கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கண்டிய அரச வரலாறும், பிரசன்ன விதானகேயின் Gaadi திரைப்படமும்

Monday, June 19, 2023

 

ண்டியில் தலதா மாளிகைக்குள் போனபோது அங்கே கண்டிய மன்னர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். அத்தோடு சிங்களவர்கள் புத்தரின் பல்லென நம்பும்புனிதப்பல்பற்றிய தகவல்களும், தலதா மாளிகையின் கடந்தகால வரலாறும் ஓவியங்களாக வரையப்பட்டிருந்தன. கண்டியே இலங்கையில் இறுதிவரை ஆங்கிலேயருக்கு எதிராக நிமிர்ந்து நின்ற இராச்சியம் என்கின்றபோதும், கண்டிய அரச வரலாறு என்பது மிகவும் சிக்கலானது. கண்டிய மன்னர்கள் காலத்துக்குக் காலம் மதுரை நாயக்கர் இளவரசிகளைத் திருமணம் செய்திருக்கின்றனர்.

அப்படி கண்டி இராச்சியத்தில் மட்டுமில்லை, இலங்கையில் சிங்களவரின் வரலாற்றைச் சொல்கின்றமகாவம்சத்திலேயே, முதல் சிங்கள மன்னனான விஜயனே பாண்டிய இளவரசியையே பட்டத்து இராணியாகத் திருமணம் செய்தான் எனப் பதியப்பட்டிருக்கிறது. அதனால்தான் சிங்களவர்கள் தம்மை ஆரியர்களைப் போல கலப்பின்றிய தூய இனமாகத் தம்மை முன்வைக்கும்போது, ‘உங்களின் வரலாறே தமிழினக் கலப்போடுதான் தொடங்குகின்றது, சிங்களவர்களே இந்த நாட்டின் முதல் குடியேறிகள் என்றால், அதேகாலகட்டத்தில் தமிழ் இரத்தமும் உங்களோடு கலந்துவிட்டதுஎன நாம் சொல்ல அவர்களின்மகாவம்சவரலாறே நமக்கும் சாட்சியாக இருக்கின்றது.


ண்டி இராச்சியத்து அரசர்கள் மதுரை நாயக்க இளவரசிகளைக் காலத்துக்காலம் மணம் முடித்து வந்தாலும், கண்டி இராச்சியத்தில் கடைசி ஒரு நூற்றாண்டு (1739-1815) நான்கு நாயக்க மன்னர்களாலேயே நேரடியாக ஆட்சி செய்யப்பட்டிருக்கின்றது. இவர்கள் என்ன மொழியில் பேசி ஆட்சி புரிந்திருப்பார்கள், என்ன மதத்தைத் தங்களுக்குள் பின்பற்றியிருப்பார்கள் என்பது சுவாரசியமான ஆய்வுகளுக்குரியவை. ஏனெனில் சிறி விஜய ராஜசிங்க(ம்), கீர்த்தி சிறி ராஜசிங்க(ம்) போன்ற மன்னர்கள் நேரடியாகவே மதுரையில் இருந்து வந்தவர்கள். ஆகவேதான் கண்டியின் கடைசி மன்னனான சிறி விக்கிரம ராஜசிங்க(ம்)வின் கையெழுத்து தமிழில் வைக்கப்பட்டிருப்பது இப்போதும் ஆவணமாக நம் முன்னே இருக்கின்றது.

இந்த நான்கு நாயக்க மன்னர்கள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டைக் கண்டியில் ஆட்சி புரிந்தாலும், இதற்கு முந்தைய நூற்றாண்டிலும் (1581-1591) ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்திருக்கின்றது. டிக்கிரி பண்டார என்பவர் சிறந்த போர் வீரனாக இருந்து, இலங்கை வரலாற்றில் மிகப் பிரசித்தி பெற்ற முல்லேரிவாயப் போரை போர்த்துக்கேயருக்கு எதிராக நடத்தி வெற்றி பெற்றிருக்கின்றார். இதன் நீட்சியில் ராஜசிங்க-1 மன்னனாக  கண்டி இராச்சியத்தில் முடிசூட்டப்பட்டிருக்கின்றார். மன்னனான முதலாம் ராஜசிங்கன் பின்னர் இந்துமதத்திற்கு மாறியிருக்கின்றார். அப்படி மதம் மாறிய மன்னன் தமிழகத்திலிருந்து பல பிராமணர்களை சிவனொளிபாதமலைக்கு அருகில் குடியேற்றியிருக்கின்றார். இந்துமதம் மாறிய மன்னன் புத்த விகாரைகளை அழித்ததாகவும், நூற்றுக்கு மேற்பட்ட புத்தபிக்குகளையும் கொன்றதாகவும் சொல்லப்படுகின்றது. இந்தச் சம்பவம் குறித்து தலதா மாளிகையின் உள்மண்டபத்திலும் எழுதப்பட்டிருக்கின்றது.. எது எப்படியென்றாலும் மிகச் சிறந்த போர்களை போர்த்துக்கேயருக்கு எதிராக நடத்திய சிங்கள மன்னன், இறுதியில் இந்து மதம் மாறி அட்டூழியங்களைச் செய்த ஒரு 'கெட்டவனாக' சிங்களவரின் புனிதக் கோயிலில் பதியப்பட்டிருப்பதென்பது வரலாற்று விந்தையான விடயந்தான்.


பிரசன்ன விதானகேயின்காடி’ (Gaadi) திரைப்படமும் இந்தக் கண்டிய அரச பின்னணியில் இருந்து சொல்லப்படுகின்றது. இது கண்டிய கடைசி (தமிழ்) மன்னனான சிறி விக்கிரம ராஜசிங்க(ம்)த்தின் காலத்தில் (1814-1815) நிகழ்கிறது. ராஜசிங்கவின் முக்கிய பிரதானியாக இருக்கும் எகலியபொல நிலமே ராஜசிங்கவுக்கு எதிராக பிரிட்ஷாருடன் சேர்ந்து, ராஜசிங்கவின் ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்கின்றார்.

எகலியபொல ஓர் அடிகார். இப்போதைய இலங்கை வழக்கில் அடிகாரைப் பற்றிச் சொல்வதென்றால் அவர் ஒரு பிரதம மந்திரிக்கு நிகர்த்தவர். மன்னனை வெல்லும் அந்தச் சதியில் தாம் வென்றால், 'நான் அரசனாகவும், நீ அடிகாராகவும் ஆகலாம்' என்று எகலியபொல, புலத்காம திஸாவேயிற்கு வாக்குறுதி கொடுக்கின்றார்.எகலியபொலவும், புலத்காமவாவும் ஆங்கிலேயரோடு இணைந்து ராஜசிங்கனுக்கு எதிராகத் தொடுத்த முதல் யுத்தமானது தோல்வியில் முடிவடைய, இவர்கள் அனைவரும் ஆங்கிலேயரோடு சேர்ந்து தலைமறைவாகின்றனர்.

மன்னனை எதிர்த்துச் சதி செய்தவர்கள் என்றவகையில் புலத்காமாவின் நிலங்கள் பறிக்கப்பட்டு, அவரின் குடும்பத்தவர்களுக்குத் தண்டனை கொடுக்கப்படுகின்றது. அந்தக் குடும்பத்துப் பெண்கள் ஆற்றுக்குள் குதித்து தற்கொலை செய்யலாம். இல்லாவிட்டால் இன்னொரு தேர்வும் உண்டு. அது சாதிநிலையில் மிக இழிவாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட காடி சாதியினருடன் சேர்ந்து அந்த அரசகுடும்பத்துப் பெண்கள் வாழலாம்.

அன்றைய காடி சாதியினரின் பெண்கள் இடுப்புக்கு மேலே எதையும் அணிவதில்லை. அதுவே அவர்களை மற்ற மேற்சாதி/அரசபெண்களிடமிருந்து விலத்திக் காட்டுகின்ற ஒரு கொடுமையான முறையாகும். அரசனால் தண்டனை கொடுக்கப்பட்ட அனைத்துப் பெண்களும் தற்கொலை செய்ய, புலத்காமாவின் இரண்டாவது மனைவியான் டிக்கிரி மட்டும் தொடர்ந்து வாழும் முடிவைத் தேர்ந்தெடுக்கின்றார்.மறுகரையில் காத்திருக்கும் காடி (கிட்டத்தட்ட அடிமைகள் மாதிரியே ஆதிக்க சாதிகளால் நடத்தப்படுகின்றனர்) சாதியில் முதலில் இக்கரைக்கு நீந்தி வரும் ஆணே அவளுக்குரிய துணையாகப் போகின்றவன். விஜயா என்கின்றவர் முதலாவதாக நீந்திக் கரையேறி டிக்கிரியை அடைகிறார். இப்போது டிக்கிரி மேலாடை கிழிக்கப்பட்டு அரைநிர்வாணமாக்கப்பட்டு காடி சாதியில் ஒருவராக ஆக்கப்படுகின்றார்.

இதன்பின் திரைப்படம் முழுதும் டிக்கிரியினதும், விஜயனின் தப்பிப் பிழைத்தல் பற்றிய காட்சிகளாய் விரிகின்றன. டிக்கிரியால் ஒடுக்கப்பட்டோர் வாழ்வு முறைக்குள் அவ்வளவு எளிதாக மாற முடியாதிருக்கின்றது. காடி சாதியினர் வேலை எதுவுமே செய்ய அனுமதிக்கப்படாது பிறரிடம் இரந்து வாழ்பவர்களாக மட்டும் ஆக்கப்பட்டவர்கள். அப்படி இரந்து வாழும் கூட்டத்தில் மேலாடையைக் கைவிடாது, இன்னமும் அதை அணிந்தபடி இருக்கும் டிக்கிரியால், காடி சமூகத்தினர் ஆதிக்கசாதியினரால் பல்வேறு தண்டனைகளை அனுபவிக்கின்றனர்.

இறுதியில் குழுவாக வாழும் காடி சமூகத்திலிருந்து, விஜயாவும், டிக்கிரியும் பிரிந்து வாழத் தலைப்படுகின்றார்கள். அதற்காய் அடர்ந்த காடுகளைத் தேடி வேறொரு நிலத்திற்குள் நுழைகின்றனர். அங்கே தமது சாதி அடையாளங்களைத் துறந்து விஜயாவும், டிக்கிரியும் மேற்சாதியினரைப் போல தம்மை ஆக்கிக் கொள்கின்றார்கள். எருதுகள் பிடித்து விற்று தம் வாழ்வைக் கொண்டு செல்கின்றனர்.

மீண்டும் எகலியபொலவும், டிக்கிரியின் கணவரும் பிரிட்டிஷ்காரருடன் சேர்ந்து ராஜசிங்கவை வீழ்த்த போர் தொடுக்கின்றனர். அந்தவேளையில் தற்செயலாக காடியாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட டிக்கிரி தனது கணவன் முன் தோன்றுகின்றார். ஆனால் கணவன் அவரை ஏற்றுக்கொள்ளாது மேலாடை அணிந்தபடி இருக்கும் காடி இவள் என்று தண்டனை கொடுக்கப் பணிக்கின்றார். இறுதியில் டிக்கிரியையும், விஜயவையும் காடி சமூகத்திலிருந்து தப்ப வைத்ததற்காய், காடி முழுச் சமூகமும் எகலியபொலவாலும், புலத்காமாவாலும் படுகொலை செய்யப்படுகின்றனர்.

இப்போது கண்டி ராச்சியம் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டு விடுகின்றது. ராஜசிங்க(ம்) வேலூருக்கு கைதியாக கண்டியிலிருந்து பிடிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகின்றார். தமது முழுச்சமூகத்தையும் இழந்த விஜயனுக்காய் டிக்கிரி ஒரு முக்கிய முடிவை எடுக்கின்றார். அது அந்தச் சமூகம் முற்றாக அழிந்து போகாது இருப்பதற்கான முக்கிய காலடியாகும். அத்துடன் திரைப்படம் முடிவடைகின்றது.



ன்றிருக்கும் சிங்கள நெறியாளர்களில் எனக்கு மிகப்பிடித்தவர் பிரசன்ன விதானகே. இவருக்குப் பிறகே அஷோக ஹந்தகம, விமுத்தி ஜெயசுந்தரா போன்றோரை முன்வைப்பேன். அதிக அலட்டலில்லாத காட்சிகளாலும், உலுக்க வைக்கும் சம்பவங்களில்லாதும் அவ்வளவு ஆழமாக எங்களுக்குள் உரையாடலை விதைப்பவை பிரசன்னவின் திரைப்படங்கள். இந்தத் திரைப்படம் முழுதும் காட்டுக்குள்ளே நடக்கின்ன்றன. அவ்வளவு பசிய பின்னணி. சும்மா கொஞ்சம் மலையேறிப் போய் ஷூட் வைத்தாலே அதை அதிசயம் போலப் பேசும் தமிழகத் திரைப்படக்காரர்கள் இந்தப் படத்தின் காட்டைப் பார்க்கவேண்டும். அவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்தபோதும், அதை பார்ப்பவர்களே தீர்மானிக்கட்டும் என்று அமைதியாகவே இருக்கும் பிரசன்னாவிடமிருந்து தமிழக இயக்குநர்களைக் கற்றுக் கொள்ளுங்களெனச் சொல்லப்போவதில்லை. அவர்கள் நாம் அறிவுரை கூறும் நிலைமைக்கு மேலே சென்றுவிட்டார்கள். ஆனால் ஈழத்தில் தமிழ்ப்படங்களை எடுக்கும் நெறியாளர்கள்/படங்களை எடுக்க விரும்பும் திரைப்பட ஆர்வலர்களை பிரசன்னா விதானகே, அஷோக ஹந்தம, விமுத்தி ஜெயசுந்தராவின் அனைத்துத் திரைப்படங்களையும் பார்க்க வேண்டுமெனப் பரிந்துரைப்பேன். குறைந்த முதலீட்டுடன், ஈழத்துக்குரிய கதைகளை எப்படி அற்புதமாக எடுக்கலாம் என்பதை இவர்களிடமிருந்து அறிந்து கொள்ளலாம். உண்மையான ஆர்வத்துடன் அவர்களை அணுகினால் நமக்குக் கற்றுத்தரவும் அவர்கள் ஆர்வமாக இருப்பார்கள்; அவ்வளவு எளிமையானவர்களும் கூட.

இந்தத் திரைப்படத்தில் டிக்கிரியாக நடித்திருக்கும் டினாரா புஞ்சிவாவிற்க்கு இது முதற்படம். ஆனால் எப்படியொரு அற்புதமான நடிப்பை பிரசன்னா இவரிடமிருந்து பெற்றிருக்கின்றார் என்பதைத் திரைப்படம் பார்க்கும் போது நமக்குப் புரியும்இத்திரைப்படம் பற்றி ஓரிடத்தில்  பிரசன்னா கூறும்போது, காடி சமூகத்தின் பெண்கள் அன்று மேற்சட்டை இல்லாது (topless) இருந்ததை திரையில் காட்சிப்படுத்தத்தான் கடினமாக இருந்தது என்று குறிப்பிட்டிருப்பார். அந்த அரை நிர்வாணத்தைக் கூட நமக்குப் புரியும்படியும், அதை சமயம் இலங்கை போன்ற நாடுகளில் இருக்கும் தணிக்கை விதிகளையும் பின்பற்றி எப்படி நுட்பமாக எடுத்திருக்கின்றார் என்பதில்தான் ஒரு நெறியாளரின் மேதமை விளங்கும். பிரசன்னா அப்படிப்பட்டவர். இந்தத் திரைப்படமும் அப்படிப்பட்டதே.

அன்றைய காலத்து அரச கதையை, இன்றைய காலத்துக்கு ஏற்றமாதிரியும் மாற்றி (அரச இடாம்பீக செட்டுக்களுக்கு எல்லாம் வீணாகச் செலவழிக்காது) நம்மை நெகிழவைக்கும் ஒரு கதையை இயற்கையின் அவ்வளவு வனப்பான பின்னணியில் வைத்து பிரசன்னா தந்திருக்கின்றார். பிரிட்டிஷ் ஆட்சியின் பின் வந்த சட்டங்களினால் காடி என்ற தனித்த சாதியினர் இல்லாதுபோய், அவர்கள் பின்னர் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குள் கலந்துவிட்டனர் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இன்னமும் சாதிப் படிநிலைகளும், சாதிய ஒடுக்குமுறைகளும், ஆதிக்கசாதி மனோபாவங்களுமுள்ள நம் சமூகம் கற்றுக்கொள்ளவதற்கு இத்திரைப்படத்தில் எவ்வளவோ நிறைய விடயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

*************************

(நன்றி: 'அம்ருதா', வைகாசி - 2023)

0 comments: