கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மைத்ரேயி ராமகிருஷ்ணனும், தமிழ் அடையாள அரசியலும்..

Monday, October 26, 2026

 

Art is Political என்பது பிரபல்யமான ஒரு வாசகம். எழுத்தின் மீது ஆர்வம் வந்த தொடக்ககாலங்களில் நான் விவாதக் களங்களில் உரையாடுகையில் கலையிலும் அரசியல் இருக்கிறது என்றபோது ஓர் எழுத்தாளர் அப்படி இல்லை என்று மறுத்துக் கொண்டிருந்தார். அரசியல் என்பதை தமிழகத்துச் சூழலில் வைத்துப் பார்க்கும் மேலோட்டமான அவரது பலவீனமான பார்வையது. இதை மிக எளிதாகப் புரிந்து கொள்ள பிக்காஸோவின் 'குவானிக்கா' ஓவியத்தின் பின்புலத்தை அறிந்துகொண்டாலே போதும். என்னைப் போன்று ஈழத்தில் பிறந்தவர்க்கு கலையென்பது எதுவென்று அறிமுகமாக முன்னரே அரசியலுக்கும் வன்முறைக்கும் இடையில் எப்படித் தப்பிப் பிழைப்பது என்பது கற்றுத் தரப்பட்டிருந்தது.


ஆகவேதான் எங்கள் ஈழத்துக் கவிஞரான செழியனின் 'கரித்துண்டாயினும் எழுதி முடிப்போம்' என்ற கவிதைவரிகள் எங்களுக்கு அவ்வளவு நெருக்கமாக இருந்தது. கல்வெட்டுக்களில் தமது வரலாற்றை எழுதிய தமிழர்களிடையே 'கரித்துண்டாயினும் எழுதுவோம்' என்பதே எத்தகைய அறைகூவல்.


கரித்துண்டில் எழுதுவது நிலைத்து நிற்கப்போவது குறுகிய காலமே, ஆனாலும் அமைதியாக இருக்காது கிடைக்கும் கரித்துண்டிலும் எம் வரலாற்றை எழுதியே சாவோம் என்பது போருக்குள் வாழ்ந்தவர்க்கும்/மடிந்தவர்க்கும் நன்கு தெரியும்.

இத்தகைய பின்னணியில் வந்த நமக்கு வரும் அடுத்த தலைமுறையும் அதே அரசியல் தெளிவோடுதானே வந்து சேரும். அப்படி வராவிட்டால்தான் நாம் யோசிக்க வேண்டும். கலையில் முதன்முதலாக நம்மிடையே மாயா அருட்பிரகாசம் (M.I.A) தெளிவாக அரசியல் பேசினார். அவரைத் தொடர்ந்து பல  கலைஞர்கள் பொதுச்சமூகத்திற்குள் வந்தபடி இருக்கின்றார்கள். தமது அடையாளத்தைத் தெளிவாக வைத்து தமது பெற்றோர்கள் எதன் நிமித்தம் புலம்பெயர்ந்தார்கள் என்பதை உலகெங்கும் இருந்தபடி இவர்கள் சொல்லியபடி இருக்கின்றார்கள்.

நாம் வாழ்ந்த நிலத்தை, நமது உறவுகளை, ஏன் நமது சொந்த மொழியைக் கூட யாரும் அதிகாரத்தின் மூலம் சிதைக்கலாம். ஆனால் அடையாளத்தை, அது சுமந்து வரும் கலாசாரத்தை/பண்பாட்டை அவ்வளவு எளிதாக எவராலும் அழிக்க முடியாது. ஒருவகையில் அதிகாரத்தின் முன் திமிராக வலிமையாக நிற்க ஆயுதங்களை விட கலையால்  முடியும் என்று சொல்வதும் இதைத்தான். ஆகவேதான் எட்வேர்ட் சயிட் பாலஸ்தீனத்துக்குப் போய் இஸ்ரேல் பக்கம் நோக்கி கல்லெறிந்து காட்டியவர். பால்ஸ்தீனத்து பெருங்கவி மஹ்மூத் தர்விஷ் 'எனக்கு இப்போது இரண்டு மொழிகள், எந்த மொழியில் என் கனவுகள் வருகின்றதோ தெரியவில்லை' என்றவர். இது சொந்த நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த நம் எல்லோருக்கும் உள்ள அடையாளச் சிக்கல்தான். இந்த அடையாளச் சிக்கல்களிலிருந்து தப்ப நமக்கு முன்னால் இருப்பது கலைகள்.

*
இப்போது கனடாவில் வசிக்கும் ஈழப்பெண்ணான மைத்ரேயி இராமகிருஷ்ணன் நடித்த 'Best of Best' வெளிவந்திருக்கின்றது.  Netflix இல் பார்க்க முடியும்.

மைத்ரேயி   'Never Have I Ever' சீரிஸில் நடித்ததன் மூலம் பெரும் புகழ் பெற்றவர். அப்போது அவருக்கு வயது 17. அந்த வயதிலே தெளிவாக தன்னை இலங்கையர் என்று சொல்வதை நிராகரித்து தன்னையொரு தமிழ்க் கனடியனாகச் சொன்னவர். அப்போதும் இந்த அடையாள முன்னெடுப்புக் குறித்து ஒரு சர்ச்சை வந்து அது குறித்து நான் ஒரு கட்டுரை எழுதியதாக நினைவு.

என்னைப் போன்ற புலம்பெயர்ந்த அனைவருமே தமிழ்க் கனடியர்கள் என்றே அழைத்துக் கொள்வதுண்டு. நானாவது பரவாயில்லை இலங்கையில் பிறந்தவன். இங்கே பிறந்த முதல் தலைமுறை ஏன் தம்மை இலங்கையர்கள் என்று சொல்லப் போகின்றார்கள். முக்கியமாக அவர்களின் பெற்றோர் அங்கு ஒடுக்கப்பட்ட நிலையில் உயிர்தப்பி கனடா போன்ற மேற்கத்தைய நாடுகளுக்கு வந்தபின் எப்படி தம்மை இலங்கையர்கள் என்று சொல்வதில் அவர்கள் பெருமைப்படப் போகின்றார்கள்.

இங்கே பிறந்த பிள்ளைகள் கனடியர்கள். பிறகு அவர்கள் (விரும்பினால்) தமது பெற்றோர்களின் அடையாளத்தைச் சுமப்பார்கள். எமக்கு தமிழர் என்ற அடையாளமே போதுமானது. மேலும் தமிழ் என்ற மொழியைப் பேசுவதால் சொந்த நாட்டிலே ஒடுக்கப்பட்டதால் தமிழர்கள் என்ற அடையாளத்தைச் சுமந்து கொண்டிருக்கின்றோம். என் சொந்த அனுபவத்தில் நான் கொழும்பில் வாழ்ந்த காலத்திலே எனக்கு தமிழ் என்ற அடையாளம் இலங்கை இராணுவம்/பொலிஸால் நினைவூட்டப்பட்டுக் கொண்டிருந்தது.

ஆகவேதான் கனடாவுக்கு வந்து எழுதத் தொடங்கியபோது புனைபெயராக டிசே தமிழன் என்று எழுதத் தொடங்கினேன். அது ஒருவகையில், என் அடையாளத்தை வைத்து ஒடுக்குவாயின், அதையே எதிர்ப்பாகக் கொண்டு எமது அடையாளத்தைப் பொதுச்சூழலுக்குக் காட்டுவது. தலித்துக்கள் என்ற அடையாளத்துக்குள் ஒடுக்கப்பட்டவர்கள் ஒன்றிணைவதைப் போன்றது.

என்கின்றபோதும் என் தமிழ் அடையாளம் தனியே ஒடுக்கப்பட்டதாக மட்டுமின்றி ஒடுக்குகின்றதாகவும் இருப்பது தெரிந்தபோது 'தமிழன்' என்ற புனைபெயரில் இருந்து என்னை விலத்திக் கொண்டேன். அது என் அனுபவத்தின்பால் வந்ததெனச் சொல்லிக் கொள்ளலாம்.

*
இப்போது மீண்டும் மைத்திரேயி ராமகிருஷ்ணனை சிங்கள இனவாதிகள் கடுமையாகத் தாக்கத் தொடங்கியிருக்கின்றனர். அதற்குக் காரணம் சில நாட்களுக்கு முன்னர் அவர் TIME சஞ்சிகைக்கு கொடுத்த நேர்காணல்.

TIME இல் நம் தமிழ்ப் பிள்ளையின் ஒரு நேர்காணல் வருவது சந்தோசம் என்றால் அதை நேர்காணல் செய்பவரும் (ராதேயன் கனடாவில் பிரபல்யம் வாய்ந்த திரை விமர்சகர்) ஈழத்தமிழராக இருப்பது எவ்வளவு பெருமைமிகு தருணம்.


அதில் மைத்ரேயி மீண்டும் தனது ஈழத்தமிழ் அடையாளத்தை வலியுறுத்தியிருக்கின்றார். இப்போது Best of Best திரைப்படத்தைப் பார்த்தவர்க்குத் தெரியும், அவர் அதிலும் ஓர் ஈழப்பெண்ணாகத்தான் நடித்திருக்கின்றார். I'm Tamil, My parents from Sri Lanka' என்று கூறியிருக்கின்றார். அப்படி பாத்திரமாக அமைந்ததற்கும் மைத்ரேயி ஒரு விளக்கத்தைச் சொல்லியிருக்கின்றார்.

தமிழர்கள் தனியே இந்தியாவில் மட்டும் இருப்பவர்கள் இல்லை.  அத்தோடு பொது அபிப்பிராயம் தென்னாசியர்கள் என்றவுடன் அவர்கள் அனைவருக்கும் இந்தி தெரியும் என்று நினைக்கின்றார்கள், அப்படி அல்ல என்பதற்காகவே தெளிவாக I'm Tamil, My parents from Sri Lanka என்று சொல்லியிருக்கின்றார்.

இப்போது இனவாத சிங்களவர்க்கு அவர் தன்னை சிறிலங்கனாக அல்லாது தமிழ் என்று குறிப்பிடுவது மட்டும் அல்ல பிரச்சினை. அவர் தன்னை ஒரு ஈழத் தமிழர் (Eelam Tamil) என்று அடையாளப்படுத்தியவுடன் சிங்கபாகு இரத்தம் கொதிக்கத் தொடங்கிவிட்டது. எனவே ஆயிரக்கணக்கில் அவரது புதுப்படத்தை மோசமான படமென IMDB/Rotten Tomatos இல் ரேட்டிங் செய்யத் தொடங்கியுள்ளார். மைத்ரேயியை ஒரு அசல் புலியெனக் காட்ட எத்தனையோவிதமான ஏஜ விளையாட்டுக்களையும் சமூகவலைத்தளங்களில் செய்து அவரது அடையாளத்தை அழிக்க முயல்கின்றனர்.

ஆக, சிங்களப் பெரும்பான்மையால் இன்றைக்கு போர் முடிந்து 17 ஆண்டுகள் முடிந்தபோதும் அவர்களால் சும்மா இருக்க முடியவில்லை. ஈழத்தமிழ் என்ற அடையாளம் அவர்களைக் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கின்றது. இந்த TIME நேர்காணலில் கூட மிகத் தெளிவாக, எந்த ஒரு பாலஸ்தீனரும் ஒருபோதும் தன்னை இஸ்ரேல் நாடோடு தொடர்புபடுத்தமாட்டார். அப்படித்தான் மைத்ரேயி போன்றவர்கள் தம்மை இலங்கையர்கள் என்று அடையாளப்படுத்துவதில்லை. ஒரு தமிழராகவே அடையாளப்படுத்துவதில் பெருமைப்படுபவர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால் இலக்கியத்தில் மட்டுமில்லை, திரையிலும் இப்படி அவசரக்குடுக்கைகள் தமக்கு எல்லாம் தெரிந்தமாதிரி படங்காட்டுவது இயல்புதானே. எந்த context இல் இவை சொல்லப்படுகின்றது என்று அறிய இவர்களுக்குப் பொறுமை இருக்குமா என்ன? ஆகவே வெறுப்பு அரசியலும், இனவாத அரசியலையும் பொதுத்தளங்களில் செய்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அவர்களுக்குப் புரியாதது, ஒரு பெண் தன் 17வது வயதுப் பதின்மத்திலே தனது அரசியலைத் தெளிவாகச் சொன்னவர் என்கின்றபோது இப்போது இந்த 24வது வயதில் இன்னும் எவ்வளவு உறுதியாக இருப்பார் என்பது.
இந்த வெறுப்பாளர்களுக்குத் தெரியவில்லை.

சரி, அதை விட்டுவிட்டு இன்னொரு திசையைப் பார்ப்போம்.

எங்களைப் போன்ற புலம்பெயர்ந்த, மண்ணிறத்தோல் கொண்டவர்க்கு நாம் வாழும் மேற்குலகில் கலை சார்ந்த வாய்ப்புக்கள் மிக அரிதாகவே இருக்கும். அப்படி வாய்ப்புக்கள் கிடைத்தாலும் 'எல்லோருக்கும் நல்லவராக' வாய் மூடி தமக்கான வாய்ப்புக்களின் ஏணியில் ஏறிச் செல்லவே விரும்புவார்கள். அதை ஒருவகையில் புரிந்துகொள்ளவும் முடியும். ஆனால் மாயாவோ அல்லது மைத்ரேயியோ அப்படிப்பட்டவர்கள் அல்ல. தமது கலையைப் போலவே தமது அரசியலும் முக்கியம் என்பவர்கள். ஆகவேதான் தொடர்ந்து அரசியலை தமது கலையோடு இணைத்துப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அதன் மூலம் தமக்குக் கிடைக்கும் அரிதான வாய்ப்புக்கள் பறிபோய்விடும் என்கின்ற எவ்வித அக்கறையும் இல்லாது பேசும் இவர்களைப் போன்ற கலைஞர்களே நமக்கு மிக வேண்டியவர்கள் மட்டுமில்லை, நாம் இவர்களைப் பத்திரமாக வைத்துக் காப்பாற்றவும் வேண்டும். ஏனெனில் இவர்கள் முன்னோடிகளாக நமது புலம்பெயர்ந்த பிள்ளைகளுக்கு இருக்கும்போது அடுத்த சந்ததிகளுக்கான பாதைகளைத் திறந்துவிடுகின்றவர்களும் இவர்களாகத்தான் இருக்கப் போகின்றார்கள். நமது பிள்ளைகள் இந்த புலம்பெயர்ந்த தேசத்தில் பிரகாசிக்க வேண்டுமெனில் நாம் இப்படி அரசியல் பேசும் பெண்களோடு நிற்கவேண்டும்.

மேலும் இப்பெண்கள் மீது வெறுப்பை உமிழ்பவர்களே, அவர்களின் பெற்றோர் தமிழர்கள் மீதான அடக்குமுறையால் (மைத்ரேயின் பெற்றோர் 1983 படுகொலைகளோடு புலம்பெயர்ந்தவர்கள்) சொந்த நாட்டில் வெளியேற்றப்பட்டவர்கள் என்பதோடு மைத்ரேயி போன்றவர்கள் ஏழெட்டு வயதுகளில் இருக்கும்போது நாம் 2009 இனப்படுகொலைக்கு எதிராக இங்குள்ள தெருக்களில் இறங்கிப் போராடியபோது எம்மோடு கூடவே வந்தவர்கள் (எனது அண்ணாவின் ஒன்பது வயது மகன் எங்களோடு வந்தவன், அவனைப் பற்றி அந்தப்பொழுதுகளில் நானொரு கவிதை கூட எழுதியிருக்கின்றேன்). ஆகவே இந்தப் பிள்ளைகளின் அரசியலை உங்களின்
வெறுப்பும், இனத்துவேஷமும் அழித்துவிட முடியுமென நினைப்பது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை அறியமாட்டீர்களா?

ஒருவகையில் இலங்கையில் தமிழர்க்கு இன்னமும் தீர்க்கமுடியாத இனப்பிரச்சினை இருக்கிறதென்பதை தொடர்ந்து உலகிற்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும் இவர்களுக்கு -இவர்களின் வெறுப்பரசியலுக்கு அப்பால்- நாங்கள் நன்றியைத் தெரிவிக்கவேண்டும்.

ஒரு அரசியல் தெளிவுடைய கலைஞர் ஒருபோதும் தன் அடையாளதோடு சிறு உலகில் முடங்கிப் போவதில்லை. அதனால்தான் கடந்தவருடம் டிரம்ப் உள்ளிட்ட பெருமுதலாளிகளுக்கு கனடா வன்கூவரில் நடந்த எதிர்ப்பு ஊர்வலத்தில் மைத்ரேயி கலந்துகொண்டு “Never Have I Ever Thought Genocide Was OK" என்ற பதாதையை ஏந்தியபடி நடந்தார்.

ஆகவேதான் மைத்ரேயியை நாம் எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காது அவருக்கு எமது தோழமையுணர்வைக் (solidarity) கொடுக்க  வேண்டும்.

***


0 comments: