கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 140

Thursday, March 19, 2026

 

'I'm still here'  (பிரேசிலிய திரைப்படம்)
*

நீங்கள் உங்கள் பெற்றோருடனும் சகோதரர்களுடன் வாழ்ந்து வருகின்றீர்கள். ஒருநாள் அரசாங்கத்தின் ஆதரவுடன் உங்கள் நாட்டு இராணுவம் உங்கள் தந்தையை விசாரணைக்கு என்று அழைத்துச் செல்கின்றார்கள். பிறகு ஒருபோதும் உங்கள் தந்தை வீடு திரும்பாமல் காணாமற் போய்விடுகின்றார். நீங்களும், உங்கள் தாயாரும், சகோதரர்களும் உங்கள் வாழ்நாள் முழுதும் அந்தத் துயரத்தோடு வாழப் பழகிக் கொள்கின்றீர்கள்.

இப்படியான சம்பவங்கள் தென்னமெரிக்கா நாடுகளில் மட்டுமில்லை, நமது நாடுகளிலும் அரசு,இராணுவம், விடுதலை இயக்கங்களால் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. நாம் நமக்குரிய அரசியல் சார்புகளில் நின்று உரையாடமுன்னர், ஒருகணம், ஒரேயோருகணம் அப்படிக் காணாமற்போனவர்களின் குடும்பங்களில் நிலையை எவ்விதச் சார்பும் எடுக்காது யோசித்துப் பார்த்திருக்கின்றோமா?
 
 
இந்தக் கதை பிரேசிலில் நடந்தாலும், நமது தாய்நாட்டுக்கும் பொருந்தக் கூடியது. பிரேசிலில் 1960களில் இடதுசாரிகள் தேர்தலில் வென்றபோது, அங்கிருந்த இராணுவம் அமெரிக்காவின் உதவியுடன் அதைக் கவிழ்த்தது. பிறகு கிட்டத்தட்ட இருபது வருடங்கள் (1965-1985) வரை சர்வாதிகார இராணுவ ஆட்சியே நடந்திருக்கின்றது. அந்தக் காலத்தில் நிறையப் பேர் கொல்லப்பட்டும், காணாமற் போயிருக்கின்றனர்.பிரேசிலில் அன்று நடந்த இராணுவச் சதி கவிழ்ப்பே முன்னுதாரணமாக பல தென்னமெரிக்கா நாடுகளில் நடந்த சர்வாதிகார இராணுவ ஆட்சிக்கு பிறகு காரணமாயிற்று என வரலாறு சொல்கின்றது.

'I'm still here'  என்கின்ற இத்திரைப்படம் உண்மையான நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கின்றது. இராணுவக் கவிழ்ப்புக்கு முன் ஒரு பொறியிலாளராகவும், காங்கிரஸ்மானாகவும் இருந்த ரூபன்ஸ் (Rubens Paiva) ஒருநாள் சிவில் உடையில் வந்த இராணுவத்தால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றார். அதன்பிறகு அவரைப் பற்றிய எந்த பதிவுகளும் பிரேசிலில் இல்லாது மறைக்கப்படுகின்றது.

அவர் மட்டுமில்லாது அவருக்கு வேறு யாரோடு தொடர்பு இருக்கின்றதென ரூபன்ஸின் மனைவியும் பல நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றார். தாயார் விடுதலை செய்யப்பட்டபின், அவர்களின் கண்காணிப்புக்குள்ளாக்கப்பட்ட வீட்டிலிருந்து தனது கணவரைத் தேடும் முயற்சியில் ஈடுபடுகின்றார்.

காணாமற்போனவரைத் தாங்கள் கடத்தவே இல்லை என்கின்ற சொல்கின்ற இராணுவத்தைப் பற்றி எப்படி நீதிமன்றத்தில் முறையிடுவது? இறுதியில் ரூபன்ஸ் சித்திரவதைக்குள்ளான இடத்தில் தானும் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தேன் என்று சொல்கின்ற பெண் ஆசிரியர் ஒருவரின் வாக்குமூலத்தை வைத்து ரூபன்ஸின் குடும்பம் வக்கீல்களை அணுக முயல்கின்றது.

ஓர் சர்வாதிகார ஆட்சியில் இதற்கெல்லாம் எங்கே இடமிருக்கப் போகின்றது. ஐந்து பிள்ளைகள் இருக்கும் ரூபன்ஸுக்கு அந்தப் பிள்ளைகளைப் பார்க்கும் பொறுப்பு தாயாருக்கு வந்துவிடுகின்றது. எவ்வளவு காலந்தான் கணவரைக் காணவில்லை என்று தேடிக் கொண்டிருப்பது. அவர்கள் இருந்த ரியோ வாடகை வீட்டைத் துறந்து, வீடு கட்டுவதற்கென வாங்கிய காணியை விற்று, தொலைவிலிருக்கும் இன்னோரு ஊருக்கு அந்தக் குடும்பம் இடம் பெயர்கிறது.
 


எந்த ஆட்சியாயினும் நிலையாக நிலைப்பதில்லை என்பது வரலாறு. 1985 இல் சர்வாதிகார ஆட்சி கலைக்கப்பட்டு ஜனநாயக நடைமுறைக்கு பிரேசில் திரும்புகின்றது. ரூபன்ஸ் காணாமற்போனார், அதற்குப் பொறுப்புக் கூறவேண்டியது பிரேசிலிய அரசு என்று ரூபன்ஸின் தாயார் தொடர்ந்து போராடியதால், அவர் காணாமலாக்கப்பட்டு 25 வருடங்களுக்குப் பிறகு ரூபன்ஸிற்கான மரணச்சான்றிதழ் வழங்கப்படுகின்றது.

சற்று யோசித்துப் பாருங்கள். ஒருவர் காணாமல் போய் 25 வருடங்களுக்குப் பின்தான் அவர் இறந்துவிட்டார் என்று சொன்னால் அந்தக் குடும்பம் எத்தனை வருடங்கள் அந்தத் துயரத்தோடு வாழ வேண்டியிருந்திருக்கும்?

கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பிறகு, அப்போது தந்தைக்கு என்ன நடந்தது என்று சிறிதும் அறியாத அந்தக் குழந்தைகள், வளர்ந்தவர்களாகியபின் (மரணச்சான்றிதழ் கிடைக்கும் நாளில்) உனக்கு அப்பா இனி ஒருபோதும் வரமாட்டார் என்று எப்போது தெரிந்தது என்று தங்களுக்குள் மாறி மாறிக் கேட்பார்கள்.

அப்போது மகன், 'எனது அம்மா அப்பாவின் ஆடைகள் அனைத்தையும் தானமாகக் கொடுத்தபோது அப்பா ஒருபோதும் திரும்பப் போவதில்லை என்று உணர்ந்தேன். அப்போது கிட்டத்தட்ட அவர் காணாமல் போய் இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன' என்பான். அதுபோல சின்ன வயசில் இருந்த மகள், 'நாங்கள் எங்கள் வாடகை வீட்டை விட்டு வெளியேறியபோது, அந்த வெறிச்சோடிய அறைகளைப் பார்த்தபோது அப்பா எங்களிடம் இனி வரப்போவதில்லை' என்று உணர்ந்தேன் என்று மகள் சொல்வாள்.

இதைத் திரைப்படத்தில் காட்சிகளாய்ப் பார்த்துக் கொண்டிருந்தபோது கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. அதுபோலவே ரூபன்ஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவதும், அதன் பிறகு இப்பிள்ளைகளின் தாயார் நாட்கணக்கில் சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் காட்சிகளையும் பார்த்தபோது என்னையறியாமலே என் உடல் ஒருவகை பதற்றத்துக்குள் போயிருந்தது.

*

இது உண்மையாக நடந்த கதை. இக்கதையை ரூபன்ஸின் மகனொருவர் இதே பெயரில் எழுதி 2015 வெளிவந்திருக்கின்றது. இதில் வரும் தாய் மிகவும் உறுதிவாய்ந்தவராக இருந்திருக்கின்றார். தனது காணாமல்போன கணவரைத் தேடிக் கொண்டிருந்த அவர், தனது 5 பிள்ளைகளின் நிமித்தம் ஒருவகையில் அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்ற யதார்த்ததை உணர்ந்து வாழ்க்கையை எதிர்கொள்ளும் தைரியத்தைப் பெற்றிருக்கின்றார்.

அதுவரை வேலை எதுவும் இல்லாதிருந்த இந்த தாயார், தனது 48 வயதில் சட்டம் படித்து, அதன் பிறகு மனிதவுரிமைகளுக்காகவும், அமேஸான் காட்டுப் பூர்வீகக் குடிகளின் வாழ்வியல் உரிமைகளுக்காகவும் போராடியிருக்கின்றார். பிற்காலத்தில் அவர் மறதிநோயுக்குள் போய்க்கொண்டிருந்தபோதே, தாயின் நினைவுகளைச் சேகரம் செய்து அவரின் மகன் இந்த நூலை எழுதியிருக்கின்றார்.

எழுபதுகளில் சர்வாதிகார ஆட்சியில் காணாமல் போன ஒருவரின் கதை, கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு எழுத்தாக்கப்பட்டு திரைப்படமாகவும் எடுக்கப்பட்டிருக்கின்றது. இவற்றை நினைவுகூர்வதோ, இத்தகை விடயங்களுக்காக போராடுவது என்பதோ இவை இனி நிகழக்கூடாது என்பதற்காகத்தான் என ரூபன்ஸின் மனைவி அவரின் மரணச்சான்றிதழைப் பெறும்போது பத்திரிகைகளுக்குச் சொல்வார்.

ஒருவர் இப்படி அரசியல் நிலைமைகளை வைத்து காணாமலோ/கொல்லப்படுவதோ கூட அவர்களுக்கான முடிவு உடனே நிகழ்ந்துவிட்டன என கொஞ்சமாவது ஆறுதலடையலாம். ஆனால் அவர்கள் சார்ந்த குடும்பங்கள்/பிள்ளைகள் எத்தகைய துயரார்ந்த வாழ்வுக்குள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்பதை மிகுந்த நெகிழ்வுடன், உண்மைக்கு மிக நெருக்கமாக மட்டுமின்றி, இவ்வாறான அடக்குமுறைக்குள் வாழாதவர்களைக் கூட இப்படியான விடயங்களை கரிசனையுடன் அணுகுங்கள் எனச் சொல்கின்ற் திரைப்படமாக இது இருக்கின்றது. அத்துடன் எனக்கு மிகப்பிடித்த படங்களில் ஒன்றான 'மோட்டார் சைக்கிள் டயரிகளை' நெறியாள்கை செய்த  Walter Salles யே இதையும் இயக்கியிருக்கின்றார்.

***

குறிப்பு:
இப்போது கடந்தகாலத்தை, இராணுவம் சதி செய்து கைப்பற்றிய ஆட்சியைப் பேசிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அதேபோன்று பிரேசிலில் அண்மையில் ஒரு சம்பவம் நடந்தேறியது. 2022 இல் பிரேசில் தேர்தலில் இடதுசாரிகள் வென்றபோது, வென்ற ஜனாதிபதி லூலாவையும், உப ஜனாதிபதியையும், உயர்நீதிபதியையும் கொல்ல, தேர்தலில் தோற்ற ஜனாதிபதியும்  இராணுவமும் சேர்ந்து சதி செய்ததும் அது தோற்றதையும் நாம் ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும். தோற்ற ஜனாதிபதி  Bolsonaro, 70களில் இராணுவத்தில் இருந்தவர். இப்போது இந்த சதிக்காக Bolsonaro இற்கு பிரேசில் நீதிமன்றத்தால் 27 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

 

0 comments: