1.
முகநூலில் ஏதேனும் காணொளிகளை நண்பர்கள் பார்க்க இணைப்பு அனுப்பும்போது, அது அடுத்தடுத்த காணொளிகளுக்குத் தாவிச் செல்லத் தொடங்கி விடுவதுண்டு. அவ்வாறு தற்செயலாக வாலியின் 80 வயது நிறைவில் அவரோடு பலர் உரையாடிய காணொளிகளைத் துண்டு துண்டுகளாகக் காட்டின. வாலியை நான் அவ்வளவாகப் பின் தொடர்ந்து சென்றவனில்லை. கண்ணதாசன் காலத்திலிருந்து கடைசிக்காலம் வரை வாலி அவருக்கான ஓரிடத்தை தொடர்ந்து வைத்துக்கொண்டிருந்தவர் என்கின்ற மாதிரியான மேலெழுந்த தகவல்களே நானறிந்தவை. அவ்வப்போது அவர் வெகுசன இதழ்களில் எழுதிய கவிதைகள், அவை போன்ற கதைசொல்லல்களை வாசித்தபோதும் அவரைத் தொடந்து செல்ல வசீகரமான காரணங்கள் இருந்ததில்லை. மேலும் எமக்கு ஒருவர் மீது அதீத பற்றிருக்கும்போது அவரோடு போட்டியிடும் ஒருவரை தூர விலக்கிவைக்கும் மனோநிலையாகவும் இது இருக்கலாம். நான் என்னை ஏ.ஆர்.ரஹ்மான் காலத்தவனாகச் சொல்பவன். அவரின் இசைக்கு வைரமுத்துவே அன்றைய காலங்களில் நிறையப் பாடல்களை எழுதியதால் வைரமுத்துவைப் பின்தொடர்பவனுக்கு, வாலி அவ்வளவு ஆகாது போயிருக்கலாம்.
ஆனால் பிற்காலத்தில் எனக்குப் பிடித்த பாடலாசிரியர் வைரமுத்து என்பதை சின்மயி உள்ளிட்ட பெண்கள் முன்வைத்த பாலியல் குற்றச்சாட்டுக்களால் கைவிட்டிருக்கின்றேன். அது வைரமுத்துக்கு மட்டுமில்லை, பாப்லோ நெரூடா வெள்ளவத்தையில் வைத்து ஒரு தமிழ்ப்பெண்ணுக்குச் செய்தததை 15 வருடங்களுக்கு முன் அறிந்தபோதும் அதுவரை பிடித்தமான நெரூடா எனக்குத் தொலைவில் போனதைக் கண்டிருக்கின்றேன். இதில் யார் சரி, அதையதை அந்தக் காலத்தில் வைத்துப் பார்க்கவேண்டும் என்கின்ற விவாதங்களுக்குப் போவது இரண்டாம்பட்சம். ஆனால் அவர்கள் என்னியல்பிலே என் விருப்பப்பட்டியலில் இருந்து உதிர்ந்து போய்விட்டார்கள். இன்றைக்கும் எனக்குப் பிடித்த வைரமுத்து எழுதிய ரஹ்மான் பாடலையோ, நெரூடாவின் கவிதையையோ பொது வெளியில் பகிரத் தயங்குபவனாகவே இருக்கின்றேன். நான் இவர்கள் மீது வைத்திருக்கும் தயக்கங்கள்/விமர்சனங்களை நன்கறிந்த நண்பர்களிடம் மட்டும் அவற்றைப் உள்வட்டத்திற்குள் பகிர்ந்துகொள்வேன். அவ்வளவே.
இந்த விலகல் இப்படி பிரபல்யம் வாய்ந்த நபர்களிடம் மட்டுந்தான் வருகின்றது என்பதில்லை. எனக்கு நேரடியாகவோ/ சமூக வலைத்தளங்கள் மூலமோ அறிமுகமான நண்பர்களைப் பற்றியும் இவ்வாறான விடயங்கள் சார்ந்து அறியும்போது என்னியல்பிலே விலகி வந்திருக்கின்றேன். அதற்காய் இவ்வாறானவர்களைப் போன்று ஆகும் agency என்னிடம் இல்லையென்றும் அர்த்தமாகாது.
வாலியின் காணொளியை துண்டு துண்டாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது, வாலி ஒரு குதூகலமான 'இளைஞராக' மட்டுமின்றி ஒரு genuine மனிதராகவும் தெரிந்தார். சிலரை நேரடியாகச் சந்திக்கும்போதோ அல்லது இப்படி காணொளியில் பார்க்கும்போதோ எந்தத் தயக்கமுமில்லாது தமது பலவீனங்கள் உட்பட எல்லாவற்றையும் தன்னியல்பிலே மனந்திறந்து பேசுவதைப் பார்க்கலாம். அவர்களே வாழத் தெரிந்த மனிதர்கள்; வாழ்க்கையின் உண்மையான அர்த்தங்களை விளங்கிக்கொண்டவர்களென நினைப்பதுண்டு.
சர்ச்சைகள் வருவதற்கு முன்னர்கூட வைரமுத்துவை இப்படியொரு மனந்திறந்த மனிதராகப் பார்த்ததில்லை. அன்றைய காலங்களில் வைரமுத்து ஒருவிதமாக இறுக்கமான உடலையும், குரலையும் வைத்திருந்தபோது, எங்களாலேயே இதைத் தாங்க முடிவதில்லை.. அவரின் மனைவி பாவம் எப்படித்தான் தாங்குவாரோயென நகைச்சுவையாக எங்களுக்குள் பேசுவதுண்டு. எழுத்தில் கூட இப்படி தம் எழுத்தை தன்போக்கில் செல்லவிடாது தடுத்து நிறுத்தும் படைப்பாளிகள் இருக்கின்றார்கள் இல்லையா என்ன?
2.
சாண்டில்யனின் ஒரு தீவிர இரசிகர் என்பதால் கல்கி எதிர்முனையில் இருந்தார். சுஜாதாவின் சொற்ப படைப்புக்களை வாசித்ததுபோல கல்கியினதும் 'பார்த்திபன் கனவு', 'சிவகாமியின் சபதம்' போன்றவற்றை வாசித்தேனே தவிர பொன்னியின் செல்வன் போன்றவற்றைத் தேடி வாசித்ததில்லை. பின்னரான காலங்களில் இதை வாசிக்க விரும்பியபோதும், அந்த மொழி நடையில் இருந்து விலகி வந்ததாலும் அதன் ஐந்து பாகங்களாலும் முழுதாக வாசித்து முடிக்கவில்லை.
என்னதான் பொன்னியின் செல்வன் கதைச்சுருக்கம் வாசித்தாலும், அது எவ்வளவுதான் சிறப்பாக இருந்தாலும், எங்கள் சாண்டியல்னை நாம் விட்டுக் கொடுக்க முடியாது. ஆகவே நண்பரிடம் என்ன பொன்னியின் செல்வனின் ஒரு நல்ல யுத்த விபரணையும் இல்லைப் போலிருக்கின்றதே, எங்கள் கடல்புறாவைப் பாருங்கள், கடல்புறா கடலில் அதன் சிறகை விரிக்கும்போது வீரர்கள் அது கடலாக இருந்தாலும் எதிரிக்கலங்கள் மீது பாய்வார்கள், நாணேற்றி அம்புகளை எய்வார்கள், எரியம்புகளை அள்ளியெள்ளி வீசுவார்கள். உங்கள் பொன்னியின் செல்வனில் எல்லாமே சூழ்ச்சியும் வாதுமாக இருக்கின்றதே தவிர தமிழ் மறவர்களின் தோள் துடிக்கும் போர்க்காட்சிகளே இல்லை, அவமானம் என்றேன்.
இல்லை, இலங்கையில் அருண்மொழியும், வந்தியத்தேவரும் சண்டைபிடிக்கும் ஒரு காட்சி இருக்கின்றதென்றார். நானோ கடல்புறாவின் முதல் பாகத்தில் இளையபல்லவனும் காஞ்சனாதேவியும் கலிங்க மன்னனிடம் இருந்து தப்பும் ஒரு காட்சிக்கு இது கால் தூசிக்கும் வராதென்றேன். இளையபல்லவன் வாள் வீச, பாரசீக வீரன் அமீரும், சீன மறவன் அகூதாவும் துணையிருக்க, காஞ்சனாதேவி நாணேற்ற நடக்கும் சண்டைக்கு (அப்படி நடக்கும்போதுகூட நம் சாண்டில்யன் காஞ்சனாதேவியின் மார்புக்கச்சையை விபரிக்கும் இடம், தமிழ் மரபில் வீரமும் காதலும் இரண்டறக் கலந்திருப்பதை எப்படி இலாவகமாய்க் கொண்டு வந்திருக்கின்றார், கவனிக்க) கிட்டவாகக் கூட பொன்னியின் செல்வனின் ஒரு யுத்தகளத்தை உதாரணத்துக் காட்டுங்கள். அதற்குப் பிறகு பொன்னியின் செல்வனை முழுதாக வாசிக்கின்றேன் என்றேன்.
இப்போது சொல்லுங்கள் உங்களுக்கு காஞ்னாதேவியும், மஞ்சளழகியும் சேர்ந்து வாழ்வை இரசித்த எங்கள் கருணாகரத் தொண்டமான் வேண்டுமா, இல்லை நந்தினிக்காக உயிரையை இழந்த ஆதித்த கரிகாலன் வேண்டுமா?
***********************
(Aug 04, 2022)
0 comments:
Post a Comment