கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 82

Thursday, March 20, 2025

 

பால்கியின் இந்தநேர்காணலைக் கேட்டுப் பாருங்கள். இளையராஜாவின் சிம்பொனியை மட்டுமில்லை, ஓர் இரசிகர் எப்படி ஒரு மேதையைக் கொண்டாட முடியும் என்பதற்கும் நல்லதொரு உதாரணமாக இதைச் சொல்லலாம். எவ்வளவு அழகாக இளையராஜா தனக்கு இசையினூடு தந்து கொண்டிருப்பவற்றை மட்டுமின்றி, இசையில் இருந்து வெளியே வரும்போது அவ்வப்போது பிறர் குற்றஞ்சாட்டும் அவரின் 'Arrogance' ஐ எப்படி நாம் புரிந்துகொள்வதைப் பற்றியும் உரையாடுகின்றார். இளையராஜாவின் இந்த சிம்பொனிக்காக தமிழ்த்திரையுலகமே இங்கிலாந்துக்குத் திரண்டு சென்றிருக்க வேண்டும், அவ்வளவு அற்புதமான சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுவிட்டார்களென பால்கி வருந்துவதையும் இதில் கேட்கலாம்.

 

இளையராஜாவின் வாழ்க்கை சம்பந்தமான திரைப்படத்தை பால்கியே முதல் இயக்குவதாக இருந்ததாகவும், அவரை ஒரு 'டிவைனாக' தன் உள்ளம் கொள்வதால் தன்னால் அந்தப் படத்தை ஒருபோதும் இயக்கமுடியாது என்பதை -ஒன்றரை வருடங்கள்- காலம் எடுத்து சொன்னதாகவும் பால்கி குறிப்பிடுகின்றார். உண்மைதான். உங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக, உங்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துக் கொண்டிருக்கும் ஓர் ஆளுமையிடமிருந்து விலத்தி நின்று அவரைப் பற்றி ஒரு சிறந்த கலைப்படைப்பை உருவாக்க முடியாதுதான். பால்கி அதைச் சரியாகவே முடிவு செய்திருக்கின்றார்.

 

இந்த சிம்பொனிக்கு ஏதேனும் 'ஜடியா/கருப்பொருள்' இருந்ததா என்று இளையராஜாவிடம் கேட்டபோது, ஏன் எல்லாவற்றுக்கும் அர்த்தங்களைத் தேடி அலைகின்றாய், இது தரும் உணர்வை மட்டும் அனுபவி என்று இளையராஜா பால்கியிடம் சொன்னதிலிருந்து நாம் அறிந்து கொள்ளவும் நிறைய இருக்கின்றது.

 

பால்கியைப் போன்றவர்களினூடாக இளையராஜாவின் இசையை மட்டுமில்லை, இளையராஜா என்கின்ற மனிதரைப் பற்றியும் அறிய முடிகின்றது. "நானொரு நாத்திகவாதி, யாரின் காலிலும் விழுந்ததில்லை (தந்தையின் காலில் கூட வீழ்ந்ததாய் ஞாபகமில்லை). ஆனால் சிம்பொனி கேட்டு முடிந்தவுடன் நான் இளையராஜாவின் காலில் என்னையறியாமலே விழுந்தேன். அப்படியொரு மகா அனுபவம். அது மட்டுமின்றி அப்படி இளையராஜாவின் காலில் விழுந்துவிட்டு, தன்னை ஏதாவது கடிய வார்த்தை கொண்டு திட்டவும் அவரிடம் கேட்டேன். அப்போதுதான் இந்த அற்புதமான இசையை அளித்தவர், ஒரு சாதாரண மனிதர் என்பதையும் எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொள்ளமுடியும்" என்று கூறும் பால்கியின் இளையராஜாவின் இசை மீதான பித்து நமக்குள்ளும் பற்றிக்கொள்கின்றது.


*

 

'சுழல்' தொடர் (2002) எப்போதோ வெளிவந்திருந்தாலும் அதை இத்தனை வருடங்களாகப் பார்க்காமலே இருந்தேன். இவ்வாறான தொடர்களுக்குள் விழுந்தால் அதில் இருந்து எழுவது கடினமென்பதால் இவற்றைப் பெரும்பாலும் பார்ப்பதைத் தவிர்ப்பேன். எனினும் Money Heist, Queen of the South போன்றவற்றின் அனைத்துத் தொடர்களையும் பார்த்து முடித்திருக்கின்றேன். சுழல்-2 இந்த மாத முடிவில் வரப்போகின்றதை தற்செயலாக அறிந்ததால், சுழல்-1ஐ பார்க்கத் தொடங்கினேன்.

 

அங்காளம்மாள் பரமேஸ்வரியின் மயான கொள்ளைத் திருவிழாவின் பின்னணியில் சிறப்பான திரைக்கதையை அமைத்திருக்கின்றனர். மயானக் கொள்ளை திருவிழாவை இதில் காட்சிப்படுத்திய விதம் இது குறித்து அவ்வளவு அறியாத எனக்கு நல்லதொரு காட்சியனுபவமாக இருந்தது. அநேகமாக இவ்வாறான உள்ளூர்க்கலைகளை மலையாளத் திரைப்படங்களில் உயிரோட்டமாகப் பார்த்திருக்கின்றேன். தமிழில் இவ்வாறான முயற்சிகள் அவ்வப்போது நடந்தாலும் அவை அவ்வளவாக நம் மனதோடு நெருக்கமாக உறவாடியவை அல்ல. ஆனால் சுழலில் ஒவ்வொரு எபிசோட்டிலும் திருவிழாவின் தினம் ஒரு நாளென விழாவுக்கு ஒரு பெயரிட்டு, 9 நாள் திருவிழாவையும் நேர்த்தியாகக் காட்டியிருக்கின்றனர். அந்தத் திருவிழாக் காட்சிகளில் எமக்கும் உரு வருகின்றமாதிரியான ஆட்டமும் இசையும் இலயம் பிசகாது இணைந்திருந்த அனுபவம் அருமையானது.

 

ஒரு சுவாரசியமான திரில்லர் கதையில், நம் அன்றாட வாழ்வில் எளிதில் கடந்து செல்கின்ற முக்கியமான ஒரு விடயத்தைப் பேசுபொருளாக்கியதும் சுழலில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. நமது தமிழ்ச் சூழலில் நடக்கும் பெரும்பாலான குற்றங்கள் எம்மோடு சம்பந்தப்பட்டவர்களாலே நிகழ்த்தப்படுபவை. அது ஆணவக்கொலையாக இருந்தாலென்ன, பாலியல் வன்முறைகளால் ஆனாலென்ன, இவர்களா செய்திருப்பார்களென அதிர்ச்சியடையவைக்குமளவுக்கு நமக்கு நெருக்கமானவர்களே இவற்றில் சம்பந்தப்பட்டிருப்பார்கள்.

 

முதலாவது சுழல் தந்த சுவாரசியத்தை இரண்டாவது சீஸனும் தருமா தெரியாது. ஆனாலும் புதிய தொடரையும் பார்க்க விரும்புகின்றேன். ஏனெனில் இந்தத் தொடரைப் பார்த்தபோது இதனோடு சம்பந்தப்பட்ட புஷ்கா-காயத்திரி உள்ளிட்ட குழு எவ்வளவு கடுமையாக திரைக்கதைக்காக உழைத்திருக்கின்றார்கள் என்பது அவ்வளவு தெள்ளிடையாகத் தெரிந்தது. தமிழ்ச்சூழலில் எத்தனையோ படைப்புக்கள் அளவுக்குமீறி விதந்ததேந்தப்படுகின்ற அபத்தமான சூழநிலையில், இவர்களின் உழைப்புக்கும், கலை மீதான காதலுக்கும், நாம் ஏதோ ஒருவகையில் மரியாதை கொடுத்தாக வேண்டும்.

 

*************

 

(பங்குனி, 2025)

 

0 comments: