கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

துடுப்பாடும் ஆனந்தி

Friday, January 23, 2026

 

-சிறுகதை-

'டாடி, நீங்கள்தானா எங்கள் அம்மாவைக் கொன்றது' என்று மகள் கேட்டபோது தேவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்தக் கேள்வி எப்படியோ பிள்ளைகளிடமிருந்து ஒருநாள் கேட்கப்படும் என்று தேவனுக்குத் தெரிந்திருந்தது, ஆனால் இவ்வளவு விரைவில்  கேட்கப்படும் என்பதைத்தான் தேவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவர் உடல் ஒரு கணம் விதிர்விதிர்த்து, வியர்வையில் தெப்பலாக நனையத் தொடங்கியது.

தேவனுடைய மனைவி ஆனந்தி கலகலப்பானவர், செல்வம் கொழித்த குடும்பப் பின்னணியில் வளர்ந்தவர். அந்தக் குடும்பத்தின் பெயரில் நாட்டின் பல பாகங்களில் பாடசாலைகளும், கோயில்களும் இருந்தன. ஆனந்தியின் தாத்தாவிற்கு பிரிட்ஷ்காரர்கள் 'சேர்' என்று பட்டங்கொடுத்து கெளரவிக்குமளவுக்கு அவர்கள் நாடு முழுதும் மிகுந்த  செல்வாக்குள்ளவர்களாக இருந்தார்கள். 

தேவன் அப்போது ஒரு பிரபல்யமான கிரிக்கெட் விளையாட்டுக்காரர். வலது கரத்தில் மின்னல் பாய்வதுபோல அவரது துடுப்பு மைதானத்தில் நடனமாடும். அவரின் ஆட்டத்தைப் பார்ப்பதற்கென்றே அவருக்கு ஓர் இரசிகர் பட்டாளம் இலங்கையில் இருந்தது. எந்தளவுக்கு சிறந்த கிரிக்கெட்காரராக தேவன் இருந்தாரோ அந்தளவுக்கு பெண்கள் விடயத்தில் 'தீராத விளையாட்டுக்கார'ராகவும் இருந்தார்.
 

இரவிரவாக மதுவில் நீராடுவதிலும், விடிய விடிய நடனவிடுதிகளில் பெண்களோடு சேர்ந்து நடனமாடுவதிலும் அலுக்காத ஒருவராக தேவன் இருந்தார். தேவனின் இந்த வித்தைகளைப் பார்க்கும் நண்பர்கள் எல்லாம், 'மச்சான், இவன் மட்டுந்தான் கால்களின் பெறுமதியை கிரிக்கெட்டிலும், நடனத்திலும் சரியாகப் பயன்படுத்துகின்றவன்' என்று பொறாமையில் சொல்லித் திரிவார்கள்.

இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து  கிரிக்கெட் ஆட்டங்கள் நடக்கும்போது , விடிய விடிய விழித்திருந்து தேவன் மது அருந்துவதைப் பார்ப்பவர்கள், நாளை இவனால் தள்ளாடாமல் கிரிக்கெட் ஆடமுடியுமா என்று ஐயமுறுவார்கள். ஆனால் மைதானத்திற்குள் வந்துவிட்டால் தேவன் வேறொருவராக விசுவரூபம் எடுத்துவிடுவார். இந்த மனிதனா நேற்று மதுவின் குளியல்தொட்டிக்குள் நீச்சலடித்தான் என்று சந்தேகிக்குமளவுக்கு தேவனின் துடுப்பு பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அப்பால் விளாசித் தள்ளும்.

அப்போது இலங்கை அணிக்கு சர்வதேசத்தில் கிரிக்கெட் விளையாட அனுமதி கிடைத்திருக்கவில்லை. ஒருபொழுது ஆஸ்திரேலியா அணி அவர்களின் நட்சத்திர வீரரான டொன் பிராட்மனோடு இலங்கைக்கு கிரிக்கெட் விளையாட வந்தபோது தேவனே இலங்கை அணிக்கு தலைமை தாங்கியிருந்தார். இலங்கை கிரிக்கெட் அணியில்  ஓன்றிரண்டு தமிழர்களே விளையாட இத்தனைகால வரலாற்றில்  இடம்பெற அனுமதிக்கப்பட்டபோது, ஒரு தமிழர்  அதற்கு ஒருபொழுது தலைமை தாங்கியிருக்கின்றார் என்பதை இப்போது நினைத்துப் பார்த்தால் கூட ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

தேவன் சென்னை சேப்பாக்கத்தில் சாகசம் நிகழ்த்திப் பெற்ற 215 ஓட்டங்கள்தான் அவரை ஓர் நட்சத்திர வீரராக உலங்கெங்கும் மாற்றியது. தேவன் சென்னைக்குப் போனபோது அவரது கையில் ஆடுவதற்கு ஒரு துடுப்பு கூடக் கிடையாது. அவசரமாக அருகிலிருந்த கடையில் துடுப்பை  வாங்கிக் கொண்டு மைதானத்துக்குள் நுழைந்திருக்கின்றார். அன்றைய காலங்களில் இந்தியா அணியிடம் இலங்கை அணி மிக மோசமாகத் தோற்றுக் கொண்டிருந்தது. தேவனின் துடுப்பு காற்றில் எழுதிய கவிதையில் அவர் இரட்டைச் சதத்தை சேப்பாக்கத்தில் பெற்றிருக்கின்றார்.

தேவனின் ஆட்டத்தில் மெய்சிலிர்த்துப்போன ஒரு சென்னை இரசிகர், அவர் முதல் சதத்தை அடித்தபோது தேவனுக்குப் பிடித்த ரம் போத்தலை அன்பளிப்பாகக் கொடுத்திருக்கின்றார். அதைக் கொடுத்தது மட்டுமில்லை, 'நாளை நீ இரட்டைச் சதத்தை அடிப்பாயானால், நீ பம்பாய் நகரைப் போய்ப் பார்ப்பதற்கான  பயணச்செலவும் எனக்குரியது' என்றிருக்கின்றார் அந்தத் தீவிர இரசிகர். தேவன் ரம் போத்தலை தனது காதலியைப் போல உச்சிமோர்ந்து முத்தமிட்டுவிட்டு,  'நாளை மும்பாயிற்கான விமான டிக்கெட்டோடு தயாராக வாருங்கள்' என்று கண்ணைச் சிமிட்டிச் சொல்லியிருக்கின்றார். முதல் நாள் இரவு  அருந்திய ரம்மாலோ, இல்லை உண்மையாகவே  திறமையாலோ, தேவன் அடுத்தநாள் இரட்டைச் சதத்தை எட்டியிருக்கின்றார். தேவனின் இந்த இரட்டைச் சதத்தை இன்னொரு இலங்கை வீரர் வந்து அதே  சேப்பாக்க மைதானத்தில் முறியடிக்க கிட்டத்தட்ட அதற்குப் பிறகு முப்பது வருடங்களாகி இருக்கின்றது.

*

தேவன் இவ்வாறு ஒரு உச்ச கிரிக்கெட் ஆட்டக்காரராக உயரங்களில் ஏறிப் போனபோது இன்னொருபக்கத்தில் குடும்ப வாழ்வில் அதளபாதாளத்தில் விழுந்து கொண்டிருந்தார்.  அவருக்கும் ஆனந்திக்கும் நான்கு பிள்ளைகள் அப்போது பிறந்திருந்தன. தேவனுக்கும் முப்பது வயதைத் தாண்டியிருந்தது. தேவன் மற்ற கிரிக்கெட்காரர்கள் போல ஒரு வேலைக்கு போகவோ, நல்லதொரு குடும்பஸ்தவனாக இருக்கவோ பிரியப்படவில்லை. மனைவியினது பூர்வீகச் சொத்துக்களின் நிமித்தம் அவர் வாழ்க்கை  நதி போல மதுவிலும், கிரிக்கெட்டிலும் பொங்கிப் பிராவகரித்துக் கொண்டிருந்தது. ஆனந்தியால் தேவன் வேலைக்குப் போகவில்லை என்பதை ஏதோ ஒருவகையில் ஏற்றுக்கொள்ள முடிந்ததென்றாலும், தேவனின் முடிவுறாத பெண்களின் மீதான பித்தை மட்டும் ஒருபோதும் தாங்க முடியாதிருந்தது.

தேவனுக்கு அப்போது ஆங்கிலேயப் பின்னணியில் வந்த ஒரு காதலி இருந்தார். அந்தக் காதலியோ விரைவில் ஆனந்தியை விவாகரத்துச் செய்துவிட்டு தன்னைத் திருமணம் செய்யும்படி தேவனுக்கு நெருக்குவாரம் கொடுத்தபடி இருந்தார். தேவனுக்கு ஆனந்தியின் பணக்காரப் பின்னணியால் கிடைக்கும் செளகரியங்களை விட்டு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்ய அவ்வளவு ஈடுபாடு இருக்கவில்லை. எந்த ஆண்தான் குடும்பம் என்ற அமைப்பால் வரும் வசதி வாய்ப்புக்களை விட்டு விலகிச் செல்ல விரும்புவார். தேவனும், மனைவியை ஒரு புறம் வைத்துக்கொண்டு, கிருஷ்ணனைப் போல கோபிகையர்களின் பின்னால் அலைந்தபடி திரிந்தார். 

திருமணமான புதிதில் தேவனின் இந்த காதல் லீலைகளை கண்டு வெறுத்து, விவாகரத்து வேண்டுமென்று ஆனந்தி தேவனிடம் கோரியிருந்தார். நிலைமை இந்தளவுக்கு விபரீதமாகப் போய்விட்டதே என்று சுதாகரித்த இரண்டு பேரினதும் செல்வாக்குள்ள குடும்பங்கள் தலையிட்டுத்தான் அந்த வழக்கை மீளப்பெற வைத்திருந்தனர்.
ஆனால் காலம் செல்லச் செல்ல, நான்கு பிள்ளைகள் பிறந்தபின்னும் பெண் பித்தில் திளைத்துக் கிடந்த தேவனை என்ன செய்வதென்றும் ஆனந்திக்கும் விளங்கவில்லை. வெள்ளைக்காரப் பெண்ணோடான புதிய காதல் உறவை விட்டுவிட்டு தன்னிடமும் தன் குழந்தைகளிடமும் மீண்டு வரும்படி ஆனந்தி தேவனிடம் மன்றாடியிருக்கின்றார். அது இனி ஒருபோதும் சாத்தியமில்லை என்ற முடிவுவந்தபோதே ஆனந்தி விவாகரத்தை தன் வக்கீல்கள் மூலம் கோரியிருக்கின்றார். இது தேவனின் ஆண் என்கிற மிருகத்தை உலுப்பி எழுப்பியிருக்க வேண்டும். அவர் ஆனந்தியிற்கு மனதாலும் உடலாலும்  நிறைய உளைச்சலைக் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றார்.

அப்போது ஆனந்தி பொலிஸ் அதிகாரிக்கு ஒரு கடிதத்தை எழுதத் தொடங்கினார்:

மதிப்புக்குரிய பொலிஸ் அதிகாரிக்கு,

நான் தொலைபேசியில் உங்களிடம் கேட்டதிற்கிணங்க இந்தக் கடிதத்தை எழுதுகின்றேன். நான் இப்போது எனது கணவர் தேவனிடம் இருந்து விவாகரத்தைப் பெறுவதற்கு நீதிமன்றத்தை நாடியிருக்கின்றேன். அவர் தற்சமயம் இங்கிலாந்தில் இருப்பதால் அவரால் இந்த வழக்கிற்கு வரமுடியாதிருக்கின்றது. அவரின் வழக்கறிஞர், தேவன் விரைவில் இங்கிலாந்திருந்து இலங்கைக்கு கப்பல் மூலம் வர இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் தேவன் அவரின் தாயாரையும் கூட்டிக்கொண்டு வந்து எங்களோடு மீண்டும் வாழப்போவதாகவும் தெரிவித்திருக்கின்றார். இந்த வீடு எனது சொந்தப்பணத்தில் வாங்கிய வீடாகும்.

ஒரு விவாகரத்து வழக்கு நிலுவையில் நீதிமன்றத்தில் இருந்தால், எதிர்த்தரப்பை வீட்டில் அனுமதிக்கத் கூடாது என்பது என்பது சட்டமாகும். அத்துடன் எனக்கும் தேவனை எனது வீட்டில் வந்து தங்க அனுமதிக்க வேண்டாம் என்று எனது வழக்கறிஞரால் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது.
எனது கணவரை நீண்டகாலமாக நன்கு அறிந்தவள் என்பதால், அவர் எல்லாவித வன்முறையைகளையும் பயன்படுத்தி எங்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து எங்கள் குடும்பத்தின் அமைதியைக் குலைக்கக்கூடும் என்று நான் அச்சமுறுகிறேன்.

இவ்வாறான சூழ்நிலையில், எனக்கு ஒரு பாதுகாப்பு பொலிஸிடம் இருந்து வேண்டுமென உங்களிடம் கோருகின்றேன். ஏதேனும் ஒரு பிரச்சினை எனது கணவர் மூலம் வருமென்றால் நான் உங்கள் பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பேன். அப்போது எனக்குப் பாதுகாப்புத் தர நீங்கள் எங்கள் வீட்டுக்கு வர வேண்டும். எங்கள் வீட்டில் தொலைபேசி இருக்கின்றது, ஆகவே ஏதேனும் விபரீதமாக நடந்தால் நான் உங்களுக்கு உடனே தொலைபேசியில் அழைக்க முடியும்.

மேலும் எனக்கு நான்கு பிள்ளைகள் இருக்கின்றார்கள் என்பதையும், அவர்களின் பாதுகாப்புக் குறித்தும் நான் அக்கறை கொள்ளவேண்டும் என்பதையும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

இப்படிக்கு,
ஆனந்தி தேவன்

*

இங்கிலாந்திலிருந்து கப்பலில் வந்த தேவன் ஐப்பசி மாதம் ஆறாந்திகதி ஆனந்தியின் வீட்டுக்கு நள்ளிரவில் சென்றிருக்கின்றார். அன்றைய இரவை விடுதியில் கழித்த தேவன் ஆனந்தியின் வீட்டுக்குப் போகும்போது விடிகாலை ஒரு மணியாக இருந்திருக்கின்றது தம்பதியினர் இருவரும் அன்றைய இரவை சேர்ந்தே ஒரே வீட்டில் கழித்திருக்கின்றனர்.

அடுத்த நாள் காலை அவர்களின் இரண்டு பிள்ளைகள் அருகிலிருந்து பாடசாலைக்குச் செல்ல, ஐந்து வயதுக்குள் இருந்த  மற்ற இரண்டு பிள்ளைகள்  மட்டும் வீட்டில் இருந்திருக்கின்றனர். அன்றைய காலை பத்தரை மணியளவில் தேவன் வீட்டிலிருந்து டாக்ஸியில் புறப்பட்டுச் சென்றிருக்கின்றார்.

'அம்மா தலைவலியால் அவதிப்பட்டபடி சமையலறையில் நீண்ட நேரமாக விழுந்து கிடக்கின்றார்' என்று ஆனந்தியின் நான்கு வயது மகள் பக்கத்து வீட்டுக்காரருக்குச் சொன்னபோது, அந்த வீட்டுப் பெண்மணி வந்து பார்த்தபோது, சமையலறையில் பக்கத்தில் இருந்த அறையில் ஆனந்தி  விழுந்து கிடந்திருக்கின்றார். அவரின் கழுத்தடியில் உலக்கை குறுக்காகக் போடப்பட்டிருந்தது. ஆனந்தியின் உடலில் அசைவுகள் எதுவுமில்லாததைக் கண்டு பயந்து அஞ்சிய அந்தப்பெண்மணி பொலிஸை அழைத்திருக்கின்றார்.

ஆனந்தியின் மரணம் இயற்கையாக நடக்கவில்லை என்பதை பொலிஸ் உடனே கண்டுபிடித்திருக்கின்றது. ஒரு குடும்பத்துக்குள் கொலை நடக்கும்போது, முதலாவது சந்தேக நபராக கணவராகவோ மனைவியாகவோ இருப்பது சாதாரணம் என்பதால் தேவனை அவரின் நண்பரின் வீட்டில் வைத்து பொலிஸ் சந்தேகத்தின்பேரில் கைது செய்திருக்கின்றது.

ஆனந்திக்கு வீட்டில் உதவுவதற்கென ஒரு மாதத்துக்கு முன்னரே சிங்களப் பையனான வில்லியம் மாத்தறையில் இருந்து வந்திருக்கின்றான் அப்போதுதான் சமையலுக்கு உதவிக்கென இருந்த வில்லியம் காணாமல் போயிருப்பதைப் பொலிஸ் கண்டுபிடித்திருக்கின்றது. அத்தோடு ஆனந்தி அணிந்திருந்த தாலிக்கொடியும், வளையல்களும் காணாமல் போயிருப்பதும் தெரிந்திருக்கின்றது.

ஏன் வில்லியம் தப்பியோடினான், அவனுக்கு இந்த கொலைக்கும் என்ன சம்பவம் என்று அறிய வில்லியமை பொலிஸ் வலைவிரித்துத் தேடியதில் வில்லியமும் அவன் பிறந்த ஊரில் வைத்து பிடிபட்டிருக்கின்றான். மாத்தறையில் வில்லியமைப் கைதுசெய்த பொலிஸ் அவனே நகைகளின் பொருட்டு கொலை செய்தான் என்கின்ற  வாக்குமூலத்தை அவனிடமிருந்து பெற்றிருக்கின்றது.

இந்த வழக்கு நீதிமன்றத்துக்குப் போனபோது யார் உண்மையில் ஆனந்தியைக் கொலை செய்தார் என்பதில் குழப்பம் வந்திருக்கின்றது.
ஒரு கொலை வழக்கு இரண்டு வருடம் சந்தேக நபர்களான இருவரும் சிறைக்குள் இருக்க நடந்திருக்குமா என்று தெரியவில்லை. தேவனும் வில்லியமும் சிறைக்குள் இருக்க, ஆனந்தியின் கொலை வழக்கு இரண்டாண்டுகளுக்கு மேலாக இலங்கையில் நடந்திருக்கின்றது.

*

தேவனின் சார்பில் பிரபல்யமான வழக்கறிஞர்கள் வந்து தேவன் குற்றமற்றவர் என நிரூபிக்க முயன்றனர். தேவன், ஆனந்தியின் வீட்டை விட்டு வெளியேறிய காலை பத்தரைக்குப் பின்னரே ஆனந்தி கொலை செய்யப்பட்டார் என்று சாட்சியங்களின் மூலம் அவர்கள் எடுத்துக் காட்டினார்கள். முக்கியமாக தேவனை கூட்டிக்கொண்டு போக காலையில் டாக்ஸிக்காரர் வந்தபோது, ஆனந்தி வாசலடியில் நின்று கையசைத்தார் என்று சொல்லப்பட்டது. தேவன் வீட்டை விட்டுக் கிளம்பியபோது ஆனந்தி உயிரோடு இருந்தார், ஆகவே தேவன் ஆனந்தியைக் கொலை செய்யவில்லை என்று டாக்ஸிக்காரரின் சாட்சியத்தை முன்வைத்து தேவனின் வழக்கறிஞர்கள் திறமையான வழக்கைக் கொண்டு சென்றனர்.

ஆனால் சட்டென்று வழக்கில் ஒரு திருப்பம் வந்தது. தொடக்கத்தில் ஆனந்தியின் நகைகளுக்காக ஆசைப்பட்டே கொலை செய்தேன் என்று ஆரம்பத்தில் வாக்குமூலத்தைக் கொடுத்த பதினெட்டு வயதான வில்லியம் நீதிமன்றத்தில் 'நான் ஆனந்தியைக் கொலை செய்யவில்லை' என்று வேறொரு கதையைச் சொல்லத் தொடங்கினான்.

'நான் காலை ஒன்பது மணியளவில் சமையலறைக்குள் தேங்காய் துருவிக் கொண்டிருந்தேன். அப்போது தேவன் என்னை மாடியில் இருந்த அவரின் படுக்கையறைக்கு வரக் கூப்பிட்டார்.  நான் மேலே போனபோது அங்கே ஆனந்தி கட்டிலில் அழுதபடி அமர்ந்திருந்தார். நான் வருவதைக் கண்டதும் தேவன் சட்டென்று ஆனந்தியின் கூந்தலைப் பிடித்து தனது இடது கரத்தால் ஆனந்தியின் கழுத்தை வளைத்து நெரிக்கத் தொடங்கினார். துடிக்கத் தொடங்கிய ஆனந்தியின் முழங்கால்களை என்னை இறுக்கப்பற்றிப் பிடிக்கும்படி கத்தினார். சில நிமிடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஆனந்தியின் மூச்சடங்கியதும், ஆனந்தியின் உடலை கீழே இழுத்து வந்து சமையலறைக்குப் பக்கத்தில் இருந்த உரலும் உலக்கையும் இருந்த அறையில் நானும் தேவனும் கிடத்தினோம்' என்றான் வில்லியம்.

'அப்படியாயின் நீ ஏன் ஆனந்தியின் தாலிக்கொடியையும், வளையல்களையும் எடுத்துக்கொண்டு தப்பியோடினாய்' என்று வில்லியத்திடம் வழக்கை விசாரித்த நீதிபதி கேட்டார்.

'தேவன்தான் தாலிக்கொடியையும், காப்பையும் கழற்றித் தந்ததோடு, ஆனந்தியின் கைப்பையிலிருந்து நிறையப் பணத்தையும் கையில் தந்து, இங்கிருந்து எங்கேயாவது தப்பியோடிப் போய்விடு' என்று அதட்டி அனுப்பிவைத்தார் என்றான் வில்லியம்.

இப்போது நீதிபதிக்கு எல்லாமே குழப்பமாகிவிட்டது. அந்தக் காலத்தில் இப்போதுபோல கைரேகைகள் எடுத்து குற்றங்களைக் கண்டுபிடிக்கும் நுட்பங்கள் வந்துவிடவில்லை. யாரின் கைவிரல்ரேகை ஆனந்தியின் உடலில் இருக்கின்றது என்றும் அறியமுடியாது. ஆனந்தி குப்புறக்கிடந்ததைப் பார்த்த பக்கத்துவீட்டுப் பெண்மணி அவர் மேல் போடப்பட்டிருந்த உலக்கையும் எடுத்து, கொலை நடந்த சாட்சியங்களையும் அவர் அறியாமலே கலைத்தும் விட்டிருந்தார்.

ஆனந்தியின் கொலையில் வில்லியத்துக்கு மட்டுமில்லை தேவனுக்கும் தொடர்பு இருக்கின்றது என்கின்ற குழப்பம் நீதிமன்றத்துக்கு வந்துவிட்டது. ஆனாலும் தேவனின் வழக்கறிஞர்கள் தேவன் நிரபாரதி என நிரூபிக்க கடுமையாக இன்னும் முயற்சித்தார்கள்.

இந்த வழக்கிற்காகவே இங்கிலாந்தில் மிகவும் பிரபல்யமான இருந்த  வழக்கறிஞரை நேரடியாகவே இலங்கைக்கு தேவனின் சார்பில் வழக்காட வரவழைத்தனர். அவர் இந்தக் கொலை ஆனந்தி நின்றுகொண்டிருந்தபோது யாரோ ஒருவர் பின்புறமாக கைகளை வளைத்து கழுத்தை நெரித்தே கொலை செய்திருப்பார் என்பதைத் தனது திறமையான வாதத்தால் நிரூபித்தார்.

அத்தோடு இந்தக் கொலை மேல் மாடியின் படுக்கையறையில் அல்ல, கீழே இருந்த சமையலறையில்தான் நிகழ்ந்திருக்கின்றது என்றிருக்கின்றார். சமையல்காரனான வில்லியம்தான் ஆனந்தியோடு முறைகேடாக நடக்க முயன்றிருக்கின்றான். அப்போது அதற்கு எதிராக ஆனந்தி போராடியபோது, சமையலறையில் இருந்த ஆணி ஆனந்தியின் தலையில் குத்திய காயமும் சாட்சியமாக இருக்கின்றது என்று அந்த வழக்கறிஞர் வாதாடியிருக்கின்றார்.

இங்கிலாந்து வழக்கறிஞரின் வாதத்துக்கு மேலும் ஆதாரம் சேர்க்க, வில்லியமின் முழங்கையில் ஆனந்தி இறுதி நேரத்தில் மூச்சடங்குவதற்கு முன்னர் அவரது கைகளால் கீறிய காயங்கள் காணப்பட்டன. ஆனந்தியின் உடல்மேல் உலக்கை போடப்பட்டு கொலை செய்யப்பட்டதை பக்கத்து வீட்டுப் பெண்மணி கண்டபோது ஆனந்தியின் உடலில் தேங்காய்த் துருவல்களும் இருந்தன. ஆக தேங்காயைத் துருவிக் கொண்டிருந்த வில்லியந்தான் ஆனந்தியைக் கொலை செய்தார் என்றும், Benefit of a Doubt என்பதன்  அடிப்படையில் தேவன் நிரபராதி எனவும் நீதிபதியால் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

*

அன்று உச்சத்தில் இருந்த மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் அணியின் தலைவர், தான் உலகில் சிறந்த பதினொரு வீர்ர்களைத் தேர்ந்தெடுக்கின்றேன் என்றால் அதில் முதன்மையானவர் தேவன் என்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லியிருக்கின்றார். தேவன் சிறைக்குள் இருந்தபோது மேற்கிந்தியத் தீவு வீரர்கள் அவரை நேரில் சென்று சந்திக்கும் அளவுக்கு தேவன் ஒரு சிறந்த துடுப்பாட்டக்காரராக இருந்தார். அவரின் சுழலும் கையின் சாகசத்திற்காகவும், பந்துகளை அடித்தாடும் அழகிற்காகவும் அவருக்கு உலகெங்கும் இரசிகர்கள் இருந்தார்கள்.

இந்த கொலை வழக்கு முடிந்து விடுதலையான கொஞ்சக் காலத்திலே தேவன் தனது காதலி நான்ஸியை இலண்டனில் திருமணம் செய்து கொண்டு சிங்கப்பூரில் சென்று வசிக்கத் தொடங்கினார். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். தேவன் சிங்கப்பூர் நாட்டு கிரிக்கெட் அணிக்கு தலைவராகவும் உயர்ந்தார். சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பிரிந்தபோது மலேசியா கிரிக்கெட் அணிக்கும் தேவன் தலைவரானார். இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என்று மூன்று நாடுகளுக்கும் கிரிக்கெட்டில் தலைமை தாங்கிய ஒரேயொருவர் என்ற புகழும் தேவனுக்குக் கிடைத்தது.

தேவனின் விடுதலை பெற்ற கொஞ்ச ஆண்டுகளில் வில்லியமும் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். ஒரு கொலை வழக்கில் முதலாம், இரண்டாம் கொலையாளிகளாக இருந்திருக்கக்கூடிய இரண்டு பேருமே விடுதலை செய்யப்பட்டு ஆனந்தியின் பரிதாபமான உயிருக்கு மட்டும் முறையான நீதி வழங்கப்படாது அநாதரவாக அவர் கைவிடப்பட்டிருந்தார்.

ஆனந்தி கொலை செய்யப்பட முன்னர், இங்கிலாந்தில் இருந்த தேவனுக்கு ஆனந்தி எழுதிய கடிதத்தில், 'தயவு செய்து உங்கள் தீராத காதல் விளையாட்டுக்களையும், குடிக்கு அடிமையான நிலையையும் கண்டபின், உங்களோடு நான் சேர்ந்து வாழ விரும்பவில்லை. எனக்கு தயவுசெய்து விவாகரத்து தந்துவிடுங்கள்' என்று உருக்கமாக ஒரு கடிதம் எழுதியிருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

தேவனின் வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது அவரது நண்பரொருவர் தேவனைச் சிறைக்குள் சந்தித்தபோது, தேவன், அந்த நண்பனின் மனைவி இந்த வழக்கு குறித்து என்ன நினைக்கின்றார் என்று அபிப்பிராயத்தைக் கேட்டிருக்கின்றார். அதற்கு அந்த நண்பர் 'எனது மனைவி நீங்கள்தான் இந்தக் கொலையைச் செய்திருப்பீர்கள் என்று உறுதியாக நம்புகின்றார்' என்று சொல்லியிருக்கின்றார். அதற்குச் சிரித்தபடி தேவன், 'எனது கொலைப்பட்டியலில் அடுத்து உனது மனைவிதான் இருக்கின்றார் என்பதைச் சொல்லிவிடு' எனக் கூறியிருக்கின்றார்.

ஆனந்தியின் கொலை நடந்தபோது அதே வீட்டில் ஆனந்தி-தேவனின் இரண்டு பிள்ளைகள் இருந்திருக்கின்றனர். அதில் நான்கு வயதான மகளிடம் நீதிமன்றம் 'என்ன நடந்தது?' எனக் கேட்டபோது அந்தக் குழந்தை, 'மம்மியை, டாடியும், வில்லியமும் மேலே இருந்து கீழே தூக்கிக் கொண்டு வந்து சமையலறைக்கு பக்கத்தில் படுக்க வைத்திருந்தனர்' என்று சொல்லியிருந்தது. ஆனால் நீதிமன்றம் இரண்டாம் நாள் 'என்ன நடந்தது' என மீண்டுமொரு முறை கேட்டபோது அந்தக் குழந்தை நடந்தவற்றைச் சொல்ல முடியாது தவித்ததால் அந்த முக்கிய சாட்சியம் வழக்கில் கவனத்தில் எடுக்கப்படாது கைவிடப்பட்டிருந்தது.

அந்த மகள்தான் தனது சகோதரிகளோடு தேவனோடு சிங்கப்பூரில் வாழ்ந்து கொண்டிருந்தபோது பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு தேவனைப் பார்த்துக் கேட்டாள், 'டாடி நீங்கள்தானா எங்கள் அம்மாவைக் கொன்றது?'.

****

(நன்றி: 'அம்ருதா' - ஜனவரி, 2026)
ஓவியம்: கோபிகிருஷ்ணன்

 

0 comments: