எவராலும் எதையும் எழுதிவிடமுடியும் அல்லது காட்சிகளாய்த் திரைப்படமாக்கி விடமுடியும். ஆனால் பேசுவது எந்த விடயமாயினும் அதைக் கலையாக்கத் தெரிந்தவர்கள் மிக அரிதானவர்களே. கலை என்பதைத் தெளிவாக வரையறுப்பது கடினமென்றாலும், ஒருவகையில் பெரும் அமைதியையும், அதேவேளை மனதின் ஆழம்வரை சென்று தொடர்ந்து தொந்தரவுபடுத்தியபடி இருப்பதாகவும் அமைவதென ஒரு எளிமைக்காய்ச் சொல்லிக்கொள்கின்றேன்.
பெண்களின் அகவுலகிற்கு ஆணாக இருந்தபடி இந்தளவிற்கு உள்நுழைய முடியாமென பெத்ரோ அல்மதோவர் தன் ஒவ்வொரு படங்களிலும் வியப்பிலாழ்த்திக் கொண்டேயிருப்பவர். இந்தப் படமும் விதிவிலக்கல்ல. அலீஸ் மன்றோவின் சில சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்டு எடுத்த இத்திரைப்படத்தில் வரும் பெண்கள் தமக்கான் நாளாந்தத் துயரங்களோடு, உறவுகளோடான தத்தளிப்புக்களுடன் வாழ்வை வாழ்பவர்கள். யதார்த்தம் அவர்களை விரக்தியின் விளிம்பிற்கு ஒவ்வொருமுறையும் விசிறியெறியும்போதும், மிகுந்த பொறுமையுடன் - அடிவானத்திற்கு அப்பால் மினுங்கும் ஏதோ ஒரு நம்பிக்கையிற்காய்- காத்துக்கொண்டிருப்பவர்கள்.
எல்லாச் சந்தோசங்களும் ஒரு எல்லையில் முடிந்துபோவதும், எல்லாத் துயரங்களும் ஏதோ ஒரு புள்ளியில் களைந்துபோவதும் இயல்புதானென்றாலும் நாம் எதற்காய் இந்த வாழ்வில் காத்துக்கொண்டிருக்கின்றோம்? எதுவுமேயில்லாத ஏதோ ஒன்றுக்காய் விழியெறிந்து தசாப்தகாலமாய் காத்துக்கொண்டிருக்கும் ஜூலியட்டா இறுதியில் சிரிக்கும் அந்த ஒருகணத்தில், நமக்குள் பரவும் நிம்மதி சொல்லிமாளாதது.
ஜூலியட்டா என்னும் இத்திரைப்படத்தோடு, அல்மதோவர்இதுவரை எடுத்த திரைப்படங்களின் எண்ணிக்கை இருபது. தமது கலைப்பயணத்தில் அவ்வப்போது சறுக்கினாலும், மீள் எழத்தெரிந்தவர்களே மகத்தான கலைஞர்களாக மிளிர்வார்கள். கடந்த வருடங்களில் வெளிவந்த The skin I live in மற்றும் I'm so excited போன்றவற்றில் சற்று தொய்வடைந்து போயிருந்தாலும், ஜூலியட்டாவில் மனித மனங்களின் சிடுக்குகளுக்குள் புகுந்து -மீண்டும் தொடங்கும் மிடுக்காய் - வந்திருக்கின்றார்.
கலை என்பது நம்மைத் தொந்தரவுபடுத்துவது மட்டுமின்றி, நமது நாளாந்தங்களின் அலுப்புக்களின் சுமைகளையும் கரைத்து நிம்மதியை ஏதோ ஒருவகையில் பரவச்செய்வதாக இருத்தலெனவும் எடுத்துக்கொள்ளலாம். இருபது படங்களுக்குப் பிறகும் அடுத்த என்ன படைப்பைத் தருவார் என ஒருவரை நோக்கி எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றோம் என்றால், அவர் ஒரு அற்புதமான படைப்பாளியாக இருந்தாலின்றிச் சாத்தியமில்லை.. பெத்ரோ அல்மதோவரும் அப்படிப்பட்ட ஒருவர்தான்.
(Nov 10,2017)
0 comments:
Post a Comment