'டோரதி' திரைப்படம் குறித்து பலர் விரிவாக எழுதிவிட்டதால் அது குறித்து பேசப் போவதில்லை. இந்தத் திரைப்படத்தை ஒரு முக்கிய திரைப்படமாக அங்கீகரித்து அதேவேளை அதன் மீது காத்திரமான விமர்சனங்களை முன்வைக்கும் தருமராஜ்ஜினதும், பிரபாகரினதும் பதிவுகளை வாசிக்க நண்பர்களைப் பரிந்துரைக்கின்றேன்.
இப்போது 'டோரதி' திரைப்படம் குறித்து பேசப்படுவதால் இதே பின்னணியில் எட்டு வருடங்களுக்கு முன் கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ் நெறியாளாரான லெனின் எம். சிவத்தின் 'ரூபா' (Roobha) படத்தை நினைவுபடுத்த வேண்டியிருக்கின்றது.
'ரூபா'வின் கதை புலம்பெயர்ந்த சூழலில் நடைபெறுவது. கனடாவில் வாழ்கின்ற ஒரு தமிழர் ஒரு பார் வைத்திருக்கின்றார். அவர் ஒரு குடும்பஸ்தர் - மனைவியும் பிள்ளையும் இருக்கின்றனர். மிகை குடியாலும், புகைபிடிப்பதாலும் வாழ்வை அழித்துக் கொண்டவர். கிட்டத்தட்ட அவரின் வாழ்வு நோயின் நிமித்தம் ஆபத்தான நிலைக்குப் போகின்றபோது ரூபா என்கின்ற அழகிய பெண்ணை அவரது சொந்த பாரில் வைத்துச் சந்திக்கின்றார்; காதலில்/காமத்தில் வீழ்கிறார்.
ஒரு மோட்டலுக்கு (?) அப்'பெண்ணை' அழைத்துச் செல்லும்போதே அவர் ஒரு திருநங்கை என்று கண்டுகொள்கிறார். இதில் இரண்டு வகை கதை சொல்லப்பட்டிருக்கின்றது. ஒரு தமிழ் குடும்பஸ்தவனின் பார்வையில் ஒன்று. மற்றொன்று ரூபா என்கின்ற திருநங்கை கடந்துவந்த பாதை. அவர் மும்பாயில் பிறந்து பெற்றோரால் அவரின் பாலினம் அங்கீகரிக்கப்படாத சூழ்நிலையில் வீட்டை விட்டு வெளியேறி அவர்களின் தெய்வமான மார்தாவின் முன் குறியறுக்கும் காட்சி மட்டுமில்லை, அந்தத் தெய்வமே ஒரு தொன்மமாக ரூபா படத்தில் தொடக்கத்திலிருந்து வருவதாகக் காட்டப்படுகின்றது.
ஒருவகையில் தருமராஜ் முன்வைக்கும் பால்புதுமையினரின் பிரச்சினைகளை, ஆணாதிக்கத்தின்/ ஆணவக்கொலை/சாதிப்பெருமிதங்களின் பின்னணியில் வைத்து டோரதியில் திரைப்படமாக்கியது சரியா என்ற கேள்வியை ரூபாவின் மீதும் முன்வைத்துப் பார்க்க முடியும்.
ரூபா இயன்றளவு அதை திருநங்கைகளின் தனித்த பிரச்சினையாக முன்வைத்துப் பேசுகின்றது எனச் சொல்லலாம். ரூபா மீதும் நாம் அந்தக்காலத்தில் விமர்சனங்களை முன்வைத்திருந்தோம் என்பது வேறுவிடயம்.
முக்கியமாக ஓர் அசலான திருநங்கையை நடிக்க வைக்காமல் ஏன் ஒரு ஆணை எப்படி (இது டோரதிக்கும் பொருந்தும்) திருநங்கையாக நடிக்க வைப்பது என்பது என்னைப் போன்றவர்கள் நெறியாளரிடம் கேட்ட/கேட்க விரும்பிய கேள்வி. தனிப்பட்டு லெனின் நண்பர் என்பதால், அவர் அப்போது ஒரு தமிழ் திருநங்கை நடிகையாக கிடைக்கவில்லை என்றும், அதன் பின்னரே நடிகர்களான தனுஜா போன்ற திருநங்கைகள் பொதுச்சூழலில் தங்களை வெளிப்படையாக அறிவித்து இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை அறிந்ததாகவும் சொன்னது ஞாபகம்.
இப்போது நண்பர்களாக இருப்பவர்களின் படைப்புக்களைப் பற்றி எதைச் சொல்லவும் பயமாக இருக்கின்றதெனினும், லெனின் தனது புதுப்படத்துக்கான திரைக்கதையையும் அண்மையில் அனுப்பி வாசித்துக் கருத்துக்களை கேட்கும் நல்லதொரு நண்பர் என்பதால் இப்போது இதையெல்லாம் கிண்டிக் கிளறுவதால் மற்றவர்கள் போல கோபித்துக் கொள்ளமாட்டார் என்று நம்புகின்றேன் (Disclaimer முக்கியம்).
அதேவேளை லெனின், ரூபா திரைப்படம் வந்தபோது எமது தமிழ் புலம்பெயர்ந்த சமூகத்துக்கு மட்டுமில்லை, தனக்குமே திருநங்கைகள் குறித்த ஆழமான புரிதல் தொடக்க காலத்தில் இருந்ததில்லை என்பதை தனது நேர்காணல்களில் தொடர்ச்சியாக நினைவுபடுத்திக் கொண்டிருந்தவர் என்பதாகவும் நினைவிருக்கிறது.
*
ஆக டோரதிக்கு முன்னரே ரூபா என்கின்ற திருநங்கைகளை பின்னணியாக வைத்து ஒரு முழுநீளப்படம் வந்திருக்கின்றது என்பதை நம் தமிழ்ச்சமூகத்துக்கு நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. அதில் வைக்கப்பட்ட காம/முயக்க காட்சிகளில் கூட லெனின் எவ்வித சமரசத்துக்கும் வரவில்லை என்றாலும், ஆனால் அவ்வாறான காட்சிகளை ஏற்றுக்கொள்ள புலம்பெயர்ந்த தமிழ்ப் பொதுச்சமூகம் இன்னும் தயாராக இருக்கவில்லை என்றும் தனிப்பட்ட பேச்சில் லெனின் சொல்லியிருந்தது ஞாபகம். அதன் நிமித்தம் 'ரூபா' ஒருவகை மெளனத்தால் நம்சூழலில் நிராகரிக்கப்பட்டும் இருக்கும் என்பது என் பார்வை.
இதே பின்னணியில் இப்போது வந்த டோரதி, ரூபா போலவன்றி பொதுச்சமூகத்தை கவனத்தில் கொண்டு அல்லது கார்த்திக் சுப்புராஜ்ஜின் வார்தைகளில் சொல்வதனால் 'கமர்ஷியலாக' இதை ஆக்குவதைத் தொடக்கத்திலிருந்தே தீவிர யோசித்தே திரைக்கதை அமைத்தேன் என்று சொல்கின்றார். அதனால்தான் படத்தில் இடைவெளிவரை ஓர் ஆண் திருநங்கையாக மாறுவதன் மாற்றங்கள் துளிகூடக் காட்டவில்லை. பிறகு பிளாஷ்பேக்கில் மட்டும் டோரதியோடு பழகும்போது அவர் அந்த அடக்கிவைக்கப்பட்ட ஆண் உடலிலிருந்து வெளியேற முயலும் ஒருவராகக் காட்சிப்படுத்தப்படுகின்றார்.
அசல் வாழ்க்கையில், ஒரு ஆணைச் சிறுவயதில் தெரிந்த அவரின் நண்பரான கார்த்தி இந்த மாற்றங்களை எளிதில் கண்டடைந்திருப்பார். ஏனெனில் கார்த்தி மட்டுமே சுப்புவோடு தொடர்ந்து அருகில் இருப்பவர். டோரதி கூட பிறகுதான் வருகின்றவர். இது ஒரு அசலான திருநங்கையின் வாழ்வைத் தேடும் இரசிகருக்கு நெருடலாக இருக்கக்கூடும். ஆனால் இது அனைவரையும் கவரும் திரைப்படமாக வேண்டிய கட்டாயம் இருப்பதில் இடைவேளை வரை மூடிமறைக்கப்படும் இந்த சமரசங்களும் புரிந்து கொள்ளக்கூடியதே.
இதை ரூபாவில் லெனின் எளிதாகத் தாண்டியிருப்பார். ஏனெனில் கதையே ஒரு பெண்ணாக மாறிவிட்ட திருநங்கையைச் சந்திப்பதுடந்தான் தொடங்குகின்றது. அங்கிருந்துதான் கதை, அந்தப் பெண் ஒரு திருநங்கை என்று அறியப்படும்போது நனவிடைதோய்தலுக்குப் போகின்றது. டோரதியிலோ இதற்கு மாறாக சிறுவயதிகளில் இருந்து இரண்டு நண்பர்களின் கதை என்கின்ற ஒரு நேர்கோட்டுத் தன்மையில் இடைவேளைவரை கதை போகின்றது.
இப்போது இந்த இரண்டு திரைப்படங்களைப் பற்றிப் பேசுவது/விமர்சிப்பது என்பது கூட அவற்றிற்கான முக்கியத்துவத்தை அங்கீகரித்து, அவை நம் தமிழ்சூழலில் கவனிக்கத்தக்க படைப்புக்கள் என்பதாலே அன்றி, Queer சமூகம் மீது வெறுப்பும் வசையும் கொண்ட கூட்டத்திற்கு நம் விமர்சனங்கள் ஒருதுளியும் துரும்பாகப் போய்விடக்கூடாது என்ற கவனத்தோடு நாமெல்லோரும் உரையாட விரும்புகின்றோம் என்பதையும் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன்.
***


0 comments:
Post a Comment