கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 83

Friday, March 28, 2025

 

ங்கரி சந்திரனின் ' சூரியக் கடவுளின் பாடலை' (Song of the Sun God) நேற்று முழுதுமாக இருந்து வாசித்து முடித்தேன். கிட்டத்தட்ட 400 பக்கங்கள் இருக்கும். ஏற்கனவே சிலமுறை வாசிக்கத் தொடங்கி கொஞ்சப் பக்கங்களிலேயே நிறுத்திவிட்டிருந்தேன். தொடர்ச்சியாக ஒரே பின்னணியில் கதைகளை வாசிப்பது ஒருபுறம் அலுப்படைய வைக்கின்றதென்றால், இன்னொருபுறம் போரின் பின்னணியில் சொல்லப்படும் கதைகளினால் 'கடந்தகால உளவடுக்கள்' கிளறப்பட்டு அந்த நாளே மோசமாகிவிடும். சங்கரியின் இந்த நாவலும், இன்னொரு நாவலும் (Chai Tea at Cinnaman Gardens) நான் கேட்டதற்கிணங்க 'எழுநா' நண்பர்களால் அனுப்பப்பட்டு இவற்றை இன்னும் வாசித்து முடிக்கவில்லையே என்கின்ற குற்றவுணர்வும் இருந்து கொண்டிருந்தது.

இந்த நாடு மூன்று தலைமுறையின் கதையைச் சொல்வது. இதைவிட இந்த நாடு எனக்கு நெருக்கமானது இந்த நாவலின் முக்கிய பாத்திரங்கள் எங்கள் ஊரில் இருந்து வார்க்கப்பட்டிருப்பவை. வைத்தியர் ரஞ்சன் (அளவெட்டி), அவர் மணமுடியும் நளா (தெல்லிப்பளை) என்று எனக்கு மிக நெருக்கமான இரண்டு ஊர்களில் இருந்து வரும் பாத்திரங்களின் கதை 1930களில் இருந்து தொடங்குகின்றது. இங்கே இப்போது நாவலைப் பற்றிப் பேசப்போவதில்லை. இந்த நாவலில் 150 பக்கங்களைக் கடக்கின்றபோது கல்லோயா குடியேற்றப் பகுதியில் நடக்கும் (1956) இனக்கலவரத்தில் நளாவின் கஸின் சகோதரனான மோகன் கொல்லப்பட்டு, அவரின் மனைவியான வாணி மீது பாலியல் வன்முறை நிகழ்த்தப்படுவதையும், அவர்களின் 8 வயது பிள்ளையான தாரா இவற்றின் நேரடியாகச் சாட்சியாக இருப்பதும் விபரிக்கப்பட்டிருக்கும்.

அந்தப் பகுதியோடு மூடிவைத்துவிட்டு கொஞ்ச நேரம் அமைதியாக யன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்குள் நான் சிறுவயதில் இந்திய இராணுவ காலத்தில் பார்த்த சில சம்பவங்கள் முன்னே விரிந்து கொண்டிருந்தன. பெருமூச்சை விட்டபடி, மீண்டும் நாவலை வாசிக்கத் தொடங்கியபோது, இப்போது வைத்தியராகிவிட்ட தாரா யாழ் வைத்தியசாலையில் பணிபுரிகின்றார். ஆனால் அவர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் 'தொற்றுநோய்' பணியில் இருந்தபோது, தமிழ் இயக்கங்கப் பெடியங்களுக்கு உதவினார் என்று இலங்கை இராணுவம் அவர் மீது பாலியல் வன்முறையை மேற்கொள்கின்றது.

இவ்வாறு பெண்கள் மீதான சித்திரவதைகள் இறுதியுத்தம் முடிந்த முள்ளிவாய்க்கால் வரைக்கும் எண்ணற்று நடந்து முடிந்திருக்கின்றன. அதுமட்டுமின்றி சில நாட்களுக்கு முன் அனுராதபுரத்தில் ஒரு வைத்தியர் மீது, முன்னாள் சிங்கள இராணுவத்தினன் செய்த சம்பவமும் பெண்ணுடல் மீதான் வன்முறைகள் இன்னமும் முடிந்துவிடவில்லையெனச் சொல்கின்றது.

க நாம் எப்போதாவது இப்படியான சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டு இப்போதும் உயிரோடு வாழும் பெண்களின் நிலைமையைப் பற்றி யோசித்துப் பார்க்கின்றோமா? நான் என் சிறுவயதுகளில் -நேரடியாகப் பாதிக்கப்படாது- சாட்சியமாய்ப் பார்த்த சில சம்பவங்களையே இந்த வயதிலும் கடந்து வர முடியாதிருக்கும்போது, இந்தப் பெண்கள் அவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகளால் மட்டுமின்றி, இவ்வாறாக நடக்கும் மற்ற சம்பவங்களாலும் எந்தளவு trigger செய்யப்படுவார்கள் என்று அக்கறைப்படுகின்றோமா? நமது சமூகத்தில் இவ்வாறான விடயங்கள் இன்னமும் taboo ஆக இருப்பதால், இவற்றை வெளிப்படையாகப் பேசவும் முடியாது, அவர்கள் தமது வடுக்களை ஆற்றமுடியாத (healing) அவதியில்தான் தமது வாழ்வைக் கொண்டு செல்கின்றார்கள். அந்த உளநிலை எப்படி இருக்குமென உண்மையான அக்கறையுடன் ஒரு கூட்டு சமூகமாக சிந்தித்து ஏதேனும் உருப்படியான காலடிகளை நாம் முன்வைத்திருக்கின்றோமா?

இல்லவே இல்லை!ஆனால் நம்மைப் போன்றவர்கள் செய்வதுதான் என்ன?

இவ்வாறு காலங்காலமாக பெண்களின் உடல்கள் மீது வன்முறை குறித்து (இது தவிர்த்து நாளாந்த வாழ்வில் பெண்களுக்கு நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை சம்பவங்கள்தான் எத்தனை) நாம் அக்கறைப்படாது, பெண்களுக்கான சுதந்திரமான வெளிகளை உருவாக்கத் திராணியற்றுத்தான் இருக்கின்றோம்.

பாராளுமன்றத்தில் எவ்வித அரசியல் தெளிவுமில்லாது ஒரு தமிழ்நாடாளுமன்ற்ற உறுப்பினர், சில பெண்களை நோக்கி 'விபச்சாரி' என்ற வார்த்தைகளை அள்ளிவிடுவது மட்டுமில்லை, அந்த 'ஆசாமி' பேசியதை நியாயப்படுத்தவும் நம்மில் பலர் இருக்கின்றார்கள் என்பது அவமானமானது.

ஆகக் குறைந்தது நமது பெண்களுக்கு போரை முன்வைத்து நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் குறித்து ஒருவருக்கு உண்மையான அக்கறையிருப்பின், சமகாலத்தில் நியாயங்களைப் பேசும் பெண்களின் பக்கம் நின்று எவ்வித முன்நிபந்தனையுமின்றி அவர்களை ஆதரிக்க வேண்டும். ஆனால் நடப்பதுதான் என்ன? அப்படிப் பேசும் பெண்களின் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளை வைத்து அவர்களையும் பாலியல் சொற்களால் வசைபாடி இந்த விடயத்தை நீர்த்துப் போகச் செல்கின்றனர். ஒரு முக்கிய விடயத்தை எப்படிப் பேசுபொருளாக்குவது, அதற்கான நியாயங்களை நோக்கி எப்படி நகர்வது என்பதைத் தவிர, மிகுதி அனைத்து தேவையற்ற விடயங்களையும் செய்யத் தகுதியானவர்கள்தான் இவர்கள்.


நிச்சயமாக ஆண்களைப் போலவே பெண்களுக்கும் 'ஏஜென்சிகள்' இருக்கின்றன. அந்த 'ஏஜென்சிகள்' ஆண்களைப் போலவே, ஒவ்வொரு பெண்களுக்கும் வேறுபடகூடியதே. அதை வேண்டுமென்றால் இன்னொரு இடத்தில் பேசலாம். ஆனால் ஒருவர் பெண்ணாக இருப்பதாலேயே அரசு, இராணுவம் மட்டுமின்றி கூடப் பழகும் சகமனிதர்களால் கூட அந்த உடல்கள் மீது எளிதாக அத்துமீறல்களும், சேஷ்டைகளும் செய்யப்படும்போது, இவ்வாறான சந்தர்ப்பங்களில் கூட, அதைப் புரிந்துகொள்ளாமல் யாரேனும் தம் அறிவுஜீவித்தனத்தை காட்டப்போகின்றார்கள் என்றால் அந்த ஆண்களை நாம் முற்றாக நிராகரிக்க வேண்டுமெனவே சொல்வேன்.

பெண்ணுடல்கள் மீதான வன்முறைகளின் கொடுமைகளை அறிய ஒருவர் அவ்வளவு கஷ்டப்படவெல்லாம் தேவையில்லை. அவரவர் தமது காதலிகள்(மனைவிகள்), சகோதரிகள் போன்றோர் பேசுவதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்டுப் பாருங்கள் . எந்தப் பெண்ணாவது தமது வாழ்க்கையின் ஏதேனும் ஒரு பொழுதாவது இப்படியான தம்முடல் மீதான அத்துமீறலைச் சந்திக்காமல் வந்திருப்பது மிக அரிதாகவே இருக்கும். நாம் இவற்றை கொஞ்சமாவது இப்போதேனும் மாற்றாவிட்டால், நாளை நமது பெண் குழந்தைகளும் இந்தச் சூழலைத்தான் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

 
***********

( March 19, 2025)

0 comments: