இந்த நூலை வாசிக்க ஆர்வமிருந்ததற்கு, ஜெயகாந்தனோடு நாற்பது வருடங்கள் நெருங்கிப் பழகிய ஒருவர், எப்படி ஒரு படைப்பாளியை அணுகியிருப்பார் என்பதே முக்கிய காரணம். இதில் ஒருவகையான உற்சாகமான/களியாட்டமான ஜெயகாந்தனைப் பார்க்கின்றோம். வெளியில் ஒரு 'சிம்மமாக' இருந்தவர் எனச் சொல்லப்பட்ட ஜெயகாந்தனையன்றி ஓர் இயல்பான மனிதரை இங்கே தரிசிக்கின்றோம்.

Uploaded Image

பயணங்களின்போது கவிதை இயற்றுகின்றவராகவும், பாடல்களைப் பாடுகின்றவராகவும் இருக்கின்ற ஒரு ஜெயகாந்தனை இதில் பார்க்கின்றோம். ஏன் அவ்வளவு பிரபல்யமில்லாத எங்களை உங்கள் நண்பராக்கினீர்கள் என்று ஓரிடத்தில் இந்த நூலாசிரியர் கேட்கின்றபோது, ஜெயகாந்தன் நீங்கள் என்னைவிட வயது குறைந்தவர்களாக இருந்தீர்கள் அது எனக்கு உங்களுடன் நட்பாக எளிதாக இருந்திருக்கின்றது என்கின்றார். அதேவேளை, இது ஒரு நாளிதழில் வந்த தொடர் என்பதால், அதற்கான வரையறைகள் இருப்பினும், ஜெயகாந்தனின் பிரபல்யமான 'மடம்' குறித்தும், அங்கு நடைபெற்றவை பற்றியும் எதுவும் விபரமாக விபரிக்கப்படாது எனக்குச் சற்று ஏமாற்றமாகவே இருந்தது.

ஜெயகாந்தன் தொடக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து, பிறகு காங்கிரஸ்காரராகி, இறுதியில் ஹர ஹர சங்கரா என்று சங்கரமடத்திலும் அடைக்கலமானவர் என்பது அவரின் கடந்தகாலம் சொல்கின்றது. அப்படிப் பார்க்கும்போது எப்போதுமே மக்களின் பக்கம் நின்று பேசுவதாகச் சொன்ன ஜெயகாந்தனால், ஒருபோதுமே அவரால் அரசியல் நிலைப்பாட்டில் மக்களின் நாடியை இறுதிவரை சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது துயரமானதுதான்.

அவ்வாறே அறம் சார்ந்து இயங்கவும், எழுதவும் விரும்பிய ஒருவரால் எப்படி 1975இல் இந்திரா காந்தியின் எமர்ஜென்ஸியை ஆதரிக்க முடியும் என்பது கேள்விக்குரியது.  ஜெயகாந்தன் மரணங்களையிட்டு கலங்கியது அரிதென்றாலும், கைவிரல் எண்ணக்கூடிய கலங்கிய நிகழ்வுகளில் ஒன்று ராஜீவ்காந்தியின் படுகொலை என்று இந்த நூலின் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். ஒருவர் தான் நேசித்த தலைவன் கொல்லப்படுவதை  நினைத்து வருந்துவது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். ஆனால் இந்தக் கொலையைக் கேள்விப்பட்டு 'என் பகைவருக்கு என்ன வேண்டும்../என் பகைவருக்கு என்ன வேண்டும்/' என்று கூறிவிட்டு 'இன்னும் ஒருமுறை வென்று /இந்தியாவைக் காப்பதற்கு என்னென்ன எண்ணியிருந்தான்' என்று அந்தக் கவிதையை ஜெயகாந்தன் முடித்தார் என இந்த நூலில் கூறப்பட்டிருக்கின்றது.

உண்மையில் ஒரு படைப்பாளி, 'என் பகைவருக்கு என்ன வேண்டும்?' என்று கேட்கின்றான் எனின், ஏன் ஒருவர் இன்னொருவருக்குப் பகைவராகின்றார் என்கின்ற மறுபக்கத்தையும் கேட்டுப் பார்க்க வேண்டும். பகைவர் செய்தது அநியாயம் என்றாலும், ராஜீவ்காந்தியின் அமைதிப்படை ஈழத்தில் என்ன செய்தது என்கின்ற அறக்கேள்வியும் ஒரு நல்ல படைப்பாளியாயின் அவருக்குள் எழுந்திருக்க வேண்டும்.  

அவ்வளவு தூரம் கூடப் போயிருக்கத் தேவையில்லை. ஜெயகாந்தன் எமர்ஜென்ஸியில் ஆதரவளித்த இந்திரா காந்தியை சீக்கியர்கள் சுட்டுக் கொன்றபோதும் 'என் பகைவருக்கு என்ன வேண்டும்?' என்று கேட்காது இந்திரா காந்தியும் இந்திய இராணுவமும் சீக்கியருக்கும், பொற்கோவிலுக்குள்ளும் என்ன செய்தார்கள் என்பதை நினைத்துப் பார்த்திருக்கவாவது வேண்டுமல்லவா?

அது மட்டுமில்லாது இந்திரா காந்தியின் கொலையினால் புது டெல்கியில் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்களைத் தேடித் தேடிக் கொன்றபோது, 'ஒரு பெருமரம் விழும்போது இப்படிச் சிறுமரங்கள் அழிவது இயல்பு' என்று சொன்னவர் இந்த ராஜீவ்காந்தி மட்டுமில்லை, போபர்ஸ் என்கின்ற பீரங்கிக் கொள்வனவு ஊழலில் சிக்கிக் கொண்ட ராஜீவ்காந்தியை எப்படி காந்தியராகத் தன்னை முன்வைக்கின்ற ஜெயகாந்தனால் 'இந்தியாவை மீண்டும் காப்பாற்ற என்னவெல்லாம் எண்ணியிருந்தான்' என்று சொல்லிப் புலம்பியிருக்க முடியும் என்பதெல்லாம் முரண்நகைகள்தான்.

இவ்வாறு பல்வேறு சறுக்கல்கள் இருந்தாலும் ஜெயகாந்தனை அவரின் எழுத்துக்காக இந்தத் தமிழ்ச்சமூகம் அவருக்கு உயரிய இடத்தையே கொடுத்திருக்கின்றது. திராவிடக் கட்சிகள் மீது காலம் முழுக்க ஒவ்வாமையில் இருந்த ஜெயகாந்தன் கடைசிக்காலத்தில் கருணாநிதி கொடுத்த மருத்துவ உதவிகளைப் பெற்றுக்கொண்டதும், அவருக்கு நன்றி சொல்ல சந்தித்துக் கொண்டதும், அவர் வாழ்நாள் முழுக்கப் பேசிக்கொண்டிருந்ததற்கு முற்றிலும் முரணானதுதான் அல்லவா? அப்போது 'பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே' எனப் பாரதியார் பாடியது ஜெயகாந்தனுக்கும் தமிழ்ச்சமூகம் சார்ந்து நினைவில் வந்திருக்கலாம்.

மேலும் ஜெயகாந்தனுக்கு தமிழ்ச்சமூகம்,  அவரின் உயரத்தைத் தாண்டிய மதிப்பைத்தான் கொடுத்திருக்கிறது என்பதுதான் ஒருவகையில் சரியாக இருக்கும். தனது மடத்திலும் அரசியல்மேடைகளிலும் சிம்மமாக இருந்ததாகச் சொல்லப்பட்ட ஜெயகாந்தனுக்கு இன்றைய மதிப்பு என்னவாக இருக்கின்றது என யோசித்துப் பார்க்கலாம். அவரது பல நாவல்கள்/கதைகள் காலத்திலே எப்போதோ பிந்தங்கிவிட்டன.  ஜெயகாந்தனை வாசித்து சிலாகிக்கும் புதிய தலைமுறைகள் தோன்றவே இல்லை.

ஆனால் இதே காலகட்டத்தில் பெருந்திரளில் அவ்வளவு கவனிக்கப்படாது சிறுவட்டத்திற்குள் கறாராக எழுதிக்கொண்டிருந்த சுந்தர ராமசாமி போன்றவர்கள் காலத்தைத் தாண்டி நிற்கின்றார்கள் என்பதுதான் காலம் நமக்கு அறைந்து சொல்கின்ற உண்மை.

நிறையப் பேசிய ஜெயகாந்தன் இறுதிக்காலத்தில் பேசுவதைக் குறைத்துக்கொண்டார் என்றும், ஒருகட்டத்தில் 'காஷ்டிக மவுனத்துக்கு'ப் போய்விட்டார் என்றும் இந்த நூலில் சொல்லப்படுகின்றது. அது 'பேசாமல் இருப்பது மட்டுமில்லை; முகத்திலே எந்த உணர்ச்சியையும் காட்டாமல் கட்டையைப் போல இருப்பது' போன்ற நிலை என்று நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

இறுதியில் ஜெயகாந்தன் தன் ஆழுள்ளத்துக்குப் போய் அவருக்கான அசலான உண்மையைக் கண்டறிந்திருக்கலாம். இவ்வாறு பல்வேறு தளம்பல்களுடைய ஒருவராக இருந்தாலும்,  தனது வாழ்வை தனக்குப் பிடித்தமாதிரி வாழ்ந்த ஒரு படைப்பாளி என்பதை இந்நூல் முன்வைக்க விரும்புகின்றது என நினைக்கின்றேன். அது தவறுமில்லை. அந்தவகையில் ஒரு  படைப்பாளி தனக்குப் பிடித்தமான வாழ்வை, எவ்வித சமரசமுமின்றி  தமிழ்ச்சூழலில் கொண்டாட்டமாக வாழ்ந்தான் என்பதற்கு ஜெயகாந்தனை நாம் ஒரு முன்னுதாரணமாகக் கொள்ளமுடியும்.

***