கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பிரியா விஜயராகவனின் 'ஆட்டுக்குட்டியும் அற்புத விளக்கும்'

Tuesday, November 15, 2022


1.

பிரியா விஜயராகவனின் முதல் நாவலான 'அற்றவைகளால் நிரம்பியவள்' தமிழில் மிக முக்கியமான நாவல். இற்றைவரை அது குறித்து பரவலாக உரையாடல் நிகழ்த்தப்படாமல் இருந்தாலும், அது ப.சிங்காரத்தின் 'புயலிலே ஒரு தோணி'யைப் போல இனி வருங்காலங்களில் செவ்வியல் பிரதியாக மாறிவிடும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதுபோல பா.கண்மணியின் 'இடபமும்' தமிழில் தனக்குரிய இடத்தை விரைவில் எடுத்துக் கொள்ளும்.


இந்த இரண்டு புதினங்களும் தமிழில் இதுவரை சொல்லப்பட்ட கதைகளின் எல்லைகளை இன்னும் விரிவுபடுத்துகின்றன. புதிய களங்களுக்கு நம்மை அழைத்துச் செல்வதோடு மட்டுமின்றி, பல படைப்பாளிகளுக்கு கைவந்து விடாத மிகப்பெரும் விடுதலையுணர்வையும் இந்தப் பிரதிகள் வாசிப்பவர்க்குக் கடத்தி விடுகின்றன. இவ்வாறு விடுதலையுணர்வை வலிந்து திணித்து கவிதைக‌ள் எழுதுபவர்களும், திரைபடங்கள் எடுப்பவர்களுமெனச் சிலர் இருக்கின்றனர். அவர்களுக்கு சர்ச்சைகளின் மூலம் தம்மை முன்னிறுத்துவதே முக்கியத்துவமே அன்றி, தமது படைப்புக்களின் மூலம் எதிர்முனையில் இருப்பவர்களுடன் உரையாடல்களை நிகழ்த்தவேண்டும் என்பதில் அதிக அக்கறை இருப்பதில்லை. ஆகவே தொடக்ககால சர்ச்சை/சலசலப்ப்புகளுக்கு அப்பால் அவ்வாறான படைப்புக்கள் வேறொரு தளத்துக்கு விரிந்து செல்வதில்லை.

பிரியாவின் 'அற்றவைகளால் நிரம்பியவளும்', கண்மணியின் 'இடபமும்' நம்மை முடிவுறாத‌ உரையாடல்களுக்கு அழைத்துச் செல்கின்றன. இதுவரை ஆண்களால் கற்பனை செய்யப்பட்டு எழுதப்பட்ட பெண்கள் பற்றிய விம்பங்களைக் கலைக்கின்றன. எவ்வாறு நாம் மீண்டும் மீண்டும் பெண் பற்றிய கதையாடல்களைக் கட்டியமைத்தாலும், இந்தப் பிரதிகள் தொடர்ந்து குலைத்து குலைத்து அடுக்கியபடி இருப்பதால் இன்னமும் வசீகரிப்பதாகவும் இருக்கின்றன.


2.

'அற்றவைகளால் நிரம்பியவளை' தமிழில் மிக முக்கிய நாவலாக நினைக்கும் எனக்கு, தொடக்கத்தில் 'ஆட்டுக்குட்டியும், அற்புத விளக்கும்' அவ்வளவாக ஈர்க்கவில்லை. அற்புதமான‌ படைப்பை எழுதிய பலரின் அடுத்த‌ படைப்புக்கு வழமையாக நிகழக்கூடியதுதான் இது. ஏனெனில் வாசகர் ஏற்கனவே வாசித்துவிட்ட படைப்பை அடுத்துவரும் படைப்போடு அவரையறியாமல் ஒப்பிட்டுக்கொள்ளவே செய்வார். மேலும் அற்றவைகளால் நிரம்பியவள் போல பரந்த கதைப்பரப்பில் ஆட்டுக்குட்டியும் அற்புதவிளக்கும் நிகழ்வதில்லை. இதில் குறிப்பிட்ட சில பாத்திரங்களே வருகின்றன.

இன்னும் சொல்லப்போனால் ஒரு தாயுக்கும் மகனுக்குமான உறவைச் சொல்வதென்று கூடச் சொல்லிவிடலாம். ஆனால் இந்தத் தாய் ஒற்றைப் பெற்றோராக (single mother) இருந்து இந்தக் கதையைச் சொல்கின்றார். முற்றிலும் புதிய நிலப்பரப்பான ஐரோப்பாவில் இருந்து வேலை செய்தபடி மகனைத் தனித்து வளர்க்கும் தத்தளிப்புக்களை எமக்குச் சொல்கின்றார்.

பிரியாவின் 'அற்றவைகளால் நிரம்பியவளில்' வரும் பெண் பாத்திரம் ஒரு சுதந்திரமான பெண். புதியவற்றை கண்டடைவதிலும் அனுபவிப்பதிலும் ஒருபோதும் தயங்காத ஒரு பாத்திரமே அற்றவைகளால் நிரம்பியவளான அஞ்சனா. ஆனால் இந்த நாவலில் வரும் பெண்ணோ அவள் விரும்பியோ/விரும்பாமலோ ஏற்றுக்கொண்ட மனைவி/தாய் என்ற பாத்திரங்களுக்குள் அடங்கிவிடுபவளாகவும், அதேவேளை தனக்கான சுதந்திரத்தையும், தனிப்பட்ட வெளியையும் அடைவதில் திணறிக் கொண்டிருப்பவளாகவும் இருக்கின்றாள்.

இந்நாவலில் வரும் பெண் இரண்டு பெரும் சம்பவங்களால அலைக்கழிக்கப்படுகின்றாள். அவளுக்கு நெருக்கமான இருவரை கிட்டத்தட்ட இழக்கின்ற கையாலாகாத நிலைக்குச் செல்கின்றாள். ஒருவரை இறுதியில் என்றைக்குமாய் இழக்கின்றாள். இன்னொருவரை இறுதிக்கட்டம் வரை சென்றபோதும் காப்பாற்றிக் கொள்கின்றாள். தமிழ்ச்சூழலில் தனித்த பெற்றோராக இருந்து பிள்ளையை வளர்க்கும் -அதுவும் முக்கியமாய் புலம்பெயர்சூழலில் இருந்து- பெரும் பாரத்தையும், அவலத்தையும் எவரும் இந்தளவுக்கு விரிவாகச் சொன்னதில்லை. அது மட்டுமின்றி ஒரு பெண் கருவாவதிலிருந்து பெண்ணுறுப்பிலிருந்து பிள்ளை கிழித்து வெளியே வருவதுவரை இதில் மிக விரிவாக விபரிக்கப்படுகின்றது. நாமெல்லோரும் இப்படித்தான் பிறந்திருப்போம் என்றாலும் பிரியா இந்நாவலில் இதை அதன் வேதனையோடும், ஒரு புதிய உயிரைக் காணும் இனம்புரியா மகிழ்வோடும் எழுதும்போது நாம் நமது அன்னையரை ஒருகணமாவது நினைத்துப் பார்ப்போம். அவர்களை மானசீகமாகவேனும் நம்மை இந்தப் பூமியில் உலாவ விட்டிருப்பதற்காய் நன்றியுடன் அரவணைத்தும் கொள்வோம்.

இந்தப் புனைவை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருப்பது என்று சொல்லப்பட்டிருக்கின்றது. அந்தக் குறிப்பு அவ்வளவு தேவையற்றது. ஒரு நுட்பமான வாசகரால் அதை சொல்லாமலே புரிந்துகொள்ளமுடியும். அதுமட்டுமின்றி இந்த நூலில் இறுதி அத்தியாயத்தை புனைவுக்குள் சேர்க்காது, பிற்சேர்க்கையாக/பின்னிணைப்பாக இணைத்திருக்கலாம்

இற்றைக்கு ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளும், குறிப்பிட்ட ஆளுமைகளின் நிழலுக்குள் நின்றும் எழுதப்படுபவையே அநேகமாய்ச் சிலாகிக்கப்படுகின்ற அவலச்சூழலுக்குள் பிரியா போன்றவர்களின் எழுத்துக்கள் கவனிக்கப்படாமல் போகலாம். ஆனால் எப்போது ஒரு நாவல் நம்மை அதற்குள் அசையாய்ச் சாட்சியாய் உள்ளிழுத்து தொடக்கத்திலிருந்து முடிவுவரை கூட்டிச்செல்கின்றதோ அது நல்லதொரு புனைவாக மாறிவிடுவதை எவராலும் தடுத்து விடமுடியாது. இவ்வாறான படைப்புக்களை காலம் தன் கரங்களால் மெல்ல மெல்ல ஏந்தி காலதீதத்திற்குள் அனுப்பிவைத்து விடுகின்றது.

பிரியாவின் இந்த நாவலை நான் வாசிக்கும்போது சில இடங்களில் கண்ணீர் கசிந்திருக்கின்றேன்; சட்டென்று புத்தகத்தை மூடி வைத்து நிர்மலமான வானத்தை வெறித்தபடி இருந்திருக்கின்றேன். இந்தளவு துயரங்களை சுமந்த அந்தப் பெண் பாத்திரத்தின் கரங்களை ஆதூரமாய்ப் பற்றியிருக்கின்றேன்.

இதைவிட ஒரு புனைவு வாசகருக்கு வேறென்ன வெகுமதியைத் தந்துவிடமுடியும்?

*******************************************

(Aug 02, 2022)

0 comments: