ஒரு நகரத்திலிருந்து இன்னொரு
நகரத்துக்கு வந்து சேர்ந்திருந்தேன். விடிகாலை 6 மணிக்கு பேருந்தில் புதிய நகர் வந்துவிட்டேன். தங்கவேண்டிய அறைக்கோ 11மணிக்குப் பிறகுதான் அனுமதி. நீண்ட நெடும் பயணம் தந்த கசகசப்பில்
அலுப்புடன் காலையில் தேநீர்க்கடை தேடிப் புறப்பட்டேன். சில தெருவோரக் கடைகள்
இருந்தாலும், கழிப்பறை இருக்கும் கஃபே என் தெரிவாக
இருந்தது. நான் அந்தக் கஃபேயிற்குப் போன நேரமே அவர்கள் திறக்கத் தொடங்கினார்கள்.
என்னைப் போலவே இன்னொருவரும் தேநீருக்காய் வந்து காத்திருந்தார்.
தேநீருக்கான மெனுவைக் கையில் வைத்தபடி இருவரும்
பேசத் தொடங்கினோம். பெங்களூர்க்காரர், படித்தது
டெல்கியில். இப்போது பேராசிரியராகப் பணி புரிவது சென்னையில் IITயில் என்றார். அவரின் ஆய்வுகள் பெரும்பாலும் urban studies and planning குறித்தது.
இந்தக் கதையின் நீட்சியில் இப்போது அருமையான கிராபிக் நாவல்கள் வருகின்றதென அவர் சொல்ல, ஈழப்போர் குறித்து பல்வேறு உள்ளடுக்குகளில் கதை சொன்ன "வன்னி" கிராபிக் நாவலைப் பற்றி நான் குறிப்பிட்டேன். அவர் அதை வாசித்திருந்தார் என்பது மட்டுமின்றி, அதில் 2 பிரதிகள் வாங்கி தன் நண்பர்களுக்குக் கொடுத்தேன் எனச் சொல்லச் சற்று ஆச்சரியமாக இருந்தது. இன்றைக்கு தமிழ்நாட்டில் இருந்துகொண்டு ஈழம் பற்றிப் பேசும் எந்த அரசியல்வாதியோ, புலம்பெயர் இலக்கியமா, அகதி இலக்கியமா என்று பேசுபவர்களோ இதைப் பற்றி அறியத் துளியும் முயற்சி எடுத்திருக்கமாட்டார்கள் என்பது என் துணிபு.
அந்தப் பேராசிரியர் இறுக்கமற்று இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் தெய்யம் பற்றிப் பேச்சு வந்தது. கேரளாவிலா, கர்னாடாகவிலா இதன் தோற்றம் முகிழ்ந்தது என்பது பற்றிப் பேச்சுப் போனது. பிராமணியத்துக்கு எதிரான கதையாடல்களினால் உருவான தெய்யம், அந்தந்தப் பகுதிகளுக்குரிய கதைகளைப் படிமமாக்கி வந்தது என்று அவர் விரிவாக விளங்கப்படுத்தினார். தெய்யம் இலங்கையின் கண்டியன் ஆட்டத்தோடு தொடர்புபடும் இடங்கள் பற்றியும் நாங்கள் பேசிக் கொண்டோம்.
அவர் ஒரு நல்லதொரு பேராசிரியர் போல. இதன் ஆரம்ப ஆவணங்கள் எங்கே சேகரத்திலிருக்கின்றன போன்ற விபரங்களையும், தனது நண்பர் தெய்யம் குறித்த ஆவணப்படத்தின் இணைய இணைப்பையும் பின்னர் அனுப்பி வைத்தார். அதேவேளை கந்தாரா திரைப்படம் எப்படி மோசமாக இந்த ஆட்டத்தை வியாபாரப்படுத்தியது என்று கவலை தெரிவித்திருந்தார். நானும், எங்கள் ஈழப்போராட்டத்தின் சிக்கலான கதையாடல்களை விளங்கிக் கொள்ளாது எழுதப்படும்/திரைப்படமாக்கப்படும் படைப்புக்கள் எப்படி எங்களுக்கு எரிச்சலைத் தருகின்றன என்பது பற்றி அவருக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன்.
இறுதியில் பேராசிரியர் சந்திக்க வேண்டிய அவரின்
நண்பரின் அழைப்பு வந்தது. நல்லதொரு உரையாடலாக இருந்தற்கு நன்றி சொல்லி, அவரின் தேநீர் என் செலவெனச் சொன்னேன். பேராசியர் போகும்போது தான் 3
வருடங்கள் ரொறொண்டோ பல்கலைக் கழகத்தில்
கற்பித்தேன் எனச் சொல்லி ஆச்சரியப்படுத்தினார். ஏன் ரொறொண்டோவை விட்டு இந்தியா
மீண்டீர்களெனக் கேட்டேன். என் வரைகலைஞர் மனைவிக்கு அந்தக் குளிர் பிடிக்கவில்லை
அதுதான் வந்துவிட்டோம் என்றார். எனக்குந்தான் பனி பிடிப்பதில்லை, ஆனால் என்னிடம் ஓடி வந்துவிடுங்கள் உங்கள் வாழ்வைக் கதகதப்பாகிவிடுகிறேன் எனச் சொல்லத்தான் எவரும் எனக்கு இந்தியாவில் இல்லையென நினைத்துச் சலித்தபோதும், இன்னும் கொஞ்சம் தேநீராவது அருந்த எனக்காய் மீதம் இருக்கின்றதேயென நிம்மதியடைந்தேன்.
***********
(Feb 02, 2023)
0 comments:
Post a Comment