2018 உலக உதைபந்தாட்டப் போட்டிகள் நடைபெற்றபோது ஒரு துரதிஷ்டவசமான சம்பவம் உலகின் இன்னொரு மூலையில் நடந்ததைப் பலர் அறிந்திருப்போம். தாய்லாந்தில் ஒரு கிராமத்தில் 12 சிறுவர்கள் உதைபந்தாட்டம் முடிந்தபின், தமது பயிற்றுனருடன் ஒரு குகைக்குள் (Tham Luang cave) நுழைந்தபோது, சடுதியாக பெய்த மழையால் குகை நிரம்பி அவர்கள் மாட்டுப்படுகின்றார்கள். கிட்டத்தட்ட குகையின் நுழைவாயிலில் இருந்து 4 கிலோமீற்றர்கள் உள்ளே போயிருப்பார்கள்.
பெருவெள்ளத்தின் காரணமாக குகையின் உள்ளே எவரும் நுழைய முடியாது போகின்றது.. உலகின் சிறந்த நீரடி நீச்சல்காரர்களுடன், தாய்லாந்தின் சிறப்பு வாய்ந்த கடல்படையினரும் இணைந்து, இறுதியில் பத்து நாட்களுக்குப் பின்னரே சிறுவர்கள் இருக்கும் இடத்தைக் காண்கின்றார்கள்.
பத்து நாட்களுக்கு மேலே ஆகிவிட்டதால், உண்மையிலே இந்த நீரடி நீச்சல்காரர்கள் எல்லா நம்பிக்கைகளையும் இழந்து இந்தச் சிறுவர்கள் இறந்துபோயிருப்பார்கள் என்றே நம்பியிருந்தார்கள். பத்துக்கு மேற்பட்ட எண்ணிக்கையுள்ள ஒரு குழு, எந்த உணவும் இல்லாமல் 10 நாட்களாய், அதுவும் நிலத்தின் சமதரையில் அல்ல, அதைவிட கீழே 1000 அடிகளுக்குக் கீழே உணவும், சுவாசிப்பதற்கு ஒழுங்கான பிராணவாயும் இல்லாது தப்பிப் பிழைத்திருப்பது என்பது நிச்சயம் அதிசயந்தான்.
சிலியில் எண்ணெய் சுரங்கத்தில் 33 பேர் சிக்குப்பட்டு கிட்டத்தட்ட 70 நாட்களில் அவர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டபோதும், அவர்களுக்கான உணவு விநியோகம் விரைவில் கிடைத்துவிட்டது. இங்கே இந்தச் சிறுவர்கள் பத்து நாட்களுக்கு மேலாக குகையின் மேலாக வந்த மழைநீரை மட்டும் அருந்தியபடி தப்பியிருக்கின்றனர். அத்தோடு அவர்கள் தொடர்ந்து தியானமும் செய்து தம்மை மனதாலும் தளரவிடாது வைத்திருந்திருக்கின்றனர்.
அவர்கள் உயிரோடு இருந்தாலும் அவர்களை உயிரோடு காப்பாற்றிக் கொண்டு வரமுடியாது என்றே இந்தச் சிறந்த கடல் நீரோடிகள் நம்புகின்றனர். ஏனெனில் அவர்களாலேயே அந்த இடத்தை அடைய கிட்டத்தட்ட 6 மணித்தியாலங்கள் எடுத்திருக்கின்றன. எவ்வித ஆழ்கடலோடும் அனுபவமற்ற சிறுவர்களை உயிரோடு கொண்டுவரமுடியாது என்று இவர்கள் நம்பிக்கை இழக்கின்றனர். குகைக்குள் இருக்கும் பிராணவாயும் குறைந்துகொண்டே போகின்றது. பருவமழைக்கான காலம அருகில் நிற்கின்றது. அப்படித் தொடங்கினால் வெள்ளம் மேலும் உள்ளே நுழைந்தால் அவர்கள் நிற்பதற்கே இடமில்லாதும் போய்விடும்.
இறுதியில் பல்லாயிரக்கணக்கான உள்ளூர் மக்களின் உதவியோடும், கிட்டத்தட்ட 17 நாட்டுக்கு மேற்பட்ட அனுபவம் பெற்றவர்களின் அறிவோடும் இந்தச் சிறுவர்கள் 18 நாட்களின் பின் காப்பாற்றப்படுகின்றார்கள். அதுகூட ஒரு சட்டத்துக்கு உட்பட்ட முறையால் அல்ல. எல்லாச் சிறுவர்களையும் மயக்க நிலைக்குக் கொண்டு சென்று ஒவ்வொருவராக- நீருக்குள் மயங்கியபடியே- இவர்கள் காப்பாற்றுகின்றனர்.
உள்ளூர்மக்கள் பல்வேறு குழாய்களை வைத்து மில்லியன்கணக்கான தண்ணீரைக் குகையில் இருந்து அகற்றுகின்றார்கள். அந்த தண்ணீரால் தமது விவசாய நிலங்கள் அழியும் என்று தெரிந்தும் அதைப் பாய்ச்சுவதற்கு தமது நிலங்களை விவசாயிகள் விட்டுக் கொடுக்கின்றார்கள். இவ்வாறு எல்லா மனிதர்களும் உதவி செய்ய அந்தச் சிறுவர்கள் அவர்களின் பயிற்றுனருடன் காப்பாற்றப்படுகின்றனர். இந்த மீட்புப்பணியின் இடையில் உதவச் சென்ற ஒரு தாய்லாந்து கடற்படைக்காரர் குகைக்குள்ளே இறக்கின்றார். இன்னொருவர் இந்நிகழ்வு நடந்த அடுத்த வருடம் இதனால் ஏற்பட்ட நோய்த்தொற்றின் மூலம் காலமாகின்றார்.
உண்மையிலே இந்நிகழ்வு ஒரு கூட்டு மீட்புப் பணி. மனிதர்கள் ஒன்று சேர்ந்தால் சாதிக்க எத்தனையோ அற்புத விடயங்கள் இருக்கின்றன என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம். போரென்று வரும்போது அருகில் இருப்பவனையோ போட்டுத்தள்ளும் மனிதர்கள் இவ்வாறான மீட்ட்புப்பணிக்காய் உலகின் எங்கெங்கோ இருந்தெல்லாம் ஒன்று கூடுகின்றார்கள். சக மனிதர்களை தம் உயிரைக் கொடுத்துக் காப்பாற்றுகின்றார்கள்.
இந்த நிகழ்வு நடந்தபோது நான் ஐரோப்பாவில் அலைந்து கொண்டிருந்திருக்கின்றேன். பிரேசில் பெல்ஜியத்திடம் தோற்றுவிட்டதென ஒரு கடல்நீரோடி முதன்முதலில் சிறுவர்களை உயிரோடு பார்க்கும்போது சொல்வார். அவர்களுக்கு அது பத்து நாட்களுக்குப் பின் வருகின்ற சிறு நம்பிக்கைச் சமிக்ஞை. எனக்கோ என் பிரியத்துக்குரிய உதைபந்தாட்ட அணி தோற்றுவிட்டதென்கின்ற அந்தக் கணத்தில் சற்றுக் கவலையோடு கடந்துபோகின்ற தருணம்.
இப்போது இதை மீள நினைக்கும்போதுகூட, ஏதேதோ எல்லாம் உலகின் இன்னொரு மூலையில் நடந்துகொண்டிருக்கும் அல்லவா?
*******************************
(Thirteen lives movie)
0 comments:
Post a Comment