கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

'அவ்வளவு வேகமாக நடக்காதே எல்லா இடத்திலும் மழைதான்'

Sunday, November 06, 2022


நான்
எனது குருவோடு
மழையில் நடக்கும்போது
அவர் சொல்வார்
'அவ்வளவு வேகமாக நடக்காதே
எல்லா இடத்திலும் மழைதான் '

- ஷுன்ரியு சுஸுகி (தமிழில்: க.மோகனரங்கன்)

பொழுது முழுதும் மழை பொழிந்து கொண்டிருக்கையில், கருமேகம் மூடிய பின்னணியில் விரியும் கோடையின் பசுமையில் இருப்பது உயிர்ப்பு.

காலையில் எழுந்தவுடன் மழையின் சாரல் கால்களில் படர, மேலே மூடிய ஊஞ்சலில் இருந்து மொட்டவிழ்த்துவிட்ட பூசணிப்பூக்களையும், அவரைப்பூக்களையும் பார்க்கையில் இந்த நாள் எமக்கே எமக்கானதென்று எளிதில் புரிந்துவிடும்.

காலம் நெகிழ்ந்து கரைந்துருக, எதுவும் செய்யாது அப்படியே அசையாது நடப்பதை அவதானிப்பதை, 'கோடை மலர மனது தளிர்க்கும் காலம்' எனவும் பெயரிட்டுக்கொள்ளலாம்.

தேய்வழக்குகளைக் கடந்துவர, தேய்வழக்குகளைப் பற்றிப் பேசிப் பேசித்தான் முதலில் கடக்கவேண்டும் என்று சொல்வதைப்போல, இதை எழுதும்போது தற்செயலாய் இளையராஜாவின் அந்திமழை பொழிகிறதின் பின்னணி இசை ஒலிப்பதையும் ஓர் உபகுறிப்பாய்ச் சேர்த்துவிடலாம்.

****

உலகின் இன்னொரு திசையில் இருப்பவர்க்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறும்போது, மழை பெய்து தன்னை வாழ்த்துகிறதென மகிழக்கூடியவருக்கு, சற்று பின்னோக்கிப் பார்க்கும்போது தன் காலம் சிறிது விரயமாக்கிப் போய்விட்டதோ என்ற‌ சிறுதுயர் அவருள் எட்டிப் பார்க்கிறது. தான் இன்று வந்து சேர்ந்த காலத்துக்கு, இளமையில் விளிம்பில் நின்று வாழ்த்திக்கொண்டிருக்கின்ற நானும், எனது நண்பரும் வந்துவிடுவோமென்று மறைமுகமாக நமக்கு அவர் உணர்த்துகிறார்.

'நீங்கள் வீணாக்கிவிட்ட காலமென்று நினைக்கின்றீர்கள், ஆனால் அதில் எதையோ நீங்கள் அடைந்திருப்பதால்தான் நாங்கள் உங்களைத் தேடி வந்திருக்கின்றோம்' என்கின்றேன்.

வீணடிக்கப்பட்ட வாழ்க்கையென்று எதுவுமே இல்லை. இன்னமும் வாழ்ந்து தீராத வாழ்க்கையொன்று இருக்கிறதென வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

இதே காலையில், புதிதாய் வந்திருக்கும் திரைப்படமொன்றை பார்த்துவிட்டு நண்பரொருவர் 'குரல் பதிவை' அனுப்புகிறார். 'இந்தப் படம் உனக்குப் பிடிக்கும், ஒருவகையில் நீ வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை, உன்னை இது நினைவுபடுத்தியது' என்றொரு செய்தி.

உண்மையில் நாங்கள் பிரமிப்புக்களைப் பார்ப்பதற்காய் நாம் வைத்திருக்கும் பிரமைகளை உடைத்துவிடவேண்டியிருக்கிறது.

நாங்கள் பிரமைகளை பிரமிப்புக்களாக நினைத்து, பிறரைப் பார்த்து ஏங்குகின்றோம். நம்மால் வாழ முடியாத ஒரு வாழ்க்கையென்று எதுவுமே இல்லை. நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருக்காத, பிறர் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்வின் மீது தொலைவிலிருந்து பார்க்கும்போது பிரமிப்பு ஏற்படுவதும் இயல்பானது. ஆனால் அது நமது பிரமைகளே அன்றி வேறெதுவும் இல்லை.

நாம் வாழாத வாழ்க்கையிலும், நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையைப் போல தத்தளிப்புக்களும், மகிழ்வுறு தருணங்களும், சறுக்கிவிழும் பொழுதுகளும் இருக்கும். எனவே நமக்குக் கைகூடாதவை எல்லாம் அற்புதமானவை என்கின்ற பிரமைகளை விலத்தினால், நம் முன்னே இருக்கும் பிரமிப்புப்பான விடயங்கள் எளிதில் புலப்படும்.

****

வசந்தத்தில் வழமையாக மஞ்சளும், வெள்ளையுமான வர்ணங்களில் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளோடு புதிதாக செம்மஞ்சள் நிறத்தில் எனிப்படி ஒரு புதிய வண்ணத்துப் பூச்சி பறக்கிறது என யோசித்துப் பார்த்திருக்கின்றோமா? 'ஒநாய் குலச்சின்னத்தில்' மேய்ப்பர்கள் திறந்தவெளியில் இறந்தவர்களின் உடலை கைவிட்டுவர, மூன்றாம் நாளில் ஓநாய்கள் அவ்வுடலைத் தின்று எலும்புக்களை மிச்சம் வைத்தால் மட்டுமே நீத்தார் வானுலகு செல்கிறார்கள் என்று நம்பிக்கைக்கு நாம் குறுக்கீடு செய்யமுடியுமா? அல்லது திபெத்தியர்களின் ஒருபகுதியினர் இறந்தவர்களின் உடலை கழுகிற்கு காணிக்கை செய்வதன் மூலம், பறப்பவை எளிதாக நம் ஆன்மாவை வானுலகிறகு எடுத்துச் செல்லும் என்பதை எப்படி எப்படி தர்க்கரீதியாக நிரூபிப்பது. பறக்கும் ஓநாய்கள் இருக்கிறதென்று தீவிரமாக நம்பும் மொங்காலிய நாடோடிகளிடம் அப்படியில்லை என்று நிரூபித்து நாம் அடையப்போவது எதுவாக இருக்கும்?

வாழ்க்கை என்பதை நாம் நம்பிக்கொண்டிருப்பவைகளின் மூலமே கடந்துபோக விரும்புகின்றோம். அதற்கப்பால் வாழ்க்கையிற்கான அர்த்தங்களைத் தேடுவதன் மூலம் கண்டடைவது எதுவுமேயில்லை.

வேண்டுமானால் பிறரை/பிறதை அதிகம் தொந்தரவுபடுத்தாது ஒரு எளிய வாழ்வின் மூலம், வாழ்ந்துபோக முயற்சிப்பதை மட்டுமே நாம் செய்யக்கூடியது.

ஜெயமோகனின் காட்டில், நீலியின் மீது பித்து பிடித்தலைந்தது, எவருக்கும் அவ்வளவு எளிதில் வாய்த்திடாத காட்டின் ஆதிக்குடிப்பெண்ணை அரிதாக சந்திக்கும் வாய்ப்பைப் பெறுகின்ற ஒருவன், ஏன் அவ்வளவு சாதாரண வாழ்வை இறுதியில் தேர்ந்தெடுக்கின்றான். சாதாரண வாழ்வை மட்டுமில்லை, தனது மாமா வாழ்ந்து, ஒரு அவலமான இறுதிமுடிவைச் சந்தித்த (கொலை) அதே வாழ்வின் பாதையில் ஏன் அவனும் பயணிக்க்கின்றான் என்பதில்தான் வாழ்வின் அவிழ்க்க முடியாத முடிச்சுக்கள் இருக்கின்றன‌.

காட்டின் அற்புதங்களைத் தரிசித்த அந்த ஒருவனுக்கு நேரில் முதன்முறை பார்க்கும் -பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மலரும்- குறிஞ்சியைப் பார்த்தவுடன் வரும் வெறுமையை எந்தப் பெயரிட்டு அழைப்பது? குறிஞ்சிப்பூவைப் பார்த்தவுடன் நீலி மீதிருக்கும் அளவிறந்த நேசம் அவனுக்குள் சட்டென்று வடிந்துபோவதைப் போல நாம் நம் காதல்களின்போது பெரும்பாலும் உணராது கடந்து போயிருக்கமாட்டோமில்லையா?

இவ்வளவுதானாவென எழும் வெறுமையை இந்த மழையின் முன் தன்னை ஒப்புக்கொடுத்துக் கொண்டிருக்கும் புற்களைப் போல நாம் நம்மை முற்றாகக் கைவிட்டு வெளிவந்தாலன்றி இன்னொரு நாள் இனிதாக அமையப் போவதில்லை.

***

ஆக, அற்புதங்களை கண்டவர்களே சாதாரணத்திலும் மிகச் சாதாரணத்திலுமான வாழ்க்கையைப் பிறகொருகாலம் வாழும்போது, எளிய‌ வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் அற்புதங்கள் நிகழ்ந்துவிட கூடுமென்ற கனவுகளுடன் வாழ்வதிலென்ன குறைந்துவிடப் போகின்றது.

ஒரேநேரத்தில் மூன்று பெண்களால் தீவிரமாக நேசிக்கப்பட்ட ஒருவன்  பின்னொருபொழுது அம்மூவரையும் கடந்து வந்திருப்பதையும் நானறிவேன். அவன் இவற்றிற்குப் பிறகும் காதல், எந்த அற்புதத்தை நிகழ்த்தப்போகின்றது என்று எண்ணினானோ தெரியாது. சிலவேளைகளில் நேசத்தின் மூலம் இறுதியாய் வந்தடையும் தாங்கமுடியா வெறுமையைச் சந்திக்கத்தான் அவன் இவற்றை உதறித்தள்ளி வந்தானோ, அதையும் நாம் அறியமுடியாது.

அது அவனது வாழ்க்கை. அவனது தெரிவு(கள்)!

இப்போது நமக்கு கருமேகங்கள் இழைத்த வானம் இருக்கிறது. பசுமை போர்த்திய கோடை இருக்கிறது. சொற்கள் மெளனத்தில் அமிழ்ந்த அமைதி இருக்கிறது. நேசிக்க மனிதர்கள் சிலர் அருகிலோ/தொலைவிலோ இருக்கிறார்கள்.

மேலும் வாழ்வதற்கு இன்னமும் மிச்சமாய் - கொஞ்சம் வாழ்க்கை,- புற்களில் தேங்கிய மழைத்துளிபோல இருக்கிறது.

'அவ்வளவு வேகமாக நடக்கவுந் தேவையில்லை, எல்லா இடத்திலும் அதே  மழைதான். '

****************

(Jul 18, 2021)

Image Credit: "Walking Meditation III by Jenny Walters

4 comments:

Anonymous said...

அருமை இளங்கோ எனக்கும் இதே மனநிலை தான் வாழ்வின் நடுவயதுச் சிக்கல் இருக்கிறது ஆனால் இந்தக் கட்டுரையைப் படித்ததும் மனது மிகவும் இளகிவிட்டது. உண்மையில் புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது. மிக்க நன்றி. எப்பொழுதும் உங்கள் பக்கத்தைத் தேடி வருவதற்குக் காரணம் இதுதான். வாழ்ந்து முடிப்போம்..!!!

11/08/2022 05:50:00 PM
இளங்கோ-டிசே said...

நன்றி. இப்படி எழுதுகின்றபோது யாருக்கேனும் மனதில் சிறு ஒளி பரவினாலே அது மீண்டும் எனக்குள்ளும் இன்னும் எழுதிப் பார்க்கும் உற்சாகத்தைத் தரும்.

எனக்குத் தெரிந்த நண்பராகத்தான் நீங்கள் இருப்பீர்கள். அனாமதேயமாக இந்தப் பின்னூட்டம் வந்துவிட்டதால் யாரென்று தெரியவில்லை. ஒரளவு ஊகிக்க முடிகிறது.

11/09/2022 03:24:00 PM
Anonymous said...

ஆம் உங்கள் நண்பர் செந்தில் நாதன் தான் உங்கள் முகநூல் பக்கம் வழியாகவே வந்தேன், நன்றி..

11/09/2022 08:35:00 PM
இளங்கோ-டிசே said...

நன்றி.

11/10/2022 10:03:00 AM