கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 05

Tuesday, June 20, 2023


2000களின் தொடக்கத்தில் இருந்த forum களில் எழுதி விவாதித்து வந்த தலைமுறைகளில் ஒருவன். அப்போது திண்ணை, பதிவுகள் இந்தப் பொதுமன்றங்களைவைத்திருந்தன. நான் பங்கேற்காத யாழ்போன்ற வேறு பல பொதுமன்றங்களும் அன்றைய காலங்களில் தீவிரமாக இயங்கிக்கொண்டு இருந்தன. பின்னர் வலைப்பதிவுகள் நமக்கு அறிமுகமாக, நமக்கென்றோர் சொந்தக் குடிலை அமைத்து எந்தத் தணிக்கையுமின்றி எழுதத் தொடங்கினோம். ஆனால் ஒவ்வொருநாளும் யாருடையதோ வலைப்பதிவில் தீவிரமான அரசியல்/இலக்கிய உரையாடல்கள் நடக்கும். அங்கே நிகழ்பவற்றைக் கவனித்தும், அதில் அவ்வப்போது பங்கேற்றியும் எனக்கான வாசிப்புக்களை விரிவாக்கிக் கொண்டிருக்கின்றேன்.


அன்றைய காலங்களில் சிறுபத்திரிகைகள்/நடுத்தர இதழ்களில் வெளிவரும் ஆக்கங்களும் கவனம் பெறும். நிறைய அவை குறித்து விவாதிப்போம். எப்படி அதற்கு முன்னரான காலத்தில் ரமேஷ்-பிரேமின் ‘முன்னொருகாலத்தில் நூற்றெட்டுக் கிளிகள் இருந்தன’, ஜெயமோகனின் பத்மவியூகம்பற்றி உரையாடப்பட்டதோ, நான் குறிப்பிடும் காலத்தில் ஜே.பி.சாணக்யாவின் கதைகள் விவாதிக்கப்பட்டன. சாணக்யாவின் ஆண்களின் படித்துறை’, ‘அமராவதியின் பூனைஅவற்றில் உள்ளுறைந்து கிடந்த காமத்துக்காகவும், அதை எப்படி எழுத்தில் முன்வைப்பது என்பதற்காகவும் நாம் உரையாடியது இப்போது நினைவில் இருக்கிறது.

அதன்பின் சாணக்யா எனக்கு பிடித்த ஓர் எழுத்தாளராக மாறிப் போயிருந்தார். அவரின் என் வீட்டின் வரைபடம்’, ‘கனவுப் புத்தகம்போன்ற தொகுப்புக்களைத் தேடித்தேடி வாங்கி வாசித்திருக்கின்றேன். உள்ளுறைந்திருக்கும் காமத்தை உக்கிரமாக எழுதி அதிகம் பேசப்படுகையில் சாணக்யா வேறு சிலரைப் போல அதை மட்டுமே எழுதிப் புகழடைந்திருக்க முடியும். ஆனால் அவரொரு நல்லதொரு படைப்பாளி என்பதால் ஆண்களின் படித்துறையையும், ‘அமராவதியின் பூனையையும் தாண்டிப்போய் வேறு நல்ல கதைகளையும் எழுதியிருக்கின்றார்.

2005இற்குள் முதலிரு தொகுப்புக்கள் வந்தாலும், அவரது மூன்றாவது தொகுப்பு முதல் தனிமைவெளிவர 8 ஆண்டுகள் எடுத்தன. எனக்கு அந்த மூன்றாவது தொகுப்பு எனக்கு அவ்வளவு பிடிக்கவில்லை. அது ஏற்கனவே எழுதப்பட்ட கதைகளின் பாதிப்புக்களில் வந்தவை போலத் தோன்றியது. இவ்வாறான சரிவுகளைச் சந்திக்காது எந்த நல்ல படைப்பாளிதான் இருந்ந்திருப்பார்? இதுவும் இயல்பே.

அத்தோடு அப்போது சாணக்யாவும் எழுத்து சார்ந்து சலித்திருந்த காலம் என்று நினைக்கின்றேன். இனி என் படைப்புக்களுக்கு பணம் தருபவர்க்கு மட்டுமே எழுதுவேன் என்று அவர் சொன்னதாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். அவரையும் லெளதீக உலகம்நாளந்த வாழ்வின் தத்தளிப்புக்களால் கழுத்தைச் சுற்றி நெருக்கியுமிருக்கலாம்.

ப்போது அவரது நான்காவது தொகுப்பு
பெருமைக்குரிய கடிகாரம்எட்டாண்டுகளுக்குப் பின் வந்திருக்கின்றது. இந்த 8 ஆண்டுகளில் 8 கதைகளைத்தான் எழுதியிருக்கின்றார் போலும். ஆனால் 2000களின் தொடக்கத்தில் பார்த்த ஒரு சாணக்யாவை இதில் மீண்டும் பார்ப்பது நிறைவளிப்பது. இஸ்மாயிலின் தேவதை’, ‘விருந்தினர் இல்லம்;, ‘பெருமைக்குரிய கடிகாரம்’, ‘விலங்குகளின் அணிவகுப்புஎன்று அற்புதமான கதைகள் இருக்கின்றன. உள்ளுறைந்த காமத்தை எழுதுவதால் தொடக்க காலத்தில் அதிக கவனம் பெற்றவர், அதன் துளிச் சுவடும் இன்றி தன்னை வேறுவகையில் நிலைநிறுத்துவதாலும் அவர் ஒரு முக்கிய படைப்பாளிதான் இல்லையா?

இன்றைய காலத்தைய எளிமையான கதைகளை வாசித்து சலித்திருக்கின்றபோது, நான் ஏன் சாணக்யாவின் இந்தக் கதைகளை அற்புதமெனச் சொல்கின்றேன் என்பதை இவற்றை நீங்கள் வாசிக்கும்போது அறிவீர்கள்.

ஒரு உதாரணத்துக்கு வண்ணநிலவன் அருமையெனச் சொன்ன எஸ்.ராமகிருஷ்ணனின் அண்மையில் வெளிவந்தமுகமது அலியின் கையெழுத்துகதையை நேற்று வாசித்துப் பார்த்தேன். எவ்வளவு நுட்பமாக மாற்றக்கூடிய கதை. அதை வணிக இதழுக்கான வாசகர்களுக்குச் சொன்ன உத்தியில் எழுதி எஸ்.ரா நீர்த்துப் போகச் செய்திருப்பார். இதற்காக எஸ்.ரா மீது அல்ல, சிறந்தகதையெனச் சொல்லிய வண்ணநிலவன் மீதே எனக்கு கோபம் வந்தது. கடல்புரத்தில்’, ‘எஸ்தர்போன்ற அவரின் எழுத்துக்களில் திளைத்து அன்றைய காலங்களில் பதிவுகள் போன்ற பொதுமன்றங்களில்’, ஜெயமோகனின் முன் வண்ணநிலவனை விட்டுக்கொடுக்காத ஒரு வாசகனுக்கு, அவனுக்குப் பிடித்த படைப்பாளி பின்னரான காலத்தில் இப்படித்தான் வழிகாட்டுவார் என்றால் அது எவ்வளவு ஏமாற்றந் தருவது?

நிறைய எழுதுபவர்கள் எழுதட்டும். அது அவரவர் விருப்பம். ஆனால் நீர்த்துப் போகாது எழுதி அவரவர்க்கு ஏற்கனவே இருக்கும் தகுதிகளை வாசகர்கள் முன், கீழ் இறக்காதேனும் இருக்கட்டும். அதை புனைவாக எழுதினால் என்ன, விமரசனமாக எழுதினால்தான் என்ன, அவர்கள் கவனத்தில் கொள்ளட்டுமாக.

ஆக,  ஆண்டுக்கொரு கதை என்ற கணக்குப்படி அரிதாக எழுதினாலும், நன்றாக எழுதும் சாணக்யா போன்றோரையும், அவர்களின் வற்றிப்போகாத படைப்பாளுமைக்காய் நாம் வாசிப்போம்.  அவர்கள்  காலத்தில் உதிர்ந்துபோகாது அவர்களைக் கட்டியணைத்து நம்மோடு கூடவே அழைத்துச் செல்வோம்.

**********************************

(Apr 27, 2023)

0 comments: