சில நாட்களுக்கு முன் அபுனைவுகளை எழுதுபவரை விட, புனைவுகளை எழுதுபவர்களையே சமகாலத்தில் மதிக்கின்றார்கள் என்கின்ற ஒரு பதிவை வாசிக்க நேர்ந்திருந்தது. கடந்த தலைமுறையினர் பிற படைப்பு/படைப்பாளிகள் பற்றி நிறைய விமர்சித்து உரையாடி வந்தவர்கள், இப்போதைய புதுத்தலைமுறை தன் புனைவுண்டு தானுண்டு என்கின்ற மாதிரி அதில் எழுதப்பட்டிருந்தது. இன்றல்ல, அது ஒரு தசாப்தத்திற்கு மேலாக தமிழில் காத்திரமான விமர்சனத் தலைமுறை இல்லாமற்போய்விட்டது என்பது ஒப்புக்கொள்ளவேண்டிய உண்மையே.
ஆனால், அந்தப் பதிவின் தொனியே புனைவு எழுதினால்தான் இனிக் கவனிப்பார்கள், இனி அபுனைவு எழுதி எல்லாம் நேரத்தை வீணாக்கத் தேவையில்லை என்கின்ற ஒரு சுயபச்சாபத்தின் சாயல் தெரிவதால், இங்கே சிலதை எழுதலாமென நினைக்கின்றேன்.வாழ்க்கையில் நாம் சுயபச்சாபத்திற்குள் போவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. நாம் அறிந்தோ/அறியாமலோ போகும் சுயபச்சாபத்தை வாழ்வில் ஒருவகையில் தவிர்க்கவும் முடியாது. ஆனால் எழுத்தில் சுயபச்சாபம் எழுவதை இயன்றளவு என்னைப் பொறுத்தவரை தவிர்க்க விரும்புவேன். நான் கவிதைகள் நிறைய எழுதி இலக்கியத்தில் நுழைந்த தொடக்க காலத்தில் இனி கவிதைகளை வாசிக்கமாட்டார்கள் என்கின்ற தொனி ஒலித்துக்கொண்டிருந்தது.
அப்போது இப்போது போல நாவல்கள் அல்ல, சிறுகதைத் தொகுப்புக்களே முக்கிய பேசுபொருளாகவும் இருந்தது. ஆனால் இன்றைக்கு கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆனபின்னும் கவிதைகள் குறைந்துவிட்டனவா? ஒவ்வொரு ஆண்டும் வெளிவருகின்ற நூல்களில் கவிதைத் தொகுப்புக்களை மிஞ்சுகின்ற வேறேனும் வகைமை இருக்கின்றனவா என்ன?
ஏன் இப்போது நமது வாசிப்புக்களை ஆக்கிரமித்துக்கொண்ட முகநூல்/இன்ஸ்டா போன்ற சமூகவலைத்தளங்களில் கூட, அதிகம் மேற்கோள் காட்டப்படுகின்ற வகையாக கவிதைகள்தானே இருக்கின்றன. ஆக ஏதோ ஒருகாலத்தில் ஏதோ ஒரு வகைமை 'பேசுபொருளாக' இருக்கின்றது என்பதற்காக 'ஊரோடு ஒத்தோடவேண்டும்' என்பது இலக்கியத்துக்கு ஒருபோதும் உதவாது. அப்படி இருந்தால் அது இலக்கியமுமில்லை.
அங்கீகாரத்துக்கும், பிரபல்யத்துக்கும் மட்டுமே இலக்கியச் சூழலுக்கு வந்திருப்பதாக ஒருவர் நினைத்தால், இதைவிட உருப்படியாகச் செய்ய எத்தனையோ காரியம் இருக்கின்றன எனச் சொல்வேன். நமது நாளாந்தங்களிலிருந்து இருந்தும், வாழ்வின் அர்த்தமின்மைகளிலிருந்தும் ஏதோ ஒருவகையில் நம்மை ஆற்றிக்கொள்ள புகலிடமென வரும் இலக்கியத்திலும், எழுத்தை ஒரு 'கச்சா'ப் பொருளாகக் கொண்டு நுகர்வோரைப் பற்றி அக்கறை கொள்வதால் நமக்கென நிம்மதி வந்துவிடப்போகின்றது.
தமிழ்ச்சூழலில் எப்போதும் அபுனைவுகளை விட, புனைவுகளே பரவலாகப் பேசப்படுகின்றன என்ற உண்மையை உணர்ந்தே நம்மில் பலர் அபுனைவுகளை எழுத வருகின்றோம். புனைவுகளோடு அபுனைவுகளை ஒப்பிட விருப்பமில்லையெனினும், அவையவைற்றுக்கென ஒருவகையான உழைப்பு இருக்கின்றது. புனைவு எழுதுகின்ற ஒருவருக்கு அபுனைவுகளை வாசித்து வருகின்றதால் வரும் படைப்புவெளி விசாலமாக இருக்கும் என்பதை நாம் அவர்களின் புனைவுகளை வாசிக்கும் ஒவ்வொருமுறையும் உணர முடியும்.
எல்லோருக்கும் சொல்ல எத்தனையோ கதைகள் இருக்கும். ஆனால் அதை இன்னும் ஆழமாகவும் விரிவாகவும் சொல்ல இந்த அபுனைவு எழுத்துக்கள் நிச்சயம் வளம் செய்யும். மேலும் அபுனைவுகளை எழுதும்போது நம்மால் நிறையக் கருத்துக்களைத் தொகுத்துத் திரட்டிச் சொல்லமுடியும். அது நாம் புனைவாக எதையேனும் எழுதும்போது நிச்சயம் ஒற்றைப்படையாகச் சொல்லாது வாசகருக்கு விரித்துச் சொல்லும் பல்வேறு பாதைகளைத் திறக்கச் செய்வதாக இருக்கும்.
மேலே சொல்லப்பட்ட கட்டுரையில் அசோகமித்திரன் அதனால்தான் அபுனைவுகளைக் கைவிட்டு, இறுதிவரை கதைகளாக எழுதிக் குவித்தவர் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. என்னைப் பொறுத்தவரை அ.மியிற்கு முன்னர் கணையாழி இருந்ததைப் போல அவருக்கு ஒரு பத்திரிகை, இவ்வாறு எழுத பிற்காலத்தில் இல்லாததாலேயே அப்படி எழுதவில்லை என்றே நினைக்கின்றேன். ஏனெனில் அ.மிக்கு பத்திகள் எழுத எவ்வளவு விருப்பமிருந்தது என்பதை நாம் அவரது பத்தி எழுத்துக்களினூடு அவதானிக்கமுடியும். அபுனைவு எழுத்துக்கள் சிலவேளைகளில் எழுதும் காலங்களில் அவ்வளவு முக்கியம் பெறாதுபோனாலும் பிற்காலத்துச் சந்ததிக்கு அது நிச்சயம் உதவும்.
நான் எஸ்.பொவின் 'தீ' பற்றி வாசித்து அந்தக் காலத்தில் என்ன வகையான எதிர்வினைகள் நிகழ்ந்திருக்குமென்று பார்ப்பதற்கு எனக்கு அன்றையகாலத்தில் பிரமிள்-தளையசிங்கம்-எஸ்.பொ எழுதிய விமர்சனக்கட்டுரைகளே உதவியிருக்கின்றன. இன்றைக்கும் எஸ்.பொவின் புனைவுகளுக்கு நிகராக அவரது 'இனி' என்கின்ற அபுனைவுகளின் தொகுப்பை என் வாசிப்பில் முதன்மையாக வைத்திருக்கின்றேன். மேலும் அசோகமித்திரன், எஸ்,பொ, அ.யேசுராசா போன்ற பலர் எழுதிய பத்தியெழுத்துக்களின் தொகுப்பிலிருந்தே நான் வாழ்ந்தே பார்க்கமுடியாத இலக்கிய உலகின் போக்குகளைக் கற்றபடி இருக்கின்றேன். கடந்தகாலத்துக்குச் சென்று பார்க்க இவையே உதவுகின்றன.
