நண்பரொருவர் சில நாள்களின் முன்
சந்திப்பதற்காக அழைத்திருந்தார். நாங்கள் தேநீர் அருந்தியபடி எங்கேனும் கஃபேயில் இருந்து உரையாடுவோம் என்றபோதும், அவரது
குடும்பத்தினருக்கும் அறிமுகப்படுத்த வேண்டுமென்று என்னை அவர்களின் வீட்டுக்கு அழைத்து சென்றார். அவரது துணைவியாரும்
சுவாரசியமானவர். எங்கள் உரையாடல் பெரும்பாலும் திரைப்படங்களைப் பற்றியதாக
இருந்தது.
நண்பர் இப்போது ஒரு முழுநீள சிங்களப் படத்தை
எடுத்து முடித்திருந்தார். அதை
சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிக்
கொண்டிருக்கின்றார். எனக்கு விருப்பமெனில் தனது ஸ்டூடியோவில் ஒரு பிரத்தியேகக்
காட்சியைத் திரையிடுகினறேன் என்றார். இன்னமும் பொதுவெளியில் திரையிடாத ஒரு
திரைப்படத்தைப் பார்ப்பதென்பது ஓர் அரியவிடயமல்லவா?
இத்திரைப்படத்தின் கதை கயிற்று முனை மேல் நடப்பது
போன்றது. கொஞ்சம் சறுக்கினாலே பார்வையாளர்களை கதைக்கு வெளியே தள்ளிவிடும். ஆனால்
அதை நாம் உணராவண்ணம் திரைக்கதை ஆக்கப்பட்டிருந்தது. ஒன்றரை மணித்தியாலத்துக்கு
மேலாக இருக்குமென்று நினைக்கின்றேன். நான் அந்தத் திரைப்படத்துக்குள்ளேயே வரும் வெவ்வேறு பாத்திரங்களில்
ஒருவனாக இருந்தேன்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாகத் திரைப்படங்களைப்
பார்ப்பார்கள். காட்சிகளாக, கதைகளாக, இசையாக எனப் பார்க்கும் வகை ஒவ்வொருவருக்கும் வேறுபட்டது. எனக்கு ஒரு
திரைப்படம் எத்தகைய அதிநுட்பமான கருவிகளால் படமாக்கப்பட்டாலும், முதலில் திரைக்கதையின் பின்னே மனம் நகர்ந்தபடியிருக்கும். பின்னர்
அத்திரைப்படத்தை இன்னொருமுறை பார்க்கும்போது திரைப்படத்தின் மிகுதி விடயங்கள்
தெளிவுறத் தொடங்கும்.
நண்பரோடு இத்திரைப்படத்தைப் பற்றிப் பேசும்போது
சதா பிரணவனின் இன்னும் பொதுவில் திரையிடப்படாத Friday & Friday பற்றியும் குறிப்பிட்டேன். தனிப்பட்டு அத்திரைப்படத்தைப் பார்க்க
எனக்கு சதா பிரணவன் இணையத்தினூடு ஒழுங்கு செய்திருந்தார். அத்திரைப்படம் வெளிவரும்போது புலம்பெயர்
சூழலில் கவனிக்கத்ததொரு படமாக இருக்கும். லெனின் எம். சிவம், சதா பிரணவன், பிரதீபன் போன்றவர்கள் புலம்பெயர் தேசத்திலும், சோமீதரன், ஹசீன் போன்றவர்கள் தமிழகத்தில்
இருந்தும் திரைப்படம் முயற்சிகளை பல்வேறு வாழ்வியல்/பொருளாதார
நெருக்கடிகளிலிருந்து செய்து கொண்டிருக்கின்றார்கள். நாம் தென்னிந்தியத் திரைப்பட
மோகங்களின் பின் மட்டும் அலையாமல், இவர்களின்
முயற்சியையும் ஊக்குவிக்கவேண்டும். முக்கியமாக புலம்பெயர்ந்த தேசத்தில் இருந்து
பெருமளவில் பணத்தை முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள், நம்மிடையும் திரைப்படங்களை எடுக்க வல்லவர்கள் இருக்கின்றார்கள்
என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இதுவே நாம் இன்னமும் சொல்லாத கதைகளை திரையில்
சொல்கின்ற களங்களை விரிக்கச் செய்யும்.
இந்தச் சிங்களத் திரைப்படத்தை எடுத்த
நண்பருக்கு தென்னிந்தியாவில் புதிய வெளிகள் திறக்க இருக்கின்றன. விரைவில் அது
குறித்த அறிவித்தல்களைப் பொதுவெளியில் அறிவிப்பாரென நினைக்கின்றேன். எனக்குப் பிடித்த சிங்கள நெறியாளர்
பிரசன்ன விதானகே ‘காடிக்கு’ ப் பிறகு இந்தியாவிலேயே மலையாள நடிகர்களை வைத்து ஒரு திரைப்படம்
எடுத்துக் கொண்டிருக்கின்றார்.
000000000
எனக்கும், இந்நண்பருக்கும் பொதுவான நண்பராக இருந்த ஒருவரைப் பற்றிய பேச்சும்
இடைநடுவில் போனது. என்னை சமூக வலைத்தளங்களில் அந்தப் ‘பொது நண்பர்’ block செய்ததைப் போல,
இந்த நண்பரோடும் நட்பிலிருந்து விலகிவிட்டார்.
இன்று அந்தப் பொது நண்பர் பொதுவெளியில் கவனத்தை ஈர்க்கும் கவனிக்கத்தொரு ‘ஆளுமை’யாகிவிட்டார். ஆனால் எனக்கும் இந்த
நண்பருக்கும் அவரோடு வந்துவிட்ட விலகல், படைப்பாளியாக இருக்கையில் அவரின் அறம் சார்ந்த விடயங்கள் குறிந்ததாகும். ஒருவர் நல்லதொரு படைப்பாளியாக ஆகும்போது, மற்றமை (Other) குறித்த புரிதல் தெளிவாக இருக்கவேண்டும்.
ஆனால் இந்த பொதுநண்பரோ ஆர்ப்பாட்டங்களுக்கு நண்பர்களுடன் போய் அவர்களின்
அனுமதியின்றி படம்பிடித்து தன் படங்களில் பாவிப்பது, மிகவும் ஆபத்தான பின்னணியில் இருந்து அரசியல் விடயங்களைப்
பேசுபவர்களைப் பேசவிட்டு, அவர்களுக்கு அறிவிக்காது படமாக்குவது,
உதவிக்கு வருபவர்களின் வாகன அடையாளங்களை மறைக்காது
திரையில் வெளியிடுவதென்று அவர் செய்யும் அறம்பிறழ்ந்த விடயங்கள் சொல்லிமாளாதவை.
இவ்வாறான விடயங்கள் நடந்ததை அவருக்குச் சுட்டிக்காட்டும்போது, ஒரு சாதாரண மன்னிப்பைச் சொல்லிவிட்டு, இதேபோன்றவற்றை அவர் தொடர்ந்து செய்துகொண்டிருப்பதுதான் எமக்கு ஏமாற்றமளிப்பது.
ஒருவர் தன் படைப்பின் உள்ளடக்கத்தால் வாசகர்/பார்வையாளர்களை கவர்ந்து, அந்த விடயம் குறித்த உரையாடல்களைச் செய்வதே ஒரு நல்லதொரு படைப்பாளிக்குரிய
அடையாளம், ஆனால் இந்தப் ‘பொது நண்பரோ’ தேவையில்லாத
சர்ச்சைகளை முன்னோட்டங்களில் உருவாக்குவதே தன் கடன் பணிசெய்து கிடப்பதென்பது போல
இருப்பார். என்ன செய்ய, இவை குறித்து மேலும் நிறைய எழுதலாம்.
ஆனால் இந்தப் ‘பொது நண்பரும்’ நானும் இப்போது அவ்வவ்போது சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் வாழ்வதால் அவையடங்கிப் பேசுவதுதான் எனக்கும் நல்லது.
இந்த சிங்களப் படத்தை இயக்கிய நண்பரின்
வாழ்க்கையே ஒரு திரைப்படமாக்கக்கூடிய அவதிகளும், அலைச்சல்களும் நிறைந்தவை என்பதை அவர் சொன்னபோது அறிந்தேன்.
இலங்கையில் பிறந்த நம்மிடம் எவ்வளவு கதைகள் எழுதுவதற்கும்/காட்சிப்படுத்துவதற்கும்
இருக்கின்றன. இந்த நண்பர் திரைப்படத் துறைக்கு எவ்விதப் பின்னணியும் இல்லாது
வந்தவர். மிகவும் கஷ்டப்பட்டு வந்து ஓரிடத்தை நிலைநிறுத்தியும் விட்டார். இப்போது
திரைப்படத் துறைக்குள் முழுதாகப் போவதால், அவரின் professional ஐ quit செய்து ஒரு வருடமாகிவிட்டது. இவ்வாறான ஒரு அலைச்சலில்தான் நானும்
சிக்கியிருக்கின்றேன் என்பதால் எனக்கு அவருடன் நெருக்கம் இன்னும் கூடியது.
எங்களுக்குப் பிடிக்கும் ஒன்றைச் செய்யும்போது
ஏதோ பலவற்றை இழக்கத்தான் வேண்டியிருக்கின்றது. அந்த இழப்புக்கள், அடையும் விடயங்களின் மேல் இருக்கும் காதலால் சமன் செய்யப்படுகின்றது.
ஆனால் நம் எல்லோருக்கும் தத்தளிப்புக்களும், நெருக்கடிகளும் இருக்கின்றன; அவை அந்தரங்கமானவை. எப்போதாவது இப்படி ஒத்த அலைவரிசையுள்ளவர்களுடன்
உரையாடும்போது மட்டும் மேலெழக்கூடியவை.
நண்பரின் ஸ்டூடியோ இப்போது பலரும் வந்து
தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளும் இடமாக இருக்கின்றது. தான் தனித்துக்
கஷ்டப்பட்டது போலவன்றி அடுத்த தலைமுறை இன்னும் முன்னேறிச் செல்லவேண்டும் என்பதாய்
அவரின் ஸ்டூடியோ பலருக்காய்த் திறந்திருக்கின்றது. அவரிடமிருந்து ஒளிப்பதிவாளர்கள்,
எடிட்டர்கள் பண்பட்டு இப்போது பிற
திரைப்படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்பது உவகை கொள்கின்ற விடயம்.
000000000
ஜெயமோகனின் ‘தன் மீட்சி’ நூலில் இவ்வாறு தம் விருப்பம் சார்ந்து,
தம் கனவுகள் சார்ந்து இயங்குபவர்கள் பற்றி
நிறையப் பேசப்பட்டிருக்கும். ஜெமோ முன்வைக்கும் ‘சராசரிகள்’ மீது எனக்கு முரண் உரையாடல்கள்
இருக்கின்றன. அவர் கீதை முன்வைக்கும் ‘’ஆகவே செயல்
ஆற்றுக’ என்பதிலிருந்தும், நித்ய சைதன்ய யதியின் ‘விதி
சமைப்பவர்கள்’ என்பதிலிருந்தும் இந்த கருத்தாக்கத்தை
முன்வைக்கின்றார். எனக்கு யதி முன் வைக்கும் விதி சமைப்பவர்களோடு நெருங்கி
வரக்கூடியதாக இருக்கிறது. இந்த உலகில் எல்லோரும் செயலாற்ற வேண்டியவர்கள் அல்ல.
நாம் எமக்கான சாதாரண வாழ்வோடும் இவ்வாழ்வை வாழ்ந்துவிட்டுப் போகலாம். அப்படித்தான்
பல பேர் இருக்கின்றார்கள். ஆனால் ஒருவருக்குள் அந்தச் சராசரித்தன்மையைத் தாண்டி ஏதேனும்
செய்யும் உந்துதல் இருந்தால் அவர் அதை நோக்கிப் போகத்தான் வேண்டும்.
எல்லோருக்கும் இது ஓரு கட்டாயமில்லை. செயலாற்றாமல் கூட
இருக்கலாம். அப்படித்தான் எத்தனையோ பேர் இருக்கின்றனர். மேலும் இப்படி உங்களுக்கு
லெளதீக விடயங்களை மீறி ஒன்று பிடித்து அதை நோக்கி நீங்கள் நகர்வதாயின் நிறைய
இழக்கத்தான் வேண்டும். ஆனால் அது தரும் மனநிறைவை நீங்கள் வேறு எங்கும்
உணரமுடியாது. அதேவேளை இதை வைத்து நீங்கள் அதிகாரத்தை நோக்கி நகர்வீர்களாயின்
உங்கள் கலை உங்களைக் கைவிட்டும் போய்விடும். நீங்கள் இவ்வாறு செயலாற்றும்போது
நூற்றாண்டுகளாய்த் தொடர்ந்து வரும் கண்ணியின் ஒரு சிறு தொடர்ச்சியென உணரவேண்டுமென
அந்நூலில் யதியை முன்வைத்தும் உரையாடப்பட்டிருக்கும்.
வெளியில் சாதாரணமாவராகவும், இவற்றில் ஏற்படும் நிறைவை உள்ளே அனுபவித்தபடியும் நாங்கள் இருக்க
முடியும். இது ஒருவகையில் ஸென் சொல்வதும் கூட; முதலில் மலைகள் மலைகளாகவே இருந்தன. ஞானமடைகின்ற முதல் துளியில்
மலைகள் மறைந்துவிடுகின்றன. ஞானம் நமக்குள் தெளிவுறும்போது மறைந்த மலைகள் மீண்டும்
தோன்றிவிடுகின்றன. ஞானமடைய முன்னர் பார்த்த அதே மலைகள்தான் வெளியில் இப்போது
தெரிகின்றன. ஆனால் ஞானமடைந்தவர் பார்த்துக்கொண்டிருப்பது அதே மலைகள்தானா? என்பதுதான் அந்தத் தத்துவச் சரடு.
ஆகவே, விரும்பியவர்கள் விரும்பியதைச் செய்யத் துணியுங்கள். காலம் ஒருபோதும்
நமக்காகக் காத்திருப்பதில்லை. வெற்றி என்பதும் தோல்வி என்பதும் வெளிச் சூழலுக்கான
ஓர் பாவனை மட்டுமே என்ற புரிதல் வந்தால் சலிப்புக்களை மீறிச் செல்ல முடியும். நம்
பயணங்களிடையே நாம் எதை அடைந்தோம் என்பதே நம் அகமனதுக்கு முக்கியமானது.
**********************
(May 20,
2023)
0 comments:
Post a Comment