அண்மையில் சில புனைவுகளை வாசித்து முடித்திருந்தேன். எவையும் அவ்வளவு
பெரிதாக ஈர்க்கவில்லை. எல்லாவற்றிற்கும் உழைப்புத் தேவை. எழுத்து சார்ந்தும் அது
இருக்கிறது என்ற புரிதல் இருக்கிறது. எனவே இப்போது எதிர்மறையான விமர்சனங்கள்
இருப்பின் அதை நேரடியாக முன்வைப்பதில்லை. அவ்வகை விமர்சனங்கள் தேவையில்லை என்பதால்
அல்ல; அதைவிட எவ்வளவோ நல்ல படைப்புக்கள் கவனிக்காமல் இருக்கின்றன என்பதன் நிமித்தம் எனக் கொள்க.
மற்றும்படி வாசிப்பில் வரும் ஏமாற்றங்களை, சலிப்புக்களை மறைமுகமாகச் சொல்வது போதுமென்று நினைக்கின்றேன். அதாவது
அவ்வாறு குறிப்பிடும்போது அந்தப் படைப்பாளியும், அந்தப் படைப்பை வாசித்தவர்களும் புரிந்துகொள்ளுமளவிற்கு மறைமுகமாய்ச் சொல்லிவிட்டு
நகருதல் நலம்.
ஓர் எழுத்தாளர் பால்ய விவாகத்தையும், கைம்பெண்களையும் பின்னணியில் வைத்து எழுதிய ஒரு புனைவை வாசித்தேன்.
ஒரு சில வரலாற்று நிகழ்வுகளுடன் ஒரு கற்பனைப் பாத்திரத்தை முன்வைத்து அது
எழுதப்பட்டாலும், அது ஒரு அலுப்பான வாசிப்பையே
தந்திருந்தது. கிட்டத்தட்ட கட்டுரை மொழியிற்கு அண்மையாக எந்த
பாத்திரங்களுக்குள்ளும் அவ்வளவு உள்நுழைந்து போகாத எழுத்து அது. இதைவிட அந்தக்
குறிப்பிட்ட பின்னணியில் ஒரு கட்டுரையை (அது ஒரு புத்தகமாகவும் ஏற்கனவே
வந்திருக்கின்றது) வாசித்து விட்டுப் போகலாம் என்ற நினைப்பே வந்தது.
ஜெயமோகனின் 'வெள்ளையானை'யையும் இப்போதுதான் வாசிக்க சந்தர்ப்பம் வந்தது (நன்றி: ரொறொண்டோ நூலகம்). அது ஒரு முக்கியமான களத்தில் விரிகின்ற நாவல் என்றாலும், ஜெமோவின் கவனிக்கத்தக்க நாவலுக்குள் -என் வாசிப்பில்- வராது. எப்படி மாரி செல்வராஜின் 'மாமன்னன்' சொல்கின்ற செய்தி/அரசியல் முக்கியமானதோ, அதேபோல் அது முழுமையான படைப்பாக நிறைவைத் தராததைப் போல, ‘வெள்ளையானை’யையும் சொல்லலாம்.
எனினும் நாம் ஒரு வரலாற்றை மீள நினைக்க வைத்ததற்காக 'வெள்ளையானை'யை வரவேற்க வேண்டும். இன்று மெரீனா கடற்கரையோரமாக விவேகானந்தர் இல்லமாக நிமிர்ந்து நிற்கும் அந்தக் கட்டடத்தை எத்தனை பேர் எளிதாகக் கடந்து போயிருப்போம். ஆனால் சில நூற்றாண்டுகளுக்கு முன் அது ஒரு ஜஸ்ஹவுஸாக இருந்து, அங்கே எப்படி தலித்துக்கள் நடத்தப்பட்டார்கள் என்பதையும், அப்போது தமிழகத்தை உலுக்கிய பெரும் பஞ்சத்தின் அவலத்தையும் இந்த நாவலினூடு நாம் அறிந்து கொள்கின்றோம். அந்தப் பஞ்சந்தான், பிரிட்டிஷ்காரர் இலங்கையில் தேயிலை பயிரிடத் தொடங்கியபோது தமிழகத்திலிருந்து மக்களை- இடையில் உயிரிழந்தாலும் பரவாயில்லையென- கடல் கடந்து அலையலையாக அனுப்பி வைத்திருப்பதில் பெரும் பங்கு வகித்திருக்கும் என்று நினைக்கின்றேன். இந்நாவலில் அந்தப் புலம்பெயர்வு பற்றிய குறிப்புகள் இல்லை; அது இந்நாவலின் களத்துக்கு அவ்வளவு முக்கியமுமல்ல.
ஜெயமோகன் ஒரு வரலாற்று நிகழ்வை -ஜஸ்ஹவுஸ் வேலைநிறுத்தத்தை- சுவாரசியமான புனைவாக்க முயன்றளவுக்கு, மேற்சொன்ன எழுத்தாளர்க்கு பால்யவயது திருமணங்களையும், அதனால் இளவயதில் கைம்பெண்ணாகும் பெண்கள் அந்த மரபுகளை உடைத்து முதற்சிறகை விரித்த வரலாற்று நிகழ்வுகளையும் நம்மைப் பாதிக்கச் செய்யுமளவுக்கு எழுதமுடியாது போனது ஒருவகையில் கவலையானது.
