்துவிதமான தளைகளுக்குள்ளும், அல்லாடல்களுக்குள்ளும் நடுவில் இருந்தபோதும் தமக்குப் பிடித்தமான ஒரு வாழ்வைத் தேர்ந்தெடுக்கின்றனர். நமது அம்மாக்கள்/சகோதரிகள்/காதலிகள், அவரவர் அவரவர்க்கு விரும்பிய வாழ்வுமுறைகளைத் தேர்ந்தெடுக்கவும், அவை குறித்து எவ்வித குற்றவுணர்ச்சியும் அடையாமலும் இருப்பார்கள் என்றால், எவ்வாறான வாழ்க்கையை அவர்கள் தெரிவு செய்வார்கள் என நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? அது நமது சிந்தனையின் எல்லைகளைத் தாண்டிய ஒரு வடிவில் இருக்குமென்பதால் நாம் அதை நினைத்துப்பார்க்கவே அச்சப்படுகின்றோம். ஆனால் என்றோ ஒரு காலம் பெண்களும் நம்மைப் போன்ற சரிநிகர் அதிகாரங்களோடு வாழ நேர்கின்றபோது ஆண்களாகிய நாம் இதுவரை கட்டிவைத்த எல்லா கோட்டைகளும், நுண்ணிய கண்காணிப்புக்களும் சிதறிப்போய்விடுவதை எவராலும் தடுத்துவிடவும் முடியாது.

'
தேவதையின் மச்ச'ங்களிலும், 'கருநீல'த்திலும் வருகின்ற பெண்கள் மட்டுமில்லை, மீராவின் மற்றைய புனைவுகளான'மீராசாது'விலோ, 'யூதாஸின் நற்செய்தி'யிலோ, 'அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நானி'லோ வரும் பெண்களும், அவர்களின் காதல்களும் சாதாரணமாக இருப்பதில்லை. நம்மால் புரிந்துகொள்ள முடியாத, பித்தேறிய/ உக்கிரமான காதல்களாக அவை இருக்கின்றன.

கே.ஆர்.மீரா ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சமகாலத்துப் பெண்களின் உறவுகளைப் பற்றி மட்டும் பேசவில்லை, இன்றைய ஆண்களால் கற்பனையே செய்ய முடியாத நாளைய‌ பெண்களின் காதல்களையும் தனது எழுத்தில் வரைந்து பார்க்கின்றார். இன்றைக்கு அவை விதிவிலக்குகளாக இருந்தாலும், நாளை பெண்கள் தமக்கானதை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் காலம் வரும்போது இந்தப் பெண் பாத்திரங்கள் பொதுத்தன்மையுடையதாக ஆகிவிடக்கூடும். அதுவரைக்கும் தம் தெரிவுகளில் தெளிவுடைய இவ்வாறான உக்கிரமான பெண்களை இன்னும் அவ்வளவாகச் சந்திக்கவில்லை என்று வேண்டுமானால் நாங்கள் கொஞ்சம் பெருமூச்சு விட்டு 'ஆசுவாசபட்டு'க் கொள்ளலாம். ஆனால் கருநீல தேவதையின் மச்சங்களுள்ள பெண்களைச் சந்திக்கும் காலம் நமக்கு அவ்வளவு வெகு தொலைவிலும் இல்லை.

*********

தேவதையின் மச்சம்/ கருநீலம் ‍ கே.ஆர்.மீரா (தமிழில் மோ.செந்தில்குமார்)

Feb, 2024)

0 comments: