The Secret Agent
***
மார்செல்லோ
என்கின்ற அந்த மனிதன் இதைக் கண்டு அந்த இடத்தைவிட்டு நகர விரும்புகின்றான்.
நீயும் போனாய் என்றால், எரிபொருள் நிரப்ப எவரும் வரப்போவதில்லை என்று
காஷியர் சொல்கின்றான். என்ன நடந்தது அந்த இறந்தவனுக்கு என்று மார்செல்லோ
கேட்கின்றபோது, அவன் இங்கிருக்கும் என்ஜின் ஓயிலை களவெடுக்க வந்தபோது
இரவில் சுட்டுக்கொல்லப்பட்டவன் என்கின்றான் காஷியர்.
இவ்வாறுதான் The Secret Agent என்கின்ற பிரேசிலத் திரைப்படம் ஆரம்பிக்கின்றது. இதுவும் 'I'm still here' திரைப்படம் போல, பிரேசில் இராணுவ சர்வாதிகார ஆட்சியில் இருந்த 70களில் நிகழ்கின்றது. இன்னும் திருத்தமாகச் சொல்வதால் இது 1977இல் நடக்கும் ஒரு கதை.
காரில் போகும் மார்செல்லோ உண்மையில் யார் என்பதை நாம் இத்திரைப்படத்தில் நடுப்பகுதியிலே அறிந்துகொள்கின்றோம்.
அதுவரை அவர் ஒரு இரகசிய உளவாளியா, அரசுக்கு எதிராக இயங்கும் குழுவைச் சேர்ந்தவரா என்கின்ற முடிவுக்கு வராது நாம் அவரைப் பின் தொடர்கின்றோம்.
ஏனெனில் இத்திரைப்படத்தில் எந்த முக்கிய பாத்திரமும், தாம் சர்வாதிகார அரசால் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ரோம் என்ற பயத்தினால், நேரடியக உண்மையைக் கதைக்க அஞ்சுகின்றனர். மார்செல்லோ வந்து சேரும் நகரில் அடைக்கலம் கொடுக்கும் முதியபெண்ணான டொன்னா செபஸ்டியனா விசித்திரமான பெண். அவரது கடந்தகாலத்தில் இரகசியமானது என்றாலும், அவர் ஒரு புரட்சிக்காரியாக இருந்தவர். எனவே அவர் தனது தொடரடுக்கில் இப்படி அரசால் தேடப்படுபவர்களுக்கும், இராணுவத்தால் கொல்லப்பட சாத்தியமுள்ளவர்களுக்கும் தஞ்சம் கொடுக்கும் இடமாக அது அமைந்திருக்கின்றது.
நமக்கு திரைப்படத்தில், மார்செல்லோவின் மகன் ஒருவரும் இந்த நகரில் இருக்கின்றார் என்பதும், அவன் அவரின் இறந்துபோன மனைவியின் பெற்றோருடன் வாழ்கின்றான் என்பதையும் அறிகின்றோம். மார்செல்லோவோடு அவ்வளவு எளிதில் அவரது மகனைச் சந்திக்க முடிவதில்லை. அவரது கடந்தகாலத்தில் ஏதோ நடந்திருக்கின்றது. அரசு அவரை கண்காணித்தபடி இருக்கின்றது என்பதை அறிகின்றோம்.
மார்செல்லோ தனது மகனையும் அழைத்துக் கொண்டு வேறொரு நாட்டுக்கு அகதியாக தப்ப விரும்புகின்றார். ஆனால் அப்படி முயல்கின்றபோது அவரது பாஸ்போர்ட் அரசால் முடக்கப்பட்டதை அறிகின்றார். அவர் தப்பிப் போவதற்கு உதவ விரும்பும் அரசுக்கு எதிரான புரட்சிக்காரர் அவர் போலி பாஸ்போர்ட் எடுக்கும்வரை அந்நகரில் இருக்கும் அடையாள அட்டை வழங்கும் அலுவலகத்தில் வேலை செய்யச் சொல்கின்றனர்.
இப்படி ஒருபக்கத்தில் மார்செல்லோவின் வாழ்க்கை சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்போது, பிரேசிலில் அக்காலத்தைய புறவுலகம் விபரமாகவும், நிதானமாகவும் சித்தரிக்கப்படுகின்றது. மிக இருண்ட காலத்தில் எப்படி மக்கள் வாழ்ந்தார்கள் என்பதை இப்படம் காட்டுவது இதில் சிறப்பு. திருவிழா நடக்கின்றது. மக்கள் இந்தளவு அல்லாடல்களுக்கும் இடையில் அதைக் கொண்டாடுகின்றார்கள்.
இன்னொருபக்கம் அந்நகரில் அரசுக்காகவும், இராணுவத்துக்காகவும் கொலைகள் நடக்கின்றன. மோசமான பொலிஸ் அதிகாரி இந்தத் திருவிழாவோடு 90 கொலைகளைச் செய்துவிட்டோம், மிக விரைவில் 100 இலக்கத்தை கொலைகளில் எட்டுவிடுவோம் என்று சொல்கின்றார்.
மார்செல்லோவின் இந்த தலைமறைவு வாழ்க்கைக்கு சமாந்திரமாக, அரசியல்/தனிப்பட்ட கொலைகள் செய்பவர்களின் வாழ்க்கை காட்டப்படுகின்றது. ஒருகாட்சியில் மார்செல்லோவின் புகைப்படத்தைக் காட்டி இவர் கொலை செய்யப்படவேண்டியவர் என்று இரு கொலைகாரர்களுக்கு (தகப்பனும்/மகனும்) கட்டளை ஒரு பெரும் நிறுவன அதிகாரியால் கட்டளையிடப்படுகின்றது.
அந்தக் கொலைகாரர்கள் இவரைத் தேடி புறப்படுகின்றார்கள். மார்செல்லோவுக்கு நீ இனி உயிரோடு இருக்க நான்கு நாட்கள் மட்டுமே இருக்கின்றது. எப்படியாவது தப்பிப் போய் விடு என்று புரட்சிக்காரர்களால் தகவல் சொல்லப்படுகின்றது.
இப்போதுதான் நாம் மார்செல்லோவின் கதையை அறிகின்றோம். அவரை, அவரின் மாமனார் வேலை செய்யும் தியேட்டரில் இந்தப் புரட்சிக்காரர்கள் சந்தித்து, அவரது கதையைப் பதிவு செய்கின்றனர். அந்தப் பதிவு செய்த சில காஸேட்டுக்கள் பாதுகாக்கப்பட்டு, கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு சர்வாதிகார ஆட்சி கலைக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழக மாணவி ஓர் ஆய்வின் நிமித்தம் கேட்கின்றாள். அவளுக்கு மார்செல்லோவின் வாழ்க்கையும், அவருக்கு என்ன நடந்தது என்று அறியவும் ஆர்வம் கூடுகின்றது.
*
மார்செல்லோ, ஒரு இடதுசாரியோ அல்லது அரசுக்கு எதிரான புரட்சிக்குழுவில் இருந்த ஒருவரோ அல்ல. அவர் ஒரு சாதாரண பேராசிரியர். அவர் ஆய்வு செய்கின்ற லித்தியம் பட்டரிகள், எதிர்காலத்தில் வரப்போகும் மின்சாரகார்களுக்கு உதவும் என்பதால் அரசின் அமைச்சில் பங்குவகிக்கும் ஒரு பெருநிறுவனம் இவரது ஆய்வை வாங்க விரும்புகின்றது. அவர் அதற்கு உடன்படாததால், ஆய்வுக்கு வழங்கும் நிதியுதவியை நிறுத்துகின்றது. அத்தோடு அந்த நிறுவன அதிபரோடும்/மகனோடும் சந்திக்கும் இரவு விருந்தில், அவர்கள் மார்செல்லோவின் மனைவியை அவமானப்படுத்துகின்றனர். அதை எதிர்ந்த மார்செல்லோவின் மனைவி கதைக்கத் தொடங்கும்போது வாக்குவாதம் முற்றும்போது மார்செல்லோ அந்நிறுவன மகன் மீது கையை வைத்துவிடுகின்றார். அவ்வளவுதான் அந்தக் காட்சி.
இந்தச் சம்பவம் முடிந்து மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. மார்செல்லோ அதன் பிறகு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்திருப்பது மறைமுகமாக நமக்குத் தெரிகின்றது. இனி பிரேசிலில் வாழமுடியாது எங்கேயாவது மகனுடன் தப்பிப் போய்விடுவோம் என்று தீர்மானித்துத்தான் மகன் வாழும் இடத்துக்கு ஓர் இரகசியப் பெயருடன் மார்செல்லோ வந்திறங்குகின்றார் என்பது இப்போது நமக்குப் புரிகிறது.
மகன் ஓரிடத்தில் தலைமறைவாக இருக்கும் தகப்பனுக்கு செய்தி அனுப்புகின்றான். 'அப்பா, அம்மாவின் முகம் எனக்கு கிட்டத்தட்ட மறந்துபோய்விட்டது, உங்கள் முகமும் மறக்கமுன்னர் என்னை இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள்' என்று அது இருக்கும்.
மார்செல்லோ தவறான நேரத்தில் அதிகாரத்தில் மாட்டிக் கொண்ட ஒரு சாதாரண மனிதன். இப்போது அவனது சொந்த வாழ்க்கை அவனுக்குரியதல்ல. அவன் ஒருபொழுது திருவிழாக் கொண்டாடத்தில் கலந்துகொண்டு தன் மனம் நிறைந்த கவலைகள் மறந்து ஆடுகின்றான். இன்னொருபொழுதில் தலைமறைவானவர்களுடன் டொன்னா செபஸ்டியானா வீட்டில் விருந்துண்ணும்போது, 'என்னை இன்னும் சில நாட்களில் கொன்றுவிடுவார்கள். நான் வாழவே விரும்புகின்றேன்' என்று இயலாமையுடன் சொல்கின்றேன்.
அந்த வீட்டில் அடைக்கலம் புகுந்த சிங்கள் மதருடன் அவனுக்கு உடல் சார்ந்த உறவின் பின் தூங்கும்போது, பெற்றோல் நிலையத்தில் பார்த்த தலை சிதைந்த உடலுக்கு உயிர் வந்து நடமாடும் பயங்கரக் கனவு கண்டு உடல் விதிர்விதிர்க்கின்றான். கூடவே படுத்திருக்கும் பெண் அவனை ஆரத்தழுவி அவன் பதற்றம் தணிக்கின்றாள்.
ஆக மார்செல்லோ வாழ்க்கையை வாழவிரும்பும் மனிதன் மட்டுமில்லை, மிகுந்த vulnerable ஓர் ஆண் என்பதையும் கண்டுகொள்கின்றோம். ஆனால் அவர்களையும் சும்மா வாழ தமது குடும்பத்துடனோ, பிள்ளைகளோடு வாழ அரச அதிகாரங்கள் விடுவதில்லை என்பதை இங்கே பார்க்கின்றோம்.
மார்செல்லோவைத் தேடி வந்த கொலைகாரர்கள் மார்செல்லோவின் இடத்தைக் கண்டுபிடிக்கின்றனர். தமது வேலையைக் கச்சிதமாக முடிக்க உள்ளூரிலே கொலைகளைத் திருத்தமாகச் செய்யும் ஒருவனை வாடகைக்கு அமர்த்துகின்றனர். அவன் மார்செல்லோவைத் தேடி அடையாள அட்டை அலுவலகத்துக்குச் செல்கின்றான். தன்னைத் தேடி கொலைகாரர்கள் வந்துவிட்டதை, அவரது அசல்பெயரை வைத்து அழைப்பதில் மார்செல்லோ கண்டுபிடிக்கின்றார். அவரின் நல்லூழ் காரணமாக பொலிஸுக்கும் அந்த கொலைகாரர்களுக்கும் துப்பாக்கிச் சண்டை காரணமாக இவர் அங்கிருந்து தப்பியோடும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
*
அந்தக் காட்சியோடு 70களின் கதை முடிகின்றது. நாம் மார்செல்லோ தப்பிவிட்டார் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றோம். இப்போது கடந்தகாலத்தின் கதையை பதிவுசெய்யப்பட்ட காஸெட்டுக்களில் இருந்து கண்டுபிடிக்கும் பல்கலைக்கழக மாணவியிடம் திரும்புகின்றோம். அந்தக்காலத்தில் இவ்வாறான இணையத்தேடல் வசதி இல்லை. அந்தப் பெண் மார்செல்லோ இப்போது எங்கேயிருக்கின்றான் என்று அன்றைய பத்திரிகைகளைத் தேடிக் கண்டுபிடிக்க முயல்கின்றார். அதில் சட்டென்று ஒரு செய்தி இடைவெட்டிப் போகின்றது.
இந்தப் பல்கலைக்கழக மாணவி, மார்செல்லோ கடைசியாக இருந்த நகருக்குச் செல்கின்றார். அங்கே இப்போது மார்செல்லோவின் மகன் வைத்தியராக பணிபுரிகின்றார். இம்மாணவி மார்செல்லோவின் மகனிடம் தந்தையைப் பற்றிய நினைவுகளைச் சொல்லச் சொல்கின்றார். எனக்கு தந்தையைப் பற்றிய எந்த நினைவுகளும் இல்லை என்கின்றார். அன்று தனது தந்தையிடம், 'எனக்கு அம்மாவின் முகம் மறந்துவிட்டது' என்று மகன் சொன்னதுபோல, இப்போது அப்பாவின் நினைவுகளும் இல்லை என்கின்றார்.
அம்மாணவி பல்கலைக்கழக ஆய்வுக்காக இருந்த டேப்களை யூஎஸ்பியில் பதிவு செய்து இதில் உனது தந்தையின் கதை மட்டுமில்லை, அவரின் குரலையும் நீங்கள் கேட்கலாம் என்கின்றார். மார்செல்லோவின் மகனோ, 'என்னை விட உங்களுக்கு என் தந்தையை அதிகம் தெரியும் போலிருக்கின்றது என்கின்றார்.
பிறகு அவர் வேலை செய்யும் வைத்தியசாலை உனக்கு எதுவும் நினைவுபடுத்துகின்றதா எனக் கேட்கின்றார். இல்லை என்கின்றபோது இதுதான் எனது தாத்தா வேலை செய்த தியேட்டர். இங்கேதான் நீ 70களில் கேட்ட டேப்புகள் பதிவு செய்யப்பட்ட இடம் என்கின்றார் மார்செல்லோவின் மகன்.
நமக்கு காலம் அவ்வளவு விரைவாக மாறிவிட்டது என்பது தெரிகின்றது. காலம் மட்டுமில்லை இடங்களும், மனிதர்களும் இலகுவில் மறக்கப்படிவிட்டார்கள் என்பதும் புரிகின்றது.
மார்செல்லோ அவரை முதலில் தேடி கொலைகாரர்கள் வந்தபோது அருந்தப்பில் தப்பிவிட்டார் என்றாலும், பின்னர் அவரை ஏதோ ஒருவகையில் கொலை செய்துவிட்டார்கள். அந்த மாணவி தேடியெடுத்த பத்திரிகைத்துண்டுச் செய்தியில் 43 வயது மார்செல்லோ தெருவில் இரத்தவெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடக்கின்றார். ஒரு சாதாரண மனிதனாக வாழ இருந்த மனிதன் வரலாற்றில் எவ்வித அடையாளங்களுமற்றுப் போயிருக்கின்றார். அவரின் குடும்பத்துக்கே அவர் எதனால் கொல்லப்பட்டார் என்கின்ற முழுவிபரமும் தெரியாது அடுத்தடுத்த தலைமுறைகள் வந்துவிடவும் செய்துவிடுகின்றது என்பதுதான் இன்னும் துயரமானது.
இத்திரைப்படத்தை இந்த வருடத்தில் பார்த்த மிகச் சிறந்த திரைப்படமாக மட்டுமில்லை, இந்த ஞாயிறு நடக்கும் ஆஸ்கார் விருதுக்காக பத்துக்கு மேற்பட்ட திரைப்படங்களில் (எனக்குப் பிடித்த One Battle Afer Another, Sentimental Value போன்றவை பட்டியலில் இருந்தாலும்) இது விருது பெற்றால் மிகவும் அகமகிழ்வேன்.
பிரேசிலின் இருண்ட சர்வாதிகார இராணுவ ஆட்சியைப் பின்னணியாக வைத்து 'I'm still here', 'The Secret Agent' என்பவற்றைப் பார்க்கும்போது என்றேனும் ஒருகாலத்தில் நமது ஈழப்போராட்டத்தை முன்வைத்து ஒரு தலைமுறை சிறந்த திரைப்படங்களை எடுக்கும் என்கின்ற நம்பிக்கை வருகின்றது. மேற்கூறிய இரண்டு திரைப்படங்களையும் எடுத்தவர்கள் பிரேசிலியர்கள். படங்களும் போர்த்துக்கீஸிய மொழியைப் பேசுகின்றவை.
'I'm still here' உண்மைக்கதையை, எழுதப்பட்ட தன்வரலாற்று நூலை அடிப்படையாக எடுக்கப்பட்டது என்றால், The Secret Agent திரைப்படத்தை தனது சொந்தநகரில் பார்த்ததை புனைவாக மற்ற இயக்குநர் இயக்கியிருக்கின்றார்.
I'm still here குடும்பத்துக்குள் நடக்கும் அல்லாடல்களை குடும்பத்துக்குள்ளேயே அகவயமாகப் பார்த்ததென்றால், The Secret Agent புறவயமாக பிரேசிலின் அன்றைய கால வாழ்க்கையை நேர்த்தியாகச் சித்தரித்தபடி ஒரு தலைமறைவு வாழ்க்கை வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு தகப்பனை நமக்குக் காட்டுகின்றது.
இத்திரைப்படங்களைப் பார்க்கும்போது நாம் நமது கொடுங்காலத்தை ஏதோ ஒருவகையில் பதிவு செய்வது என்பது முக்கியமாகத் தெரிந்தது. அதிலும் போர்க்காலத்தில் வாழ்ந்தவர்களின் அனுபவங்கள் ஏதோ ஒருவகையில் பதிவு செய்யப்படாதவிடின் அது பிறகு வந்த சந்ததி தேடும்போது கதைகளை உருவாக்கவோ, வரலாற்றை மறுவாசிப்புச் செய்யவோ முடியாது போய்விடும். அதைத்தான் நாம் இந்தக் காலத்தில் கவனத்தில் மிகவும் கொள்ளவேண்டும்.
***




0 comments:
Post a Comment