கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 121

Wednesday, December 17, 2025

 

அவ்வப்போது அரசியல் தளத்திலும்/களத்திலும் ஈடுபடும் நண்பர்களோடு உரையாடும் சந்தர்ப்பம் வாய்ப்பதுண்டு. அது எவ்வகை அரசியல் நம்பிக்கையாக இருப்பினும், அவர்களின் அரசியலை அறிக்கைகளாகவோ/ சிறு பிரசுரங்களாகவோ எழுதவேண்டுமென அவர்களை வற்புறுத்துவேன்.

ஏனெனில் அப்படி வெகுசன அரசியலில் ஈடுபாடுடையவர்கள், அந்த மக்களை நோக்கிப் பேசவேண்டியதும் அம்மக்களுக்குப் பரிட்சயமான  மொழியில் பேசவேண்டியது முக்கியமானது.  இல்லாவிட்டால் வெகுதிரள் அரசியலில் ஒரு அடி கூட முன்னே போக முடியாது.

அதுபோலவே தாம் செய்ய விரும்பும் அரசியல் பற்றிய அறிக்கையை பொதுவெளியில் வைத்து உரையாடும்போது, அதை யதார்த்த களநிலவரங்களுக்கேற்ப விரித்துக் கொண்டு செல்லவும் முடியும். கார்ல் மார்க்ஸ் 'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை'யை எழுதியபின் அது தொடர்ந்து அவராலும் ஏங்கல்ஸாலும் பல தடவைகள் திருத்தி எழுதப்பட்டிருக்கின்றது என்பதை நாமறிவோம்.

Uploaded Image


நான் வாசிக்க வந்த காலத்தில் அ.மார்க்ஸ் உள்ளிட்ட சிலர் சேர்ந்து 90களில் எழுதிய 'தலித் அரசியல் ஆவணம்' எனக்கு முக்கியமான ஒன்றாகத் தெரிந்தது. அதை ஏற்றும், நிராகரித்தும் பல்வேறு உரையாடல்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்திருக்கின்றன. தலித் அரசியல் அந்த அறிக்கையிலிருந்து எவ்வளவோ முன்னகர்ந்தும் போய்விட்டது.  ஆனால் அந்த அறிக்கை  ஒரு முக்கிய விடயத்துக்கான தொடக்கப்புள்ளி என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.

 அதேபோன்று ஈழத்தில் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாய் அரசியல் கொதிநிலையில் இருக்கும் சூழ்நிலையில், அகிம்சை/ ஆயுதப்போராட்டம் என்று பல்வேறு அரசியல் களங்களில் பயணித்த நம்மவர்களும் நிறைய அறிக்கைகளையும், உரையாடல்களையும் செய்திருக்க வேண்டும். கடந்தகாலங்களில் இப்படி நிகழ்ந்திருக்கும் சாத்தியம் இருந்தாலும், அவற்றை நாம் விரிவாக எழுத்தில் பதிவு செய்யவோ, தொடர்ச்சியாக உரையாடவோ இல்லை என்று நினைக்கின்றேன்.

இலக்கியத்தில் எஸ்.பொ(ன்னுத்துரை) இலங்கையில் இந்திய நூல்களின் தடை வந்தபோது ஓர் அறிக்கையை விரிவாக  70களில் எழுதியிருக்கின்றார். அன்றைய அமைச்சருக்கு  இந்த அறிக்கையை 60 பக்கங்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி சமர்ப்பித்துவிட்டு அதை ஒரு நூலாக அடுத்த நாளே எஸ்.பொவின் நண்பர் எம்.ஏ.ரஹ்மான் 'அரசு' பதிப்பாக வெளியிட்டுமிருக்கின்றார். பின்னர் 2000களின் வெளிவந்த எஸ்.பொவின் 'இனி' என்ற தொகுப்பிலும் இந்த அறிக்கை இருந்தது. அதிலேயே நான் இதை வாசித்திருந்தேன்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (சீனச் சார்பு)யின் தலைவராக இருந்த நா. சண்முகதாசன் நிறைய நூல்களையும், சிறு பிரசுரங்களையும் எழுதியிருக்கின்றார், வேறொரு தேடலுக்காக நான் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்ககால வரலாற்றை  வாசித்தபோது சண்முகதாசனின் முக்கிய நூலொன்று அகப்பட்டது.

அது 'தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைப் பாதை எது?' என்கின்ற நூலாகும். இது வெளிவந்து கிட்டத்தட்ட 50 வருடங்களாகிவிட்டது. ஆனால் அதில் சண்முகதாசன் இதுவரை கால இலங்கையின் வரலாற்றை விரிவாகப் பேசிவிட்டு சமகாலத்திற்கு (70களுக்கு) வருகின்றார். அவரது அறிக்கையை ஏற்கவும் நிராகரிக்கவும் நாங்கள் செய்யலாம். ஆனால்  இன்று ஒரு பெரும் ஆயுதப்போராட்டம் முடிந்தபின்னும் நாம் இந்தக் காலத்திலும் இந்த அறிக்கையை முன்வைத்து உரையாட முடியுமளவுக்கு காலத்தில் அழியாமல் இருக்கின்றது.

Uploaded Image


இந்த நூல் வெளிவந்த காலத்தையும் நாம் கவனித்தாக வேண்டும். இது 1976 இல் வெளிவந்திருக்கின்றது. அதே ஆண்டில் சில மாதங்களுக்கு முன்னர்தான் தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்து தமிழர்க்கு தனிநாடே இனி ஒரே தீர்வு என்று அறைகூவல் விடுத்தனர். அந்த உணர்ச்சிவசப்பட்ட காலத்தில் மிக நிதானமான நடையில் வெளிவந்த சண்முகதாசனின் இந்த அறிக்கை முக்கியமானது. அவரின் கட்சியினரே தொடர்ந்து காலத்துக்கேற்ப இந்த அறிக்கையை விசாலித்தபடி மக்களிடையே கொண்டு சென்றிருந்தால், நாம் வேறு விதமான பாதைகளை அடுத்து வந்த தசாப்தங்களில் தேர்ந்தெடுக்க முடிந்திருக்கலாமோ தெரியாது. ஆனால் அவர்களோ கட்சி தலைமைக்கு யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்றும், மற்றொரு பிரிவினரைத் திரிபுவாதிகள் என்றும் கட்சிக்குள்ளும், வெளியிலும் சமராடிய சோகந்தான் நிகழ்ந்திருக்கின்றது.

இன்றைய அரசியல் கட்சிகள், அரசியல் ஆய்வாளர்கள் மக்களுக்கான அரசியலைச் செய்வதாகச் சொல்லும்போதோ/எழுதும்போதோ நாம் அவர்களிடம் உங்களின் அரசியல் குறித்த அறிக்கையை வெளியிடுங்கள் எனக் கேட்கலாம். உண்மையான மக்கள் நலத்தின் மீது அக்கறையுள்ளவர்கள் எவராயினும் இந்த விடயத்தில் பின்னிற்கப் போவதில்லை என்றே நினைக்கின்றேன்.

ஆனால் எம்மிடையே இப்படி வரலாற்றை விரிவாக அறிந்தவர்களோ, தமது அரசியல் கொள்கைகளைத் தெளிவாக முன்வைக்கக்கூடிய அரசியல்வாதிகளோ, களச்செயற்பாட்டாளர்களோ, ஆய்வாளர்களோ,  மிக அரிது என்பதான் நமது இன்றைய அரசியலில் மிகப்பெரும் பலவீனமும் என்பேன்.

***

(நா.சண்முகதாசனின் தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைப் பாதை எது? என்ற நூலினை வாசிப்பதற்கான இணைப்பு )

 

புன்னைப்பூ குறிப்புகள்

Tuesday, December 16, 2025

 

Eden

1930 களில் உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். முதலாம் உலகப்போர் நடந்து முடிந்த வெறுமையில் மனித இருப்பின் சாத்தியங்களைத் தேடி ஜேர்மனியிலிருந்து இருந்து கலாநிதிப் பட்டத்தை வைத்திருக்கும் ஒருவர் தனது துணையோடு ஆளற்ற தீவுக்குச் செல்கின்றார். இது தென்னமெரிக்காவுக்கு அருகில் இருக்கும் தீவு. மகிழ்ச்சியும் அமைதியும் நிரம்பிய மனித வாழ்வு இங்கே துளிர்க்குமென தனது கட்டுரைகளை தங்கள் வாழ்வை முன்னிட்டு எழுதுகின்றார்.

Uploaded Image

இந்தக் கட்டுரைகளில் பாதிப்பில் வேறு சிலர் குடும்பமாகவும், நண்பர்களாகவும் சேர்ந்து அத்தீவுக்கு வரும்போது ஏற்படும் சிக்கல்கள், மனிதர்கள் எங்கு போனாலும் 'மனிதத்தன்மை'களோடே இருக்கின்றார்கள் என்பது புரிகின்றது. ஆனால் அதற்காக இவ்வளவு விலை கொடுக்கவேண்டுமா என்ற கேள்விகளும் எழுகின்றன.

இது நான் இங்கே எனது பதினொராம் வகுப்பு ஆங்கிலப் படத்தில் படித்த 'Lord of the Flies' ஐ நினைவுபடுத்தியது. அதில் ஒரு விமான விபத்தால் ஒரு சிறுவர்கள் கூட்டம் ஒரு ஆளற்ற தீவில் சிக்கிவிடுகின்றார்கள். நாட்கள் செல்லச் செல்ல அவர்களின் குழந்தை இயல்புகளை இழந்து 'வளர்ந்தவர்'களின் மனோநிலையான கொலை செய்யுமளவுக்குப் போய்விடுவார்கள்.

நாம் குழந்தைப் பருவத்திலேயே -கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால்- இப்படித்தான் சகமனிதர்களோடு உறவாடுவோமா என்று என்னை அந்தக் காலத்தில் யோசிக்க வைத்த ஒரு நாவலது. அது திரைப்படமாகவும் பின்னர் எடுக்கப்பட்டிருந்தது.

'Eden' திரைப்படத்தில் இப்படி அங்கே போன ஒரு குடும்பத்தினரின் சந்ததியினரே இன்றும் அத்தீவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மற்ற அனைவரும் அந்தக்காலத்தில் கொல்லப்பட்டோ, வெளியேற்றப்பட்டோ செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவ்வாறு அத்தீவுக்குச் சென்ற முதல் தலைமுறைப் பெண் ஒருவர் எழுதிய நூலை வைத்தே இத்திரைப்படம் படமாக்கப்படவும் செய்யப்பட்டிருக்கின்றது.

*

தேவகாந்தனின் 'கனவுச்சிறை' ஆங்கில மொழிபெயர்ப்பு

Uploaded Image


ஐந்து தனித்தனி நாவல்களாக 12 வருட இடைவெளியில் வெளிவந்த தேவகாந்தனின் படைப்புக்கள் பின்னர் "கனவுச்சிறை" என மொத்தமாகத் தொகுக்கப்பட்டு ஒரு பெரும் நாவலாக வெளியிடப்பட்டது. இப்போது ஆங்கிலத்தில் ஐந்து தனித்தனி நாவல்களாக நேத்ராவினால் மொழிபெயர்க்கப்பட்டு வந்திருக்கின்றது. அந்த ஆங்கில நாவல்களுக்கான வெளியீட்டு விழா இன்று இனிதாக நடைபெற்றது. நூலாசியரிடமும், மொழிபெயர்ப்பாளரிடமும் கையெழுத்துக்களைப் பெற்றுக்கொண்டேன்.

இன்று இது தமிழ்ச்சூழலுக்கு அவ்வளவு முக்கியத்துவம் உடைய நிகழ்வல்ல. ஆனால் எதிர்காலத்தில் இந்நூலை ஆங்கிலத்தில் வாசிக்கப்போகும் ஒரு தலைமுறை கடந்த காலத்தில் தம் மூதாதையர் வாழ்ந்த  வாழ்வின் வேர்களைப் பதுக்கி வைத்த ஒரு படைப்பென கனவுச்சிறையை நிச்சயம் கொண்டாடச் செய்யும் என்பது என் நம்பிக்கை.

தேவகாந்தனுக்கும், நேத்ராவுக்கும் வாழ்த்துகள்!

*

Mango

Uploaded Image

ஓர் எளிமையான காதல் கதையென இதைச் சொல்லலாம். டென்மார்க்கிலிருந்து ஸ்பெயினில் இருக்கும் ஒரு மாமரப் பண்ணை உள்ள நிலத்தை வாங்க ஒரு நிறுவனத்தால் அனுப்பப்படும் பெண்ணின் கதை. எனக்கு மாம்பழம் பிடிக்கும் என்பது மட்டுமில்லை, ஸ்பெயினின் மலேக்காவும் பிடித்த நகரம் என்பதால் சுவாரசியமாக இந்தப் படத்தைப் பார்த்தேன். சிலவேளைகளில் நாம் தேடும் சந்தோசத்தை, நாம் துயரத்தில் தத்தளிக்கும் பொழுதுகளிலும் கண்டடைய முடியுமென்று நம்பிக்கை தரும் எளிமையான திரைப்படம். காதல் என்பது ஓர் அழகான உணர்வு, வாழ்க்கையின் எந்தப் பருவத்திலும் மலரக்கூடியது என்று நம்பக்கூடிய என்னைப் போன்ற மென்னிதயம் கொண்டவர்களை மட்டும் இப்படத்தைப் பார்க்கப் பரிந்துரைப்பேன்.

*

A House of Dynamite

நாம் வாழும் உலகில் அணுகுண்டுப் போர் தொடங்கினால் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றியது இத்திரைப்படம். ஆனால் இங்கே அணுகுண்டு வெடிப்பதோ அதன் அழிவோ அப்படிப்பட்ட எதுவோ காட்டப்பட்டிருக்காது. ஓர் அணுகுண்டு அது எங்கிருந்து அனுப்பப்படுகின்றது என்று தெளிவில்லாது அமெரிக்காவின் சிகாகோவை நோக்கி வரத் தொடங்குகின்றது. அமெரிக்காவின் அனைத்து ஏவுகணைத் தடுப்பு அரண்களையும் தாண்டி அந்த அணுகுண்டு ஏவுகணை அமெரிக்காவின் நிலப்பரப்புக்குள் நுழைகின்றது. அதை எப்படி அமெரிக்கா எதிர்கொள்கின்றது என்பதைப் பற்றிய படம்.

Uploaded Image


நாம் எல்லோரும் பாதுகாப்பான வீட்டில் இருக்கின்றோம், ஆனால் எம்மைச் சுற்றி எப்போதும் என்றாலும் வெடிக்கக்கூடிய வெடிமருந்துக் குவியல்தான் இருக்கின்றது, அதை மறந்துவிடாதீர்கள் என்று நம்மை எச்சரிக்கின்ற ஒரு திரைப்படம்.  'The Hurt Locker', 'Zero Dark Thirty'  திரைப்படங்களை எடுத்த Kathryn Bigelowவின் நெறியாள்கையில் வந்திருக்கின்ற ஒரு படம்.

***

Mr K சிறுகதை குறித்து..

Monday, December 15, 2025

 

கனடாவில் வசிக்கும் எழுத்தாள நண்பர் இளங்கோ  தனது சிறுகதை தொகுப்பான 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்' நூலை நண்பர் வடகோவை வரதராஜன் ஊடாக என்னிடம் சேர்ப்பித்திருந்தார். அவருக்கு முதலில் எனது அன்பும் நன்றியும்.

10 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பை இன்னமும் முழுமையாக வாசிக்கவில்லை. அதில் உள்ள 'Mr.K' என்ற சிறுகதை குறித்த பதிவாக இது அமைகிறது.

தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர்களை பாத்திரமாகக் கொண்ட பல சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. ஒரு வசதிக்காக அவற்றை நான்கு வகையாக வகைப்படுத்தி நோக்கலாம் எனத் தோன்றுகிறது.

Uploaded Image

1. எழுத்தாளர்களின் குணநலன்களை  விதந்தோதி அவர்களின் சொந்தப் பெயர்களையே பாத்திரமாகச் சித்திரித்து எழுதப்பட்டவை.
2. எழுத்தாளர்களின் குணவியல்புகளை உள்வாங்கி வேறு பெயர்களில் பாத்திரமாக்கி எழுதப்பட்டவை.
3. எழுத்தாளர்களை வசை பாடியோ அல்லது அவர்களது நடத்தைக் கோலங்களை எதிர்மறையாகச் சித்திரித்தோ புனைவுப் பாத்திரமாக எழுதப்பட்டவை.
4. தாம் வாசித்த எழுத்தாளர்களின் படைப்புகளில் வரும் பாத்திரங்களை தாம் எழுதும் படைப்புக்களில் வரும் பாத்திரங்களோடு ஒப்புநோக்கி எழுதப் பட்டவை.

மேற்படி முதல் இரு வகைகளுக்கும் உதாரணமாக பேராசிரியர் அ.ராமசாமி எழுதிய கட்டுரை ஒன்றின் சிறுபகுதியை  எடுத்துக் காட்டலாம்.

Uploaded Image


"எல்லா மனிதர்களையும்போலத் தன் குடும்பம், தன்மனைவி, தன் அடையாளம் என வாழ்க்கையை நடத்தாமல் / நடத்த விரும்பாமல் விலகிய பயணத்தைத் தேர்ந்தெடுத்த ஜி.நாகராஜனின் கடைசிக்கால வாழ்க்கை முறை பலருக்கும் ரசிக்கத்தக்கதாக இருந்திருக்கிறது. கதையாக ஆக்கத்தக்கதாக இருந்திருக்கிறது. ஆக்கியிருக்கிறார்கள். சி.மோகனின் 'விலகிய கால்கள்' கதைக்கும் முன்பே நான்கைந்து கதைகளை வாசித்திருக்கிறேன். அவர்கள் பெரும்பாலும் வெளியூர்வாசிகள். பாண்டிச்சேரிக்குப் போன ஜி.நாகராஜனைத் தற்செயலாகப் பார்த்துப் பிரபஞ்சன் தனது கதைக்குள் எழுதிக் காட்டியிருக்கிறார். தன்னைப் பார்ப்பதற்காகவே  நாகர்கோவில் வந்தவரை சுந்தரராமசாமி தனது கதையில் எழுதியிருக்கிறார்.

சென்னைக்கு வந்தவரை அசோகமித்திரனும் திலீப்குமாரும் எழுதியிருக்கிறார்கள். அசோகமித்திரனும்கூடக் கொஞ்சம் விலகலோடு தான் எழுதிக் காட்டுகிறார். ஆனால் திலீப்குமாரின் கதைக்குள் அவரை முழுமையாகப் புரிந்துகொண்ட ஓர் இளைஞனின் பார்வையில் நிறுத்தப்படுவார் ஜி. நாகராஜன். இவர்களெல்லோருமே கதைக்குள் தங்களை ஒரு கதாபாத்திரமாக மாற்றிக் கொண்டு கதையைச் சொல்லியிருப்பார்கள்.  அவர்களெல்லாம் அவரது வாழ்க்கையைப் போன்றதொரு வாழ்க்கையை வாழவேண்டுமென்று நினைத்தவர்கள் என்று சொல்லிவிட முடியாது. அப்படியொரு வாழ்க்கை வாழ்ந்து பாருங்கள் என்று வாசகர்களுக்கும் முன்வைக்கவில்லை.

ஜி. நாகராஜன் என்றொரு எழுத்தாளர் இருந்தார்; அவர் மற்றவர்களைப் போன்ற எழுத்தாளர் அல்லர்; என்னைப்போலவும்கூட அல்ல என்ற தொனி அவற்றில் உண்டு என்று கூறும் கதைகளையே எழுதிக்காட்டி இருக்கிறார்கள். ஆம் அவை கதைகள் தான்; வரலாறல்ல. அக்கதைகளில் எல்லாம் அவர் மட்டுமே உண்மைப் பாத்திரங்கள்.  அல்லது மையப்பாத்திரங்கள். கதைசொல்லிகளாக வரும் எழுத்தாளர்கள் தங்களை அதிகம் காட்டிக் கொள்ளாத முன்னிலைப் பாத்திரங்கள் மட்டுமே. அந்தக் கதைகளை வாசிக்கும்போது ஏற்படுவது இரக்க உணர்வு. இன்னும் சில காலம் அவர்  இருந்திருக்கலாம் என்பதான இரக்க உணர்வு"

இதே போன்று புதுமைப்பித்தன், ஆத்மாநாம், ஆதவன் ஆகியோர்களை கதாபாத்திரமாகக் கொண்ட சிறுகதைகளும் எழுதப்பட்டுள்ளன.
மூன்றாவது வகை கதைகளுக்கு  ஈழத்திலேயே நிறைய உதாரணங்களைச் சுட்டிக்காட்டலாம். 2011ஆம் ஆண்டு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற 'சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு' அரங்கில் நண்பர்  தேவ முகுந்தன் 'இலக்கியவாதிகளை பாத்திரங்களாகக் கொண்ட ஈழத்து தமிழ்ச் சிறுகதைகள்' என்று ஒரு கட்டுரை வாசித்ததும்  நினைவில் வருகிறது.

Uploaded Image

நான்காவது வகைக்கு உதாரணமாக குந்தவை எழுதிய இரண்டு சிறுகதைகளை எடுத்துக் காட்டலாம்.

"இப்படியான 'ஆண்கள்' எல்லாருமே நீலபத்மனாபனின் 'திரவி' போன்றவர்கள் தானோ என அவள் அடிக்கடி யோசித்திருக்கிறாள்"
( 'வீடு நோக்கி' சிறுகதையில்...)

"காசிற்குத்தேவை, எப்பொழுதுமே இருந்து வந்தது. அவன் அந்தக் கலையில் தீவிரமாக முன்னேறி விட்டிருந்தான். தான் ஒரு சாதாரணமானவன். உலக இயல்புகளுக்கு உட்பட்டவன். 'தகழி'யின் கேசவப்பிள்ளை மாதிரி. இயற்கையைத் தானே 'தகழி'யும் எழுதியிருக்கிறார்"
( 'யோகம் இருக்கிறது' சிறுகதையில்...)

இந்த நான்கு வகையான சித்திரிப்புகளைத் தாண்டி 'Mr.K' சிறுகதையில் இளங்கோ செக் நாட்டு எழுத்தாளரான காஃப்காவையும் தமிழ் எழுத்தாளரான கோபி கிருஷ்ணனையும் சிறுகதைக்குள் கொண்டு வந்து நல்லதொரு வாசிப்பனுபவத்தை தந்துள்ளார்.

Mr.K கதையில் வரும் கதைசொல்லி  காதலினால் மகிழ்ச்சிக்கும் துயரத்திற்கும் இருவேறு சூழ்நிலைகளில் ஆளாகித் தடுமாறும் போது அந்த மனநிலைக்குப் பொருந்தக்கூடிய பிரதிபலிப்புகளை காஃப்காவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களோடும் அவரின் படைப்புகளின் வாயிலாகவும் ஒப்புநோக்கிச் சித்திரித்து, காஃப்காவை புரிந்து கொள்வதில் ஏற்படும்  விலகலையும் ஏற்பையும் விபரித்து,  நம் இருத்தலிய வாழ்வில் காஃப்கா ஒரு போதும் விலத்திப் போக முடியாதவர் என்றும் காட்டுகின்றார்.

அதற்கு காஃப்காவின் 'பெர்லின் பொம்மை' கதையையும் 'மழை' சிற்றிதழுக்காய் கோபி கிருஷ்ணனை,  யூமா வாசுகி எடுத்த நேர்காணலின் சில பகுதிகளையும் இந்தக் கதையில் பொருத்தமுறக் கையாண்டுள்ளார்.

இந்தக் கதையைப் படித்ததும்  எப்போதோ வாங்கிய சா.தேவதாஸ் தமிழில் மொழிபெயர்த்த "உலகப் புகழ் பெற்ற கலைஞன் : காஃப்காவின் கடிதங்கள்,கதைகள், கட்டுரைகள்" நூலையும் 'புது எழுத்து' சிற்றிதழ் வெளியிட்ட 'கோபி கிருஷ்ணன்' சிறப்பிதழையும் வாசிக்கத் தூண்டி உள்ளது.

***
 
(Oct, 2025)

 

புத்தகப்பிரியர் டான் வாசித்தவை

 

கனடிய தேசிய ஊடகங்களில் இலங்கை வெள்ள அனர்த்தம் குறித்து ஏதும் தகவல்கள் வந்தனவா என்று துழாவிக் கொண்டிருந்தேன். தென்கிழக்காசியா நாடுகளைப் பதம் பார்த்து அழிவுகளை செய்த புயல் இப்போது இலங்கையைக் கடந்து கொண்டிருக்கின்றது. ஏற்கனவே நூறுக்கு மேற்பட்ட மக்கள் இலங்கையில் இறந்துவிட்டனர் என செய்திகள் வருகின்றன. மிகுந்த துயரமான காலம்!

மழையோ, புயலோ எது வந்தாலும் உடனே பாதிப்புறும் இடங்களாக இலங்கையில் மலையகமும், தென்னிந்தியாவில் கேரளாவும் இருப்பதை பல பொழுதுகளில் கண்டிருக்கின்றேன். இரண்டுமே எனக்கு மிக நெருக்கமான இடங்கள்.

இவ்வாறான சோர்வான காலங்களில் மனது எதையாவது நம்பிக்கையை கொழுகொம்பாகப் பற்றிக் கொள்ள அவாவும். அப்படி தற்செயலாக ஒருவர் தன் வாழ்க்கைக் காலத்தில் 3,599 நூல்களை வாசித்திருக்கின்றார் என்கின்ற ஒரு செய்தியை வாசித்தேன். அமெரிக்காவில் வாழ்ந்த டான் (Dan Pelzer), அண்மையில்தான் தனது 92 வயதில் காலமாகியிருக்கின்றார். ஒரு சமாதான (?) நடவடிக்கைக்காக நேபாளத்திற்கு 1962இற்கு சென்றபோது வாசிக்கத் தொடங்கிய புத்தகங்களிலிருந்து கிட்டத்தட்ட 60 வருடங்களாக  அவர் வாசித்த புத்தகங்கள் ஒவ்வொன்றின் பெயரையும் எழுதி வைத்திருக்கின்றார்.

நல்லவேளையாக அவர் வாசகராக மட்டும் இருந்திருக்கின்றார். எழுத்தாளராக ஆகவேண்டும் என்று முயலவேயில்லை. இல்லையெனில் நம்மிடையே இருக்கும் சிலரைப் போல தொடக்கத்தில் கொஞ்சப் புத்தகங்களை மட்டும் வாசித்துவிட்டு, எழுத்தாளராகி எமது தலையில் தங்களுக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று சம்பல் அரைத்திருப்பார். அந்தத் தவறெல்லாம் இந்த நல்வாசகரான டான் செய்யவில்லை. அது அவரது நல்லூழ்.
Uploaded Image

சில மாதங்களுக்கு முன்னர்தான் இவர் காலமாகியிருக்கின்றார். அவரின் மகளுக்கே 20 வருடங்களுக்கு முன்னர்தான் தனது தகப்பன் இப்படி வாசித்த புத்தகங்களின் பட்டியலை அவரின் கையெழுத்தில் எழுதி வைத்திருக்கின்றார் என்பது தெரிந்திருக்கின்றது. இந்த வாசகர் இந்தப் பட்டியலை வேறு எவருக்கும் காட்டவேண்டும் என்றோ அல்லது இவ்வளவு நூல்களை வாசித்திருக்கின்றேனோ என்பதற்காகவோ தயாரிக்கவில்லை. அவருடைய தனிப்பட்ட விருப்புக்காக தான் வாசித்த  நூல்களைப் பட்டியலிட்டு வைத்திருக்கின்றார்.

கவனிக்கவேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால், டான் தான் எழுதி வைத்திருக்கும் நூல்களின் பட்டியலில் உள்ள நூல்களை முழுமையாக வாசித்திருக்கின்றார் என்பதாகும் . நமது சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கி, 'எனக்குத் தெரியாத ஒன்றைப் பற்றியும் நான் எழுதுவதில்லை' என்று சொன்னதுபோல, டானும் அவர் வாசித்து முடிக்காத நூல்கள் பற்றிய பெயர்களை தனது பட்டியலில் சேர்த்தவர் இல்லை எனலாம். டானின் பட்டியலில் 1962 இல் முதல் வாசித்த முதல் நாவல் The Blue Nile ஆக இருக்கின்றது, இறுதி நாவலாக 2023 இல் வாசித்தது சார்ள்ஸ் டிக்கன்ஸின் David Copperfield.

*

தமது தகப்பனின் மரண வீட்டின்போது, இந்தப் பட்டியலை அந்நிகழ்வுக்கு வருகின்றவர்களுக்கு கொடுக்கலாம் என்று பிள்ளைகள்  விரும்பியபோது அந்த நூல்களின் பட்டியலே நூறு பக்கங்களுக்கு மேல் வருவதால், அப்படி கொடுக்க முடியாது, தந்தை வாசித்த நூல்களின் பட்டியலை அனைவரும் வாசிக்கும்படி இணையத்தில் பிரசுரித்திருக்கின்றனர்.

இவ்வளவு நூல்களை ஒருவர் வாசித்திருக்கின்றாரா என்று பலர் வியந்து டானின் பிள்ளைகளுக்கு நிறைய மின்னஞ்சல்/தொலைபேசிகள் பேசியிருக்கின்றனர். டான் அடிக்கடி செல்லும் நூலகம் அவருக்கென ஒரு பக்கத்தை உருவாக்கி டான் வாசித்த நூல்களின் பட்டியலைக் கொடுத்து, அந்த நூல்களுக்கான இணைப்புக்களையும், அந்த புத்தகங்களுக்கான சிறியதான நூல் சுருக்கத்தையும் கொடுத்திருக்கின்றனர்.

அது மட்டுமில்லை நூலகத்தில் வருபவர் கண்ணுக்கு முன்னே தெரிவதற்காக, 'டான் வாசித்த நூல்கள்' என்றொரு நூலக அடுக்கையும் வைத்து மூவாயிரம் நூல்களை வாசித்த டானைப் பெருமைப்படுத்தியிருக்கின்றனர். . மேலும் இப்போது பல அமெரிக்கன் நூலகங்களில் டானின் பெயரோடு அவர் வாசித்த நூல்கள் காட்சிப்படுத்துமளவுக்கு டானின் வாசிப்பு பிரபல்யமாகிவிட்டது. பல தொலைக்காட்சி நிறுவனங்கள் அவரின் புத்தக வாசிப்பைப் பற்றி சிலாகித்துப் பேசத் தொடங்கியிருக்கின்றன.

டான், அவரின் இயல்பு வாழ்க்கையில் எப்படி இருப்பார் என்று அவரின் மகளிடம் கேட்டபோது, அவர் வேலை இடைவெளிகளின்போதும், பஸ்சில் பயணிக்கும்போதும் வாசிப்பவர் என்று அறிந்திருக்கின்றனர். பின்னர் அவர் வேலையில் இருந்து ஓய்வுபெற்றபோது, ஒவ்வொரு நாளும் எப்படியாயினும் நூறு பக்கங்களை வாசிக்காமல் தூங்கப் போகமாட்டார் என்று கூறியிருக்கின்றார்.

ஒருவர் தன் வாழ்க்கைக்காலத்தில் 3,500 இற்கு மேற்பட்ட நூல்களை வாசிப்பது என்பது எளிதல்ல. அதிலும் டான், ஜேம்ஸ் ஜாய்ஸின் 'யுலிஸிஸ்' உட்பட பல பெரும் புத்தகங்களை வாசித்திருக்கின்றார். டானுக்கு எத்தகைய புத்தகங்கள்/எழுத்தாளர்கள் மீது விருப்பமிருந்தது என்று கேட்கப்படும்போது, அடுத்த பக்கத்தில் என்ன இருக்கின்றது என்று சுவாரசியமாக பக்கங்களைப் புரட்ட வைக்கும் நூல்களே அவருக்கு அதிகம் பிடித்தது என்று சொல்லியிருக்கின்றார். ஜேம்ஸ் ஜாய்ஸின் யுலிஸிஸை வாசித்து முடித்தாலும் அதற்காக கடும் உழைப்பு தேவையாக இருந்தது என்று டான் மகளிடம் கூறியிருக்கின்றார்.

இவ்வளவு புத்தகங்களை டான் வாசித்தவர் என்பதை விட, எனக்கு அவர்  தன் சொந்த வாழ்க்கையில் எப்படி இருந்தவர் என்பதை அறிய ஆவலாக இருந்தது. ஏனெனில் எங்களில் பலருக்கு எத்தனை புத்தகங்களை வாசித்தாலும் 'அறிவு' வளர்வதில்லை. டான் ஒரு அமைதியானவராக, புத்தகங்களை மேற்கோள் காட்டி பேசுபவராக/மற்றவர்களையும் புத்தகங்களை வாசிக்க உற்சாகமூட்டுபவராக, இவையெல்லாவற்றையும் விட பிறரின் மீது சகிப்புத்தன்மையுடையவராகவும், ஆன்மீகத்தில் (கிறிஸ்தவம்) ஆர்வமுள்ளவராகவும்  இருந்ததாக மகள் சொல்வதே எனக்கு முக்கியமானதாகத் தெரிந்தது. இப்படி புத்தகங்களை டான் வாசித்ததால் அவர் தன்னியல்பிலே நல்லதொரு உரையாடல்காரராக, பிறரை தன் வசம் பேச்சில் கவரக்கூடியவராக இருந்தார் எனவும் பிள்ளைகள் சொல்கின்றனர்.

டானின் மனைவி இறப்பதற்கு முன்னர், மூன்று வருடங்கள் வயதானவர்களைப் பராமரிக்கும் விடுதியில் இருந்திருக்கின்றார். 50 வருடமாக வாழ்ந்த தன் மனைவியை அந்த விடுதியில் பார்த்துவிட்டு, தனது தனிமையான வீட்டுக்குத் திரும்பும் டான், அப்போதும் வீட்டில் வாசித்துக் கொண்டிருப்பவராக இருந்தவரெனச்  சொல்கின்றனர். மனைவி இறந்த ஓரு வருடத்தில் டானும் இறந்திருக்கின்றார்.

*
டானின் இந்த புத்தகப் பைத்தியத்தைப் பார்த்தபின், நானும் சாவதற்குள் அவரளவுக்கு இல்லையென்றாலும் ஒரு இரண்டாயிரம் நூல்களை வாசித்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென யோசித்தேன். டான் எழுதிய பட்டியல் அவர் தனது 29 வயதில் வாசிக்க தொடங்கிய நூல்களிலிருந்து தொடங்குகின்றது.

நானும் இதுவரை காலம் எவ்வளவு நூல்களை வாசித்திருப்பேன் என யோசித்துப் பார்த்தேன். இதுவரை இருநூறுக்கு மேற்பட்ட நூல்களுக்கு விரிவான வாசிப்புக்களை எழுதியதாக என் வலைப்பதிவு காட்டுகின்றது (வாசிப்பு(239)). அவை என் 20 வயதுகளின் பின் எழுதத் தொடங்கியது.

எப்படியும் பதினொரு/பன்னிரெண்டு வயதிலே பாலகுமாரனையும், சாண்டியல்யனையும் வாசிக்கத் தொடங்கிவிட்டேன் என்பதால் ஒரு நூறு புத்தகங்களுக்கு மேலாக என் 20 வயதுக்குள்ளே வாசித்திருப்பேன். இதுவரை எப்படியோ திக்கித்திணறி ஒரு 700/800 நூல்களையாவது முழுமையாக வாசித்திருப்பேன் என நினைக்கின்றேன்.

எனது இலக்கையடைய இன்னும் 1,200 புத்தகங்களை வாசிக்க வேண்டும். இதற்குள் வாழ்க்கையின் தினசரிச் சிக்கல்கள், காதலியை ஆரத்தழுவுதல், ஆஸ்மாவோடு அல்லாடுதல், இலக்கிய எதிரிகளுக்கு எதிர்வினை செய்தல்  என்றெல்லாம் எவ்வளவு நேரத்தைக் கொடுக்கவேண்டும் என்று பெருமூச்சும் வருகின்றது.

'நான் சொர்க்கத்தை ஒரு நூலகம் போல கற்பனை செய்கின்றேன்' என்று போர்ஹேஸ் சொல்லியிருக்கின்றார். எனக்கென்னவோ போர்ஹேஸோடு இப்போது அருகில் அமர்ந்து இந்த டானும் புத்தகங்களை வாசித்துக்கொண்டிருப்பார் என்றுதான் கனவு காணத் தோன்றுகின்றது.

***

 

படுபட்சி: இறுதியாய்ச் சில குறிப்புகள்

Sunday, December 14, 2025

 

(1) அண்மைக்காலமாக வாசிக்கும் எந்தப் புத்தகத்துக்கும் எதிர்மறையான வாசிப்புக்களை எழுதக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றேன். விமர்சனங்கள் தேவையல்ல என்பதற்காகவல்ல, நிறைய நல்ல நூல்கள் கவனிக்கப்படாது நாம் எதிர்மறையான திசைக்கு அதிக கவனம் கொடுக்கின்றோம் என்று நினைத்துக் கொண்டதாலாகும். அதேயே 'படுபட்சி'யை வாசித்து முடித்தபோதும் எண்ணிக் கொண்டேன். ஆனால் வாசித்து ஓரிரு நாட்களுக்குப் பிறகும், அது தொடர்ச்சியாக தொந்தரவுபடுத்தியதால், இது குறித்து எழுதித்தான் தாண்டமுடியும் என்பதாலே 'படுபட்சி' குறித்து எழுத வேண்டியிருந்தது.

(2) அந்த வாசிப்புக்கு  நான் வைத்த தலையங்கத்தை ஒருவர் கவனித்தாலே ('படுபட்சி: மோசமான மொழியில் எழுதப்பட்ட அசலான கதை' க்குத் தெரிந்திருக்கும், நான் இந்த நூலை முற்றாக நிராக்கவில்லை என்பது [1]. படுபட்சி நிச்சயம் சொல்லப்படவேண்டிய ஓர் அசலான கதை, ஆனால் அந்த அசலான கதைக்குச் சொந்தமான டிலுக்‌ஸனுக்கு இருக்கக்கூடிய ஒரு மொழியில் சொல்லப்படாததே என் முக்கிய விமர்சனமாக இருந்தது.

(3) எப்படி எனது வாசிப்பைச் சொல்வதற்கு எனக்கு ஒரு வெளி இருந்ததோ, அப்படியே அதை  கனடாவில் இருந்து விதந்து எழுதிய ஜயகரனினதோ, விக்கியினதோ பதிவுகளையும் நான் வாசித்திருக்கின்றேன். அவர்களின் பெரும்பாலான கருத்தில் ஏற்பும் எனக்கு இருக்கின்றது. நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு திசைகளில் இருந்து இந்தப் பிரதியை அணுகின்றோம். அவ்வளவேதானே தவிர என் வாசிப்பு மட்டுந்தான் சரியென்று எந்த இடத்திலும் வாதிடவில்லை.

இந்த நூலில் எடிட் செய்தவரின் குரல் எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டலும், இதனால் சொல்லப்பட வேண்டிய முக்கிய கதையான 'படுபட்சி'யின் வீரியம் நீர்த்துப் போகின்றது என்பதுந்தான் என் வாசிப்பின் முக்கிய பேசுபொருளாகும்.

 



(4) இந்த நூலைப் பற்றி இன்னொரு பகுதியையும் எழுத, தொடக்கத்தில் தீர்மானித்திருந்தேன். அதாவது இந்த நூலின் 'அசலான கதையின் ஆன்மா' எங்கே ஒளிந்திருக்கின்றது என்பது பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியுமாகும். இந்த நூலின் 'அசல் கதை' பற்றிய தேடலில் ஒரு சிக்கலான சித்திரமே எனக்குள் வந்ததால், அப்படியொரு நிலையில் அதை எழுதுதல் இப்போதைக்கு சாத்தியமில்லை என நினைக்கின்றேன்.

(5) இந்த நூலை வாசித்தபோதும், இதற்கான வாசிப்பை எழுதிய பின்னரும் 'படுபட்சி'யோடு ஆகவும் obessed ஆக நான் இருந்ததைப் பார்த்த நண்பர், 'உங்களுக்கு இதில் அதன் அசல் மொழி  மாற்றப்பட்டு இன்னொருவரின் குரல் ஒலிப்பது பிரச்சினையாக இருக்கின்றதா அல்லது autofiction எனச் சொல்லப்பட்டு அசல் மனிதர்களும், காலமும் மாற்றி எழுதப்பட்டது சிக்கலாக இருக்கின்றதா' எனக் கேட்டார்.

(6) இஃதொரு முக்கியமான கேள்வியாக என் முன்னால் இருந்தது. எது என் வாசிப்பில் துருத்தியது என்றால் இந்த இரண்டையும் சேர்த்துத்தான் எனச் சொல்ல வேண்டும்; ஆனால் இந்நூலை எடிட் செய்தவரின் மொழியும்/கதையாடலும் அதிகம் துருத்திக் கொண்டிருப்பதால் என்னால் கதைக்குள் சரியாக நுழையமுடியாத அவதி இருக்கின்றது என்பதையும் கண்டுகொண்டேன்.

(7) இந்த ஆட்டோபிக்சனின் மிக முக்கிய காலப்பிழையைப் பின்னர் கண்டுபிடித்திருந்தேன்.

இந்நூலில் கதைசொல்லி யுத்தம் நடக்கும் காலத்தில் இந்த விமானத்தைச் செய்து பிடிபட்டு இலங்கை இராணுவத்தின் முகாமில் இருந்து, புலிகள் அதைத் தாக்கும்போது அவர்களோடு  தப்பி வருவதாக முடிக்கப்படுகின்றது.

"காயப்பட்ட போராளிகளுடன் என்னையும் ஏற்றிக்கொண்டு படகு படுவான்கரையை நோக்கி இருளில் நகர்ந்தது. எழுவான்கரையைப் பார்த்தேன். மயிலாம்பாவெளி இராணுவ முகாம் தீப்பற்றி எரியும் வெளிச்சத்தில் அது ஒளிர்கிறது" ( 'படுபட்சி', ப 143).

(8 நிஜவாழ்வில் டிலுக்ஸன் யுத்தம் முடிந்த 2009 ஆண்டுக்குப் பிறகே இப்படி விமானம் செய்யப்பட்டதற்காகக் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டிருக்கின்றார் என்பதே 'தெளிந்த' உண்மையாகும்.

(9) டிலுக்‌ஸன் கனடாவில் கொடுத்த ஒரு நேர்காணலில், 'நான் எனது விமானம் செய்யும் திட்டத்தை, இராணுவம் முள்ளிவாய்க்கால் வெற்றியைக் கொண்டாடிய மேமாதத்தில் காட்சிப்படுத்தவே கேட்டேன். அதன் பிறகுதான் என்னை கைதுசெய்தார்கள், சித்திரவதை செய்தார்கள்' [2]. <<இந்த நேர்காணல் காணொளியை முழுதாகப் பார்க்க முடியாதவர்கள் தயவு செய்து 9.00 ஆவது நிமிடத்தில் இருந்தாவது பார்க்கவும்>>

இந்த நூலில் வாசகரை மிக ஏமாற்றிய பகுதியாக இதைச் சொல்லலாம். நான் நூலை வாசிக்கும்போதோ,  அது பற்றிய என் முதல் வாசிப்பை எழுதியபோதோ இந்த முக்கிய விடயத்தைக் கவனிக்கவில்லை. அது என்னவெனில்..

டிலுக்‌ஸன் விமானம் செய்தது தொடர்பாக கைதுசெய்யப்பட்டது போர் முடிந்த 2009 ஆண்டுக்குப் பிறகே ஆகும். ஆனால் இந்த நூல் முழுவதுமே  யுத்தம் நடைபெறும்போது சமாந்திரமாக கதைசொல்லி விமானப் பொறியியல் படிப்பதாகவும், விமானம் செய்வதாகவும், அதன் நிமித்தம் கைது செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது.

(10) ஒரு கதையை யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காலப்பகுதியில் (2009 முன்) சொல்வதற்கும், யுத்தம் முடிந்தபிறகு சொல்வதற்கும் (2009 பிறகு) பெரும் இடைவெளி இருக்கின்றது என்பதை  நீங்கள் நன்கு அறிவீர்கள்.

உதாரணத்துக்கு ஒருவர் 2009 யுத்தம் முடிந்தபின்   கனடாவில் இருந்து இலங்கை போகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவரை ஏதோ ஒரு காரணத்தால் இலங்கையில் கைதுசெய்கின்றார்கள். அவர் அந்த நிகழ்வை யுத்தம் நடைபெறுகின்றபோது என்னைக் கைதுசெய்தார்கள் என்று யுத்தத்தின் பின்னணியில் ஒரு கதையை  ஆட்டோபிக்‌ஷனில் எழுதிவிட்டு இது எனக்கு நடந்த சம்பவம் என்று claim செய்தால் எவ்வளவு மோசமாக இருக்கும்.

அந்த மிகப்பெரும் தவறை, டிலுக்ஸன் 2010 இற்கு விமானம் தயாரிக்கப்பட்டதற்காக கைதுசெய்யப்பட்டதை, யுத்தம் நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது (நூலில் 2007 இல் எனச் சொல்லி), இப்படியெல்லாம்  நடைபெறுவதாக எழுதுவது எத்தகைய அறம் என நாம் கேட்க வேண்டியவர்களாகின்றோம்.

(10) இது ஒரு ஆட்டோபிக்‌ஷன், புனைவும் கலந்திருக்கலாந்தானே. ஏன் இந்தக் கால வழுவை கேள்விக்குட்படுத்துகின்றீர்கள் என ஒருவர் கேட்கலாம். அது நாவலாக இருப்பின் நாம் எளிதில் கடந்துபோகலாம்.

ஆனால் நாவல் முன்னட்டையில் 'இலங்கையில் முதல் விமானத்தை உருவாக்க வேண்டும் என்ற தமிழ் இளைஞனின் பயணமும் பாடுகளும்' என எழுதப்பட்டு டிலுக்ஷனின் புகைப்படத்தோடு விளம்பரப்படுத்துவது மட்டுமில்லை, டிலுக்‌ஷன் தனது ஒவ்வொரு நேர்காணல்/ மேடைப்பேச்சுகளிலும் இது தனது சொந்தக்கதை என்று claim செய்தபடியே இருக்கின்றார். அப்படி அவர் தனது சொந்தக்கதை என்று உரிமை கோருவதாலே நாம் இந்த காலவழுவை முன்வைத்து குறுக்கிட வேண்டியவராகின்றோம்.

இப்படி ஒரு காலவழுவோடு (யுத்தம் முடிந்தபின் நடக்கும் கதையை/ யுத்தத்தின்போது நடப்பதாக) எழுதுவது நமக்கு உறுத்துகின்றது. அதைப் பொதுவெளியில் இது இந்த நூலின் அடிப்படைத்தன்மையே சந்தேகிக்க வைக்கின்றதே என ஒரு கேள்வியாக நான் முன்வைக்க விரும்புகின்றேன்.

(11) மேலும் இது தொடர்பாக தேடியபோது, டிலுக்‌ஷனின் LinkedIn Profile கையில் அகப்பட்டது.  Facebook Profileஇல்  பொய் கூறலாம். ஆனால் LinkedIn Profile யில் கற்பனையைக் கலக்கமுடியாது. அது பிறகு உங்கள் வேலைக்கும், தனிமனித வாழ்க்கைக்கும் மேற்குலகில் 'ஆப்பு' வைத்துவிடும். அதில் டிலுக்‌ஷன் இலங்கையில் "Skyline aviation Sri lanka இல்,   Jan 2011- Jan 2014  இல் Associate's Degree - AirFrame Mechanics & Aircraft Maitenance Technology/Tehcnician செய்திருக்கின்றார் எனச் சொல்லியிருகின்றார் [3].

(12) அப்படியெனில் தன்னை இராணுவம் பிடித்துவிட்டு சித்திரவதை செய்தது, அதன் பிறகு இலங்கையில் எதையும் தொடர்ந்து படிக்கவில்லை, தப்பி ஆஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டேன் என்று கோருவது எப்படி முறையாகும். எனில் இந்த டிகிரி அசலானதா அல்லது போலியானதா? அசலாகவே இருக்கவே சாத்தியம். அப்படியெனில்  2011-2014  வரை டிலுக்ஸன் இலங்கையில்தானே இருந்திருக்க வேண்டும்?

(13) திருப்பவும் ஞாபகமூட்டுவது ஒன்றேயொன்றுதான் இதை நாவல் என்று எழுதிவிட்டு போயிருந்தால் பரவாயில்லை. சரி ஆட்டோபிக்‌ஷன் என்றும் தலைப்பிட்டுவிட்டு ஒரு 'கொரில்லா' எழுதியது போல எழுதிவிட்டு அவரும் தப்பிப் போயிருந்திருக்கலாம். ஆனால் 'படுபட்சி'யை தொடர்ச்சியாக தனது சொந்தக்கதை என்று claim டிலுக்ஸன் செய்யும்போது மட்டுமே இப்படி ஆழ அலசி இந்தக் கேள்விகளை முன்வைக்க வேண்டியிருக்கின்றது.

(14) டிலுக்‌ஷன் தனது கதையைத் திரைப்படமாக்க வேண்டுமென ஒரு (முன்னாள்) போராளியிடம் சொன்னபோது, அவர் இந்தக்கதையை வன்னியிலோ அல்லது வடமாகாணத்திலோ நடப்பது மாதிரி மாற்றி எழுதினால் அதிகப் பேர் தயாரிப்பாளராக வருவார்கள் என்றும், தான் அதை மறுத்து என் சொந்தக்கதையை என் சொந்த ஊரில் நடப்பதாக மட்டுமே எடுப்பேன் என்று சொன்னதாகச் சொல்லியிருப்பார். உண்மையில் அவர் இதை கன்டாப் புத்தக வெளியீட்டு விழாவில் சொன்னபோது, இதுதான் ஒரு படைப்பாளிக்கு வேண்டிய நிமிர்வு என நினைத்தேன். அவரின் அந்த உரைக்கு மனம் விரும்பி கையும் தட்டியிருந்தேன்.

(15) ஆனால் இப்போது டிலுக்‌ஷனின் விமானத் தயாரிப்பும், கைது செய்யப்படுதலும்  ஈழத்தில் ஆயுதப்போராட்டம் முடிந்து புலிகளும் அழிக்கபட்ட பின்னரே நிகழ்ந்தது என்று அறியும்போது, புலிகளின் காலத்தில் நடந்ததாய்க்  நூலில் காலம்  மாற்றித் திருகுதாளம் செய்யும்போது, அந்தப் போராளி கேட்பதில் என்ன அநியாயம் இருக்கிறது  என்று கேட்கவே இப்போது தோன்றுகின்றது.

அவரின் நூலில், நிஜத்தில் உயிரோடு இருக்கும் தகப்பன் தாய் தங்கை எல்லோரையும் இறந்தவர்களாகக் காட்டி, இன்னும் எத்தனையோ விடயங்களை மாற்றிக்காட்டும்போது,  கிழக்கின் செங்கலடிக்குப் பதிலாக வடக்கின் ஆனந்தபுரத்தை காட்ட ஏன் தயக்கம் என்று ஒருவர் கேட்டால் டிலுக்‌ஸனிடம் என்ன பதில் இருக்கும்?

(16) இத்தகைய குழப்பங்களிடயேயும், அவர் ஆயுதப்போராட்டம் முடிந்த பின்னரேதான் கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார் என்றாலும், டிலுக்‌ஷனின் இந்த அனுபவத்தை நாம் செவிகொடுத்து கேட்க வேண்டும். அதுவும் அவர் ஒரு தமிழனாக இருந்ததால் விமானிக்குப் படிக்க இலங்கையில் மறுக்கப்பட்டதும், பின்னர் ஏரோநாட்டிக்கல் எஞ்ஜினியங் படிக்கும்போது தனியொரு தமிழனாக இருந்ததால் இனவாதத்தால்  அவர் மோசமாகப் பாதிக்கப்பட்டதும் அவசியம் பதிவு செய்யப்பட வேண்டிய விடயங்களே.

தமிழர் என்ற அடையாளத்தால் வந்த இந்த இன ஒதுக்கல்,  யுத்தத்தின் பின் ஒரு தமிழருக்கு நடந்திருக்கின்றது என்பதுதான் நாம் கவனப்படுத்த வேண்டியது.

ஆக தமிழர்க்கு இலங்கையில் யுத்தம் முடிந்தபின் கூட அவர்களுக்குப் பிடித்த ஒரு துறையில் படிப்பதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கவில்லை, அதன் நிமித்தம் ஒருவர் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளானர் என்பது நமக்கு டிலுக்ஸனின் வாழ்க்கை சொல்லும் ஒரு முக்கிய சாட்சியமாகும்.

யுத்தம் முடிந்த பின்னர் இவையெல்லாம் டிலுக்ஸனுக்கு நிகழ்ந்தாலும், அதன் நிமித்தம் அவர் கைது செய்யப்பட்டதும், சித்திரவதைக்குள்ளானதும் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இந்தக் காரணங்களால் டிலுக்‌ஸனின் கதை நிச்சயம் சொல்லப்பட வேண்டும் என்ற பக்கத்திலே நான்  உறுதியாக நிற்கின்றேன் என்பதையும் இன்னொருமுறை (என் படுபட்சி குறித்த முதல் வாசிப்பை சரியாக விளங்காது அலட்டும்  சில அரைகுறை  அறிவுஜீவிகளுக்கு) சொல்லிவிடுகின்றேன்.

அதேபோல டிலுக்ஸன் இதை தேசியத்தின் பேரில் திரைப்படமாக்க வேண்டும் என்று தன்முனைப்புக் கொண்டவர் என்று ஒருதரப்பார் வைக்கும் கதையாடல்களையும் நான் நிராகரிக்க விரும்புகின்றேன். ஒருவர் தனது வாழ்வில்பட்ட அல்லல்களைச் சொல்ல விரும்பினால், நாம் ஏன் அதற்கு தேசியம்/மார்க்ஸியம்/மண்ணாங்கட்டி என்கின்ற அடையாளங்களைச் சூட்ட வேண்டும். எவராயிலும் அவர்களின் கதைகளை அவர்கள் சொல்லட்டுமே!

பின்னமைப்பியல்/பின்நவீனத்துவம் கற்ற ஓர் ஆரம்பநிலை மாணவன் என்றவகையில் ஒவ்வொவரின் குரல்களும் எனக்கு முக்கியமானவை. ஆகவே டிலுக்ஸன் என்கின்ற தனிமனிதன் தாண்டி வந்த,  அவரது சொந்த வாழ்வியல் அனுபவம் எனக்கு முக்கியமானது. அந்தக் கதை சொல்லப்படவேண்டியது என்பதிலும் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதை அவர் எந்த வடிவத்தில் சொன்னாலும்  என் தார்மீக ஆதரவு அவருக்கு எப்போதுமுண்டு.

ஆனால் அதை ஒரு எடிட்டரின் குரலிலோ, அந்த எடிட்டரின்'இன்னொரு நூலின் குரலைப் போன்ற பாவனையிலோ அல்ல, டிலுக்‌ஷனின் அசலான குரலில் அவர் அதைச் சொல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பேன்.

*****


குறிப்பு 01: 
இயன்றளவு ஆதாரங்களைத் தேடி, தெளிவாக எனது கருத்துக்களை முதல் பதிவிலும், இந்தப் பதிவிலும் முன்வைத்திருக்கின்றேன் என்று நம்புகின்றேன். இத்துடன் நான் 'படுபட்சி'நூலின் வாசிப்பு/ உரையாடல்களிலிருந்து முற்றாக விலகிக் கொள்கின்றேன்.

குறிப்பு 02:  
இது குறித்த எனது முதல் கட்டுரையில் 'எடிட் செய்பவரின் துருத்திக் கொண்டிருக்கும் குரல்' பற்றிக் குறிப்பிட்டிருப்பேன். அதற்கு நீட்சியாக அதற்கு நீட்சியாக அ.யேசுராசா அவர்கள் ஒரு பின்னூட்டம் எனது பதிவில் எழுதியிருந்தார். அந்தப் பின்னூட்டத்தை எங்கிருந்து அது எடுக்கப்பட்டது, எந்தப் பதிவின் நீட்சியில் அது எழுதப்பட்டது என்று எதுவும் சொல்லாது, யேசுராசாவின் கருத்தை மட்டும் எடுத்து ஒருவர் யேசுராசாவின் புகைப்படத்தோடு, 'எடிட்டிங்' குறித்து ஒரு பதிவு எழுதியிருக்கின்றார். அந்தப் பின்னூட்டத்தை எங்கிருந்து அது எடுக்கப்பட்டது, எந்தப் பதிவின் நீட்சியில் அது எழுதப்பட்டது என்று எதுவும் சொல்லாது, யேசுராசாவின் கருத்தை  மட்டும் எடுத்து ஒருவர் யேசுராசாவின் புகைப்படத்தோடு,   'எடிட்டிங்' குறித்து ஒரு பதிவு எழுதியிருக்கின்றார்.

அப்படி அடியும் நுனியும் இல்லாமல் எழுதுவது என்பது சரியான உரையாடலுக்கு வழிகோலாது. அந்த பதிவில் விருப்பக்குறிகள் இட்டிருக்கும் கல்விபுலப் பின்னணியில் இயங்கிய/இயங்கும் பெருமாள் முருகனோ அல்லது ராஜன்குறையோ, இப்படி அவர்களின் ஒரு மாணவர், உரிய reference கொடுக்காது எழுதியிருந்தால் அந்த மாணவரின் கட்டுரையை உடனேயே நிராகரித்திருப்பார்கள். அதுவே குறைந்தபட்ச எழுத்து அறமாகும்.

அத்துடன் அ.யேசுராசா அதைத் தனியே ஒரு பதிவாக தனது பக்கத்தில் எழுதவில்லை. எனது பதிவில் எழுதிய அவரது பின்னூட்டத்தை மட்டுமில்லை, யேசுராசாவின் புகைப்படத்தோடு சேர்ந்து எழுதுவது மிக மோசமான செயலாகும். ஒருவரின் personal space இற்குள் அத்துமீறுவதாகும்.

நானோ, யேசுராசாவோ ஒரு பிரதியை திருத்தும் எடிட்டர்களின் முக்கியத்துவத்தையோ அல்லது எடிட்டர்களின் அடிப்படைப்பண்புகள் என்னவென்றோ அறியாத 'பால்குடிக'ளோ அல்ல.  நானே தமிழில் எடிட்டர்கள் நமக்கு அவசியம் தேவை என்று சில பதிவுகளை எழுதியிருக்கின்றேன் [4].  ஒரு சிலரின் புனைவுகளை எடிட் செய்தும் கொடுத்திருக்கின்றேன்.

ஆனால் அந்தப் பதிவை  எழுதியவர் நமது இருவரின் கருத்தை வழமைபோல திருகி ஒரு 'டிப்ளோமட்'டிக்காக எழுதியிருக்கின்றார்.

ஒரு எடிட்டர் என்பவர் ஒரு பிரதியை முன்னுக்கு நிற்பவர் அல்ல, அவர் பிரதியின் திரைக்கு அப்பால் நின்று மறைமுகமாக வேலை செய்து ஒரு நூலைச் செம்மைப்படுத்துபவர். நானோ (யேசுராசவோ) சொல்வது, இந்த நூலில் உள்ள எடிட்டர் என்பவர், அந்த மூடுதிரையைத் தாண்டி  முன்னே துருத்திக்கொண்டிருக்கும் நிற்கின்ற அபாயத்தைப் பற்றியே ஆகும்.

நாங்கள் இருவரும் சொல்லவந்ததன் சரியான அர்த்தம், இப்படி 'பிய்த்து'க் கொண்டு போய் எழுதியவருக்குத் தெரியாதும் என்பதல்ல. அவர் அப்படித்தான் தனது நாசூக்கான ஆட்டத்தை எனக்குத் தெரிந்த காலத்தில் இருந்தே ஆடுபவர். ஆகவே நான் இந்த எடிட்டிங் குறித்து இனி எழுதுவது என்றால் மூன்றாம் தரப்போடு உரையாடல் செய்வதற்காக என்றால் மட்டும் எழுதுவேன்.

நிச்சயமாக என் பதிவில் இருந்து யேசுராசாவின் பின்னூட்டத்தை எந்த referenceம் இல்லாது எடுத்து போட்டு 'ஐயோ நான் படுபட்சியை எடிட் செய்துவிட்டேன் என்பதற்காக என்னைத் தாக்குகின்றனர்' என்று பாவனை காட்டுகின்றவருடன்  எனக்கு உரையாடல் சாத்தியமில்லை. இதை,  நான்  அவரோடு  கடந்தகாலங்களில் இவ்வாறான உரையாடல்களில் அனுபவங்களின் அடிப்படையில் வைத்துச் சொல்கின்றேன். நன்றி.

உசாத்துணைகள்:
[1]  படுபட்சி: மோசமான மொழியில் சொல்லப்பட்ட அசலான கதை:
https://www.facebook.com/elanko.dse/posts/10163083645923186

[2] டிலுக்ஸனின் கனடா நேர்காணல்:  https://www.facebook.com/reel/1367298351436228

[3] டிலுக்ஸனின் LinkedIn Profile: https://www.linkedin.com/in/deluxion-mohan-b00571101

[4] Genius திரைப்படமும், தமிழில் எடிட்டர்களும்..
https://djthamilan.blogspot.com/2017/01/genius.html


(Nov 23, 2025)

 

அருந்ததி ரோயின் 'தாயார் மேரி என்னிடம் வருகிறார்'

Thursday, December 11, 2025

 

Mother Marry Comes to Me | Arundhati Roy


ஒருவர் மூன்று வயதுக் குழந்தையாக இருக்கும்போது தந்தை  கைவிட்டு விலகிச் செல்கிறார். அவரையும், அவரின் சகோதரரையும் தனித்த பெண்ணாக அவரின் தாயார் வளர்க்கத் தொடங்குகின்றார். அஸாமில் பிறந்து மேற்கு வங்காளத்தில் கொஞ்சக் காலம் இருந்து, தந்தையால் கைவிடப்பட்டு தாயுடன் ஊட்டிக்கு வந்து வாழும்போது, இந்த வீடும் எங்களுடையது என்று அவரின் மாமாவாலும், அம்மம்மாவாலும் அங்கிருந்தும் துரத்தப்படுகின்றனர். ஓரிடத்தில் நிலைத்து வாழ முடியா அவதியும், உறவுகளால் புறக்கணிக்கப்படுவதும் மட்டுமில்லை,  வெறுப்பை வெளிப்படையாகவும், அன்பை மறைமுகமாகவும் காட்டும் ஒரு 'வன்முறை'யான அம்மாவோடு வளர்ந்த ஒரு பெண், இன்று உலகமே அவரின் ஒவ்வொரு எழுத்தையும் வாசிக்க ஆவலாகக இருக்கின்ற ஓரிடத்திற்கு வந்திருக்கின்றார் என்பதை நம்பமுடியுமா? ஆம், அதுதான் அருந்ததி ராயுக்கு நிகழ்ந்திருக்கின்றது.

Uploaded Image
 
அருந்ததி ராயின் முதலாவது நாவல் வெளிவந்து அது அவரே எண்ணிப் பார்க்க முடியாத திசைகளில் பரவி புகழையும், மரியாதையும் கொணர்ந்தது எப்படி ஒரு தற்செயலான நிகழ்வாக இருந்ததோ, அப்படியே அவரின் வாழ்வு முழுவதுமே இப்படியான தற்செயலான இனிய தருணங்களாலும், நாம் நினைத்தே பார்க்கமுடியாத அவதிகளாலும் நிறைந்திருந்திருப்பதையும் அவரின் அம்மா குறித்த நனவிடைதோய்தலாக விரியும் 'தாயார் மேரி என்னிடம் வருகிறார்' (Mother Mary Comes to Me) என்ற நூலை வாசிக்கும்போது அறிகின்றோம்.

இந்த நூலை முதலில் வாசிக்கத் தொடங்கியபோது -வழமையான அருந்ததியின் நாவல்களுக்கு நிகழ்வது போல- என்னை அதிகம் கவரவில்லை. இதில் ஒரு அத்தியாயமான 'நக்சலைட்டுக்களை' தற்செயலாக எடுத்து வாசிக்கும்போதே இந்த நூல் என்னை ஈர்த்திருந்தது. அதிலிருந்து ஒரு நாளில் 'ஒரே மூச்சில்' வாசித்து முடித்திருந்தேன்.  அருகிலிருக்கும் நண்பர் கூட, 'என்னைக் கொஞ்ச நேரம் கூடக் கவனிக்காது, அப்படியே அருந்ததியில் மூழ்கிவிட்டாய்' என்று சலிக்கும்வரை நான் நாள் முழுதும் அருந்ததியின் உலகில் இருந்தேன்.

தொடக்க அத்தியாயங்களில் அருந்ததியினதும், அவரின் சகோதரனதும் குழந்தைப் பருவங்கள் வருகின்றன.  அதில் அவர்களும், அவர்களின் தாயாரும் பட்ட அவமானங்கள் விரிவாகப் பேசப்படுகின்றன. ஒரு தாயை இந்தளவுக்கு எவ்வித உயர்வு நவிற்சியோ, அவமானங்களின் நிமித்தம் தாழ்த்தவோ செய்யவோ அருந்ததி எழுதியிருப்பதுதான் கவனிக்கத்தக்கது. அது அவரின் தாயாராக இருந்தாலும் ஓர் அந்நியரைப் போல விலத்தியிருந்து ஒரு தாயைப் பார்த்திருந்தால் மட்டுமே இப்படி எழுதுதல் சாத்தியமாகியிருக்கும்.

இது தாயின் நினைவுகள் என்று வெளிப்படையாக இருந்தாலும், இன்னொரு பக்கத்தில் இது அருந்ததியின் ஒரு குறிப்பிட்ட கால சுயசரிதை எனச் சொல்லலும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் அந்தளவுக்கு இந்நூலில் அருந்ததியை நாம் நெருங்கிப் பார்க்க முடிகின்றது. இன்றைய அருந்ததியின் 'கலகம் செய்யும் தன்மை'யை, அவரின் 'வெறுப்பான' தாயால் அவரையறியாமலே அருந்ததிக்குள் ஊட்டப்பட்டிருக்கிறது என்பதை நாம் காண்கின்றோம். அதுபோலவே எதன் மீது சமரசம் செய்யாத தன்மையையும் தாயிடமிருந்து அருந்ததி  கற்றுக் கொண்டிருக்கின்றார் என்பதை இங்கே அறிகின்றோம். அதுவே பின்னர் காலத்தைய அருந்ததிக்கு உறவுகள் மீது கூட அதீத நம்பிக்கை வைக்காது, தனது காதலர்கள்/கணவர்களைக் கடந்து செல்வற்கு உதவி செய்வதையும் காண்கின்றோம்.

அருந்ததியின் தாயார் கோட்டயத்தில் ஒரு பிரபல்ய வாய்ந்த பாடசாலைக்கு சொந்தமானவர் என்பதை நம்மில் பலர் அறிந்திருப்போம். ஆனால் அது அந்தத் தாயின் தனியுழைப்பால் மட்டுமே சாத்தியமாகியிருக்கின்றது. தாய் அவருக்கு விரும்பிய ஒருவரைத் திருமணம் செய்ததிலிருந்து அவர்களின் குடும்பத்தாலும், உறவாலும், ஏன் திருச்சபையாலும் கூட புறக்கணிக்கப்படுகின்றார். இதன் நிமித்தமே, இவ்வளவு பிரபல்யம் வாய்ந்த அருந்ததியின் தாயிற்கு அவரின் மரணத்தின்போது, அவர்களின் திருச்சபை அவருக்குரிய கல்லறையைக் கூடக் கொடுக்க மறுக்கின்றது. ஆனால் இறப்பிலும் அவரின் தாயார் ஒரு கலகக்காரிதான் இருந்திருக்கின்றார். என்னை எங்கேயும் புதைக்கவேண்டாம், தகனமூட்டுங்கள் என்று கூறிவிட்டுத்தான் சாகின்றார்.

ஒருகாலத்தில் அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட ஒற்றைத் தாயாக (Single Mother) இருந்த மேரி ராய், ஒரு பாடசாலையை தனித்துத் தொடங்குவது மட்டுமின்றி, அதை இன்று கேரளாவின் மாற்றுக்கல்விக்கான மிகப்பிரபல்யமான பள்ளிக்கூடமாகவும் ஆக்கிச் சென்றிருக்கின்றார். அதுமட்டுமின்றி மிகப் பிரபல்யமான லாரி பேக்கர் (Laurie Baker) என்கின்ற மாற்று கட்டட வரைபடக் கலைஞரைக் கொண்டு அந்தப் பாடசாலையைக் கட்டியுமிருக்கின்றார்.

லாரி பேக்கரைச் சந்தித்ததையும், அவர் எப்படி அன்றைய 15 வயது அருந்ததியை ஈர்த்தார் என்றும், தனது மேற்படிப்புக்காக எதற்காக கட்டடிடக் கலையை அருந்ததி ராய் தேர்ந்தெடுத்தார்  என்பதையும் இந்த நூலில் விரிவாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது.. கட்டடக்கலை இரண்டாம் ஆண்டு படிக்கும்போதே அருந்ததி தனது காதலரைச் (பின்னாளில் முதல் கணவன்) சந்திக்கின்றார்.

பதின்மத்தில் அம்மாவோடு முரண்பட்டு, வீட்டை விட்டு வெளியேறி படிப்பதற்காக டெல்கிக்குச் சென்ற அருந்ததி அவரின் தாயாரோடு கிட்டத்தட்ட 7 வருடங்கள் எந்தத் தொடர்பும் இல்லாது இருக்கின்றார். அதுபோலவே மூன்று வயதில் தங்களைக் கைவிட்டுச் சென்ற தகப்பனை, அருந்ததியும் அவரின் சகோதரனும் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பின் கண்டுபிடிக்கின்றனர். குடிக்கு அடிமையாகிவிட்ட அருந்ததியின் தந்தையாரின் செய்கைகள் பெரும்பாலும், எனக்கு எழுத்தாளர் மைக்கேல் ஒண்டாச்சியின் தமிழ்த் தந்தையாரை நினைவுபடுத்தியபடி இருந்தன. இவ்விரு தந்தையர்களும் எப்படி அசலில் இருந்தார்களோ தெரியாது, ஆனால் ஒண்டாச்சியினதும், அருந்ததியினதும் எழுத்துக்களால் மறக்கமுடியாத, வெறுக்க முடியாத வேடிக்கை நிறைந்த மனிதர்களாக மனதில் நிறைகின்றார்கள்.

Uploaded Image


இந்தப் பிள்ளைகளாவது தந்தையை இருபது வருடங்களுக்குப் பின்னர் சந்தித்து அளாவளாவுகின்றனர்.  அவரோடு இறுதிக் காலம்வரை தொடர்பில் இருந்திருக்கின்றனர். ஆனால் இவர்களின் தாயோ கணவர் விட்டுப் பிரிந்தபின் அவரை இறுதிவரை சந்திக்கவே இல்லை. அவரின் இறப்பை பிள்ளைகள் சொல்லும்போது கூட, எப்போதும்போல 'ஒன்றுமில்லாத மனிதன் (nothing man) போய்விட்டார்' என்று சொல்வதோடு மட்டும் தாய் நிறுத்திவிடுகின்றார். அதுபோலவே அருந்ததியின் தாய், அவரின் தாயை (அருந்ததியின் அம்மம்மா) கூட மன்னிக்கத் தயாராக இருக்கவில்லை என்பதால், தாயின் இறப்புக்கூட மேரி போகாது இருக்கின்றார். அருந்ததியும், அவரின் சகோதரும் மட்டுமே செல்கின்றனர்.

அருந்ததியின் தாயிற்கு அவரின் தாயோடு நீண்டநாள் முரண் இருந்தது. ஒரு பெண்ணான தனக்கும் குடும்பச் சொத்தில் சமபங்கு தரவேண்டும் என்று கேட்பதற்காக -கேரளத்தில் சிரியன் கிறிஸ்தவர்களிடையில் பெண்களுக்கு சொத்தில் பங்கில்லை என்றிருந்த சட்டத்தை- டெல்கிவரை உயர்நீதிமன்றம் சென்று அருந்ததியின் தாயார் மாற்றி சட்டத்தை எழுத வைத்திருக்கின்றார். எப்படி ஒரு சிறந்த மாற்றுப் பாடசாலையைக் கட்டி மேரி கேரளத்தில் பிரபல்யமானவரோ அப்படியே இந்த சட்டத்தைத் திருத்திய வழக்காலும் அவர் கேரளத்தில் அன்று அதிகம் பேசப்பட்டவர்.

இப்படி பிள்ளைகளோடு வெஞ்சொல் பேசுகின்றவராகவும் எப்போதும் 'வீட்டை விட்டு வெளியே போ', 'காரை விட்டு வெளியே இறங்கிப் போ' (அருந்ததி, தாயாரோடு லாரி பேக்கரை திருவனந்தபுரத்தில் சந்தித்துவிட்டு வரும்போது, அருந்ததி ஒழுங்காகப் பேசவில்லை என்ற கோபத்தில் அவரை நெடுஞ்சாலையில் இறக்கி விட்டுப் போகின்ற மூர்க்கமான தாய் மேரி ரோய்) என்று எப்போதும் பிள்ளைகளைத் துரத்துகின்றவராகவும்,  சொந்தத் தமையன்/தாய் என்று  உறவுகளில் பகை வளர்த்துக்கொண்டும், தனித்த பெண்ணாக இருந்த மேரி ராய் இன்னொரு பக்கத்தில் கோட்டயத்தில் ஒரு மிகச்சிறந்த ஆளுமையுள்ள பெண்மணியாகவும் விசுவரூபம் எடுத்திருக்கின்றார் என்பதைப் பார்க்கும்போது, அதை தாயோடான நேசத்தோடும்,அதேவேலை ஒருவகை விட்டுவிலகலோடும் அருந்ததி  முன் வைத்திருக்கும் எழுத்தின் நேர்மையில், நாம் இதுவரை காணாத ஒரு தாயின் விம்பத்தைக் காண்கின்றோம்.

நீங்கள் இந்தத் தாயை நெருங்கி நேசிக்கவும் முடியாது, அதைபோல அவ்வளவு எளிதாக வெறுக்கவும் முடியாது. எனக்கு இப்படியொரு தாயார் வாய்த்திருக்கின்றார், அவரையும் பாருங்கள் என்று அருந்ததி தனது எழுத்தின் வழியே அழைத்துச் செல்வது அவ்வளவு அழகாக இருக்கின்றது.

இந்த நூலில் அருந்ததியின் வறிய தனித்த வாழ்வையும், அதேபோல அவரின் முதல் நாவலால் கிடைக்கும் மில்லியன் கணக்கான பணத்தால், தான் யார் என்கின்ற தேடலையும், அந்தப் பணத்தின் பெரும்பகுதியை தனக்காக சேமித்து வைக்காமல், குடும்பத்துக்குள்ளும், தன் கணவர்/காதலர்களுக்கும், சமூகத்துக்கும் எனப் பகிர்ந்து கொடுக்கும் ஒருவராகவும் உள்ள அருந்ததியை நாம் காண்கிறோம், நெகிழ்கிறோம்.

திரைப்படங்களில் நடித்தும், திரைகதையை எழுதிக் கொண்டும், ஒரளவு நல்ல வருமானத்தையும் பெற்றுக்கொண்டிருந்த அருந்ததி, சேகர் கபூர்  பூலான் தேவியின் வாழ்வை முன்வைத்து எடுத்த 'பண்டிட் குயின்' எப்படி மோசமான வன்புணர்வுத் திரைப்படமாக இருக்கின்றது என்று எழுதுவதில் அவரின் திரைப்பட வாழ்க்கை முடிவுக்கு வருகின்றது. எனக்கு வருமானமா அல்லது இப்படி மோசமான திரைபபடத்தைப் பற்றி பேசாமல் இருப்பது முக்கியமா என வருகின்றபோது, அவர் 'அதிகாரத்தின் முன் உண்மைகளைப் பேசுதல்' என்கின்ற எழுத்தின் அறத்தை தனக்கான வழியாக எடுத்துக் கொள்கிறார்.

இதன்பின்னரே, கிடைத்த கொஞ்சக்காசை வைத்து அருந்ததி 'சின்ன விடயங்களின் கடவுளை' (The God of Samlla Things) எழுதத் தொடங்குகின்றார். அது அருந்ததியை இதுவரையே நினைத்துப் பார்க்காத திசைகளில் எடுத்துச் செல்கிறது. அவர் இந்தப் புகழுக்குப் பின்னும் அந்தத் திசையில் இழுபட்டுச் செல்லாது, நர்மதா ஆற்றுக்குக் குறுக்கே கட்டப்படும் அணைகளுக்கு எதிராகப் போராடும் மக்களோடு கைகோர்த்து நடக்கத் தொடங்குகின்றார். அது அவருக்கு நீதிமன்ற விசாரணை, ஜெயில் வாசம் என்கின்ற அபாயத்தின் சிவப்புக் கம்பளத்தை விரிக்கின்றது. அப்படி ஜெயில் இருக்கும்போதே பாராளுமன்றத்தில் தாக்குதல் நடந்தபோது இதற்குக் காரணமெனக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரின் கர்ப்பிணியான மனைவியைச் சந்திக்கின்றார்.

அந்தப் பெண்ணுடனான நட்பு அருந்ததியை காஷ்மீருக்கு அழைத்துச் செல்கின்றது. காஷ்மீரின் உண்மையான நிலவரத்தைப் பார்த்து நீண்ட கட்டுரைகளாக எழுதுகின்றார். அதன் நிமித்தம் கொலைமிரட்டல்கள், ஊடகங்களில் வெறுப்புப்பேச்சு என்று அனைத்தையும் எதிர்கொள்ளும் அருந்ததியை, மாவோயிஸ்டுக்கள் எங்கள் வாழ்வைப் பார்க்க காட்டுக்கு வாருங்களென அவரின் அடுக்கமாடியின் கதவடியில் ஒரு அழைப்பு மடலை விட்டுச் செல்கின்றனர். பிறகு அந்தத் தோழர்களோடு பெருங்காட்டில் வாரக்கணக்கில் நடந்து அவர்களோடு கழித்த நாட்களை 'தோழர்களோடு நடத்தல்' (Walking with the Comrades) என்று  ஒரு தொடராக எழுதுகின்றார்.

இப்படியாக ஒரு வாழ்வை வாழும்  தன்னை எழுத்தாளர் + செயற்பாட்டாளர் என்று பிரித்து எழுதுவது எவ்வளவு அபத்தம் என்று அருந்ததி மறுக்கின்றார். ஒரு எழுத்தாளராக இருப்பது என்பதே செயற்பாட்டாளராகவும் இருப்பதுதானே? ஒரு எழுத்தாளர் அரசியலைப் பற்றிப் பேசாமல் இருந்துகொண்டு எப்படித் தன்னை ஒரு எழுத்தாளர் என்று சொல்லமுடியும் என்று நம்மிடம் கேள்வி கேட்கின்றார் (தமிழ்ச்சூழலில் தம்மை எழுத்தாளர்கள் என்று அழைத்துக்கொள்வோர் கவனிக்கவேண்டிய ஒரு முக்கிய விடயம் இது).

Uploaded Image

அதுபோலவே ஒரெயொரு எழுத்தாளர் மட்டுமே தனது புனைவைப் போலவே புனைவில்லாதவையும் நன்றாக இருக்கின்றது என்று பாராட்டியிருக்கின்றார் என்று சொல்கின்றார்.  இதைக் குறிப்பிடுவதன் மூலம் அருந்ததி புனைவு/புனைவல்லாதவை என்று பொருள்பிரிப்புக்களில் அக்கறையில்லாது படைப்பு என்பதையே முதன்மையாகக் கொள்கிறார் என்பதை நாமறியமுடியும். மேலும் அருந்ததியின் புனைவு/புனைவல்லாதவை இரண்டையும் வாசிக்கும் நம்மால் அவரின் மொழி எவ்வளவு படைப்பூக்கமாக/ புத்துணர்ச்சியுள்ளதாக இருப்பதை உணரமுடியும். ஏன் இந்த நூல் கூட ஒருவகை தன்வரலாற்று நூல்தான். ஆனால் விழுந்து விழுந்து சிரிக்க எத்தனை இடங்கள் இதில் இருக்கின்றது. அப்படி ஒரு வலியான வாழ்க்கைக்குள்ளும் இப்படி நம்மை புன்னகைக்க வைக்கின்ற எழுத்தை அருந்ததியால் எழுதமுடிவதுதான் அழகானது.

நான் இந்த நூலை இன்றைய காலத்தில் பல்வேறு சிக்கல்கள்/நெருக்கடிகளுக்குள் சென்று மனம் அழுந்திக் கொண்டிருக்கும் அனைவரையும் வாசிக்கப் பரிந்துரைப்பேன். அருந்ததி போன்ற மிகக் கடுமையான குழந்தைப் பருவத்தைக் கொண்ட ஒருவரால், இன்றைக்கு அவரது மனவடுக்களைத் தாண்டி நமக்கு ஒரு கதையை சொல்லமுடிகின்றதென்றால், இப்போது நீங்கள் எத்தகைய மனநெருக்கடிகளுக்குச் சென்று கொண்டிருந்தாலும் கடந்துவரக்கூடியது என்ற நம்பிக்கையை இந்த நூல்  தரக்கூடியது மட்டுமின்றி, அருந்ததியே தனது சிக்கலான தாயை இவ்வளவு ஆழமாகப் புரிந்துகொள்ள முடியுமென்றால், நமக்குப் பிரச்சினைகளைத் தந்துகொண்டிருப்பவர்களைக்கூட, ஏதோ ஒரு புள்ளியில் புரிந்துகொண்டு நமக்கான ஓர் அமைதியான வாழ்வை உருவாக்க முடியும் என்பதையும் நாம் கண்டுகொள்வோம்.

***

(நன்றி: 'அம்ருதா' - மார்கழி, 2025)

 

கார்காலக் குறிப்புகள் - 120

Thursday, December 04, 2025

 

ப்யூகோவ்ஸ்கியின் கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தபோது 'தொலைந்த தலைமுறை' (Lost Generation) என்ற கவிதையில் கூறப்படுபவர்கள் யாரெனத் தேடத் தொடங்கினேன். 'தொலைந்த தலைமுறை' என்பது முதலாம் உலக யுத்தத்தின்போது தோன்றிய தலைமுறையைக் குறிப்பிடுவதாகும்.  அன்றைய கால எர்னெஸ்ட் ஹெமிங்வே போன்ற எழுத்தாளர்கள் இந்தச் சொல்லை பிரபல்யபடுத்தியவர்கள். 


சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கி இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவரல்ல. ஆனால் அந்தத் தலைப்பிடப்பட்ட கவிதை அன்றைய காலத்தைய ஒரு தம்பதியினரைப் பற்றிப் பேசுகின்றது.

Uploaded Image


இந்த அமெரிக்க இணையர், 1920களில் பிரான்ஸில் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். ஒரு பெரும் மாளிகையை வாடகைக்கு எடுத்து கேளிக்கை விருந்துகளை நடத்தியவர்கள்.   பல படைப்பாளிகள் அவர்களின் மாளிகைக்குச் சென்று கேளிக்கைகளில் பங்குபற்றியவர்கள் மட்டுமின்றி, அங்கிருந்து தமது படைப்புக்களை எழுதியுமிருக்கின்றார்கள்.

அன்றைய 'தொலைந்த தலைமுறையை'ச் சேர்ந்த ஹெமிங்வே, ஸ்காட் பிட்ஸலாண்ட், ஹென்றி மில்லர் மட்டுமின்றி, டி.எச். லோரன்ஸ், அனாநிஸ் (மில்லரின் தோழி), ஜேம்ஸ் ஜாய்ஸ், வில்லியம் பாக்னர், குட்டி இளவரசன் எழுதிய 'அந்துவான் தூ செச் எக்சுபாரி உள்ளிட்ட பலரின் ஆரம்ப காலப் படைப்புக்களை வெளியிட்ட ஒரு பதிப்பகத்தையும் இந்தத் தம்பதியினர் அன்றைய காலத்தில் நடத்தியிருக்கின்றனர்.

இந்தத் தம்பதியினர் எந்தளவுக்கு பிரபல்யமானவர்களோ, அந்தளவுக்கு சர்ச்சைகளிலும் சிக்கியவர்கள். செல்வந்தவர்கள் எந்தளவுக்கும் தமது வாழ்க்கையைச் சீரழித்துப் பார்க்க முடியும் என்பதற்கு இவர்கள் நல்லதொரு உதாரணம் எனவும் சொல்லலாம்.

***
ஹரி, கார்ஸி க்ரோஸ்பி என்பவர்கள்தான் இந்தத் தம்பதியினர்.

ஹரி முதலாம் உலக மகாயுத்ததில் ஹெமிங்வேயைப் போல பங்குபற்றியவர்.  ஹெமிங்வேயைப் போல ஹரியும் போர்க்களத்தில் மயிரிழையில் படுகாயங்களோடு தப்பி உயிர் பிழைத்தவர். அதன்பிறகு ஹரி தன் வாழ்வை 'ஒரு கட்டற்ற வாழ்க்கை'யாக வாழவேண்டும் என்று தீர்மானித்து பெருங்குடியிலும், போதைப் பொருட்களிலும், பெண்களிலும் தன் வாழ்வைத் தொலைத்தவர். 20களில் இருந்த ஹரி, ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளோடு இருந்த கார்ஸியை மணம் முடிக்கின்றார்.

இதன்பின் கார்ஸியோடு பிரான்ஸுக்கு சென்று வாழ்கின்றபோது, அன்றைய எழுத்தாளர்களுக்குச் சொர்க்கபுரியாக இருந்த பாரிஸில் இவர்களின் மாளிகை ஆடம்பர விருந்தோம்பல்களை அறிமுகப்படுத்துகின்றது.

ஹரி கவிதைகளை எழுதியவர். ஆனால் கார்ஸியோடு வாழும்போது இன்னும் 20 வருடங்களில் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்வது என்று திகதியையும் குறிப்பிட்டு வாழ்கின்றார்கள். அந்தத் தற்கொலை என்பது விமானத்தில் இருந்து குதிப்பது என்றும், தமது அஸ்தி எப்படி தூவப்படவேண்டும் என்றும் உயிலை எழுதும்வரை போயிருக்கின்றது.

Uploaded Image

ஹரிக்கு கார்ஸியைத் தவிர்த்து பல உறவுகள் முகிழ்கின்றன. பலர் தன்னைத் திருமணம் செய்ய விரும்புகின்றனர் எனவும் கார்ஸியிற்குச் சொல்கின்றார். பிரான்ஸின் நோர்மாண்டி, வட ஆபிரிக்காவின் மொராக்கோ என்று இவர்கள் பயணம் செய்யும்போது இளம்பிள்ளைகளைச் சேர்த்துக் கொண்டு வந்து கூட்டுக்கலவி, தற்பால் உறவு, சோடிகளை மாற்றி பாலியல் உறவு என்று நாம் நினைத்தே பார்க்க முடியாத ஒரு வாழ்வை ஹரியும், கார்ஸியும் வாழ்ந்திருக்கின்றார்கள்.

ஹரியின் கட்டுக்கடங்கா பாலியல் உறவுகளின் நிமித்தம் கார்ஸி ஹரியை விட்டு விலகிப் போகின்றார். ஹரி பின்னர்  ஜோஸப்பின் என்கின்ற பெண்ணோடு சேர்ந்து அவரது 31 வயதில் தற்கொலை செய்கின்றார். அந்தப் பெண்ணுக்கோ 20 வயது. முதலில் இதை இருவரின் தற்கொலை நிகழ்வு எனச் சொல்லப்பட்டாலும், பின்னர் அது கொலை (ஜோஸப்பின்)/தற்கொலை (ஹரி) நிகழ்வு எனக் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு கட்டற்ற வாழ்வை  போரின் வடுக்களால் வாழ்ந்து முடித்த ஹரி, மிகப்பெரும் செல்வந்தரான ஜே.பி.மார்கனின் (J.P.Morgan) பெறாமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரியின் தற்கொலையின் பின் அவரின் மனைவியாக இருந்த கார்ஸி அதே பதிப்பகத்தை 1920களைப் போல, 30களிலும்  நடத்தியவர். பின்னர் கிட்டத்தட்ட இதே ஆடம்பர விருந்துகளையும், எழுத்தாளர் கொண்டாட்டங்களையும் அமெரிக்காவிலும் கார்ஸி செய்திருக்கின்றார். அப்படித்தான் சல்வடோர் டாலி இவரின் இருப்பிடத்தில் இருந்து தனது சுயசரிதையை எழுதியிருக்கின்றார். இந்த 1940களில்தான் கார்ஸி, ப்யூகோவ்ஸ்கியின் முதலாவது சிறுகதைத் தொகுப்பை தனது பதிப்பகத்தினூடாக வெளியிட்டிருக்கின்றார்.

கார்ஸிக்கு பல காதலர்களும், சில திருமணங்களும் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் அவரின் கலை மீதான ஈர்ப்பு ஓவியங்கள்/ஸ்டூடியோக்கள் என அவர் இருந்த நகரத்தில் தொடங்குவதற்கான முன்னேடுப்புக்களைச் செய்திருக்கின்றன. மேலும் கார்ஸிக்கு இன்னொரு அடையாளமும் இருக்கின்றன. அதுவரை மிக இறுக்கமாக, நடனம் ஆடும்போதுகூட இடைஞ்சல் கொடுக்கும் அன்றைய கால  brassiere ஐ, நவீனமயமாக வடிவமைத்தவர் என்று பாராட்டப்படுகின்றார்.   

கார்ஸி 70களில் மரணமுற்றபோது, அவர் 'தொலைந்த தலைமுறை'யின் அன்றையகால புலம்பெயர் எழுத்தாளர்களின் ஞானத்தாய்' எனவும் குறிப்பிடப்படுகின்றார்.

***

ப்யூகோவ்ஸ்கி இந்தத் தம்பதியினரின் சீரழிந்த வாழ்வை பல கவிதைகளில் விமர்சிக்கின்றார்.  ப்யூகோவ்ஸ்கி  முதலாவது சிறுகதைத் தொகுப்பை வெளியிட கஷ்டப்பட்டபோது, கார்ஸிதான் அதைத் தனது வெளியிட்டிருக்கின்றார். ஆனால் பின்னர் ப்யூகோவ்ஸ்கி கார்ஸியின் சுயசரிதையை வாசித்துவிட்டு கார்ஸி-ஹரியை மட்டுமின்றி, அவர்கள் ஆட்டுவிக்க ஆடுகின்ற பொம்மைகள் போல இருந்த அன்றைய கால எழுத்தாளர்களையும் ப்யூகோவ்ஸ்கி மன்னிக்கத் தயாரில்லை என்கின்றார்.
Uploaded Image
இந்தளவுக்கு அவர் பட்டியலிடுகின்றவர்கள் அசலான படைப்பாளிகளாகவும், ப்யூகோவ்ஸ்கிக்கு பிடித்தவர்களாகவும் இருந்தால் கூட அவர்கள் இத்தகைய விமர்சனங்களில் இருந்து தப்ப முடியாது என்பதுதான் ப்யூகோவ்ஸ்கியின் வாதமாக இருக்கின்றது.

எவ்வாறு இந்த எழுத்தாளர்கள் ஹாரி- கார்ஸி தம்பதியினரி   விருந்தோம்பல் இடங்களிலும், கடற்கரைகளிலும் அவர்களோடு அறிவுஜீவித்தனமாக நின்றுகொண்டு, ஏதோ இது ஒரு கலையின் வெளிப்பாடு என்பது போல காட்சி கொடுக்கின்றார்களே, இவர்களில் ஆகக்குறைந்த ஒரு எழுத்தாளராவது, இந்த முட்டாள்தனங்களில் எங்களுக்கு துளியும் உடன்பாடில்லை என்று நேர்மையாகச் சொல்லி வெளியேறுவார்கள் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்' என்று ப்யூகோவ்ஸ்கி கார்ஸியின் சுயசரிதையை வாசித்தபோது எழுதிய கவிதையில் சொல்கிறார்.

"..the lady published one of my first
short stories in the
40's and is now
dead, yet
I can't forgive either of them
for their rich dumb lives
and I can't forgive their precious toys
either
for being
that. "

ஓர் கவிதையின் (அல்லது படைப்பின் மூலம்) இங்கே கடந்த காலம் மீளக் கொண்டு வரப்படுகின்றது. ஹெமிங்வே, ஹென்றி மில்லர் போன்றவர்களை ஒரளவு ஆழமாக வாசித்தபோது, இந்தப் பதிப்பகம் குறித்து கேள்விப்பட்டபோதும்  இநதத் தம்பதியினரின் வாழ்க்கையைப் பற்றி அவ்வளவாக நான் அறிந்ததில்லை. இவர்களுக்குத்தான் மில்லர் வேறொரு புனைபெயரில் ஒரு நாவலை பணத்தேவையின் நிமித்தம் எழுதிக் கொடுத்திருந்தார்,

ப்யுகோவ்ஸ்கியின் இந்தக் கவிதையே கார்ஸி/ஹரி வாழ்க்கையைத் தேடிப் பார்க்க என்னை வைத்திருந்தது. ஆக இந்தத் தம்பதியினரின் கட்டற்ற வாழ்க்கையாலும்/தற்கொலைகளாலும் காலத்தில் மறக்கடிக்கப்பட்ட இவர்களை அவர்களின் பெரும்பணம் கூட நினைவூட்டாததை, ஓர் எளிய கவிதை நமக்கு கிட்டத்தட்ட நூற்றாண்டுக்குப் பிறகு அந்த 1920களை நினைவுபடுத்துகின்றது என்பது எவ்வளவு வியப்பானது.

***

 

இளங்கோவின் ”நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்”-மைதிலி தயாநிதி

Tuesday, December 02, 2025


கனடாவில் வாழும் எழுத்தாளரான இளங்கோவின் ”நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்” எனும் சிறுகதைத் தொகுப்பு  சென்னையிலுள்ள  டிஸ்கவரி ப்பளிகேஷன்ஸ்  நிறுவனத்தால் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.  இளங்கோவின் எட்டாவது நூலான இது மொத்தம் 142 பக்கங்களிற் பத்துச் சிறுகதைகளைக் கொண்டுள்ளது.  இந்நூல் தொடர்பான இலக்கியப்பகுப்பாய்வை அடிப்படையாக கொண்ட அறிமுகம் ஒன்றினை வழங்குதலே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்.

இத்தொகுப்பினை வாசித்தபோது, எழுத்தாளரின் பின்னணி, நோக்கம் என்பவற்றை விட, அவரின் எழுத்து எவ்வாறு வாசகர் மனதில் அர்த்தங்களை உருவாக்குகிறது என்பது எனக்கு முக்கியமாகத் தெரிந்தது.  குறிப்பாக, இளங்கோ ”உறைந்த நதி”எனும் சிறுகதையின் இறுதியிற் குறிப்பிட்டுள்ள பிரெஞ்சு கோட்பாட்டாளர் ரோலண்ட் பார்த்ஸின்  (Roland Barthes) "ஆசிரியர் இறந்துவிட்டார்"  (The Death of the Author)  என்ற கருத்துநிலையுடன் எனக்குப் பெரும் இணக்கம் உண்டு.  ”நூலாசிரியர் பற்றிய விடயங்கள் வாசகரின் இலக்கிய அனுபவத்துக்குப் புறம்பானவை. எனவே இலக்கியப் படைப்பு எவ்வாறு விளங்கிக்கொள்ளப்படல் வேண்டும் என்பதை ஆசிரியர் பற்றிய செய்திகள்  தீர்மானிக்கக்கூடாது” என்று பார்த் அக்கட்டுரையில் வாதிடுகிறார். இலக்கியப் பிரதியின் அர்த்தம் பிரதியுடனான வாசகர்  தொடர்புகளிலிருந்தே பிறக்கிறது.  எனவே "ஆசிரியர் என்ன சொன்னார்?" என்பதிலிருந்து "பிரதி  என்ன சொல்கிறது?" அல்லது "வாசகர் அதில் என்ன காண்கிறார்?" என்பது நோக்கி இக்கோட்பாடு நம் கவனத்தைத் திருப்புகிறது.

அவ்வகையில், இளங்கோவின் கதைகள் வாசகரின் பங்களிப்பைப் பெரிதும் வேண்டுவன. வாசகர் பிரதியுடன் கொள்ளக்கூடிய ஆழ்ந்த ஈடுபாடு மூலமே இக்கதைகளுக்கான  அர்த்தங்களை அவர்கள் உருவாக்கிக்  கொள்ள முடியும்.  அத்தகைய வாசிப்பு அனுபவங்களை உருவாக்குவதற்குப் பன்முகப்பின்னற்கதைகள் (layered narratives), மேம்பட்ட கதைசொல்லல் உத்திகள் (advanced storytelling techniques) குறியீடும், உருவகமும் (symbolism and metaphor), வேண்டுமென்றே விடப்பட்ட கதை இடைவெளிகளும் மௌனங்களும் (intentional gaps and silences)  போன்ற நுட்பங்கள் இத்தொகுப்பில் முக்கிய இடம் வகிக்கின்றன  இவை குறித்த  சுருக்கமான விளக்கங்களை அளிக்கும் அதே சமயம், இக்கட்டுரையைக் கதைகளில் அவதானிக்கக் கூடிய பொதுப்பண்புகளான களப்பின்னணி (setting), பாத்திரங்கள், கருப்பொருட்கள், கையாளப்படும் மொழியின் இயல்பு  என்பவை குறித்த அறிமுகத்துடன் தொடங்குகிறேன்.
 
இத்தொகுப்பில் காணப்படும் கதைகளின் களங்கள்  வேறுபடுகின்றன. அதற்கேற்ப, அவை பேசும் விடயங்களும் வேறுபடுகின்றன. இலங்கையை மட்டும் நிகழிடமாகக் கொண்ட  மூன்றுகதைகள் வரலாறு, அரசியல், காதல், வன்முறை, துயரநினைவுகள் முதலானவற்றுடன் ஆழமான தொடர்பு கொண்டவையாகக் காணப்படுகின்றன.  ஆனால், கனடாவை நிகழிடமாகக் கொண்ட ஐந்து கதைகள் சமூக வரலாற்றுத் துயரங்களை விடுத்துப் புலம்பெயர் வாழ்க்கையில் தனிமனிதர் எதிர்கொள்ளும் தனிமை, அந்நியமயமாதல் (alienation), மனநலச்சிக்கல்கள், பாலியல் நோக்குநிலை (sexual orientation),  வெவ்வேறு இனங்களுக்கிடையிலான  காதலுறவு, தனிநபர் ஆன்மிகம் (personal spirituality)  போன்ற விடயங்களை ஆராய்கின்றன.  தாய்லாந்தை நிகழ்களனாகக்  கொண்ட  ”இயக்கக்காரி”  எனும் கதை அதிர்ச்சி (trauma), நினைவு (memory), பாலின அடிப்படையிலான வன்முறை (gendered violence) ஆகிய கருப்பொருள்களை மையப்படுத்துகிறது. இலங்கையையும் கனடாவையும் நிகழிடங்களாகக் கொண்ட ”கௌரி” எனும் சிறுகதை பதின்மவயதுக் காதல், வன்முறை, புலப்பெயர்வு, போருக்குப் பிந்தைய புலம்பெயர்ந்தோர் அரசியல் என்பவற்றைப் பேசுகிறது.


இக்கதைகளில் தோன்றும் பெரும்பாலான கதைமாந்தர்கள் போர்களால், அரசியல் ஒடுக்குமுறைகளால், மற்றும் பல்விதமான உளச்சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களில் சிலர் போரின் ஆறாவடுவைச் சுமந்து கொண்டு, அதன் பின்விளைவுகளோடு வாழ்பவர்கள். சிலர் புலம் பெயர்ந்த வாழ்க்கையின் பெறுபேறுகளாகும் தனிமை, அந்நியப்படுகை, அடையாளச் சிக்கல் போன்றவற்றால் தவிப்பவர்கள் . எடுத்துக்காட்டாக, மனநோய்கள் தரக்கூடிய சவால்கள், தனிமை ஆகியவற்றின் தீர்க்கப்படாத சிக்கல்களை முன்னிலைப்படுத்தும் “ஏகாந்தம் என்பதும் உனது பெயர்” எனும் கதை இலக்கியத்தில்  அதிகம் பேசப்படாத ஒரு தனிநபருக்காகக் குரல் கொடுப்பதைக் காண்கிறோம். தனது பாலியல் நோக்குநிலையை வெளிப்படுத்த முடியாத பெண்ணும், பிள்ளைப்பருவப் பாலியல் அத்துமீறல்களினால் பாதிப்புற்ற பெண்ணும் இத்தொகுப்பில்  இடம் பெறுகின்றனர்.  சமூகத்துடன் பூரணமாக ஒன்றிணைய முடியாத நிலையில் உள்ள, ஒருவித மன வெறுமையுடன் வாழும் இவர்களை விளிம்புநிலை மனிதர்கள் (marginalized) என்று கூறலாம்.

மேலும், இத்தொகுப்பு உளரீதியான பிரச்சினைகளுக்குக் குறிப்பிடத்தக்க வகையில்  முக்கியத்துவம் அளித்திருக்கக் காணலாம்.   இப்பிரச்சினைகளை  (அ) உளவடு ((trauma) மற்றும் (ஆ) உளவியல் நோய்கள் என இரு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். இவ்வகைப்பாட்டை இலக்கிய வாசகர் என்ற ரீதியில் செய்கிறேனே தவிர உளவியலாளர் நிலைமையில் இருந்தன்று என்பதைக் கவனிக்கவும்.  “இயக்கக்காரி” எனும் கதையில், இளம் வயதில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான கதாநாயகியின் மனரீதியான பெரும்பாதிப்பு வெளிப்படுகிறது.
அதேபோல், ”வெள்ளவாய்க்கால் வைரவர்” கதையில், இந்திய அமைதிப்படையின் அத்துமீறல்களால் பாதிக்கப்படும் சிறுவனின் உளவியற் பாதிப்பு மிக யதார்த்தமாகக் காட்டப்படுகிறது. இதைவிட, தனிமையால் பாதிக்கப்பட்ட மற்றும் நீடித்த உளவியல் சிக்கல்களால் தவிக்கும் கதாபாத்திரங்களையும் சில கதைகள் முன்வைக்கின்றன. 
 
”ஏகாந்தம் என்பதும் உனது பெயர்” எனும் கதையில், bipolar disorder கொண்ட ஒரு பாத்திரத்தைச் சந்திக்கிறோம். ”உறைந்த நதி” எனும் கதையில், தன்னுடைய பண்பாட்டுக்கு அந்நியமான ஒரு பெண்ணைக் காதலித்து, அந்த உறவின் முறிவால் உளவியற் சிதைவுக்குள்ளாகும் ( psychological breakdown) கதாபாத்திரம் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. அதேசமயம் நவீன வாழ்க்கை இருத்தலியத்தில் உணரப்படும் தவிர்க்கமுடியாத தனிமை  (inescapable loneliness), அந்நியமாதல்  (alienation) என்பவற்றைப் புலம்பெயர் சமூகத்தில் இளைஞர்கள் எதிர்கொள்கின்றனர் என்பதை ”Mr. K” , ”நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்” போன்ற கதைகளும் உணர்த்துகின்றன.

பொதுவாக, இந்தக் கதைகள் பாலுணர்வை நுட்பமாகக் ககையாளுகின்றன. இது வெறும் உடல் ரீதியான செயல் என்பதைத் தாண்டி, ஆழ்ந்த உளவியல், இருத்தலியல் என்பவற்றின் பரிமாண வெளிப்பாடாகவே கதைகளில் சித்திரிக்கப்படுகிறது. உதாரணமாக, ”ஏகாந்தம்  என்பதும் உனது பெயர்” எனும் கதையில் bipolar disorder ஆல் பாதிக்கப்பட்ட பாத்திரத்தின்  எதிர்பாராத விதமாக மாறக்கூடிய உளநிலைகள் , நிலையான உறவுகள் உருவாகுவதைச் சிக்கலாக்குகின்றன. அதே சமயம். குறிப்பிட்ட மனச்சூழலில் பாலியல் நெருக்கமானது  தற்காலிகமாக இருந்தாலும் கூட, சுயத்தினை உறுதிப்படுத்துவதாக அமையக் காணலாம். அதே போன்று ”Mr. K” கதையில் Kafka இன் நூல்களில் ஈடுபாடு கொண்ட இளைஞனுக்கும், அவன் காதலிக்குமிடையில் உள்ள உடல்ரீதியான நெருக்கம் குறித்து விரிவாகப் பேசப்படுகிறது. இது  உடல் ரீதியான நெருக்கத்தின் மூலம் ஒருவித இருத்தலியல் அடித்தளத்தை அவன் கண்டறிகிறான் என்பதைக் காட்டுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக “நான் உன்னை முத்தமிட்டபோது புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்” என்ற கதையில், பாலியல் உறவு  தாந்திரிக பௌத்தத்தின் அடிப்படையில் இருத்தலிய விடுதலைக்கான, ஆன்மிக மீட்சிக்கான  வழியாகச் சித்திரிக்கப்படுகின்றது.  புத்தரின் புன்னகையுடன் முத்தத்தை இணைப்பது - சரீர இணைப்புக்கும் ஆன்மிக விழிப்புணர்வுக்கும் இடையிலான ஒரு சந்திப்புப் புள்ளியைக் குறிக்கிறது. சிற்றின்பமும் புனிதமும் ஒன்றையொன்று தொடும் புள்ளியை நோக்கிக் கதை நகர்கிறது. அத் தொடர்பு ஏற்பட்ட தருணம் விடுதலையை உணர்தலின் தருணமாக மாறுகிறது. அது “ என்னிலிருந்து எனது நானை விடுவித்துக்கொண்ட சுதந்திரம்”  ஆகும். இருத்தலிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் இளைஞன் கண்டு அடைந்த விடுதலை இது.  இலங்கையைக் களமாகக் கொண்ட”முள்ளிவாய்க்கால்”, ”கௌரி” எனும் கதைகளில் இடம் பெறும் பதின்மவயதுக் காதற் சித்திரிப்பை மேற்கூறியவற்றுடன் ஒப்பிட்டுப்  பார்க்கலாம்.

இத் தொகுப்பிலுள்ள கதைகளில் நிகழ்வுகளோ, பாத்திரங்களோ இலட்சியமயப்படுத்தப்படுவது (romanticization) தவிர்க்கப்படுகிறது. இதனால் கதைகளின் எழுத்துநடை, பெரும்பாலும்,  புறவயமானதாயும் உணர்ச்சிகளை எழுப்பாததாயும் அமைகிறது. கதைசொல்லி தன் சொந்த நினைவுகளை, அனுபவங்களை அமைதியாக ஆவணப்படுத்துவது போன்றதொரு யதார்த்தமான நடை இங்கு காணப்படுகின்றது. பேச்சுத்தமிழ்ப் பிரயோகமோ அல்லது ஆங்கில வார்த்தைப் பிரயோகங்களோ இல்லை என்று சொல்வதற்கில்லை. ஆனால் பெரும்பாலும் நியமத் தமிழே (standard Tamil) பயன்படுத்தப்பட்டுள்ளது.  

அது அவ்வப்போது புனைவுக்கும் அல்புனைவுக்கும் (non-fiction) இடையிலான எல்லையைத்  தெளிவற்றதாக்குகிறது. எனினும், நான் கூறுவது எல்லாக்கதைகளுக்குக்கும் பொருந்தும் என்றும் சொல்ல முடியாது.  எடுத்துக்காட்டாக,  ”நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார் ” என்ற கதையிலும் ”வெள்ளவாய்க்கால் வைரவர் ” என்ற கதையிலும் இந்த ஆவணத் தமிழ் நடையின் நெகிழ்வுத்தன்மையை அவதானிக்கலாம்.  ”நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார் ”  என்ற கதையில் மொழியானது  உணர்ச்சி நிறைந்ததாய் சரளமாகவும், இயல்பாகவும், தெளிவாகவும் நீரோடை போலச் செல்கிறது. ”வெள்ளவாய்க்கால் வைரவர் ” கதையில் மூத்தண்ணையின் பாத்திர வர்ணனை ஓர் ஓவியம் போன்று வாசகர் மனதில் படிகிறது.

அத்துடன், குறியீட்டு வலுக் கொண்ட ஆழமான மொழியும் இங்கு உண்டு. எடுத்துக்காட்டாக, ”உறைந்த நதி” என்ற கதையில் இடம்பெறும் வலை என்ற குறியீட்டு பிம்பம் பற்றிய வர்ணனையைக் குறிப்பிடலாம்.
”வலை, வலை, வலை. எல்லாமே வலையாகத் தெரிந்து கொண்டிருந்து. சிலவேளைகளில் தானே ஒரு வலையாக ஆகிக்கொண்டிருக்கின்றேனோ  என்ற எண்ணம் அவனுக்குள்ளும் எழுந்து கொண்டிருந்தது.  ஒரு வலையை அகற்ற இன்னொரு வலை; அந்த இன்னொரு வலையை அகற்ற  இன்னுமின்னுமாக நிறைய வலைகள். வலைகளை மீன்கள் மட்டுமில்லை மனிதர்களுந்தான் விரும்புவதில்லை. சிலந்தி வகைகளில் ஏதோவொரு சிலந்தியினம் தனது வலையிற் தானே மாட்டித் தற்கொலை செய்து கொள்ளும் என்று யாரோ எழுதியிருந்ததை வாசித்தது அவனது நினைவலைகளில் வந்து போயிற்று.” (பக்கம் 121)

இது ஒரு வலுவான உளவியற் சித்திரம் ஆகும். விடுதலைக்கான ஒவ்வொரு முயற்சியும் மற்றொரு வடிவிலான கட்டுப்பாட்டிற்கு இட்டுச் செல்கிறது  என்ற கருத்தினை மையமாகக் கொண்டது. ‘வலை’ என்ற குறியீடு, உளவியற் சிக்கல்களில் சிக்கி, விடுதலை ஒருபோதும் சாத்தியமற்றது என எண்ணும் பாத்திரத்தின் நம்பிக்கை குலைந்த நிலையை வர்ணிக்கிறது.  அத்துடன், சிலந்தியானது தான் பின்னிய சொந்த வலையிலேயே சிக்கி அழிந்து போவது பற்றிய குறிப்பு,  கதையின் இறுதியில் வரும் பாத்திரத்தின் தற்கொலையினை முன்கூட்டியே சூசகமாக உணர்த்துவதாக உள்ளது (foreshadowing). இவ்வர்ணனை இடம்பெறும் “உறைந்த நதி” என்ற தலைப்பே மனச்சிதைவுக்கு ஆளாகிக் கொண்டு செல்லும் பாத்திரத்தின் உளப்பிரச்சினையைக் குறிப்பாகச் சுட்டும் உளவியல் உருவகமாகும்.  உறைநிலையிலுள்ள நதியின் உட்புறத்தே மறைந்திருக்கும் பதற்றம் கதையின் இறுதியில் வன்முறையாக வெடிப்பதைக் காணலாம். 

அடுத்து, இத்தொகுப்பில் காணப்படும் சில கதைசொல்லல் உத்திகள் குறித்தும் சுருக்கமாகக் குறிப்பிடல் வேண்டும். சிறுகதையின் ஆழத்தை மேம்படுத்துவதற்காக ஊடுபனுவலாக்கம் (inter-textuality) என்ற உத்தி பயன்படுத்தப்படுவதுண்டு. இது பெரும்பாலும் குறிப்புகள், ஒப்புமைகள் அல்லது நேரடி மேற்கோள்கள் மூலம் நிகழும். இத்தொகுப்பிலுள்ள “Mr. K”
 எனும் கதை இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும். இங்கு Kafka எழுதிய நூல்களும், அவரது கருத்துகள் பற்றிய குறிப்புகளும், அவர் எழுதிய ”பெர்லின் பொம்மை” என்ற கதையும் , எழுத்தாளர் கோபிகிருஷ்ணனின் நேர்காணலின் சில பகுதிகளும் காணப்படுகின்றன.  இவை  “Mr. K” எனும் கதையின் கருப்பொருட்களை மேம்படுத்துவதுடன், கதையில் நேரடியாகக் கூறப்படாத விடயங்களை உய்த்துணர்ந்து கொள்ளவும் உதவுகின்றன. 
Uploaded Image

 

அதுபோன்று “பறந்துபோன இருமரங்களும் பச்சையம் இழந்த காடுகளும்” என்ற கதை  பல்குரல் கொண்டதாயும் (polyphony), ஒருவரின் அநுபவம் மற்றொரு பாத்திரத்தின் வாயிலாக் கூறப்படுதலால் பல் அடுக்குகள் கொண்டதாயும் (multi-layered narration) அமைந்துள்ளது. Metafiction என்ற உத்தியையும் இக்கதை பயன்படுத்தக் காணலாம். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு: லெஸ்பியன் உறவில் இருக்கும் தன் தோழியின் கதையை கேட்டுப் பதிவு செய்யும் கலிஸ்தீனோ ”அவர் [தோழி] கூறிய கதையை விரிவாகப் பதிவு செய்ய முடியாமைக்கு நமது வாசிப்புச்சூழல் குறித்த பதற்றமும், எனக்குள்ளே இருக்கும் தன்சார்பு சார்ந்த தணிக்கையும் காரணமெனக் கூற விரும்புகிறேன்” என்று கூறுகிறான். இது விளிம்புநிலை மனிதர்களுடைய கதைகளைப் பிறர் கூற முனைதலைக் கதைக்குள்ளேயே வைத்து விமர்சிப்பதாகும். கதையின் ஒருபகுதியாகவே இது அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும், விடுபடுதல் (Omission) என்பது  ஒரு கதை சொல்லும் உத்தியாகக் கருதப்படலாம் என்பதற்கு ”முள்ளிவாய்க்கால்” என்ற கதையை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.  அதாவது கதையிற் சேர்க்கப்பட்டவை போன்று விடுபட்டவையும் அர்த்தமுடையதாக இருக்கும் பட்சத்தில் விடுபடுதல் என்பது கதைசொல்லல் செயற்பாட்டில் ஆற்றல் மிக்க கருவியாக அமைந்துவிடுகிறது. ”முள்ளிவாய்க்கால்” என்ற கதை காணாமலாக்கப்பட்ட போராளி ஒருவரின் காதற் கதை. தமிழீழ இலட்சியத்தை விட அதிகமாகத் தன்னையே தனது காதலன் நேசித்தான் என்று நம்பும் ஓர் இளம் பெண்ணின் கதையும் கூட.  பெரும் அரசியல் கதையாடல்களை ஓரங்கட்டும் காதற்கதை இது.  உள்ளார்ந்தமான காதற்கதைகள் முள்ளிவாய்க்கால் தொடர்பான  அரசியற் பெருங்கதையாடல்களுக்குள்ளே காணாமல் போய்விடுகின்றன என்பதை இக்கதை உணர்த்துகிறது.  தனிநபர் துயரங்களைப் பொதுமைப்படுத்திப் பார்ப்பதையும் இது  நுட்பமாக எதிர்க்கிறது.

அதேசமயம் இக்கதையில் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த கொடுமைகள் விவரிக்கப்படவே இல்லை. அந்தப் பெண் அக்கொடுமைகளைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கிறாள், அதைக் கேட்டுக்கொண்டிருந்த மனிதரும் அவை பற்றிக் கேட்கவில்லை.  ஒரு போராளி காணாமல் ஆக்கப்பட்டான் என்பது எண்ணற்ற உயிர்கள் அழிக்கப்பட்டமைக்கும், பலர் காணாமல் ஆக்கப்பட்டமைக்குமான பெருங்குறியீடாக விளங்குகிறது என்றே நான் கருதுகிறேன்.  இந்தக் கதை என்ன சொல்கிறது என்பதை விட, இது சொல்லாமல் விட்டவை தொடர்பான நினைவுகளே மனதைக் கனக்க வைக்கின்றன.  பிரதியின் இந்த மௌனம் மொழியாற் பேசவொணொத வலிகளைப் பிரதிபலிக்கிறது.

கதைகளைப்,  பொதுவாக சம்பவங்களை மையமாகக் கொண்ட கதைகள் (action-driven), பாத்திரத்தை மையமாகக் கொண்ட கதைகள் (character-driven) என வகுப்பது வழக்கம்.   ஆனால்  தொகுப்பில் உள்ள கதைகளை இந்த இருமுனைப் பாகுபாடுகளுக்குள் உள்ளடக்குவது என்பது கடினம். பொதுவாக, இக்கதைகளைக் கருப்பொருட்களை மையமாகக்  கொண்டெழுந்த கதைகள் ((theme- driven) எனலாம். எனினும் பாத்திரச்சிறப்பு மேவிய கதை   (charcater -driven) என்பதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு அரசியல், போர் வன்முறை, சமயம், ஆன்மிகம் , நாட்டுப்புற மரபுகள்,  மனவடு, தற்கொலை எனப் பல்வேறு கூறுகள் ஒன்று சேரும் ”வெள்ளவாய்க்கால் வைரவர்” என்ற கதையைக் கூறலாம்.  ஒரு சிறுவன் வாயிலாகச் சொல்லப்படும் இக்கதையில் மூத்தண்ணையின் உருவமும், குணாதிசயங்களும், செயற்பாடுகளும் மிக்க சுவாரஸ்யமாக விவரிக்கப்படுக்கின்றன. நீதியையும் காவலையும் பிரதிபலிக்கும் வைரவருடன் மூத்தண்ணை கதையில் ஒன்றுபடுத்தப்படுகிறார். வன்முறை சிறுவர்களை எவ்வாறு பாதிக்கின்றது என்பதைக் காட்டும் நல்லதொரு சிறுகதை இது.. இக்கதையில் இடம் பெறும் சிறுவனின் அம்மா பாத்திரமும் குறிப்பிடத்தக்கது.. பௌதிக உலகம், ஆன்மிக உலகம் இரண்டினையும் இணைப்பவளாய் அவள் திகழ்கிறாள். ஆன்மிக உலகின் பிரதிநிதியான மூத்தண்ணையைச் சோறிட்டுக் காப்பவளாகவும், இறுதியில் மகனைத் தற்கொலையினின்று காப்பவளாகவும் அவள் விளங்குகிறாள்.

நிறைவாக, இக்கதைகள் குறிப்பிடத்தக்க இலக்கிய நேர்த்தியுடனும் நுட்பத்துடனும் எழுதப்பட்டுள்ளன. இவை  நேரடியான, உணர்ச்சிபூர்வமான மொழியில் சொல்லப்படும் கதைகளுக்குப் பழக்கப்பட்ட தமிழ் வாசகர்களின் வாசிப்பு அநுபவத்தை விரிவாக்க விழைகின்றன. சில கதைகள் முதலில் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இந்தக் குழப்பம் (ambiguity ) வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டதொன்று, தலைப்புகள், பெரும்பாலும் வாசகர் ஆர்வத்தைத் தூண்டுபவையாக இருக்கின்றன. ஆனால் அதே நேரத்தில் கதைகள் எளிதான தீர்வுகளைத் தர மறுக்கின்றன. அறரீதியான மதிப்பீடுகளுடன் இக்கதைகளை வாசித்தல் சாத்தியமில்லை. ஏனெனில் அவை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ”உண்மைகளுக்கான” மாற்றுப் பார்வைகளை முன்வைக்க, அல்லது அவற்றைக் கேள்விக்கு உட்படுத்த முனைகின்றன. சுருங்கச் சொல்லின், நம்மை வெறுமனே வாசித்தற் செயற்பாட்டிற்கு அப்பால், மனத்தடைகள் இன்றி, ஆழமாகச் சிந்திக்க தூண்டுகின்றன.

*****

(நன்றி: 'கலைமுகம்' - அமுத மலர் (80)


 

கார்காலக் குறிப்புகள் - 119

Monday, December 01, 2025

 

கடந்த சில நாட்களாக ரேய் பிராட்பரியின் 'Zen in the art of writing' ஐ வாசித்துக் கொண்டிருந்தேன். அது அவரின் எழுத்து அனுபவங்கள் சார்ந்த கட்டுரைகளாகும்.  இதில் 1950 இலிருந்து 1990 வரை அவர் எழுதிய கட்டுரைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த கட்டுரைகளை வாசிக்கும்போது ரேய் எவ்வளவு ஆழமாக எழுத்தை நேசித்திருக்கின்றார் என்பதை அறிய முடிகின்றது. அத்துடன் அவர் எவ்வளவு தான் விரும்பிய எழுத்துக்காக உழைத்திருக்கின்றார் என்பதையும் நாம் கண்டுகொள்ளவும் முடியும்.

Uploaded Image

ஒரு புதிய எழுத்தாளருக்குத் தேவைப்படும் பல விடயங்களை தன் அனுபவம் சார்ந்து ரேய் இதில் சொல்லிக்கொண்டே போகின்றார். அதில் ஒன்று தினமும் ஆயிரம் வார்த்தைகள் எழுதுவது. ஒருவருக்கு சிறுகதை எழுத்தாளராக விருப்பம் என்றால், வாரம் ஒருகதை என ஒரு வருடத்துக்கு நிறுத்தாமல் கதைகளை எழுத வேண்டும் என்கின்றார். ஒரு வருடத்தில் அப்போது 52 கதைகளையாவது எழுதியிருப்பீர்கள். நிச்சயமாக அதில்  தூக்கி எறியவோ/எரிக்கவோ வேண்டிய நிறையக் கதைகள் இருக்கும். ஆனால் அந்த 52இல் எப்படியேனும் ஒரு  சில  நல்ல சிறுகதைகளையாவது உங்களையறியாது எழுதியிருப்பீர்கள் என்பதை நீங்கள் கண்டறிந்து கொள்வீர்கள் என்கின்றார். அவரது பன்னிரண்டாவது வயதில் இருந்தே இப்படி தினம் எழுதும் பழக்கத்தை ரேய் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுபோலவே ஒரு புனைகதை எழுத்தாளருக்கு தினம் கவிதைகள் வாசிப்பது என்பது முக்கியமானது என்கின்றார். கவிதையானது நம் மனதில் படிமமாக, உருவமாக, ஏதேனும் ஒரு அரிய சொல்லாகத் தங்கிவிடுகின்றது. அவ்வாறே  நாம் கதைகளையும் ஏதேனும் ஒரு புதிய சொல்,  ஒரு படிமம் போன்றவற்றில் இருந்து நெய்து கொள்ளமுடியும் என்கின்றார். ரேய் நீண்டகாலத்துக்கு இரவு தூங்கிவிட்டு எழுந்தவுடன் கனவில் வருகின்ற சொற்களைக் குறித்துக்கொள்வார் என்றும் பிறகு அந்தச் சொற்களை வேறு சொற்களுடன் இணைத்துப் பார்த்து தன் புனைவை எழுதுவார் என்றும் சொல்கிறார். அதுபோலவே ஓரிரு பக்கமாயினும், இரண்டு சிறுகதைகளையும், புனைவல்லாத ஓரிரு கட்டுரைகளையும் தினம் வாசிப்பது ஒரு படைப்பாளிக்கு முக்கியம் என்கின்றார்.

ரேய் அவரின் பிரசித்தம் பெற்ற 'Fahrenheit 451' எழுதிய கதையைச் சுவாரசியமாக இந்தத் தொகுப்பில் சொல்கிறார். அவரிற்கு அப்போது குடும்பம் வந்துவிட்டது. பிள்ளைகள் அவரை வீட்டில் இருந்து எழுத விடுவதில்லை. ரேய் அருகிலிருந்த நூலகத்தின் நிலவறையில் எழுதுவதற்கு ஓரிடத்தைக் கண்டுபிடிக்கின்றார். அங்கே ஒரு பத்து சதம் போட்டால், ஒரு ரைப்ரைட்டரை அரை மணித்தியாலத்துக்கு வாடகைக்கு எடுத்து எழுதலாம். அவ்வாறு எட்டு டொலர் எண்பது சதத்தோடு எழுதிய நாவல்தான் 'பாரனைட் 451' என்று சொல்கிறார். இதை எழுதும்போது என்ன சிக்கல் என்றால், ஒவ்வொரு அரை மணித்தியாலத்துக்கும் 10 சதம் போட்டால்தான் தொடர்ந்து எழுதமுடியும். எழுத்து உள்ளே பொங்கிவரும்போது ரைப்ரைட்டர் நிற்பதும், அதற்குள் காசைப் போடுவதும் ஒரு தலையிடி பிடித்த பிரச்சினை என்கின்றார்.

நூல்கள் தடைசெய்யப்பட்டு அப்படி எங்கேனும் நூல்கள் கண்டுபிடித்தால் எரிக்கின்ற சட்டம் இருக்கின்ற இந்த நாவலை, நான் பல நூற்றுக்கணக்கான நூல்கள் கொண்ட ஒரு நூலகத்தில்தான் எழுதினேன் என்றால் உங்களால் நம்பமுடியுமா என்று ரேய் நம்மிடம் கேட்கிறார்.

அதுபோலவே 70களில் எழுதப்பட்ட ஒரு கட்டுரைதான், 'Zen in the art of writing'. உண்மையில் ரேயுக்கு அப்போது ஸென் குறித்து எதுவும் தெரியாது. அவர் அப்போதுதான்  'Zen in the Art of Archery' ஐ வாசித்திருக்கின்றார்.  ஒரு வித்தையில் தேர்ச்சி பெறவேண்டுமென்றால் அதில் கூறப்பட்ட 'Don't Think' என்பது இவரைக் கவர்கின்றது. ஓர் ஓட்டக்காரனோ, நீச்சல்காரனோ ஓடும்போதோ நீந்தும்போதோ எதையும் யோசிப்பதில்லை. அவனது சிந்தனை முழுதும் ஒரு உடலாக குவிகின்றது. அதுபோலவே எழுதும்போதும் நீங்கள் எதையும் யோசிக்காமல் என்ன வருகின்றதோ அதை எழுதுங்கள் என்கின்றார். WORK -RELAXATION- DON'T THINK இந்த மூன்றையும் தாரக மந்திரமாகக் கொண்டு, உங்களுக்கு விரும்பிய ஒழுங்கில் அதை மாற்றி அமைத்து, தீவிரமாக எழுதுங்கள் என்கின்ற கட்டுரை இந்த நூலில் நல்லதொரு கட்டுரையாகும்.

ரேய், தனது கதைகளை தனித்தனிப் பெயர்ச்சொற்களாக (Nouns) எழுதி அவற்றை சம்பவங்கள்/பாத்திரங்களை இணைப்பதன் மூலம் கதைகளாக எழுதுவது தனக்கு இலகுவாக இருக்கின்றது என்கின்றார். அதைபோல எதை எழுத உட்காரும்போதும் அதைக் குறித்து எதையும்  யோசிக்காது எது வருகின்றதோ அதை அப்படியே எழுதுங்கள் என்கின்றார்.

அப்படி எழுதும் முதற்பிரதிதான் உங்களுக்குச் சந்தோசம் தரக்கூடியது. பிறகு நீங்கள் திருத்தி வெட்டி முறித்து செய்யபோகும் செயல்கள் உங்களுக்கு மகிழ்ச்சி தரப்போவதில்லை. ஆகவே அந்த முதற்பிரதி தரும் இன்பத்தை ஒருபோதும் கைவிடாமல் அந்தக் கதையை அதன் போக்கில் யோசிப்பதற்கு இடங்கொடுக்காமல் எழுதிச் செல்லுங்கள் என்கின்றார்.

நம் மொழியில் 'கண்டதையும் கற்று பண்டிதன் ஆகுங்கள்' என்று சொல்வதுபோல, ரேய் தொடக்க காலத்தில் உங்களால் முடிந்தவரை அளவு கணக்கில்லாது எழுதுங்கள். அதில் நிச்சயம் எறியவேண்டியவை நிறைய இருந்தாலும், காலம் செல்லச் செல்ல உங்களை அறியாமலே நீங்கள் தரமான படைப்புக்களை எழுதத் தொடங்கிவிடுவீர்கள் என்கின்றார் ('Quantity gives experience. From experience alone can quality come').

அதுபோல நல்லதொரு படைப்பாளி என்பவர், சிறந்ததை எழுதுவது மட்டுமில்லை, எதை எழுதக்கூடாது, எதை ஒரு படைப்பில் சேர்க்கக்கூடாது, எப்படி எளிமையாகச் சொல்வது என்பதைக் கற்றுக்கொள்ளவேண்டும், அதுவே சிறந்த கலையை உருவாக்கும் என்கின்றார்.

ஒரு பியானோ கலைஞன் ஒவ்வொருநாளும் பயிற்சி பெறவில்லை என்றால், அது அவனுக்குத் தெரியும். இரண்டு நாட்களாகப் பயிற்சி செய்யவில்லை என்றால் ஒரு விமர்சகர் கண்டுபிடித்துவிடுவார். அதே கலைஞன் மூன்றுநாட்கள் பியானோவைத் தொடவில்லை என்றால், அவனுடைய பார்வையாளர்கள் எளிதில் அதை அறிந்து விடுவார்கள். அதுபோலவே எழுதுகின்றவர்களும் உண்மையில் எழுத்தின் மீது ஆர்வமும் விருப்பும் இருக்கின்றதென்றால் தினம் அது எவ்வகை எழுத்தாக இருப்பினும் தொடர்ந்து எழுதுங்கள் என்கின்றார்.

எனக்குப் பிடித்த ரேயினுடைய  ஒரு மேற்கோள் இருக்கின்றது: அது இப்படிச் சொல்வதாக இருக்கும்: "உங்களை யதார்த்தம் அழிக்காது இருக்க வேண்டுமாயின் நீங்கள் எழுத்தின் போதையோடு எப்போதும் இருக்க வேண்டும்".

***