கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 06

Friday, June 23, 2023

 

பொன்னியின் செல்வன் (02) முதல்நாளே பார்க்கப் போனதற்குக் காரணம் அக்காவும், மருமகளும். அக்கா பொன்னியின் செல்வன் திரைப்படமாக வந்ததையிட்டு அண்மையிலும் இன்னொருமுறை முழுதாக  ஐந்து பாகங்களையும் வாசித்தார். பொன்னியின் செல்வனை ஆய்வு செய்யக்கூடிய அளவுக்கு அவருக்கு நிறைய அறிவுண்டு. அதுமட்டுமின்றி ஜெயமோகனின் வெண்முரசையும் அது வெளிவந்தகாலத்தில் தினம் தினம் வாசித்து முடித்தவர். அவள் (மருமகள்) ஆங்கிலத்தில் வாசிக்கின்ற அளவுக்கு தமிழில் வாசிப்பதில்லை, 'அறம்' போன்ற தொகுதிகளை வாங்கிக் கொடு என்ற அக்காவின் அறிவுரைகளை- இந்தப் புத்தக விடயங்களில் மட்டும் செவிமடுத்து- நிறைவேற்றியவன் நான்.


அப்படிப்பட்ட என் மருமகளே, பொன்னியின் செல்வன் நான்கு பாகங்கள் வரை வாசித்து முடித்தவர். இவர்களுக்கிடையில் மாட்டுப்பட்ட நான் பொ.செவின் சுருக்கம் மட்டும் வாசித்து கதையை அறிந்தவன். இவர்கள் இருவரும் இது குறித்து அவ்வப்போது விவாதிக்கையில், கொஞ்சம் வெட்கம் மேலிட ஐந்தாம் பாகத்தின் தொடக்க அத்தியாயங்கள் (நாகபட்டின விகாரை) மட்டும் வாசித்து நிறைவடைந்தவன்.

மருமகளுக்கு இப்போது இந்த பொ.செ (02) திரைப்படம் நன்கு பிடித்திருந்தது. அக்காவுக்கு அதன் அசல் கதையில் இருந்து இந்த இரண்டாம் பாகம் பொ.செ விலகியதால் ஏமாற்றமாக இருந்தது. எனக்கு கடந்த சில மாதங்களில் வாரிசு, ‘வசந்தமுல்லை, ‘வாத்தி போன்ற படங்களைத் தியேட்டரில் பார்த்து நல்ல நிதானம் வந்துவிட்டதால், இதன் சில பலவீனங்களைத் தாண்டி, படம் தரமானதாகவே தெரிந்தது. மேலும் அக்காவும், மருமகளுக்கும் இடையில் விவாதம் வந்தால் எவ்விதக் கேள்வியுமில்லாது, மருமகளின் பக்கம் நிற்பவன் நான்.

இதை எல்லாவற்றையும் விட, இலங்கையிலிருந்து புலம்பெயர முன்னர் அக்கா, அம்மாவோடு "ரோஜா" படம் பார்த்தபின், இப்போது மீண்டும் அக்காவோடு இத்தனை வருடங்களின் பின் தியேட்டரில் இருந்து படம் பார்க்கின்றேன் என்கின்ற அனுபவம் முக்கியமானது. அதே மணி ரத்னம், அதே ஏ.ஆர்.ரஹ்மான். காலந்தான் விசையுறு பந்தினைப் போலப் பாய்ந்துவிட்டது. 

பொ.செல்வனை பற்றி இங்கே ஆய்வு செய்யப் போவதில்லை. அ.கா.பெருமாளின் "பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ" தொகுப்பில் ' தன்னை அழிப்பதும் அரசியல்" என்ற கட்டுரையில் தலைவனுக்காகத் தன்னைப் பலி கொடுப்பது என்ற நிலை தமிழரின் மரபுவழி வரும் எச்சப் பண்பு என்கின்றார். அதில் சோழர்கால வேளக்காரப் படை, பாண்டியர் ஆபத்துதவிகள் படை பற்றிப் பேசப்படுகின்றது. பொ.செவில் பாண்டிய ஆபத்துதவிகள் சோழர் கையில் அகப்படும்போது தம் கழுத்து அறுத்துத் தற்கொலை செய்கின்றனர். சோழரின் வலங்கைப் பிரிவில் உள்ள வேளக்காரப்படை வீரர்கள் தங்கள் தலைவன் இறந்தால் உயிர் தரிக்கமாட்டார்கள் எனச் சொல்லப்படுகின்றது. திருத்தணிப் பக்கமாய் இப்படி தலைவனுக்காக உயிர்விட்ட வேளக்காரப் படைவீரனின் நடுகல் கண்டுபிடிக்கப் பட்டுமிருக்கின்றது.

இன்னொரு கட்டுரையான "நெருப்பில் தள்ளப்பட்டவர்கள்" இல் ஒரு சுவாரசியமான கதை இருக்கின்றது. சதியான பெண்கள் (உடன்கட்டை ஏறுதல்) தெய்வங்களாக்கப்பட்டதைப் பற்றிப் பேசும் கட்டுரையில்
, தஞ்சாவூர்ப் பகுதியில் இருக்கும் சிங்கநாச்சியார் என்ற சிறுதெய்வம் பற்றிப் பேசப்படுகின்றது. பிற்காலச் சோழர்களில் ஒரு சோழன், சிங்கள மன்னனுடன் போர் புரிந்து சிங்கள அரசனையும், அரசியையும் தஞ்சைக்குக் கூட்டிவருகின்றான். சிங்கள அரசனைத் தந்திரமாகக் கொன்றுவிட்டு அரசியை மணக்கின்றான். அவனோடு வாழ விருப்பமின்றி அந்தப்புரத்தில் இருந்த அரசி, ஒருநாள் குளத்தில் விழுந்து சாகின்றாள். அவளது உடலைத் தேடியபோது உடல் கிடைக்கவில்லை. சிலநாட்கள் கழித்து செம்பு ஒன்றை அக்குளத்தில் சிற்பியொருவர் கண்டெடுத்து வீட்டுக்குக் கொண்டுசெல்கின்றார். அன்று அவரது வீடு தீப்பற்றி எரிகின்றது.

வீடு எரிந்ததற்கு அந்த சிங்கள அரசியும், அவள் அந்தச் செம்பில் படிமமாய் உறைந்து வந்ததுமென சனம் நம்பி, அவளுக்குக் கோயில் எடுத்தனர். 15ம் நூற்றாண்டில் இந்த அம்மன் செங்கமமாயி என அழைக்கப்பட்டாள். பின்னர் சிங்கள நாச்சியாக வழிபாடு செய்யப்பட்டாள். இப்போது இந்த அம்மன் சமஸ்கிருதமயமாக்கலில் காளியாக மாற்றப்பட்டுவிட்டாள் என்று அக்கட்டுரை நீளும்.

ஒரு பெண் அரசர்களின் போர் ஆசைகளினால் அக்கிரமாய் பலியானது வரலாற்றில் இருந்து மறைக்கப்படாமல் இருக்க நமக்கு அவள் சிறுதெய்வமாக்கப்பட்டு நினைவூட்டப்படுகின்றாள்.

இன்றைக்கு இலங்கையின் வரலாறென்பது மகாவம்சத்தில் இருந்து தொடங்குகின்றதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அது அதிகாரத்தில் இருப்பவர்களால் எழுதப்படவும், மாற்றியமைக்கப்படவும் செய்யப்பட்டிருக்கின்றது என்பதை நாமறிவோம். நம் கண்முன்னாலேயே இன்று எத்தனையோ வரலாற்று/மரபுச்சின்னங்கள் மாற்றப்படுவதைக் காண்கின்றோம். மகாவம்சத்தில் சோழர் படையெடுப்புக்கள் தெளிவாகப் பதியப்பட்டிருக்கின்றன. ஆனால் அது சிங்களவர்களின் பார்வையில் எழுதப்பட்டவை. அதேசமயம் நமக்கு இப்படி சிங்கள நாச்சியார் போன்ற தொன்மக் கதைகள் கிடைக்கும்போது நாம் வரலாற்றை இணைத்துப் பார்க்கும் நிறையக் கண்ணிகள் புலப்படும். அது வரலாற்றை இன்னும் விரிவான பார்வையில் வைத்து ஆய்வு செய்ய உதவி செய்யவும் கூடும்.

மேலும் மகாவம்ச சிங்களவர்கள் சொல்லும் கதையாடலுக்கும், சோழர்களின் வரலாற்றுக் கதையாடலுக்கும் அப்பாலான மூன்றாந்தரப்பின் கதையாடல் இன்னும் சுவாரசியம் தரக்கூடியதாக இருக்கும். ஏனென்றால் அது அதிகாரமற்றவர்களின்/ குரலற்றவர்களின் வரலாறு!

***********


(Apr 29, 2023)


0 comments: