ரமேஷ் பிரேதனிடம் மார்க்சிசம், பின்னமைப்பியல், பின்நவீனத்துவம் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தபோது, தெரிதாவின் "Specters of Marx" பற்றிப் பேச்சு வந்தது. அநேகமான பின்னமைப்பியல்வாதிகள் மார்க்ஸை ஏற்றுக்கொண்டு அவரைத் தாண்டி, அவருக்குப் பிறகான காலங்களில் நிகழ்ந்த நிகழ்வுகளை முன்வைத்து தமது சிந்தனைகளை விரித்தெடுத்திருந்தனர். ஆனால் இன்றைக்கும் இவற்றை நன்கு தெரிந்தும், தமிழ்ச்சூழலில் இருக்கும் மார்க்சியர்கள் தெரிதா, ஃபூக்கோ, பார்த் போன்ற பின்னமைப்பியல்வாதிகளை மார்க்ஸியத்துக்கு எதிர்முனையிலே வைத்துப் பேசிக்கொண்டிருக்கின்றனர். எனது ஸென் ஆசானான தாய் (Thich Nhat Hanh) மிக இளவயதிலேயே துறவு பூண்டாலும், இறுகிப்போன புத்தயிஸத்தைக் கண்டு மடாலயத்தில் இருந்து வெளியேறி இன்றைய காலத்துக்கேற்ற Engaged Buddhismஐ முன்வைத்தவர். அதன் தீ அணையாமல் இறுதிவரை பார்த்ததோடல்லாது அதை அடுத்த தலைமுறைக்கும் கடத்தியவர். அவ்வாறு ஒரு Engaged Marxism தான் நமக்கு இப்போது வேண்டியிருக்கிறது. அதற்கான ஆரம்பப் புள்ளிகளை ஃபிராங்க்போர்ட் மார்க்ஸியர்கள் (Frankfurt School) செய்ய முயன்றிருந்தனர்.
இன்றைக்கும் ஒடுக்கப்படும் இனங்களை/விளிம்புநிலையினரை முன்வைத்து நடக்கும் உரையாடல்களை மார்க்ஸிலிருந்தே ஏற்றோ/முரண்பட்டோதான் ஆரம்பிக்க வேண்டியிருக்கின்றது. ஒரு படைப்பாளியாக நாம் நெருக்கம் கொள்ளவும், நட்புடன் கைகோர்த்துச் செல்லக் கூடியதாக இருப்பதும் மார்க்ஸிசமே. ஆகவே செங்கொடி என்பது நமக்கோர் முக்கியமான அடையாளமே. ஆனால் நான் இங்கே இறுகிப்போன மரபு மார்க்ஸியர்களையோ, இடதுசாரித்துவம் என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட அநீதிகளை நியாயப்படுத்திக் கொண்டிருப்பவர்களைப் பற்றியோ பேசவில்லை.
0000000000
“அவன் தனிமையான வாழ்வையே விரும்பினான்.
இந்த உலகின் பாசங்கள், நேசங்கள், சோகங்கள், உணர்ச்சிக் குமுறல்கள் எல்லாவற்றினின்றும்
ஒதுங்கி வாழ முற்பட்டு தனிமையில் இன்பங் காண விழைந்தான்” என்று கருணாகரனை, கதைசொல்லி ‘அவனுக்கென்று ஓர் உலகம்’ (1969) கதையில் நமக்கு அறிமுகப்படுத்துகின்றார். கருணாகரன் இயற்கையில்
தோய்ந்து தனிமையில் வாழ விரும்புகின்றவன். அவ்வாறு இருக்க விரும்புகின்ற
கருணாகரனுக்கு ஒரு காதல் வந்து அதில் திளைத்தும் வாழ்கின்றான். பின்னர் வர்க்க
நிலையால் காதல் பிரிவும் வருகின்றது. ஏழையென்பதால் குடும்பம் அவனை வற்புறுத்த,
வேலை தேடி வேற்றூருக்குச் செல்கின்றான். அங்கே
போனவன் இயற்கையையும் தனிமையையும் விரும்பி வேலையை விட்டுவிட்டு எங்கேயோ காணாமற்
போகின்றான் என்பதோடு இந்தக் கதை முடியும். எளிமையான கதை ஆனால் அவ்வாறிருக்க
விரும்பும் மனிதர்களுக்கு இந்த உலகம் எதை வெகுமதியாகக் கொடுக்கின்றது என்பதற்கு 50
வருடங்களுக்கு முன் வினா
எழுப்பப்பட்டிருக்கின்றது. இன்றும் ஒரு மனிதன் இயல்பாக இருக்க முடியாது, அலைக்கழிக்கப்பட்டபடி, தனக்கான வாழ்வை
வாழ முடியாதேயிருக்கின்றான்.
அதுமட்டுமின்றி ‘ரெயில் பயணம்’ (1968), ‘பிரிவதற்குத்தானே உறவு’ (1969), ‘உணர்ச்சிகள்’ (1970) என இந்தக் கதைகளில் வருகின்ற கதைசொல்லி பெண்களைத் தற்செயலாகச் சந்திக்கவோ அல்லது சந்தித்தாலும் மெளனத்தால் கடந்துசெல்கின்ற ஒருவராகவே இருக்கின்றார். ஆனால் இப்பெண்கள் மீது மென்காதல் வயப்படுகின்றார். பிறகு அதே மென்சோகத்துடன் அந்த அனுபவங்களைக் கடந்து போகவும் செய்கின்றார். இவ்வாறான மென்னுணர்ச்சிகளுக்கு மிக முக்கியம் கொடுத்து எழுதிய ஒரு அழகியல் படைப்பாளியாக குப்பிழான் ஐ.சண்முகனை நான் கொள்வேன்.
50 ஆண்டுகளுக்கு முன் இயற்கையிலும், ஏகாந்தத்திலும், மனோரதிய மனோநிலையிலும் வாழ விரும்பிய ஆண் பாத்திரங்கள், இப்போது வாசிப்பவர்களையும் எழுத்தின் வழி ஈர்ப்பதென்பது அவ்வளவு எளிய விடயமல்ல.
‘கோடுகளும் கோலங்களும்’ என்ற தலைப்பில் 1976இல் அலை வெளியிட்ட பத்துக் கதைகளும், பிறகு அந்தப் பத்துக்கதைகளோடு மிகுதிக் கதைகளையும் சேர்த்து 1983இல் வெளிவந்த ‘சாதாரணங்களும், அசாதாரணங்களும்’ கதைத் தொகுப்பும், குப்பிழான் ஐ.சண்முகத்தின் முக்கிய படைப்புக்கள் என்பேன். பின்னரான காலங்களில் வந்த ‘ஒரு பாதையின் கதை’ போன்றவை என்னை அவ்வளவு வசீகரிக்கவில்லை.
குறைந்தளவு எழுதினாலும், பாதிக்கக்கூடியவற்றை எழுதினால் எப்போதும் நினைவில் நிறுத்தக்கூடிய ஓர் மரபு ஈழத்துக்கு உரியதென்று பல்வேறு கட்டுரைகளில் சொல்லியிருப்பேன். குப்பிழான் ஐ.சண்முகத்தை அவரின் 'கோடுகளும், கோலங்களும்’ மற்றும் ‘சாதாரணங்களும், அசாதாரணங்களும்’ ஆகிய தொகுப்புக்களின் மூலம் நான் என்றும் நினைவுகூர்வேன்.
அவருக்கு என் அஞ்சலிகள்!
பிரமிள் வாழ்ந்த வீடு...
பிரமிள் தனது பெற்றோருடன் திருக்கோணமலையில் வாழ்ந்தவர். அவரின் தகப்பன் சுருட்டு வியாபாரியாக இருந்திருக்கின்றார். பண
நெருக்கடி காரணமாக பிரமிளின் தாயார் இந்த வீட்டை (இப்போதிருக்கும் வீடல்ல) அன்றைய
கால மதிப்பில் 5,000 ரூபாயிற்கு ஈடு வைத்திருக்கின்றார்.
ஒழுங்கான ஈட்டுப் பத்திரம் இல்லாததாலோ என்னவோ, இந்த இடம் அடகு வைக்கப்பட்டவர்களால் பின்னர் சுவீகரிக்கப்பட்டிருக்கின்றது.
இப்போது இது ஒரு தனியார் வைத்தியசாலையாக இயங்குகிறது. பிரமிள், சிவராமலிங்கம் என்றே இங்கே இருப்பவர்களால் நினைவு கூரப்படுகின்றார்.
அவரின் தாயார் அன்னலட்சுமி பின்னர் யாழ்ப்பாணத்தில் சிலகாலம் வாழ்ந்து
காலமாகியிருக்கின்றார்.
இவை அனைத்தும் அவரைப் பார்த்த, அவரோடு பழகிய எங்கள் சித்தப்பா சொல்லக் கேட்டது.
**********
2 comments:
அன்பின் பரவலாக இருக்கிறது குறிப்புக்கள் அனைத்தும். வாசிக்க அவ்வளவு ஆசையாக இருக்கிறது. அன்புணர்வைத் தூண்டும் எழுத்தும் அதன் மென்மையும். இளங்கேவின் பிற எழுத்துக்களையும் வாசிக்க வேண்டும்.
8/09/2023 10:42:00 AMமிக்க நன்றி.
8/09/2023 12:18:00 PMபின்னூட்டத்தில் உங்கள் பெயர்தான் காணாமல் போய்விட்டது.
Post a Comment