கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மட்டக்களப்பு – 02

Monday, August 28, 2023

 

ரு நகரத்திற்குப் போனால் அதன் நூதனசாலைகளைத் தேடிப் போய்ப் பார்ப்பது என் வழமையாக இருக்கும். அதுபோல எங்கெங்கெல்லாம் புத்தகக் கண்காட்சிகள் நடக்கின்றதோ அவற்றையும் தவறவிடாது சென்று பார்ப்பேன். சில புத்தகக் கண்காட்சிகளை அவை சிறிதோ பெரிதோ- புகைப்படங்களில் பார்த்து என் நினைவின் சேகரங்களைப் பத்திரப்படுத்தி, அடிக்கடி மீள மீள அசை போட்டபடியிருப்பேன். ஓரிடத்திற்கு போக வேண்டும் என்று விரும்பினால், அது அப்போது சாத்தியமில்லை என்று தெரிந்தாலும், அந்த இடத்தைத் தொடர்ந்து manifest செய்துகொண்டிருந்தால் பின்னர் ஒருபொழுது அது நிச்சயம் நிகழும் என்பது என் பாமர நம்பிக்கை. அவ்வாறு மனதில் உருப்போட்டு உருப்போட்டே பொருளாதார நெருக்கடி பிதுக்கியபோதும், முதன்முதலாக சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சில வருடங்களுக்கு முன் போய் இறங்கியிருக்கின்றேன். இலங்கையில் பிரமாண்டமாக பண்டாரநாயக்க சர்வதேச அரங்கில் நடக்கும் புத்தகக் கண்காட்சியிலும் சில தடவைகள் பங்குபெறும் வாய்ப்பைக் காலம் தந்திருந்தது.

மேலும் எனக்கு சின்ன புத்தகக் கடைகள் பிடிப்பது போல, சிறியதாக நடக்கும் புத்தகக் கண்காட்சிகளும் பிடிக்கும். தொடர்ந்து ஊக்கத்தோடும், விருப்பத்தோடும் இந்நிகழ்வுகள் ஆரம்பித்து பின்னர் காலத்தின் நீட்சியில் பெரிதாக வளரும். இன்று பெரும் செலவில் நடக்கும் சென்னை புத்தகக் கண்காட்சி 20/25 வருடங்களுக்கு முன் எவ்வளவு சிறியதாக ஆரம்பித்திருக்கும் என்பதைப் பழைய புகைப்படங்களைப் பார்த்தாலே தெரியும். இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இப்போது புத்தகக் கண்காட்சிகளும், விற்பனைகளும் நடைபெறத் தொடங்கியிருக்கின்றன. உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடி, அரசியல் ஸ்திரமின்மைகளைத் தாண்டி இந்நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவோர் உண்மையிலே போற்றுதற்குரியவர்கள்.

கடந்தமுறை அக்கரைப்பற்றில் நிகழ்ந்த புத்தகக் கண்காட்சியை இம்முறை ஏறாவூரில் நண்பர்கள் ஒழுங்குபடுத்தியிருந்தார்கள். நானும் வடகோவையாரும் வெள்ளியிரவு ஏறாவூர் புத்தகக் கண்காட்சிக்குப் போனோம்.  நாம் அங்கே நுழைந்தபோது வாசிப்பின் முக்கியத்துவம்பற்றிய பேச்சு மேடையில் போய்க் கொண்டிருந்தது. வடகோவை வரதராஜரைக் கண்டுவிட்டு நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் ஒரு உரையை ஆற்றக் கேட்டனர். அவர் உரை எதையும் நிகழ்வுக்காய்த் தயாரித்து வரவில்லை எனினும் குறுகிய உரையெனினும் நல்லதொரு பேச்சை வழங்கியிருந்தார். என்னோடு திரியும் இந்த மனிதருக்கு இன்னமும் அறிவு வற்றிப் போகாமலிருக்கின்றது என்பது எனக்குப் பெரும் வியப்பாயிருந்தது.

அந்த உரையின் முக்கிய கேள்வியாக, 'ஏன் நாம் வீதிகளில் பழமரங்களை நடுவதில்லை?' என்பது இருந்தது. இலங்கையைப் பொறுத்தவரை எனக்கு அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. கனடாவில் இப்படி பழமரங்களைத் தெருக்களில் நடும்போது, பெரும் செலவு (high maintenance) அதைப் பராமரிக்கத் தேவையாயிருக்கின்றது என்றொரு காரணத்தைச் சொல்கின்றார்கள். அதே சமயம் அங்கே சொந்தமாக வீடு வைத்திருப்பவர்கள் வீட்டு முன்றலில் பழமரங்களை நடாவிட்டாலும் (ஒவ்வொரு வீட்டின் முன்னும் ஆகக்குறைந்தது ஒரு மரத்தையாவது நகரசபை நாட்டிப் பராமரிக்கும்), பின்வளவுகளில் விரும்பிய எத்தனை பழமரங்கள் என்றாலும் நடலாம். எனக்கு கனடாவில் சொந்தமாக வீடு இல்லாததால், பூசலார் நாயனார் போல எனக்குப் பிடித்த மரங்களை  மனதுக்குள் வளர்த்து பழங்களைப் பறித்துச் சுவைத்துக் கொண்டிருப்பேன்.

ஏறாவூர் புத்தகக் கண்காட்சியில் புத்தகக் கடைகள் என்றால் பத்திற்கும் குறைவானவையே. அதிலும் எனக்குப் நெருக்கமான புத்தகங்களை இரண்டோ மூன்று கடைகளில்தான் வைத்திருந்தனர். சிராஜ் மஸூர் போன்ற நண்பர்களை முதன்முதலாக நேரில் சந்தித்து உரையாடினேன். இதற்கிடையில் 9 மணிக்குள் திரும்பிப் போய்விடவேண்டும் என்று வடகோவையார் அந்தரப்பட்டுக் கொண்டிருந்தார். ஏன் 9 மணியோடு ஊறணிப் பக்கம் ஊரடங்குச் சட்டமோ எனக் கேட்டேன். இல்லையடா வயிறு ஏதோ செய்கின்றது, போகின்ற வழியில் ஏதாவது கடையில் வேப்பெண்ணெய் போத்தல் இரண்டு வாங்கிக் கொண்டுபோக வேண்டும் என்றார் அவர்.

டுத்த நாள் காலையிலே சென்று புத்தகக் கண்காட்சிக்குப் போய் புத்தகங்களோடும் நண்பர்களோடும் ஆறுதலாய்க் கழிப்பதென தீர்மானித்திருந்தோம். ஊறணியிலிந்து ஏறாவூர்க்கு போவதற்கு மட்டுமே 1500 ரூபாவை முதல் நாளிரவு ஓட்டோவுக்குக் கொடுத்திருந்தோம். டேய் நான் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்கு வர பஸ்ஸுக்கே இந்தளவு பணம் செலவழித்தது இல்லையேஎன வடகோவையார் புலம்பிக் கொண்டிருந்தார். அதற்காக நீங்கள் ஒவ்வொருநாளும் யாழுக்குப் போய் திரும்பி ஏறாவூருக்குப் வரமுடியுமா, வெற்றிலை பாக்கைப் போட்டுவிட்டு சலம்பாமல் இருங்களென' எரிச்சலோடு சொன்னேன். என்ன ஆனாலும் நாளைக்கு பஸ்ஸில் ஏறித்தான் ஏறாவூருக்குப் போவதென்று நாங்கள் இருவருன் தீர்மானித்தோம். பஸ்ஸில் ஒருவர் அங்கே போவதற்கு செலவு 100 ரூபாய்க்கும் குறைவானது.

காலையில் விழித்தபோது காலைச் சாப்பாட்டை ஹொட்டலை நடத்துபவர்கள் வாங்கித் தருகின்றோம் என்றார்கள். வந்த நாளிலிருந்து Fried Rice, கொத்துரொட்டியென்று சாப்பிட்டோமே தவிர, மட்டக்களப்புச் சாப்பாடு எதுவும் உருசித்துப் பார்க்கவில்லை. எனவே இடியப்பம், புட்டோடு மட்டுநகர் கறிகளைச் சுவைப்போம், வாங்கி  வாருங்கள் எனச் சொன்னோம். அவர்களோ எல்லாம் இங்கே எட்டு மணிக்கு முன்னர் முடிந்துவிட்டன என்று பரோட்டாவை வாங்கி வந்து எங்களைக் கவலைப்படச் செய்தார்கள்.

இதற்கிடையில் வடகோவையாருக்கு அறம்புறமாய் தொலைபேசி அழைப்புக்கள் வந்துகொண்டிருந்தன. ஐயா, உங்களை நேரில் பார்க்கவேண்டும், எங்கள் வீட்டுக்கு வந்து விருந்துண்ணுங்கள்’ என்று அவரின் தோழிகளின் அழைப்புக்கள் வேறு. எமக்காய் அறுசுவை மதியவுணவு கல்முனையில் செய்து வைத்திருக்கின்றேன் என்று சொன்ன உமா வரதராஜனின் அழைப்பை,  உமாவின் வீடு 50 கிலோமீற்றர்கள் தொலைவிலிருக்கின்றது, எனக்கு காலும் வலிக்கிறது, அங்கே போவது கடினம் என்று சொல்லி நிராகரித்த வடகோவையாருக்கு அவரின் ஒரு தோழி கூட கடைசிவரை சாப்பாடு போடாதது மட்டுமில்லை, சந்திக்கக் கூட வரவில்லை என்பது பெருஞ்சோகந்தான்.

இனிக்க இனிக்க தொலைபேசியில் பேசும் என் புலம்பெயர் நண்பர்கள்தான், இலங்கைக்கு வரும்போது என்னைச் சந்திக்காமல் திரும்பிப் போகின்றார்கள் என்று நினைத்தேன். இப்போது மட்டக்களப்பாரும் என்னை இப்படிக் கைவிட்டு விட்டார்களே என்று அவர் சொல்லிப்  புலம்பிக் கொண்டிருந்ததைப் பார்க்க எனக்கே பாவமாய்த்தான் இருந்தது. இப்போது மட்டக்களப்பார் அரசியலில் மட்டுமில்லை, காதல்களிலும் யாழ்ப்பாணிகளைச் சரியாகப் புரிந்துகொண்டுவிட்டார்கள், இனி ஏமாற்றுவது அவர்களைக் கடினம் என்று நான் சொன்னேன். அப்படியெனில் உனக்கு மட்டும் 3 கிரஷ் இருக்கிறது என்று சொல்கின்றாயே, எப்படி அது சாத்தியம் என்றார். அதற்குத்தானே 15 வருடங்களுக்கு முன்னரே யாழ்ப்பாணியின் சோக வாக்குமூலம்என்றொரு கதையை எழுதி சொந்த ஊருக்குத் துரோகம் செய்துவிட்டதாக பொதுவில் அறிவித்துவிட்டேன் என்றேன்.


இதுவரை வருந்திக் கொண்டிருந்த வடகோவையாருக்கு இப்போது உற்சாகம் கொப்பளிக்கத் தொடங்கிவிட்டது. 'நான் யாழ்ப்பாணம் போனதும் இப்படி ஒரு கதையை யாழ்ப்பாணிகளைத் திட்டி எழுதுகின்றேன். தோழிகளைச் சம்பாதிக்கின்றேன்' என்றார். 30 வருடங்களாக கதைகளை மீண்டும் எழுதமாட்டேன் என்று அடம்பிடித்த நீங்கள் இந்தக் காரணத்துக்காக கதைகளை எழுதத்தொடங்கினால் அவமானமாக இருக்காதா எனக் கேட்டேன். 'இப்படித்தானடா நான் குண்டசாலையில் இருக்கும்போது ஒரு சிங்களப் பிள்ளை, என் குரல் ஜெயகாந்தனின் சிம்மக்குரல் மாதிரி இருக்கிறது..எனக் காலையிலே ஒரு கதையைச் சொல்லி இல்லாத மீசையை முறுக்கத் தொடங்கினார்.

நான் உடனேயே 'தயவு செய்து நிறுத்துங்கள், பஸ்ஸுக்குப் போக நேரமாகிவிட்டது'  என்றேன். நேற்று இரவு வேப்பெண்ணெய் குடித்துவிட்டு என்னைத் தூங்கவிடாது இரவிரவாய் ஒரே காதல் பிதற்றல். இதற்குச் சில நாட்களுக்கு முன்தான்,  கனடாவில் இருக்கும் செல்வத்தார் பனிவிழும் பனைவனம்என்று ஒரு புத்தகத்தின் அரைவாசிவரை அவரின் முதல் காதலியான பத்மினியை பற்றி உருகி உருகி அவர் எழுதியதை வாசித்து மனம் நொந்துமிருந்தேன். இவர்கள் ஒரேயொரு காதலை வைத்தே இப்படி நாளும் பொழுதும் உருகியும், 200 பக்கங்களில் புத்தகங்களில் எழுதுவார்கள் என்றால், என்  இருபதுக்கும் காதல் கதைகளைச் சொல்லத் தொடங்கினால் இவர்களால் தாங்கமுடியாது போகும். அவற்றை எழுதத் தொடங்கினால் அது 'வெண்முரசை' விட, 25,000 பக்கங்கள் தாண்டிய பெருங்காப்பியமாக இருக்கும். சொல்லத் தொடங்கினால் 'ஆயிரத்தொரு அரேபிய இரவுகளை' விட நீண்டபடி வருடக்கணக்கில் போகும்.

பஸ்ஸில் ஏறாவூருக்குப் போகின்றோம், வெயிலும் உக்கிரமாக இருக்கின்றதென்று sun burn நடப்பதைத் தவிர்க்க, வடகோவையாருக்கு என்னிடம் இருந்த Sun screen lotionஐ எடுத்துக் கொடுத்தேன். அவர் ஏதோ fair & lovely என்ற நினைப்பில் முகத்தில் அப்பி தேய் தேய் என்று 'சிவாஜி'யில் வந்த ரஜினி போல தேய்த்துக் கொண்டிருந்தார். ஐயோ, இது UV கதிர்களிடமிருந்து நம்மைப் பாதுகாக்கும் லோஷன்,  இப்படி இதை நீங்கள் முகத்தில் தேய்த்தால், சூரிய பகவான் நேரடியாகவே உங்கள் முகத்தில் வந்து குடியேறிவிடுவார் என்று சொல்லி அதைப் பாய்ந்து போய் பறித்தெடுத்தேன்.

மட்டக்களப்புக்கு புத்தகக் கொண்டாட்டத்திற்கென வந்து, புத்தகங்களைப் பார்த்ததையோ இடங்களைப் பார்த்த்தையோ விட மிச்ச எல்லாவற்றையும் செய்தாயிற்று என நான் நினைத்துச் சலித்துக் கொண்டு ஊறணியில் இருந்து ஏறாவூருக்கு வடகோவையாரோடு பஸ் எடுத்தேன்.

**********************


(May 23, 2023)


0 comments: