மென்னிருளில் பெரும் குத்துவிளக்குகளில் திரி
சுண்டிய அகல்கள் அவ்வளவு அழகாக இருக்கின்றன. அநேகமாய் எல்லா வீட்டு முன்றல்களிலும்
நாராயண குருவின் புகைப்படங்கள் சட்டமிட்டு மாட்டப்பட்டிருக்கின்றன. ஒரு
நூற்றாண்டுக்குள் ஒருவர் வழிபடக்கூடிய தெயவத் தன்மையை அடைந்திருப்பது
வியப்புத்தான்.
நகர்ந்துகொண்டிருக்கும் நாட்களில் பயணத்தில்
எந்தக் காலத்தில் நிற்கின்றேனென எனக்குக் குழப்பம் வருவதுண்டு. காலநிலை, பண்பாடு, உணவு என்று முற்றிலும் வேறான
சுழ்நிலைக்குள் இருக்கையில் எது அசலான வாழ்வெனத் திகைப்பதுண்டு. எல்லாவிதமான
வாழ்வும் சமாந்திரமாக இருக்கையில் நமது மொழியும், பண்பாடும், அறிவும்,வீரமுந்தான் சிறந்ததென்கின்ற அறைகூவல்கள்தான் எவ்வளவு அபத்தமானது.
நான் மேலும் நீள நடந்துகொண்டிருந்தேன். ஒரு வீட்டிலிருந்தவர்களிடையே என் தயக்கம் நீக்கிப் பேச்சுக்கொடுத்தேன்.தினமும் காலையும் மாலையும் இப்படி வெளி விறாந்தையில் குத்துவிளக்கேற்றி குடும்பம்,பிள்ளைகளாய் வழிபாடு செய்வது வழக்கம் என்றனர். நான் அவர்களுடன் பேசி விடைபெற்று, மீண்டும் அதே பாதையில் திரும்பியபோது அங்கே பிரார்த்தனைப் பாடல்களுடன் வழிபாடு நடப்பதைப் பார்த்தபடி நகர்ந்தேன். இவ்வாறு ஒரு கலாசாரம் சுவீடனில் மாலைவேளைகளில் பார்த்திருக்கிறேன். வீடுகள், உணவகங்கள் எங்கும் மாலையில் அது எவ்வளவு பனிக்காலமாக இருந்தாலும் விளக்குக் கொளுத்துவார்கள். அது அவர்களின் கடல் நாடோடிக் கலாசாரத்தோடு வந்ததாகச் சொன்னதாய் ஞாபகம்.
ஒரு நாள் எவ்வளவு மோசமாக இருந்தாலும் ஒரு விளக்கின் முன் மனதைக் குவித்து இருப்பதென்பது அருமையானது. சும்மா இந்த விளக்குகளைக் கடந்து சென்ற எனக்கே உள்ளே அமைதி பரவி உள்ளம் கனிந்திருந்தது.
அடுத்த நாள் படகுத் துறையை அண்டி நடக்கையில் ஒரு கோயில் கவர்ந்திழுத்தது. சிறு கோயில் எனினும் கேரளாபாணிக்குரிய கலைத்துவம் அதில் மிளிர்ந்தது. முருகன் கோயில், ஆனால் அதற்குள் இருந்த சாஸ்தாவும், துர்க்கையும் வேறொரு அழகில் கருங்கற்களில் மிளிர்ந்து கொண்டிருந்தனர். நாராயண குருவுக்கும் ஒரு இடமிருந்தது. அவருக்கு சிறு பூஜை நடந்த பின்னரே மூலவருக்கும் பிறருக்கும் பூசைகள் நடக்கத் தொடங்கின.
சில மாலைகள் சூடி, ஏழு தீபங்கள் ஏற்றப்பட்டு, ஒளியிலே மிளிர்ந்த அம்மனின் முகம் மனதுக்கு மிக நெருக்கமாயிற்று. பூசைகள் தொடங்க முன்னர் இருந்த அமைதியில் கருமையில் துலங்கிய அம்மனின் விழிகளில், இப்படி அலைந்து அலைந்து எதைத் தேடுகின்றேன் என்று அலையடிக்கும் கணங்கள் சட்டென்று உறைந்து போயிருந்தன.
*********
(Feb 08, 2023)
2 comments:
அருமை.அலைந்து அலைந்து எதை தேடுகிறேன்
6/30/2023 07:36:00 AMநன்றி. ஒருவகையில் இது முடிவுறாத் தேடல்.
6/30/2023 09:39:00 PMPost a Comment