ஏன் இன்றைக்கு சாரு நிவேதிதாவிற்கு வந்துசேர்ந்த வாசகர்களில் பலர் அவரின் கோணல்பக்கங்கள் என்கின்ற அபுனைவுகளின் தொகுப்பினூடாக வந்து சேர்ந்தவர்கள் என்றே நம்புகின்றேன். மேலும் இவ்வாறான அபுனைவுகள் அந்த எழுத்தாளரை மட்டுமில்லை, அவர் மேற்கோள் காட்டுகின்ற எத்தனையோ வேறு படைப்பாளிகளையும் நாம் கண்டைந்துகொள்ள முடிகிறதல்லவா? நான் கூட உயிர்நிழல்(?) சஞ்சிகையில் ராஜநாயகம் சாருவின் நூல்களைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையினூடாகத்தான் சாருவைக் கண்டடைந்தவன். இவ்வாறு ஒரு புது வாசகருக்கு இந்த அபுனைவுகள் தருகின்ற அனுபவங்கள் என்பது எண்ணிலடங்காதவை.
சென்ற வாரம் கொழும்பு புத்தகச்சந்தை நடந்தபோது குமரன் புத்தகசாலையில் அ.மார்க்ஸின் 'பின் நவீன நிலை' என்கின்ற 500 பக்கங்களுக்கு மேலுள்ள பெருந்தொகுப்பை கண்டவுடனேயே வாங்கிவிட்டேன். பில் போட்டுக்கொண்டிருந்தவருக்கு நான் அ.மார்க்ஸின் தொகுப்பை வாங்கியது சற்று ஆச்சரியமாக இருந்தது. அ.மார்க்ஸைத் தெரியுமா எனக்கேட்டார். அப்படியே அந்த உரையாடல் கொஞ்சம் போனது. இதையேன் சொல்கின்றேன் என்றால் எனக்கு புனைவுகளைப் போல, அபுனைவுகளை வாங்கி வாசிக்கவும் அதேயளவு ஆர்வம் இருக்கின்றதெனச் சொல்லவே!
கனடாவில் ஒரு நண்பர் இன்னொரு நண்பரின் வீட்டிற்குச் சென்றிருக்கின்றார். அங்கே அனுக்கின் A Passage North அவரின் வீட்டில் இருந்திருக்கின்றது. அனுக்கின் புத்தகத்தை வைத்திருந்தவர் இதை மிக மெது மெதுவாகவே வாசிக்க வேண்டியிருக்கின்றது. அவ்வளவு கஷ்டமாக இருக்கின்றதெனச் சொல்லியிருக்கின்றார். எனது நண்பரோ, 'இளங்கோ ஏற்கனவே இதை வாசித்துவிட்டு அது பற்றி ஏற்கனவே விரிவாக எழுதியிருக்கின்றான்' என்று சொல்லியிருக்கின்றார். உண்மையில் அனுக்கின் இந்தப் புத்தகம் நிறையவே வாசிப்பு நேரத்தைக் கோரியிருந்தது. ஆனால் எனக்கு அந்தப் புத்தகம் பிடித்திருந்தது. அதைப் பற்றி எழுதவேண்டுமென்ற உற்சாகத்தை அந்தப் புத்தகமே தந்திருந்தது.
புத்தக விமர்சனம் எழுதினால் யாரேனும் நான் எழுதியதை வாசிப்பார்களா? அல்லது இந்த நேரத்துக்கு நான் எழுதி முடிக்கவேண்டிய நாவலுக்கு நேரத்தைக் கொடுத்திருக்கலாமென்றெல்லாம் எந்த யோசனையும் எனக்கு வரவில்லை. ஏனென்றால் எனக்கு அப்படி அதைப்பற்றி எழுதுவது பிடித்திருந்தது. அவ்வளவுதான்.
இப்படி அபுனைவை விட்டு புனைவுகளை எழுதுவதே சிறந்ததென்று சொல்லும் நண்பருக்கும் நான் சொல்ல விரும்புவது, உங்களுக்கு எது விருப்பமோ அதைச் செய்யுங்கள். ஆனால் இதுதான் இந்தக் காலத்தைய பேசுபொருள் என்று அதன் பின்னே சென்று வீணே உங்கள் நேரத்தையும் மனதையும் கஷ்டப்படுத்தாதீர்கள். அதனால் அடையப்போவது எதுவுமில்லை.
*************************
(Oct 04, 2022)
0 comments:
Post a Comment