சில வருடங்களுக்கு முன் திருவண்ணாமலைக்குப்
போயிருந்தேன். ஒன்றிரண்டு நாட்களில் சென்னைக்குத் திரும்பி வருவதாகத்
திட்டம். திருவண்ணாமலையில் ஏதோவொன்று ஈர்த்துவிட ஐந்து நாட்களுக்கு மேலாக
அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தேன். அம்மலையை விட்டு நீங்கியபோதும்
என்றேனும் ஒருநாள் திருவண்ணாமலைக்கு வந்து நிரந்தரமாகத் தங்கிவிட
வேண்டுமென்ற இனம்புரியாத உணர்வு அப்போது அலைக்கழித்திருந்தது.
இத்தனைக்கும் ஒருநாள் ரமணாச்சிரமம், மலை மேலிருந்த விருபாஷிக குகைக்கு ஏறியது, இன்னொருநாள் கிரிவலம் சுற்றியது தவிர நான் பெரிதாக அங்கே எதுவும் செய்யவில்லை. கடைசிநாளில் சென்னைக்குத் திரும்ப பஸ்ஸேறியபோதுதான், இவ்வளவுநாள் இங்கே நின்றும் அருணாச்சலேஸ்வரர் கோயிலினுள்ளே போகவில்லை என்று நினைப்பு வந்து, உள்ளே கொஞ்சம் எட்டிப் பார்த்துவிட்டு பஸ் போயிவிடுமோ என்ற பதைபதைப்புடன் திரும்ப ஓடிவந்தேன்.
திருவண்ணாமலை எனக்கு பதின்மத்தில் பாலகுமாரன் மூலந்தான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அவர் விசிறி சாமியார் குறித்து எழுதிய அனைத்தையும் வாங்கி வாசித்திருக்கின்றேன். எனது மானசீகக் குருவாக அப்போது விசிறி சாமியார் ஆகியுமிருந்தார். உங்களின் கறைப்படாத பதின்மங்களில் ஒருவர் மிஸ்டிக்காக அறிமுகமாகும்போது அது எத்தனை இனிமையானது.
விசிறி சாமியாரைப் பற்றி அறியமுன்னர் ஊரில் இருந்தபோது என் பன்னிரண்டாவது வயதில் பாலகுமாரனின் 'கனவுகள் விற்பவன்' என்கின்ற நாவலை வாசித்திருக்கிறேன். அதில் (என் நினைவு சரியாக இருக்குமாயின்) ஒரு கிழவர் வீட்டுத்திண்ணையில் எதுவும் பேசாமல் 'நிஷ்டிக மெளனத்தில்' நீண்டகாலமாக உட்கார்ந்திருப்பார். ஆனால் அவரின் பார்வையில் சொல்லப்படுபவை எல்லாம் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டவையாக, ஒருவகை விசித்திரமான சம்பவங்களாக இருக்கும். அந்தக் கிழவர் பாத்திரம் மீது என் சிறுவயதுகளில் பயமாகவும், அதேவேளை சொல்லமுடியாத பிரியமாகவும் இருந்திருக்கின்றது.
*
இவ்வாறு சிறுவயதுகளில் சித்தர்களின் வாழ்வின் மீது தீராத வியப்பு இருந்ததால், பின்னாட்களில் அவர்கள் வந்து சேர்ந்த இந்த நாடோடிப் பாதையை அறியும் ஆவல் ஒருபோதும் தீர்ந்து விடாதிருந்தது. ஆன்மீகத்தின் சிறுதுளி தீண்ட, தமது ஊரை, வீட்டை, வசதிகளை விட்டு ஓடிப்போய் வேறொரு வாழ்க்கை வாழுபவர்களைப் பின் தொடர்கின்ற ஒரு புனைவாக யுவன் சந்திரசேகரின் 'வெளியேற்றம்' இருக்கின்றது.
சந்தானம்
என்பவர் வேலையின் நிமித்தம் திருவண்ணாமலைக்குப் போகின்றார். அங்கே
தற்செயலாக கண்பதி என்பவரைச் சந்திக்கின்றார். அந்தக் கணபதி அவருக்குக்
காட்டும் திசைகளில் தொலைகின்ற சந்தானம், பல்வேறு மனிதர்களைத் தேடிப்
போகின்றார். அவர்கள் அனைவரையும் இணைக்கும் புள்ளியாக பெரியவர் வேதமூர்த்தி
இருக்கின்றார். வேதமூர்த்தியால 'ஆட்கொள்ளப்பட்ட' பல்வேறு வகை மனிதர்களைச்
சந்தானம் சந்திக்க ஒவ்வொரு ஊர் ஊராக அலையத் தொடங்குகின்றார்.

அப்படி சந்தானம் சந்திக்கும் தங்கம், ஹரிஹர சுப்பிரமணியம், மன்னாதி, சிவராமன், ராமலிங்கம், பால்பாண்டி, குற்றாலிங்கம்,வைரவன், கோவர்த்தனம்,ஜய்ராம் என்ற எண்ணற்ற மனிதர்களின் வீட்டை விட்டு வெளியேறிய கதைகள் சொல்லப்படுகின்றன.
இதில் சிலர் திருமணம் செய்திருக்கின்றனர், சிலர் திருமணம் செய்யாதவர்களாக இருக்கின்றார்கள். சிலருக்குப் பெரியவர் தீட்சை கொடுத்திருக்கின்றார், சிலருக்குப் பெரியவர் தீட்சை கொடுக்காதிருக்கின்றார். ஆனால் அனைவருக்கும் பெரியவரைச் சந்திக்க முன்னர் ஒரு வாழ்வு இருந்தபோதும், பெரியவரைக் கண்டபின் அவர்களின் வாழ்வு முற்றிலும் வேறுவிதமாக மாறிவிடுகின்றது. சிலர் பின்னர் இல்லறத்தில் புகுந்தாலும், எவரும் தமது சொந்த ஊருக்குத் திரும்புவதுமில்லை என்பதை நாவலின் பிற்பகுதியில் கண்டுகொள்கின்றோம். ஆக நாம் நமது ஊர் என்று இறுக்கப் பற்றிக்கொண்டிருப்ப்பதெல்லாம் ஒருவகையான மிகை கற்பனைதானோ என்று இந்தப் புதினம் யோசிக்க வைக்கின்றது.
இவர்களின் அனைவருமே பெரியவரோடு ஒருகட்டத்தில் சேர்ந்து அலைந்திருக்கின்றனர். சிலரைப் பெரியவர் இந்த இடத்திலே ஒரு புதிய வாழ்வை ஆரம்பியுங்கள் என்று இடைநடுவில் விட்டுவிட்டுச் சென்றிருக்கின்றார். சிலரைத் தன்னோடு நிறைய வருடங்கள் அலைய வைத்திருக்கின்றார். ஆனால் இத்தனைக்கும் பெரியவர் மற்றச்சாமியர்கள் செய்வது போல ஒரு ஆச்சிரமத்தை அமைத்து அங்கே உட்கார்ந்து 'அருள்பாலிப்பவரோ, ஓரிடத்தில் தரித்து நிற்பவரோ இல்லை. பெரியவரின் தனித்தன்மையே அலைந்தபடி இருப்பதுதான். பலரை அவரின் அந்த அலைச்சலில்தான், சீடர்கள் என்றறியாமலே அவரின் சீடர்களுமாக்கியிருக்கின்றார்.
இத்தனைக்கும் சந்தானம் இப்படி பெரியவரால் 'ஆட்கொள்ளப்பட்ட'வர்களைத் தேடிப் போகும்போது, அவர்களில் பலருக்குப் பெரியவருக்கு இத்தனைபேர் சீடர்களாக இருக்கின்றார்களா என்பது கூடத் தெரியாது. அது சந்தானத்துக்கு இன்னும் வியப்பாக இருக்கின்றது. இறுதியில் பெரியவர் தனக்கான வாழ்வின் இறுதியைத் தெரிவு செய்யும் கட்டம் சொல்லப்படுகின்றது.
இத்தனைகால பெரியவரின் வாழ்க்கையில், பெரியவரை நேசிப்பவரைப்போல, அவரின் சீடர்கள் சிலர் அவரின் இறுதி முடிவை விமர்சிக்கின்றவர்களாகவும் இருக்கின்றார்கள். அது பெரியவருக்குத் தெரிகின்றது. அவர்கள் தன்னைத் தேடி காசிக்கு வரப்போவதில்லை என்பதையும் அவர் முன்னரே அறிந்துகொள்கின்றார்.
*
திருவண்ணாமலையில் ஒரு வேலைக்காக வந்த சந்தானம், கண்பதி என்பவரால் 'அருட்டப்பட்டு, எல்லாவற்றையும் கைவிட்டு, இப்படி பெரியவரின் சீடர்கள் ஒவ்வொருவராகத் தேடித் தேடி இறுதியில் காசிக்குப் போகும்வரை எதோ 'ஒன்றால்' ஆட்படுகின்றார். வேலையின் நிமித்தம் திருவண்ணாமலை போனவர் எங்கே சட்டென்று காணாமற்போய்விட்டாரே என்று அவரது மனைவி சித்ராவும், குடும்பத்தினரும் சந்தானத்தைத் தேடி அலைகின்றனர். காசியில் பெரியவர் சிதை சிங்கூர் கட்டில் எரியும்போது சந்தானம் என்ன முடிவை எடுக்கின்றார் என்பதை நாம் இந்த நாவலில் இறுதியில் கண்டுகொள்கின்றோம்.
வெவ்வேறு ஊர்கள், வெவ்வேறு சாதியப் பின்னணிகள், வெவ்வேறு சம்பவங்களினூடாக வீட்டைத் துறப்பவர்களை ஒரு மாலையில் கட்டிய முத்துக்களாக யுவன் சித்தரிக்கும் விதம் அலாதியானது. அதுவும் அவர்கள் வீட்டை விட்டு விலகும் பின்னணிச் சம்பவங்களைச் சொல்லிவிட்டு, பிற்பகுதியில் அவர்கள் அந்த பெரியவரின் அருளால்/அருட்டலால், இப்போது என்னவாக இருக்கின்றார்கள் என்பதை அவர்களின் பெயர்களிட்ட ஒவ்வொரு அத்தியாயங்களில் எழுதிச் செல்வது நுட்பமான எழுத்து வகை எனத் துணிந்து சொல்லலாம்.
*
இப்போது 500/600 பக்கங்களுள்ள நாவல்கள் என்றாலே ஒருவித அலுப்பு வாசிப்பில் வந்துவிடுகின்றது. கடந்த வருட சென்னைப் புத்தகக்கண்காட்சியில் இப்படி மூன்றுக்கு மேற்பட்ட பெரிய நாவல்களை வாங்கிவிட்டு அவற்றைப் பார்க்கும்போதெல்லாம் வாசித்து முடிக்காத குற்றவுணர்வை அவை ஏற்படுத்துகின்றன. யுவனின் இந்த நாவல் கிட்டத்தட்ட 500 பக்கங்கள் வருபவை. ஆனால் சுவாரசியமாக வாசித்துப் பார்க்க எனக்குள் இயல்பாக இருக்கும் அலைய விரும்பும் நாடோடிமனது இதற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடுமென நினைக்கின்றேன்.
ஆனால் இதன் இன்னொரு சிறப்பையும் குறிப்பிட வேண்டும். இதை 'ஒரே மூச்சில்' வாசித்துவிடாது, மிக ஆறுதலாகவே வாசித்து முடித்தேன். ஒருவகையில் இதை slow burner எனச் சொல்லலாமென நினைக்கின்றேன். மேலும் யுவனின் எழுத்துக்கே உரிய தனித்துவமான 'எல்லாவற்றையும் சொல்லிவிடும்' எத்தனம் இல்லாது பல இடைவெளிகள் வாசகருக்காக விடப்பட்டிருப்பதும், பெரும்பாலான கதைகள் சட்டென்று தொடங்கிவிடுவதும் எனக்குப் பிடித்தமாக இருக்கின்றது.
இதையேன் குறிப்பிட்டுச் சொல்கின்றேன் என்றால், சில மாதங்களுக்கு வெளியான ஒரு நாவலை வாசிக்கத் தொடங்கியிருந்தேன் (நாவலின் பெயர் வேண்டாம்). அந்த நாவல் அவ்வளவு வேகமாக நகர்கின்ற நாவல். அது ஒரு பிரச்சினையில்லை. ஆனால் நாவலே பெருத்த குரலில் அலறுகின்ற மாதிரி எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டு போய்க் கொண்டிருந்தது. அதனால் ஏதோ புள்ளியில் எனக்கு அது சுவாரசியமற்றுப் போயிருந்தது. அன்பான எழுத்தாளரே நீங்கள் கொஞ்சம் பேசாமல் அந்தப் பாத்திரங்களையும் சற்று அமைதியாக இருக்க விடுங்களேன் என்று கெஞ்சிக்கூடப் பார்த்தேன். அவரோ இல்லை அது என்னால் முடியாதென்று கதையை 'எக்ஸ்பிரஸ்' வேகத்தில் 'சளசள'வென்று சொல்லிக் கொண்டு போகத்தொடங்கினார், எனக்கு வேறு வழியின்றி அதை வாசிப்பில் இடைநடுவில் விலத்தி வைத்திருந்தேன். அந்தவகை கஷ்டத்தையெல்லாம் யுவன் தரவில்லை. அப்படித் தராததாலேயே மிக மெதுவாக இரசித்து இரசித்து வாசித்தேன். ஒரு சிறு குறையாக எனக்குப் பிடித்த திருவண்ணாமலைச் சூழலை இன்னும் விபரமாக விவரித்து ஒருசில அத்தியாயங்களாகவது யுவன் இதில் எழுதியிருக்கலாமே என்று மட்டும் நினைத்தேன்.
இப்படி 'வெளியேற்றம்' போல நான் வாசித்த இன்னொரு நாவலும் இப்போது நினைவுக்கு வருகின்றது (அதன் பெயரும் வேண்டாம்). அதுவும் இப்படி வீட்டை விட்டு ஓடிப்போகின்ற ஒருவனின் கதை. அது சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தபோது பலரால் முக்கிய நாவலெனக் கவனப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதை வாசித்தபோது என்னை அவ்வளவாகக் கவரவில்லை. ஏனோ அது ஓடிப்போனவனின் அகவுலகத்துக்குள் போகாது புறவயமாக வாசகரோடு ஒட்டாத மொழியில் கதையைச் சொல்லிப்போந்தது என்னளவில் ஏமாற்றமாக இருந்தது.
மேலும் யுவனின் ஒவ்வொரு நாவல்களை வாசிக்கும்போதும் அவருக்கு நெருக்கமான (அவர் நிறைய மொழிபெயர்த்த) ஸென்னின் வாசம்/பாதிப்பு புனைவில் வருகின்றதா எனத் தேடியபடி இருப்பேன். ஸென்னின் தூவல்களை மிக அற்புதமாக அது ஸென் என்றே அறியாதவளவுக்கு 'வெளியேற்றத்தில்' பாவித்திருப்பது எனக்கு இந்த நாவலை இன்னும் நெருக்கமாக்கிக்கொள்ள முடிந்திருந்தது .
ஒரு படைப்பாளியின் அதிசிறந்த படைப்பு என்பது வாசகருக்கு வாசகர் வேறுபடும். எத்தனை நல்ல நாவல்கள் இருந்தாலும் என்னைப் பொருத்தவரை அசோகமித்திரனின் சிறந்த நாவல், பலரால் கவனிக்கப்படாத அவரின் 'ஒற்றன்'. அதுபோல யுவனின் 'பகடையாட்டத்தை' அவரின் சிறந்த படைப்பாக பலர் சொல்லியிருக்கின்றார்கள். ஆனால் எனக்கென்னவோ இதுவரை நான் வாசித்த யுவனின் நாவல்களில் 'வெளியேற்றத்தை'யே அவரின் சிறந்த படைப்பாக என் வாசிப்பில் முன்வைக்கலாம் போலத் தோன்றுகின்றது..
***

0 comments:
Post a Comment