சுற்றுச் செலவுக் கலை
***
தனிநாயகம் அடிகளாரின் தமிழ்ப்
பற்றையும், தமிழ்த் தொண்டையும் நாமனைவரும் அறிவோம். தமிழை உலகறியச் செய்த
முக்கியமான ஆளுமைகளில் ஒருவரென அவரை நாம் தயக்கமேதுமின்றிச் சொல்ல
முடியும். அவர் தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி இத்தாலியன், இலத்தீன்,
ஸ்பானிஷ், கிறீக், ஜெர்மன், பிரெஞ்சு உள்ளிட்ட பலமொழிகளில் பாண்டித்தியம்
பெற்றிருந்தவர். அவர் நூற்று முப்பதுக்கும் மேலான நூல்களை
எழுதியிருப்பதாகச் சொல்கின்றார்கள்.
அவர் எழுதிய நூல்கள், அவர்கள்
வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று தமிழ் மொழி/பண்பாடு குறித்து ஆற்றிய
சொற்பொழிவுகள், தனியொரு மனிதராக அவர் கட்டியமைத்த உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனம் நடத்திய சர்வதேச மாநாடுகள் பற்றியல்ல நான் இங்கே பேச விரும்புவது.

பின்னர் அது அருகிலிருந்த இன்னொரு தீவான நெடுந்தீவுக்கும், தொடர்ந்து அவரது 12 வயதில் தனது தகப்பனோடு இந்தியாவுக்குச் செல்லும் பயணமாகவும் நீட்சியடைகின்றது என்கின்றார். தனது சிறுவயதுக்காலத்தில் ஊர்காவல்துறை ஒரு முக்கிய துறைமுக நகர். பல நூற்றுக்கணக்கான படகுகள் பாய்விரித்து நிற்பதும், அப்படித் தங்கி நிற்கும்போது அவை பழுதுபார்க்கும் இடங்கள் உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பதையும், அங்கே வந்து சேரும் மாலுமிகளின் கதைகளைக் கேட்பதில் இருந்து தனது பயணங்களுக்கான விதை ஊன்றப்பட்டிருக்கலாமெனவும் பதிவு செய்கின்றார்.
அத்தோடு வேற்று நாடுகள் செல்லும் 5000 இற்கும் மேற்பட்ட பாய்மரக் கப்பல்கள் ஊர்காவல்துறையில் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் அடிகளார் சொல்கின்றார். பாக்கு நீரிணையால் பல பாய்மரக்க்கப்பல்கள் வணிகம் நிமித்தம் சென்று கொண்டிருந்த காலமாக அது இருக்கக்கூடும். இப்படி புகழ்பெற்ற ஊர்காவல்துறை பின்னர் அரசியல் காரணங்களால் பொலிவிழந்து போனது குறித்தும் இதில் அவர் விபரிக்கின்றார்.
பக்கத்திலிருந்த யாழ் நகருக்கு போகவே மூன்று மணித்தியாலங்கள் எடுக்கும் ஒரு தீவில் பிறந்த தனிநாயகம் அடிகளார், இந்த 'ஒன்றே உலகம்' நூலில் கிட்டத்தட்ட 50 நாடுகளுக்கு மேலாக உலகின் அனைத்துக் கண்டங்களுக்கும் (ஆஸ்திரேலியா) தவிர்த்து பயணித்திருக்கின்றார் என்பதும், அந்த நாடுகளின் நிலவியல் பற்றியும், கலாசாரம் பற்றியும், மக்களின் உளவியல் பற்றியும் விபரித்திருக்கின்றார் என்பதும் வியப்பானது. கிட்டத்தட்ட இந்த நாடுகள் அனைத்தையும் அவர் 1950/60இற்கு முன்னரே பார்த்து முடித்திருப்பார் என்றே எண்ணுகின்றேன். இந்நூல் அறுபதுகளின் மத்தியில் நூலாக்கம் பெற்றிருக்கின்றது.
எனக்கு மிக வியப்பாக இருப்பது என்னவென்றால், அவர் ஐரோப்பாவையோ, அமெரிக்காவையோ, தென் கிழக்காசியாவையோ பார்த்ததல்ல, தென்னமெரிக்காவில் ஆர்ஜெண்டினாவின் அந்தம் வரை போயிருப்பதும், இன்றைக்கும் பலர் போகத் தயங்குகின்ற ஆபிரிக்காக் கண்டத்தின் அரைவாசிக்கும் மேற்பட்ட நாடுகளையும் பார்த்திருப்பதும், அவற்றை விரிவாக எழுத்தில் பதிவு செய்திருப்பதுமாகும்.
ஐக்கிய அமெரிக்காவின் அன்றையகால வளர்ச்சியைச் சொல்லும் அதேசமயம் அடிகளார் அதன் தென்பகுதியில் தெளிவாகத் தெரியும் கறுப்பின மக்கள் மீதான ஒடுக்குதல்களையும், அவர்கள் மீது காட்டப்படும், வேறுபாடுகளையும் விபரிக்கின்றார். அதுபோலவே தென்னமெரிக்காவில் மாயா, இன்கா, அஸெட்டஸ் இனப் பூர்வீக மக்களின் வாழ்வை எப்படி ஸ்பானியர்களால் அழிக்கப்பட்டது பற்றியும், அன்றே அவர் பெருவின் குஸ்கோ, மச்சுபிச்சு எல்லாம் சென்று பார்க்கின்றார் என்பது வியப்பானது.
அன்றைய அமெரிக்காப் பயணங்களில் இலங்கையைப் பற்றி பள்ளி மாணவர்கள் உள்ளிடப் பலரிடம் கேட்டபோது அவர்களுக்கு அது தெரியவில்லை என்றும், பல அமெரிக்கர்களுக்கு இந்தியா என்பது அசுத்தமான இடம் என்பது போன்ற விம்பம் இருந்ததாகவும், அதேவேளை தென்னமெரிக்க மக்கள் வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் என்றும், அவர்கள் பாடல்களிலும் ஆடல்களிலும் உற்சாகமாக ஈடுபடுபவர்கள் என்றும், அத்தோடு அவர்களுக்கு இந்திய கலைகள்/நடனங்கள் மீது அதிக ஈர்ப்பிருப்பதையும் இந்த நூலில் அடிகளார் பதிவு செய்கின்றார்.
ஒரு நாட்டின் உண்மையான பண்பாட்டையோ, வாழ்க்கை முறையையோ, எவரும் அதன் தலைநகரைப் பார்ப்பதால் கண்டுகொள்ள முடியாதென்றும், ஏனென்றால் அங்கே பலவிதமான நாட்டு கலாசாரமக்கள் வசிக்கக்கூடுமென்றும், கிராமங்களை நோக்கிப் பயணிப்பதே ஒரு நாட்டை உண்மையாகப் பார்ப்பதற்கு ஒப்பானது என்று கூறி அடிகளார் கிடைக்கும் சந்தர்ப்பம் எல்லாம் சிறிய நகரங்களுக்கும்/ஊர்களுக்கும் ஒவ்வொரு நாடுகளுக்குப் போகும்போதும் பயணிக்கின்றார்.
அதுபோலவே தனக்குப் பிறமொழிகள் பலது தெரிவதால் மற்றவர்கள் தன் நிறத்தை/தலைமயிரை/உடலமைப்பைப் பற்றிப் பேசுவதை எல்லாம் தெரியாது மாதிரிக் கேட்டுவிட்டு, அவர்களிடம் ஏதோ ஒருவகையில் அவர்கள் பேசும் மொழி தனக்குத் தெரியும் என்று காட்டும்போது அவர்கள் அதிர்ச்சியடைவதைப் பார்ப்பது தனக்கு நகைச்சுவை விளையாட்டாக இருக்கின்றது என்கின்றார்.
ஒருமுறை ஆர்ஜெண்டீனாவுக்குப் போனபோது ஒரு கடைநிலை ஊழியன், நீங்கள் அன்பைப் போதிக்கும் ஒரு ஃபாதர் என்றால், எங்கள் மொழியைக் கற்று எங்கள் மக்களுக்குப் போதிக்க்கவேண்டும் ஸ்பானிஷ் கற்கும் நூலைத் தந்துவிட்டுப் போனதையும் அடிகளார் பதிவு செய்கின்றார் (இதன் பிறகுதான் அடிகளார் ஸ்பானிஷில் முழுத்தேர்ச்சி பெற்றாரோ தெரியவில்லை).
அதுபோலவே இங்கிலாந்தில் கேம்பிறிஜ் புத்தக நிலையமொன்றில் அங்கு வந்த இத்தாலியர்கள் தன் நிறம்/உடல் அமைப்புப் பற்றி நிறைய இத்தாலியன் மொழியில் பேசுவதை அமைதியாகக் கேட்டுவிட்டு, இறுதியில் 'ஐயா, இந்த இடத்திலிருந்து மறுபக்கம் போக என்னை மன்னித்து இடங்கொடுங்கள்' என தெள்ளிய இத்தாலியன் மொழியில் சொல்ல அவர்கள் உறைந்துபோய் உடனேயே அந்த புத்தகக் கடையிலிருந்து தப்பியோடியதையும் பதிவு செய்கின்றார்.
இன்னொருமுறை ஒரு இலங்கையர் அமெரிக்காவில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அந்த இளம்பெண் ஆங்கிலத்தில் பேசியவுடன், பக்கத்திலிருந்த அமெரிக்கர் 'அடக்கடவுளே அது பேசுகிறது' என்று அஃறிணையில் பேசியதையும் குறிப்பிட்டுச் சொல்கின்றார். இப்படி ஒருபக்கம் இனத்துவேஷம் அமெரிக்காவில் இருக்கையில், இன்னொருபுறம் அன்றைய கால அமெரிக்கர்களுக்கு, இப்படி இலங்கை/இந்தியாவில் வரும் எவரும் செல்வந்தர்கள் எனவும், அவர்கள் ஏதோ அந்நாட்டின் மன்னர் பரம்பரையில் வந்த இளவரசர்/இளவரசி என்கின்ற நினைப்பும் இருந்தது என்கின்றார். அவர்களால் தன்னைப் போன்ற ஒரு நடுத்தர வர்க்கத்தினர் இப்படி அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு வரமுடியாது என்று உறுதியாக அந்தக்காலத்தில் நம்பினார்கள் என்றும் அடிகளார் குறிப்பிடுகின்றார்.
இதற்கு ஒரு நல்லதொரு உதாரணமாக அடிகளார் ஒரு அருங்காட்சியகத்துக்குப் போகும்போது நிகழ்கிறது. அடிகளார் இலங்கையைச் சேர்ந்தவர் என்றவுடன் அந்த மியூசியத்துக்காரர், உங்கள் நாட்டிலிருந்து ஒரு இளவரசி எங்கள் மியூசியத்துக்கு வந்தவர் என்று சொல்லத் தொடங்குகின்றார். அடிகளார் இது யாரோ செய்த ஏமாற்றுத்தனம் என்று விளங்கியபோதும், அவர்கள் சொல்வதை நிதானமாகக் கேட்கின்றார். அவர்கள் அந்த ஈழத்து இளவரசி வந்து அந்த விபரம் செய்தித்தாளில் வந்ததைக் காட்டுகின்றார். அதில் ஒரு ஈழத்துப் பெண், கணுக்கால் நீளமான ஆங்கிலேயக் கவுணும், தலையில் இந்தியர்களின் தலைப்பாகையையும் அணிந்து, மியூசியத்துக்கு வந்தவர்களை ஒரு அரச பரம்பரையைச் சேர்ந்தவர் போல வணங்கிக் கொண்டிருக்கின்றார். அந்தப் பெண் நியூ யோர்க்கில் பல்கலைக்கழகம் ஒன்றில் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கின்றார். படிப்பு முடிந்ததும் இலங்கைக்குப் போய் தனது குடிகளுக்கு வைத்தியம் பார்க்கப் போகின்றதாகச் சொல்லியிருப்பதாகவும் எழுதப்பட்டிருக்கின்றது.
எனக்கு இதை வாசிக்கும்போது எழுத்தாளர் தம்பிமுத்து இங்கிலாந்து போனபோதும் தனது நண்பர்களிடையே தான் ஒரு அரச பரம்பரையைச் சேர்ந்தவர் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்த கதைதான் நினைவுக்கு வந்தது. தம்பிமுத்துக்காவது, மாமன் ஆனந்த குமாரசுவாமி, சுவாமி ஞானப்பிரகாசர் என்று ஒரு பரம்பரை இருந்திருக்கின்றது. அதை நீட்டித்தால் ஒருவேளை யாழ் அரச பரம்பரையின் lineage வரலாம். ஆனால் யாழ் அரசபரம்பரை என்பதே போர்த்துகேயர் வந்த 15ம் நூற்றாண்டோடு அடிவேரில்லாது போனதுதான் வரலாறு. பிறகு முழுவதும் அவர்களுக்கும், டொச்சுக்காரருக்கும், ஆங்கிலேயருக்கும் அடிமையான வரலாறும், 'எங்கள் வாப்பாக்கொரு ஆனை இருந்தது' என்ற பழங்கதை பேசலும் மட்டுமேதான் யாழ் அரச பரம்பரைக்கு மிஞ்சியிருந்தது.
ஆங்கிலத்தில் பாண்டித்தியம் பெற்ற பலருக்கு தமிழில் எழுதும்போது சிக்கல் வரும். அப்படியில்லாது தெள்ளிய நடைமொழியில் இதை அடிகளார் எழுதியிருக்கின்றார். இத்தனைக்கும் அவர் தனது 21வது வயதில் இத்தாலிக்கு கல்வி கற்பதற்காக இலங்கையை விட்டுப் புறப்பட்டவர் என்பதைக் கவனித்தாக வேண்டும்.
இதில் அடிகளார் கூறும் இந்தப் பகுதி எனக்கு மிகப் பிடித்தமானது:
'பிரயாணஞ் செய்வது ஒரு கலை. ஒரு சிறு பணத்தொகையுடன் பல இடங்களைக் காண்பது எப்படி, ஓர் இடத்திற்குச் சென்றால் எங்கு அதனைப் பார்க்க வேண்டும், யாரைச் சந்திக்க வேண்டும், எத்தகைய விடுதியில் தங்கவேண்டும் என்பன போன்ற விவரங்களைப் பழகிய சுற்றுச் செலவுக்காரர்களிடமிருந்து அறிந்து கொள்வது நன்று' என்று எழுதியிருக்கின்றார். அன்றைய காலத்தில் பயணிப்பவர்களை 'சுற்றுச் செலவுக்காரர்' என்று சொல்லியிருக்கின்றனர் போலும்.
மேலும், 'பிற நாட்டுக்குச் செல்பவர் அனைவரும் பெருஞ் செல்வர் என்று நினைப்பது தவறாகும். ஒருவர் தம் நாட்டிலேயே பிரயாணம் செய்வதுகூட அறிவை வளர்த்து விரிவடையச் செய்யும். எனவே, கல்விக் கழகங்களும் ஏனைய கழகங்களும் செலவுக் குழுக்களை ஏற்படுத்திப் பிரயாணப் பழக்கத்தை மக்களிடையே பரப்ப வேண்டும்' என்றும் அடிகளார் சொல்கின்றார்.
இந்த நூலை நான் என் பதின்மங்களில் வாசித்திருந்தால், என் 'சுற்றுச் செலவுக் கலை'யை நானும் அப்போதே உற்சாகமாக ஆரம்பித்திருப்பேனோ தெரியவில்லை.
***

0 comments:
Post a Comment