விபாஸனாவைப் பற்றி இதுவரை சற்று நகைச்சுவையாக எழுதிக்
கொண்டிருந்தாலும், உண்மையிலே மிகத் தீவிரமான நிலையிலே அனைவரும் கற்றுக்
கொண்டிருந்தோம். என்னை விட மிக இளைய, இருபது வயது இளைஞர்கள் நிறையப் பேர்
வந்திருந்து, GenZ என்றாலே இந்த விடயங்களுக்கு அப்பால் இருப்பவர்கள் என்ற
பலரின் பொது அபிப்பிராயத்தை மாற்றியிருந்தார்கள்.
இப்படி தீவிரச் சூழலில் தியானம் பழகுவது எனக்கு இன்னொருவிதத்தில் பிடித்திருந்தது. எமக்குள் இருக்குள் madness/weird ஆன விடயங்களை வெளிக்காட்டினால் யார் நம்மை எடைபோடுவார்கள் (judge) என்ற பிரக்ஞை இல்லாது அனைவரும் நம் இயல்பில் இருந்திருக்கின்றோம்.

என்னைப்
போன்று மரங்களை கட்டிப் பிடிக்கும் ஒருவர் எவர் அந்தப் பக்கம்
நடந்துவருகின்றார் என்ற கவலையில்லாது ஒரு காதலியைப் போல அவ்வளவு ஆதரத்துடன்
மரத்தைக் கட்டிப்பிடித்தார். நல்ல காலை இளவெயில் வருகின்றபோது சிலர் கையை
விரித்து அப்படியே சூரியஒளியை கண்ணை மூடி உள்வாங்கிக் கொண்டனர்.
நான் அவ்வப்போது சிறுகாட்டுக்குள் நடக்கும்போது சூரியஒளியில் மென்பச்சையாக ஒளிரும் மரங்களைப் பார்த்து 'ஏதோ என் காதலில் எனக்கு மரங்களுக்கிடையில் தரிசனம் தருகின்றார்' போல நின்று நிதானித்து மூச்சை நன்கு இழுத்து எவர் அருகில் வருவார் என்ற கவலையில்லாது இரசித்திருக்கின்றேன்.
இவ்வாறான விடயங்களை வெளியேயுள்ள பொதுச்சூழலில் நாம் செய்தால், பிறர் வித்தியாசமாக எங்களைப் பார்த்திருப்பார்கள். ஆனால் விபாஸானச் சூழலில் ஒவ்வொருவரின் so called weirdness ஐ நாம் மிக இயல்பாக எடுத்துக் கொண்டோம் எனத்தான் சொல்ல வேண்டும்.
*
நகுலன் தனது 'நினைவுப்பாதை' நாவலில், ஒவ்வொரு எழுத்தாளரும் வருடத்தில் ஒரு மாதமாவது உளவியல் சிகிச்சை நிலையங்களில் தங்கவேண்டும் என்று எழுதியிருப்பார். அவ்வாறான ஒரு உளவியல் மையத்தில்தான் நாவலில் வரும் நவீனனுக்கும், இன்னொரு எழுத்தாளரான நாயருக்கும் இடையில் உரையாடல் நிகழ்கின்றது.
'நிறுத்தாதீர்கள், அப்படியே தொடர்ந்து பேசுங்கள்' என நாயர் சொல்லச் சொல்ல நவீனன் மடைதிறந்ததைப் போலப் பேசுவது, ஒரு படைபாளியின் ஆழ்மனதை அப்படியே வெளிப்படையாக முன்வைக்கும் இடங்கள். அதில் ஓரிடத்தில் 'அவனுக்கு அப்பொழுது தன் ஒவ்வொரு நாவலை எழுதி முடித்த பிறகும் பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலிருந்து விடுதலை பெற்று வீடு திரும்புவது போல்தானே என்று ஒரு உணர்ச்சி தோன்றியது' எனச் சொல்லப்படும்.
நகுலன் இன்றிருந்தால் நவீனனை மனநோயாளர் விடுதிக்கு அல்ல, இவ்வாறான விபாஸனா நிலையத்துக்கு அழைத்துச் செல்லுங்கள் என நகுலனிடம் நான் சொல்லியிருப்பேன். என்ன இங்கே வாய்விட்டுப் பேச முடியாது, நாம் மனம் திறந்து பேசவேண்டியதை எல்லாம் மனதுக்குள் இந்த 10 நாட்களுக்குள் பேசித் தீர்த்திருப்போம்.
அதுவும் படைப்பாளியாக சாதாரண மனிதர்களை விட மூளை இன்னும் அதிகமாக பேசிக்கொண்டிருக்கும் ஒருவருக்கு விபாஸனா போன்ற ஒன்று அவர்களின் மனதை நிதானித்துப் பார்க்க வைக்கும் என்று நம்புகின்றேன். ஆக, 'ஒவ்வொரு எழுத்தாளரும் வருடத்தில் ஒரு மாதமாவது உளவியல் சிகிச்சை நிலையங்களில் தங்கவேண்டும்' என்று கூறுகின்ற நகுலனிடம், உளவியல் சிகிச்சை நிலையத்துக்குப் பதிலாக விபாஸனா நிலையத்துக்கு செல்ல எழுத்தாளர்களுக்குச் சொல்லுங்கள் என நான் சொல்லுவேன்.
*
விபாஸானாவில் இருந்தபோது எனக்குள் எண்ணங்கள் வந்து குவியும் வேகம் குறைந்திருப்பதைக் கண்டேன். அதாவது எவ்வளவு யோசித்தால் கூட, ஒரு எல்லைக்கு அப்பால் என் எண்ணங்கள் விரிவடைந்து செல்லாது இருப்பதை அவதானித்தேன். அலைபேசியைப் பார்க்காது, வெளியுலகத்தில் நடப்பதை அறியாது, சக மனிதர்களோடு பேசாது என்று பல காரணிகள் இதற்குக் காரணமாயிருக்கலாம். ஆனால் அது எனக்கு மிகப் பிடித்திருந்தது.
சில விடயங்கள் அல்லது சில மனிதர்களின் நினைவுகள் மட்டும் வலுவாக அவ்வப்போது எனக்குள் வரும். ஒருமுறை சிறுகாட்டில் உலாப் போனபோது யாழ்ப்பாணத்தில் வசிக்கும் எனது நண்பரான வடகோவை வரதராஜனின் நினைவுகள் தொடர்ந்து பின் தொடர்ந்து வருவதைப் பார்த்தேன். நான் அவருடன் நட்பாகத் பழகத் தொடங்கிய இந்தச் சில வருடங்களில் அவர் நெருங்கிய உறவுகளின் பெரும் இழப்புக்களைச் சந்தித்திருக்கின்றார். அவர் பிள்ளைகளுக்கென செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன, அப்படி இருந்தும் அவர் மிக நிதானமாக இந்த வாழ்வை அணுகுகின்றார், பிறர் மீதோ/இப்பிரபஞ்சம் மீதோ கடும் சொற்களைப் பயன்படுத்தாதை அதிக பொழுதுகளில் அவதானித்திருக்கின்றேன்.
அவர் கடந்துகொண்டிருக்கும் துயரங்களையும், அதேவேளை அவற்றை எதிர்கொண்டு இனிய தருணங்களை அவர் தன் வாழ்வில் உருவாக்கும் மனோதிடத்தையும் யோசித்துப் பார்த்தேன். அவர் மீது சொல்லமுடியாத வாஞ்சை உருவாகி எனக்குள் பரவுவதைக் கண்டேன்.
அப்போது நான் விபாஸனா தியானத்தில் 'மெத்தா பாவனா' பழகவில்லை. அது Loving Kindness meditation. இந்த தியானத்தை நமக்கு கடைசி நாளான பத்தாவது நாளில் சொல்லித் தருகின்றார்கள். விபாஸனாவை ஒரு மணித்தியாலம் செய்தால், மெத்தா பாவனாவை ஒரு ஐந்தோ பத்தோ நிமிடங்கள் முடிவில் செய்யச் சொல்கின்றார்கள். இந்தத் தியானம் பிறர் மீது நம் அன்பையும் காருண்யத்தையும் வெளிப்படுத்துகின்ற/பகிரிந்து கொள்கின்ற தியானம்.
அதேவேளை மெத்தா பாவனா செய்யும்போது நம் மனதில் வெஞ்சினமோ, காழ்ப்போ இருந்தால் அதைச் செய்யக்கூடாது என்று ஆசிரியரான கோயிங்கா நம்மை எச்சரிக்கின்றார். நீங்கள் அமைதியாக, கோபமின்றி இருந்தால் மட்டுமே நீங்கள் பிறருக்கு அன்பையோ கருணையையோ தியானத்தின் மூலம் பகிர முடியும். அப்படியான நிதானமான மனோநிலை இல்லாதுவிட்டால் மெத்தா பாவனாவைக் கொஞ்ச நேரம் ஒத்திப் போட்டு ஆறுதலாக உங்களை அமைதியடைச் செய்துவிட்டு, பிறரின் பொருட்டு இதைச் செய்யுங்கள் எனச் சொல்கின்றனர்.
ஒருவகையில் நாம் நமக்குள் கோபத்தையும், வன்மத்தையும் வைத்துக்கொண்டு பிறரின் நன்மைக்காக எதைச் செய்தாலும் அதில் ஒரு துளி பயனும் இருக்கப் போவதில்லை என்பதே இதன் அர்த்தம்.
எனக்குள் இந்த 'மெத்தா பாவனா' பத்தாம் நாளில் தொடங்கமுன்னரே வடகோவையார் மீது ஒரு வித அன்பும் கருணையும் ததும்பிக் கொண்டிருந்தது. சிலவேளைகளில் சிலவற்றுக்கான காரணங்களை எளிதாக விளக்கிவிட முடியாது.
இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டு நடக்கும்போது ஒரு நுளம்பு என்னைவிடாது நான் தங்கி நின்ற அறைவரை ரீங்ரீங் என்று துரத்திக் கொண்டு வந்தது. நான் என்னையறியாமலே அதிக அன்பை வடகோவையாருக்கு வழங்கிவிட்டேன், அதனால்தான் அவர் நுளம்பாய் 'விடாது கறுப்பாய்' இப்போது என்னை பழிவாங்க கூடவே வந்து கொண்டிருக்கின்றார் என்று நினைத்தபடி அறைக்குள் போய்ச் சேர்ந்தேன்.
*
விபாஸனா பழகத் தொடங்கியபின் வரும் ஏழாம், எட்டாம், ஒன்பதாம் நாட்களில் பலர் தமது கடந்தகால உளவடுக்களின் நினைவுகள் பொங்கிப் பிராகரித்து அதை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதை இறுதி நாளன்று என்னோடு பகிர்ந்திருக்கின்றனர். எனக்கு அப்படி ஒரு ஆழ ஊடுருவிச் சென்று பார்க்கும் நிலை வந்திருக்கவில்லை அல்லது அப்படி வந்திருந்தால் கூட அதை நான் உற்று அவதானிக்கவில்லையோ தெரியவில்லை.
எனக்கு எப்போதும் சுள்ளென்று வந்துவிடும் என் கோபத்தின் ஆழவேர்களை ஆணிவேரோடு இல்லாமல் செய்யவேண்டும் என்ற விருப்பம் இருந்து கொண்டேயிருக்கும். ஒருவகையில் இந்த கோபத்தை மேற்றளத்தில் (கோயிங்காவின் வார்த்தைகளில் சொல்வதால் 'அறிவுஜீவி'த் தளத்தில்) புரிந்து கொள்ள முடிகின்றது. கோபம் உச்சமாக வந்துவிடக்கூடாது என்று எப்படி அவதானிக்க வேண்டும் என்பதற்கு நிறைய வாசித்து/அறிந்து வைத்திருந்தாலும், கோபம் வரும்போது அதை அந்தக் கணத்தில் உணரும் சமநிலையை ஒருபோதும் நான் கண்டடைந்ததில்லை.
சிலவேளைகளில் இந்தக் கோபத்துக்கான trauma என் சிறுவயது போர் அனுபவங்களுக்குள் நடந்து அதைச் சரியாக அன்றைய பொழுது கவனிக்காமல் கடந்துவிட்டேனே என்று கூட யோசிப்பதுண்டு. அல்லது எனது பெற்றோர் அல்லது அவர்களின் சந்ததியினரால் இந்தத் தீர்க்கமுடியாக் கோபக் கொந்தளிப்பு' ஏதோ ஒருவகையில் எனக்குள் கடந்தப்பட்டிருக்கலாமோ என்றும் நினைப்பதுண்டு. எதுவாயினும் அதை நான் நேரடியாகச் சந்தித்து மாற்றியமைக்காவிட்டால் எவ்விதப் பலனும் இருக்கப்போவதில்லை. எனவே நான் என் கோபத்தின் அடிவேர் வரை ஆழப்போக முடியுமா என்று அவ்வப்போது விபாஸனாவின்போது நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் ஏதோ ஒரு தருணத்தில் வேறொரு விடயம் எனக்குள் குவிந்து மலர்ந்தது. அது ஒரு பெண் மீதான பெரும் நன்றியுணர்வு. என் காதல் வாழ்வில் நீண்ட காலம் இருந்த உறவு அது. அவருக்கு அது முதல் காதல் (எனத்தான் நினைக்கின்றேன்). எனக்கோ அது ஒரு பெண்ணோடு அருகருகில் வாழும் முதல் தீவிர காதல் உறவு. நாம் வெவ்வேறு சூழ்நிலைகளால் பிரிந்து இப்போது 10 வருடங்களுக்கு மேலாகி விட்டது.
விபாஸனாவில் இருந்தபோது அவர் மீதான சிறு கசப்பும் இனி என் வாழ்வில் அவரை நினைக்கும்போது எழக்கூடாதென்று எண்ணம் தீவிரமாக வரத் தொடங்கியது. அதற்காக இதுவரை அவரோடு வெறுப்புடன் இருக்கின்றேன் என்றெல்லாம் அர்த்தம் இல்லை. ஆனால் இனி அவர் குறித்து எந்த எண்ணம் எனக்குள் எழுந்தாலும் அதில் சிறுதுளி கசப்போ வெறுப்போ அவர் சார்ந்து தீண்டிவிடக்கூடாது என்று மனம் தெளிவடைந்து கொண்டது. இனி கருணையால் மட்டுமே நிறைந்தது அவர் குறித்த நினைவுகள் என்று ஒரு தீர்க்கம் எனக்குள் முகிழத் தொடங்கியது.
***

0 comments:
Post a Comment