After the hunt
***
கனடாவில்
பிரபல்யம் வாய்ந்த விளையாட்டாக இருப்பது ஐஸ் ஹாக்கி. அதன் இளம் ஹக்கி அணி
(Junior Hockey Team) கூட்டாக ஒரு பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததன்
நிமித்தம், அதுவரை இந்தத் தேசிய ஹக்கி அணிக்கு அனுசரணையாளர்களாக இருந்த
போன்ற வங்கி (Scotia bank), எண்ணெய் நிறுவனம் (Imperial Oil), கோப்பி கடை
(Tim Hortons) போன்ற பல நிறுவனங்கள் தமது ஆதரவை விலத்தியிருந்தன. இறுதியில்
கனடிய அரசே அதில் தலையிட்டு ஒரு நேர்மையான தீர்ப்பை வழங்கும்வரை அந்த
ஆண்டுக்கான ஐஸ் ஹொக்கி அணி வீரர்களை விலக்கி வைக்குமளவுக்கு நிலைமை
தீவிரமாகப் போயிருந்தது.

பேராசிரியையின் வீட்டு இரவு விருந்து முடிகின்றபோது அவரோடு படிக்கின்ற மாணவியை அவரின் இடத்தில் கொண்டுபோய் விடுகின்றேன் என்று அல்மாவின் ஆண் நண்பர் கூடவே போகின்றார். அடுத்த நாள் அந்தப் பெண் மாணவி இந்தப் பேராசிரியரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்திருக்கின்றார் என்ற முறைப்பாடோடு வருகின்றார்.
அதன்பிறகு யார் யாரெல்லாம் பாதிக்கப்படுகின்றனர். யார் உண்மையைச் சொல்கின்றார்கள் அல்லது எது உண்மையாக இருக்கும் என்கின்ற சாம்பல்நிற குழப்பமான எல்லைக்குள் நின்று இந்தத் திரைப்படம் தன் கதையைச் சொல்கின்றது.
மேலும் பாதிக்கப்பட்ட பெண் மாணவிக்கு பேராசிரியையான அல்மா ஒரு முன்னோடி. அவரைப் போலவே ஆக வேண்டும் என்று விரும்புகின்ற இம்மாணவி கிட்டத்தட்ட அந்தப் பேராசிரியை போலவே கிட்டத்தட்ட ஆடைகளே அணிபவர். மேலும் இப்பெண் மாணவி ஒரு செல்வந்தப் பின்னணியில் வந்த கறுப்பினக்காரி மட்டுமில்லாது ஒரு தற்பாலினக்காரியும் கூட. அவரின் இணையான binary partner இல்லாதபோது இந்தப் பாலியல் துஷ்பிரயோகம் நடந்திருக்கின்றது. ஆக மிகச்சிக்கலான (complex) பாத்திரமாக பாதிக்கப்பட்ட இப்பெண் பாத்திரம் அமைக்கப்பட்டு பார்வையாளர்கள் மிக எளிதில் ஓர் தீர்வை எடுத்துவிட முடியாது இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கின்றது.
அந்த மாணவி தனக்குப் பாலியல் துஷ்பிரயோகம் நடந்திருக்கின்றதெனச் சொல்லும்போது, பேராசிரியை அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார். அவருக்கு ஏதோ ஒருவிதத்தில் தன் நண்பரான ஆண் பேராசிரியரை காப்பாற்றும் அழுத்தம் இருக்கின்றது. பிறகு கதை நிகழும்போது இப்பேராசிரியையும் அவரது பதின்ம வயதில் அவரின் தந்தையின் நண்பரொருவரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார் என்கின்ற விபரத்தை நாம் அறிகின்றோம். அந்நிகழ்வு உண்மையில் நடந்ததா அல்லது நடக்கவில்லையா என்கின்ற Ambiguity இருந்தாலும், ஒரு மூத்த தலைமுறை இவ்வாறான விடயங்களை மூடிமறைக்க விரும்புவதைப் போல, புதிய தலைமுறை செய்வதில்லை என்பதை இந்தக் கறுப்பின மாணவி மூலம் அறிகின்றோம்.
இத்திரைப்படத்தின் இறுதிவரை இதுதான்
நடந்த உண்மையென அறுதியாகச் சொல்லப்படுவதில்லை. அதுவே பலரை இத்திரைப்படத்தை
அலுப்படைய வைக்கும். இது ஓர் உரையாடல் களமாக, பார்வையாளர்கள் தமக்கான்
உண்மைகளை எடுத்துக் கொண்டு செல்வதாக அமைந்திருப்பதுதான் இத்திரைப்படத்தை
திருப்பத் திரும்ப யோசிக்க வைக்கின்றது.

அந்தக் கறுப்பின மாணவி சிலவேளைகளில் தனக்கு நிகழாத பாலியல் துஷ்பிரயோகத்தை நடந்ததாகச் சொல்லியிருந்தால் கூட, ஆண் பேராசிரியரான ஹாங் அவ்வளவு நல்லவரெனச் சொல்லிவிட முடியாது. ஏனெனில் அவர் இதன் நிமித்தம் பேராசிரியர் பதவியை இழந்து, அல்மாவை அவரது தங்குமிடத்தில் சந்திக்கும்போது, அவர் நெருங்கிய நண்பராக இருக்கும்போதும், போதும் வேண்டாம் என்கின்றபோது அவரை நெருங்கி பாலியல் துஷ்பிரயோகத்துக்குப் போகும் ஒரு காட்சி பிற்பகுதியில் வைக்கப்பட்டிருக்கும்.
ஒருவகையில் உடல்களின் தீரா வேட்கைக்கும், பாலியலுக்கான Consent இற்கும், அப்படி Consent கொடுக்கப்பட்டாலும், நிறுத்தப்படவேண்டும் என்று ஒருவர் சொல்லும்போது அப்போதே நிறுத்தவேண்டும் என்கின்ற பல புள்ளிகளை நாம் சிந்திப்பதற்கான காட்சியாகக் கூட நாம் அதனைக் காணலாம்.
இறுதியாக ஒரு காட்சி வரும். அதில் பேராசிரியராக இருக்கும் அல்மா அவர் சார்ந்த துறையின் டீனாக ஆகிவிடுவார். பாதிக்கப்பட்ட பெண்ணான கறுப்பினப் பெண் தனது துணையைத் திருமணம் செய்வதற்குத் தயாராக ஆவார். இதைவிட முரண்நகையாக ஆண் பேராசிரியராக இருந்தவர் பல்கலைக்கழகத்தில் இருந்து விலத்தப்பட்டாலும் அவர் ஒரு பிரபல்யம் வாய்ந்த அரசியல் ஆலோசகர் ஆகிவிடுவார்.
அப்படியாயின் பாதிக்கப்பட்டவர்க்கு நீதி வழங்கப்பட்டதா? அல்லது பாதிப்பைச் செய்த தரப்பு உண்மையிலே தன் தவறுகளை மனப்பூர்வமாக ஏற்று மன்னிப்புக் கேட்டதா போன்ற கேள்விகளுக்கான பதில்களை பார்வையாளர்களிடையே இத்திரைப்படம் விட்டுவிடுகின்றது.
நம் தமிழ்ச்சூழலிலும் இவ்வாறான பாலியல் துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் மேற்பரப்பில் குற்றச்சாட்டுக்களாய்த் தோன்றுவதும், பிறகு காலப்போக்கில் பேசாப்பொருளாக மறைக்கப்படுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதுதான் துயரமானது. இந்த விடயங்களை நாம் மனந்திறந்து பொதுவெளியில் உரையாடுவது என்பது மனித உறவுகளுக்கிடையில் அமைதியான பாதுகாப்பான நிலைமைகளை உருவாக்குவதற்கே அன்றி, தனிப்பட்ட நபர்களை குற்றவாளிக் கூண்டிலேற்றி திருப்தி காண்பதற்காக அல்ல என்கின்ற புரிதல்களுக்கு நாம் அனைவரும் இதற்கு முன்னராக வந்து சேர்தல் இன்னும் நலம் பயக்கும்.
***

0 comments:
Post a Comment