கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 81

Monday, March 17, 2025

 

காலம்' இதழில் மு.பொன்னம்பலம் (மு.பொ) குறித்து என்.கே.மகாலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருப்பார். 90களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தைச் சூழவிருந்த தீவுகளிலிருந்து மக்கள், இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பால் வெளியேறத் தொடங்கினார்கள். அந்தக் காலத்தில் நெடுந்தீவு,புங்குடுதீவு, நயினாதீவு போன்ற பல தீவுகளில் வயதானவர்களும், நோயுற்றவர்களும் மட்டுமே எஞ்சி நின்றார்கள். இலங்கை இராணுவம் அந்தத் தீவுகளை ஆக்கிரமித்தபோது, மு.பொவும் அப்படி தங்கிவிட்டவர் என மகாலிங்கம் எழுதியிருந்தார். பின்னர் 2000 தொடக்கத்தில் இருந்து கொழும்பில் மு.பொ வாழத் தொடங்கினார் என்று எழுதியிருப்பார்.

இது சரியான தகவலா எனத் தெரியவில்லை. ஏனெனில் நான் கொழும்பில் 90களின் மத்தியில் இருந்தபோது மு.பொவின் இளையமகன் எங்களோடு படித்துக் கொண்டிருந்தார். சிலவேளைகளில் பிள்ளைகள் தீவை விட்டு வெளியேற மு.பொ மட்டும் புங்குடுதீவில் வாழ்ந்தாரா என்று தெரியவில்லை. தமது புங்குடுதீவுக் கிராமம் கைவிடப்பட்ட துயரத்தை சு.வி(ல்வரத்தினம்) தனது 'காற்றுவழிக்கிராமம்' கவிதைத் தொகுப்பின் மூலம் காலத்தில் அழியாது நமக்கு ஆவணப்படுத்தியிருப்பார்.

சு.வி இந்தக் கவிதைகளை 'சரிநிகரில்' எழுதிக் கொண்டிருந்தபோது நான் கொழும்பில் எனது ஊரை விட்டும் வந்திருந்தேன். அதற்கு முன்னரே யாழ்ப்பாணத்தில் போரின் காரணமாக பல்வேறு கிராமங்களுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருந்தாலும், கொழும்புக்கு இடம்பெயர்ந்தபோது இனி என்றைக்குமாக ஊருக்கு மீளப் போகமுடியாது என்பது தெளிவாகப் புரிந்து போயிற்று. ஆகவே மீளமுடியாத் துயரத்தை சு.வியின் 'காற்றுக்கு வந்த சோகம்' கவிதையிலும், 'வேற்றாகி வந்த வெளி'யிலும் கரைத்துக் கொண்டிருந்தேன்.

எமது கிராமத்தை இராணுவம் கிட்டத்தட்ட சு.வியின் ஊரைக் கைப்பற்றிய 90களின் தொடக்கத்திலே கைப்பற்றியது. முற்றுமுழுதாக எமது கிராமத்தை விட்டு நீங்காத காலத்தில், இராணுவம் எந்நேரமும் எமது ஊருக்கு வந்த பயத்தில், பகலில் ஊரில் கழிப்பதாகவும், இரவில் இன்னொரு ஊரிலும் போய்த் தூங்குவதுமாகவும் மாதங்கள் கழிந்துகொண்டிருந்தன. இரவில் பக்கத்து ஊரில் நடந்து (சிலவேளைகளில் சைக்கிள் கிடைத்தால் அதில் ஏறிப்போவதோ) கூடப் பரவாயில்லை. ஆனால் விடிகாலையில் ஊருக்குத் திரும்புவதைப் போல நரகம் வேறில்லை.

அந்த நாள் விடிவதற்குள், மக்கள் தெருக்களில் நடமாடுவதற்குள் நாங்கள் திரும்பி ஊருக்குப் போகும்போது கடும் குளிராக இருக்கும். அப்போது சூரியன் வந்திராத மென்னிருளாக இருக்கும். யாழ்ப்பாணத்தில் இருந்த காலங்களில் ஆஸ்மா என் நிழலைப் போல எப்போதும் பின் தொடர்ந்து கொண்டிருப்பதால், இந்தக் குளிர் இன்னொரு எதிரியாகிவிடும்.

