கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 143

Saturday, March 28, 2026

 

 அகிலனின் 'சித்திரப் பார்வை'க்கு ஞானபீடப் பரிசு கிடைத்தபோது, அதை எதிர்த்து சுந்தர ராமசாமி 'போலி முகங்கள் -  சந்தர்ப்பம்: ஞானபீடப் பரிசு'  கட்டுரையை எழுதியிருந்தார். அது 1976 ஆம்  ஆண்டு 'பிரக்ஞை' இதழில் வெளிவந்திருக்கின்றது (பார்க்க ;சுந்தர ராமசாமியின் 'ஆளுமைகள் மதிப்பீடுகள்', ப.202).


இப்போது ஜெயமோகன், வைரமுத்துக்கு ஞானபீடம் கிடைத்தற்கு பொங்கியெழுந்ததற்காக, அவர் அகிலன் நினைவுப்பரிசை 'ரப்பர்' நாவலுக்கு 1990இல் பெற்றது எந்தவகையில் நியாயம் என்று கேட்கப்படுவதைச் சில இடங்களில் பார்த்தேன். 



உண்மையில் சுந்தர ராமசாமியின் காலம் என்பது வேறு வகையானது. அறம்/அரசியல் சார்புகள் என்பவை தீர்க்கமாக எடுக்கப்பட்ட நவீனத்துவ காலம். சிற்றிதழ்கள் X வெகுசன இதழ்கள் என்று தெளிவான கோடு அன்றிருந்தது. சுந்தர ராமசாமி போன்றோர்  வெகுசன இதழ்களில் ஒருபோதும்  எழுதமாட்டோம் என்று தீவிர இலக்கியத்தின் ஒரு முகமாக பிடிவாதமாக இருந்த பொழுதுகள் அவை.

இன்று தீவிர இலக்கியத்துக்கும், வெகுசன இதழ்களுக்கும் இடையில் கோடுகள் தெளிவற்றுப் போனது மட்டுமில்லை, மூன்றாவது தளமான சினிமாவும் மேற்கூறிய இரண்டு விடயங்களோடு இடைவெட்டிக் கொண்டிருக்கின்றன. சுந்தர ராமசாமி இன்று உயிரோடிருந்தால், இன்றைக்கு தீவிர இலக்கியவாதிகள் என நாம் அழைக்கும் பலரை சினிமா/வெகுசன இதழ்களில் பங்காற்றுவதற்காக, அகிலனுக்கு அடித்ததைவிட இன்னும் தீவிரமாக அவர்களை அடித்துத் துவைத்திருப்பார் என்றே நினைக்கின்றேன்.

சுந்தர ராமசாமி அப்படி இருந்தது சரியானதா இல்லையா என்பது உரையாடலுக்குரியது ஒருபுறம் என்றாலும், அப்படி இருந்ததாலேயே சுந்தர ராமசாமி ஒரு தரப்பின்/ஒரு காலத்தின் முக்கிய அடையாளமாக இன்றும் நின்று நிலைத்தபடி இருக்கின்றார்.

ஜெயமோகன் அகிலன் நினைவுப்பரிசுக்காக அவரது ரப்பரை 1990இல் அனுப்பியபோது, சுந்தர ராமசாமியின் 'போலி முகங்கள் - சந்தர்ப்பம்: ஞானபீடப் பரிசு' கட்டுரையை எப்படியேனும் வாசித்திருப்பார். ஏனெனில் சுந்தர ராமசாமியோடு அவருக்கு 1985இலே அறிமுகமாகிவிட்டது (பார்க்க அவரது இணையத்தளத்தில் 'அறிமுகம்' பக்கம்). கிட்டத்தட்ட ஜெயமோகன் அவரது 'விஷ்ணுபுரம்' வெளியாகிய 1997 ஆம் ஆண்டுவரை சுராவோடு ஜெமோ நெருங்கிய நட்பாகவே இருந்தவர். ஆக, இந்த 'அகிலன் நினைவுப்பரிசு' குறித்து இவர்கள் இருவருக்குமிடையில் ஏதேனும் உரையாடல் நிகழ்ந்ததா என்பது அறிவது சுவாரசியமாக இருக்கும்.

இது ஒருபுறமிருக்க, எனது கேள்வி என்னவென்றால் இதே வைரமுத்து கொடுக்கும் விருதுகளை ஆண்டுதோறும் இலக்கியவாதிகள் பெற்றுக்கொள்வதைப் பற்றி நம் தமிழ்ச்சூழல் இவ்வாறு கிளர்ந்தெழுந்து பேசியிருக்கின்றதா?

அதுபோலவே சுஜாதாவின் பெயரில் விருதுகளை உயிர்மை வழங்கியபோதும் இன்று பொங்குகின்ற பல எழுத்தாளர்கள் சிரித்தபடி புகைப்படங்களுக்கு படங்காட்டியபடிதானே இருந்திருக்கின்றார்கள். ஏன் அண்மையில் பாலகுமாரன் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டபோதும் இதே இலக்கியவாதிகள் அதை மனமுவந்து ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்தானே?

இதை நம் தமிழ் இலக்கியவாதிகள் அணிகின்ற இரட்டை வேடம் எனச் சொல்லலாமா? ஒருபக்கம் அகிலன், வைரமுத்து, சுஜாதா எழுதியவை அசலான இலக்கியம் அல்ல என்று கொந்தளித்துக் கொண்டு, இன்னொருபக்கம் அவர்களின் பெயரில் வழங்கப்படும் விருதுகளை நிராகரிக்காது ஏற்றுக்கொள்ளவும் செய்கின்றார்கள்.

ஆக, இதுதான் தமிழ்ச்சூழலின் இயல்பு என்று ஏற்றுக்கொண்டு மெளனமாக இருக்க வேண்டுமா?. அல்லது இவை குறித்து நமக்குள் சுயவிமர்சனம் அவசியமானது என்று இவ்வாறான விருதுகள் குறித்தும் உரையாட வேண்டுமா?

***

சிறுகுறிப்பு (பின்னர் சேர்க்கப்பட்டது):

தற்சமயம் அசோகமித்திரனின் 'காலக்கண்ணாடி'யை (கணையாழி இதழில் எழுதியவை) மீள வாசித்துக் கொண்டிருக்கின்றேன். அதில் 'சில நிருபணங்கள் (கதைக் கடன்)' பத்தியில்,

 'கேரளத்தில் உள்ள குமரன் ஆசான் நினைவு இலக்கிய அமைப்பு சமீபத்தில் க.நா.சுவுக்கு அவருடைய 'மயன் கவிதை'களுக்காகப் பரிசு அளித்திருக்கிறது. எழுபதை எட்டப்போகும் கநாசுவுக்கு இதுவே முதல் பரிசு என்று கூறலாம். படிப்பு முடித்து வந்த நாள் முதல் எழுத்தே பணியென்று வாழ்ந்து வரும் இவர்' என்று அசோகமித்திரனின் அந்த பத்தி எழுத்து நீளும்.

ஜூன் 1981 இல் எழுதப்பட்ட கட்டுரை. அதன் பிறகு க.நா.சு உயிரோடு வாழ்ந்தது ஏழே ஏழு ஆண்டுகள்தான். ஆக இப்படியான மனிதர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித விருதுகளும் இன்றி இளமைக்காலம் தொடக்கம் சாகும்வரை எழுதிக் கொண்டிருந்தார்கள் என்பதையும் நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.


(ஓவியம்: சின்மயா)

 

0 comments: