எஸ்.பொ(ன்னுத்துரை) ஒரு சுவாரசியமான மனிதர். தானொரு ‘காட்டான்’ என்று வாழ்நாளுக்கான இயல்விருது கனடாவில் கொடுக்கப்பட்டபோது பொதுவெளியில் தயங்காமல் பிரகடனப்படுத்தியவர். அவரின் ‘வரலாற்றின் வாழ்தல்’ உண்மைகளை இயன்றளவு அப்படியே முன்வைக்கின்ற ஒரு சுயசரிதை நூல். ‘வரலாற்றில் வாழ்தல் ஆயிரம் பக்கங்களுக்கு மேலா? அதுவும் இரண்டு பகுதிகளா? 3000 இற்கு மேற்பட்ட பக்கங்களை வாசிப்பதா என்று பயந்து கொண்டிருந்தேன். ஆனால் மனுஷன் அலுப்பே வராதவளவுக்கு அவ்வளவு சுவாரசியமாக எழுதியிருக்கின்றார்.
முற்போக்கு அணியினரோடு முரண்டு பிடித்தது, ஒடுக்கப்பட்ட சாதி அடையாளத்தோடு பிறந்ததால் எப்படி ஒடுக்கப்பட்டேன் என்று அதை வைத்து பரிதாபந் தேடாமல், ஓர்மத்துடன் அதற்குள் இருந்து எழுந்து வந்ததைப் பற்றி எழுதியது மட்டுமில்லாமல், இந்த மன்மதனாட்டங்களையும் எழுத்தில் நேர்மையாக முன்வைக்க முடிந்ததால்தான் அவர் எனக்கு இன்றும் ஆசான்.
இரண்டாம் பாகத்தில்..
யாழ்ப்பாணத்தில் முட்டையடிப்பும், கொழும்பில் கதிரையடியும் முற்போக்கு அணியினரிடம் வாங்கிக் கட்டியபின், எஸ்.பொ அவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு ‘வீ’யை வெளியிடுகின்றார். எதிரியை நேரடியாகச் சந்திப்பது என்ற ஓர்மத்துடன் தன் புத்தக வெளியீட்டு விழாவில் வந்து விமர்சனம் வைக்கவேண்டுமென்று கைலாசபதியையும், சிவத்தம்பியையும் நேரில் சென்று எஸ்.பொ அழைக்கின்றார். கைலாசபதி நாசூக்காய் மறுத்தாலும், சிவத்தம்பி வெளியீட்டு நிகழ்வில் வந்து பேசி, எஸ்.பொவின் ‘வீ’ தொகுப்பை நிராகரிக்கின்றார். நீங்கள் நிராகரிப்பது சரி, உங்கள் முற்போக்கு எழுத்தாளர் அணியினர் எழுதிய கதையை உங்கள் விமர்சன அளவீட்டிற்கு முன்வையுங்கள் என்று எஸ்.பொ தனது ஏற்புரையில் எகிறுகிறார்.
சிவத்தம்பியரோ, உனது அந்தத் 'தீ'யுமல்ல இந்த 'வீ'யுமல்ல என்றுவிட்டு மேடையில் அமைதியாகி
விடுகின்றார். இப்படியாக அந்தக்காலத்தில் எதிர்ப்பும், எகிறலும், புரிந்துகொள்ளலும்
நடந்திருக்கின்றதென்பது சுவாரசியமானதுதான். இன்றைக்கு வெவ்வேறு அணியினர் எஸ்.பொவையும்,
கைலாசபதியையும், சிவத்தம்பியையும் சுவீகரித்துக் கொண்டிருந்தாலும், இந்த சண்டை/சர்ச்சரவுகளைத்தாண்டி அவரவர்க்கான இடம் அவரவர்க்கு
தமிழ்ச்சூழலில் இருக்கத்தான் செய்கிறது.
எஸ்.பொ 60/70களின் காலங்களை விபரிக்கின்றபோது இவர்கள் எல்லாம் இலங்கையில் வாழ்ந்தார்களா என்ற வியப்பு வருகின்றது. சாத்தான்குளத்து அப்துல் ஜாப்பார் என்கின்ற கிரிக்கெட் வர்ணனைகளை அழகு தமிழில் செய்த அறிவிப்பாளர் எல்லாம் இலங்கையில் வாழ்ந்ததோடல்லாது, எஸ்.பொ எழுதிய நாடகங்களில் நடித்துமிருக்கின்றார்கள். அப்படி எஸ்.பொவின் நாடகங்களில் நடித்த வேறு சிலர் அப்துல் ஹமீது மற்றும் பின்னாளில் அமைச்சரான அஸ்வர் எனப்பட்டியல் நீளும்.. இதனூடாக வரலாற்றின் ஒரு காலகட்டத்தையும் அறிந்து கொள்கின்றோம். எம்.ரஹ்மானின் ‘இளம்பிறை’ சஞ்சிகை உள்ளிட்ட வேறு சில பத்திரிகைகளில் எஸ்.பொ பத்திகள் எழுதியிருக்கின்றார். அவற்றையும் தொகுப்பாக்கினால் இன்னும் சுவாரசியமான அந்தக்காலத்தைய விடயங்கள் வெளிக்கொணரப்பட்டிருக்கும் என எழுதுகின்ற எஸ்.பொ அதைக் கொண்டு வராமலே காலமாகி விட்டார்.
எஸ்.பொவின் ‘சடங்கு’, ‘நனவிடைதோய்தல்', 'வீ’ போன்று, அதிகம் பேசப்படாத “?” முக்கியமான படைப்பென்பது என் துணிபு. அந்தக் காலத்தில் இப்படி ஒரு அங்கதமான பிரதி எழுதப்பட்டிருக்கின்றதென்று வியந்திருக்கின்றேன். அது எழுதப்பட்ட கதை சுவாரசியமானது. ஒரு முஸ்லிம் அரசியல்வாதிக்கு அவரின் ஊழல்பற்றி அங்கதச் சுவையுடன் முஸ்லிம் சமூகம் ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிடுகின்றது. அதை அவர்கள் பந்தநூல் என்று குறிப்பிடுகின்றனர். இதையே முதன்மையாக வைத்து எஸ்.பொ அன்றைய சூழ்நிலையைப் பின்னணியாக்கி “?” எழுதுகின்றார். அந்த வடிவம் எப்படி அமைய வேண்டுமென்பதற்காய் உ.வே.சா பதிப்பித்த பழந்தமிழ் நூல்கள்வரை தேடிப் போயிருக்கின்றார்.
இந்த புத்தகத்திற்காய் உழைத்த நேரத்துக்கு தன்னால் 2 புதிய புத்தகங்கள் எழுதியிருக்கலாம் என்றும் குறிப்பிடுகின்றார். "?" எழுதியபின் இன்னொரு சோகம் நிகழ்கின்றது. நூல் தயாரான பின் ஒரு பயணத்தின்பின் அந்தக் கையெழுத்துப் பிரதியை எஸ்.பொ தொலைத்துவிடுகின்றார். இப்போது நமக்கு கிடைக்கும் “?”, அவர் முதல் பிரதியை எழுதுவதற்கு எடுத்து வைத்த குறிப்புக்களை வைத்து எழுதியது. அதை இரண்டாம் முறை எழுதுவதென்பது எவ்வளவு சித்திரவதையானது என்பதை எஸ்.பொ மனம் நொந்து 'வரலாற்றில் வாழ்தலில்'' எழுதியிருக்கின்றார்.
இதை எழுதுவதற்கான காரணமாக “என்னைப் பற்றிய மதிப்பீடு ஒன்று தேவை. பிறருடைய மதிப்பீட்டுகளிலும் பார்க்கச் சுய விமர்சனங்கள் என் வளர்ச்சிக்கும் தனித்துவப் பார்வைக்கும் உதவியிருக்கின்றன. சுய விமர்சனத்தின் நன்மைகளை கம்யூனிஸ முகாமில் அறிந்து கொண்டேன். இதனால் நான் வெற்றிகளைக் கண்டு மருண்டதில்லை. தோல்விகளைக் கண்டு துவண்டதில்லை. வெற்றிகளின் நிழல்களிலே நான் சயனிக்க விரும்பியதும் இல்லை’ என்று எஸ்.பொ எழுதுகின்றார்.
எஸ்.பொ சுதந்திரனில் ‘சடங்கு’ எழுதிய அதே காலகட்டத்தில் ‘தேடல்’ என்றொரு தொடர்கதையையும் வீரகேசரியில் எழுதியிருக்கின்றார். ஆனால் அது முற்றிலும் தரப்படும் காசுக்காக எழுதப்பட்டது. நீங்கள் சடங்கையும் தேடலையும் அருகருகில் வைத்துப் பார்த்தால் இரண்டின் தரமும் தெரியும் என்று வெளிப்படையாக ‘வரலாற்றில் வாழ்தலில்’ எழுதிச் செல்வதால்தான் எஸ்.பொ தனித்துவமானவர் எனச் சொல்கின்றேன். ஆகவேதான் அவர் என் ஆசான்.
*********************************
(Feb 21, 2023)
0 comments:
Post a Comment