கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மெக்ஸிக்கோ (இளங்கோ) - இராமசாமி செல்வராஜ்

Sunday, March 23, 2025

 

 ண்பர் டிசே தமிழனின் (இளங்கோ) மெக்சிக்கோ நாவலை நூலகங்களின் வழியே கடன்வாங்கிப் படித்தேன். பிரபஞ்சன் நினைவுப்பரிசு பெற்ற நூல். அவருடைய எழுத்தும் நடையும் வலைப்பதிவுகளின் வழியே அறிந்த ஒன்றுதான் என்றாலும், முழுநூலாய்ப் படிப்பது இதுவே முதன்முறை.


சிக்கலான கதைக்களம். அதனால் நடையும் சொற்பாவனைகளும் சற்று அந்நியமாய் உணரச் செய்தது. தொராண்டொ, மெக்சிக்கோ, அமெரிக்கா என்று சற்றேனும் அறிந்த ஒருவர்க்கே விலகிநிற்கும் சூழல் என்பதால் தமிழ்ச்சூழலில் பிறர்க்கு எவ்வளவு ஒட்டும் என்பது ஒருகேள்விக்குறி. ஆனால், நெட்பிலிக்சும் பிற திரைக்காட்சி வாய்ப்புகளும் பரவலாய் இருக்கின்ற இந்நாளில் அது பெருந்தடையாய் இல்லாமலும் இருக்கக்கூடும்.

 

அந்தப்பின்புலத்தைத் தவிர்த்துப் பார்த்தால், eat pray love சாயலில் எதையோ தொலைத்துத் தேடித் திரியும் ஒருவன் சந்திக்கின்ற பெண்ணும், அவர்கள் சேர்ந்து போகும் பயணங்களும், ஆண் பெண் உறவின் அத்துனைச் சாத்தியங்களோடும் (:-)) முழுதும் விவரித்துச் செல்லும் கதை. ஈழத்தில் பிறந்து கனடாவிற்குப் புலம்பெயர்ந்த ஒருவன் மெக்சிக்கோப் பயணத்தில் சந்திக்கிற கொலம்பியப் பெண்ணோடான கதை. கடந்த காலமும் நிகழ் காலமும் கலந்து வெளிப்படுகின்ற கதை தொடர்ந்து ஒரு நம்பகமில்லாத நிகழ்வுக்கோவைகளாக இருக்கின்றதே என்றும், அவர்களுக்கு இடையேயான ஈர்ப்புக்கு வலுவான காரணம் இல்லையே என்றும் தோன்றவைத்தது. ஆனால் அந்தக் கேள்வியைக் கதைமாந்தரே கேட்டுக்கொள்வதும், தற்செயல் நிகழ்வுகளின் கூட்டுத்தொகையாக ஏன் இருக்கக்கூடாது என்றும் விடைபகிரும் ஆசிரியர் இறுதியில் வேறொரு விடையைப் பகிர்ந்து அனைத்துக்கேள்விகளுக்குமான விடையாக வைக்கின்றார்.

 

மனித மனம் சார்ந்த அந்த விடை ஏற்புடையதாய் இல்லாமலும் இருக்கலாம்; அல்லது, அதன்மேலும் கேள்வியெழுப்ப முடியாத முழுவிடையாகவும் இருக்கலாம். அது வாசிப்பவரின் அனுபவம், ஏற்பு இவற்றைப் பொறுத்தும் அமையக்கூடும். இதற்குமேலும் இறுதித்திருப்பம் குறித்துச் சொல்ல விரும்பவில்லை. ஆனால், இப்படியான ஒரு திருப்பம் இருக்கிறது என்று முன்பு படித்த ஒரு விமர்சனம் இதனைப் படிக்க எனக்கு ஒரு தூண்டுகோலாகவும் இருந்தது.

 

ஒரு பிழைகண்டுபிடிப்போனாகப் பல என் கண்ணில் பட்டன . ஒரு சில வடவெழுத்து ஒரீஇ காரணமாக இருக்கலாம். அல்லது பல்வேறு உச்சரிப்புகளைத் தமிழில் வெளிப்படுத்த முயன்றது காரணமாய் இருக்கலாம். ஆனால் முழுதும் அவ்வாறு ஒருதரத்துடன் இல்லை. Van என்பதை வேன் என்றோ வான் என்றோ எழுதலாம். ஆனால் இரண்டு வகையாகவும் ஒரே பக்கத்தில் எழுதுவதைத் தவிர்க்கலாம். சில இடங்களில் வேற்றுமை உருபு மயக்கம் தமிழக ஈழத் தமிழ் நடை வேறுபாடுகளாலும் இருக்கக்கூடும். ஆனால் ஆசிரியர்க்கு இல் விகுதி மீது அப்படி என்ன பிடிப்போ தெரியவில்லை. விடுதிக்கு, அறைக்கு, தம்பிக்கு என்று சொல்லும் இடங்களில் விடுதியிற்கு, அறையிற்கு, தம்பியிற்கு என்று அள்ளித் தெளித்திருக்கிறார்.

 

இனிய நடைக்குச் சொந்தகாரரான டிசே தமிழன் சற்றே வேறுபட்ட முயற்சியைச் செய்து தன் எல்லைகளை விரிக்கச் சற்றுச் சிக்கலான தெரிவைக் கையாண்டிருக்கிறார். படிக்கலாம்.

 

மெக்சிக்கோ

இளங்கோ

டிசுக்கவரி புக்கு பேலசு

2019

 

******

 

நன்றி: https://www.facebook.com/ramasamy.selvaraj.9/posts/pfbid01PvNcHq95AXrQA6tsWmKgHTZyonF15TLo3mfF7uyKwvqLnaEEp7oBNnTcxxLSi2Ql 

(பங்குனி 12)

2 comments:

கரிகாலன் said...

நானும் அண்மையில் தான் நூலகம் வாயிலாக மெக்சிக்கோ நாவல் படித்து இருந்தேன்.இப்பொழுது இங்கு உள்ள நூலங்களில் ஈழத்து எழுத்தாழரகளின் நூலகள் நிறைய கிடைக்கின்றன.மெக்சிக்கோ கொஞ்சம் படிக்க கடினமாக இருந்தது என்னளவில் .விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு புலமை இல்லை .வாழ்துக்கள் இளங்கோ......

3/23/2025 12:38:00 PM
Anonymous said...

நன்றி கரிகாலன்.
கனடாவில் நான் போகும் நூலகங்களில் புதிய புத்தகங்களை அண்மைக்காலமாக வாங்குவதில்லை என நினைக்கின்றேன். அப்படிப் பார்க்கையில் அமெரிக்காவில் (?) ஈழத்தமிழர் புத்தகங்கள் கிடைப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.

3/23/2025 12:53:00 PM