அன்பு இளங்கோ,
இந்தப் பதிவு மிகவும் நேர்த்தியாகவும், பொறுப்பாகவும், மிகக் கவனமாகவும், மிதமாகவும் எழுதப்பட்டிருக்கிறது இளங்கோ. அப்படி எழுதப்பட்டிருந்தாலும், இது சொல்லும் வரலாறு திடுக்கிடலையும், துக்கத்தையும், ஆற்றாமையையும் ஏற்படுத்துகிறது. இப்படி ஒரு வன்முறையான வரலாற்றுக்கு உள்ளான ஒரு ஆள், எந்த மிகை உணர்வுக்கும் ஆளாகாமல், அல்லது அவற்றிலிருந்து தள்ளி நின்று கொண்டு, உண்மைச் சம்பவங்களை திரும்பிப் பார்த்து, அதை இப்படி எழுத முடிவதே எனக்கு ஆச்சரியத்தையும் ஆறுதலையும் கொடுக்கிறது. நீங்கள் உங்கள் நண்பர்களிடம், இலங்கைப் பின்புலம் கொண்ட அனுபவப் படைப்புகளை அனுப்புமாறும், அதைத் திரட்டி நீங்கள் தொகுப்பொன்று போட எண்ணமிட்டிருப்பதாகவும் முன்பு உங்கள் பக்கத்தில் படித்த நினைவு. நான் சரியாகத்தான் புரிந்து கொண்டிருக்கிறேனா? சரி என்றால் அந்த முயற்சி என்ன ஆயிற்று?
இந்திய ராணுவம் என்றில்லை, எந்த ராணுவத்தின் / மன்னர்களின் வெற்றிக் கதைகளை நான் கேள்விப்படும்போதும், அதற்கு எதிரில் நின்றவரின் உணர்வுகள் எப்படியாக இருந்திருக்கும், அவர்களின் வரலாறுகளில் அது என்னவென்று எழுதப் பட்டிருக்கும் என்று எண்ணிப்பார்ப்பது உண்டு. சமகாலத்தில் நடக்கும் பல வன்முறைகளுக்கும், முன்பு நடந்த வன்முறைகளுக்கும், நாங்கள் வரலாற்றை சமன் செய்கிறோம் என்ற ஒரு நியாயம் முன் வைக்கப் படுகிறது. 'Information is Wealth' என்று சொல்வார்கள், ஆனால் மனிதர்கள் தங்களுக்கு ஆதாயம் தரும் வரலாற்றுத் தகவல்களை மட்டுமே, தங்களை முன்நிறுத்திக் கொள்ள துணைக்கு வைத்துக் கொள்கிறார்கள். இதை எல்லாம் யோசித்தால் நாம் இன்னும் ' blood for blood' என்ற காட்டுமிராண்டித்தனத்திலிருந்து முன் நகரவே இல்லை என்று தோன்றுகிறது. மன்னராட்சியிலும் போர் புரிந்தோம், மக்களாட்சியிலும் போர் புரிகிறோம். மக்கள்/தலைவர்கள், இப்படியான வன்முறையை உள்ளே வைத்துக் கொண்டு, அதற்கு ஒரு நியாயத்தையும் கற்பித்துக் கொண்டு இயங்கும் இந்த நிலையில், இவ்வளவு அதி வேகத் தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு பயங்கர விளைவுகளை உண்டு பண்ணப் போகிறதோ என்று அச்சமாக இருக்கிறது. ஒருவேளை உடனடி விபரீதங்களிலிருந்து நமது தலைமுறை தப்பிக்கலாம், ஆனால் மெல்ல stew ஆகிக் கொண்டிருக்கும் இந்த பயங்கரத்திலிருந்து நமது குழந்தைகள் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறதா?
நானும், மகளும் அமரன் படம் பார்க்கலாமா வேண்டாமா என்று அந்தப் படம் வந்த புதிதில் விவாதித்துக் கொண்டிருந்த போது, அவள் என்னிடம் ராணுவத்தில் சேர்வது என்பதே தங்களைக் கௌரவத் தற்கொலைக்கு ஒப்புக் கொடுப்பது போலத் தான் என்றாள். ஒரு மேஜர் முகுந்த் இறந்து போனால், இன்னொரு முகுந்த் உடனடியாக தயாராகி படையில் சேர்ந்து விடுவார். இவர்கள் எல்லாம், யாரை, யாரிடமிருந்து காப்பாற்ற தங்கள் உயிரை மாய்த்து கொள்கிறார்கள்? ஏன் நாம் எல்லோரும் ஒற்றுமையாக சுமுகமாக வாழ முடியாது என்று கேட்டாள். இதே தான் எனது நிலைப்பாடு என்றாலும், அவள் எவ்வளவு தூரத்திற்கு ஆழமாக சிந்தித்திருக்கிறாள் என்று அறிந்து கொள்ளவும், இன்ன திசையில் உரையாடலை செலுத்த வேண்டும் என்ற எந்த முன் நோக்கமும் இல்லாமலும், நான் அவளுடன் கொஞ்சம் devil's advocate பாணியில் பேசிக் கொண்டிருந்தேன். நாடு என்று ஒன்று இருந்தாலே அதை பாதுகாக்க வேண்டும் அல்லவா? நாம் தென் பகுதியில் இருப்பதாலும், கடல் சூழப் பாதுகாப்பாக இருப்பதாலும் படையெடுப்புகளால் வட இந்தியாவைப் போல பெரும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை. மிகவும் சௌகரியமான இடத்தில் அமர்ந்து கொண்டு இப்படி பேசிக் கொண்டிருக்க முடிவதால் இராணுவத்தின் முக்கியத்துவம் குறித்து நாம் அறியவில்லை என்றேன். மேலும், என் நாடு என்று உரிமை கொண்டாடினாலே பிரச்சனை தான், அங்கே பொறாமையும் போட்டியும் வளரும், பிறகு அதைப் பாதுகாக்க ராணுவமும் வேண்டும் என்றேன். அதற்கு அவள், நாடு என்பது administration point of view யில் தேவைதான், பாகங்களாக பிரித்துக் கொண்டதால் resources யை சரியாக நிர்வகிக்க சுலபமாக இருக்கும். இது ஒரு புறம் இருக்கட்டும், எப்படியும் தேசங்கள் உருவாகி, கோடும் கிழித்தாகி விட்டது, இதில் அடுத்தவன் தேசமும் நமக்கும் வேண்டும் என்று எண்ணுவது என்ன நியாயம் என்றாள். இப்படி எங்கள் உரையாடல் தொடர்ந்த படி இருந்தது.
இங்கே உங்களுக்கு இன்னொரு அனுபவத்தை குறிப்பிட நினைக்கிறேன். எனது தோழி ஒருவரும் என்னைப் போல gentle parenting முறையைக் கையாள்பவர். தான் மட்டுமல்ல தன் குடும்பத்தினரும் அந்த முறையத்தான் கடைபிடிக்க வேண்டும் என்பதை அவர் இன்னும் உறுதியாக அதைக் கடைபிடிப்பவர். நமது ஊர்களில் ஒரு பழக்கம் உண்டு. ஒரு குழந்தைக்கு தம்பியோ. தங்கையோ பிறந்து விட்டால், அந்த குழந்தையைப் பார்க்க வருபவர்கள், 'உன்னோட தம்பி/தங்கச்சிப் பாப்பாவை நான் எடுத்துட்டு போயிடுவேன்' என்று விளையாட்டாக பேசுவதைப் போல வினையாக சீண்டுவார்கள். குழந்தைகளுக்கு அந்த வயதில் தங்களது பொருட்களின் மீதும், தன் குடும்பத்தின் மீதும் அதீதமான உடைமை உணர்வு இருக்கும். அப்போது மற்றவர், உனது வளையலைக் கொடு, கொலுசைக் கொடு, பாப்பாவை எடுத்துக் கொள்கிறேன் என்றால் அது அழத் துவங்கும் இல்லாவிட்டால் 'அடி'க்கத் துவங்கும். இந்த ஜென்ட்டில் பேரன்டிங்கில் வளரும் தோழியின் குழந்தையின் குடும்ப சூழலில், யாரும் எதை ஒன்றையும் என்னுடையது, உன்னுடையது என்று உரிமை கொண்டாடுவதில்லை. அதையேதான் அவளும் imitate செய்கிறாள். இது வரை home schooling ல் இருந்த அவள் தற்போது தான் பள்ளிக்கு செல்லத் துவங்கி இருக்கிறாள். அதே பள்ளியில் நானும் வேலை செய்வதால் என்னால் இவளை குடும்ப சூழல் மற்றும் பள்ளி சூழல் இரண்டிலும் கவனிக்க முடிகிறது. பள்ளியில் தனது பொருட்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதில் அவள் எப்போதுமே முன் நிற்கிறாள். அவள் அவளது பொருட்களை உரிமை கொண்டாடுவதில்லை. குழந்தைக்கு இருக்கும் பற்றைப் போலத் தான் எனது நாடு, எனது மொழி, எனது மதம், இனம், குணம் என்ற எந்த வகையான உரிமை கொண்டாடல்களும்! எதன் ஒன்றின் மீதும் பற்று கொண்டிருந்தால், அது நம்மை நீ பெரிசா நான் பெரிசா என்ற போர்க்களத்திலேயே நம்மை நிறுத்தும். இதைத்தான் ஜித்துவும் சொன்னார்,
“When you call yourself an Indian or a Muslim or a Christian or a European, or anything else, you are being violent. Do you see why it is violent? Because you are separating yourself from the rest of mankind. When you separate yourself by belief, by nationality, by tradition, it breeds violence. So a man who is seeking to understand violence does not belong to any country, to any religion, to any political party or partial system; he is concerned with the total understanding of mankind.”
நாங்கள் வேறு, நீங்கள் வேறு என்ற உணர்வை உள்ளே வைத்துக் கொண்டு இன்னொருவரிடம் பழகும் போது, உண்மையிலேயே மத நல்லிணக்கம் சாத்தியமா? இந்த கேள்விகளை நான் உங்களிடம் கேட்கிறேன் இல்லை இளங்கோ. எனக்கு நானே எனது புரிதலை திரும்பிப் பார்த்துக் கொள்கிறேன் என்று நினைக்கிறேன். நம்மைப் போன்று இப்படி சிந்திப்பவர்கள் மிக மிகக் குறைவு. அதனாலேயே எனக்கு உங்களிடம் பேச நிறைய இருக்கிறது.
சரி, குடும்ப அமைப்புகள், சமூகம், தேசங்கள் எல்லாமே உருவாகி விட்டன. இதை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்தால், எனக்கு ஜித்து கிரிஷ்ணமூர்த்தியின் 'The Perfume of the teachings' யில் தொகுக்கப் பட்டிருக்கும் உரையாடல் நினைவுக்கு வருகிறது. அதில் கிரிஷ்ணமூர்த்தி, தனது UK, US, Indian Krishanamurti foundation யில் இருந்த ட்ரஸ்ட்டிக்கள் மற்றும் நண்பர்கள் சிலரை அழைத்து, தான் இறந்து போன பிறகு இந்த ட்ரஸ்ட்டுகள் என்ன ஆகும்? இந்த அமைப்புகளை தன் பொறுப்பில் இருந்து யார் நடத்தி செல்ல முடியும்? என்று கேள்வி கேட்டிருப்பார். கிரிஷ்ணமூர்த்தி ஒரு நெறியாளராக கேள்விகள் மட்டும் கேட்பார், அவர்கள் பதிலில் இருந்து திரும்பவும் இன்னொரு கேள்வி கேட்பார். இவரைக் குறித்த புரிதல் உங்களுக்கும் இருப்பதால், இது எத்தனை சிக்கலான கேள்வி என்று உங்களுக்கு தெரியும். அவர் எப்போதும் தன்னை தலைவன் என்றோ, குரு என்றோ முன்னிருத்திக் கொண்டதில்லை. The teachings are sacred என்று சொல்வாரே ஒழிய, அது தன்னுடையது என்று ஒருபோதும் உரிமை கொண்டாதியதில்லை. இப்போது யார் வழிநடத்துவார் என்ற கேள்விக்கு வரலாம். அங்கே தலைவன் concept கிடையாது. அதனால் ஒருவரை கைகாட்டி விட முடியாது. ட்ரஸ்ட்டிக்கள் /நண்பர்கள் என்ன பதில் சொன்னாலும், நான் நாளை இல்லை, K has died, இப்போது என்ன செய்வீர்கள் என்று திரும்ப திரும்ப அந்த சூழ்நிலையின் தீவிரத் தன்மையை அவர்களுக்கு உணர்த்தி அவர்களை சிந்திக்க வைப்பார்.
அவர்கள் நாள் கணக்கில் அதை அலசுவார்கள். அதில், அனைத்து கிரிஷ்ணமூர்த்தி பவுண்டேஷன்களுக்கும் எல்லோருமே பொறுப்பேற்க வேண்டும், அதாவது இந்திய பவுண்டேஷன்களின் செயல்பாடுகளில் UK,US பவுண்டேஷங்களும் (and vice versa) பங்குகொள்ள வேண்டும் என்று பேச்சு போகும்போது, இந்திய நடைமுறைகள் வேறு விதமாக இருக்கின்றன, புரிந்து கொள்வது சிரமமாக இருக்கிறது என்று மேற்கத்திய அமைப்பின் பொறுப்பில் இருப்பவர்களிடமிருந்து கருத்து வரும். (இதை சரியாக புரிந்து கொண்டு சொல்கிறேனா என்று தெரியவில்லை) இருந்தாலும் எனது புரிதலின் படி, அங்கே ஒரு அமைப்புக்கும், இன்னொரு அமைப்புக்கும் இருக்கும் கலாச்சார, மனப்போக்கு, நடைமுறை வேறுபாடுகள் குறிப்பிடப்படும். அப்போது அதை சமாளிக்க, சுழற்சி முறையில் ஒவ்வொரு கிரிஷ்ணமூர்த்தி பவுண்டேஷனுக்கும், மற்ற கிரிஷ்ணமூர்த்தி பவுண்டேஷனிலிருக்கும் ட்ரஸ்ட்டிக்கள் சென்று மாதக்கணக்கில் தங்கி இருந்து, நமது எண்ணங்களும் செயல்பாடுகளும் நடைமுறையில் ஒத்திசைந்து வருகிறதா என்று கண்காணிக்க வேண்டும். அப்போது உள்ளூர் கலாச்சார அனுபவமும், அறிமுகமும் கிடைக்கும், அப்படி ஒருவரை ஒருவர் ஆழமாக அறிந்து கொள்ளும் போது நமக்குள் கருத்துப் பரிமாற்றங்கள் எளிதாக இருக்கும் என்ற பரிந்துரை வரும். நான் இன்னும் அந்தப் புத்தகத்தை முழுமையாக வாசித்து முடிக்கவில்லை. ஆனால், இது எனக்கு என்ன சொல்கிறது என்றால், ஜனநாயகம் என்பதும் இப்படித் தானே இருக்க வேண்டும். உலக அமைதி காத்தல் எல்லாருடைய பொறுப்பும் தானே! உலக நாடுகளின் மக்கள் பிரதிநிதிகள், தலைவர்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடி, பாரப்பா, நாம் செய்து கொண்டிருப்பது சரி தானா? இப்படியாகத் தொடர்ந்தால் நமது எதிர்காலம் என்ன என்று நேர்மையாக கலந்துரையாட வேண்டும் தானே? ஆனால், who will be the next big brother என்று தானே உலகம் போய்க் கொண்டிருக்கிறது.
முந்தா நாள், 'I don't feel at home in this world anymore' என்ற படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் பெண் ஒருவர் செவிலியராக நடித்திருப்பார். அவர், இந்த உலகத்தில் ஏன் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்கிறார்கள், ஏன் இவ்வளவு வன்முறை என்று யோசித்து துன்புறுவார். நானும் இப்படி பல முறை யோசித்ததுண்டு. அதன் விளைவாகத் தானோ என்னவோ நான் இந்தப் பணியை ஏற்றுக் கொண்டிருப்பது. எங்கள் பள்ளியில் ஒருவனுக்கு ஹிட்லரின் மீது அபாரமான பிரியம் இருக்கிறது. பொடியன் அவன், அவனுக்கு அவரைக் குறித்து எவ்வளவு தெரியும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவரது மீசை மீது அவனுக்கு ஒரு மோகம். அதைப் போலவே தனது மேலுதட்டின் மீது பேப்பரை ஒட்டிக் கொண்டு,'I am the Hitler' என்று சொல்லிக் கொண்டு சுற்றுவான். எனக்குப் பார்க்கும் போது சிரிப்பு வரும், ஏனென்றால், அவன் சொல்வது அவ்வளவு அழகாக இருக்கும்.
அவனிடம், நீ ஹிட்லராக விரும்பினால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள், அதாவது நீ, 'The Hitler who spread kindness' என்று பெயர் வாங்கக் கூடிய ஹிட்லராக இருக்க வேண்டும் என்றேன். அவனுக்கு என்ன புரிந்ததோ, அவனும் நிச்சயமாக என்றான். நாம் இன்றைக்கு இயங்கும் போது, நாளை இந்த பூமியில் இருக்கப் போகும் குழந்தைகளுக்காகவும் சேர்த்து பொறுப்புணர்வோடு இயங்க வேண்டும் இல்லையா? நமது தலைவர்க்ளுக்கும் இதை யாராவது gentle parenting செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இதை சொன்ன போது என்னிடம் ஒரு தோழி நீ utopia வில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்றார். ஆனால், உலகம் அமைதிப்பூங்காவாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறில்லை தானே? மானுடமும், பூலோகமும் உய்வுற இது ஒன்றே வழி என்று சர்வ நிச்சயமாகத் தெரிகிறது. சிந்திப்பதோடு நிறுத்திக் கொள்ளும் போது தோள்களில் அமர்ந்து கொள்ளும் பாரம், செயல்படத் துவங்கும்போது மெல்லக் கரைகிறது இளங்கோ. உங்கள் பதிவு என்னை எப்படி எல்லாம் எழுத வைக்கிறது பாருங்கள். நீங்களும் அதைத்தான் உங்கள் பதிவில் சொல்லி இருந்தீர்கள், 'நமது நினைவுகளை, கற்பனைகளை விரிப்பதற்கான வெளிகளை உருவாக்குவதுதானே எழுத்து என்பதாக இருக்கவேண்டும்' என்று. அதைத் தான் உங்கள் எழுத்தின் மூலம் நீங்களும் செய்து கொண்டிருக்கிறீர்கள். யாருக்கு என்ன வருமோ அதைப் பொறுப்பாகத் தொடர்ந்து செய்வோம். இதற்கு பொருந்தும் விதத்தில் ஒரு quote யையும் குறிப்பிட விரும்புகிறேன்.
“Never doubt that a small group of thoughtful, committed, citizens can change the world. Indeed, it is the only thing that ever has.”
― Margaret Mead
இன்னும் என்ன எல்லாமோ பேசத் தோன்றுகிறது இளங்கோ,,,, ஆனால், விடைபெறுகிறேன், மறுபடி எழுதும்வரை...
பிரியங்களுடன்,
இனியா
***************
அன்பின் இனியா,
உங்களின் பதிவு (கடிதம்) நிறைய முக்கியமான புள்ளிகளைத் தொட்டுச் செல்வதால், எங்கிருந்து தொடங்குவதென்று தயக்கமாயிருக்கின்றது. ஆகவே அந்தப் பதிவுக்குப் பிறகு பதிந்த காணொளியிலிருந்துதொடங்குகின்றேன். "20 வருடங்களில் நான் கற்றதை உங்களுக்குக் குறைந்த நிமிடங்களில் கூறுகின்றேன்" எனத் தொடங்கும் காணொளியை நான் ஏற்கனவே பார்த்துவிட்டு நண்பர்களிடம் பகிர்ந்திருக்கின்றேன்.
இந்தக் காணொளியைச் செய்யும் ஹித்திஸை 10 வருடங்களுக்கு முன்னரே அறிந்திருக்கின்றேன். நான் அப்போது பயணங்களைச் செய்பவர்களை விடாது பின் தொடர்ந்திருக்கின்றேன். காணொளிகள் அப்போது அவ்வளவு பிரபல்யம் ஆகாத காலம். மேலும் எனக்கு எழுத்துக்களிலிருந்து காட்சிகளை விரித்துப் பார்ப்பது பிடிக்குமென்பதால் பயணங்களை எழுத்துக்களில் பதிவு செய்பவர்க்கு முதலிடம் கொடுப்பேன். அந்தக் காலங்களில் ஹித்திஸ் இந்தியாவுக்குள் மிகக் குறைந்த செலவில் (நாளொன்றுக்கு ரூ 100 என்ற வகையில்?) backpacker ஆக பயணித்துக் கொண்டிருந்தார். அப்படிப் பயணித்தவர் பின் ஹரித்துவாரில் ஓரிடம் எடுத்து கோ(கா)ப்பிக் கடையை பயணிகளுக்காவென்று புறநகரொன்றில் நடத்திக் கொண்டிருந்தவர். அங்கு வரும் வெளிநாட்டவர்கள் தமது அடையாளங்களை விட்டுச் செல்லும் இடமாக அந்த கடையின் ஒரு சுவர் இருந்தது. என்றேனும் ஒருநாள் நானும் அந்தக் கஃபேக்கு இந்தியாவின் வடக்குக்குப் போனால் செல்லவேண்டும் என்று நினைத்தும் இருக்கின்றேன். சட்டென்று ஹித்திஸ் பயணியாக வந்த ஒரு ரூமேனியாப் பெண்ணுடன் காதல் வசப்பட்டு ரூமேனியாவுக்குப் போயிருந்தார். அதன் பின் அந்த கஃபேக்கு என்ன நடந்தது என்று அறியேன். அவர் அதன் பின்னர் ரூமேனியாவில் இருந்து யோகாக் காணொளிகளை பதிவு செய்யத் தொடங்கியபோது நான் அவரிடமிருந்து விலகி வரத்தொடங்கினேன். யோகா பிடிக்காதென்பதல்ல அர்த்தம். நான் இப்போதும் நேரங்கிடைக்கும்போது யோகா செய்பவன். ஆனால் அவரிடமிருந்து பெற இனி எதுவுமில்லையென்று விலகி விட்டிருந்தேன்.
இப்போது வேறொரு வடிவத்தில் ஹித்திஸ் வந்து நிற்பதை இந்தக் காணொளியினூடுதான் அண்மையில் பார்த்தேன். தெரிந்த முகமாக இருக்கின்றதென நினைவை மீட்டபோதுதான் இவையெல்லாம் ஞாபகத்துக்கு வந்தன. இப்போது ஹித்திஸ் திருமணம் செய்த ரூமேனியாப் பெண்ணை விவாகரத்து செய்து இந்தியாவுக்கு வந்து தரிசு நிலத்தைக் காடாக்கும் முயற்சியில் இருக்கின்றார் என நினைக்கின்றேன். ஒருவகையில் அவரின் வாழ்க்கை ஒரு வட்டச் சுழற்சியை முடித்து இன்னொரு 'புதிய இலையாக முகிழ'த் (Turn over a new leaf) தொடங்கியுள்ளதோ தெரியவில்லை.
ஒருவகையில் இவ்வாறுதான் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒரு வட்டத்தை முடித்து புதிதாகத் தொடங்குகின்றல்லவா? அந்தவகையில்தான் எனக்கு கனடாவில் இருக்கும் நான்கு பருவக்காலநிலை மிகப் பிடிக்கும். ஒவ்வொரு நான்கு மாதத்திற்கும் ஒரு தெளிவான காலநிலை. இயற்கை தன் வட்டச்சூழற்சியை முடித்து ஒவ்வொரு பருவத்தைத் தொடங்குவது என்பது எவ்வளவு அழகு. அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள எத்தனையோ இருக்கின்றதல்லவா?
இதை எழுதும் இந்தக் கணத்தில் பனிக்காலம் முடிந்து வசந்தகாலம் தொடங்குகின்றதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. சூரியன் அவ்வளவு பிரகாசமாக இருக்கின்றது. குவிந்திருந்த பனிமலை மெல்ல மெல்லக் கரைய ஆரம்பிக்கின்றது. இலைகள் உதிர்ந்த மரங்களில் துளிர்கள் அரும்பத் தொடங்குகின்றன. இனி பறவைகள் வந்து பாட வசந்தகாலம் கோலாகலமாகக் களைகட்டும்.
*
இராணுவம்/தாய்நாடு குறித்த பெருமிதம் பற்றி உங்கள் மகள் வைத்திருக்கும் புரிதல்களும்/கேள்விகளும் அவ்வளவு அருமையானவை. நாமெல்லாம் இந்தப் புரிதல்களுக்கு வர எவ்வளவு காலம் எடுத்திருக்கின்றன. எமக்கு எல்லாவற்றையும் துவிதங்களாக (dichotomy) கற்றுத் தந்ததால் நாம் எப்போது பிரிவுகளைப் புரிந்துகொள்ள அதிகம் நேரத்தைச் செலவளிக்கின்றோமே தவிர, எப்படி இந்த இடைவெளியைக் குறைப்பதென்ற திசையில் நின்று யோசிப்பதேயில்லை.
இங்கு கனடாவில் வலதுசாரிகளின் கட்சியில் எமது தமிழர்கள் தேர்தலில் போட்டியிடுவார்கள்; வெற்றிகளைச் சூடி எம்பிபிகளாகக் கூட வந்திருக்கின்றனர். நம்மவர்கள் பலருக்கு அவர்கள் பிரதிநிதிப்படுத்தும் கட்சியின் கொள்கைகளை விட, ஒரு தமிழர் அதில் நிற்கின்றாரே என கண்ணைமூடியபடி வாக்களிப்பார்கள். எனது அண்ணாவின் மகன் சில நாட்களுக்கு முன்கூட எப்படி நமது தமிழ் மக்கள் இப்படி முட்டாள்தனமாய் இருக்கின்றார்கள் எனக் கேட்டான். இத்தனைக்கும் அவன் எங்களைப் போல மார்க்ஸையும்,கம்யூனிஸத்தையோ, புரட்சிகளைப் பற்றியோ அறிந்தவனோ அக்கறைப்பட்டவனோ இல்லை. ஒரு எளிய அரசியல் தெளிவோடே நம்மைப் போன்றவர்கள் வலதுசாரிகளுக்கு வாக்களிப்பதையும், வேட்பாளர்களாக இருப்பதையும் அவன் கேள்விக்குட்படுத்துகின்றான்.
அதுபோலவே நீங்கள் குறிப்பிடும் குழந்தைகளாக இருக்கும்போதே பொருட்களைப் பகிர்ந்து கொள்வது என்று பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது எவ்வளவு அருமையானது. இந்தப் பொதுப் பகிர்தல்களை மறந்து உடைமையாக்குவது என்ற சிந்தனையால்தானே இன்று பெரும்பாலான இயற்கை வளங்கள் தனியாருக்குச் சென்றிருக்கின்றது. பெரும் நிறுவனங்கள் இவ்வாறு உடமையாக்குவதன் மூலம் இயற்கை வளங்களை எப்படி வணிகப்படுத்துகின்றது என்பது நாம் எல்லோரும் அறிந்த உண்மை.
இந்தப் பகிர்ந்தளித்து வாழும் முறையை நாம் இங்கிருக்கும் பூர்வீகக்குடிகளிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியொருவர் பூர்வீககுடிகளின் நிலங்களை வாங்க விரும்பியபோது chief சியாட்டில் என்ற பூர்வீகத் தலைவர் எழுதிய இயற்கை வளங்கள் குறித்த கடிதம் அவ்வளவு பிரபல்யம் பெற்றதல்லவா? இந்த உடைமையாக்கம் எவ்வளவு வன்முறையாக மாறுகின்றது என்பதற்கு நமது குடும்ப அமைப்புக்களே மிகச் சிறந்த உதாரணம்.
குடும்பம் என்ற அமைப்புக்குள் எல்லோருமே 'பொருட்களாக' ஆக்கப்பட்டு, அங்கே அதிகாரமும், உடைமையாக்கமும் அதன் நீட்சியில் வன்முறையாக்கமும் எளிதில் நடைபெற்றிருக்கின்றது. இதெல்லாம் புதிய கருத்துக்களுமல்ல. மார்க்ஸ்/ஏங்கல்ஸ் காலத்திலேயே 'குடும்பம், தனிச்சொத்து, அரசு' ஆகியவற்றின் தோற்றம் பற்றி நிறையப் பேசப்பட்டுவிட்டன. ஆனால் முரண்நகை என்னவென்றால் மார்க்ஸை முன்னோடியாகக் கொண்டு புரட்சிகளும்/ஆட்சிகளும் நடத்திய நாடுகளில் கூட பெரும் மாற்றங்கள் இந்த விடயங்கள் குறித்து வரவில்லை என்பதுதான்.
இந்தக் கனவுகள் எல்லாம் ஏன் முழுமையான அளவில் சாத்தியமாகவில்லை என்று யோசிக்கும்போது, அனைவருமே புறவயமாக மாற்றங்களைச் சிந்திக்கின்றார்களே தவிர எவரும் தம்மளவில் மாற விரும்பாதவர்களாக இருப்பதைப் பார்க்கலாம். இங்கேதான் உங்களுக்குப் பிடித்தமான ஜித்து கிருஷ்ணமூர்த்தியோ, ஓஷோவோ, எனக்கு உவப்பான ஸென்னோ வருகின்றது. ஜேகே, நாராயணகுரு போன்றவர்கள் அமைப்புக்கு எதிராக இருந்தவர்கள். உங்களுக்கான விடுதலையை உங்களைத் தவிர வேறெவரும் தரமுடியாது என்று தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டிருந்தவர்கள். நமக்கெல்லாம் ஒரு நாடு விடுதலையானவுடன் (அல்லது சுதந்திரமான நாட்டிலிருந்தால்) எல்லாமே மாறிவிடுமென்றுதான் சொல்லித் தந்திருக்கின்றார்கள். அப்படியெனில் இன்று அமெரிக்காவிலோ, பிரான்ஸிலோ இருக்கின்றவர்கள் அனைவரும் உண்மையான விடுதலையுணர்வுடனா இருக்கின்றார்கள்? அல்லது இந்தியா காலனியாதிக்கத்திலிருந்து விடுதலையடைந்தவுடன் அங்கிருந்த மக்களெல்லோரும் முழுமையான விடுதலை அடைந்துவிட்டார்களா?
எனக்கு ஸென் வரலாறு பற்றி வாசிக்கும்போது ஒரு சுவாரசியமான விடயம் கிடைத்தது. ஸென்னின் முக்கியமான ஆசிரியர்கள் எல்லாம் அவர்கள் வாழ்ந்த நாடுகள் மிக மோசமான அரசியல் சூழ்நிலைகள் இருந்த நிலையில்தான் தோன்றியிருக்கின்றார்கள். அந்தக் கடும்சூழலில் இருந்து ஸென்னை மிக வலுவாக வளர்த்தெடுக்கின்றார்கள் என்பது. அப்படித்தான் எனது ஸென் ஆசிரியராகக் கொள்கின்ற தாய் கூட அமெரிக்க-வியட்னாமிய போரில் முகிழ்ந்த ஒரு முக்கிய ஆசிரியராகக் கொள்ள முடியும். ஆக ஒருவர் விடுதலை அடைவதற்கு புறச்சூழல் ஒரு பெரும் தடை அல்ல என்பது புரிகிறது.
நீங்கள் உங்கள் பதிவில், 'என்னிடம் ஒரு தோழி நீ utopia வில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்றார். ஆனால், உலகம் அமைதிப்பூங்காவாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறில்லை தானே? மானுடமும், பூலோகமும் உய்வுற இது ஒன்றே வழி என்று சர்வ நிச்சயமாகத் தெரிகிறது' என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அப்படி ஒரு வழி தெரியும்போது பற்றிக்கொண்டு எழுவதுதானே நல்லது.
ஒன்றுமே செய்யாமல்/சிந்திக்காமல், குழப்பங்களுக்குள்/கவலைகளுக்குள் சிக்கிக்கொண்டிருக்காமல், நமக்கான ஒரு உலகை (அது நிகழுமா/நிகழாதா) என்கின்ற எந்த அக்கறையுமில்லாது அப்படியான ஒரு பாதையில் பயணிப்பதால் நாம் எதையும் இழக்கப் போவதில்லை.
"சிந்திப்பதோடு நிறுத்திக் கொள்ளும் போது தோள்களில் அமர்ந்து கொள்ளும் பாரம், செயல்படத் துவங்கும்போது மெல்லக் கரைகிறது." எவ்வளவு அழகானது உங்களின் இந்த வரிகள். லா-சூ சொன்னதுபோல, ஒரு நீண்ட பயணம் என்பது ஒரு காலடியை வைக்கத் தொடங்கும்போதுதான் ஆரம்பிக்கிறது அல்லவா? நாம் நினைத்த முடிவிடத்தை சென்றடைய வேண்டும் என்று கூட இல்லை. உற்சாகமாக நடந்து கொண்டிருப்பதுதான் முக்கியமானது.
இப்போது இதை எழுதத் தொடங்கியதே உங்களின் பதிவுக்கான மறு கடிதமாக. ஆனால் அது எந்தெந்தத் திசையிலோ இடம் மாறிப் போய்க் கொண்டிருக்கின்றது. ஒரு எளிய கடிதமே இப்படி இருந்தால் நமது சிக்கலான வாழ்க்கை அங்குமிங்குமாய் அலைந்து கொண்டிருந்தால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.
எனது ஆசிரியரான தாய் சொன்ன, 'இந்தப் பூமியில் இந்தக் கணத்தில் உயிரோடு இருப்பதைவிட வேறெந்த அற்புதமும் இல்லை' என்பதையே இங்கே நானும் நினைவுகூர்கிறேன்.
இதையெழுத் தொடங்கியபோது வசந்தகாலம் பற்றிச் சொன்னேன். பறவைகள் இனி வந்து பாடுமென்றும் குறிப்பிட்டேன். பாருங்கள், இந்தக் கடிதத்தை முடிக்கும்போது பறவைகளின் குரல்கள் கேட்கத் தொடங்கிவிட்டன. இன்றைய நாளில் எமக்காய் அருளப்பட்ட அற்புதம் அது!
அன்புடன்,
இளங்கோ
**********************
(பங்குனி, 2025)
1 comments:
சிறப்பு
3/20/2025 09:12:00 AMPost a Comment