இப்படியாக இன்னொரு படைப்பாளியின் சிறுகதைத் தொகுப்பையும் வாசித்தேன். அவர் ஒரு மூத்த படைப்பாளியின் தீவிர வட்டத்துக்குள் இயங்கி வருபவர். அந்த மூத்த படைப்பாளியும் தன் வட்டத்துக்குள் இருக்கும் இவரைப் போன்றவர்களைத் தொடர்ந்து முன்னிறுத்துகின்றவர்தான். இந்த இளம் படைப்பாளிக்கு சொல்வதற்குக் கதைகள் இருக்கின்றன. ஆனால் மூத்த படைப்பாளியின் பாதிப்பிலிருந்து வெளியில் வராதது போல இவரது கதைகளை வாசிக்கும்போது தோன்றியது. இவருக்கு மட்டுமில்லை, அந்தப் படைப்பாளியைச் சுற்றியிருப்பவர்களின் சிலரின் படைப்புக்களை அண்மைக்காலமாக வாசிக்கும்போது அந்தப் பாதிப்பு தெளிவாகத் தெரிகின்றது. அந்தப் படைப்பாளியைப் போலவே கதைகளைத் தொடங்குகின்றார்கள். கதைக்கான களங்களும் கூட ஏற்கனவே அவர் எழுதியவற்றுக்கு அண்மையாகவே இருக்கச் செய்கின்றன. மூத்தபடைப்பாளி கூட சில இடங்களில், 'ஒருவர் ஆசிரியராக இருந்தால் கூட, நீங்கள் அந்த ஆசிரியரிடம் முழுதாக உங்கள் சுயத்தை கையளிக்கத் தேவையில்லை' என்றுதான் கூறுகின்றார். ஆனால் அவரைச் சுற்றியிருப்பவர்களுக்குத்தான் தமது ஆசிரியரை விட்டு வெளியே வருதல் கடினமாக இருக்கின்றது போலும்.
இவ்வாறு அண்மையில் பல கதைகளை வாசித்து ஒருவித சலிப்பு மனோநிலையில் இருந்த எனக்கு தற்செயலாக இங்குள்ள நூலகத்தில் எடுத்து வாசிக்கத் தொடங்கிய சர்வோத்தமன் சடகோபனின் 'முறையிட ஒரு கடவுள்' மிக நிறைவான வாசிப்பைத் தந்தது. அவரது எழுத்து நடையே இன்றைய தேய்வழக்கு மொழியில் இல்லாது ஒரு புத்துணர்ச்சியைத் தருவதாக இருக்கிறது. மேலும் 15 கதைகளையும், 150 பக்கங்களுக்குள் முடித்தும் விடுகின்றார். சிக்கனமான மொழி, ஒருவகையில் அசோகமித்திரன் போன்றவர்களை நினைவூட்டினாலும், சர்வோத்தமனின் கதைகளின் அனேக பாத்திரங்கள் குடும்பத்திலிருந்தும், சமூகத்திலிருந்தும் அந்நியமாகின்றவை. அவை அந்நியமாவதால் சமூகத்தைப் பழிப்பதில்லை, அவை தமக்கான வாழ்வை கண்டடைகின்றன. சில பாத்திரங்கள் இப்படி அந்நியமாதலால் தற்கொலைக்கு முயற்சித்தாலும், தற்கொலையைச் செய்துகொண்டாலும், அவை கூட 'சும்மா ஒரு தற்கொலை' என்கின்ற வகைக்குள் அடங்குவதில்லை.
ஏற்கனவே பழக்கப்பட்ட மொழியிலிருந்து ஒரு படைப்பாளி தனக்கான சொந்த மொழியைக் கண்டடைவது, அந்தப் படைப்பாளி வாசகர்களுக்குக் கொடுக்கின்ற முக்கிய வெகுமதி என்பேன். சர்வோத்தமன் அதை இந்தத் தொகுப்பில் அவரின் முதல் தொகுப்பு என்று நாம் உணராவண்ணம் செய்திருக்கின்றார். மேலும் இந்தக் கதைகளை வாசிக்கும்போது சர்வோத்தமனுக்கு இருக்கும் ஆழமான வாசிப்பு நமக்கு எளிதாகத் தென்படும். அவற்றை திளைக்கச் திளைக்கச் சொல்லாமல், போகின்றபோக்கில் அவர் கதைளுக்கான களங்களோடு இணைத்துச் சொல்லுவதைக் குறிப்பிடவேண்டும். அண்மையில் வாசித்தவற்றில் ஜே.பி.சாணக்யாவின் 'பெருமைக்குரிய கடிகாரத்திற்கு', பிறகு என்னை வசீகரித்த ஒரு சிறுகதைத் தொகுப்பு சர்வோத்தமனின் 'முறையிட ஒரு கடவுள்' என்று சொல்வேன்.
**********
(Jul 19,
2023)
0 comments:
Post a Comment