இப்படி போய்க்கொண்டிருந்த இரவு/பகல் இரட்டை வாழ்க்கை இனி வேண்டாமென்று, இராணுவம் ஊருக்குள் நுழையவும், நாங்கள் முற்றுமுழுதான அகதி வாழ்வுக்கு மாறியிருந்தோம். அப்போதும் ஊருக்கு அருகிலிருந்த இன்னொரு ஊரில்தான் இடம்பெயர்ந்திருந்தோம். அங்கேயேதான் எமது பாடசாலை மதிய நேரங்களில் நடந்துகொண்டிருந்தது. அகதி என்பதன் அடையாளமே சென்று சேரும் இடத்துக்கேற்ப தன்னை உடனே தகவமைத்துக் கொள்வதுதானே.

நானும் என் கைகளுக்குக் கிடைத்த புத்தகங்களையெல்லாம் வாசித்தபடி, ஏதேனும் கோயில்கள் நடத்தும் போட்டிகளில் பங்குபற்றியபடி இருந்தேன். ஈழத்தில் ஒரு கிருஷ்ணன் கோயில் இருக்கின்றதென்பதே அப்போதுதான் அறிந்தேன். அதில் விநாசித்தம்பிப்புலவர் என்பவர் ஏதோ சமயம் சம்பந்தமாக நடத்திய போட்டியில் பரிசொன்றை வென்றேன். (அவர் அன்றைய நாளுக்கான பிரசங்கம் நடத்திவிட்டு நம்மிடம் கேள்விகள் கேட்பார், நாங்கள் சரியான பதில்களை அளிக்கவேண்டும்., அப்படி ஏதோவொரு போட்டி)

இரவில் நடந்த பரிசளிப்புவிழாவில் அருமையான வர்ணப்பக்கங்களில் அச்சிடப்பட்ட (ராமகிருஷ்ணன் மடம் வெளியிட்ட நூல்களாக இருக்கவேண்டும்) நூல்களையும் வாங்கிக் கொண்டு எமது தற்காலிக வீட்டுக்கு -கற்கள் பரவிய தரையே தெருவெனச் சொல்லப்பட்ட- ஒழுங்கையால் நடந்துகொண்டிருந்தேன்.

இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த வீட்டுக்கும், கோயிலுக்கும் ஒரு கிலோமீற்றர் தூரந்தான் இருக்கும். பன்னிரண்டு வயதுச் சிறுவனுக்கு அது நெடும்பாதை. எந்த வெளிச்சமும் இல்லாத ஒழுங்கையில் நடந்துகொண்டிருக்கும்போது எங்கள் பாடசாலையில் படித்த ஒரு மாணவர் உங்கள் பக்கமாய் ஆர்மி வந்துவிட்டது என்றான். எனக்கு வந்ததோ அப்படியொரு பயம். என்ன நடக்கப் போகின்றதோ, அம்மா/அப்பாவை இனிப் பார்க்கமுடியுமோ என்று ஒரே பதற்றமாக இருந்தது.

ஏனெனில் அதற்கு சில மாதங்களுக்கு முன் தான் நாமெல்லாம் மத்தியானப் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை இராணுவம் அருகிலிருந்த சில கிராமங்களைப் பிடித்துக் கொண்டது. என்னோடு படித்த ஒரு தோழியின் பெற்றோர் அப்படி இராணுவம் பிடித்த கிராமத்தில் மாட்டுப்பட, இந்தத் தோழி தம் பெற்றோரிடம் போக வழி தெரியாது திகைத்து கேவிக்கேவி அழுது கொண்டிருந்ததைப் பார்த்திருந்தேன். ஒரு 12 வயதுப் பிள்ளை, பெற்றோர் இல்லாது எங்கே போய்த்தான் வாழ்வது?

எனக்கும் அந்தச் சம்பவம் ஞாபகத்துக்கு வந்து, இராணுவம் எங்கள் வீட்டைப் பிடித்துவிட்டால் நானெங்கே போவது என்று யோசிக்க, பயம் கூடி நெஞ்சு பதறத்தொடங்கிவிட்டது. வீட்டை நோக்கி இன்னும் வேகமாக ஓடிப்போய், 'அம்மா ஆர்மிக்காரங்கள் கிட்ட வந்திட்டாங்களாம், வாங்கோ வெறெங்காவது போவோம்' என்று நான் அவ்வளவு பெருங்குரலில் கத்திச் சொன்னது இப்போதும் நினைவுக்கு வருகின்றது. அந்த இரவில் இராணுவம் வரவில்லை. என்னைப் பயமுறுத்துவதற்காக அந்த நண்பன் 'சும்மா போகின்ற போக்கில்' சொல்லிச் சென்றிருந்தான்.

தற்கு முன்னரான காலமான இந்திய இராணுவக் காலத்தில் வேறுவிதமான அனுபவங்கள் இருக்கின்றன. இந்திய இராணுவக் காலத்தில்தான் எனது அக்கா யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். அவர் அப்போது பரமேஸ்வராச் சந்திக்கருகில் இருந்த வீடொன்றில் அறையெடுத்து தங்கியிருந்தபோதும், அங்கே இருப்பதும் பாதுகாப்பில்லையென அடிக்கடி வீட்டில் வந்து நிற்பார். சிலவேளைகளில் கொஞ்சம் சூழல் சுமுகமாகும்போது அவருக்கு வகுப்புக்கள் கம்பஸில் தொடங்கும். சில வாரங்களாக யுத்தம் காரணமாக நடக்காத வகுப்புக்கள் தொடங்கியபோது, இந்திய இராணுவ முகாங்களினூடாக எங்கள் ஊரிலிருந்து யாழ் நகர் செல்வது பாதுகாப்பில்லை என்பதால் என்னையும் அவ்வப்போது துணைக்கு அழைத்துச் சென்றார். ஒருமுறை அப்படி அக்கா என்னையும், அவரின் நண்பி அவரின் பக்கத்து வீட்டு பையனையும் (என்னைவிட 2 வயது மூத்தவர்) தமது சைக்கிள்களில் ஏற்ரிக்கொண்டு போனார்கள். தெருக்களில் இடைக்கிடை (தெல்லிப்பளை, சுன்னாகம், மருதனார்மடம்) இருந்த இராணுவ முகாங்களும், இராணுவத்தின் பாதுகாப்புச் சோதனைகளையும் கடந்து ஒருமாதிரி போய்ச் சேர்ந்துவிட்டோம். அக்காவும் அவரது நண்பியும் லெக்சர்களுக்குப் போக நானும் மற்றப்பையனும் காலையிலிருந்து மாலைவரை ஒரே அறையில் இருந்தோம்.

அவன் அப்போது ஒரு கதையைச் சொல்லத் தொடங்கினான். தனக்கு இந்த வயதிலேயே திருமணம் செய்துவிட்டது என்றான். எனக்கு அப்போது 10/11 வயதிருக்கும். எனவே அவன் சொல்வதை ஒரு கட்டத்தில் முழுவதாக நம்பத் தொடங்கினேன் (நல்லதொரு கதைசொல்லி போலும்). திருமணம் என்றால் அடுத்து என்ன நடக்கும், முதலிரவுதானே. அவன் அதையெல்லாம் விபரிக்க விபரிக்க நான் வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தேன். நான் மட்டும் கேட்டிருந்தால் பரவாயில்லை. அவன் சொன்ன 'கெட்ட' கதைகளை அந்த வீட்டுச் சொந்தக்கார அன்ரியும் கதவுக்குப் பின்னால் நின்று கேட்டதுதான் தவறாகிப் போய்விட்டது. பிறகு அக்காவிடம், அந்தப் பையன் மோசமானவன்,என்னை அந்தப் பெடியனோடு சேர விடவேண்டாமென்றெல்லாம் அறிவுரை சொல்லியிருக்கின்றார்.

அப்படி 10/11 வயதிலே காமத்தில் முற்றிப்போனவனின் 'மெக்ஸிக்கோ'வை வாசித்துவிட்டு இங்கிருக்கும் ஒரு எழுத்தாளர் 'மெக்ஸிக்கோ' பாத்ரூமுக்குள் கொண்டு போய் சுயவின்பம் செய்வதற்கு ஏற்ற நூல் என்று ஒரு விமர்சனத்தை வைத்தார். அப்போது நான் நினைத்தது; நான் 10 வயதிலிருந்து கேட்ட காமக்கதைகளை எல்லாம் எழுதினேன் என்றால் அவரால் ஒருவருடத்துக்கு மேலாக பாத்ரூமை விட்டு வெளியே வரமுடியாமல்தான் இருந்திருக்கும், நல்லவேளை நான் அதை இன்னும் செய்துவிடவில்லையென்று. மேலும், ஒரு நூலுக்கு எந்தவிதப் பயனும் இல்லாதிருப்பதைவிட சுயவின்பம் பெறுவதற்காவது அது உதவுகின்றது என்று நினைத்து அவர் மகிழ்ச்சியல்லவா அடைந்திருக்க வேண்டும்.

பாருங்கள்! மு.பொவைப் பற்றி வாசித்த கட்டுரை எங்கெங்கோ எல்லாம் அழைத்துச் சென்றிருக்கின்றது. அதைத்தானே ஒரு எழுத்துச் செய்யவேண்டும். நான் சொல்வதை மட்டுமே நீ கேட்கவேண்டும் என்று ஒரு பிரதி அடம்பிடித்தால் அதை வாசிப்பதால் என்ன பயன்? நமது நினைவுகளை, கற்பனைகளை விரிப்பதற்கான வெளிகளை உருவாக்குவதுதானே எழுத்து என்பதாக இருக்கவேண்டும்.

இந்தக்கட்டுரையில் ஒரு முக்கிய சம்பவமொன்று குறிப்பிடப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவம் செய்த மிலேச்சனத்தனமான செயல்களில் ஒன்று யாழ் வைத்தியசாலைக்குள் புகுந்து 60இற்கு மேற்பட்ட நோயாளிகள்/வைத்தியர்கள்/தாதிகளைப் படுகொலை செய்த சம்பவம். அந்த சம்பவத்தின்போது மு.பொன்னம்பலம் அதே வைத்தியசாலையில் தங்கியிருந்து அதிஷ்டவசமாக அந்தச் நிகழ்வு நடக்கும்போது வைத்தியசாலையை விட்டுத் தப்பியோடி ஊர் போய்ச் சேர்ந்திருக்கின்றார் என்று இதில் மகாலிங்கம் எழுதியிருக்கின்றார்.

அப்படியானால் மு.பொவுக்கு இரண்டாவது சந்தர்ப்பம் அல்லது ஒரு மீளுயிர்ப்பு அவரின் வாழ்க்கையில் வழங்கப்பட்டிருக்கின்றதெனச் சொல்லலாமோ தெரியாது. பலருக்கு இவ்வாறான சொற்ப கணங்களில் வாழ்தல் மாறி மரணத்தைத் தழுவிய சோகமான தருணங்களையும் யுத்தம் தன்னகத்தே வைத்திருந்தபோது மு.பொவின் அந்தத் தப்பிப்பிழைத்தல் ஒர் அதிசயமெனத்தான் எடுத்துக் கொள்ளவேண்டும்.

*"நீரறிவீரோ
என் நெஞ்சிலும்
கூடு கட்டி வாழும் குருவிகட்கு வாசலுண்டு
கூடிழந்து போனவரின்
நேசம் விட்டுப் போகாத நெஞ்சகத்தில் சோகமுண்டு
நீரறிய மாட்டீர்.

நீரறிதல் கூடுமெனில்
கோடைவழிப் போக்கில்
குளிர்த்தி வற்றிப்போன எங்கள் வாழ்நிலையின் சோகத்தை
எம்மவரைக் கண்டு இயம்புதல் கூடுமோ?
சற்றெமக்கு இரங்குங்கள்
நாளை நாளையெனக் காத்திருந்த நம்பிக்கை
முளைகருகிப் போகுமுன்னே வரவுண்டோ கேளுங்கள்."

 
*******

* சு.வில்வரெத்தினத்தின் 'காற்றுவெளிக் கிராமம்' தொகுப்பில் இருக்கும் 'புள்வாய்த்தூது' கவிதையின் ஒருபகுதி.

 

 புகைப்படம்: இணையம்

(Mar 04, 2025)

0 comments: