கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பிரமிளா பிரதீபனின் 'விரும்பித் தொலையுமொரு காடு'

Sunday, November 20, 2022


ண்பர்களோடு உரையாடிக் கொண்டிருக்கையில், ஒரு நண்பர் அண்மையில் இங்கே (இலங்கையில்) வெளிவந்த நூல்களை நூற்றுக்கு மேலே நான் தரவுகளாக வைத்திருக்கின்றேன், ஆனால் யாரெனும் கேட்டால் அவற்றிலிருந்து ஒரு 10 நல்ல நூல்களைத் தேர்ந்தெடுக்கக் கடினமாக இருக்கின்றதென்றார். இலங்கையில் இருந்து எழுதுபவர்களின் நூல்களைப் பற்றிய என் வாசிப்பென்பது மிகவும் குறுகியது. இருந்தும் ஒரு சிலரின் நூல்களைச் சொல்லலாம் என்று உடனே எனக்கு ஞாபகம் வந்த ஒருவரின் பெயரைச் சொன்னேன். அதை மூன்றாவதான இன்னொரு நண்பர் தன்னை இந்தப் படைப்பாளி ஈர்க்கவில்லை என மறுத்துச் சொன்னார். ஆனால் அந்த உரையாடல் பிறகு வேறெங்கோ இழுபட்டு பொதுச்சூழலில் அதிகம் விவாதிக்கப்படும் எழுத்தாளர்களின் படைப்புக்களை விவாதிப்பதாக அது திசைமாறியது.  நம் ஒவ்வொருத்தரின் விருப்பப்பட்டியலில் இருக்கும் பத்து இலங்கை எழுத்தாளர்களின் படைப்புக்களைப் பேசும் அந்த அரிய சந்தர்ப்பம் பின்னர் அம்மாலையில் நழுவிப் போயிருந்தது.


அப்போது நான் சொன்ன படைப்பாளி பிரமிளா பிரதீபன். அவரது அண்மைக்காலக் கதைகளைத்தான் நான் வாசித்திருந்தேன். பின்னர் இலங்கையில் கையில் கிடைத்த அவரது தொகுப்பான 'விரும்பித் தொலையுமொரு காட்டை' இப்போது முழுதாக வாசித்தபோதும், உதிரிகளாய் அவரின் கதைகளை வாசித்து நான் கண்டடைந்த வாசிப்பு அனுபவம் சரியானது என்பது இன்னும் உறுதியாயிற்று.


இலங்கையில் இருந்து இப்போது எழுதிக்கொண்டிருக்கும் ஒரு முக்கிய படைப்பாளியாக பிரமிளாவை நான் சிறுகூட்டமாய் இருந்த நண்பர்களுக்குச் சொன்னதை இப்போது பொதுவிலும் முன்வைப்பேன். இத்தொகுப்பில் 11 கதைகள் இருந்தாலும், ஆகக்குறைந்தது 5 கதைகளை எடுத்து விரிவாக நாம் பேசுவதற்கான ஆழமும், வெளியும் இவற்றில் இருக்கின்றன. இலங்கையில் இருந்து எழுதும்  - முக்கியமாய் பிரமிளாவுக்கு முந்தைய தலைமுறையினர்- பலரைப் போல  நேரடி யதார்த்தப்பாணியில் எழுதுவதை முற்றிலுமாக விலத்தி, ஒரு கனவு தன்மையில் இருந்து பிரமிளா பல கதைகளைச் சொல்வது என்னை வசீகரிக்கச் செய்திருந்தது. 


சில கதைகளில் வான்கோ, ப்ரைடா, டாலி ('ஜில் ப்ராட்லி'),  க்ளாட் மொனே ('கமீலோ டொன்சியுக்ஸின் ஜோடித் தோடுகள்') போன்றவர்களை அழைத்துக் கொண்டது மட்டுமின்றி,  கதையின் பாத்திரங்களின் பின்னணியில் இவர்களைத் துருத்தலின்றி இயல்பாகவும் கொண்டுவரவும் செய்கின்றார் என்பது பிடித்திருந்தது. ஒரு கதை, அந்தக் கதைக்குள் வேறு கதைகள்/உசாத்துணைகள் என்று வாசகர்களை அலைந்து பார்க்க வைக்கும் இன்னுமின்னும் வெளிகளை பிரமிளாவின் கதைகள் பெருக்கியபடி இருக்கின்றன.


அத்துடன் அவரின் கதைகளில் வரும் பெரும்பாலான பாத்திரங்கள் விளிம்புநிலை மனிதர்களாக இருந்தாலும் பரிதாபத்தை வேண்டாது தங்கள் கதைகளை/நிலைகளை நமக்குச் சொல்கின்றன. 'உரப்புழுக்கள்' கதையில் வரும் சுரேகா, தனது கையாலகாத கணவனின் நிலையை வெறுத்து ஒருகட்டத்தில் தோட்ட முதலாளியின் சீண்டல்களுக்கு தன்னை ஒப்புவிக்கின்றார் என்றால், அதேபோல நிலையில் 'அல்லிராணி' கதையில் வரும் அல்லிராணி தன் குடிகார/பாலியல் வன்முறை செய்யும் கணவனை நுட்பமாகக் கொல்வதுவரை செல்கின்றார். ஆக ஒரு பெண் பாத்திரம் தனக்குரிய சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றியும் தகவமைத்தும் அவ்வளவு வன்முறை/பாலியல் சுரண்டல்களுக்கும் இடையிலும் தொடர்ந்து வாழும் நம்பிக்கையை வெவ்வேறு தளங்களில் பெறுவதையும் நாம் காண்கின்றோம்.



பிரமிளாவின் கதைகளில் நான் முக்கியமாய் அவதானித்தது, ஏற்கனவே இவ்வாறான பின்னணியில் கதைகள் சொல்லப்பட்டிருந்தாலும், அவர் இந்தப் பின்னணியை வேறு விதமாக அணுகிப் பார்க்கின்றார் என்பதேயாகும். அத்துடன் அவருக்கு இந்தத் 'தெரிந்த' விடயங்களைச் சுவாரசியமாக சொல்லும் ஒரு மொழியும் இயல்பாய் அமைந்திருக்கின்றது. 


கடந்தமுறை இலங்கைக்கு வந்தபோது ஒரு எழுத்தாளரின் கதைத்தொகுப்பு ஒன்று பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. நானும் அதை ஆவலுடன் வாங்கி வாசித்தபோது இப்படி நேரடியாகச் சொல்லப்பட்ட கதைகளையா இவ்வளவு விதந்துரைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று யோசித்தேன். அவ்வளவு எளிமையான கதைகள்; வாசிப்பவரை மேலும் யோசிக்காமல் எல்லா வெளிகளையும் அடைத்து விட்ட தொகுப்பு அது.



அவ்வாறான ஒரு தொகுப்போடு பிரமிளாவின் இந்தத் தொகுப்பை ஒப்பிடும்போது நாம் இரண்டுக்குமிடையிலான வித்தியாசங்களை அறிந்துகொள்ளலாம். இந்தத் தொகுப்பில் வரும் பெண் பாத்திரங்கள் நிறையவே கனவு காண்கின்றார்கள். குடிகாரக் கணவன்களிடம் இருந்து அல்லாடுகின்றார்கள். சிலவேளைகளில் தாம் வாழும் வாழ்விலிருந்து தப்பிப் போகமுடியாது என்று உணர்ந்தாலும் அதற்குள் இருந்து தம்மை விடுதலை செய்து பார்க்கும் ஆவலில் சிறு முயற்சியையாவது செய்து பார்க்கின்றார்கள் அல்லது ஆகக்குறைந்தது தமது கனவுகளிலாவது தப்பிப் போகப் பார்க்கின்றார்கள். சர்ரியலிசம் பற்றியும், தால்ஸ்தோவ்ஸ்கி பற்றியும், டாலி குறித்தும், முக்கியமாக காமம் குறித்தும் அறிவுஜீவித்தனமின்றி உரையாடுகின்றார்கள்/ நிகழ்த்திப் பார்க்கின்றார்கள்.


இந்தத் தொகுப்பில் இருக்கும் 'ஒரு அரசமரமும் சில வெளவால்களும்', 'இது புத்தனின் சிசுவல்ல' வேறு தளங்களில் நிற்கும் கதைகளாக தம்மை ஆக்கிக்கொள்கின்றன. அதுபோல 'நீலி'யும், 'விரும்பித் தொலையுமொரு காடும்' ஒரு கட்டுரையாகிவிடும் ஆபத்தும் இருக்கின்றன.  அந்தக் கதைகளில் வரும் பாத்திரங்களின் உள்ளக்கிடக்கையை பதிவு செய்யும் விருப்பம் அதிகம் பிரமிளாவுக்கு இருந்தபோதும், அந்த உளப்பதிவு கட்டற்றதன்மையில் நிகழவிடாது நிறுத்திவிடும் தவிப்பும் இந்தக்கதைகளில் வெளிப்படும்போது அது தன்னியல்பிலே நிகழாது விடுகின்றன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.  மேலும் ஒரு தொகுப்பில் பரிசோதனைகளைச் செய்துபார்த்த கதைகள் என்று இவற்றை எடுத்துக் கொண்டு, நாம் கடந்து போய்விடலாம்; அஃதொரு பிரச்சினையுமில்லை.


அதேவேளை, சமகாலத்தில் ஒற்றைத்தன்மைக்குள் தன்னை ஒடுக்கிக்கொள்ளாதும், வாசகருக்கு கதைகளை வாசித்துமுடித்தபின்னரும் மேலும் சிந்திப்பதற்கான வெளிகளைக் கொடுத்தபடியும், மொழியை வசீகரமாய் வெளிப்படுத்தியபடியும் கதைகள் எழுதும் பிரமிளாவை இன்றைக்கு தமிழ்ச்சூழலில் ஒரு கவனிக்கத்தக்கதொரு படைப்பாளியாக முன்வைப்பதில் எனக்கு எந்தத் தயக்கங்களுமில்லை.


********


(Oct 11 ,2022)

0 comments: