கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வன்னியிலிருந்து மூன்று படைப்புக்கள்

Friday, January 12, 2007

-மீள்பதிவு-

உக்கிரமான போர்க்காலத்தில் வன்னியிலும் மக்கள் வாழ்ந்தார்கள் என்று ஏனைய நாடுகள் ஒப்புக்கொள்வதற்கு அந்த மக்கள் சமாதானக்காலம் வரை காத்திருக்கவேண்டி வந்தது. அதேபோன்று அந்தக் கடும் நெருக்கடிக் காலகட்டத்தில் வன்னிப்பெரும் நிலப்பரப்பிலிருந்து குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பல படைப்பாளிகள் தோன்றியிருந்தனர் என்று புலம்பெயர்ந்தவர்கள் அறியவும் நெடுங்காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று. நானறிந்தவரையில், போர்க்காலத்தில் மூன்றாவது மனிதன் ஓரளவு வன்னியிலிருந்து எழுதிய படைப்பாளிகளைப்பற்றி குறிப்புக்களை எழுதியதை வாசித்திருக்கின்றேன். அதில் சி.சிவசேகரம், மு.பொன்னம்பலம் போன்றவர்கள் வன்னியிலிருந்து முகிழ்ந்த படைப்புக்களுக்கு விமர்சனங்களை அவ்வவ்போது எழுதியிருந்தனர்.

அமரதாஸின் இயல்பினை அவாவுதல் (1999), நிலாந்தனின் யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பாணமே (2002), தானா.விஷ்ணுவின் நினைவுள் மீள்தல் (2003) போன்றவை வன்னிப்பெரும் நிலப்பரபிலிருந்து அச்சிட்டு வெளியிடப்பட்டாலும், படைப்பாளிகள் வன்னிக்குள்ளும் வெளியிலும் வாழ்ந்தவர்கள்; வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். வன்னியிலிருந்து பதிக்கப்பட்டதால், அவற்றை வன்னிப்படைப்புக்கள் என்ற ஒரு இலகுவான பிரிப்புக்குள் கொண்டுவரலாம் என்று நினைக்கின்றேன்.


இயல்பினை அவாவவுதல் தொகுப்பை வெளியிட்ட அமரதாஸ் ஒரு போராளியாக இருந்தவர். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் களத்தில் நேரடியாக நின்றவர். சண்டிலிப்பாய் - அளவெட்டிப்பகுதியில் நடைபெற்ற புலிப்பாய்ச்சல் நடவடிக்கையில் காலில் படுகாயம் அடைந்து இன்றும் ஒருகால் சரியாக இயங்காது அவதிப்படுபவர். இன்றையபொழுதில் போராட்ட அமைப்பிலிருந்து முற்றாக விலகி சாதாரண ஒரு பொதுமகனாக, துணைவி, பிள்ளை என வாழ்ந்துகொண்டிருக்கின்றார். அவருடம் நேரடியாகப் பேசியபோது தன்னை ஒரு சுயாதீன பத்திரிகையாளர் (Freelance Journalist) என்றே அடையாளப்படுத்த விரும்புவதாய்க் கூறியது நினைவு.

அமரதாஸ் என்னும் படைப்பாளி பற்றி, கருணாகரன் இந்தத் தொகுப்புக்கான முன்னுரையில் இப்படிக் கூறுகின்றார். 'அமரதாஸ் 23 வயது இளைஞர்; ஈழக்கவிஞர்; தொண்ணூறுகளில் ஆரம்பத்திலிருந்து எழுதத்தொடங்கியவர்.; இலக்கியத்தின் பிற துறைகளிலும் ஈடுபடுபவர்; வாழ்வின் சகல விடயங்கள் பற்றியும் தீர்க்கமாக உரையாடுபவர்; புரிந்துணர்வோடும் விரிந்த சிந்தனையோடும் உறவாடுபவர். இவரின் கவிதைகளிலும் இந்தப் பின்புலங்களை உணரமுடியும். இவற்றுக்கப்பாலான அம்சங்களையும் அடையாளங்களையும் இவருடைய கவிதைகளில் வாசகர்கள் உணரக்கூடும்.'

அமரதாஸின் கவிதைகளில் ஆச்சரியப்படவைக்கும் ஒரு விடயம் எங்கும் நேரடியாக போரைப் பற்றிப் பேசவில்லை என்பதுதான். எழுதப்பட்ட சில கவிதைகளில் கூட, போர்க்களத்தில் நிற்கும் ஒருவன் தன் துணைக்கு தான் திரும்பி வருவேன் என்று ஆறுதல் கூறுகின்றதான கவிதைகளாய் இருக்கின்றனவே தவிர போர் குறித்து பெருமிதப்படும் கவிதைகள் அறவே கிடையாது. போரிற்குள் வாழ்ந்துகொண்டு அதன் அனைத்துக் கொடூரங்களையும் பார்க்கும் ஒருவனால் அது குறித்து பேசமுடியாது போலும். காதலியின் கடிதம் 01ல்...

'போர்முனையுள் உன் முனைப்பு
வேரறுந்த பூமரமாய் ஆகிறது என் நினைப்பு.

அழிக்கவோ அல்லது அணைக்கவோ முடியாத
என் நிழலாய் உன் இருப்பு
அந்தரத்து வாள் முனையில்
எந்தனது காத்திருப்பு'
என்றும்,

துயர்க்காலம் என்னும் கவிதையில்,
'அவசரமாய் அணிவகுத்து
போருக்குப் புறப்படும்போது
ஊரில் இருந்து
சதா என்னை நினைத்து
அழுதிருக்கும் உன் முகம்
இதயத்தில் மினுங்குது மங்கலாய்.'

என்று ஆரம்பித்து இறுதியில்...
'வெடித்துச் சிதறும் களத்திலிருந்து
உயிர்கொண்டு திரும்ப நேர்ந்தால்
உனைக்காண வருவேன்
மனஞ்சிலிர்த்து'

என்று மனதைப் பிசைவதாய்த்தான் முடிகிறது. பல கவிதைகள் படிமங்களால் வார்க்கப்பட்டு (புத்தகம் பற்றி, விருட்சத்தின் கதை அல்லது வில்லர்களின் தறிப்பு) பல்வேறு அர்த்தங்களை வாசிப்பவர்களுக்குத் தருபவை. வன்னிக்கு சென்றவருடம் சென்றபோது அமரதாஸ¤டன் இரண்டு வாரங்கள் பழகும் சந்தர்ப்பம் வாய்த்தது. இயல்பான சூழ்நிலையில் பலவிடயங்களை மனந்திறந்து பேசக்கூடியதாக இருந்தது. இந்தத் தொகுப்பில் எழுதப்பட்ட அனேக கவிதைகள் போராட்டக்களத்தில் நின்றபோது எழுதப்பட்டவை என்று கூறியபோது வியப்பாயிருந்தது. வாசிப்பதற்கோ, விவாதிப்பதற்கோ நேரங்கிடைப்பதே அரிதாயிருக்கும் சூழலில் (மற்றும் போராட்டக்காலத்தில் வடபகுதிக்கு பிற இடங்களிலிருந்த அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தது) இந்தக் கவிதைகள் நவீனத்துவச் சாயல் படிய எழுதப்பட்டிருப்பதற்கு, அமரதாஸ் என்னும் ஒரு படைப்பாளியின் ஆளுமைதான் முக்கிய காரணமாயிருக்கக்கூடும் என்று நினைக்கின்றேன்.

அமரதாஸ¤டன் உரையாடியபோது அவர் நிறைந்த வாசிப்புள்ளவர் என்பதை இலகுவில் அவதானிக்க முடிந்தது. ஈழம் என்றில்லாமல் தமிழக/புலம்பெயர் படைப்புக்களில் அனேகமானவற்றை வாசித்திருக்கின்றார் அல்லது அறிந்து வைத்திருக்கின்றார். அது மட்டுமில்லாமல் அமரதாஸ் நல்லதொரு புகைப்படக் கலைஞர். அவர் எடுத்த படந்தான் Lutesong and Lament என்ற ஈழத்தமிழ்ப்படைப்புக்களின் ஆங்கிலமொழிபெயர்ப்பின் முன்னட்டையை அலங்கரிக்கின்றது. இன்று வன்னியிலிருந்தும் யாழிலிருந்தும் வரும் அனேக படைப்புக்களில் அமரதாஸினதும், கருணாகரனினதும் பங்களிப்பு ஏதோவொரு வகையில் இருக்கின்றது (அண்மைய உதாரணம்: புதுவை இரத்தினதுரையினது, பூவரசம் வேலியும் புலூனிக் குஞ்சுகளில், ட்ராஸ்கி மருதுடன், அமரதாஸின் கைவண்ணமும் உள்ளது).

அமரதாஸிற்கு பயணஞ்செய்வதில் (எந்தப்படைப்பாளிக்குத்தான் விருப்பமிருக்காது) அலாதிப்பிரியமெனவும், அவ்வாறு பயணித்த இடங்களில் எடுத்த புகைப்படங்களை எனக்கும் காட்டியிருந்தார். அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட படங்களைத் தொகுத்து, 'கோபுரங்களில் இருந்து' என்ற தலைப்பில் ஒரு புகைப்படக்கண்காட்சி வைக்கப்போவதாய் கூறியதாயும் நினைவு. அந்தக் கண்காட்சியில் முழுப்படங்களும் இந்துக்கோயில் கோபுரங்களின் சிலைகளை/சிற்பங்களை உள்ளடக்கப்போவதாய் கூறியிருந்தார். பாலியல் சிந்தனைகள் ஒடுக்கப்பட்ட தமிழ்ச்சமூகத்தில்தான் இவ்வாறான படைப்புக்கள் முகிழ்ந்திருக்கின்றன என்பதுதான் முக்கியமான முரண்நகை என்றார். கோபுரத்தில் உறங்கிக்கிடக்கும் அவற்றை யதார்த்திற்கு கொண்டுவந்து விரிவான உரையாடல்கள் நிகழ்த்தப்படவேண்டும் என்ற நோக்கிலேயே கோபுரத்திலிருந்து என்று தலைப்பு வைக்க விரும்புவதாய் கூறினார். உண்மையில் அதுவரைகாலமும், இந்தியாவிலுள்ள கோயில்களில் மட்டுந்தான் இப்படி வெளிப்படையான பாலியல்/நிர்வாணம் சித்தரிக்கும் சிற்பங்கள் இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு அமரதாஸ் எடுத்த புகைப்படங்கள் மிகவும் ஆச்சரியமூட்டியது (கிட்டத்தட்ட மூன்று அல்பங்கள் அளவில் அவர் எடுத்த படங்கள் இருந்தன).


தானா.விஷ்ணு யுத்ததிற்குள்ளே பிறந்து அதன் சகல பாதிப்புக்களையும் தன்னகத்தே உள்நிரப்பி வளர்ந்த ஒரு கவிஞன். அனைவரையும் போல, முதலாம் தொகுப்புக்கான பலத்துடனும் பலவீனங்களுடன் நினைவுள் மீள்தல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்கின்றது. போரும், காதலும் இவரது கவிதைகளின் அடிநாதமாய் ஒலித்தபடி இருக்கின்றன.

'ஒளி ஓவியத்தின் ரேகைகளுள்
நான் தொலைந்து கொண்டிருக்கும்
இந்தப் பொழுதில்
நீ தலையணைக்கடியில் உன் விழிகளை
உதிர்ந்து விட்டு
ஒரு பிரமாண்டமான கனவுக்குள் புகுந்திருக்கக்கூடும்
ஒரு வனாந்தரத்தின் தனிப் பாடகனாய்
அலைந்து திரியும் எந்தன் மனசு
குளிர்காலதின் ஸ்பரிசத்தில்
என்னுள் ஊடுருவும்
உன் விம்பங்களை எதிர்பார்த்துக் கொண்ருக்கிறது

நான் அந்த இருள் படிந்த
நான்கு சுவர்களின் நடுவே
நனைந்து போன பூனைக்குட்டியைப் போல்
இருக்கின்றேன் இப்போதும்
தனித்து.

என்று 'இருளின் தனிமை வெளி' கவிதையில் காதற்பிரிவையும் தனிமையும் வாசிக்கும் நம்முள்ளும் படியவிடுகின்றார். இன்னொரு கவிதையான 'அடையாளப்படுத்தலில்' வாளை படிமமாக வைத்து எமது வாழ்வை மீட்டெடுக்கவேண்டியவர்கள் நாமன்றி வேறொருத்தரும் அல்ல என்கின்றார்.

அதற்காய்,
'நீயும் வாள் வைத்திருப்பது நல்லது
அப்பிள் வெட்டவோ
மற்றவரை ஆசிர்வாதிக்கவோ அல்ல
உன்னை ஆசிர்வதிக்க நினைப்பவனுக்கு
உன் அடையாளத்தைக் காட்டுவதற்கும்
உன் அடையாளத்தைத் தறிப்பவனின்
சிரம் நறுக்கவும்
நீ ஒரு வாள் வைத்திருத்தல் அவசியம்'
என்று குறிப்பிடவும் தவறவும் இல்லை. இந்தத் தொகுப்பில் பல நல்ல கவிதைகளும் சில சாதாரணக்கவிதைகளும் உள்ளன. இனிவரும் காலத்தில் இன்னும் ஆழமான கவிதைகளை, விரிவான தளங்களில் தானா.விஷ்ணு தருவார் என்ற நம்பிக்கையை இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளை வாசிக்கும்போது ஏற்படுகின்றது.


நிலாந்தன் மரணத்துள் வாழ்வோம் தொகுப்பு வெளிவந்தபோதே அறியப்பட்ட ஒரு கவிஞர். பிறகு ஈழ அரசியல் நிலவரங்கள் குறித்து பத்திகள் எழுதி தனது பன்முக ஆளுமையை போர்க்காலத்திலும், இன்றைய 'சமாதான' காலத்திலும் வெளிப்படுத்தியவர்; வெளிப்படுத்திக்கொண்டிருப்பவர். 'யாழ்ப்பாணமே ஓ.... எனது யாழ்ப்பாணமே தொகுப்பு கவிதை நடையிலும், கதை வடிவிலும் எழுதப்பட்டிருக்கின்றது. யாழின் ஆரம்பகால வரலாற்றுடன் ஆரம்பித்து, 95ல் நிகழ்ந்த பெரும் இடப்பெயர்வையும், இறுதியில் யாழின் நுழைவாயிலை எட்டிப்பார்த்த ஓயாத அலைகள்-03 வரையும் ஆவணப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

கைப்பற்றப்பட்ட யாழ்ப்பாணத்திலிருந்து வருகின்ற ஒரு கடிதம் யாழின் அன்றைய நிலையை (1996) விபரிக்கின்றது.

'இம்முறை மிக நீண்ட கோடை
ஓரே வெயில்
ஒற்றனைப்போல ரகசியமாய் வீசும் காற்று.

இரவு
ஊளையிடும் நாய்களுக்கும்
உறுமிச் செல்லும் ட் ரக்குகளுக்குமுரியது

பகலெனப்படுவது
இரண்டு ஊரடங்குச் சட்டங்களிற்கு
இடையில் வரும் பொழுது

தெருவெனப்படுவது
ஒரு காவலரணில் தொடங்கி
இன்னொரு காவலரணில் முறிந்து நிற்பது.

இதில் வாழ்க்கையெனப்படுவது
சுற்றிவளைக்கப்பட்ட
ஒரு மலட்டுக்கனவு.'

என்கின்றது. யாழ்ப்பாணத்து பெருமை சொல்லப்பட்டாலும், யாழ் மேலாதிக்கத்தையும் நிலாந்தன் சுட்டிகாட்டத்தவறவில்லை. '...இப்படி வீரம் விவேகம் விச்சுழி தந்திரம் சுயநலம் இவற்றோடு கட்டுப்பெட்டித்தனம் புதுமைநாட்டம் விடுப்பார்வம் விண்ணாணம் இவையெல்லாம் கலந்த ஒரு திணுசான கலவைதான் ஒரு அசலான யாழ்ப்பாணி' என்கின்றார் யாழில் நடந்த மிகப்பெரும் இடம்பெயர்வும் அதனால் பாதிப்புற்ற மக்களின் துயரமும் அந்தக்காலகட்டத்தில் அங்கிருக்காதவரைக் கூட இந்தப் படைப்பை வாசிக்கும்போது கொஞ்சமாவது பரவச்செய்து கலக்கமுறச்செய்யும்.

Image1

இந்தப் படைப்பில் முக்கியமான குறிப்புக்களில் ஒன்றாய் இதையும் சேர்த்து வாசிக்கத்தான் வேண்டும். '....மேலும் இங்கையொரு சோகமான ஒற்றுமையும் உண்டு. ஐந்து ஆண்டுகளிற்கு முன்பு யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் அகற்றப்பட்ட அதே நாட்களில்தான் 1995ல் எக்ஸ்சோடஸ் ஏற்பட்டது என்பது.' உண்மைதான். நாம் முற்பகலில் எதை விதைக்கின்றோமோ அதைத்தானே பிற்பகலில் அறுவடை செய்யவும் வேண்டியிருக்கின்றது என்பதுதானே யதார்த்தம். ஒரு புதிய வாசிப்பு முறைக்கு நிலாந்தன் இந்தப் படைப்பில் நம்மை அழைத்துச் செல்கின்றார் என்றபோதும், பைபிளின் பழைய ஆகமத்தில் கூறப்படும் யூதர்களின் இடப்பெயர்வை யாழ்ப்பாண இடம்பெயர்வுடன் ஒப்பீட்டு நோக்குவது சற்று உறுத்தச் செய்கின்றது. அது ஆதியில் நிகழ்ந்தது எனினும் இன்று யூதர்கள் பாலஸ்தீனியர்கள் மீது நடத்தும் அக்கிரமம்தான் கண் முன்னே விரிந்து நிற்கின்றது. இன்றைய பொழுதில் யூதர்கள் செய்யும் அட்டூழியங்களைத் தவிர்த்து வரலாற்றின் முந்தைய பக்கங்களுக்குள் இலகுவில் நுழைந்துவிடமுடியாது. எனினும் நாமும் யூதர்களைப் போல, பராம்பரியத்துடன் நூற்றாண்டுகளாய் ஈழத்தின் வடபகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களைத் துரத்திய பாவச்செயலைச் செய்திருக்கின்றோம் என்பதை மறுத்துவிடவோ அல்லது அவ்வளவு இலகுவில் மறந்துவிடவோ முடியாது.

(Aug/05)

சேரன்

Thursday, January 11, 2007

-'மீண்டும் கடலுக்கு' தொகுப்பை முன்வைத்து-

சேரனின் ஏழாவது கவிதைத் தொகுதி, 'மீண்டும் கடலுக்கு' சென்ற வருடம் வெளியாகியிருக்கின்றது. அநேக கவிதைகளில் காமமும் குளிரும் தொடர்ந்தபடி கூடவே வருகின்றன. கனடா போன்ற புலம்பெயர் நாடுகளில் வின்ரர் பருவத்து கொடுங்குளிரைத் தாங்குவதற்கு நனவிடை தோய்தல்களும், காமம் சார்ந்த தகிப்புக்களும் பலருக்கு ஆறுதலாகின்றன. இத்தொகுப்பிலுள்ள சேரனின் கவிதைகளும் அதற்கு விதிவிலக்கில்லாது புலம்பெயர்ந்த தனி மனிதன் ஒருவனின் வாழ்வைப் பேச முயற்சிக்கின்றன.

நெடுங்கவிதையொன்றிலிருந்து வெட்டப்பட்ட சிறு துண்டுகளோ என இதிலுள்ள பல கவிதைகள் ஒருவித தோற்ற மயக்கத்தைத் தருகின்றன. குருதியும், கண்ணீரும், சுக்கிலமும், குளிரும் பெரும்பான்மையான கவிதைகளுக்குள் நுழைந்துவிடுகின்றன. தொடர்ந்து சொல்லப்ப்பட்டதை சொல்லப்படுவதிலிருந்து விலத்தி, நல்ல கவிதைகளைத் தேடுவதுதான் இத்தொகுப்பை வாசிப்பவருக்கு முன் இருக்கின்ற முக்கியமான சவால்.

அநேகர் சேரனின் கவிதைகளில் (முக்கியமாய் 'நீ இப்போது இறங்கும் ஆறு'') காணப்படும் அரசியல் சமூகப் புள்ளிகளை விதந்து எழுதிக்கொண்டிருந்தபோது எனக்கு நெருக்கமாயிருந்தது அவரது அழகியல் கவிதைகள் (romantic poems) தான். அவற்றிலும் ஒரு அறிவுஜீவித்தனமான -உணர்ச்சி சம்பந்தபடாத - பார்வை அதிகம் விஞ்சி நின்றாலும் அவரது காதற் கவிதைகளை இலகுவாய் ஏற்றுக் கொள்ளக்கூடியதாய் இருந்தது. 'நீ இப்போது இறங்கும் ஆற்றில்' எளிமையான கவிதை என்று பலரால் புறக்கணிக்கப்பட்ட 'கேள்' என்ற கவிதையில் குளிரோடு தண்டவாளத்தருகின் ஒற்றைப்பூவுட்ன் காத்திருக்கும் ஒருவனின் தனிமையை/ஏமாற்றத்தை அப்படியே எனக்குள்ளும் அந்தக்கவிதையை படியவிட்டிருந்தது.

இத் தொகுப்பின் பின்னட்டை கூறுகின்ற ' எண்பதுகளில் ஈழத்துத் தமிழ்க் கவிதைப் போக்கின் மையப்புள்ளியாக இருந்த சேரனின்...' என்ற குறிப்பு சற்றுப் பிசகானது. எண்பதுகளில் சேரன் மட்டுமே மையப்புள்ளியானார் என்பது குறிப்பினை எழுதிய நபர் சேரனின் கவிதையை மட்டும் வாசிப்பவராய் இருந்திருந்தாலன்றி இப்படி எழுதியிருக்கமுடியாது. சேரனுக்கு முன் எழுத ஆரம்பித்த சிலரும், பலவேறு இயக்கங்கள் தோன்றியபோது அவற்றிலிருந்து முகிழ்ந்த கவிஞர்களும் பலரும் எண்பதுகளின் ஈழத்துக் கவிதைப்போக்கின் மையப்புள்ளிகளாக இருந்தார்கள் என்பதே சரியானது. அந்தப் பலபுள்ளிகளில் சேரனும் ஒருவர். அவ்வளவே. எனினும் அந்தக் குறிப்பில் ஒரு உண்மை இருக்கின்றது. சேரன் எண்பதுகளில் எழுதிய கவிதைகளின் தொனியிலும் மொழியிலும் அவ்வளவு மாற்றமில்லாது -இருபது ஆண்டுகள் கடந்தபின்னரும்-அவரது புதிய கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கின்றார் என்பதை இத்தொகுப்பை வாசிப்பதினூடாக அறிந்துகொள்ளலாம்.

சேரனின் காமம் குறித்த கவிதைகளை தொடர்ந்து வாசித்தபோது ஒரு அலுப்பு வந்தது. ஆனால் இந்த அலுப்பு, ஏன் காமம் சார்ந்து நிறைய கவிதைகளை தமது தொகுப்புக்களில் எழுதும் ரமேஷ்-பிரேமை வாசிக்கும்போது வருவதில்லை என்று வாசக மனோநிலையில் இருந்து யோசித்துப் பார்த்தேன். சேரன் தனது கவிதை மொழியின் நடையில் புதிய பரிட்சார்த்தமான முயற்சிகளையோ, உடல்மொழி குறித்து அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை என்பதே -எனக்கான- காரணங்களாய்த் தென்பட்டது. ஒரு கலைஞன் இறந்த காலத்தோடு உறைந்துப் போகத் தொடங்கும்போது அவனது வீழ்ச்சி ஆரம்பிக்கின்றது. சேரனின் கவிதைப் பயணத்தின் வீழ்ச்சி இத்தொகுப்பில் துல்லியமாய்ப் புலப்படத் தொடங்குகின்றன என்பதே க்சப்பான உண்மை.

'அறிவின் சுடரில் / காமம் பிறக்கும் இரவே' (காதலனும் குழந்தையும்- 1) என்ற கவிதை வரிகளை வாசிக்கும்போது, காமத்திற்கும் அறிவுக்கும் என்ன வகையிலான தொடர்பு இருக்கின்றதென்ற வினா வாசிப்பவருக்கு ஏற்படுகின்றது. இத்தொகுப்பில் மட்டுமில்லை, முன்னைய தொகுப்புக்களிலும் அறிவை அளவுக்கு மீறி விதந்தேத்தும் கவிதைகளை சேரன் எழுதியிருக்கின்றார். அறிவே எல்லாவற்றுக்கும் மூலாதாரம் என்று திணிக்கப்படும் யாழ்ப்பாணியவாத்தின் மிச்சங்களிலிருந்து சேரன் இன்னும் விடுபடவில்லையோ என்ற வகையில் யோசித்துப் பார்ப்பது தவறாக இருக்காது என்றே நினைக்கின்றேன். காமத்தை அறிவுநிலையில் மட்டுந்தான் அணுகவேண்டும் என்றால், பிறகு ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் வரும் விருப்பு/சுவாரசியம் என்ற இயற்கை உணர்வுகளைக் கூட குழிதோண்டி புதைக்கவேண்டி வருமோ என்றுதான் சேரனின் சில கவிதைகளை வாசிக்க்கும்போது தோன்றுகின்றது. பதின்ம வயதிலிருக்கும் ஒருவனுக்கு வரும் சந்தேகமெல்லாம் சேரனுக்கு அவரது நாற்பது வயதின்பின் வருகின்றது (கோடையில் கண்ணாடி அணிகின்ற பெண்ணை முத்தமிடுகின்றபோது). கண்ணாடி அணிகின்ற பெண்ணுக்கு முத்தமிடுவதிலுள்ள 'சிரமங்களை' ஒரு ஆராய்ச்சியாளர் அளவுக்கு சேரன் அதில் ஆய்வுகள் செய்கின்றார். வாசிக்கும் எனக்கோ, அந்தப்பெண் முத்த்மிடும்போது கண்ணாடியைக் கழற்றிவிட்டு முத்தமிட்டிருந்தால் நாமெல்லாம் இந்த அவ்திகளையெல்லாம் வாசிக்காமல் தப்பியிருக்கலாம் என்றுதான் தோன்றியது. (சேரனின் அடுத்த கவிதைகளுக்காய் என்னாளான உதவி, 'குளிரில் கொன்ராக் லென்ஸ் அணிந்த பெண்ணை முத்தமிடும்போது or லேஸிக் செய்த பெண்ணை மழைபெய்யும்போது முத்தமிட்டபோது... ) .

காமத்தின் பின்பான பொழுதில் பெண்ணைப் பார்த்து 'நீ காலத்தின் இடிபாடுகளில் சிக்கிய கூந்தல்கற்றை' என்று கூறிவிட்டு, நான் அப்படியல்ல... 'நித்திய ஈரலிப்பிலும்/ சலிக்காத முத்தத்துடன்/ கால்களற்று/ எப்போதும் பறக்கும் பறவை நான்' என்கின்ற கவிஞர் பல இடங்களில் சறுக்குகின்றார். தான் பறவை என்ற தொடர் பிரக்டனங்களை சேரன் தனது முன்னைய கவிதைத் தொகுதிகளிலும் வெளியிட்டவர். சேரனால் ஏன் தான் எழுதிய கவிதைகள் எதிலும், பெண்கள அப்படி சுதந்திரமாய் ஒரு பறவை போல பறக்கமுடியாது இருப்பதற்கான சமுக பின்புலங்களை விரித்து எழுத முடியவில்லை? பெண்களுக்கும் 'இடிபாடுகளில் சிக்கிய கூந்தற்கற்றையாக' அல்ல; தன்னைப் போல ஒரு பறவையாக பறக்க விருப்பம் அவர்களுக்கும் இருக்கும் என்ற மற்றப் பக்கத்தை ஏன் -வேண்டுமென்றே- சேரன் மறைக்கின்றார். நானும் பறவை நீயும் பறவை கட்டுகளை அறுத்து இருவரும் சேர்ந்து பறப்போம் என்று எழுதுவதில் என்ன தயக்கம் இருக்கின்றதென்று யோசிக்கும்போது 'கவிமனநிலையின்' சுயநலம்தான் கண்முன்னே விரிகின்றது. மற்றொரு சறுக்கல் என்னவென்றால், பறவையை கவிதைகளில் படிமமாக்கும்போது அநேகமாய் கட்டுக்களை, அடையாளங்களை மீறியதற்கே பாவிக்கப்படுகின்றது. பறவைகள் எதன் பொருட்டும் காத்திருப்பதில்லை என்பதையும் எவருக்காகவும் கண்ணீர் விடுவதில்லை என்பதையும் சேரனால் படிமாக்கப்படுகின்றதென்றால், ஏன் அந்த 'பறவை மனக் கவிஞன்' தனது மச்சாளுக்கும், அன்புள்ள அத்தானுக்கும் துயருறு காதைக் கவிதைகளை இத்தொகுப்பில் எழுத வேண்டும்? ஆக, தன்னோடு மனமும் உடலும் பகிரும் பெண்ணைப் பார்த்து நீ இடிபாடுகளிடையே சிக்கிய கூந்த்ல்; உன்னோடு தங்கவோ உனக்காகவோ கண்ணீர் விடவோ அல்லது சிக்கு எடுத்து என்னோடு பறக்க உதவி செய்வேன்... என்றோ கூறமுடியாது; ஆனால் உறவுகள் தனக்குச் செய்த 'தியாகங்களை' மட்டும் நினைத்து கண்ணீர் மல்க முடிகின்றது. அதை நாம் அற்புத கவிமனசு என்று நினைத்து விதந்தேந்த வேண்டும்!

'எரிமலைப் பயணம்', 'மாயன் நகரம்', 'செம்மணி' இத்தொகுப்பிலிருப்பதில் எனக்குப் பிடித்தமான கவிதைகள். அதிலும் 'எரிமலைப் பயண்த்தில்... 'மலை அடிவாரத்தில்/போர்க்கடவுள்களின் கோபம் மறைந்து கிடக்கிறது' என்று கூறிவிட்டு இறுதியில் 'கிழிந்து போன அமெரிக்க கொடி/ தூங்கிக் கிடக்கும் கடவுளின் மீது பறப்பதைப் பார்த்துவிட்டுத் திரும்புகின்றேன்' என்று முடிவது அமெரிக்காவின் ஆதிக்கக்கரங்கள் மாயன் நாகரீக நாடுகள் எங்கும் பரவியிருக்கின்றது என்பதை சூசகமாய் வாசகருக்குத் தெரிவிக்கின்றது. அமெரிக்கா ஒரு எரிமலைக்கு நிகர்த்தது. எந்த நேரமும் ஒரு எரிமலையைப் போல உறங்காமல் இந்நாடுகளை கண்காணித்துக்கொண்டிருக்கின்றது என்ற விரிவான வாசிப்பிலும் வாசித்துணரலாம். 'செம்மணி' கவிதை, கடந்த காலத்துயரை எல்லாம் மறந்துவிட்டு செம்மணியில் பிரமாண்டமாய் எழுந்து நிற்கும் செல்போன விளம்பரப் பலகையினூடு நம் அவலத்தைப் பேசுகின்றது. நமது மண்ணையும் நீரையும் சுரண்ட வரவிருக்கின்ற அந்நியமுதலீடுகள் பற்றிய அச்சத்தையும் கூடவே யோசிக்க வைக்கின்றது.

'மாயன் நகரம்' கவிதை மெக்ஸிக்கோவைப் பற்றிப் பாடுகின்றது. பூர்வீக குடிகள் வாழ்ந்த தேசத்தை 'கடலோடி எரியூட்டினான் '(கொலம்பஸின் வருகையையோடு செழிப்பான ஒரு க்லாச்சாரம் மிக விரைவாக அழியத்தொடங்குகின்றது என்பதை நினைவு கொள்ளமுடியும்) என்று ஆரம்பிக்கின்றது. தொடர்கையில், அவ்வாறு வந்த கடலோடிகள் நாட்டிய ஆயிரக்கணக்கான சிலுவைகளில் கோடிக்கணக்கான கறுப்புத்தோல் இயேசுக்கள் அறையப்பட்டார்கள் என்று உவமிக்கின்ற இடம் அருமையானது. ஒரு கவிதையினூடு ஒரு பெரும் வரலாற்றை சிறிய விதையாய்க் கொடுக்க முடியும். அந்த விதையிலிருந்து கிளைகளையும், இலைகளையும் பூக்களையும் வளர்த்துப் பார்க்கவேண்டிய பொறுப்பு வாசகருக்குரியது. (ஞாபகம் வரும் வேறொரு தொகுப்பிலிருக்கும் சேரனின் இன்னொரு கவிதை, ஒரு காலடி ஒராயிரம் ஆண்டு வர்லாறு அங்கே இருக்கின்றது என்பது மாதிரி வரும் கவிதை). அந்த வகையில் இந்தக் கவிதை அற்புதமாய் எழுதப்பட்டிருக்கின்றது என்று சொல்லவேண்டும்.

எனினும் இந்த அருமையான கவிதை வாசிப்பை அடுத்து வரும் 'பாணன் சதுக்கத்தில்' கவிதைசொல்லி தூள் தூளாய் உடைத்துவிடுகின்றார். அங்கே நடக்கும் கொண்டாட்டத்தில் ஒரு மாயன் நகர்ப் பெண்ணைப் புணர்கின்றதை பாடு பொருளாக்குகின்றார். எவரும் எவரையும் புணர்வதில் பிரச்சினையில்லை. தனிமனித சுதந்திரம் என்ற ஒன்று இருக்கிறதுதானே. ஆனால் மாயன் கலாச்சார நாடுகளுக்கு, பெண்ணுடல்களுக்காய் போகின்றவன் அதை மட்டும் செய்துவிட்டு போய்விடுவான். இங்கேயிருக்கும் கவிதை சொல்லி போல அத்தேசத்தின் வரலாற்றின் இருண்ட பக்கத்திற்கு கண்ணீர் வடித்துக்கொண்டு இத்தகைய செயலைச் செய்வதை ஒரு 'கொண்ட்டாட்டமாய்' எழுதுவதில்லை. கடலோடி வந்து எரியூட்டி செழுமை நிறைந்த அத்தேசத்தைக் கொள்ளைகொண்டவர்களும் பெண்களைச் சிதைத்தார்கள். இங்கே காசு கொடுத்தோ அல்லது இல்லாமலோ கவிதைசொல்லி செயவதும் அதற்கு நிகர்த்ததுதான். முன் கவிதையில் வடிந்த கண்ணீர் இப்போது நீலிக்கண்ணீராகி விடுகின்றது.

சேரனின் சில கவிதைகளைப் பார்க்கும்பொது சேரனா திருமாளவளவனா எழுதியது என்ற குழப்பம் ஏற்படுகின்றது. எவரின் பாதிப்பு எவரில் இருக்கின்றது என்பதை வாசிப்பவர்களிடையே விட்டுவிடுகின்றேன். ஈழ/புலம்பெயர்/தமிழக விமர்சகர்களால் முன்னிலைப்படுத்தி விதந்தேந்தப்படும் இவ்விரு கவிஞர்களும் ஒரே நேர்கோட்டில் போய்க்கொண்டிருப்பது ஆபத்தானது. அந்த வகையில் பாவிக்கும் மொழி குறித்தும் படிமங்கள் குறித்தும் அவதானமாயிருப்பது இருவருக்கும் அவசியமாகின்றது.

சேரனின் இத்தொகுப்பை மூன்று முறைக்கும் மேலாய் ஏற்கனவே வாசித்திருக்கின்றேன். இப்போது இதை எழுதுவதற்காய் இன்னொரு முறையும் வாசித்தாயிற்று. கூறுவதற்கு சற்றுத் தயக்கமிருப்பினும், தொடர்ந்து நிறைய முறை வாசித்தாயினும் ஒரு சில நல்ல கவிதைகளைக் கண்டுபிடிப்பேன் என்பதற்காய் மட்டுமே வாசித்திருக்கின்றேனே தவிர, பிற படைப்புக்கள் போல பிடித்தமான மனோநிலையில் இதை வாசிக்கவில்லை என்பதே உண்மை.

தமிழ்க் கவிதைகள் இரண்டாயிரம் ஆண்டைக் கடந்து வேக வேகமாய் தனக்கான குறைகளோடும் நிறைகளோடும் நகர்ந்துகொண்டிருக்கும்போது, சேரன் இன்னும் 80களின் மொழிநடையோடும், நித்திய காதலன் கன்வுகளோடும் இருப்பதுதான் -சேரனின் கவிதைகளுக்கான் இருப்பு- இன்றைய ஈழ/புலம்பெயர் பரப்பில் இல்லாமற் போய்க்கொண்டிருப்பதற்கான காரணமோ- என்று எண்ணத்தோன்றுகின்றது. அதே சமயம், பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாய் புலம்பெயர்ந்து வாழும் சேரனுக்கு இங்கு நடக்கும் தற்கொலைகள், பெண்கள் மீதான வன்முறைகள், நாற்றமடிக்கும் சாதிய அழுக்குகள் எதுவும் சலனமடையச் செய்யவில்லை என்பது ஆச்சரியப்படுத்தும் விடயந்தான். சிலவேளைகளில் வானத்தில் பறக்கும் பறவைகளுக்கு மண்ணில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து அவ்வளவு அக்கறையிருப்பதில்லையோ தெரியவில்லை.

வைரமுத்து

Wednesday, January 10, 2007

வைரமுத்து
-நான் அறிந்தவைகளினூடாக-

வைரமுத்து, எனக்குப் பிடித்த பாடலாசிரியர்களில் ஒருவர். வைரமுத்து ஒரு நவீன கவிஞர் இல்லையென்பதை -எனது வாசிப்புக்களினூடாக-எந்தளவுக்கு மறுதலிக்கின்றேனோ அதற்கு மாறாய் வைரமுத்துவை ஒரு சிறந்த பாடலாசிரியராய் ஏற்றுக்கொள்வதில் எந்தத் தயக்கமுமில்லை. இன்றையபொழுதில் தாமரை, நா.முத்துக்குமாரின் பாடல்களில் பிடிப்பு வந்து வைரமுத்துவை கடந்துவந்துவிட்டாலும் வைரமுத்துவின் பாடல்வரிகளை எப்போது கேட்டாலும் மனதை நிறைக்கத்தான் செய்கின்றது.

கவிதைகள் என்று வாசிக்கத் தொடங்கிய பதின்ம வயதுகளிலேயே வைரமுத்துவின் கவிதைகள் கவர்ந்ததில்லை. மு.மேத்தா தான் எனக்குப் பிடித்தமானவராக அன்றைய காலகட்டத்தில் இருந்தார். வானம்பாடி வகைக் கவிதைகளை பல வருடங்களுக்கு முன்னரே கடந்துவந்துவிட்டாலும் -அநேக சிற்றிதழ்க்காரர்கள் போல- என்னால் வான்மபாடிக் கவிதைகளை முற்றாக நிராகரிக்க முடியாது. கவிதைகளை வாசிக்கவும் எழுதவும் விரும்பும் ஆரம்பநிலையில் இருக்கும் வாசகர்களில் அநேகர் வானம்பாடி வகைக் கவிதைகளின் சாயலில்தான் எழுதத் தொடங்குவார்கள் என்றே நம்புகின்றேன். அதேபோன்று, அவ்வாறு கவிதை எழுத ஆரம்பிப்பவர்களின் படைப்பின் வளர்ச்சி என்பது எப்படி வானம்பாடி வகைக் கவிதைகளை தாண்டி/நிராகரித்துச் செல்லுகின்றார்கள் என்பதைப் பொறுத்தும் தங்கியுள்ளது.

வைரமுத்துவும், ரகுமானும் கூட்டணி அமைத்து -சரணமும் பல்லவிகளும்- எழுதி இசைத்த பாடல்கள் என்னைப் பொறுத்தவரை அருமையான காலங்கள். வைரமுத்துவின் திரையிசைப் பாடல்களைப் பற்றி விதந்தும் விமர்சித்தும் விரிவாகப் பேசமுடியும். அதற்கான் நேரம் இப்போதில்லை என்பதால் அதைக் கடந்துவிடுகின்றேன். அருமையான பாடல்வரிகள் வைரமுத்துவின் பல பாடல்களில் இருக்கும் என்ப்தோடு இயன்றளவு பாடல்களில் நவீன இரசிகர்களுக்குப் பரிட்சயமில்லாப் பழந்தமிழ்ப்பாடல்களையும் நேடியாகவும், சிலவேளைகளில் அவற்றின் விளக்கவுரையை மையமாகக் கொண்டு மறைமுகமாகவும் வைரமுத்து நிறையப் பாடல்களை எழுதியுள்ளார். உதாரணமாய் 'தீண்டாய் தீண்டாய்' (படம் என் சுவாசக்காற்றே) பாடலில் intro ஒரு சங்கப்பாடலே... அதில் வரும் 'அல்குல்' என்ற வார்த்தையை இன்றைய தமிழுக்கு மாற்றினால் சிநேகன் போன்ற பாடலாசிரியர்கள் சங்கப்புலவர்களையும் மவுண்ட்ரோட்டில் உயிரோடு கொளுத்தவேண்டும் என்றும் அறிக்கை விட்டிருப்பார்களோ தெரியவில்லை.

அதேபோன்று வேறு நாட்டுமொழிப்படைப்புக்களையும் - அசலை தனது அசல் இல்லையென்று கூறாமல் எடுத்தாள்வதில் சற்று கள்ளமிருந்தாலும்- எளிய முறையில் கொண்டுவருவதற்காய் வைரமுத்துவை மன்னித்துவிடலாம். 'இல்லையென்று சொல்ல ஒரு கணம் போதும்; இல்லையென்ற சொல்லைத் தாங்குவதென்றால் எனக்கு இன்னுமொரு ஜெனமம் வேண்டும்' என்ற பாடல்வரிகளில் பாப்லோ நெருடாவின் ஒரு கவிதையின் சாயலும், 'மழை கவிதை கொண்டு வருது... கறுப்புக் கொடிகள் காட்டி யாரும் கதவடைக்க வேண்டாம்' என்பது ஒரு அரேபிய பாடலின் சாயலில் இருப்பதையும் பாடலின் அர்த்தங்களுக்காய் -வைரமுத்துவின் கள்ளங்களை- மறந்துவிடலாம் (இன்று பெண்களை வர்ணிப்பதற்காய் பாவிக்கப்படும் வார்த்தைகளை எல்லாம் திருவள்ளுவரின் காமத்துப்பாலில் இருந்து எடுத்து அனைவருமே கள்ளம் செய்துகொண்டிருக்கையில் வைரமுத்துவை மட்டும் இப்படிக்கூறுவது சரியா என்றும் மனச்சாட்சி கேட்கத்தான் செய்கின்றது). வைரமுத்து கவிதைகள் என்று எழுதியதை வாசிக்கும்போது எதுவுமேயில்லாதமாதிரி இருப்பவை கூட பாடலாக்கப்படும்போது அழகாவிடுகின்றன்...'என்னவளே அடி என்னவளே'....'நீ காற்று நான் மரம்'.. என்று பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

வைரமுத்துவின் வீழ்ச்சி என்பது ரகுமானின் பிரிவோடு ஆரம்பித்தது என்றுதான் நினைக்கின்றேன் (ரகுமானின் இசை தொய்யத்தொடங்கியதும் அந்தப்புள்ளியே). பலர் ரகுமானின் இசையின் வீழ்ச்சிக்கு அவர் ஒரு international figure ஆனது என்றே கூறுகின்றார்கள். ஆனால் ஒரு தீவிர ரகுமான் இரசிகராய் இருந்த எனக்கு அவரது -தமிழ்த்திரைப்பட இசையின் வீழ்ச்சி-வைரமுத்துவின் பிரிவோடுதான் ஆரம்பிக்கின்றதெனவே எடுத்துக்கொள்ள முடிகின்றது. எப்போதும் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைப்பாளருக்கும் பாடலாசிரியருக்கும் இடையில் ஒரு கெமிஸ்ட்ரி இருக்கும் (யுவன் சங்கர் ராஜாவுடன் நா.முத்துக்குமாருக்கும், Harris ஜெயராஜிற்கு தாமரையும்) . தெ(ன்)னாலியோடு ரகுமானின் இசையைத் -தொடர்ந்து கேட்பவர்களுக்கு- நான் குறிப்பிடும் வீழ்ச்சியின் புள்ளி புரியக்கூடும்.

வைரமுத்து கனடாவுக்கு முதன்முறையாக வந்திருந்தபோது சந்திருக்கின்றேன். அப்போது உயர்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். அவரின் வருகையின்போது 'கவிதை'யென்று எதையோ எழுதி இறுதியில் -வழமைபோல நக்கீரர் பாணியில் - அவரைக் கொஞ்சம் சினம் செய்ய வைக்கின்றதாய் கேள்வியொன்றை விட்டிருந்தாயும் நினைவு. அந்தக் காலகட்டத்தில் எனது தந்தையார் இங்கு வெளிவந்துகொண்டிருந்த ஒரு பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டிருந்தார். என்னையும் வைரமுத்துவை சந்திக்கக் கூட்டிச் சென்றிருந்தார். வைரமுத்துவின் ஆசி பெற்றால், உடனேயே 'உலகப் புகழ்' பெற்றிடுவேன் என்ற நினைப்புடன் 'கவிதைகள்' சிலவற்றை கூடவே எடுத்துக்கொண்டு நானும் சென்றிருந்தேன். அப்போதுதான் எனக்கு இணையம் அறிமுகமாகி -ஒரு பெண்ணல்ல, பல பெண்களோடு- 'கடலை' போட்டுக்கொண்டிருந்தேன். இணையத்தில் Hi சொல்கின்ற எல்லாப் பெண்களுமே என் 'காதலிகள்' என்ற கனவில் நிறைய இணையஞ்சம்பந்தமான காதற்கவிதைகள் எழுதி என்னாளான 'சமூகசேவையை' கனடாத்தமிழ்ச் சமூகத்திற்கு இரவுபகலின்றி வழங்கியும்கொண்டிருந்தேன். கவிதைகளை பார்த்துவிட்டு 'உங்கள் மகன் இன்(ர)டநெட்டில் காதல் செய்யும் அளவுக்குப் போய்விட்டான்' என்று எனது தந்தையாரிடம் வைரமுத்து திரியைப் பற்றவைத்ததுமாய் நினைவு. வைரமுத்து பழகுவதற்கு எளிமையானவர் என்றே நினைக்கின்றேன். தமிழகம் சென்றபின்னும் எனது தந்தையாருக்கும் -எனது தந்தையார் வைரமுத்துவுக்கு அறிமுகப்படுத்திய- வைரமுத்துவின் தீவிர இரசிகரான ஒரு அக்காவிற்கும் கடிதங்கள் அனுப்பிக்கொண்டிருந்ததும் ஞாபகத்திலுண்டு.

எனினும், அந்த நேரத்தில்தான் வைரமுத்து 'ஈழத்தமிழர் விரும்பினால் அவர்களுக்கான் தேசியகீதத்தை எழுதிக்கொடுப்பேன்'..., 'விரைவில் வன்னி சென்று ஈழத்தமிழர் காவியத்தை எழுதுவேன்' போன்ற 'பிரபல்யம்' வாய்ந்த பேச்சுக்களையும் பேசியவர். வினை விதைத்தால் வினை அறுக்க வேண்டியிருக்கும் என்பதற்கிணங்க ஒரு கவிதா நிகழ்வில் சக்கரவர்த்தியின் விமர்சனத்தில் மோசமாய் அடிவாங்கியவர் ('தண்ணீர் தேசத்தைப் பாடிவிட்டு எங்கள் கண்ணீர் தேசத்தை கை கழுவிவிட்டவரே...' இன்னும் நீளும்). இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறவிருந்த கவிதா நிகழ்வு -இதன்பின்- அடுத்த நாள் தடை செய்யப்பட்டது. அதனால் -நான் சென்ற அடுத்த நாள்- வைரமுத்துவின் பேச்சை மட்டுமே கேட்க முடிந்தது. எனினும் அவரது பேச்சுத் திறன் மிகவும் இரசிக்கத்தக்கதாய் இருந்தது. பேசும் கணங்கள் முழுதும் கூட்டதை அப்படியே அசையாமல் கட்டிவைப்பது என்ற வித்தையை -மேடைகளில் பேசிப் பேசி கொல்லும் பல ஈழத் தமிழர்கள்- வைரமுத்து போன்ற தமிழகத்தவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம் (அப்படி நான் இரசித்த் இன்னொருவர் பெரியார்தாசன்).

இன்றைய காலத்தில் வைரமுத்து விகடனில் 'தேவர்' இனப்பெருமைகளை விதந்து எழுதும் 'காவியங்களில்' எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை. அவற்றை வைரமுத்து எழுதக்கூடாது என்று நிராகரிக்கும் எண்ணமில்லை. எத்தனையோ பிராமணிய படைப்புக்களை காலங்காலமாய் அவர்களின் மொழியிலேயே ஏற்றுக்கொண்டு வாசித்திருக்கின்றோமல்லவா? சிறுவயதில் தமிழகத்தில் இருக்கும் அனைவரும் பிராமணியப்பாசை மட்டுமே பேசுவார்கள் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். எனெனில் எனக்குக் கிடைத்த தமிழகப் படைப்புக்கள் பெரும்பானமையான்வை அந்தமொழியையும் அவர்களின் பெருமைகளையும் மட்டுமே பேசிக்கொண்டிருந்தன.

வைரமுத்து..., கண்ணதாசன், எம்.எஸ்.வி போன்றவர்கள் 'கூத்தடித்தது' மாதிரி பெண்களைச் சீரழிக்காது -இயன்றளவு பெண்களை அவர் மதித்துக்கொண்டிருப்பது- எனக்குப் பிடிததமானது. மேலும் அவரது சுயசரிதத்தில் (பெயர் மறந்துவிட்டது, 'வானம் எனக்கொரு போதிமரமா?' 'இதுவரை நான்') பச்சையப்ப்பா கல்லூரியில் மனிதர்களை விலத்தி தனிமையுடனும், அங்கிருந்த மரங்களோடும் உரையாடிக்கொண்டிருந்த வைரமுத்து என்ற இளைஞன் -எனக்குள்ளும் எனது பதின்மங்களில் இருந்ததால்- வைரமுத்துவோடு சிநேகிக்க முடிகின்றதோ தெரியவில்லை.

(குழலி, நீங்கள் விரும்பியமாதிரி நீண்டதாய் எழுதாமல் இயன்றளவு சுருக்கமாய் எழுத இதில் முயற்சித்திருக்கின்றேன் :-))

இன்மையின் இருப்பை இசைத்தல்

Tuesday, January 09, 2007

புத்தக அலுமாரியில்
பெயரறியாப் பூச்சிகள குடிபெயர்கின்றன
புததகமொன்றைத் தொலைப்பதென்பது
காலம் வரைந்த வரைபடத்தின் கோடொன்றை பறிகொடுப்பதாகும்
அன்றொரு பூச்சியை நசுக்கிக்கொல்கையில்
இரத்தம் வராதது ஆச்சரியமாயிருந்தது
பின்னாளில் என் வரைபடத்திலிருந்து
இந்நாட்டுப்பூர்வீகக்குடியொருவன் காணாமற்போயிருந்தான்.
---------------------------

மாவிளக்குப்போட்டு சுவைக்க
திருவிழாக்கள் வரும்
எதிர்பார்க்காத் தருணத்தில்
விரலநீவி கண்ணசைத்து கற்றைகோதி கரைவாய்
என் நாசியைப் பின்தொடர்வது மாவிளக்கு நெய்யா
இல்லை நம்முடல்கள் நேற்றிரா பகிர்கையில் கசிந்த வியர்வையா?
கடவுளர் உக்கிரவிழி உருட்டினாலும்
தூண்களில் விழித்திருக்கும்
முலைதிறந்த சிலைகளுக்கும்
பொங்கிப் பிரவாகரிக்கும் காமமுண்டு
விலக்கப்பட்ட மூன்றுநாட்களையும் சேர்த்து.
---------------------------

சதுரம் சதுரமாய் வரைந்த பெட்டிகளில்
முன்னும் பின்னுமாய் நகர்ந்தபடியிருக்கின்றான் சிறுவன்
அவனது தங்கையொருத்தி சதுரங்களில் வட்டங்களை வரைகின்றாள்
தோற்றுப் போக விரும்பா எத்தனத்துடன்
புதிது புதிதாய் சதுரங்களை ஆக்குகின்றான் சிறுவன்
யாரோவொருவர் இறுதியில் அழப்போவதை பார்க்க விரும்பாது
முகத்தை வேறுதிசையில் திருப்ப
அதிர்கின்றது மனது
சதுரங்களும் வட்டங்களும் முந்நூற்றறுபது பாகையினால் ஆனது.
---------------------------

உன்னுடைய பட்டியலில்
இல்லாமற்போய்க்கொண்டிருக்கின்றேன் நான்
தவிர்க்கப்படும் சந்திப்புக்களிலிருந்து
உலர்ந்துகொண்டிருப்பது கதகதப்பான வாசம்
புரட்டாதிச் சனிக்கு காகாவென்று அழைக்க
வந்து தரைபரவும் ஊர்க்காகங்களின் அலகுகளுக்குள்
சிதைந்துகொண்டிருப்பது மனிதவுணர்வுகள்
அரளிக்காய் அம்மியில் அரைத்துக்குடித்தவளுக்கு
ச்வர்க்காரத் தண்ணீர் பருக்கியது போல
உனக்கும் எனக்குமான ஸ்நேகிதம்.
---------------------------

(2006)
(முன்னர் பதிவிலிட்டு திருத்தங்களுக்காய் மறைத்தது)

அகதி

Monday, January 08, 2007

பல்வேறு கனவுகள் உலாவித்திரிந்த வெளியில்
நானுமொரு மழலைக்கனவாயிருந்தேன்
கனவுகளுக்கு மொழியோ நிலமோ அடையாளங்களாவதில்லை
ஆதாமும் ஏவாளும் பிணைகையில்
கண்ட முதற்சாட்சியென கோபங்கொண்டான் சாத்தான்
தங்களுக்கான சுருக்குக்கயிறுகள்
மழலைகள் சொந்தம் கொண்டாடவிரும்பாத மொழியிலும் நிலத்திலும்
இரவுபகலின்றி தயாரிக்கப்படுவதாய்
வன்மத்துடன் துப்பாக்கிகளில் புகுந்து துரத்தத்தொடஙகினான் சாத்தான்
இவ்வாறாகத்தான்
என்னைப்போன்ற அகதிகளின் கதை
ஒரு தீவு தேசத்திலிருந்து ஆரம்பித்தது.


....................

நண்பர்களுக்கு,
திங்கள் காலை எழும்பி அஞ்சல்களை பார்வையிட்டபோது, நட்சத்திர வாழ்த்துக்கள வந்திருந்தன. நானறியாமலேயே நட்சத்திரமாக்கப்பட்டதை அறிந்தது உண்மையில் பேயறைந்தமாதிரியே எனக்கு இருந்தது (விடிகாலை வருகின்ற பிசாசுக்கு என்ன பெயர்?). அச்சமயம் மெஸஞ்சரில் இருந்த தமிழக நண்பரையும் வேறு யாரோ என்று நினைத்து வணக்கம் சொல்லி புதுவருட வாழ்த்துச்சொல்ல, நண்பரும் 'தலைவா, இன்னும் மப்புக் கலையவில்லையா?' என்று அன்போடு என் நிலையை கேட்டறிந்துகொண்டார். சடங்கு, சம்பிரதாயம் என்பவற்றில் நம்பிக்கையில்லை என்று அடிக்கடி எழுதிக்கொண்டிருப்பதைப் பரீட்சித்துப் பார்க்கத்தான் தமிழமணத்தார் இப்படி முறையான அறிவித்தல் கொடுக்காது தேர்ந்தெடுத்தார்களோ தெரியவில்லை. அவரவர்க்கு ஆயிரம் சோலிகள் இருப்பது புரிந்தாலும் இவ்வாறு செயததது தனிப்பட்டவளவில் எனக்கு அவ்வளவு உவப்பானதில்லை என்று உரியவர்களிடம் குறிப்பிட்டுவிட்டே இதை எழுதுகின்றேன். புலம்பெயர்ந்து ஒரு தேசத்தில் அகதியாக இருப்பதாலே எனக்கான சுயஅறிமுகத்தையும் இல்லாமலே விட்டிருக்கின்றேன் :-). தொடர்ந்து இந்த வாரத்துக்கு தமிழ்மண நட்சத்திரத்துக்கான விதிகளுக்கமைய எழுதமுடியுமா தெரியவில்லை. இயன்றளவு முயற்சிக்கின்றேன்.

வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் நன்றி நண்பர்களே.

சே குவேரா

Saturday, December 30, 2006

-El Che: Investigating a Legend என்ற ஆவணப்படத்தை முன்வைத்து-

சே குவேரா: அவரை நேசிப்பவர்களுக்கு மட்டுமல்ல அவரை எதிர்ப்பவர்களையும் தொடர்ந்து ஏதோ ஒரு விதத்தில் பாதித்தபடியே இருக்கின்றார். நியூயோர்க் ரைம்ஸ் குறிப்பிட்டதுமாதிரி, 'சே குவேரா அவர் வாழ்ந்த காலத்தில் அல்ல; அதற்கப்பாலான -30 வருடங்களின்பின் தான்- இன்னும் பிரபல்யமாக இருக்கின்றார்' என்ற குறிப்பு கவனிக்கத்தக்கது. கனடீய நெறியாள்கையாளரால் எடுக்கப்பட்ட El Che: Investigating a Legend என்ற இவ் ஆவணப்படும், சே குவேராவின் குறிப்புக்களினூடாக மட்டுமின்றி அவரை நேரடியாகப் பரீட்சயமானவர்களின் குரல்களினூடாகவும் சே என்ற ஆளுமையைப் பதிவு செய்கின்றது.

இவ் ஆவணப்படும், சே இறந்த 30 வருடங்களின் பின், பொலிவியா அரசாங்கமும் உண்மையை ஏதோ ஒருவகையில் ஒப்புக்கொண்டு சேயைக் கொன்று புதைத்த இடத்தை அடையாளம் காட்டிய இடத்திலிருந்து ஆரம்பிக்கின்றது. சேயினது ஆரம்பக்குறிப்புக்களான மோட்டார் சைக்கிள் டயரிக்குறிப்புக்களிலிருந்து இப்படம் ஆரம்பித்தாலும் அந்தச் சம்பவங்களை விரைவாகக் கடந்து போகின்றது. ஏற்கனவே அந்தச் சம்பவங்கள் திரைப்படமாக்கப்பட்டதால் அப்படி நேர்ந்திருக்கலாம். சேயின் ஆளுமையில் அந்தப்பயணம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்றாலும், சே பிறகு குவாத்தாமலாவில் சந்திக்கும் அரசியல் ஆளுமை மிக்க பெருநாட்டு பெண்ணுடனான (Hilda) தொடர் விவாதங்களினூடாகத்தான் அவரின் அரசியல் சித்தாந்தப் பயணங்கள் தொடங்குகின்றது. மார்க்சின் மீதான பெருவிரும்பும், ஏகாதிபத்தியம் மீதான எதிர்ப்பும் அங்கேதான் சேயில் ஆரம்பிக்கின்றது. ஹில்டாவை சே திருமணம் செய்து அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கின்றது.


che
பிறகு முதலாவது கியூபாப் புரட்சி தோல்வியில் முடிவுற்று சிறையில் இரண்டு வருடங்கள் கழித்த பிடலை மெக்சிக்கோவில் சே சந்திக்கின்றார். அதன்பின்னர் கியூபாப் புரட்சி நடக்கின்றது. கியூபாப் புரட்சி மிகக்குறுகிய காலத்தில் நடந்தது என்று நினைத்துக்கொண்டிருந்த -எனக்கு- Sierra Maestra மலைப்பிரதேசத்தில் வருடக்கணக்கில் தங்கியிருந்து, தமக்கான ஆயுதங்கள், ஆட்சேர்ப்பு, வானொலி பிரச்சாரம் என்று நெடிய விடயங்களை கியூபாப் புரட்சியாளர்கள் செய்திருக்கின்றார்கள் என்பது -என்னளவில்- ஆச்சர்யமாயிருந்தது. பிறகு காஸ்ரோவின் ஆணைப்படி, அவரது முக்கிய லெப்டினங்களான சேயும் இன்னொருவரும் வெவ்வேறு நகரங்களினூடாக ஹவானாவை அடைய முயற்சிக்கின்றனர். அங்கேதான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த -450 கிலோமீற்றர்கள் நடந்து- சான்ரா கிளாராவை சே தனது தோழர்களுடன் வந்து சேர்கின்றார். அந்தச் சமயத்தில்தான் ஆயுதத் தளபாடங்களுடன் வருகின்ற புகைவண்டியைத் தாக்கி கைப்பற்ற, மிக முக்கிய தளமான சான்ரா கிளாராவும் பின் வீழ்கின்றது. ஒரு வைத்தியரான சே, திறம்பட போராட்டத்தை நடத்தும் ஆயுதப்போராளியாக அதில் பரிணமிக்கின்றார்.

சேயின் ஆளுமையில் கறை என -ஒரு தனி மனிதரால் நினைக்கத்தோன்றும்- பஸ்டிட்டா ஆதரவாளர்களை கழுவிலேற்றும் பணி கியூபாப்புரட்சியின்பின் நிகழ்கின்றது. 'புரட்சியின் பெயரால்..' என்று காஸ்ரோவுடன் சேர்ந்து சேயும் அவர்களுக்கான தீர்ப்பை எழுதுகின்றார். காஸ்ரோவுக்கு அடுத்த முக்கிய ஆளுமையாக சே கியூபாவில் வளர்கின்றார். எனினும் ஏகாதிபத்திய எதிர்ப்பே முக்கியம் என்பதிலும் அமெரிக்கா முதன்மையான எதிரி என்ற விவாதங்களிடையே சேயிற்கும் பிடலுக்கும் முரண்கள் எழுகின்றன. கியூபாவுடனான தங்கள் உறவு முறிந்ததற்கு பிடலை விட சே முக்கிய காரணமென அமெரிக்காவும் குற்றஞ்சாட்டுகின்றது. பொருளாதாரத் தடை, மற்றும் கியூபாவின் முக்கிய ஏற்றுமதியான கரும்பை வாங்குவதில்லையென அமெரிக்க முடிவெடுக்க, சோவியத் ஒன்றியம் கியூபாவின் புதிய அரசுக்கு கரும்பை தாங்களே இறக்குமதிசெய்து கைகொடுக்கின்றது. ஒரிடத்தில் கியூபாவில் நடந்தது என்ன என்று கேட்கப்படுகின்றபோது சே நகைச்சுவையாக so-CIA-list revolution என்று வார்த்தைகளைப் பிரித்துப் பதிலளிப்பார்.

ஒரு கம்யூனிஸ்ட் என்பவன் எப்போதும் களத்தில் நின்று மக்களுடன் போராட வேண்டும் என்று கூறி பலவேறு வகையான வேலைகளை ஒரு சாதாரண குடிமகனாய் நின்று செய்து, இப்படி எல்லா அமைச்சுப் பொறுப்பில் இருப்பவர்களும் களத்தில் இறங்கவேண்டும் என்று கூறவும் சே செய்கின்றார். தேசிய வங்கிகளின் தலைவராய் இருக்கும் சேயிடம் ஒரு அந்நிய நாட்டு நிருபர் are you an economist? என்று கேட்கும்போது no, i'm a communist என்று பதிலளிப்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும். எனினும் சேயினது பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தோற்றுப்போக, பிடல் தங்கள் நாட்டு புரட்சியின் தூதுவராய் பலவேறு உலகநாடுகளுக்கு சேயை அனுப்புகின்றார். அந்தச் சுற்றுப்பயணத்தில்தான் சே, குருசேவ்,மாவோ, ரிற்றோ, நாசர், நேரு போன்றவர்களைச் சந்திக்கின்றார். எனினும் திரும்பி வருகின்றபோது ஆபிரிக்காவில் நடக்கும், ஆபிரிக்கா-ஆசிய மாநாட்டில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிடுகின்றார். கம்யூனிச நாடுகள் தங்கள் லாபநட்டங்களைப் பார்த்து மூன்றாம் உலகநாடுகளுடனான வர்த்தக உறவுகள் வைத்திருக்கக்கூடாது; மேலும் அந்நாட்டுகளின் புரட்சியிற்கு தேவையான ஆயுதங்களையும் இலவசமாய் கொடுக்கவேண்டும் என்றும் கூறுகின்றார். சோவியத் ஒன்றியத்தை நேரடியாகக் குறிப்பிடாவிட்டாலும், சோவியத் மீதான விமர்சனமாய் அது பலரால் பார்க்கப்படுகின்றது (இவ் ஆவணப்படுத்தில் குறிப்பிடப்படாவிட்டாலும், சே பின்னாட்களில் ஆகர்சிக்கப்பட்ட சீன கம்யூனிசமே, சோவியத் எதிர்ப்புக்கும் பிடலோடான பிளவுகளுக்கும் ஏதோவொரு வகையில் காரணமானது என்பது கவனத்தில் கொள்ளக்கூடியது). அந்த எதிரொலி பிடல் சேயை விமான நிலையத்தில் சந்திக்கும்போது படம்பிடிக்கப்பட்ட முறையிலே தெளிவாகத் தெரிகின்றது. பயணத்தின் முடிவில் கிட்ட்டத்தட்ட இருபது மணித்தியாலங்கள் எந்த கமராவும் அனுமதிக்கப்படாமல் சேயிற்கும் பிடலுக்கும் இடையில் உரையாடல் மூடிய அறையினுள் நிகழ்கின்றது. அதன்பின்னராக சே யின் இருப்பு கியூபாவின் எந்த நிகழ்விலும் இல்லாமற்போகின்றது. இற்றைவரை பிடலுக்கும் சேயிற்கும் நிகழ்ந்த தனிப்பட்ட உரையாடல் இரகசியமாகவே இருக்கின்றது.

தொடர்ந்து சேயின் இருப்பு கியூபாவில் இல்லாததால் கியூப மக்களிடையே பலவேறு வதந்திகள் சேயைப் பற்றி பரவுகின்றது. ஒருகட்டத்தில், பிடல் உண்மையை உடைக்கின்றார். சேயின் முக்கியத்துவம் பெற்ற -பிடலுக்கான கடிதம்- பொது அரங்கில் வெளியிடப்படுகின்றது. தான் தனது எல்லாப் பதவிகளிலிருந்து விலகுகினறேன்; இனி கியூபவாசியாக தான் இருக்கப்போவதில்லையென்ற சேயின் சாட்சியம் வாசிக்கப்படுகின்றது. இதற்கு எப்படி சேயினது எதிர்வினை இருந்தது என்பதை அந்தக் காலத்தில் சேயுடன் கொங்கோவில் இருந்த ஒரு தோழரால் இப்படிக் கூறப்படுகின்றது: சே அந்தக் கடிதம் தனது இறப்பின் பின்னே வெளியிடப்படும் என்று நம்பிக்கொண்டிருந்தார். அந்தக் கடிதம் பொதுவில் வாசிக்கப்பட்டதை அறிந்தபோது சே கூறியது, 'ஸ்ரானிலைப் போல இன்னும் பலர் தமது திருஉருவங்களை வளர்க்க பிரியப்படுகின்றார்கள் போலும்' என்பது. இது பிடல் மீதான விமர்சனம் என்பது எல்லோருக்கும் தெரியும். கொங்கோவில் சேயினது புரட்சியிற்கான திட்டங்கள் தோற்கின்றன. எனினும் சேயிற்கு தனது கடிதம் பிடலால் வாசிக்கப்பட்டதால் கியூபாவுக்கு வரவும் சங்கடமாயிருக்கின்றது. இறுதியில் சே அடுத்த திட்டத்திற்காய் பிடலிடம் வந்து சேர்கின்றார். அவரிடம் ஆளுமை மிக்க இருபது(?) கியூப வீரர்களை பிடல் ஒப்படைக்கின்றார். சே பொலிவியா போய்ச் சேருகின்றார். இலத்தீன் அமெரிக்கா முழுவதற்குமான கம்யூனிசப்புரட்சியென்ற தனது பெருங்கனவை விசாலிப்பதற்காய். எனினும் அவர் தனக்கு ஆதரவளிக்கும் என்று நம்பிய பொலிவியா கம்யூனிசக் கட்சி இவருக்கு ஆதரவு வழங்காது கைவிடுகின்றது (அக்கட்சியில் சோவியத்து கேஜிபியின் ஊடுருவல் இருந்ததாய் எங்கையோ வாசித்ததாய் நினைவு). சேயினது உடனடித்திட்டம் பொலிவியாவில் இருக்கும் அரசின் ஆட்சியை கவிழ்ப்பது அல்ல; இலத்தீன் அமெரிக்கா நாடுகளின் புரட்சியிற்கான ஒரு பெரும் தளத்தை பொலிவியாவில் அமைப்பதே அவரது முதன்மையான நோக்கமாயிருந்தது. பொலிவியா ஜந்து இலத்தீன் அமெரிக்கா நாடுகளுக்கிடையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போதுதான் வியட்நாமிய போரும் தீவிரமடைகின்றது. ஒன்று... இரண்டு... பல நூற்றுக்கணக்கான வியட்நாம்களை.... நாம் உருவாக்கவேண்டும் என்று சே பேச்சொன்றில் குறிப்பிடுகின்றார். பல வியட்நாம்களை உருவாக்குவதென்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சியை விரைவுபடுத்தவேண்டும் என்றவகையிலும் வாசித்துணரலாம்.

சே யினது தோழர்கள் கைப்பற்றப்பட, அவர்களின் உதவி மற்றும் ஆயிரக்கணக்கான பொலிவியா வீரர்களின் சுற்றிவளைப்பில் சே காயத்துடன் பிடிக்கப்படுகின்றார். நீதிமன்றத்தில் விசாரணைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒரு இரவு சிறு பள்ளியொன்றில் தங்கவைக்கப்படும்போது மேலிடத்திலிருந்து விசாரிக்கும் பொலிவியா அதிகாரிக்கு தகவல் வருகின்றது, எந்த ஒரு சிறைக்கைதியும் உயிருடன் திருப்பிக் கொண்டுவரக்கூடாது என்று. சேயிற்கு வேட்டுக்கள் தீர்க்கப்படுவதற்கு முன் சிஜஏ அதிகாரியின் வரவு இருந்தது என்பதை பொலிவியா பொலிஸ் அதிகாரி ஆவணப்படத்தில் உறுதிப்படுத்துகின்றார். சேயின் இறுதிக்கணத்தை நேரடியாகப் பார்த்த பள்ளியாசிரியை ஒருவரும் அதில் உரையாடுகின்றார். பிறகு ஒரு பகலும் இரவும் சேயினது உடல் பொலிவியா மக்களுக்கு ஒரு 'துரோகி'யைப் போல காட்சிக்கு -எந்த மரியாதையும் இல்லாது- வைக்கப்படுகின்றது. சேயினது உயிரற்ற உடலைப் பார்க்கும்போது கிறிஸ்துவை சிலுவையில் அறைந்ததுமாதிரியான காட்சிதான் நினைவுக்கு வருகின்றது. விழிகள் மூடாது உதடுகளில் சிரிப்பு மலர்ந்தபடிதான்... இறந்தபின்னும் சே காட்சிதருகின்றார். அந்தக் கடைசிக்கணங்களைப் பார்க்கின்ற எவரும் சே இறந்துவிட்டார் என்று கூறமுடியாதபடி சே 'உயிர்ப்புடன்' இருப்பார்.

ஆவணப்படம் என்றாலே அலுப்பூட்டும் என்று தோன்றாவண்ணம் இப்படம் எடுக்கப்பட்டிருக்கின்றது (அல்லது சேயின் மீதான ஈர்ப்பால் அலுப்புத் தெரியவில்லையோ தெரியாது). சேயினது பல நேரடி நிகழ்வுகள் அப்படியே பதிவாக்கப்பட்டுள்ளன. ஒரு கூட்டத்தில் சே, நானொரு கவிதை சொல்லப்போகின்றேன் என்று சிறுவனைப் போல வெட்கமுறுவதும், பிறகு பயப்பிடவேண்டாம் இது எனது கவிதையல்ல என்று கூறியபடி கவிதையொன்றை வாசிப்பதும், சே தனது தகுதிகளை மறந்து சாதாரணமாய் இருக்க முயற்சித்திருக்கின்றார் என்பதைக் கவனிக்கலாம். சேயினது நெருங்கிய உறவுகள், முக்கிய தோழர்கள் -ஏன் பிடல் கூட சேயைப் பற்றி உரையாடுவது என- அனைத்தும் இந்த ஆவணப்படத்தில் சேர்க்கப்பட்டிருப்பது, ஏதோ சேயினது காலத்தில் நாமும் உலாவிவிட்டு வந்ததுமாதிரியான உணர்வினைத் தருகின்றது. சே தனது குழந்தைகள் மீது மிகப்பெரும் விருப்புடையவராக இருந்தார். அவரது இரண்டாவது திருமணத்தில் ஜந்து குழந்தைகள் அவருக்கு இருந்தார்கள். தனக்கு ஒன்பது குழந்தைகள் வேண்டும் அப்போதுதான் ஒரு பேஸ்போல் அணியை அமைக்கமுடியும் என்று தன்னிடம் நகைச்சுவையாக கூறுவார் என்று சேயினது துணைவியார் ஓரிடத்தில் நினைவுபடுத்தும் காட்சியும் உண்டு.

ஒரு கம்யூனிசப் புரட்சியாளன் எப்படி இருப்பான் என்பதை சே தன் வாழ்வினூடாக நிரூபித்துவிட்டுப் போயிருக்கின்றார். ஒரு புரட்சியாளன் வாழும்போது அல்ல; அவன் சாகும்போதுதான் உலக மக்களுக்கு நிறைய விடயங்களைச் சொல்லிச் செல்கின்றான் என்பது சேயினது இறப்பின் பின்பான அவரது பெரும் எழுச்சி நமக்குச் சாட்சியம் சொல்கின்றது.

(தோழிக்கு, for your birthday)

பெருந்தலைகள் உருட்டும் ஆட்டத்தில்....

Friday, December 29, 2006

'"இந்த மனிதருக்கு ஈழத் தமிழ் எழுத்து பற்றி என்ன தெரியும்? தெரியும் என்று காட்டிக்கொள்ள தன்னைத் தயார் செய்துகொண்டு வந்திருக்கிறாரா?" என்று பரிட்சிக்கவே டோரண்டோவில் நடந்த கூட்டத்திற்கு வந்ததாக ஒருவர் ஒரு கூட்டத்தினரின் பிரதிநிதியாக ஒரு வாக்குமூலம் தந்துள்ளார். இம்மாதிரி மனிதர்களும் எந்த சமூகத்திலும் காணப்படுவார்கள். அவர்களிடம் காணும் பாரம் எதுவோ அதற்குத் தகுந்த பக்ஷம் என்னதாக இருக்கும்.'
(வெ. சாவின் இக்கட்டுரையை விரிவாக வாசிக்க....)

வெங்கட் சாமிநாதனின் முன்னுரையை வாசித்தபோது 'அடியேனையும்' இந்த முன்னுரையில் குறிப்பிடுகின்றாரோ என்ற ஐயம்வர ப்ளாஷ்பாக்கை சுழலவிட்டேன் (எனது கட்டுரையைக் கீழே தந்திருக்கின்றேன்). 2004ல் இயல்விருதுக்காய் வெ. சா ரொரண்டோ வந்தசமயம், இதுவரை ஈழத்தமிழ் படைப்புக்கள் குறித்து எதையும் எழுதவில்லை என்ற கேள்வியை நான் நேரடியாக கேட்டதாய் நினைவினில்லை. 'அணங்கு' நிகழ்வு பற்றித்தான் ஒரேயொரு கேள்வியை அவரிடம் நேரடியாக கேட்டிருக்கின்றேன். மேலும் தளம்பாத நிறைகுடம் என்று வெ.சாவினால் விபரிக்கப்பட்ட நண்பர்தான், 'நீர் கேட்ட கேள்வி நியாயந்தான் இன்னும் விரிவாக கேட்கவேண்டும்' என்று கேள்விகளின் பின்பான நேரத்தில் -இன்னும் கேளும் என்று- உசுப்பிவிட முயன்றவர். எனினும் உந்த உசுப்பலுக்கு எல்லாம் நான் மயங்கமாட்டேன் என்று வாங்கவேண்டிய புத்தகங்களைத் தேடியெடுக்கப் போய்விட்டேன் என்பது வேறுவிடயம்.

அந்தக் கூட்டத்திற்கு போனபோது வெ.சா, பா.அகிலன், சனாதனன், நட்சத்திரன் செவ்விந்தியன் போன்றோரின் படைப்புக்களைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கின்றார் என்ற புரிதலோடே சென்றிருந்தேன். எனது ஆதங்கம், அவருக்குப் பரீட்சயமான ஈழ/புலம்பெயர் படைப்புகள் குறித்து அந்தக்கூட்டத்தில் பேசவில்லை என்பதாக இருந்தது என்பதை மீண்டும் நினைவுறுத்திக்கொள்கின்றேன்.

'நாடகங்கள் பற்றிய அவரது ஆழந்த அனுபவங்கள்/அறிவு, புரிசை தம்பிரான் மீது அவருக்கு இருக்கும் மதிப்பு அவரது பேச்சிடையே தெளிவாய்த்தெரிந்தது. ஆனால் 'கருஞ்சுழி' எழுதிய ஆறுமுகத்தையோ, ந.முத்துச்சாமியையோ அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்று தமிழ்நாட்டில் அநேகர் foundations மூலம் fund எடுத்து எல்லாக்கலைகளையும் அழித்தபடியிருக்கிறாகள் என்று அவர் சொல்வதில் உண்மை இருக்கிறது போலத்தான் இருக்கிறது (கிட்டத்தட்ட இதேகருத்தைத்தான், முருகேசபாண்டியனுன், மு.ராமசாமியைப் பற்றி உயிர்மையில் எழுதும்போது குறிப்பிட்டிருந்தார் என்று நினைவு). வெ.சாமியின் ஒரு கருத்து சற்று நெருடலாயிருந்தது. கூத்தின் ஆழமான மரபிலிருந்து வரும் ஒருவர் இன்னொரு வித்தியாசமான முயற்சியில் ஈடுபடும்போது அவரால் ஏற்றுக்கொள்ளமுடியாதிருக்கிறது (அதிகம் படிக்காத, கூத்துக்கலையின் பின்னணியிலிருந்து வருபவர் நவீன நாடகங்களிற்கு செல்வதை -அவர் விரும்பித்தான் போகிறார் என்றால்- ஏற்றுக்கொள்ளாததில் வெ.சாமியின் சாதியபின்புலம் ஒரு காரணமாய் இருக்கக்கூடும்).'

என்று வேறொரு வாசிப்பை முன்வைத்துக் கூறியதை இதுதான் சந்தர்ப்பம் என்று -வெ.சாவின் 'சாதிப்பின்புலமும் காரணமாயிருக்கலாம்' என்ற ஒற்றை வசனத்தை வைத்து- ஜெயமோகனும் என்னை வெருட்டும் ஆட்டத்தில் களமிறங்கியிருந்தார் (பிறகு விவாதம் வேறு திசையில் சென்றததால் அந்த வார்த்தைப் பிரயோகத்திற்கு நான் மன்னிப்பு கேட்டு நீக்கவும் செய்திருந்ததாயும் நினைவு). ஆனால் இற்றளவும் வெ.சாமிநாதன் தனது சாதி அடையாளங்களை மறந்து/மறுத்து வந்துவிட்டார் என்பதை ஒப்புக்கொள்ளமாட்டேன். இங்கே வரும் 'விளம்பரம்' என்ற சஞ்சிகையில் வெ.சா அவ்வப்போது பத்திகள் எழுதி வருகின்றவர். சில மாதங்களுக்கு முன் தலித் இயக்கங்கள், திருமாவளவன், கிருஸ்ணசாமி போன்றோரை 'வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல' தனது உயர்சாதி விமர்சனப்பார்வையால் நுட்பமாய் கீழ்நிலைக்கு தள்ளியிருந்தவர். மேலே தரப்பட்ட கட்டுரையில் கூட ஈழம் போன பெரியாரைப் பற்றிய வெ.சாவின் குறிப்புக்களிருந்து அந்த ஆதிக்கப்பார்வையை அறிந்துகொள்ளலாம். இன்னவும் பெரியார் விவாதித்த பார்ப்பான்/பார்ப்பனியம் என்ற வித்தியாசத்தைக் கூட பிரித்துபார்க்கமுடியாமல் ஏதோ எல்லா பார்ப்பனர்களையும் பெரியார் நிராகரித்தார் என்று குழந்தை போல கூறிக்கொண்டிருப்பது வெ.சா நெருங்கி நிற்கும் அரசியல் புள்ளியை அறிந்துகொள்ள இன்னும் உதவும். ஈழத்திலிருந்து வரும் எவரும் பெரியாரின் பார்ப்பான்/பார்ப்பனியம் என்ற உரையாடலை வெள்ளாளன்/ வெள்ளாள ஆதிக்கம் என்ற புள்ளிகளில் இணைத்து பார்க்க முடியும், ஒரு அமெரிக்க கறுப்பினத்தவனின் வாழ்க்கையை தலித் தன் வாழ்க்கையோடு ஒத்திசையச் செய்வது மாதிரி. மேலும் புலம்பெயர்ந்தவர்கள் பாஸிசக் கரங்களுக்கு எதிராக எழுதுகின்றார்கள் என்று கூறுகின்ற வெ.சாவிற்கு தமிழ்நாட்டின் தலித் எழுத்துக்கள் என்னவாய் தெரிகின்றதாம்? அவரது கண்களுக்கு சினிமா வெறி கவிதைகள் மட்டுமே தெரிகின்றது. அதிகார மையங்கள் சாதி ஒடுக்குமுறையாளர்கள் போன்ற பாஸிசக்கரங்களுக்கு எதிராய் தமிழகத்து தலித்துக்கள், இடதுசாரிகள் நிறையவே எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை வெ.சாவிற்கு யாராவது நினைவுபடுத்தினால் நல்லது. ஆகக்குறைந்து இதைப் பிரசுரித்த 'முன்னாள் இடதுசாரிகளான' திண்ணை ஆசிரியர் குழாத்தைச் சேர்ந்தவர்களாவது வெ.சாவின் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கலாம்.

வெ.சாமிநாதனுக்கு குறிப்பு என்று எழுதியதுபோல அண்மையில் சா.கந்தசாமி ரொரண்டோ வந்தபோதும் அதுகுறித்து சிலவற்றை எழுத விரும்பியிருந்தேன். எனினும் ஏற்கனவே எதையோ எழுதப்போய் அது பெரும் விவாதமாய் நீட்சியடைந்து என் தலையெல்லாம் பெருந்தலைகளால் உருட்டப்பட்டதுபோல இதற்கும் நேர்ந்தால், எனது அஸின், பாவனா கனவுகளுக்கு என்னவாவது என்ற கவலையில் அமைதியாகிவிட்டேன் என்பதை ஒரு முக்கியமில்லாத குறிப்பாய் பதிவுசெய்துவிடுகின்றேன்.

வெ.சாவை முன்வைத்து நடந்த விவாதம் குறித்து விரிவாக அறிய இந்தப்ப்க்கத்திற்குச் சென்று வாசிக்கலாம்.

வெங்கட்சாமிநாதனுடன் ஒரு (வெற்று) மாலைப்பொழுது!
~ டிசே தமிழன்
-

எப்போதுமே இலக்கியக்கூட்டங்கள் வறட்சியாக இருக்கின்றபோதும், நேரங்கிடைக்கும்போதெல்லாம் இப்படியான கூட்டங்களிற்கு போகாமல் இருக்க மனம்விடுவதில்லை. இப்படியான ஒரு மனநிலையுடந்தான் வெங்கட்சாமிநாதனுடனான கலந்துரையாடலுக்கு சென்றிருந்தேன். போனதற்கு இன்னொரு காரணம், நிரம்ப புதுப்புத்தகங்கள் வாங்கலாமென்பது கூடத்தான்(எல்லாப்புத்தங்களையும் வாங்கிடவேண்டும் என்ற ஆசை ஏன் ஓர்போதும் நிறைவேறுவதில்லை? ) ஒவ்வொரு முறையும் தமிழகத்திலிருந்து இப்படியானவர்கள் வரும்போதெல்லாம், அவர்கள் ஈழத்தமிழர் இலக்கியம் பற்றி என்ன மதிப்பீட்டை வைத்திருப்பார்கள் என்ற curiosity எப்போதும் என் மனதில் அலைபாய்ந்தபடியிருக்கும். ஈழத்தமிழர்களின் படைப்புக்களை வாசிக்க வசதிகள், resources (வளங்கள்?) இல்லாதபோதும், இப்படி ஒரு புலம்பெயர்பயணம் வரும்போது, அங்கேயிருப்பவர்கள் ஏதாவது இவைபற்றி கேள்விகள் கேட்பார்களே என்று மனச்சாட்சி உறுத்த கொஞ்சம் home work செய்துவிட்டு விமானம் ஏறுவார்கள் என்னும் நம்பிக்கையை எவரும் இதுவரை பூர்த்திசெய்ததில்லை. அதற்கு விதிவிலக்குமல்ல வெ.சாமியும்.

ஒர் அறிமுகமும், அவரது பொழிப்புரையும் முடிய, வாருங்கள் எல்லோரும் சேர்ந்து கலந்துரையாடுவோம் என்று அழைப்பு விடுத்தாலும், வெ.சாமியிற்கு நல்ல நகைச்சுவை உணர்வு. ஒவ்வொரு கேள்வியிற்கும் பதில்களை கொஞ்சம் நக்கலும் நளினமாயும் வெட்டிப்பேசியபடி இருந்தார். அவரில் இரசித்த இரண்டு விடயங்கள், தனது கருத்தை மற்றவர்கள் ஓமோம் என்று சொல்லி தலையாட்டவேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை மற்றது நாடகங்கள் பற்றிய அவரது ஆழந்த அனுபவங்கள்/அறிவு. புரிசை தம்பிரான் மீது அவருக்கு இருக்கும் மதிப்பு அவரது பேச்சிடையே தெளிவாய்த்தெரிந்தது. ஆனால் 'கருஞ்சுழி' எழுதிய ஆறுமுகத்தையோ, ந.முத்துச்சாமியையோ அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்று தமிழ்நாட்டில் அநேகர் foundations மூலம் fund எடுத்து எல்லாக்கலைகளையும் அழித்தபடியிருக்கிறாகள் என்று அவர் சொல்வதில் உண்மை இருக்கிறது போலத்தான் இருக்கிறது (கிட்டத்தட்ட இதேகருத்தைத்தான், முருகேசபாண்டியனும், மு.ராமசாமியைப் பற்றி 'உயிர்மையில் எழுதும்போது குறிப்பிட்டிருந்தார் என்று நினைவு). வெ.சாமியின் ஒரு கருத்து சற்று நெருடலாயிருந்தது. கூத்தின் ஆழமான மரபிலிருந்து வரும் ஒருவர் இன்னொரு வித்தியாசமான முயற்சியில் ஈடுபடும்போது அவரால் அதை ஏற்றுக்கொள்ளமுடியாதிருக்கிறது (அதிகம் படிக்காத, கூத்துக்கலையின் பின்னணியிலிருந்து வருபவர் நவீன நாடகங்களிற்கு செல்வதை -அவர் விரும்பித்தான் போகிறார் என்றால்- ஏற்றுக்கொள்ளாததில் வெ.சாமியின் சாதியபின்புலம் ஒரு காரணமாய் இருக்கக்கூடும்).

தன்னைப் பாதித்ததைப் பற்றி மட்டும்தான் எழுதுவேன். சரியான விதத்தில் எழுதப்பட்டிருந்தால் மற்றையோரைப் போய்ச்சேரட்டும், இல்லாவிட்டால் காற்றில் போகட்டும், அதைப்பற்றி கவலையில்லை என்று வெ.சாமி சொன்னதில் ஒரு படைப்பாளியின் கம்பீரத்தைப்பார்க்கமுடிந்தது. ஈழத்தமிழ் இலக்கியங்கள் ஏன் அதிகம் தமிழகத்தில் பேசப்படவில்லை என்பதற்கு, வெ.சாமி அது arrogance என்று சொல்லப்போக இன்னொருவர் roughயாய் இருக்கிறது ignorance என்று மாற்றிச்சொல்லுங்கள் என்று மன்றாட இறுதியில் எந்த வார்த்தையில் சமரசம் செய்தார்கள் என்பதை யானறியேன் பராபரமே. ஆனால், கூட்டத்திலிருந்து ஒருவர் எழுப்பிய நுட்பமான கேள்வியை, 'நீங்கள் கூட ஈழத்தமிழர் இலக்கியம் பற்றி அந்தக்காலத்தில் கூட எழுதவில்லை' என்பதை வெ.சாமி சமார்த்தியமாய்த் தவிர்த்துவிட்டார். அது சரி, நீங்களெல்லாம் தமிழகத்து 'இலக்கிய ஜம்பவான்களின்' திருவாய்மொழி மலர்ந்து அங்கீகாரம் வரவேண்டும் ஏன் எதிர்பார்க்கிறியள் என்று கூட்டத்திலிருந்து இன்னொருவர் வீசிய கேள்வியில் நிரம்ப உண்மையிருக்கிறதுதானே.

வெ.சாமிநாதன், இன்றைய எழுத்தாளர்களில், யூமாவாசுகி, பெருமாள்முருகன், இமையம் பற்றி நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். முக்கியமாய் யூமாவாசுகியின் 'ரத்த உறவை' எல்லோரும் கட்டாயம் வாசிக்கவேண்டும் என்று சிலாகித்துச் சொன்னார். பெண்ணிய எழுத்துக்கள் பற்றியும் கேள்விகள் எழும்பின. வெ.சாமியிற்கு பெண்கள் இப்படி வெளிப்படையாக எழுதுவதில் எல்லாம் உடன்பாடிலை. Rice cooker ஆவி (நல்லவேளை பிரமீளின் ஆவியில்லை) மாதிரி எல்லாம் சீறிபாய்ந்து பின் தானாகவே அனைத்தும் அடங்கிவிடும் என்றார். சரி நீங்கள் பெண்கள் எல்லாம் இப்படி எழுதுகிறார்கள் என்று ஆளுக்கொரு கருத்துக்களை சொல்கிறியள், ஜே.பி. சாணக்யா போன்றவர்கள் எழுதும்போது எந்த பேச்சுமூச்சையும் காணவில்லையே என்று கேட்க, அதையெல்லாம் வாசிக்கவில்லை என்றும் அவற்றையெல்லாம் புறத்தள்ளுங்கள் என்றார். ஜெயமோகனின் எழுத்துக்களில் கூட இப்படியான சித்தரிப்புக்கள் எல்லாம் இருக்கிறதே என்று யாரோ கூற, அப்படி என்றால் அவற்றையும் வாசிக்காமல் தூக்கியெறியுங்கள் என்று கொஞ்சம் உரத்தகுரலில் கூறினார். (ஜெயமோகன் கவனிக்க, நீங்கள் வெ.சாமி முன்னட்டையோடு ஒரு சிறப்பிதழே சொல்புதிதில் வெளியிட்டும் அவர் உங்கள் கட்சி இல்லையாம். இப்படி எல்லாம் சொல்லவில்லை என்று வெ.சாமி தமிழ்நாட்டை மிதிக்கும்போது சொன்னால், record செய்த tape யாரிடமாவது இருக்கும் வாங்கி அனுப்பிவிடுகிறேன். ஆனால் பதிவுக்கட்டணம் இலவசமல்ல.

இபபடி இந்தக்கூட்டத்திலும், இன்னொரு பிம்பம் உடைந்துபோன அலுப்போடு வீடு வந்துசேர, நான் வாங்கிய புத்தகங்களின் பக்கங்களிலிருந்து வேறொரு உலகம் விரிவுகொள்கிறது. அவை ஒரு இலக்கியக்கூட்டத்தைவிடவும், ஒரு படைப்பாளியை விடவும் என்னுடன் அதிகம் நேசம் கொள்கின்றன.

(http://www.geotamil.com/pathivukal/djtonvenkatsaminathan_june2004.html)



எதிர்வினை!
வெ.சா. பற்றி தமிழனின் குறிப்பு...!


- ஜெயமோகன் -

எதிராளியின் வாதங்களை தங்களுக்கு சாதகமாக திரித்துக் கொள்வதை ஓர் உத்தியாக இடதுசாரிகளில் ஒரு சாரார் கடைப்பிடிப்பதுண்டு. அவ்வுத்தி மூலமே தோற்கடிக்கப்பட்ட மனிதர் வெசா. அதே உத்தி தொடர்வதையே தமிழனின் குறிப்புகள் காட்டுகின்றன. ஒரு பெரிய சிந்தனையாளாராக மலர்ந்திருக்க வேண்டிய வெ சாவை குறுக்கியது எதிரிகளின் இந்த உத்தியே. உதாரணாமாக வெசா 'உள்வட்ட சித்தாந்தம்' ஒன்றைக் கொண்டுவந்தார். அதாவது இலக்கியம் என்பது அனைவருக்கும் உரிய ஒன்றல்ல, அது அறிவார்ந்த தெரிவு ரசனை தேடல் கொண்ட சிறு உள்வடத்துக்கு உரியது, அந்த உள்வட்டமே இலக்கியத்தின் சாராம்சத்தை வெளியே கொண்டுசெல்லும் ஆகவே 'மக்கள் இலக்கியம்' என்று ஒன்று இருக்க முடியாது என்றார் அவர். இது மாத்யூ ஆர்னால்ட் காலம் முதல் உள்ள ஒரு முக்கியமான தரப்பு. இதில் எந்த வர்க்க சாதிய அடையாளமும் அவரால் தரப்படவில்லை. இதை பிராமணார்களுக்கு மட்டுமே இலக்கியம் தேவை என்று அவர் சொல்வதாக திரித்து பதினைந்துவருடம் இங்கே பிரச்சாரம் நடைபெற்றது. இப்போதும் நடக்கிறது. நான் என்றால் பேசாமல் இருந்துவிடுவேன். வெசா மீண்டும் மீண்டும் விளக்கம் சொல்ல முயன்று தன் வாழ்நாளை வீணாக்கிக் கொண்டார். தமிழனின் குறிப்பே உதாரணம். வெசா என்ன சொல்கிறார்? ஈழத்தமிழர் கூப்பிட்டார்கள் என்பதற்காக தயாரித்துக் கொண்டுவருபவன் ஈழ எழுத்தைப்பற்றி என்ன நினைத்தால் என்ன என்கிறார். தமிழன் எப்படி திரிக்கிறார்? தமிழ்நாட்டு விமரிசகன் ஈழ எழுத்தைப்பற்றி என்ன நினைத்தால் என்ன என்று வெ சா சொல்கிறார் என்ற தொனியில் இங்கேதான் சாதிவெறி போன்ற உள்நோக்கங்கள் உள்ளன. இதுவே தமிழில் உயரிய விவாதம் நிகழாமல் செய்து சிந்தனையை மழுங்கடிக்கிறது.

(http://www.geotamil.com/pathivukal/jeyamoganondj2.html)

கனவுகளை உடைத்து கரைபுரளும் வாழ்வு

Monday, December 25, 2006

'உனது கனவுகளுக்குள் சிக்கி சிதைந்து போகாதே. உனது மொழியை முற்றாய் இழந்துவிட்ட நிலையில் இனி உனக்கான எழுத்து என்பது சாத்தியமில்லை. ஒரு கட்டத்தில் எல்லா படைப்பாளியும் தான் எழுதுவதை நிறுத்திவிட்டு மீண்டும் தன்னை ஒரு நல்ல வாசகனாக ஆக்கிக் கொள்வதற்கான அவசியம் நேர்கிறது. கனவுகளை மீறிய வாழ்க்கை வெளியில் இருக்கிறது.'
(ரமேஷ்:பிரேமின் 'பேசப்படாத பூக்களுக்கு இனி மெளனங்களும் இல்லை')

உறவுகள் குறித்து எவ்வளவு நெருக்கமாயும் வியப்பாயும் பேசமுடியுமோ அதேயளவுக்கு சிக்கல்களும் வலிகளும் குழைந்தும் அவை குறித்து பேச முடியும். ஏதாவது ஒரு பூர்வீக நிலப்பரப்பின் பின்னணியில் பிறக்கின்ற மனிதனுக்கு அவன் விரும்பியோ விரும்பாலோ உறவுகள் என்று பெயரிடப்பட்டு பல இழைகள் பிறந்தவுடனேயே பிணைக்கப்பட்டு விடுகின்றன. அடையாள மறுத்தலைப் போல பிறப்பால் வருகின்ற உறவுகளை வெட்டிச் சிதைத்துக்கொண்டு போகமுடியுமெனினும், புதிதாய் மலரும் உறவுகளுக்கு அவனவன்களும், அவளவள்களும் மட்டுமே பொறுப்பாக முடிகின்றது. அவற்றை வளர்ப்பதும் சிதைப்பதும் அவரவர்களுக்கான உள்ளங்கைகளுக்குள் ஒரு பூவைப்போல பத்திரப்படுத்தப்பட்டிருக்கும் காலத்தினுள் புதைந்துகிடக்கின்றது.

இவ்வாறான ஒரு மார்கழிப்பொழுதில் குளிர் உதைத்து தன்னை வின்ரர் வெளியில் துரத்தப்போகின்றதா, இல்லை ஊர் ஞாபகம் வந்து தன்னைச் சிதைக்கப்போகின்றதா என்று யோசித்தபடி தாரகைகள் இல்லா அடர்கருவானத்தை அவன் பார்த்தபடியிருக்கின்றான். நல்ல நண்பர்கள் என்றைய பொழுதும் தன்னை விட்டு நீங்காதிருப்பார்கள் என்ற நம்பிக்கை இவன் வசத்து நிறையவே உண்டு. நண்பர்கள் என்று கூறிக்கொண்டு பிறகு ஏதோ ஒரு புள்ளியில் முகஞ்சுழித்துப் போகின்றவர்களும் இவனுக்கு வாய்க்காமலில்லை. அவர்களில் சிலர் திட்டமிட்டு காய்களை நகர்த்தி தொடர்ந்து காயங்களை உண்டாக்கியபடி தம் இருப்பை நினைவுபடுத்தியபடியே இருப்பார்கள். நீங்கள் என்னை நோக்கி முன்வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் நான் இன்னும் இரண்டு அடிகள் பின்னோக்கி வைப்பேன் என்றபடி அவர்களை தொடர்ந்து அலட்சியப்படுத்தியப்படுத்துவதுதான் இதிலிருந்து தப்பிப்பதற்கு எளிய வழியென்று நினைப்பவன் இவன். மேலும் இவனுக்கு முரண்பாடாய்/அசூசையாய் தெரியும் அவர்களின் புள்ளிகள் அவர்களுக்கான அளவில் நேர்மையாக/ஓர்மமாக இருக்கலாம் என்ற புரிதலும் உண்டு. தம்மோடு ஒத்த புள்ளிகளை அவர்கள் கொண்டிருக்கவில்லை என்பதற்காய் அவர்களில் கோளாறு என்று முடிவுசெய்தலும் தவறு. உனதும் எனது புள்ளிகள் என்றேனும் ஒருநாள் மீண்டும் சந்திக்கையில் கைகுலுக்கி அறிமுகங்கள் செய்துகொள்வோம் என்று கூறி கைகுலுக்கி விடைபெறும் நேர்மையான சந்தர்ப்பங்கள் இவனுக்கு இன்னும் வாய்க்கவில்லை என்பதும் சோகமான விடயமே. அவ்வாறு மனம் மலர்ந்து பிரியாவிடை கொடுத்திருப்பின் எவரையும்/எதனையும் நினைத்து காலகாலங்களில் சோகித்திருக்கத் தேவையும் இருக்காதில்லையா?

ஒரு நாள் அவள் அவனின் எழுத்தின் தடங்களைப் பின்பற்றியபடி வந்து சேர்ந்தாள். எப்போதும் தனது எழுத்துக்களினூடாக தன்னை வந்தடையும் பாதைகளை சாமர்த்தியமாய் கலைத்தபடி இருப்பவனுக்கு அவள் அவனது இருப்பிடத்தை வந்தடைந்தது வியப்பாயிருந்தது. அறிமுகபடுத்திக்கொண்டாள். வந்தவளுக்கு தேநீரும் இனிய சொற்களும் கொடுத்து வரவேற்கவேண்டும் என்ற சம்பிரதாயத்தையே மறந்து போயிருந்தான் (அல்லது அப்படிக் காட்டிக்கொண்டான்). என்ன வேண்டும் என்ற ஒரு அதிகார மையத்தின் முதற்கேள்வியைப் போல அவன் அவளைப்பார்த்து முறைத்துக்கொண்டான். என்னைச் சமதையாக வைத்து உரையாட முடியுமெனில் உரையாடு இல்லையெனில் திரும்பிப் போகின்றேன் என்றாள் அவள். இப்போது அண்மையாக எழுதிய என் எழுத்துக்களினூடாக வந்த நீ, திரும்பிப் போவதற்குள் நீ வந்த பாதையைக் கலைத்துபோட்டு இன்னொரு எழுத்தை எழுதினால் எப்படித் திரும்பிப்போவாய் என்று அவளை வளைத்துவிட்ட பெருமிதத்தோடு கேட்கின்றான் இவன் (அந்தச் சமயத்தில் சுருள் சுருளாய் இவன் புகைபிடித்துக் கொண்டிருக்கவேண்டும்). திரும்பி வந்த இடத்தைப் போய்ச்சேருவது மிக இலகுவானது ஏனெனில் உனது எழுத்துக்கள் ஒவ்வொன்றும் முடிவடையும் புள்ளி ஒரு பெண்ணிடம் அன்பை எதிர்பார்த்து உள்ளுக்குள் மறுகிக்கொண்டிருப்பது.... எனவே நீ புதிதாய் எழுதும் ஒரு படைப்பினூடாகவும் நான் எனது வழியை எளிதாய் கண்டுபிடித்துத் திரும்பிப்போயிவிடுவேன் என்கிறாள் அவள்.

இப்படித்தான்.... சிக்கலான ஒரு தேற்றத்தை பரீட்சைநேரம் முடிவதற்குள் நிறுவிவிட முடியாத பதட்டத்துடன்தான் அவன் ஒவ்வொருமுறையும் அவளுடனான உரையாடல்களில் தோற்றுக்கொண்டேயிருந்தான். தனது வாழ்க்கையை தனது தனிமையாலும், விரும்பிக்கற்றுக்கொண்ட கணித எண்களாலுமே தேர்ந்தெடுத்துக்கொண்டிருந்தவன் அவன். எல்லோரைப்போல மையநீரோட்டத்தில் வாழ விரும்பம் எனினும் தனது கடந்தகாலப் பயங்களும் எதிர்கால அச்சங்களுமே தன்னை இப்படியான எண்களால் கட்டியமைக்கப்பட்ட வாழ்வைத் தேர்ந்தெடுக்க வைத்தது என்று பொழுதுபோகாத நேரமொன்றில் பொழிந்துகொண்டிருந்த ஸ்நோவில் நனைந்தபடி கூறிக்கொண்டிருந்தான். வார்த்தைகள் முடிந்த மறுமுனையில் அவள் நின்று கேட்டுக் கொண்டிருக்கவேண்டும். அவன் அவளது பெயரை தன்னையறியாது பனியில் கிறுக்கிக்கொண்டிருந்தபோது தானும் அவனது பெயரை மணலில் எழுதிக்கொண்டிருந்தேன் என்றபடி சிரிததபடி வருகின்றாள் அவள் மீண்டும்.

அவள் தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருந்தாள். தனக்கான பயங்களை, தனது தாய்நிலம் சூறையிடப்படும் அவல நிலையை, எதிர்கால இலட்சியங்கள் பற்றி இன்னவும் பிறவுமாய். அவள் நேசித்த ரஷ்ய படைப்பிலக்கியங்களையும், பயணம் செய்யும் விரும்பும் ஆபிரிக்கா வனாந்தரங்களையும் அறிய அறிய, அவன் இப்போதைக்கு உடையாது எனத்திடமாய் நம்பிய அவனது பாதுகாப்பு அரண்கள் உருகத் தொடங்கின. என்றாலும் இவன் சளைத்தானில்லை, வார்த்தைகளை கொண்டு விமர்சனக்கத்திகள் ஆயிரமாயிரம் செய்து போரிடும் சூழ்ச்சிகள் நிறைந்தவன் என்பதால் அவளை வலிக்கச் செய்யக்கூடிய இடங்கள் பார்த்து விமர்சனக்கணைகளை எண்ணற்று எய்யத் தொடங்கினான். அவள் பரிவுடன் வருபவளுக்கு கருணை பொங்கும் அன்னை மேரி; போரென்று வந்துவிட்டால் கண்ணீரைப் புதைதோண்டிப் புதைத்துவிட்டு விழிகள் சிவக்கும் உக்கிரமான காளி என்பது அவனுக்கு முன்னரே தெரியாமற்போய்விட்டது. (மணிமேகலையைத்தான் காளியாய் பிற்காலத்தில் 'இந்து'சமயம் ஆக்கிவிட்டது என்ற ஒரு ஆய்வுக்குறிப்பையும் கூடவே சேர்த்துக்கொள்ளவேண்டும்). இவ்விடத்தில் பிறழ்வாய் இருக்கக்கூடுமெனினும், அவள் ஆடிய உக்கிரமான ஆட்டந்தான் இவனின் அனைத்துக் கர்வங்களையும் துடைத்தெறிந்து அவளிடம் நேசம் வைக்கச் செய்தது என்பதுவும் உணமையுமாகும்.

எதையும் எதிர்ப்பார்க்காத அன்பு எப்படிப்பட்டது என்பதை அவளிடமிருந்து அவன் அறிந்துகொண்டான். தனக்கென்று எதையுமே அவனிடம் கேட்டு வாங்கிக்கொள்ள தொடர்ந்து மறுத்துக் கொண்டேயிருப்பவள்; எப்போதாவது அன்பளிப்பாய் கொடுக்கும் நாலைந்து புத்தகங்களைத் தவிர பெறுமதியான எதையும் அவள் இற்றைவரையும் ஏற்றுக்கொண்டதுமில்லை. தனக்காய் சிறிது நேரத்தையும் நேசத்தையும் தந்துவிட்டு நீ எதையும் எவற்றையும் செய்துகொள்ளலாம் என்ற மிகப்பெரும் சுதந்திரவெளியை வழங்கிக்கொண்டிருப்பவள். இவை அனைத்தையும் விட தன்னைப் புத்தகங்கள் மட்டுமே நேசிக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தவனுக்கு, அவன் மீது தனக்கு பிரியமுள்ளதென்று அவளே தயக்கமேதுமின்றி வந்து முதலில் நேசத்தை வெளிப்படுத்தியதுதான் இவனுக்கு வியப்பாயிருந்தது. அவள் தன்னை நேசிக்கின்றாள் என்பது புரியவே இவனுக்கு மாதங்கள் எடுத்துக்கொண்டதற்கு இவன் நிறைய தமிழ் சினிமாக்கள் பார்த்திருந்தததைத் தவிர வேறு எதுவும் காரணங்களாகிவிடாது.

நேசம் அரும்பிய ஆரம்பப்பொழுதில் திருமணம், இன்னபிற அடையாளங்களுடன் வாழுதல் தன்னால் சாத்தியமில்லை என்று முற்றுப்புள்ளியில்லாது வாக்கியங்கள் நீளநீளமாய் அமைத்தபோது, - கூறி முடித்துவிட்டாயா என்று பொறுமையுடன் காத்திருந்துவிட்டு-இப்படித்தான் எல்லா முற்போக்காளர்களும் கூறிக்கொண்டிருப்பார்கள், பிறகு அவர்களின் அனைத்து வண்டவாளங்களும் தெரியும் என்றாள். இதற்குப் பிறகும் இவை குறித்து அவனால் வாய் திறந்து பேசமுடியுமா என்ன? இதைவிட தனது அடையாளங்களை தொடர்ந்து மறுதலித்துக்கொண்டே வருபவள் என்றபடியால், கலாச்சாரம் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் திலகமிடுதலிருந்து நகைகள் அணிவது வரை புறக்கணித்துக்கொண்டே இருப்பவள் அவள். பட்டுப்புடவை சரசரக்க கைகளிலும் கழுத்திலும் ஆபரணங்கள் மினுங்க ஒரு 'தமிழ்'ப்பெண்ணை எதிர்ப்பார்த்துக்கொண்டிருப்பவனின் கனவை நிர்மூலமாக்கிக்கொண்டிருக்கின்றேனோ என்ற கவலை அவளுக்கு உண்டு போலும். எனினும், 'ஏனெனில் நானொரு அரசிளங்குமரி/எனது பெறுமதி நான் அணிந்திருக்கும் ஆடைகளால் தீர்மானிக்கப்படுவதில்லை/இண்டியா அரியாக இருப்பதற்கு எது தேவையோ/அதை மட்டுமே நான் அணிவேன்' என்று இண்டியா அரி பாடுவதுபோல வாழவும் விரும்பும் பெண்கள் இருக்கின்றார்கள் என்ற எளிய புரிதல் இவனுக்கும் உண்டு. நீ இன்று வெறுத்தொதுக்கும் ஆபரணங்களை, நாளை நீ அணிய விரும்புகின்றாய் என்றாலும் அதனூடாக நான் உன்னை அணுகப்போவதில்லை. அதற்கும் உனக்கான் என் பிரியங்களுக்கும் எந்தச் சமன்பாடுகளும் காலத்தின் எந்தப்புள்ளியிலும் வரப்போவதில்லை என்று மட்டுமே விளம்பமுடிகிறது இவனால்.

பின்னான காலங்களில் இவன் பலவற்றை அறிந்துகொண்டான். எழுத்துக்களினூடாகவும் வாசிப்பினூடாகவும் ஒருவரை இன்னொருவர் அறிந்துகொள்வது என்பது சுவாரசியமானது. எழுதுபவர்களின் வாசிப்பவர்களின் வாழ்க்கை அப்படி வியந்து சொல்லக்கூடியதாக அல்ல என்று கடந்தகால வரலாறுகள் வெள்ளிடைமலையென காட்டிக்கொண்டிருந்தாலும் அப்படியிருப்பது இருவருக்கும் பிடித்துக்கொண்டது. கணணித் திரையில் ஒரு அஞ்சலை அனுப்பிவிட்டு அது பெறுநரைப் போய்ச்சேரும் நேரத்தைவிட, உறவு ஒன்று சிதைந்துபோவதற்கான கால அவகாசம் குறைவானதே என்ற அச்சமிருந்தாலும்.... அவள் மீதான இந்தக்கணத்து நேசம் என்பது உண்மையானதும் எதிர்ப்பார்ப்புக்களின் அப்பாற்ப்பட்டதும் கூட.

'நேற்று இல்லாத மாற்றம் என்னது/ காற்று என் காதில் ஏதோ சொன்னது?' என்று அவள் அவனையறிந்த ஒருவருடத்திற்கும் பின்பான பொழுதொன்றில் பாடுகின்றாள். அதுவரை பாடவே மாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டிருந்தவள் அன்றைய பொழுதில் இன்னும் பல பாடல்களைக் காற்றில் கரைக்கின்றாள். இராகத்துக்கும் தாளத்திற்கும் பல்லவிக்கும் சரணத்திற்கும் கூட்டல் கழித்தல் பெருக்கல் முறையிலா உறவிருக்கிறது என்று மூளையைப்போட்டு குழப்பிக்கொண்டிருக்கின்றவனுக்கும் அவள் பாடுவது பிடித்துத்தான் போகின்றது. இதைவிட தனக்கு மிக நெருக்கமாயிருப்பவள் தன்னைவிட தீவிர வாசிப்பும், ஆளுமைமிக்க எழுத்துத்திறனும் கொண்டிருப்பதும் அவனுக்கு மகிழ்வைத் தருகின்றது. தனக்குப் பிடித்த கவிதையொன்றை எழுதும்போது தான் எழுதுவதை நிறுத்திவிடுவேன் என்று தீர்க்கமான நம்பிக்கை அவனுக்கு உண்டு. அந்தக் கடைசி கவிதையில் அவள் இருப்பதுதான் அவள் தந்துகொண்டிருக்கும் அற்புதமான தருணங்களுக்கு அவன் செலுத்தும் நன்றியாக இருக்கும்.

சு.வில்வரத்தினம் காலமானார்

Saturday, December 09, 2006

suVa
(1950-20006)

ஈழத்தின் முக்கிய படைப்பாளியான சு.வி என்று நண்பர்களால் அழைக்கப்படும் சு.வில்வரத்தினம் கொழும்பில் காலமானார் என்ற மின்னஞ்சல் பத்மநாப ஜயரிடமிருந்து இன்று காலை வந்திருந்தது. ஏ.ஜே.கனகரட்ன, சு.வில்வரத்தினம் என்று ஈழத்தில் இருக்கும் படைப்பாளிகளை நாம் தொடர்ந்து இழந்து கொண்டிருப்பது மிகவும் துயரமானது.

சு.வில்வரத்தினம் எழுதி வெளிவந்த கவிதைகளின் தொகுப்புக்கள்:
(1)அகங்களும் முகங்களும் (கவிதைத் தொகுதி, 1985)
(2)காற்றுவழிக் கிராமம் (கவிதைத் தொகுதி, 1995)
(3)காலத்துயர் (கவிதைத் தொகுதி)
(4)நெற்றிமண் (கவிதைத் தொகுதி, 2000)
(5) உயிர்த்தெழும் காலத்துக்காக (கவிதைத் தொகுதி, 2001)


பதின்மங்களில் 'காற்றுவழிக்கிராமத்தை' வாசித்தபோது மிகவும் பாதித்தது. ஊரூராய் அகதியாய் அலைந்து கொழும்பில் வாழ்ந்து கொண்டிருந்த காலம் அது. இழந்துவந்த மண்ணின் துயரை மனமெங்கும் படியவிட்ட கவிதைகள் அதில் நிறைய இருந்தன. அதன் பாதிப்பில் ரியூசன் வகுப்புக்குப் போன ஆங்கில ஆசிரியரிடமும் ஆங்கிலத்தில் ஒரு கவிதையைக் மொழிபெயர்த்து தரக்கேட்டதாயும் நினைவு.

உயிர்த்தெழும் காலத்துக்காக' தொகுப்பில் - இதுவரை வந்த தொகுப்புகளின் அனைத்து கவிதைகளையும் உள்ளடக்கி வேறு புதிதாய் எழுதப்பட்ட கவிதைகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று நினைக்கின்றேன். நூலகத்திற்கு சென்று இவரது தொகுப்புக்களை வாசிக்க முடியும். அண்மையில் வெளிவந்த 'காலம்' இதழ் -27ல் ஜெயமோகன் சு.வில்வரத்தினத்தின் கவிதைகளை முன்வைத்து தனது விமர்சனப்பார்வையை ஒரு நீண்ட கட்டுரையாக எழுதியிருக்கின்றார்.

...................................................................................
Dear friends,

A sad news.

Su. Vilvaratnam passed away today 5pm at Delmon Hospital Colombo.
He was suffering from kidney failure and liver problem.
Contact Mu ponnambalam 0115518464.

Nuhman
(....added later.....Thanx to Pathmanaba Iyer)
....................................................................................

புத்தகங்களுடனான சிநேகம்

Wednesday, December 06, 2006

'ரஷ்ய எழுத்தாளர்கள் என் கனவுகளைக் கவர்ந்தவர்கள் என்றே சொல்லவேண்டும். தாஸ்தாயெவ்ஸ்கி (மரணவீட்டின் குறிப்புகள்), டோல்ஸ்டோய், மிகயீல் ஷோலகவ் (கன்னி நிலம்), சிங்கிஸ் ஐத்மாத்தவ் (அன்னை வயல்), ஐவன் டெர்கனெவ் (அஸ்யா) ஆகியோர் என்னைப் பயங்கரமாகப் பாதித்தவர்கள். மற்றபடி அந்நியமொழி எழுத்தாளர்களென்றால்... விக்டர் ஹ்யூகோ (அவரது toilers of the sea யின் தாக்கத்திலிருந்து விடுபட பல வாரங்களாயின), ஒஸ்கர் வைல்ட், தோமஸ் போர்கே (இவரது சிறுகதைகள் மட்டும்தான் வாசித்திருக்கிறேன்), ஹெர்மன் ஹெஸ்ஸே (இவரது சித்தார்த்தா பலவிதத்திலும் என்னைச் சிந்திக்கத் தூண்டிய நாவல்), சினுவா ஆச்சிபி (சிதைவுகள்), சில இந்திய எழுத்தாளர்கள்.. தமிழ்மொழியல்லாதோர்.. (பெயர்கள் நினைவிலில்லை - சம்ஸ்காரா, நிழல்கோடுகள் என நாவல்கள் மட்டும் நினைவிருக்கின்றன). ...'
(நண்பரொருவரின் கடிதத்திலிருந்து....)

வீட்டில் அவ்வப்போது குடும்பத்தினரால் பொது அறிவு காணாது என்று நற்சான்றிதழ் பாத்திரம் பெற்றுக்கொண்டிருக்கின்றவன் நான். வலைப்பதிவிலாவது இந்தப் பலவீனத்தை மறைத்து கொஞ்சம் 'அறிவாளி' மாதிரி உரையாடலாம் என்ற ஆசையை அவ்வப்போது 'உனக்கெல்லாம் அரசியல் தெரியுமா?' என்று கேட்டு பலர் -'என்னை வளரவிடாது' - காலை வாரிக்கொண்டிருக்கின்றார்கள்.

அறிவு வளரவேண்டும் என்றால் என்ன செய்வது? புத்தகங்களைத் தான் நிரம்ப வாசிக்கவேண்டும். சில மாதங்களுக்கு முன், ஒரு அன்பர் திட்டோ திட்டென்று திட்டி -முடிவுறாத அனுமான் வாலாய்- பதிவொன்றை எழுதியிருந்தார். கூட்டத்தோடு கோவிந்தா பாடுவோம் என்று இன்னொரு நலன்விரும்பி பழைய கறளெல்லாம் சேர்த்து வைத்து வசைக் கவிதையை உடைப்புச்செய்து கூடவே எழுதியிருந்தார். அம்மா வளர்கின்றேன் என்று விளம்பரம் ஒன்றில் காட்டப்படுவதுபோல குட்டு விழுவதில் 'சந்தோசம்' என்பதைவிட, 'உங்களின் வட்டத்திற்குள் நானில்லை' என்பதே அந்தப்பொழுதுகளில் எனக்கு நிறைவாயிருந்தது.

வசைக் கவிதையில் நலன்விரும்பி எனக்கு இரண்டு தெரிவுகளைத் தந்திருந்தார். ஒன்று அரசியலை ஒழுங்காய்ப் பேசு; இல்லையெனில் அம்மாவுக்கு தோசை சுட உதவி செய் என்று. அன்பர் சொன்னதை சும்மா தட்டிக் கழிக்கமுடியாது. 'மூலதனத்தை' எல்லாம் கரைத்துக் குடித்தவர் சொன்னால் ஏதோ பெரும் பின்புலம் இருக்கத்தானே செய்யும்? எனவே இல்லாத என் மூளையைக் கசக்கத் தொடங்கினேன். புலம்பெயர் தேசமொன்றில் நான் உயிர் வாழ்ந்துக்கொண்டிருப்பற்கு எனக்கு அரசியல் பேசுவது அவசியமா? இல்லை தோசைக்கு மா கரைத்து ஊற்றுவது முக்கியமா? உயிர் வாழ்வதற்கு உணவே அவசியம் என்று மூன்றோ நான்காம் வகுப்பில் சுற்றாடல் கல்வியில் கற்பித்த 'மனிதருக்கு அத்தியாவசியமானது உணவு உடை உறையுள்' என்பது இன்னமும் எனக்குள் பதிவாயிருந்தது இந்த நேரத்தில் கைகொடுத்தது.

சரி, இப்படி 'அன்பர்கள்' பாராட்டு வழங்கும்போது என் மானம் ரோசம் பொங்கியெழுந்தல்லவா இருக்கவேண்டும்? மானம் ரோசம் வீரம் இல்லாது தமிழனாய் இருப்பதில் என்ன பயன்? இது போதாது என்று வைத்த புனைபெயரில் 'தமிழன்' என்றும் சேர்த்து வைத்தல்லவா படம் காட்டிக்கொண்டிருக்கின்றேன். திண்ணையிலோ பதிவுகளிலோ எனக்கு பரீட்சயமான ஒரு நண்பர் 'தம்பி நீர் டிசே தமிழன் என்றால் நாங்கள் என்ன டிசே சிங்களவனா இல்லை டிசே ஆங்கிலேயானா?' என்று கேட்டார். நான் சும்மா விடுவேனா என்ன? தமிழில் எழுதும்போது நான் டிசே தமிழன், சிங்களத்தில் எழுதும்போது டிசே சிங்களவன், ஆங்கிலத்தில் எழுதும்போது டிசே ஆங்கிலேயன் ஆவேன் என்றேன். அவரும் தான் ஊக்குவித்த பெடியன் நல்லாய்த்தான் 'வளர்ந்துவிட்டான்' என்று தலையிடித்துக் கொண்டிருப்பார் என்பது வேறு விடயம்.

இப்படி பதிவுகளில் சிலர் வசைக்கவிதை/பதிவுகள் எழுதிக்கூட ஏன் எனக்கு -பெண்களுக்கு அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு போல- ஆண்களுக்குரிய 'குணங்கள்' எதுவுமே ஊற்றெடுத்துக் கிளம்பவில்லை என்பதுதான் மிகுந்த கவலையாயிருந்தது. போற வாற இடமெல்லாம் சைட் அடிக்கின்ற ஸ்பானிய பெண்கள்தான் எனது தமிழ்க் கலாச்சாரத்துக்கு ஆப்பு வைத்துவிட்டார்களோ என்ற அச்சமே எனக்குள் எழுந்தது. ஆனால் இந்த மானம் ரோசம் எனக்கிருப்பின் அது வளாகத்தில் இருந்தபோதே பொங்கியிருக்கவேண்டும். பரீட்சைகளின்போது குறைய மார்க்ஸ் கிடைக்கும்போதெல்லாம், என் படிப்பில் பிழையில்லை prof ன் பேனையில்தான் தவறு என்று பெருந்தன்மையாக நினைப்பவன் நான். ஏன் பாடங்களில் சித்திபெறத் தவறினால் கூட.... அந்தப் பாடத்தைப் பழிவாங்கவேண்டும் என்று சிரத்தையாக திருப்பப் படிக்காமல், 'இடுக்கண் வருங்கால் நகுக' என்றுதான் நகர்ந்து போயிருக்கின்றேன். எனவே என் அடிப்படையில்தான் பிரச்சினை இருக்கின்றததே தவிர, எங்கள் தமிழ்க் கலாச்சாரத்தில் அல்ல என்று இப்போது புரிகின்றது.

சரி எதற்கும் இருக்கட்டும்; அன்பர்கள் அளவுக்க்குமீறி 'பாராட்டுப் பத்திரம்' வாசிக்கும்போது நானும் திருப்ப அவர்களுக்கு பா.பாத்திரம் கொடுப்பதற்கு உசாத்துணையாக இருக்கட்டும் என்று சில புத்தகங்களைத் தேடத் தொடங்கினேன். புத்தகங்களுக்கு ஓடர்செய்து பல மாதங்களாகியும் என் கைகளில் வந்து சேரவில்லை. கனடீய அரசாங்கம்தான் புத்தகங்களைத் தடை செய்து வைத்திருக்கின்றதோ என்ற ஜயம் வந்தது. கனடாவில் நாற்பதோ, ஜம்பதோ வருடங்களுக்கு முன் சின்னதாய்க் கட்டியமைக்கப்பட்ட கம்யூனிசக் கட்சியை ஆட்சியில் இருந்த அரசாங்கம் தடை செய்தது என்று எங்கையோ வாசித்திருந்தேன். அதுபோல் தமிழ் வாசிக்கத் தெரியாவிட்டாலும் - மார்க்ஸ், மாசேதுங், மல்கம் எக்ஸ், சேகுவேரா, காஸ்ரோ போன்றவர்களின் படங்களைப் பார்த்துவுடன் பதுக்கி வைத்துவிட்டாகளோ என்று நினைத்துக்கொண்டிருந்தேன். சுங்கத்திலிருந்த( customs?) யாரோ ஒரு நல்ல மனிதர்தான், எங்கள் கனடீய பிரதம உறங்கிக்கொண்டிருக்க்கும்போது இரவோடு இரவாய் அனுப்பியிருக்கவேண்டும். கைகளில் புத்தகங்கள் கிடைத்துவிட்டன.

இப்படியாக இன்னும் பல கிளைக்கதைகள் உண்டெனினும்-உண்மையான- காரணங்கள் இரண்டே. பெரியாரைப் பாதிக்கின்ற எவரையும் மார்க்ஸும் பாதிக்கவே செய்வார். பெரியாரை விளங்கிக்கொள்கின்ற எவராலும் தலித்தியத்தையும் பின் நவீனத்துவத்தையும் இலகுவாய் அரவணைக்க முடியும். அந்த ஆர்வமே இவ்வாறான புத்தகங்களை வாங்கி வாசிக்கச் செய்தது.

இதைவிட இன்னொரு காரணம் உண்டு. தோழர் ஒருவரிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது, பெரியாரைச் சிலாகித்த அளவுக்கு மார்க்ஸை சிலாகித்துப் பேசாதது அவருக்கு கவலை தந்திருக்கவேண்டும். அவர் இடதுசாரிப் பின்புலத்தில் வந்தவர். நான் பெரியாரை வியந்து கொண்டிருப்பதுபோல அவர் மார்க்ஸை வியந்துகொண்டிருப்பவர். பெரியாரைப் போலத்தான் மார்க்ஸும் சாதாரண மனிதர் என்று தெளிவுபடுத்தவோ என்னவோ மார்க்ஸ் எழுதிய காதற்கவிதைகளை எல்லாம் வாசிக்கத் தந்தார். 'மார்க்ஸை எங்கோ எட்டாத தொலைவுக்கு துரத்திவிட்டார்கள் நமது மார்க்சிசவாதிகள்...' என்றதற்கு 'மார்க்ஸை நேர்மையாக அணுகினால் அவர் நெருக்கமாகிவிடுவார்' என்றார். 'நிச்சயமாய் மார்க்ஸ் மீது காழ்ப்புணர்வில்லை; இன்றைய உலக அரசியலின் சிக்கலான சூழ்நிலைக்குள் கடைசி நம்பிக்கையாய் இருப்பது மார்க்ஸியமே தவிர வேறு எதுவுமல்ல; ஆனால் மார்க்ஸை வைத்து கொண்டாடுபவர்களே மார்க்ஸை நெருங்கவிடாது செய்துவிட்டார்கள்' என்றேன் (வசைக்கவிதை எழுதிய அன்பரும் யாரோ ஒரு எழுத்தாளரின் வாரிசு என்றுதான் பட்டமொன்று இறுதியில் தந்திருந்தவர்; தங்கள் மீதான விமர்சனத்தையே ஏற்றுக்கொள்ளாது வேறொருவருடன் சேர்த்து கழுவிலேற்றுபவர்களிடமிருந்து... எப்படி மார்க்ஸை கற்றுக்கொள்வதாம்?) மேலும் இணையத்துக்கு வந்ததன்பின் பெரியாரை ஆதர்சமாய் ஏற்றுக்கொண்ட நண்பர்கள் தங்கமணி, ரோசாவசந்த் போல, மார்க்ஸை தங்கள் சொந்தக் கருத்துக்களுக்கு முண்டு கொடுக்க உபயோகிக்காது- மார்க்ஸை மார்க்ஸாக முன்வைத்து உரையாடியவர்களை இணணயத்தில் நான் இன்னும் காணவில்லை. அத்தோடு இவர்களிடமிருந்து மார்க்ஸை கற்றுக்கொள்ளமுடியும் என்று நம்பிய சிலர் இன்னும் மிகமோசமான முறையில் மார்க்ஸை அணுகியதையும். தங்களுக்குள் இருக்கும் வலதுசாரி/சாதீய முகங்களைக் காட்டியதையும் பார்த்து 'தள்ளியிரும் பிள்ளாய்' என்று விலத்தித்தான் வரமுடிந்தது (கோபம் வருமென்றாலும் 'வறட்சியான மார்க்ஸியர்கள்' என்றுதான் அவர்களை அழைக்கமுடியும்).

மேலைத்தேய தத்துவாசிரியர்களை/ஆய்வாளர்களை எல்லாம் போகின்றபோக்கில் உதிர்த்துவிட்டு செல்லும் இவர்கள் எத்தகைதூரம் அந்த ஆய்வாளர்கள் கூறியதை உள்வாங்கிக்கொண்டார்கள் என்பது கேள்விக்குரியதே. Noam Chomskyயை -சொற்பமாய்- வாசித்தவளவில் அவர் விவாதித்த தேசியவாதம்/தேசிய இனங்களின் பிரச்சினையைக் கூட - ஈழ இடதுசாரிகள் என்று கூறிக்கொண்டிருப்பவர்கள்- உள்வாங்கி தமிழில் விவாதித்தமாதிரி காணக்கிடைக்கவில்லை என்பதுதான் கவலைக்குரிய விடயம். பல்வேறு இயக்கங்கள் வளர்ந்துகொண்டிருந்த காலத்தில் பல இயக்கங்கள் சோசலிச சமதர்மமே முடிவான தீர்வு என்று ஈழத்தில் கூறிக்கொண்டிருந்தார்களாம். விசுவானந்ததேவனிடம் சேரப்போன சில இளைஞர்கள் கேட்டிருக்கின்றார்கள், எமக்கான அரசு எப்படி இருக்கும் என்று....? இலங்கை போன்ற நாடுகளுக்கு முற்றுமுழுதான கொம்யூனிசம் என்றைக்குமே சாத்தியப்படாது என்றுதான் எடுத்தவுடனேயே கூறியிருக்கின்றார் (அவரோடு இயங்கிய தோழர் ஒருவர்தான் கூறியது). இத்தனைக்கும் விசுவின் பாதிப்பில்தான் எஸ்.வி.ஆரோ அல்லது அ.மார்க்ஸோ அரசியல் எழுத்து இயக்கத்துக்கு வந்தவர்கள் என்று எங்கையோ வாசித்திருக்கின்றேன். உடனே விசுவானந்ததேவன் இப்படிக்கூறிவிட்டார் எனவே அவர் கம்யூனிச துரோகி என்று அவரது காணாமற்போன உடலை கடலிலிருந்து கண்டுபிடித்து முத்திரை குத்தாதிருப்பார்களாக....!

இவற்றை ஏன் எழுதிக்கொண்டிருக்கின்றேன்....? வேறு ஒன்றுமில்லை, மீண்டும் சனி பிடித்துவிட்டது. அவ்வளவுதான்.

இனி இன்னும் இரண்டு பதிவுகள், நான்கு வசைக்கவிதைகள் பறந்து வரும். புன்னகைத்தபடியே, மார்க்ஸை மார்க்ஸின் பார்வையினூடாக மட்டும் பார் என்கின்ற தோழருடன் விவாதித்தபடி, வந்திருக்கும் புத்தகங்களை ஆறவமர வாசிக்கவேண்டியதுதான்.

நியூ புக்லாண்டிலிருந்து வந்து சேர்ந்த புத்தகங்கள்:
book2

(1) மார்க்சியத்துக்கு அழிவில்லை - ஞானி
(2) மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை - ஜோர்ஜ் தொம்ஸன் (தமிழில்: எஸ்.வி.ராஜதுரை, இன்குலாப்)
(3) அழகும் உண்மையும்: மார்க்ஸிசப் பார்வை- ஸிட்னி ஃபிங்கெல்ஸ்டெய்ன் (தமிழில்: நேத்ரா, எஸ்.வி.ராஜதுரை)
(4) அ.அயோத்திதாசர் ஆய்வுகள்- ராஜ் கெளதமன்
(5) ஆட்சியில் இந்துத்துவம் - அ.மார்க்ஸ்
(6) மால்கம் எக்ஸ் - ரவிக்குமார்
(7) தலித்தியமும் உலக முதலாளித்துவமும் - எஸ்.வி.ராஜதுரை
(8) குற்றவாளிக்கூண்டில் வட அமெரிக்கா -தமிழாக்கம்: அமரந்தா
(9) இந்துத்துவம்: ஒரு பன்முக ஆய்வு - அ.மார்க்ஸ்
(10) இந்தியாவில் சாதிகள் - டாக்டர்.B.R.அம்பேத்கார் (தமிழில்:செங்கோபன்)
(11) ஆகஸ்ட் 15: துக்கநாள் -இன்பநாள் - பெரியார், அண்ணா, கேசரி (தொகுப்பு:எஸ்.வி.ராஜதுரை)
(12) ஆதி சங்கரரின் மக்கள் விரோத கருத்துக்கள் - பகவான்
(13) கற்பிதங்களின் தேசம் - குமரன்தாஸ்
(14) இந்து இந்தியா: அக்ரனியிலிருந்து அத்வானிவரை - எஸ்.வி.ராஜதுரை
(15) மார்க்ஸ் எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - ரா.கிருஸ்ணய்யா
(16) இந்தியத் தத்துவங்களின் அரசியல்- ந.முத்துமோகன்
(17) காந்திய அரசியல் - வ.கீதா
(18) பூர்தியாவும் மார்க்சிசமும் - எஸ்.வி.ராஜதுரை
(19) புத்தர் சிரித்தார் - பாமரன்
(20) க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி - தமிழ்-தமிழ்-ஆங்கிலம்