கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஏதிலி - அ.சி.விஜிதரன்

Sunday, March 14, 2021

 1.

இந்தியாவில் இருக்கும் ஈழ ஏதிலிகளின் கதைகளை இந்தப் புதினம் பேசுகின்றது. 14 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்நூலில் ஒவ்வொரு அத்தியாயமும் புதிய மனிதர்களையும் அவர்களோடு தொடர்புடைய சம்பவங்களையும் அறிமுகப்படுத்துகிறது. இந்தியாவில் இன்னமும் 30 ஆண்டுகளுக்கு மேலாகியும், அங்கே முகாங்களில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழ எதிலிகளின் நிலைமையில்  -இன்று ஈழத்தில் போர் முடிந்தபின்னும் கூட-  பெரிதாக ஏதும் மாற்றம் வந்துவிடவில்லை. சாதாரண மனிதர் வாழ்வதற்குரிய அடிப்படை வசதிகள் மட்டுமின்றி, தேவையான கல்வியையோ, நல்லதொரு வேலையைப் பெறுவதற்கோ இன்னும் ஏதிலிகள் வாய்ப்பில்லாதே தமது வாழ்வை நடத்தவேண்டியிருக்கின்றது.


இந்தப் புதினம் தொடக்கத்தில் ஒரு பின் நவீனத்துவக் கதைசொல்லலின் கூறுகளிலிருந்து தன்னை விரித்தெடுக்கத் தொடங்கினாலும், இறுதி அத்தியாயங்களை நெருங்கும்போது, தனித்துச் சம்பவங்களைச் சொல்லவேண்டுமென்ற அவசரத்தில் சற்று உலர்ந்ததன்மையையும் கடைசியில் அடைந்துவிடுகின்றது. ஒருவகையில் விஜிதரன் இடதுசாரிப் பின்புலத்தில் இருந்து வருகின்றவர் என்பதால் எப்படி பின் நவீனத்துவக் கதைசொல்லல்களை எளிதில் உள்வாங்கினார் என்பது சற்று ஆச்சரியமாக இருந்தாலும், இறுதியில் தனக்குரிய 'அரசியலை'ச் சொல்லிவிடவேண்டும் என்ற எத்தனிப்பில் ஒருவகையில் பிரச்சாரம் போல பிற்பகுதிகள் ஆகியும் விடுகின்றன.


இந்த நாவலில் கிட்டத்தட்ட மூன்று வெவ்வேறு அத்தியாயங்களில் முகாங்களிலுள்ள 'அரசியல்' பிரக்ஞையுள்ள இளைஞர்/கள்,  இந்திய கியூ பிராஞ்சி/சிஜடியினரினதும், அரசியல்வாதிகளினது போலித்தனங்களைக் கேள்விகளால் தகர்த்துவிடுகின்றனர் என்பதை எளிதாக நாம் கண்டடைகின்றோம்.. அதிலும் நாம் தமிழர் போன்ற தமிழ்த்தேசிய அரசியலை உணர்ச்சிபூர்வமாகச் செய்பவர்களைக் கேள்வி கேட்டு சாரு என்ற பெண் அ தகர்ந்தெறியும்போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆனால் இறுதி அத்தியாயத்தில், ஈழத்தில் போர் முடிந்து இந்தியாவிலிருக்கும் ஈழ ஏதிலிகள் திரும்ப நாட்டுக்குத் திரும்பவேண்டுமென்று ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன்,  செல்வநாயகத்தின் வழித்தோன்றல் அகதிமுகாங்களுக்குள் நுழையும்போது அதை உடைத்தெறியும் நபர்களான  கடவுள் ஆரையும், நேவியையும் பார்க்கும்போது ஒருவகை  பிரச்சாரத்தன்மை நாவலுக்குள் வந்துவிடுகின்றது.

இவ்வளவு பெருந்திட்டத்தோடு வரும் ஒருவரை, அவர் சார்ந்த அமைப்பை இரண்டு இளைஞர்கள் கேள்விகளால் வழிமறித்து அனுப்பிவைக்கின்றார்கள் என்பது நம்புவதற்கு கடினமாய் இருப்பது ஒருபுறமிருக்கட்டும். இந்தளவுக்கு முகாம் மக்கள் இத்தனை வருடங்களாகியும் இந்த அமைப்புக்களின் 'அரசியல்' தெரியாமல் அப்பாவிகளாக இருப்பார்களா என்பதைப் பற்றித்தான் அதிகம் யோசித்துப் பார்க்கவும் வேண்டியிருக்கின்றது..

 

2.

விஜிதரன் 'கலை என்பது முற்றிலும் அரசியல் சார்ந்தது' என்பதைத் திடமாக நம்புகின்ற ஒருவரெனத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்கிறார். ஏன் இந்த நாவல் கூட கலையை விட அரசியலையே முதன்மையாகக் கொள்வதையும் வாசிக்கும் எவரும் எளிதில் விளங்கிக்கொள்ளமுடிகிறது. அதில் தவறும் இல்லை. கலை மக்களுக்கா, கலை கலைக்காகவா என்ற கடந்தகால விவாதங்களுக்கு நாம் இப்போது மீண்டும் போகத் தொடங்கத் தேவையில்லை. அந்த விவாதம் நம் ஈழச்சூழலில் 60/70களில் நடந்து முடிந்து, நாம் கடந்தும் வந்துவிட்டோம். ஆனால் இந்த புதினத்தில் இடதுசாரியான விஜிதரன் எந்த எந்த இடத்திலும் முகாங்களுக்குக்குள் ஓர் அமைப்பைக் கட்டுவதையோ அல்லது அதற்கான ஆரம்ப சமிக்ஞைகளைக் கூட இதில் எழுதிக்  காட்டாதது சற்று வியப்பானதுதான். புதிதாய்த் தொடங்கிய கட்சியான 'நாம் தமிழர்'களே ஏதிலிகளின் முகாங்களுக்குள் நுழைய முடியும்போது, அரசியல் கொந்தளிப்பான ஒரு முக்கிய இடத்தில் இடதுசாரிகளுக்கு வேலை இல்லாமலாப் போய்விடும்.


மற்றும்படி  தேங்கிப்போன ஓர் இடதுசாரியைப் போல அல்லாது, விஜிதரன் ஈழ அரசியலை  மிகுந்த கவனத்துடன் மக்களின் பக்கம் நின்று பேசுவது இந்தப் புதினத்தில் கவனத்தில் கொள்ளவேண்டியது. எப்படி புலிகளின் தலைவரோடு அவர்களின் தலைமை அழிக்கப்பட்டதை உடனே தெரிவிக்காது ஆறப்போட்டு, தமிழகத்தில் ஒரு பெரும் எழுச்சி நிகழ்வதை தமிழக அரசியல்வாதிகள் தடுத்தார்கள் என்பதிலிருந்து, புலம்பெயர்ந்தவர்கள் தம்மிடம் இருக்கும் இயக்கத்தின் சொத்துக்களைப் பதுக்குவதற்காய், தலைவர் வரட்டும் அப்போது நாம் இவற்றைக் கையளிக்கின்றோம் என்று சோகநாடகம் நடத்தியதிலிருந்து எல்லாவற்றையும் வெளிப்படையாக விஜிதரன் இதில் பேசுகின்றார். அதுபோல புலிகள்தான் யுத்தத்தில் மனிதவுரிமைகளை மீறியவர்கள் என்று ஒரு பாத்திரம் பேசுகின்றபோது, புலிகளைச் செய்தது தெரியும், அரசாங்கமும், இராணுவமும் செய்ததைப் பேசாமல், முள்வேலிக்கம்பிகளுக்குள் தன் சொந்தமக்களை அடைத்து சித்திரவதைப்படுத்திய அரசின் பக்கங்களைப் பேசாமல் யாருக்கான நியாயம் பேசுகின்றீர்கள் என்றும் இந்த நாவலில் கேட்கப்படுகிறது,


அரசியல் புரிதலுள்ள ஒருவரால்தான் இவ்வாறு நியாயமாய் எழுதமுடியும் என்பதற்கும், இதற்காகவேனும் அழகியலை மட்டும் கலையில் பார்ப்பவர்கள் அரசியலையும் விஜிதரனைப் போலப் பயிலவேண்டும் எனவும் சொல்லவேண்டியிருக்கிறது. இதேபோல இன்னொரு உறுத்தலான விடயம் இதில் சொல்லப்படுகின்றது. அதாவது ஈழத்திலிருந்து ஏதிலிகளாக வந்த மக்கள் பற்றிய விபரங்களை முதன்முதலாகப் பதிவு செய்யும்போது, அவர்களிடம் சாதி கேட்டுப் பதிவு செய்யப்படுகிறது என்று இங்கே குறிப்பிடப்படுகிறது.

 

3.

தமிழகத்தில் இருக்கும் ஈழ ஏதிலிகளைப் பற்றிப் பேசுகின்ற ஒரு புதினம் என்றவகையில் இது முக்கியமானதுதான். ஆனால் கலையின் அமைதியை அரசியல் துருத்திக்கொண்டு போகின்ற பல அத்தியாயங்களும் இதில் இருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டாகவேண்டும். அகதி முகாங்களை இப்படி வைத்திருக்கின்றார்களே என ஒரு 'ஆறுமுகநாவலர்' பாத்திரம் கனவில் வரும்போது, மறுபாத்திரம் இதைவிடக் கொடுமையாக சேரிகளில் மக்கள் இருக்கின்றார்கள் எனச் சொல்கின்றது. அது உண்மைதான். ஆனால் சேரி மக்களுக்கு என்று ஒரு வாழ்வு இருக்கின்றது. கொண்டாட்டம் இருக்கின்றது. அப்படி இவ்வாறு தசாப்தகாலங்களாய் முகாங்களில் இருக்கும் மக்களுக்கும் ஒரு வாழ்வு இருக்கும். அது இவ்வாறான அரசியலைப் புரிந்தோ/புரியாமலோ அவர்களுக்குள்ளும் ஒரு கொண்டாட்டமான வாழ்க்கை இருக்கும். அதை அவ்வளவாக இந்தப் புதினத்தில் தொட்டுப் பார்க்கப்படவில்லை என்பதுதான் கவலையானது.


இந்தப் புதினத்தின் கதைசொல்லிக்கும், மதுரையில் படிக்கும் மலையாளப் பெண்ணுக்கும் காதல் இருக்கின்றது. அவள் செய்யும் படிப்பு சம்பந்தமான ஆய்வுக்கு 'நமது மக்கள்' என்று ஏதிலிகள் முகாங்களிலுள்ள பெண்களுக்குரிய சிக்கல்களை எடுத்துக்கொள்கின்றவளாகவும் மினு ஈழமக்களைப் புரிந்துகொண்டவளாகவும் இருக்கின்றாள். ஆனால் மினுவுக்கும், 'வீ'யுக்கும் வரும் காதலைப் பற்றிப் பெரிதாக ஏதும் விபரிக்கப்படவில்லை. ஈழ அகதிகள் என்று பல்வேறு வழிகளில் வெறுத்தொதுக்கப்படுகின்ற அகதியொருவனை, கேரளத்தைப் பூர்வீகமாய்க் கொண்ட ஒரு பெண் நேசிக்கின்றாள் என்பது எவ்வளவு அழகானது. அந்தக் காதலைச் சொல்வதில் ஒரு அழகியல் இருக்கும். அது கூட ஒருவகை அரசியல்தானே. உங்களில் இந்தத் 'தீண்டாமை'களில் இருந்து காதல் இந்த எல்லைகள்/ஒதுக்கல்களைத் தாண்டியும் எழும் அற்புதமான விடயமெனச் சொல்லும்போது, நேரடியாக அரசியலைச் சொல்வதை விட, வாசிக்கும் இது நம்மை அதிகம் பாதிக்கும் அல்லவா?


 'கலை என்பது அரசியல் சார்ந்தது' என்று தீர்க்கமாக இருக்காது, 'கலை என்பது அரசியலும் சார்ந்தது' எனச் சற்றுத் தளர்வாக இருந்திருந்தால் இந்தப் புதினம் இன்னும் பலவழிகளில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தியிருக்குமென நினைக்கிறேன்.

.....................


-நன்றி: வனம்

(Oct 25, 2020)

 

 

 

Malcolm & Marie

Saturday, February 27, 2021


ஒரு இயக்குநர் தனது திரைப்பட வெளியீடு முடிந்து நள்ளிரவு தன் காதலியோடு வீடு திரும்புகின்றார். விமர்சகர்கள் படத்தைப் பாராட்டிய உற்சாகம் நெறியாளருக்கு, ஆனால் காதலி எதனாலோ உறுத்தப்படுகின்ற பாவனையுடன் இருக்கிறார்.  இயக்குநர் என்ன நடந்தது எனக் கேட்க, இந்த இரவு எதையும் பிரயோசனமாகப் பேசுவதற்காய் இருக்கப் போவதில்லை. அடுத்த நாள் பேசலாம் என்கிறார் காதலி.


இந்த உரையாடல் இப்படியே நீண்டு, காதலி எல்லோருக்கும் திரையிடலில் நன்றி கூறியபோது தனக்கு நன்றி கூறாது தவறவிட்டது உறுத்துகின்றது எனச் சொல்ல அந்த இரவு வேறொன்றாக மாறத் தொடங்கின்றது. அப்படியே பல்வேறு திசைகளில் பேச்சு போக, அதுவரை மறைந்து வைத்திருந்த பல இரகசியங்கள் வெளிவரத்தொடங்கின்றன.


இத்திரைப்படத்தின் கதை, இந்தக் காதலியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இருபதுகளில் போதையிற்கு அடிமையான மேரியின் தத்தளிப்புக்களே மால்கம் எடுத்த இந்தத் திரைப்படம். நீ எனது கதையை எடுத்துவிட்டு என்னைத் தனித்துவிட்டுவிட்டாய் என்கின்றார் மேரி. நீ கதையாக எழுதியும், அதில் ஒரு நடிகை நடித்தும் எனக்கான கதையை எங்கேனும் இனிச் சொல்வதற்கான எல்லா இடத்தையும் அடைத்துவிட்டீர்களென மேரி மேலும் குற்றஞ்சாட்டுகின்றார்.


இதனால் கோபமடையும் மால்கம், இந்தக் காட்சிகள் எல்லாம் நீ சொன்னதின் அடிப்படையில் எழுதப்பட்டதல்ல. எனது கடந்தகாலக் காதலிகளின் அனுபவங்களில் இருந்தும் எழுதப்பட்டதென அவற்றைப் பட்டியிலிடத் தொடங்கின்றார். அது மட்டுமின்றி அவர்களோடு கழித்த தனிப்பட்ட பொழுதுகளை விபரிக்கவும் செய்கின்றார்.


கடந்தகாலக் காதல்கள் என்பது முற்றுமுழுதாக புதிய காதலிக்குத் தெரியாமல் இருப்பதுதான் அழகானது. அந்த மர்மங்கள் அவிழ்ந்துவிட்டால் உன்னை அறிந்துகொள்ளும் எல்லாப் பாதைகளும் அடைபட்டுவிடும். உனது பழைய காதலிகள் அவ்வளவு அழகானவர்களா, அறிவானவர்களா, நீ அவர்களோடு எதையெதைச் செய்வாய், அதைவிட நான் இன்னும் முன்னே ஒருபடி இருக்கவேண்டும் என்ற ஒருவித மெல்லிய பதற்றம் துளிர்க்கையில்தான் நம் காதல் இன்னும் புத்துணர்ச்சியாக இருக்கும் என்று மேரி மால்கத்திற்குச் சொல்கிறார்.


நான் உன்னோடு எவ்வளவு கோபத்தோடு இருந்தாலும், உன்னைப் போல நான் என் கடந்தகாலக் காதல்களை இப்படியெல்லாம் விலாவரியாக விபரிக்க மாட்டேன். அது உன்னைக் காயப்படுத்தும் என்பதைவிட என்னை இன்னும் அதிகமாய்க் காயப்படுத்தும் என்கிறார் மேரி. 


தான் நெறியாள்கை செய்த திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுவிட்டதான மகிழும் மால்கமின் இரவு இன்னும் இருண்மையாகின்றது. இப்படி உரையாடல் போகும்போது, திரைப்படம் பற்றிய முதலாவது விமர்சனம் ஒரு பத்திரிகையின் இணையத்தளத்தில் வெளிவருகின்றது. அதை வாசித்து வாசித்து மால்கம் விமர்சிக்கத் தொடங்கின்றார். கறுப்பினத்தவராக இருக்கும் தன்னை அடையாள அரசியலுக்குள்ளும், 'அரசியல்' இல்லாத தன் திரைப்படத்தை ஏன் அரசியல் படமாக்கியும் மதிப்புரை எழுதுகின்றார் என மால்கம் இப்போது இதை எழுதிய வெள்ளையினப் பெண் விமர்சகர் மீது கோபப்படுகின்றார். அதை மெல்லிய புன்னகையுடன் மேரி கேட்டுக்கொள்கிறார். 


மெல்ல மெல்ல இரவு இவர்களுக்குள் நெகிழ்வாகின்றது. நீ எனது அரிய காதலி, உன் காதல் இல்லாது என்னால் இதைச் சாதித்திருக்கமுடியாது என்று உருகின்றவராக மால்கம் மாறுகின்றார். கோப இரவு காதலுக்கான பொழுதாக மாறும்போது, சட்டென்று நானும் ஒரு நடிகையாக இருக்கும்போது என்னையேன் நீ இத்திரைப்படத்தில் நடிக்கவைக்கவில்லை என்ற முக்கிய கேள்வியை மேரி எழுப்புகின்றார். நீ ஆடிஸனுக்கு வரவில்லை என்று காரணத்தைச் சொன்னாலும் மால்கமிற்கு அவரது பெருந்தவறு புரிகிறது. சட்டென்று ஒருகாட்சியில் மேரி போதைக்கு அடிமையான ஒருவரைப் போல கத்தியைக் கொண்டு நானின்னும் இந்த அடிமையிலிருந்து வெளிவரவில்லையென ஒரு தனிநடிப்பைச் (monologue) செய்கின்றார். அவ்வளவு தத்ரூபமான நடிப்பு. நடிப்பென்று கூடச் சொல்லமுடியாது. அது அவரின் கடந்தகால வாழ்க்கையின் ஒரு பகுதி.


இப்போது மீண்டும் இரவு அடர்த்தியாகின்றது. இவர்களுக்குள் அடுத்து என்ன நடக்குமென்று ஒரு பதற்றம், திரைப்படத்தைப் பார்க்கும் நமக்கு வருகின்றது.


இத்திரைப்படம் ஒரே இரவில் நடப்பது. இரண்டே இரண்டு பாத்திரங்கள்தான் திரையில் வருகின்றன. இது கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டிருப்பது இன்னொரு சிறப்பம்சம். இந்த இரண்டு பாத்திரங்களில் நடித்திருக்கும் இரு நடிகர்களும் ( Zendaya & John Washington) அவ்வளவு இயல்பாக  நடிப்பை வெளிப்படுத்துகின்றார்கள். ஹொலிவூட்டில் இருக்கும் அடையாள அரசியல், இனவாதம், இன்னபிற ஏற்றத்தாழ்வுகள் வெளிப்படையாக இதில் பேசப்படுவதும் கவனத்திற்குரியது. அத்துடன் இவர்களிடையே முரணும் உறவும் மாறி மாறி வரும்போது பின்னணியில் ஒலிக்கின்ற பாடல்களும் சிறப்பான தேர்வு. 


ஆண் X பெண்,  இயக்குநர்  X நடிகை என்ற இடைவெளியில்/இடைவெட்டுக்களில்  இரு பாத்திரங்களுக்குள் உரையாடல்களால் மட்டுமே நிகழ்த்தப்படும் இத் திரைப்படம் அவ்வளவு எளிதில் எல்லோரையும் கவர்ந்துவிடாது. ஆனால் இதில் விவாதிக்கப்படும் விடயங்கள் நமக்கு அவ்வளவு தொலைவில் இருப்பதில்லை. இந்தக் கறுப்பு வெள்ளை படத்துக்குள் நாம் மூன்றாவது பாத்திரமாக ஒருவேளை நுழைந்துவிட்டால்,  நமக்கு நெருக்கமான ஒரு திரைப்படமாக இது ஆகிவிடவும் கூடும்.

.....................................

(Feb 06, 2021)

ஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண் எழுத்து

 1.

"Thus Spoke Zarathustra" இல்  நீட்ஷே, கடவுள் இறந்துவிட்டார் என்று அறிவிக்கின்றார். ரமேஷ் பிரேதனின்  'ஆண் எழுத்து + பெண் எழுத்து= ஆபெண் எழுத்து' நாவலிலும் கதைசொல்லி தனது கடவுள் இறந்துவிட்டதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவிப்பதுடன், புத்தரை ஒரு ஆன்மீக நாத்திகன் எனவும் கொண்டாடவும் செய்கின்றார். இந்த நாவல் மீபுனைவின் வழியே எழுதப்பட்டதால் தன்னிலையில் சொல்லப்படுகின்றது. ஆனால் கதையைச் சொல்பவர் ஒற்றை அடையாளத்தை மறுக்கிறார். பன்மைத் தளங்களில் உரையாடல்களில் நிகழ்த்தி, பலவற்றைச் சிதைத்து தனது பன்மைத்துவத்தை நமக்கு ஒவ்வொரு அத்தியாயங்களிலும் வெளிப்படுத்துகின்றார்.


இந்நாவலில் வருகின்றவர் தன்னைப் பால் நிலைகளைக் கடந்தவர் என்று சொல்கின்றார். இன்னொரு இடத்தில் தன்னைத் தாயுமானவன் என்றும், பாலுறுப்புகள் திரிவடைந்து திருநங்கையாக மாறினேன் என்றும் குறிப்பிடுகின்றார்.  வேறோர் இடத்தில், தன்னை லூவ்ர் மியூசியத்தில்  சல்வதோர் டாலி அடைகாத்த முட்டையிலிருந்து வந்தவன் தான் என்றும் சொல்கின்றார். அப்படிச் சொல்கின்வர் இன்னொரு இடத்தில் 'நான் மொழிவழி உயிரி. எனது கட்டமைப்பு புனைவால் அமைந்தது. வெற்று சொற்களாய் என்னை உதிர்த்துக் கூட்டிக் குவித்துக் கூடையில் அள்ளி குப்பை லாரியில் கொட்டிவிடலாம்' என்றும் கூறுகின்றார். இவ்வாறு ஒவ்வொரு அத்தியாயங்களிலும் இந்தக் கதைசொல்லி பிறந்தும், உருமாறியும், மரணமடைந்தும், புதுப்பிறப்பு எடுத்தபடியும் இருக்கின்றார். ஆகவே அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பது ஒரு சுவாரசியமாக விடயமாக இந்த நாவலின் இடையே ஓடிக்கொண்டிருக்கின்றது.


மீபுனைவின் (metafiction) சாத்தியங்களைத் தொடக்கத்தில் தமிழில் முயன்று பார்த்தவரென நகுலனைச் சொல்லலாம். அதன்பிறகு பின் நவீனத்துவ/பின் அமைப்பியல் சூழலினால் நமக்குத் திறந்துவிடப்பட்ட புதியவெளிகளைச் சரிவரக் கையகப்படுத்தி ரமேஷ் பிரேதன் அற்புதமாக எழுதிச் செல்கின்றார். இந்த நாவலையே அவர் மீபுனைவு என்று தெளிவாகக் குறிப்பிட்டாலும் அவரின் அண்மைக்கால நாவல்களான நீல அணங்கின் கதை, ஐந்தவித்தான் போன்றவற்றை வாசித்தவர்க்கு அவற்றிலும் மீபுனைவின் பாதிப்பு பெரும் செல்வாக்குச் செலுத்தியிருப்பதைக் காணலாம். ரமேஷ் நமக்கு அறிமுகமான மொழியில்/நிலப்பரப்புக்களில் இருந்து தனக்கான புதிய உலகை, அதிமானிடர்களை ,பால் திரிந்தவர்களை, நூற்றாண்டுகள் முன்னும் பின்னும் பிறந்தவர்களை இயந்திரத்தனமான மொழியில் அன்றி அற்புதமான கவித்துவமான எழுத்து நடையில் முன்வைக்கும்போது அவரின் நாவல்களை வாசிக்க சுவாரசியமாகின்றது.


2.

இந்த நாவலில் ஒவ்வொரு அத்தியாங்களும் இரண்டு பக்கங்களுக்கு மேலே நீள்வதில்லை. ஆனால் அதில் அவர் செய்யும் எழுத்து விநோதங்களுக்கு இதை வாசித்துப் பாருங்கள்:


"இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது? எனது கவிதைகளும் கதைகளும் பெண்ணுடம்புகளிலிருந்தே அகழ்ந்தெடுக்கப்பட்டவை. பெண் கவிச்சை வீசாத பிற எழுத்துக்களை என்னால் வாசிக்க இயல்வதில்லை. சில பொழுது எழுதும் எத்தனிப்பில் நானே பெண்ணாகப் பால் திரிவதும் நேரும். ஆணுடம்பில் பெண் உள்ளடக்கம். என்னைப் பெற்ற அம்மாவுக்கும் நான் பெற்ற மகளுக்கும் நடுவே இணைப்புப் பாலமாகக் கிடத்தப்பட்ட என் உடம்புக்குக் கீழே வற்றாமலோடும் பால்வரலாறு; அதில் மூழ்கி எழும் ஆண், பெண்ணாகிறான்.


எனது படைப்புகளைத் தின்று மெய் வளர்க்கும் ஆண், பெண்ணாகி விடுவதால் பலவகைக் குழப்பங்கள் விளைந்து சமூக மன ஒருமைக் குலைவதாக உளவியல் மருத்துவக் குழுவினரின் அறிக்கை சொல்கிறது. இதன் வழி, திருநங்கைச் சமூகம் வளர்ந்து தனி இனக்குழுவாக உருவாவதை ஏற்கமுடியாது என்ற காரணத்தை முன்வைத்து எனது வாழ்நாள் எழுத்துக்களை அரசு தடைச்செய்திருக்கிறது. 


ஆண் இலக்கியம், பெண் இலக்கியம் கடந்த ஆபெண் இலக்கியம் என்ற புதிய வகைமை ஒரு படைப்பியல் உத்தி மட்டும் இல்லை; அது பாலரசியல் அனார்க்கிய முறைமை. ஆண் மனத்தின் ஃபாசிச ஒருமையைக் குலைத்துப் பால் திரிபை உண்டாக்கிப் பெண்ணாக்குவது. அதிகார இச்சை பால்நிலைக் கடந்தது; ஆபெண் மனம் ஒரு பால் முற்றொருமை கடந்த பாவனை. மதம் என்பது கடவுளை முன்வைத்த முற்றதிகார பாவனை. பாவனை மதவியல், பாவனை அரசியல், பாவனை அறிவியல் என்னும் மூன்று முற்றொருமை அதிகார மையங்கள் தர்க்கம் இடறும்போது பாவனையைக் கைக்கொள்வது போன்ற ஒரு புலன் கடந்த உயிரியல் அரசியல் பாவனையே ஆபெண் நிலை.


ஆண் உடம்பில் பெண் சமைந்த ஆபெண் தன்மையைப் புதிய பாலினமாக ஏற்கமுடியாது என்று அரசியல் அமைப்புகள், மத அமைப்புகள் ஒருங்கிணைந்து எதிர் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.  ஆண், பெண்ணாவது என்பது எனது பிரதியின் அரசியல் இயங்கியல் பண்பு. திருக்குறளின் அறம், பொருள், காமம் என்னும் முப்பரிமாணத்தை ஒட்டி விழைவு அல்லது இச்சை என்னும் நான்காவது பக்கத்தை எழுதிப்பார்க்கும் எத்தனம். அதற்கு ஆபெண்ணிலை வாதம், மூன்றாம் பாலரசியலை உள்ளடக்கமாகக் கொண்டக் கவிதையியலை எழுதிப்பார்க்க உதவுமா என்ற பிரதியியல் முயற்சி. இதில் மதம், பண்பாடு, மருத்துவ உளவியல், பாராளுமன்ற அரசியல் அடிப்படைவாதிகள் தலையிடுவது மானுட விடுதலை அரசியல் அமைப்பிற்கு எதிரானது. எழுத்துக்களைத் தடைச்செய்வதன் மூலம் தேவையில்லாமல் என்னை விளம்பரப்படுத்துகிறீர். பாதுகாப்பு வேண்டி திருக்குறளுக்குள் அடைக்கலம் தேடுவதாக, அடிப்படை இலக்கிய அறிதலற்றவர் என்னைப் பகடிசெய்வதன் மூலம் தமக்கு விளம்பரம் தேடுகிறார்.


உடம்பில் செயல்படுத்தாத வன்முறையை என்னால் எதிர்கொள்ள முடியும். எழுதாமல் பேசாமல் வெற்றுப் பார்வையாலும் தொலை எண்ணத் தொடர்பினாலும் பிறருடைய சிந்தனைக்குள் என்னால் ஊடுருவமுடியும். இந்த அதிகார அமைப்பு சமூகச் செயல்பாடுகளிலிருந்து என்னைத் தனிமைப்படுத்த முடியாது. என்னை வெல்வதற்கான எளிய வழி, கொன்றுவிடுவது. நான் ஒத்துழைக்காமல் என்னைக் கொல்லமுடியாது; எனது யோசனையின் வேகத்தில் இடம்பெயரும் இயல்பினன். எனது வேகத்தைத் தடுத்து மறிக்கும் அறிவியல் வளர்ச்சியை அடைவதற்கு இன்னுமொரு நூற்றாண்டு உங்களுக்குத் தேவைப்படும். 


எனக்குத் தொல்லைத்தராமல் ஒதுங்கி நிற்பதே எல்லாருக்கும் நல்லது. அடிப்படையில், நான் ஆண் கலப்படம் இல்லாதவன்; தன் நிழலைத் தானே புணர்ந்து என்னைக் கருத்தரித்ததாக அம்மா சொன்னது புனைவு இல்லை. என்னை விட்டு வெளியேறுவதே இனியான உங்கள் அரசியல். ஆம், என்னால் நீங்கள் இயக்கப்படுகிறீர். ஃபாசிசம் என்பது திட திரவ வாயு நிலைகளில் தன்னை உருமாற்றும் பாவனை; அதை ஒரு நகைப்பில் கடந்துவிடுவேன்.

(87, ப 173-174)"


3.

இவ்வாறுதான் ஒவ்வொரு அத்தியாயங்களும் வெவ்வேறு திசைகளில் பறந்து செல்லும் பறவைகள் போல இருக்கின்றன. பறவைகள் வானத்தில் தடங்களை விட்டுச் செல்லாததுபோல, ஒரு அத்தியாயத்தில் இன்னொரு அத்தியாயத்தில் சிதைத்து புதிய கதையாடல்களை எழுப்பி நாம் பின் தொடரும் எழுத்தின் வழித்தடங்களையே ரமேஷ் மறைத்துவிடுகின்றார். இது ஒருவகையில் முடிவுறா 'அலகிலா' விளையாட்டு. இன்னொருவகையில் போர்ஹேஸில் மாயபுதிர்வட்டங்களுக்குள் தொலைந்துபோவது போன்றது அல்லது டாலியின் சர்ரிலிசத்தில்  உருமறைந்து இன்னொன்றாகத் தோன்றுவதாகும்.


இந்த நாவலில் கதைசொல்லி தொடர்ந்து தான் பல்வேறு நூற்றாண்டுகளில் பிறப்பெடுத்தும், இறந்தும், மீள்பிறப்பெடுப்பதுமாகச் சொல்கின்றார். அவரின் சில பிறப்புக்கள் பற்றித் தெளிவான ஞாபகங்களைக் கொண்டிருக்கின்றார். ஐம்பூதங்களான தனது உடம்பும், ஐந்திணைகளான தனது உள்ளமும் ஒருபோதும் அழிவதில்லை, வெவ்வேறு வடிவங்களில் உருமாறக்கூடியது மட்டுமே என்பதோடு எனது மொழியின் வயது எதுவோ அதுவே எனது உடம்பின் வயதும் என்கின்றார். 


ஒருவகையில் நாம் காலத்தையும் வெளியையும் நேர்கோட்டில் வைத்துப் பார்த்தால், நமக்கு முன் வாழ்ந்து மறைந்தவர்களும், இந்தப் பொழுதில் 'வாழ்ந்து' கொண்டிருப்பவர்களும், இனி வாழப்போகின்றவர்களும் ஒரே தளத்தில் நடமாடிக்கொண்டிருப்பதாய்க் கற்பனை செய்துபார்க்கலாம். அவ்வாறே ரமேஷின் அநேக கதைசொல்லிகள் பல்வேறு நூற்றாண்டுகளில் நடமாடிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த உடம்பிலிருந்து 'தற்செயலாக' வெளியேறுவதே மரணம் என்கின்றார் ரமேஷ். ஆகவே எந்தக் காலத்திலும் வாழ்ந்துகொண்டிருக்கின்றவன் என்பதோடு பல நூற்றாண்டு ஞாபகங்களைத் தன்னோடு காவிக்கொண்டிருக்கின்றேன் என்று கூறுவதோடு மட்டுமின்றி,  தனது பாத்திரங்கள் போல தன்னையே ஒரு மீபுனைவாகவும் ரமேஷ் அவ்வப்போதுவெளிப்படுத்தியபடியும் இருப்பவர். 


ரமேஷ் பிரேதனின் "நல்ல பாம்பு: நீல அணங்கின் கதை", "ஐந்தவித்தான்" போன்ற நாவல்களின் தொடர்ச்சியில் 'ஆண் எழுத்து - பெண் எழுத்து - ஆபெண் எழுத்து"ம் இன்னொரு முக்கியமான படைப்பே! நம் சூழலில் யதார்த்தவாதப் பாம்பு  மொழியை அளவுக்கதிகமாக கட்டித் தழுவி நம் மூச்சைத் திணறவைக்கும்போதெல்லாம், ரமேஷ் பிரேதன் போன்றவர்களின் இவ்வாறான எழுத்துக்கள்  நமக்குப் புதிய திசையைக் காட்டி இதமூட்டுகின்றன.

............................

நட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்பிரமணியன்

Thursday, February 25, 2021

இந்த நாவல் தகவல் தொழில்நுட்ப (IT) வேலையின் பின்புலத்தில் நிகழ்கிறது. இது கார்த்திக்கின் முதல்நாவல் என்றாலும் அவருக்குப் புனைவுக்குரிய அலுப்படைய வைக்காத, ஒரு நிதானமான மொழி கைவந்திருக்கின்றது. ஜடியில்தான் இத்தனை உளைச்சல்களும், பாதுகாப்பின்மைகளும், மற்றவரை இழுத்துவிழுத்தும் காழ்ப்புக்களும் இருக்கின்றதா என்றால் நிச்சயமாக இல்லை. ஆனால் மற்ற எந்தத் தொழில்கள் எல்லாவற்றையும் விட தகவல் தொழில்நுட்பம் சடுதியாக எமக்குள் நுழைந்து பலவிதமான திறப்புக்களை அவிழ்த்துவிட அதை எப்படி எதிர்நோக்குவது என்பதுதான் சிக்கலாயிருந்திருக்கின்றது.

எந்த ஒரு விடயமும் புதிதாக நுழையும்போது இப்படி பெரும் எழுச்சியையும், வீழ்ச்சியையும் சந்தித்து பிறகு சுதாகரித்துக்கொண்டு தன்னைக் காலத்தில் நிறுத்திக்கொள்ளும். மற்றத் தொழில்களில் இருப்பவர்க்கும் இப்படி மன அழுத்தங்கள், பணம் சம்பாதிக்கும் பேராசை போன்ற எல்லாமே இருக்கின்றன. அங்கே அது நிதானமாக கட்டம் கட்டமாக நிகழ்ந்திருக்கின்றது என்பதுதான் ஒரு சிறு வித்தியாசம். அதுபோலவே இன்றைய சமூக ஊடக வலைத்தளங்களில் எல்லாவற்றையும் பகிர்வதுபோல அப்போது இருக்கவில்லை. ஆகவே இப்போது நடப்பவை எல்லாம் நமக்கு உடனே உடனே தெரிந்துவிட இன்னும் அச்சந்தருவதாக நாளாந்த வாழ்வில் இவை சார்ந்த விடயங்கள் இருக்கின்றன.
இந்த நாவலில் வரும் நித்திலன் - மீரா உறவு நம் காலத்து உறவுச்சிக்கல்களுக்குச் சரியான உதாரணம். அத்துடன் மீராவின் பாத்திரமும் மிகக் கச்சிதமாக இங்கே விபரிக்கப்பட்டிருக்கின்றது. இன்றைய காலம் பெண்களுக்கு திறந்துவைத்திருக்கும் வெளிகளை, மரபுகள் இழைய இழைய வளர்க்கவைக்கப்படுகின்ற ஆண்களால் எளிதாகப் புரிந்துகொள்ளமுடியாது. நேசம் இருந்தாலும் பெண் மீது அவனுக்குள் ஊட்டிவளர்க்கப்பட்ட சந்தேகம் - முக்கியமாய் ஜடி பின்புலம் சார்ந்து - பெரும் பேயாக அவள் நடத்தைகள் ஒவ்வொன்றின் மீது படர்கின்றது. ஆனால் அது ஆண்கள் வளர்க்கும் மாயையே தவிர, பெண் எப்போதும் தனக்குப் பிடித்த ஒரு ஆணுக்கு எல்லாவற்றையும் வழங்கத் தயாராகவே இருக்கின்றாள். நேசம் வற்றிப்போகும் வரையாவது அதை அனுபவிக்க எந்த ஆணும் தயாராக இல்லை என்பதுதான் நம் காலத்தைய சோகம். அவன் அந்த அருமையான நாட்களையும் இல்லாத எதிர்காலத்துக்காய் வீணாக்கி விட்டு, பிறகு காலங்கடந்து பெண்ணுக்காய் ஏங்கிக்கொண்டிருக்கின்றான். இந்த நாவல் முடிந்தாலும் இதன் இன்னொரு பகுதியாக நித்திலன்/மீரா/வேணு/அர்ச்சனா/சத்தியமூர்த்தி/சாஜூ போன்றவர்களுக்கு பிறகு என்ன நடந்திருக்குமென கார்த்திக் எழுதினால் சுவாரசியமாக இருக்கும். இந்த நாவலை வாசித்தபோது, ஏழெட்டு வருடங்களுக்கு முன் வந்த விநாயகமுருகனின் 'ராஜீவ்காந்தி சாலை' ஞாபகம் வந்தது. அதே பின்னணியில், ஏன் கிட்டத்தட்ட பல சம்பவங்கள் அந்த நாவலை நினைவூட்டக்கூடியதாகவே இருக்கின்றது. ஆனால் அதில் எல்லாவற்றையும் சொல்லவேண்டும் என்ற பரபரப்பு இருந்தது போலில்லாமல், இதில் ஒரு நிதானமான கதைசொல்லல் சாத்தியமாகியிருக்கின்றது. அதுவே இதை வாசிக்கச் சுவாரசியமாக்கின்றது.
...............................

(Oct 23, 2020)

மெக்ஸிக்கோ - சுகிர்தா

Wednesday, February 17, 2021

 GV Prakash இசையில் சைந்தவி பாடும் பாடல் ஒன்று. " நிழல் தேடும் ஆண்மையும், நிஜம் தேடும் பெண்மையும் ஒருபோர்வையில் வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்தமா?" ஏனோ இந்தப்பாடல் வரிகள் தான் எனக்கு நினைவில் வருகின்றன.

"நீ இந்தக் காலையில் படகில் போகும்போது உன் நாட்டிற்குப் போகும் கனவைப் பற்றிச் சொன்னாய். இன்னமும் கடந்தகாலத்தில் நீ வாழ்ந்துகொண்டிருப்பதால், உனக்கு எதிர்காலமும் ஒரு கனவாய் இருக்கிறது. எனக்கு அப்படியில்லை. இந்த அதிகாலை, இந்தச் சூரியன், அரிதாய் வாய்த்த படகுப் பயணமென அதில் மட்டுமே திளைத்திருந்தேன். எனக்கு இந்தக் கணமே முக்கியம். எதிர்காலத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தால் இப்படி ராகுலோடும், உன்னோடும் சுற்றித் திரியவே முடிந்திருக்காது. அடுத்தகணத்தில் என்ன நிகழுமெனத் தெரியாதபோது எதிர்காலத்தைப் பற்றி எப்படி தீர்மானிக்க முடியும் எனச் சொல்லியபடி, காற்றுக் கலைத்த கேசத்தை ஒரு பக்கமாய் ஒதுக்கினாள்." காதலியின் பிரிவிலிருந்து தன்னை மீட்டெடுக்கும் முயற்சியில் தன்னைத் தனிமைப்படுத்துபவனுக்கு அவளின் நட்பு எதிர்பாராமல் கிடைக்கிறது. அவள் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவள். மோதலில் தொடங்கிய அவர்களின் நட்பு, அது வளர்ந்த விதமும், அந்த அவளினூடான வாழ்வின் தரிசனமும், வாழ்ந்தால் அவளைப்போல ரசனையானவளாக, தெளிந்த மனநிலையுடையவளாக வாழவேண்டுமென்ற அவாவைத் தூண்டும் விதமான வர்ணிப்புகள்! அவளை எந்தவிதத்திலுமேனும் தாழ்த்திவிடாது வார்த்தைகளால் வர்ணித்த விதங்கள். ஆசிரியரின் கெட்டித்தனம் என்னவென்றால், அவளை ஒரு ஸ்பானியப் பெண்ணாகத் தேர்ந்தெடுத்ததுவே! ஏனென்றால் எம் பெண்களிடமில்லாத வாழ்வு தொடர்பான மாற்றுப் பார்வையை, தரிசனத்தை முன்வைக்க அந்த அவளின் வருகை அவசியமாக இருக்கிறது. கடைசிவரை அவள் என்னவானாள் என்று அறிவதற்கிடையில், அவன் அவளோடான அந்த அற்புத வாழ்வை வாழ்ந்து முடித்துவிட்டு கடைசியில் மனநல மருத்துவரின் வாயிலிருந்து அப்படியான ஒருத்தி அவன் வாழ்வில் வரவேயில்லையென்று சொல்லவைத்து நியாயம் செய்துவிட்டுத் தப்பித்துவிடுகிறார் ஆசிரியர். வாழ்த்துகள் இளங்கோ. உங்கள் எழுத்துகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசித்துவருகிறேன். நீண்ட காத்திருப்பின் பின் உங்கள் புத்தகம் கைவசம் கிடைத்தது மகிழ்ச்சி. உங்களைப் போல விமர்சனமெல்லாம் எழுதமுடியாது. ஆனாலும் ஒரு வாசகியாக நல்லதொரு வாசிப்பு அனுபவத்தைப் பெற்றுக்கொண்டேன் என்பதில் ஐயமில்லை. "Ich Erzähler" என்று சொல்லப்படும் வகையில் எழுத்தாளர் கதையை நகர்த்தும் விதமும், சொல்லாடல்களும் மீண்டும் ஒருமுறை வாசிக்கத் தூண்டுபவையாக இருக்கின்றன!

காதல் ஓர் அழகிய உரையாடல்

Friday, February 05, 2021

'ஹரம்' திரைப்படத்தை முன்வைத்து


வாழ்க்கை என்பது ஒருபோதும் ஒழுங்குகளிற்குள்ளும், நமது கட்டுப்பாட்டிற்குள்ளும் நகர்ந்துகொண்டிருப்பதில்லை. அவ்வாறே நிகழும் நிகழ்வுகளுக்கும் அநேக பொழுதுகளில் ஒன்றுக்கொன்று தொடர்புகள் இருப்பதில்லை. இவ்வாறு காட்சிகளை முன்னும் பின்னும் நகர்த்தியபடியும், எங்கிருந்தும் எப்படியும் எதையும் தொடங்கலாம் என்கின்றமாதிரி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் ஹரம்.


எல்லாக் காட்சிகளுக்கும் ஒரு தெளிவான விளக்கத்தையும், நேர்கோட்டுக் கதை சொல்லலையும் மட்டும் விரும்புகின்ற பார்வையாளர்களை இது வெளியில் தள்ளிவிடவே செய்யும். ஆனால் நமது நாளாந்த வாழ்வு என்பது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத புதிது புதிதாய் முளைக்கும் தருணங்களினூடாக பொங்கிப் பிரவாகித்து நகர்ந்துகொள்வதென்பதை உணர்ந்தவர்களுக்கு இது நெருக்கமான ஒரு படமாக ஆகக்கூடும்.


பெங்களூரில் உள்ள பெருநிறுவனமொன்றில் பாலுவும் இஷாவும் வேலை செய்கின்றனர். இஷாவிற்கு ஏற்கனவே ஒரு காதல் இருந்து அது தோல்வியில் முடிவடைந்து, அதன் துயரிலிருந்து வெளிவர முடியாது தவிர்க்கின்றார். நினைவுகளின் சுமை தாங்காமல், கையை அறுத்து தற்கொலையின் எல்லைவரை செல்கின்றார். அவரை மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு மீட்டுக்கொண்டு வருகின்றார் பாலு. இருவருக்குமிடையில் மார்க்வெஸின் 'கொலராக் காலத்தில் காதலிலிருந்து', ஓ.விஜயனின் நாவல்களை வரை பேசக்கூடிய ஒத்த அலைவரிசை இருக்கிறது. 



பாலு கல்லூரிக்காலத்தில் புரட்சி மீது நம்பிக்கையுடையவராக இருக்கின்றார். சேயினுடைய 'புரட்சி என்பது ஆப்பிள் அல்ல, தானாய்க் கனிந்து விழுவதற்கு, நாம்தான் அடித்து விழுத்தவேண்டும்' என்பது பாலுவிற்குப் பிடித்த புரட்சிகர வார்த்தைகள். ஆனால் அப்படி இருந்தவரை வாழ்க்கை ஒரு பல்தேசிய நிறுவனத்திற்குக் கொண்டுவந்து சேர்த்துவிடுகின்றது. அவர் எப்படி இந்த இடத்திற்கு வந்துசேர்கின்றார் என்பது படத்தில் காட்டப்படுவதில்லை. ஆனால் இளமைக்காலத்தில் இப்படி புரட்சி பற்றி பெரும் நம்பிக்கையோடு இருந்தவர்கள் பலர் திசைமாறிப் போன கதைகள் நம்மிடம் பலநூற்றுக்கணக்கில் இருக்கின்றதுதானே.


ஒத்தவரிசையில் இருப்பதாய் நம்பும் பாலுவும் இஷாவும் எளியமுறையில் திருமணஞ்செய்து கொச்சினுக்குச் சென்று வாழத் தொடங்குகின்றார்கள். அவர்கள் நினைத்தமாதிரி சேர்த்து வாழ்தல் என்பது எளிதாய் இருக்கவில்லை. மெல்ல மெல்லதாய் முரண்கள் அவர்களுக்கிடையில் வரத்தொடங்குகின்றது. ஒருமுறை இஷாவினது வேலையிட விருந்திற்குச் செல்லும்போது, இஷாவை உடல்ரீதியாய் மிகமோசமாய் விபரிக்கும், இஷா வேலை பார்க்கும் நிறுவன அதிபரோடு பாலு சண்டை பிடிக்கின்றார். அந்த விருந்து அத்தோடு குழம்புகின்றது. பாலுதான் இதைக் குழப்பினவன் என்று இஷா குற்றஞ்சாட்டுகின்றார். இனி தன் நிறுவன அதிபரை எந்த முகத்தோடு சந்திப்பது, தான் தன் வேலையை இராஜினாமாச் செய்யப்போகின்றேன் என்கிறார் இஷா.


பாலுவோ, இப்படி பெண்களைப் பாலியல் பண்டங்களாக ஒருவர் பேசுவதைச் சகித்துக்கொள்ளச் சொல்கின்றாயா எனக் கேட்கின்றார். பல்தேசிய நிறுவனங்களில் இவ்வாறு பேசுவது இயல்பு, நாம் தான் சமாளித்துக்கொண்டு போகவேண்டும் என்கின்றார் இஷா. தொழிலாளர்க்கு உற்பத்தியில் பெரும் பங்கிருக்கின்றது, அவர்களைக் கீழ்த்தரமாக நடத்தமுடியாது என்று பாலு மறுத்துக்கூறும்போது, இப்படி கம்யூனிசம் பேசும் நீயேன் பல்தேசிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தாய் எனக் கேட்கின்றார். இந்த விவாதம் இப்படியே நீண்டு பாலு அதிகம் கதைத்ததற்காய் மன்னிப்புக் கேட்கின்றபோதும், இஷா இறுதியில் வீட்டை விட்டு வெளியேறுகின்றார்.



ஷா முன்பு எப்படி தன் பழைய காதலை மறக்கமுடியாது தவிர்த்தாரோ, அவ்வாறே இப்போது பாலுவினால் இஷாவின் பிரிவைத் தாங்க முடியாதிருக்கின்றது. தன் துயரைத் தவிர்க்க நிறையக் குடிக்க ஆரம்பிக்கின்றார், தனித்தும் போகின்றார். இதன் தொடர்ச்சியில், இஷா irreconcilable differences என்பதன் அடிப்படையில் விவாகரத்துக்கோரி பாலுவிற்கு விண்ணப்பம் அனுப்புகின்றார். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் இணைவோம் என்றிருந்த பாலுவிற்கு இது கோபத்தை மூட்ட, இஷாவின் அலுவலகம் சென்று மூர்க்கமாய்ப் பேசுகின்றார்.


இவர்களின் இருவரின் வழக்கை விசாரிக்கும் வழக்கறிஞர், இருவரிடமிருந்தும்- முக்கியமாய்- இஷாவிடமிருந்து எது முக்கிய காரணம் இந்த விவாகரத்துக் கோரிக்கையிற்கு என்பதை அவரால் அறியமுடியாதிருக்கின்றது. இஷா தனக்கு விவாகரத்து வேண்டும் என்று அடம்பிடிக்கின்றார். இறுதியில் வழக்கறிஞர் உங்கள் இருவரோடும் தனித்தனியாகக் கதைத்துப் பார்த்தன்படி, நீங்கள் இருவருமே ஒருவரையொருவர் வெறுக்கவில்லை என்பது தெரிகின்றது என்கின்றார். 'சிலவேளைகளில் எல்லாவற்றுக்கும் ஒரு தெளிவான காரணம் இருப்பதில்லை, என்னால் இந்த உறவில் இருக்கமுடியாது' எனச் சொல்கிறார் இஷா.


இதற்கிடையில் இன்னொருகதை சமாந்தரமாய்ப் போகின்றது. பெண் மீதான வன்முறை எப்படி பொதுவெளியில் சாதாரணமாய் நிகழ்கின்றது என்பதற்கான ஒரு சம்பவம் நிகழ்கின்றது. இதுவும் பாலுவின் வாழ்வில் ஒருவகையில் இடைவெட்டுகின்றது. கொச்சின் வாழ்க்கை துயரத்தைத் தருகின்றது என்பதால், வேலையையும், வீட்டையும் விட்டு பாலு வெளியேற விரும்புகின்றார். முதலில் விவாகரத்திற்கு கையெழுதிட மறுக்கும் பாலு பின்னர் கையெழுத்திடவும் விழைகிறார்.


பாலு, ஒரு பெண் அப்பாவியாக இறந்த சம்பவத்திற்கான நீதியைத் தேடிப் போகின்றார். அதற்கு அவர் கல்லூரிக்காலத்தில் நம்பிக்கை வைத்த புரட்சி ஒருவகையில் உதவுகின்றது. கொச்சினை விட்டு முற்றாக வெளியேறும் பாலுவின் முடிவை ரேடியோவில் வேலை செய்யும் பெண், இங்கே செய்வதற்கு இன்னும் நிறைய வேலை இருக்கிறதென இன்னொரு திசையைக் காட்டி, கைவிடச் சொல்கின்றாள்.


உறவின் ஒருவருடஇடைவெளி, இஷாவை மீண்டும் பாலுவிடம் சேர்வதற்கான மனோநிலையை உண்டாக்கின்றது. பாலு இப்போது விவாகரத்தில் கையெழுத்திட்டு, 'நீ இனி சுதந்திரமானவள்' என இஷாவிடம் அழைத்தும் சொல்கின்றார். இஷாவோ உன்னோடு கதைக்கவேண்டும், நாம் அந்தப் பழைய பாலுவாகவும், இஷாவாகவும் பேசவேண்டுமெனக் கேட்கின்றார். 


உண்மையில் இஷா இப்போது மீண்டும் பாலுவோடு சேர்ந்து வாழ்வதற்கான மனோநிலையோடே வருகின்றார். பாலுவிற்கும் அது தெரியும். ஆனால் பாலு தனக்கான வாழ்வின் வேறொரு திசையைத் தேர்ந்தெடுத்துவிட்டார். 'நீ என்னை வெறுக்கலாம், காதலை வெறுக்காதே, காதல் ஒரு அழகிய உரையாடல்' என்று அணைத்து இஷாவை வழியனுப்புகின்றார். இஷா போகும்போது நீ ஏதோ பேச விரும்பினாய் அல்லவா? எனக் கேட்க, 'இல்லை இனிப் பேசுவதற்கு எதுவுமில்லை'யென இஷா என்றென்றைக்குமாய் பாலுவை விட்டு பிரிந்து போகின்றார்.



ந்தப் படத்தில் கதை ஒரு தொடர்ச்சியாகச் சொல்லப்படுவதில்லை. சிறு சிறு துண்டுகளாகவே மாறி மாறி சித்தரிக்கப்படுகின்றன. அதிலிருந்து தனக்கான திரைக்கதையை உருவாக்குவது பார்வையாளருக்கு சவால் தரும் ஒரு விடயம்.  அதுபோலவே, பல சம்பவங்களில் எல்லாவற்றையும் அலசி ஆராயும் நிலையும் இருப்பதில்லை. நமக்குத் தோன்றும்/தெரியும் காரணங்களோடு பொருத்திப்பார்க்கவேண்டியதுதான். ஓரிடத்தில் வழக்கறிஞர் இஷாவிடம், ஏன் நீங்கள் மீண்டும் சேரக்கூடாது என்கின்றபோது, 'நான் என்னை நானே நேசிக்கத் தொடங்கியிருக்கின்றேன். அது எனக்குப் பிடித்திருக்கின்றது' என்பார். 


இதை பார்வைளார்களாகிய எம்மால் உடனே விளங்கிக்கொள்ளக் கடினமாகவே இருக்கும். தன்னைத் தானே நேசிக்கும் ஒருவருக்கு, அவருக்கான சுதந்திரம் மிகப்பெரிதாக இருக்கும். அதை எந்த உறவாயினும் ஏதோ ஒருவகையில் தடைசெய்யவே பார்க்கும் என்பதாக நாம் விளங்கிக்கொள்ளலாம். அந்த 'தன்னைத்தானே நேசிக்கும் நிலை' பிறகு பிறரையும் நேசிக்கும் நிலைநோக்கி நகரும். ஆகவேதான் இஷாவினால் பாலுவை நீண்ட இடைவெளியின் பின் புரிந்துகொள்ள முடிகின்றது. தமது கடந்தகால முரண்களைத்தாண்டி சேர்ந்து வாழும் மனோநிலைக்கு மீண்டும் வரவும் செய்கின்றார். இவ்வாறு பல சம்பவங்கள் நாம் விரித்துப் பார்க்கக்கூடிய பல இடங்கள் இப்படத்தில் இருக்கின்றது.


இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த விடயம் என்னவென்றால், அநேகமாய் திருமணத்தின் முன் ஆண்களின் காதல்களே திரைப்படங்களில் காட்டப்பட்டிருக்கும் நிலையில், இதில் ஒரு பெண்ணின் காதல் காட்டப்படுகின்றது. தன் காதலுக்காய் உயிரையே கொடுக்கத் துணிகின்ற பெண்ணை நேசிக்க இன்னொரு ஆண் இருப்பதையும், அந்த  ஆணுக்கு அவளின் கடந்தகாலக்காதல் எவ்விதத் தொந்தரவு செய்வதுமில்லையென இயல்பாய்க் காட்டப்பட்டிருக்கின்றது. மேலும், இவ்வாறு காதலில் தோற்ற ஒரு பெண், திருமணம் என வருகின்றபோது, எல்லாவற்றையும் சகித்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை என்பதையும் தனக்கான விவாகரத்தை அவள் கோரும்போதும் தெரிகின்றது. 


அதேசமயம், ஒரு பெண்ணோடு அளவிறந்த நேசத்தோடு இருக்கும் ஒரு ஆண், அவளின் முடிவுகளால் தன் சுயத்தையே இழந்து, அவளின் மீள்வரவை எதிர்ப்பார்த்து காத்திருந்தபோதும், அவள் மீண்டும் திரும்பிச் சேரும் விருப்பத்தைக் காட்டும்போது, அதை மென்மையாக மறுத்து, வாழ்க்கை தொடர்ந்து நகரவேண்டியது, நகரும். உனக்கான காதலை நீயடைவாய் என வாழ்த்துவதும், தனக்கான செய்கைகளுக்காய் மன்னிப்புக் கேட்பதும் அழகான காட்சிகள்.


இப்படத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டதற்காய் நிகழும் இன்னொரு 'பழிவாங்கல்' கொலையை எந்தப் பொழுதிலும் ஆதரிக்கமுடியாது அந்த காட்சியிலும் ஒரு மாற்றை இயக்குநர் யோசித்திருப்பாராயின் இன்னும் ஒரு அழகிய படமாய் விரிந்திருக்கும்.


நிகழும் ஒவ்வொன்றும் நாம் காரணங்களைத் தேட விழையும்போது சிலவேளை கடந்தகாலத்தில் உறைந்துபோய்விடவும் கூடும். பலவீனங்களுள்ள மனிதர்களான நாம் தவறுகளையும் செய்யாது வாழ்ந்து செல்வதும் கஷ்டமானதே. ஆனால் வாழும் காலத்தில் நம் பலவீனங்களை உணர்ந்து, இயன்றவரை மனிதர்களை வெறுக்காது ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயற்சிக்கலாம். அந்த ஒரு புள்ளியை இத்திரைப்படம் ஏதோ ஒருவகையில் நமக்கு உணர்த்திச் செல்கின்றது.

------------------------------

(2016)

எனக்குப் பிடித்த சில புத்தகங்கள் - 2020

Saturday, January 23, 2021

(1) அற்றவைகளால் நிரம்பியவள் - பிரியா விஜயராகவன் (நாவல்)


பிரியா இதை 2008/2009 காலங்களில் எழுதத் தொடங்கியபோது, யார் இவர் இவ்வளவு சுவாரசியமாக எழுதுகின்றாரே என ஒவ்வொரு அத்தியாயங்களையும் 'காட்சி' வலைப்பதிவில் வாசித்திருக்கின்றேன். அங்கே இந்த நாவல் இடைநடுவில் நின்றுபோனாலும், யார் இந்த யமுனா என்று (அப்போது யமுனா ராகவன் என்று புனைபெயரில் எழுதியிருந்தார்; அது அவரின் அம்மாவினதும் அப்பாவினதும் பெயர்களை இணைத்து வந்த புனைபெயர்) தேடியிருக்கின்றேன். அப்படி அவர் யாரெனத்தேடி அக்காலத்தில் அவர் இங்கிலாந்தில் இருக்கின்றார் என்பதையும் நானாகவே தேடிக் கண்டுபிடித்தேன். அது ஒரு வாசகர் தனக்குப் பிடித்த எழுத்தாளரைத் தேடுகின்ற சுவாரசியம் என்க. பிரியாவுக்கு இப்படி ஒரு வாசகர் அவரின் எழுத்துக்களில் இந்தளவுக்கு ஈர்ப்போடு இருந்தார் என்பதே தெரிந்திருக்காது. இதேயேன் இங்கே விரித்துச் சொல்கின்றேன் என்றால் பிரியாவின் எழுத்து அன்றைய காலத்தில்  என்னை அந்தளவு வியப்பிற்குள் ஆழ்த்தியது என்பதைச் சொல்வதற்காகும்.


இந்த நாவல் இதுவரை தமிழ்ச்சூழலில் பேசப்படாத சேய்ஷல்ஸைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்டிருக்கின்றது. புதிய சூழல், புதிய கலாசாரம் என்ற திகைப்பை அதன் பதற்றங்கள் குறையாது பிரியா எழுதிச் சொல்கின்றார் என்றால் இன்னொருபக்கம் அங்கே ஆங்கிலேயர்களில் கொண்டுவரப்பட்ட இந்தியர்கள்(தமிழர்கள்) இன்னமும் சாதியிறுக்கத்தை விடாது வாழும் திகைப்பையும் சொல்கின்றார். தன்னை ஒரு தலித்தாக முன்வைக்கும் இந்த நாவலின் கதைசொல்லியான அஞ்சனா, தான் தமிழகத்தில் சந்தித்த சாதியக்கொடுமைகளையும் அசைபோடுகின்றார். இவ்வாறாக நாவல் அற்புதமாக பல்வேறுகிளைகளில் சடைத்துச் செழிக்கிறது. 


தமிழில் இன்றைக்கு ஒரு குறிப்பிட்ட சூழலுக்குள் ஒரேமாதிரியாகப்  பெருமளவு புனைவுகள் எழுதப்பட்டிருக்கும் நிலைமையில் பிரியாவின் இந்தப் புனைவு விதிவிலக்கானது.  இன்று பொருளாதார நிமித்தம் புலம்பெயர்ந்த பெருமளவான தமிழகத் தமிழர்கள் நாசூக்காக சாதி/பின்னபிற ஒடுக்குமுறைகளை மறைத்து அகமனத்தேடல்களை மட்டும் முன்வைத்து எழுதுகின்ற எழுத்துக்களை வாசித்துச் சலிக்கும் வேளையில் பிரியாவின் இந்த நாவல் கவனத்தில் கொள்ளவேண்டியது மட்டுமல்ல தமிழக புலம்பெயர்ந்ந்த தமிழர்க்கு முன்னோடியாக இருக்கவும் கூடியது. புலம்பெயர்ந்ததால் சந்திக்கும் புதிய கலாசாரம் பெரும் அதிர்வை மட்டுமின்றி அஞ்சனா என்ற கதைசொல்லிக்கு தன்னை இன்னும் ஆழமாக அறிய அவரின் அகமனதுப் பயணத்தையும்  புதிதாகத் தொடக்கிவைக்கின்றது. மேலும் பிரியா, அஞ்சனாவின் பாத்திரத்தினூடாக புதிய பண்பாட்டுச் சூழலை எவ்வித மேனிலையாக்கமோ கீழிறக்கமோ செய்யாது, அதையதை அதன் இயல்புகளோடு முன்வைப்பதும் கவனத்தில் கொள்ளவேண்டியது. 


பிரியாவின் 'அற்றவைகளால் நிரம்பியவளோடு' நான் வாசித்தவற்றில் எனக்குப் பிடித்த இன்னொரு நாவலாக ம.நவீனின் பேய்ச்சியையும் சேர்த்துக்கொள்வேன். அலுப்பே வராது மூன்று தலைமுறைக் கதைகளை நன்றாக  நவீன் இதில் எழுதிச் செல்கின்றார். இந்நாவலில் வலிந்து திணிக்கப்பட்டது போல என் வாசிப்பில் தோன்றும் பெரியாரிய/திராவிட எதிர்ப்பையும், மூன்றாம் தலைமுறையின் கதையையும்  சொல்லவேண்டுமென்ற எத்தனிப்பில் சேர்த்த இறுதிப்பகுதியையும் தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். மூன்றாம் தலைமுறைக் கதையைச் சொல்லும்போது, அதற்கென ஒரு தனி மொழிநடையை நவீன் தேர்ந்தெடுக்கையில், அதுவரை வந்த ஒரு செழுமையான தெள்ளிய மொழிநடை சற்றுத் தடைப்பட்டிருக்கின்றது. அந்தக் கடைசிப்பகுதியைச் சொல்லாமல் விட்டிருந்தால் கூட இந்நாவல் கவனத்திற்குரிய நாவலாகவே இருந்திருக்கும்


(2) பனைமரச் சாலை - காட்சன் சாமுவேல் (அபுனைவு)


இதையும் தமிழில் வித்தியாசமான சூழலில் எழுதப்பட்டதற்காக முக்கியமெனக் கொள்வேன். இது பனைமரங்களைப் பல்வேறு பகுதிகளில் தேடி மும்பாயிலிருந்து கன்னியாகுமரி வரை ஃபாதர் காட்சன் சாமுவேல் மோட்டார்சைக்கிளில் பயணம் செய்வதைப் பற்றிய அனுபவங்களின் தொகுப்பாகும். ஒருவகைய்ல் அவர் பனைமரங்களின் வரலாற்றை மட்டுமின்றி இன்று கிட்டத்தட்ட வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கின்ற பனையின் பயன்களை மீண்டும் மீள் உருவாக்கம் செய்ய விரும்பவும் செய்கின்றார். முக்கியமாய் இந்த நூலை, பனைமரங்களால் நிரம்பியிருக்கும் இலங்கைச் சேர்ந்த நம்மைப்  போன்றவர்கள் வாசிக்கவேண்டும் எனப் பரிந்துரைப்பேன். 


(3) நீண்ட காத்திருப்பு - அஜித் போயகொட (ஆங்கிலத்தில் சுனிலா கலப்பதி, தமிழில் - தேவா)


இலங்கை கடற்படையைச் சேர்ந்த அஜித் போயகொட, அவரின் கப்பல் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்படுகின்றபோது சிறைக்கைதியாகின்றார். புலிகளோடாடு இருந்த 9 வருட அனுபவங்களை எந்தக் காய்த்தல் உவத்தலுமின்றி இயன்றவரை உள்ளபடி போயகொட எழுதியிருக்கின்றார். இதனூடு அவர்  நாமறியாத புலிகளின் இன்னொருபக்கத்தைச் சொல்வதுடன், உள்ளே நடந்த பல சுவாரசியமான சம்பவங்களைச் சொல்கின்றார். கைதிகள் பரிமாற்றம் நிகழ்கின்றது என்பதை நாம் பத்திரிகைச் செய்திகளில் பார்க்கின்றோம். ஆனால் அது எவ்வாறு நடக்கின்றது என்பதை சிறைக்கைதியாக இருந்த ஒருவர் அவரது நிலையில் நின்று சொல்வது வித்தியாசமானது புலிகள் - இலங்கை அரசு கைதிகள் பரிமாற்றத்தின்போது விடுவிக்கப்பட்ட பொயகோடவின் கதையை சுனிலா கலப்பதி கேட்டு ஆங்கிலத்தில் முதலில் எழுத, இதை பின்னர் தேவா அருமையாகத் தமிழில் மொழி பெயர்த்திருக்கின்றார்.


(4) நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள்  - சி.மோகன் (கலை/ஓவியம்)


தமிழில் சிறந்த ஓவியர்கள் இருந்தாலும் ஓவியங்களைப் பற்றிய புரிந்துணர்வு குறைவு. இதனால் புதிதாய் ஓவியங்களை வரைய வருகின்றவர்களும் ஓவியம் என்பது வரைவது மட்டுமே என்ற புரிதலோடு இருக்கின்றார்கள். மேற்கத்தையத்தில் எப்படி ஓவியக்கலையிலிருந்து புதிய இஸங்கள் தோன்றியது என்பது மட்டுமின்றி சக ஓவியர்கள்/எழுத்தாளர்களுக்கிடையில் ஊடாடங்கள் எப்படி முக்கியமானது என்பதை அறிந்துகொள்வது குறைவு. ஸெஸானுக்கு எமிலி ஸோலாவுடன், டாலுக்கு புனுவலுடன், வான்கோவுக்கு காகினோடு எவ்வாறான நட்பு இருந்தது, எதையெல்லாம் விவாதித்தார்கள், எவற்றையெல்லாம் உருவாக்கினார்கள் என்பது ஓவியங்களைத் தமது துறையாகக் கொள்பவர்கள் அறிவது மிக முக்கியமானது. 


அதற்கான ஆரம்ப புள்ளிகளை சி.மோகன் மேற்கில் உதிர்த்த ஓவியர்களின் சில முக்கிய ஓவியங்களை முன்வைத்து எல்லோருக்கும் விளங்கும்  மொழியில் இந்நூலில் அதன் நுட்பங்களை விவரிக்கின்றார். அதனூடு அந்தந்தக் காலங்களில் தோன்றிய புதிய ஓவிய வகைமைகளையும்/ துறைகளையும் அறிமுகப்படுத்துகின்றார். ஓவியங்கள் வரைபவர்களுக்கு மட்டுமின்றி ஓவியங்களை இரசிப்பதில் ஆர்வமுள்ளவர்களும் வாசித்துப் பார்க்கவேண்டும்.


(5) மோகத்திரை - உமா வரதராஜன் (திரைப்படங்கள்)


உமா தனித்து திரைப்படங்களைப் பற்றி அல்லாது, சில ஆளுமைகளைப் பற்றி, அவர்களைச் சந்தித்த நினைவுகள், அவரது இளமைக்காலத்திலிருந்து இப்போதுவரை தியேட்டரில் படங்கள் பார்க்கின்ற அனுபவங்களில் நிகழ்ந்த மாற்றமென பல்வேறுபட்ட தகவல்களின் தொகுப்பாக இது இருப்பதே முக்கியமானது. தமிழகச் சூழலில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை,  தமிழ் இலக்கியவாதிகள் - முக்கியமாய் சிற்றிதழ்காரர்கள்- திரைப்படங்களையே கணக்கிலெடுக்காது இருந்திருக்கின்றார்கள். ஆனால் நம் இலங்கைச் சூழலில் அப்படி சினிமாவை விலத்தி ஒவ்வாமையுடன் இருந்த இலக்கியவாதிகள் அரிதென்றே சொல்லவேண்டும். .அ.யேசுராசா, உமா வரதராஜன், ரஞ்சகுமார், அ.இரவி போன்றவர்கள் அதற்கான எனக்குத்தெரிந்த சில உதாரணங்களாய்ச் சொல்லலாம். 


(6) அமரகாவியம் - எஸ்.பார்த்தசாரதி (தமிழில் சரஸ்வதி சுவாமிநாதன்)


விசிறி சாமியார் என அழைக்கப்பட்ட யோகி ராம்சுரத்குமார் எனக்கு என் பதின்மங்களில் நான் வாசித்த பாலகுமாரனால் அறிமுகப்படுத்தப்பட்டவர். அன்று பாலகுமாரன் எழுதிய 'விசிறி சாமியார்', 'குரு', 'ஆசைக்கடல்' போன்றவற்றினூடாக விசிறி சாமியார் எனக்கு நெருக்கமானவர். முதன்முதலாக திருவண்ணாமலைக்குப் போனபோது நான் பார்க்க விரும்பியது யோகி ராம்சுரத்குமாரின் சமாதியைத்தான். ஆனால் அப்போது அது நிகழாது போயிற்று. பின்னர் அண்மையில் ஐந்து நாட்கள் திருவண்ணாமலையில் நின்றபோது யோகி ராம்சுரத்குமாரின் ஆச்சிரமத்துக்குப் போனபோதும் எந்தக் கிளர்ச்சியும் ஏற்படவில்லை. அது ரமணருக்கு நிகழ்ந்ததுபோல, ராம்சுரத்குமாருக்கும் நிறுவனமயப்பட்டதில் நிகழ்ந்த சோகம் என நினைக்கின்றேன்.


இந்த நூல் எனக்கு மிக முக்கியமாக இருந்தது. ஏனெனில் இது யோகி ராம்சுரத்குமார் நிறுவனப்படாத அவரின் தொடக்க காலங்களில் அருகில் இருந்து பார்த்து பார்த்தசாரதி எழுதிய அனுபவங்களின் தொகுப்பாகும். எவ்வளவு எளிமையாகவும், தன்னைத் தேடி வருபவர்களை நாடுகின்ற ஒரு 'நாடோடியாக' புன்னை மரத்தடியில் பகல்வேளையிலும், இரவில் மூடப்பட்ட திருவண்ணாமலைக் கடைகளில் முன்வாசலிலும் உறங்கியெழுந்த ஒரு யோகியைக் காண்கின்றோம். அவர் திருவண்ணாமலைக்கு வரமுன்னர் கிட்டத்தட்ட 18 வருடங்கள் அலைந்து தன் ஞானத்தைத் தேடியது பற்றியும் இதில் துண்டுதுண்டாக கூறப்படுகின்றது. அதேவேளை இதில் பல்வேறுபட்ட முக்கிய நபர்களின் சந்திப்பபுக்கள் அல்ல, சாதாரண மக்களோடு ராம்சுரத்குமார் நடந்தகொண்டு விதங்கள் பற்றி எழுதியிருப்பதுதான் சிலாகித்துப் பேசவேண்டியது. 


தமிழ் அறிஞர் தொ.பொ.மீனாட்சி சுந்தரம், பெரியசாமி தூரன், கி.வா.ஜகன்னாதன் போன்றவர்கள் அவருக்கு ஒருகாலத்தில் நெருக்கமாக இருந்திருக்கின்றார்.  கிட்டத்தட்ட 500 பக்கங்களுள்ள இந்தப் புத்தகம், மதம், நிறுவனப்பட்ட அமைப்புக்களிலிருந்து வெளியேறி ஆன்மீகத்தேடலுள்ளவர்க்கு மிகுந்த ஆர்வங்கொடுக்கக் கூடியது.


(7) மீசை வரைந்த புகைப்படம் - என். ஸ்ரீராம் (சிறுகதை)


ஸ்ரீராமின் கிட்டத்தட்ட அனைத்துச் சிறுகதைத் தொகுப்புகளையும் வாசித்திருக்கின்றேன். ஜே.பி.சாணக்யா, காலபைரவன், என். ஸ்ரீராம், எஸ்.செந்தில்குமார் போன்றோர்  தமிழ்ச்சூழலில் ஒரு புதிய அலையாக  ஒரு காலத்தில் வந்தவர்கள். ஸ்ரீராமின் கதைகளில் அநேகம் கிராமத்தில் நிகழ்பவை. ஆனால் பெரும்பாலான கதைகளில் ஒருவித அமானுஷ்யதன்மை கலந்திருக்கும். 


ஸ்ரீராமின் சில கதைகள் நமது தமிழ்சூழலின் பின்னணியில் வைத்து மாந்தீரிய யதார்த்தில் எழுதப்பட்ட கதைகளென்று சொல்வதற்கு சிறந்த உதாரணங்களாகும். இந்தத் தொகுப்பிலும் 'தேர்ப்பலி', 'நதிப்பிரவாகம்', 'மண் உருவாரங்கள்' என்பவை அத்தகைய அமானுஷ்யதன்மையில் எழுதப்பட்டவையாகும்.


(8) பஷிருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும் - இளங்கோ கிருஷ்ணன் (கவிதை)


கவிதைகள்  நிறைய எழுதிக்கொண்டிருந்த காலத்தில், சில நண்பர்கள் தங்களால் கவிதைகளை வாசிக்கமுடியவில்லை என்பார்கள். எப்படி கவிதைகளை வாசிக்காமல் இருக்கமுடியுமென்று நான் வியப்பதுண்டு. ஆனால் இப்போது ஒருவகையில் கவிதைகளை வாசிப்பதற்கும், உணர்வதற்கும் கூட ஒருவகையான கவிதை 'மனோநிலை' வேண்டுமென விளங்கிகொள்கின்றேன். 


ஏனெனில் அன்று நிறையக் கவிதைகள் எழுதிய நானே,  இன்று மிகச்சில கவிதைத் தொகுப்புக்களையே வாங்குகின்றேன். அவற்றில் சிலதைத்தவிர, மற்ற தொகுப்புக்கள் என்னைப் பெரிதும் ஈர்ப்பதுமில்லை.


இளங்கோ கிருஷ்ணனின் இந்தத் தொகுப்பிலிருக்கும் பல கவிதைகள் எனக்கு நெருக்கமானவை. அதிலிருந்து ஒரு கவிதை..


துப்பாக்கி

.........

எதிர்க்காற்றில்

விரையும் பேருந்தில்

பொங்கும் கண்ணீரைத் துடைக்காமல்

உதடு கடித்து விசும்புகிறான் ஒருவன்

முன் இருக்கை சிறுவன்

விரல் துப்பாக்கியால் ஒவ்வொருவராய்

சுட்டுக் கொண்டேயிருக்கின்றான்


இதில் என்ன சொல்லப்படுகின்றது என்று நம்மால் உணரமுடிந்தால் இது ஒரு நல்ல கவிதை.  அந்த அனுபவம் நமக்குள் நிகழாதுவிடின் சொற்களின் குவியல். அவ்வளவே.

..........................................

(Dec 2020)

இளங்கோவின் ‘மெக்ஸிக்கோ’ நாவல் குறித்து - Shathir Ahamed

Wednesday, December 30, 2020

பிரபஞ்சன் நினைவுப்பரிசு பெற்ற நாவல் (என்று Sabry நாநா கூற கட்டாயம் வாசிக்கிறேன் என்று)வாங்கிவந்தேன். பிரபஞ்சனின் என்ற பெயர் கூறுகையில் ஞாபகம் வருவது “இவ்வளவுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது” என்ற வரிகள் தான். மனதை நெகிழ்சியுற வைக்கும் எழுத்துக்களில் பிரபஞ்சனுடையதும் என் பிரையோரிட்டி வரிசையில் வந்துவிடும். அதே நெகிழ்ச்சியை தரவல்ல ஓர் படைப்பாகத்தான் ‘மெக்ஸிக்கோ’ வும் அமையப்பெற்றிருக்கிறது. Enrique iglesias,Murakami,Bukowski,Zedd,Passenger என என் மனதுடன் ஒன்றிய பலரையும் எழுத்தாளர் கையாண்ட விதம் அபாரம்.

பயணக்குறிப்பாக மட்டும் இருந்துவிடக்கூடாது என்ற வாசகனின் ஏக்கத்தை பூர்த்தியாக்கிவிட்டார் எழுத்தாளர். முக்கியமாக புத்தரைப்பற்றியான வசனக்குறிப்புகள் அன்த்துமே fபெர்ஸ்ட் கிளாஸ்.
//இன்னும் சொல்லப்போனால் புத்தர் தன்னை பின்தொடரவேண்டும் என்று எவரையும் வலியுறுத்தியவருமில்லை.கடவுள் என்ற சொல்லையே எந்தப் பொழுதிலும் பாவிக்க மறுதலித்த அவரை இன்று கடவுளாக்கியதுதான் மனிதர்கள் அவருக்குச் செய்த மிகப்பெரிய அவமானம்// என்றெல்லாம் எழுத ஒருவகைத் துணிச்சல் அவசியமாகிறது.
இடைக்கிடையே பெண்கள், வாழ்க்கை, திருமணம் என்ற தலைப்புகளில் இடம்பெறும் உரையாடல்கள் யதார்த்தத்துடன் ஒன்றித்துப்போகின்றன.விட்டுச்சென்ற பெண்ணின்மீதான மரியாதையைத்தொலைக்க கூடாது என்ற கருத்திலான வசனங்கள் கூட அழகுதான். வாழ்வில் அவர் சந்தித்த சில குடிகாரர்களை பற்றிய குறிப்பு புதிதல்ல,ஆனால் குறிப்பிட்ட முறைதான் புதிது. பிரிவின் வாதையை van Gogh மற்றும் Frida Kahlo உடன் சேர்த்துக்கூறியதும் நல்ல உத்திதான்.
கிளைமாக்ஸ் நன்றாகப் பொருந்திப்போயிருக்கிறது.இந்த நாவலைப்பற்றி சுருக்கமாக கூறுவதாயின்; வேலைசெய்து மூளை களைத்த பின் தேவைப்படும் விடுமுறையில் வாசிக்க ஏற்ற ஒரு மாஸ்டர் பீஸ்.

(Nov 28, 2020)
நன்றி: Shathir Ahamed

இச்சாவும், சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்களும்..

Monday, December 28, 2020

1.

கடந்த சில நாட்களாய் இந்த இரண்டு நாவல்கள் பற்றிய விவாதங்கள் அனல் பறந்துகொண்டிருக்கின்றன. ஒன்று இன்னொன்றின் பாதிப்பில் எழுதப்பட்டது என்று எங்கையோ புகையத் தொடங்கியிருக்கின்றது. இதை எழுதியவர்களுக்குரிய இரண்டு தரப்புக்களும் தமது சட்டங்களுக்குள் நின்று களமாட, இன்னொரு தரப்போ இந்தப் பிரதிகளை வாசிக்காது தமக்கான புதிய புனைவுகளை இந்தப் பிரதிகளை முன்வைத்து புனைந்து கொள்ளவும் தொடங்கிவிட்டனர்.


நமது தமிழ்ச்சூழலில் எழுதப்படுபவற்றை முழுமையாக வாசிக்காது முடிவுகளை எடுப்பதில் வல்லவர்கள் நாம்.  அத்தோடு நான் இந்தத் தரப்புக்களின் வாதங்களுக்குள் போய் ஆராய்ந்து பார்க்கவும் விரும்பவில்லை. இந்த இரண்டு நாவல்களையும் இப்போது வாசித்துவிட்டதால் என் வாசிப்பில் தோன்றிய சிலதைச் சொல்லலாம் என நினைக்கின்றேன்.


இந்த நாவல்களின் சில பகுதிகளில் ஒற்றுமைகள் இருக்கின்றன. அதை மறுக்கத் தேவையில்லை. ஆனால் அது ஒன்றை இன்னொன்று தழுவியதால் வந்ததென எடுத்துக் கொள்ளவும் தேவையில்லை. அது - நமது ஈழப்போராட்ட வரலாறு என எதை எழுதினாலும் ஒத்தபுள்ளிகளில் இசைந்து வரக்கூடிய பகுதிகளாகும். இந்த நாவலில் உறுத்தக் கூடிய ஒற்றுமை, ஒரு போராளிப்பாத்திரத்தின் இரண்டு விதமான வாழ்க்கை முறை சொல்லப்படுகின்ற பகுதிகளாகும். அதாவது போராளி/போர்க்கால வாழ்வு, பின்னர் புலம்பெயர் வாழ்வு. 


போராளியின் வாழ்க்கையெனச் சொல்லப்படும் பகுதிகளில் கூட பெரிதாக ஒற்றுமைகளைக் காணவில்லை. எங்கே ஒற்றுமை துருத்திக் கொண்டிருக்கின்றது என்றால், இந்தப் போராளிப் பாத்திரம், போர் முடிந்தபின் புலம்பெயர்ந்த ஆண் ஒருவரால் இந்தப் பெண் போராளி தடுப்பு முகாமில் இருந்து காப்பாற்றப்பட்டு வெளிநாட்டுக்கு அழைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்படும் பகுதிகளாகும். அதேபோன்று இந்த இரண்டு நாவல்களிலும் ஆலா/சாதனா பாத்திரங்களின் புலம்பெயர் வாழ்வுப்பகுதி விரிவாகச் சித்தரிக்கப்பட்டாலும் இறுதியில் இது உண்மையில் நடக்கவில்லையென சந்தேகத்தன்மையுடன் நாவலில் கட்டியமைக்கப்பட்ட பகுதிகளை உடைத்து விழுத்துகின்ற பகுதிகளிலும் ஒத்தவகையில் இருக்கின்றன.


இதைத் தவிர்த்து இந்த நாவல்கள் இரண்டுமே எழுதப்பட்ட/வடிவமைக்கப்பட்ட அமைப்பு முற்றிலும் வேறுவிதமானவை. ஆங்கிலத்தில் 'நீங்கள் அப்பிள்களையும் தோடம்பழங்களையும் ஒப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். அவ்வாறே இந்த இரண்டு நாவல்களையும் தனித்தனியாக வைத்து பிரதிக்குள் வைத்து அலசிப் பார்க்கவே விரும்புவேனே தவிர ஒன்றை ஒன்றுடன் ஒப்பிட்டுக் கொள்ள என் வாசிப்பின் வழி விரும்பமாட்டேன். இன்னும் தெளிவாகச் சொன்னால் ஷோபாசக்தியினதும், சேனனினதும் முன்னைய நாவல்களோடு அவர்களின் நாவல்களை ஒப்பிட்டுக் கொள்ள விரும்புவேனோ தவிர இந்த இரண்டு நாவல்களையும்  அருகருகில் வைத்து ஒப்பிட்டுப் பார்ப்பதில் எனக்கு ஒப்புதலுமில்லை.


2.


ஷோபாவின் 'இச்சா'வினை வாசித்து அன்று எழுதிய சிறுகுறிப்பில், 'இச்சா' தவிர்க்காது வாசிக்கவேண்டிய நாவல் எனினும், 'இச்சா'வினை ஷோபாவினது முக்கிய நாவல்களில் ஒன்றாக முன்வைக்கமாட்டேன் என்றும் எழுதியிருப்பேன். ஏனெனில் எனக்கு அவர் அதற்கு முன் எழுதிய 'பொக்ஸ்: கதைப்புத்தகம்' , 'இச்சா'வினை விட முக்கியமானதாக இருந்தது. அது என் வாசிப்பு. இன்னொருவர் என் வாசிப்பை மறுத்து 'இச்சா' மிகச்சிறந்த நாவலென தனது வாசிப்பை முன்வைக்கலாம். அவ்வாறுதான் ஒவ்வொரு படைப்பும் தனக்கான இடத்தை காலத்தின் மேல் வைத்து நகர்ந்து கொள்ளும்.


சேனனின் 'சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்களை' வாசிக்கும்போது நான் அவரின் 'லண்டன்காரரை' முன்வைத்தே என் வாசிப்பை முன்வைப்பேன். அந்தவகையில் இந்தப் புதிய நாவல் அதைவிட்டு முன்னகர்ந்திருக்கின்றது எனச் சொல்வேன். லண்டர்காரருக்கு ஒரு புனைவுக்கான அமைதி வந்து சேராததைப் போல, இந்த நாவலிலும் அதே சிக்கல் இருக்கின்றது என்பதையும் சொல்வேன். ஆனால் பன்மைக்குரல்களை ஒலிக்கவைத்ததில், அதிலும் தொடர்ந்து தமிழில் யதார்த்தக் கதைகளை முக்கியமாய் நமது போராட்டப் படைப்புக்களில் அலுக்க வைத்து எழுதிக்கொண்டிருப்போர்க்கு இடையில்- சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள் கவனத்துக்குரியது. அதேசமயம் அந்தப் பன்மைக்குரல்கள் வெறும் வாக்குமூலங்களாகவும், பின்னர் கலைத்துப் போடுகையில் கூட அவை அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தாது, முழுமையடையாது வீணே உதிர்ந்து போவதையும் காண்கின்றோம். 


இந்த நாவலைத் தொடங்கமுன்னர் சேனன் நிறையப் பேர்களுக்கு விரிவாக நன்றி சொல்லி, சில பக்கங்களை அதற்காய் ஒதுக்கி இருப்பார். இதை இவ்வளவு பேர் வாசித்தார்களா, கருத்துக்களைப் பகிர்ந்தார்களா என  வியப்பேற்பட்டாலும், ஆகக்குறைந்தது இந்த நீண்ட பட்டியலில் இருப்பவர்களில் ஒருவராவது இந்த நாவலில் இருக்கும் எழுத்துப்பிழைகளைப் பார்ப்பதற்காய்க் கொஞ்ச நேரம் செலவழித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அந்தளவு எழுத்துப் பிழைகள்.  சாதாரணமாகப் பாவிக்கின்ற உண்மை, இலையான் என்று வருகின்ற இடங்களிலேயே உ'ன்'மை, இ'ளை'யான் என்று  எல்லா இடங்களில் வரும்போது அந்தப் பட்டியலில் இருப்பவர்களை, இதையெல்லாம் கவனிக்காது வாசித்து நன்றிகொன்றவர்கள் என நினைத்துக்கொண்டேன்.


நான் 'இச்சா'வுக்கு இன்னொரு இடத்தில் வைத்திருந்த விமர்சனங்களில் முக்கியமானது, பின்னட்டையில் பாவிக்கப்பட்ட சேலையணிந்த சிறுமி ஒருவரினது புகைப்படம். புனைவு என்று எழுதிவிட்டு இப்படியெல்லாம் வாசகரைச் சுத்துமாத்துச் செய்யத் தேவையில்லை என்று சொல்லியிருப்பேன். ஷோபாவைப் பற்றிக் கொஞ்சம் விமர்சித்து எழுதினாலே அவருக்காய் எல்லா இடங்களிலும் பேசவல்ல நண்பரொருவர் வந்து அந்தப் புகைப்படத்தில் இருக்கும் பெண் இப்போது இந்தியாவில் இருக்கின்றார். அவரின் அனுமதி கேட்டுத்தான் இதில் பிரசுரிக்கப்பட்டதென்றும் அந்தப் பொழுதில் கூறியிருந்தார்.. அப்படிப் பார்த்தால் ஒரு எளிய வாசக மனம், இந்தப் பெண்தான் அந்த ஆலா அல்லது ஆலாவின் சாயல் என நினைத்துக் கொள்ளலாம். 


அப்படியெனில் யாரோ தெரிந்த பெண்ணுக்கு நடந்த கதையைத்தான் ஷோபா எழுதியிருக்கின்றார் என முடிவு செய்வதற்கான வாசிப்புச் சுதந்திரமும் இதில் இருக்கிறது.  அந்தவகையில் வைத்துப் பார்த்தால், அதே பெண்ணின் கதை சேனனுக்கும் தெரிந்திருக்கலாம் (ஒரே ஊர்க்காரர், ஒருவகையில் இருவரும் உறவினர்கள் என்றும் சொல்கிறார்கள்). ஆக தெரிந்த ஒரு பெண்ணின் கதையைத்தான் இருவரும் எழுத முயன்றிருக்கலாம் என ஒருவர் வேண்டுமெனில் ஒரு வாதத்திற்காய்ச் சொல்லலாம். ஆகவேதான் புனைவைப் புனைவாக எழுதுங்கள். Auto biography ஐ  Auto biography  ஆக எழுதுங்கள்.  Memoirஐ Memoirஆக எழுதுங்கள் எனத் திரும்பத் திரும்பச் சொல்கின்றேன். ஆட்டுக்குள் மாட்டைக் கொண்டு வந்து விட்டால்  எப்போதேனும் வேறு திசையில் இதைபோலச் சிக்கல்கள் வந்து சேரக்கூடும்.


3.


என் வாசிப்பில் இந்த நாவல்களில் சில வகையில் ஒற்றுமைகள் இருக்கின்றன என்று சொல்வேனே தவிர, இச்சா, சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்களின் பாதிப்பில் எழுதப்பட்டதெனச் சொல்ல அவ்வளவு எளிதில் துணியமாட்டேன். அப்படிப் பார்த்தால், இன்னொருவகையில் ஷோபாவின் பாதிப்பில் கதைகளும் நாவல்களையும் எழுதத் தொடங்கியோர் என்று கூட ஒரு பட்டியலிட முடியும். நாம் அங்கெல்லாம் போகத் தேவையில்லை.

 

நிலையற்ற யுத்தக்காலங்களில் பல்வேறு வதந்திகளும்/புனைவுகளும் இயல்பு என்பதை -அது அப்படித்தான் என- எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இரண்டு நாவல்கள் ஒத்தசாயலாக இருக்கின்றது என்று பேச்சு வந்தால், கொஞ்சம் பொறுமையாக இருந்து இரண்டு நாவல்களையும் வாசித்துவிட்டு கருத்துக்களைச் சொல்வதால் எதையும் நாம் இழக்கப் போவதில்லை. 


மற்றது இந்த எழுத்தாளர்களின் ஆதரவாளர்கள், இந்த இரண்டு நாவல்களையும் வாசித்து ஒப்பிட்டு எழுதாமல் விட்டால் கூடப் பரவாயில்லை, ஆகக்குறைந்தது ஏன் தமக்கு இந்த நாவல்கள் முக்கியமானது என்று விரிவாக எழுதுவது அவர்கள் தமக்குப் பிடித்த படைப்பாளிக்குக் கொடுக்கும் மரியாதையாக இருக்கும். அவ்வாறு எழுதப்படுவதை வாசித்து நமது நேரமும் பிரயோசனமாகப் போனது என்று நாமும் அவர்களை நன்றியுடன் நினைவில் இருத்திக் கொள்வோம்.

....................................................

(Sep 06, 2020)

சூரன் சுயசரிதை

Saturday, December 26, 2020

வரலாற்றை வாசித்தல் - 05 

1.

"எனது பிள்ளைகள் வருவார்கள். அவர்கள் கோயிலுக்குள்ளே செல்லட்டும். ஆனால் நான் உங்கள் கோயில்களுக்கு வரமாட்டேன். ஏனெனில் உங்கள் கோயில்களுக்குள்ளே சுத்தம் மிகக்குறைவு" என்று ஒடுக்கப்பட்ட மக்களை   கோயிலுக்கு உள்ளே அனுமதிக்கலாமா என்ற விவாதங்கள் 1940களில் நடந்தபோது சூரன் அவர்கள் கூறிய கருத்து ஒருகாலத்தில் பிரபல்யமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இவ்வளவு தீர்க்கமாய்க் கூறிய சூரன் நம் இலங்கை வரலாற்றில் முக்கியமானவர். ஒருவகையில் பண்டிதர் அயோத்திதாசர் போல மறைக்கப்பட்ட யாழ்ப்பாணத்துக்காரர்  என அவரைச் சொல்லலாம். சூரனுடைய வாழ்க்கையிலிருந்து நாம் 1900களின் தொடக்ககாலங்களில் ஒடுக்கப்பட்டோரின் வரலாற்றின் குறுக்குவெட்டு முகத்தைப் பார்க்கலாம். 


சூரனின் முக்கியத்துவம் என்பது, ஒடுக்கப்பட்டவர்கள் சைவப்பாடசாலைகளில் கற்க மறுக்கப்படுகின்ற கொடுஞ்சூழலில், அவர்  தனது மக்களுக்காக 1914ம் ஆண்டு கட்டுகின்ற பாடசாலையாகும். பின்னர் தேவரையாளி இந்துக்கல்லூரியாக அது வளர்ச்சி பெற்று இன்று நிமிர்ந்து நிற்கின்றது. அதைக் கட்டியதோடு அல்லாது, அந்த நிகழ்வுகளை அப்படியே எழுத்தில் பதிவு செய்திருப்பதே நமக்கு இங்கே முக்கியமாகின்றது. கிட்டத்தட்ட இது எழுதப்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகே அச்சில் (2004இல்) ஏறுகின்றது  என்றாலும் நமக்கு ஒரு அரிய ஆவணம் சாட்சியமாக 'சூரன் சுயசரிதை' கிடைத்த மகிழ்வு வருகிறது.


சூரன் காலத்தில் ஒருபக்கத்தில் சைவ ஆதிக்கசாதிச்சக்திகள் ஒடுக்கப்பட்டோருக்கான கல்வியை மறுக்கின்றது. இன்னொருபுறத்தில் அமெரிக்க மிஸனரிகளால் ஒடுக்கப்பட்டவர்கள் ஆரம்பக்கல்வியைக் கற்பதற்கான பாதைகளைத் திறக்கப்பட்டாலும், அவர்களுக்கும் சாதி ஒழிப்பைவிட மதம் மாற்றுதல் என்பதே ஒரு முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருக்கின்றது. இந்த இரண்டு தரப்புக்களும் இடையில் திணறுகின்ற சூரன் சைவத்தின் மீது பற்று இருக்கின்ற ஒருவராகத் தன்னை முன்னிறுத்துகின்றார்.  வதிரி பூவற்கரை அண்ணாமர் கோயிலில் நடந்த வேள்வியில் ஆடுகளுக்கும் வெட்டுபவருக்கும் இடையில் நின்று அங்கு நடந்த வேள்வியை நிறுத்திய துணிச்சற்காரரும் கூட.


'சூரன் சுயசரிதை' என்கின்ற இந்தநூலில் அவர் தன்னைப் பற்றிய தனி விபரங்கள் எதையும்  பெரிதாய்ப் பேசவில்லை. பாடசாலையை 1910களில் தனித்து,  மேலும் நான்கு ஒடுக்கப்பட்ட நண்பர்களோடு சேர்ந்து கட்டுகின்ற தகவல்களையும், அதன் நிமித்தம் சந்திக்கும் சிக்கல்களையுமே விரிவாகப் பதிவு செய்கின்றார். பாடசாலை கட்டத் தொடங்கும் காலத்தில், அருகிலிருக்கும் அமெரிக்க மிஷன் கல்லூரி யாராலோ எரிக்கப்பட, சூரன் உள்ளிட்ட சிலர்  இவர்களே அதை எரித்தார்கள் எனக் குற்றவாளியாக்கப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றனர். பின்னர் பாடசாலைக்கென நிதிசேகரிப்பிலும் சிக்கல்கள் வருகின்றன. 


இவற்றையெல்லாம் தாண்டி பாடசாலையைக் கட்டி, ஒருமாதிரியாகப் பிள்ளைகள் சிலரை பாடசாலைக்கு படிக்கச் சேர்த்ததன் பிறகு இன்னொரு சிக்கல் வருகின்றது. அன்றையகாலத்தில் வாழ்ந்த எந்த ஆதிக்கசாதி ஆசிரியர்களும் கல்வி கற்பிக்க வர முன்வரவில்லை. எனினும் மனந்தளராது ஆதிக்கசாதி ஆசிரியர் ஒருவருக்கு அவர் மற்றப்பாடசாலையில் வாங்கும் சம்பளத்தை விட இரண்டரை மடங்கு ஊதியம் கொடுத்து அவரை அழைத்துவருகின்றனர்.எனினும் ஆதிக்கசாதிகளில் இருந்து வரும் எந்த அதிபரும் ஒழுங்காக இல்லாததுகண்டு, ஒடுக்கப்படும் சமூகத்தைச் சேர்ந்தவர்களே  அங்கே  ஆசிரியர்/அதிபராக வரவேண்டும் என்று சூரனைப் போன்றவர்கள் நினைக்கிறனர்.


2.


இங்கேதான் யாழ் சமூகத்தில் மிக முக்கியமான ஒரு பாய்ச்சல் ஒடுக்கப்பட்டோரிலிருந்து நிகழ்கின்றது. இந்த நூலில் மிக முக்கியமான ஆவணப்பதிவாக  இதையும் இணைத்துச் சொல்லவேண்டும். அது - முதன்முதலாக ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிக்கு வல்லிபுரம் என்கின்ற ஆசிரியர் செல்கின்ற நிகழ்வாகும். வல்லிபுரம் சூரனின் உறவினர் என்பதால் அப்போது நிகழ்ந்த நிகழ்வுகளை அருகில் இருந்து பல பக்கங்களில் சூரன் இந்த நூலில் எழுதிச் செல்கின்றார்.


ஒடுக்கப்பட்டவரையே படிக்க அனுமதிக்கா யாழ் ஆதிக்க சமூகம் ஒரு ஆசிரியர் முதன்முதலில் பயிற்சிக்காகப் போகும்போது எப்படி வரவேற்கும். மூர்க்கமாய் எதிர்க்கின்றது. அதை மீறியும் வல்லிபுரம் போனபின் அவர் கோப்பாய் விடுதியில் இருந்து வெளியேறவிடவேண்டும், இல்லை என்று கொல்லப்படுவார் என ஆதிக்கசாதி காடையர்களால் எச்சரிக்கப்படுகின்றனர். 


அன்று சமஆசன சமபந்தி சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டதால் வல்லிபுரம் என்ற ஒடுக்கப்பட்டவரோடு சேர்ந்து படிக்கும் 40 ஆதிக்கச்சாதி மாணவர்களும் வெளிநடப்புச் செய்கின்றனர். அவர்கள் விடுதியிலிருந்து வெளியேறுகின்றனர். வெளியே சென்று சாப்பிடுகின்றனர். வல்லிபுரம் வீட்டுக்குத் திரும்பவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு இந்த ஒருவருக்காக 40 பேரைப் பகைக்கமுடியாது என்று முதலில் அங்கிருந்து அகற்றப்படுகின்றார்.  


எனினும் வல்லிபுரத்தின் தந்தையார் மற்றும் சூரன் போன்ற சிலரின் வற்புறுத்ததால் வல்லிபுரம் திருப்ப கலாசாலைக்கு எடுக்கப்பட்டாலும், வல்லிபுரத்தை ஒரு கடிதத்தை -அந்த 40 ஆதிக்காசாதி மாணவர்களுக்காய்- அவர் வெளியில் சென்று சாப்பிடுவதாக எழுதித் தரச் சொல்லித் தரச்சொல்கின்றனர். இப்படி எழுதிக் கொடுத்தால் பிறகு வல்லிபுரம் பயிற்சிக்கல்லூரியில் இருந்து கற்கமுடியாது போய்விடும் என்று சூரனைப் போன்றவர்கள் தயங்குகின்றனர். இதற்காய் சூரனைப் போன்றோர் எந்தச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்பதையும் இந்த நூலை நாம் வாசிக்கும்போது அறிந்துகொள்ளலாம்.


பல்வேறு வகைகளில் வெளியில் மட்டும் அல்லாது, அவரின் ஊரிலுள்ள ஆதிக்கசாதியினரும் வல்லிபுரத்தை வீட்டுக்கு எடுக்கும்படி சூரனைப் போன்றவர்களிடம் வற்புறுத்துகின்றார்கள். இவ்வாறான நெருக்கடிகளை மீறி வல்லிபுரம்  கற்றுத்தேர்ந்து வெளியில் வருவது ஒரு பெரும் பாய்ச்சல் எனத்தான் சொல்லவேண்டும். அன்றைய சூழலில் ஒடுக்கப்பட்ட ஒருவர் கோப்பாய் கலாசாலைக்குள் நுழைந்தது பெரும் விடயமாக எல்லாத் தரப்பாலும் நிச்சயம் பேசப்பட்டிருக்கும் 



இந்த சமாசன சமபந்தியின் தாக்கம் எந்தளவுக்குப் போனது என்பதை க.சிவத்தம்பி இன்னும் விரிவாக (இந்நூலில் சூரன் அதைக் குறிப்பிடாவிட்டாலும், சிலவேளை ஆதிக்கசாதிகளின் சூழ்ச்சியின் எல்லை தெரியாததாலும் சூரனுக்கே இது தெரிந்திருக்காதும் இருக்கலாம்) குறிப்பிடுகின்றார். அதாவது  சேர் பொன்னம்பலம் இராமநாதனே இந்த ஆசிரிய கலாசாலை சமபோசன விடயத்தில் தலையிட்டதைப் பற்றியதாகும். இந்த சமபோசனம் கலாசாலையில் அனுமதிக்கப்படக்கூடாது என்று சேர் இராமநாதன் தேசாதிபதிக்கு ஒரு பெட்டிசன் அனுப்பியிருக்கின்றார். இந்த விடயம் ஜோன் ரஸல் என்பவர் எழுதிய Communal Politics Under the Donoughmore Constitution: 1931-1947' என்ற நூலில் குறிப்பிடப்பட்டதாக கா.சிவத்தம்பி அவர்கள் குறிப்பிடுகின்றார். உண்மையில் 1920களில் நடந்த இந்த ஆசிரிய கலாசாலை சமாசன சமபோசன பிரச்சினை என்பது யாழ் சமூகத்தில் சாதியொழிப்பு விடயத்தில் முக்கிய மைல்கல்லாகும். இது குறித்து இன்னும் விரிவாக அந்தக் காலத்தில் நிகழ்ந்தவற்றின் தரவுகளுடன் நிறைய ஆய்வுகளும், ஆக்கங்களும் கட்டாயம் வரவேண்டும்.


இப்படி கஷ்டப்பட்டு சமாசன சமபந்தியில் ஒடுக்கப்பட்டவர்கள் சாதித்துக் காட்டியதைப் பின்னர், தீண்டாமை ஒழிப்பு இயக்கங்கள் 1960களில் கோயில் நுழைவுப் போராட்டங்களையும், தேநீர் கடைப் பிரவேசங்களையும் செய்தபோது, தமிழரசுக்கட்சியினர் இந்த சமாசன சமபந்தி நிகழ்வுகளை கேலிக்கூத்தாக்கி சாதியொழிப்புப் போராட்டத்தைத் தாங்களும் செய்கின்றனர் என்று காட்ட முயற்சித்ததும் கடந்தகாலத்தில் நிகழ்ந்தவைதான். 


3.


சூரனின் முக்கியத்துவம் என்ன என்பதற்கு இன்னொரு உதாரணத்தை இங்கே கட்டாயம் குறிப்பிடவேண்டும். அது அன்று 1920களில் இலங்கை வாலிபர் காங்கிரஸ், காந்தியின் சுயராஜ்ஜியத்தின் மீது ஈர்ப்புக்கொண்டு இலங்கையில் இயங்கத் தொடங்குகின்றனர்.  தனியே சுயராஜ்ஜியத்துக்காக மட்டுமின்றி சாதி வேறுபாட்டிற்காகவும் ஹண்டி பேரின்பநாயகம் போன்ற வாலிப காங்கிரஸ்காரர்கள் போராடினார்கள். அந்தவகையில் அவர்கள் 1929, 1930களில் நடந்த மாநாடுகளுக்குச் சூரனை உரையாற்றுவதற்கு அழைத்திருக்கின்றனர். அத்துடன் சூரனைத் தமது அங்கத்துவரும் ஆக்கி அவருக்கான இடத்தையும் கொடுத்திருக்கின்றனர். இவ்வாறு மாநாட்டுக்குப் போன சூரன், அங்கே நடந்த கலவரத்தில் இறந்துவிட்டதாக ஊரில் ஆதிக்கசாதிகள் வதந்திகளைப் பரப்பியதாகவும் சூரன் இந்த நூலில் குறிப்பிடுகின்றார்


இற்றைக்கு நாவலரை தமது முகமாகக் கொள்கின்ற யாழ் இந்து சமுகம் ஒருபோதும் சூரனைக் கவனத்தில் கொள்வதே இல்லை. நாவலர் போன்ற சாதிமான்களை விட, தனது ஆதிமதம் சைவமே என்று மதமும் மாறாமல், அதேவேளை இந்து ஆதிக்க சாதிமான்களின் வெறுப்பையும்/ஒடுக்குதல்களையும் சம்பாதித்துக்கொண்டு தனது வேரிலிருந்து தடம்புரளாத சூரனை அல்லவா நாம் யாழ் சமூகத்தின் முகமெனக் கொள்ளவேண்டும். அவ்வாறு செய்வதன் மூலந்தான் நாம் சற்றாவது யாழ் சமூகத்தைச் சேர்ந்தவர்களெனப் பெருமிதங் கொள்ளலாம். இந்த நூலின் முன்னுரையிலும் கா.சிவத்தம்பி 90களில் இலங்கைப் பாடத்திட்டங்களில் சில மாற்றங்களைக் கொண்டு வரும்பொருட்டு, பெரியவர்கள் சிலரை இணைக்கவேண்டும் எனக் கேட்டபோது ஹண்டி பேரின்பநாயகம், சூரன் போன்றவர்களை இணைக்கவேண்டுமெனப் பரிந்துரை செய்ததாகக் குறிப்பிடுகின்றார். அது இற்றைவரை நிகழாமலே இருக்கின்றதெனவே நினைக்கின்றேன்.


சூரன் ஒரு ஆசாரியாகவும் இருந்தவர். அவரது இருபதுகளில் கரவெட்டி தேவமாதா கோயிலுக்கு மாதா சிலை வைக்க ஒரு கண்ணாடிக்கூட்டைச் செய்து கொடுக்கின்றார். அப்போது  ஒரு கிறிஸ்தவ வெள்ளாளர் இதை ஒடுக்கப்பட்டவரான சூரன் செய்ததாக வெளியில்  சொல்லவேண்டாம், அப்படிச் சொன்னால் சைவ வேளாளர்கள் தங்களை மதிக்கமாட்டார்கள் என்று சொல்கின்றார். சூரன் தேவாலயத்தில் இல்லை என்று நினைப்பில் சொல்லப்பட்ட இதை சூரன் கேட்டுவிடுகின்றார். 'எனக்கு ஒன்றும் இந்தச் சிறப்பு வேண்டாம்' என்று அவரின் முகத்திற்கு நேரே சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார். அப்போது அவருக்குச் சற்று கிறிஸ்தவச் சாய்வு இருந்திருக்கின்றது. எனினும் பிற்காலத்திலும்  வதிரி வேதக்கோயிலுக்கு சூரன் இரதம் செய்துகொடுத்திருக்கின்றார். இதன்மூலம் சூரன் ஒரு தீவிர சைவக்காரராக இருந்தாலும் மாற்று மதங்களை வெறுத்து ஒதுக்கவில்லை என்பதும் நமக்குப் புலப்படுகிறது.


ஆசாரியர் சூரன் தனியே இந்த விடயங்களில் மட்டுமில்லாது, அவரே பாடல்களை எழுதி பாடுகின்றவருமாவார். அதை நூலாக்கி பின்னர் பாடசாலைக்கான நிதிக்காய் கொழும்பு, காலி உள்ளிட்ட இலங்கையின் பல்வேறு இடங்களுக்கு அலைந்தபோது இவற்றைக் கொண்டு சென்று விற்பனை செய்துமிருக்கின்றார். அத்துடன் அவர் நெல்லியடியில் அன்று இருந்த மகாத்மா தியேட்டரில் காந்தி கொல்லப்பட்டபோது நிகழ்ந்த அஞ்சலி நிகழ்விலும் உருக்கமாய் காந்தி பற்றிய பாடல்களைப் பாடியதாக கா.சிவத்தம்பி குறிப்பிடுகின்றார். இதைவிட சுவாரசியமானது பராசக்தி திரைப்படம் வந்து, சூரனின் பகுதியில் பல இளைஞர்கள் நாத்திகம் பேசித் திரிந்தபோது, பராசக்தி நாத்திகத்தையல்ல, பக்தியைத்தான் விதந்தோத்துகிறது என்று பராசக்தி பற்றி ஒரு எதிர் விமர்சனமும் எழுதியிருக்கின்றார். இந்த நூலைப் பதிப்பித்த ராஜ சிறிகாந்தன் அந்தக் கட்டுரை தன்னிடம் இருப்பதாகக் குறிப்பிட்டாலும் இந்த நூலில் அதைச் சேர்க்காமல்விட்டது நமக்கு ஓர் இழப்பே. சூரன் கதை என்று அவர் சுயசரிதை வந்ததுபோல, அவர் எழுதிய கட்டுரைகள், அவரைப் பற்றிப் பிறர் எழுதிய பதிவுகள் தொகுக்கப்படவேண்டும். அதன்மூலம் சூரனின் ஆளுமை இன்னும் சிறப்பாக வெளிக்கொணரப்படக்கூடும்.


அன்று இப்படி ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஒருவர் பாடசாலை  தொடங்கியிருக்கின்றார் என்று அறிந்து அதை 'இந்துசாசனம்' தனது பத்திரிகையில் வெளியிடுகின்றது . அதேவேளை ஒருவாரம் இலங்கைக்குப் பயணஞ்செய்த கல்கி, சூரனைச் சந்தித்ததைப் பதிவு செய்கையில் ஈழத்து நந்தன் என்று அவரைக் குறிப்பிட்டு எழுதியிருக்கின்றார்


ஒடுக்கப்பட்ட சமுகத்தில் 1881ல் பிறந்த சூரன் 1956இல் மரணமடைகின்றார். சூரன் சுயசரிதையை அவர் இறப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுதி முடித்திருந்தாலும் விபரங்களை, சம்பவங்களை, வழக்குகளை காலக்கிரமாக தெளிவாகக் குறிப்பிடுகின்றார். ஒன்று அவர் ஏற்கனவே குறிப்புகளாக இவற்றை எழுதி வைத்திருக்கவேண்டும் அல்லது இவ்வளவும் அழியாத நினைவுகளாக அவருக்குள் உறைந்து இருந்திருக்கவேண்டும்.


இன்றைக்கும் சாதியைக் கடந்துபோய் விடாத யாழ் சமூகத்திற்கு, சூரன் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் செய்த விடயங்களின் மூலம், ஒரு பெரும் சவாலாக நம் எல்லோர் முன்னும் நிமிர்ந்து நின்று கொண்டிருக்கின்றார்.

.....................................................

(Jun 08, 2020)